நுண்வரலாறு 1

முத்தம் தர எந்த இடம்? முகத்துல எந்த இடம்?  என்ற பாடலில் நித்தியானந்தா புகழ் ரஞ்சிதாவையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்ததில் கவிப்பேரரசு அடுத்த வரியில் சொல்லியிருக்கும் பெரிய அறிவியல் கருத்தைக் கவனிக்காமலேயே இருந்து விட்டேன். முப்பதாண்டுகளுக்குப் பிறகு ஷெரில் க்ரிஷெல்பாம் எழுதியிருக்கும் The Science of Kissing – What Our Lips Are Telling Us என்ற நூலைப் படித்த போதுதான் எந்திடம் சத்தம் வந்திடுமோ கண்ணா அந்த இடம் என்ற கவியின் வார்த்தையின் அறிவியல் கருத்தை அறிந்தேன். தமிழ்த் திரைப்பாடல்களில் அறிவியல் கருத்துகள் என்ற தலைப்பில் யாரேனும் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டால் மறக்காது மேற்கண்ட கருத்தை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறேன்.

நகைச்சுவை ஒருபுறம் இருக்க, மெய்யாகவே முத்தத்திற்குப் பின் ஏராளமான அறிவியல் இருக்கிறது. மனித குலவரலாறு தொடர்பான, இனவரைவியல் தொடர்பான, சமூகவியல் தொடர்பான ஏராளமான ஆய்வுக்குரிய விஷயங்கள் இருக்கின்றன என்பது ஷெரிலின் புத்தகத்தைப் படித்த போது தெரிந்தது. ஷெரில் கடல் உயிரியலில் முதுகலைப்பட்டம் பெற்ற ஆய்வறிஞர். டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் விஞ்ஞானி. அறிவியல் எழுத்தாளர். வானொலி தொகுப்பாளினி. இசையறிஞர்.   உதவிய நூல்கள் பட்டியலில்  200க்கும் மேற்பட்ட நூல்களை அவர் குறிப்பிட்டிருப்பதிலிருந்தே இந்த நூலுக்காக அவர் மேற்கொண்டுள்ள ஆய்வு நமக்குத் தெரிகிறது.

உலகின் 90க்கும் அதிகமான கலாச்சாரங்களில் சர்வசாதாரணமாக முத்தமிடுதல் வழக்கமாக இருக்கிறது. நாம் ஏன் முத்தமிடுகிறோம்? முத்தமிடும்போது உடலில் என்ன நடக்கிறது? எப்போதிலிருந்து மனிதன் முத்தமிட ஆரம்பித்தான்? என்பது போன்ற ஏராளமான கேள்விகளுக்கான தேடலில் உருவானது இந்தப் புத்தகம். ஏற்கனவே முத்தமிடுதல் பற்றிய பல ஆய்வுகளின் முடிவுகள் இருந்தாலும் கூட, அவை பெரும்பாலும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளாகவே இருப்பதாக அறிந்த ஷெரின் தானே ஆய்விற்கான கேள்விகளைத் தயாரித்து,  தானே பல்வேறு விதமான மனிதர்களைத் தேர்ந்தெடுத்து அந்தக் கேள்விகளுக்கு பதில் பெற்று ஆய்வு செய்துள்ளார். அதன் வழியே அவர் சொல்லும் முடிவு பற்றிப் பின்னர் சொல்கிறேன்.

முத்தமிடும் ஆசை, அதற்கான உந்துதல் இயல்பாக நம் உள்ளுணர்வில் இருக்கிறதா இல்லை நாகரீகத்தின் வளர்ச்சிப் போக்கில் நாம் அறிந்து கொண்ட ஒன்றா என்ற கேள்விக்கு அடுத்த பொங்கலுக்கு சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம்தான் வைக்க வேண்டும். அறிவியலாளர்கள் இது பற்றி குடுமிப் பிடி சண்டை போட்டுக் கொண்டி்ருக்கிறார்கள்.  மனிதன் மட்டுமே முத்தமிடத் தெரிந்த ஒரே உயிரினம் என்றாராம் சார்லஸ் டிக்கன்ஸ். ஆனால் அது தவறாம்.  மூஸ் என்ற மான் இனமும், கிராண்ட் ஸ்குரில் என்ற ஒரு வகை பெரிய அணில்களும் எழுபதுகளின் தமிழ்ப்பட நாயக, நாயகிகளைப் போல மூக்கோடு மூக்கை உரசிக் கொள்ளுமாம். முள்ளம்பன்றிகள் முள் இல்லாத தம் ஒரே பாகமான மூக்கைத் தேய்த்து முத்தமிட்டுக் கொள்கின்றனவாம். ஒட்டகச்சிவிங்கிகள் தம் கழுத்தைப் பின்னி முத்தமிட்டுக் கொள்கின்றன என்றும், யானைகள் தம் துதிக்கையால் பார்ட்னரைத் துழாவி முத்தமிட்டுக் கொள்கின்றன என்றும் சொல்கிறார்கள். அதனால்தான் என்னவோ, டார்வின் முத்தமிடுதல் உள்ளார்ந்த உணர்வு, அது நமது மரபணுக்களில் ஊறியது என்கிறார். ஆனால், மானுடவியலாளர்கள் இது முற்றிலும் ஒரு காலச்சார செயல்பாடு, பிறர் முத்தமிடுவதைப் பார்த்து அறிந்து கொண்ட ஒரு வேலை – சாரி, ஒரு கலை என்கிறார்கள்.  மற்ற விலங்குகள் போலன்றி. மனித உதடு மட்டுமே குவிப்பதற்கு வசதியாக முகத்திலிருந்து தனியாக  இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது மரபணு ஆதரவு கோஷ்டி.  உணவைத் தன் வாயில் போட்டு, சிறிது மென்று அதைக் குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டதிலிருந்து முத்தம் தோன்றியது என்பது மானுடவியலாளரின் கருத்து. ஷெரில்  நம் பட்டிமன்ற நடுவர்கள் போல், இதுவும் தான், அதுவும் தான்யா… ஆனால் இன்றைய சூழலில் என்று வைத்துப் பார்க்கும் போது, பார்த்துக் கற்றுக் கொள்வதுதான்யா…. என்கிறார்.

கிமு 1500க்கு முன்பு வரை எந்த இலக்கியப் பிரதியிலும் முத்தமிடுதல் பற்றி குறிப்பிடப்படவில்லை. முதன்முதலில் முத்தம் பற்றி குறிப்பிட்ட இலக்கியப் பிரதிகள் தோன்றிய இடம், கலாச்சாரக் காவலர்கள் நிறைந்த நம் இந்தியாதான் என்று ஷெரில் சொல்லும் போது திகைப்பாக இருக்கிறது. மகாபாரதத்தில் முத்தம் பற்றி நிறைய சொல்கிறார்களாம். பின்னர் வாத்சாயனர் காமசூத்திரத்தில் அதற்கு தனி அத்தியாயமே எழுதிவிட்டார் ! சதபதப் பிரமாணம் மெளத் கிஸ் பற்றிச் சொல்கிறதாம். அடிமைப் பெண்ணின் உதட்டின் ஈரத்தை உறிஞ்சினால் தண்டனை தரப்படும் என்று சொல்லிவிட்டதாம் ! பின்னர் கிறிஸ்து பிறப்பதற்கு  1200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டில் முத்தம் பற்றிப் பேசப்பட்டுள்ளது. கிறிஸ்துவத்திற்கு முத்தம் என்றால் அலர்ஜி. முத்தம் உடல்ரீதியான அடுத்த பாவச் செயல்களுக்கு இட்டுச் செல்லும் என்ற பயம்தான் காரணம். டைபீரியஸ் என்ற பேரரசர் முத்தம் வியாதிகளைப் பரப்பும் என்று சொல்லி முத்தமிடுதலைத் தடை செய்திருந்தார். மூத்த கேட்டோ என்ற ரோமானிய வரலாற்றாசிரியர் வெளியூர் சென்று திரும்பும் கணவன் தன் மனைவியை முத்தமிடலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார். காதலால் அல்ல, அவள் குடித்திருக்கிறாளா என்பதை அறிவதற்காக. எனினும்  கி மு 5ஆம் நூற்றாண்டில் ஹெரோடோடஸ் முத்த விதிகளைச் சொல்லிவிட்டார். சம அந்தஸ்தில் உள்ளவர்கள் உதட்டில் முத்தமிட வேண்டும். அந்தஸ்தில் சிறிது வித்தியாசம் மட்டுமே இருந்தால் கன்னத்தில் ஒத்தி எடுக்கலாம். அந்தஸ்தில் பெரிய வேறுபாடு என்றால் தாழ்ந்த அந்தஸ்துக்காரர் உயர்ந்தவர் காலில் விழ வேண்டும். நோ முத்தம்.  சுருங்கச் சொன்னால், அந்தஸ்து குறையக் குறைய முத்தமிடும் இடமும் உதட்டிலிருந்து இறங்கியது. விபரீதக் கற்பனை வேண்டாம். உதட்டிலிருந்து நேரடியாகக் காலுக்குத்தான் !

14 , 15ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் வர்த்தக உடன்பாடுகளை இறுதி செய்வதற்கு முத்தம் பயன்பட்டது. பலருக்கும் கையெழுத்து இடத் தெரியாத காலம். கையெழுத்து இடும் இடத்தில் ஒரு எக்ஸ்ஸைப் போட்டு அதன் மேல் முத்தமிட்டு தம் ஒப்புதலைத் தெரிவித்தார்கள். தொழிற்புரட்சி காலத்தில் முத்தமிடுதல் ஓரளவு சகஜமாகியது. அதன் ஒரு நீட்சியாக கைகுலுக்கும் வழக்கமும் உருவானது.

பொதுவாக, உலகெங்கும் முத்தமிடுதல், பொது இடத்தில் முத்தமிடுதல் ஆகியனவற்றிற்கு எதிர்ப்புதான் இருந்தது. ஜெர்மானியர்கள் மிக நெருக்கமானவர்களை மட்டுமே முத்தமிட்டார்கள்.  ஆனால் ஜெர்மன் மொழியில் முத்தமிடுதலுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட வார்த்தைகள் உள்ளன.  அதில் முக்கியமான ஒன்று நாக்கிரிஸம் என்ற சொல்.  வேறு ஒன்றும் செய்ய முடியாத சூழலில் சரி, இதையாவது செய்வோம் என்பதற்காக முத்தமிடுவதைக் குறிக்கும் சொல் !  இந்தியச் சூழல் பற்றி ஒன்றும் சொல்லவே வேண்டாம். அந்த நாக்கிரிஸமும் மறுக்கப்பட்ட பாவிகள் நாம்… தென்ஆப்பிரிக்காவில் 16 வயதுக்குக் குறைந்தவர்கள் உதட்டில் முத்தமிடக் கூடாது என்று சட்டம் இருந்தது. தாய்லாந்து, ஜப்பான் போன்றவையும் நம்மைப் போலத்தான். ரோடினின் தி கிஸ் என்ற சிற்பம் டோக்கியோவிற்கு ஒரு சிற்பக் கண்காட்சிக்கு வந்த போது, அந்த சிற்பத்தை  கண்காட்சி முடியும் வரை பெரிய போர்வையால் போர்த்தி காட்சிப் படுத்தினார்கள் ஜப்பானிய சங்கிகள்.  நீண்ட காலத்திற்கு, ஹாலிவுட் படங்கள் தணிக்கை செய்யப்பட்டு , முத்தக் காட்சிகள் வெட்டப்பட்டு தான் ஜப்பானில் அனுமதிக்கப்பட்டன. அமெரிக்கா கூட முத்த விஷயத்தில் சற்று கட்டுப்பெட்டியாகத் தான் இருந்தது.  முதல் உலகப் போருக்குப் பின்புதான் அமெரிக்கார்கள் முத்தத்தின் போது லேசாக நாக்கால் துளாவ ஆரம்பித்தார்களாம்.

நாடு பிடிக்கவும், மதம் பரப்பவும் உலகெங்கும் பயணித்தவர்கள், தாம் வந்த வேலையை ஒழுங்காகப் பார்த்தார்களோ, இல்லையோ, முத்தத்தை உலகெங்கும் பரப்பிவிட்டார்கள். 1864இல் மேற்குறித்த இரண்டு நோக்கங்களுக்காகவும்  ஆப்பிரிக்கா சென்ற வில்லியம் வின்வுட் ரீடர் என்ற சாகசப்பயணி அங்கு ஒரு கருப்பினப் பெண்ணொடு காதல் கொண்டு விட்டார். சற்று நெருக்கமானதும், இவர் அவளது உதட்டைக் கவ்வ, அவள் கத்தி ஊரைக் கூட்டிவிட்டாள். நரமாமிசம் உண்ணும் பழக்கம் உள்ள சமூகத்தைச் சேர்ந்த அவளுக்கு ரீடர் தன் உதட்டைக் கடித்துத் தின்னத்தான் இப்படி செய்கிறார் என்று பயம் வந்துவிட்டது. அவள் உறவினர்கள் எல்லோரும் ஓடி வந்து ரீடரைக் கட்டிப் போட்டுவிட்டு, அவரை சமைக்க மசாலா அரைக்க ஆரம்பித்து விட்டார்கள். எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி தப்பித்து, தன் அந்த அனுபவத்தை Savage Africa  என்ற புத்தகத்தில் பதிவும் செய்துவிட்டார் என்கிறார் ஷெரில். இன்று முத்தமிடுதலைப் பரப்பும் வேலையை சினிமா செய்கிறது என்கிறார் அவர்.  சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடும் வேளையிலும், பூக்கள் முத்தமிடுவதையே பார்த்துக் கொண்டிருந்த நமக்கு இப்போது அடுத்த கட்ட வளர்ச்சியான வெப் சீரீஸ்கள் இந்த வேலையைச் செய்ய ஆரம்பித்துள்ளன.

இரண்டு மூன்று அத்தியாயங்கள் முத்தமிடும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன்கள், ஆக்ஸிடோசின், கார்ட்டிசோல் என்று கடுமையான அறிவியல் சமாச்சாரங்கள்.  முத்தமிடும் போது நம் ஐம்புலன்களும் கூர்மையாகி, மூளைக்கு ஏகப்பட்ட செய்திகளை அனுப்பிக் கொண்டே இருக்கின்றன. தொடுஉணர்வு, உடலின் உஷ்ணம், வலி என்று எல்லாவற்றைப் பற்றியும் அப்டேட் செய்கின்றன. கூடவே  இவள் வெங்காயம் சாப்பிட்டிருக்கிறாள், உதட்டில் முத்தமிடும் போது இவன் கை ஏன் அங்கே போகிறது? என்பது போன்ற  சம்பந்தமற்ற, ஆனால் அவசியமான தகவல்களையம் அனுப்புகின்றன என்கிறார் ஷெரில். இவை என் நண்பர் டாக்டர். ராமானுஜத்தின் ஏரியா என்பதால் நான் அதிகம் எதுவும் கூறவில்லை. ஆனால் இந்தப் பகுதிகளை எழுத, முத்தம் எனும் அறிவியல் குறித்து எழுத இவரைத் தூண்டியவர் விலியனூர் ராமச்சந்திரன் என்பதை அறிய வியப்பாக இருந்தது. இவரது நூல் ஒன்றைத் தான் தமிழில் படித்திருக்கிறேன்.. தமிழ் மொழிபெயர்ப்புத் துறையின் வீச்சு பற்றி வியப்பாகவும், பெருமையாகவும் இருந்தது.

புத்தகத்தின் இறுதியில்  முத்த அறிவியல் குறித்த வழிகாட்டுதல்களைத் தருகிறார் ஷெரில் . பொதுமக்கள் நன்மை கருதி அவற்றைக் கீழே தருகிறேன்.

ஆண்களுக்கு உதடுகள் பிடிக்கும். அதுவும் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். எனவே லிப்ஸ்டிக் போடுவது நலம். அது சுமேரிய நாகரீகக் காலத்துப் பழமையான வழக்கம்.

உதடுகள் வாசனையாக இருக்க வேண்டும்.

ஒருவரை நன்கு அறிந்த பிறகு முத்தமிடுங்கள். அப்போதுதான் நீங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர உங்கள் ஆக்ஸிடோசின் உதவும்.

முத்தத்திற்காக ஏங்க விடுங்கள்.

கடைசி விதி – இதற்காக இந்த சட்டதிட்டங்கள் பற்றி ரொம்பவும் கவலைப்படாமல், மனது சரி என்று சொன்னால் முத்தமிட்டுவிடுங்கள். ஏனெனில், முத்தம் எனும் உணர்வு சார்ந்த விஷயத்தை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து புரிந்து கொள்வது கடினம். அறிவியல் முத்தம் பற்றி அறிந்து கொள்ள உதவலாம். ஆனால் ஒருவரின் மனதில் இடம் பிடிப்பதற்கு நீங்கள் நல்லவராக, நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்கிறார் ஷெரில். புத்தகத்தின் செய்தி இதுதான்.

இத்தனை சுவாரஸ்யமான விஷயம் தொடர்பாக நம் தமிழ்ச் சூழல் பற்றி எழுதாது, யாரோ ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி சொல்வதை எழுத வேண்டியது குறித்து எனக்கு சங்கடமாக இருக்கிறது.   சங்க காலத்தில் முத்தம், ஐங்குறுநூற்றில் ஐநூறு வகை முத்தம் என்பது போல் ஏதேனும் ஆய்வு நூல்கள் இருந்தால் தெரிவிக்குமாறு வாசக அன்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்து முடிக்கிறேன்.

ஆர்வமுள்ளோர் வாசிக்க  – The Science Of Kissing – What Our Lips Are Telling Us by Sheril Krishenbaum