சில ஆண்டுகளுக்கு முன்னர் ’அம்ருதா’ இதழில் பிரசுரமாகியிருந்த ’பின்தொடர்தல்’ சிறுகதையைப் பார்த்தபோது, சிங்கள மொழியில் என்ன பெரிய கதை? என்ற மனத்தடையுடன் வாசிக்கத் தொடங்கினேன். கதைசொல்லியான பெண்ணின் மனம் சார்ந்து விவரிக்கப்பட்ட கதையாடல், என்னைக் கவர்ந்தது. இளைஞியும் இளைஞனும் ஏன்ற இரு கதைமாந்தர்களின் வழியாகச் சொல்லப்பட்ட கதையை எழுதியவர் மனுஷா ப்ரபானி, திஸாநாயக்க என்ற சிங்களப் பெண் படைப்பாளர் என்று அறிந்தவுடன் கதைக்குப் புதிய பரிமாணம் எனக்குள் தோன்றியது. ஒரு பெண்ணின் காதல் வேட்கையையும் விழைவையும் பெண் மொழியில் சொல்லப்பட்டிருந்த ’பின்தொடர்தல்’ கதை, வாசிப்பில் எனக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மலரினும் மெல்லியது காதல் என்ற புரிதலுடன் கதையை விவரித்துள்ள மனுஷா ப்ரபானியின் எழுத்து, சமகாலப் பெண்ணிய எழுத்துகளில் தனித்துவமானது. 2023 ஆம் ஆண்டு டிஸ்கவரி பதிப்பகம்மூலம் நான் தொகுத்து வெளியிட்ட ‘உலகக் காதல் கதைகள்’ பத்தகத்தில் பின்தொடர்தல் சிறுகதையும் இடம் பெற்றுள்ளது. லேவ் தல்ஸ்தோய், பேர் லாகர்விஸ்ட், வில்லியம் ஸரோயன், பால்வான் ஹெய்ஸே, கிரேஸியா டெல்டா, மாகெரித் யூர்ஸ்னார், மக்சீம் கார்க்கி, ரேமண்ட் கார்வார் அலெக்சாந்தர் குப்ரின் போன்ற பதின்மூன்று உலகின் தலை சிறந்த படைப்பாளர்களின் படைப்புகளுடன் ஒப்பிடுமளவு மனுஷா ப்ரபானியின் பின்தொடர்தல் கதையும் இருக்கிறது. தமிழில் மனுஷா ப்ரபானியின் எழுத்துபோல மனத்தடை இல்லாமல் எழுதுகிற பெண்ணெழுத்து இருக்கிறதா? யோசிக்க வேண்டியுள்ளது.
மனுஷா ப்ரபானி வேவ்வேறு காலகட்டங்களில் எழுதிய ஆறு சிறுகதைகளை ரிஷான் செரீப் தேர்ந்தெடுத்துத் தமிழில் மொழிபெயர்த்துப் ‘பின்தொடர்தல்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். அந்தக் கதைகள் பற்றிய எனது எண்ணங்களைப் பகிர்ந்திட விழைந்துள்ளேன்.
பின்தொடர்தல் கதையில் பெயர் அற்ற கதைசொல்லியான பெண்ணின் மனதைப் பதிவாக்கியுள்ள மனுஷா ப்ரபாவின் மொழி ஆளுகை அற்புதமானது. மனதில் தோன்றும் மெல்லிய உணர்வுகளை அப்படியே மொழியில் பதிவாக்கிடுவது ஒருவகையில் சவால். மனுஷா ப்ரபானி நுட்பமான சொற்களின் பெண் மனதைச் சித்திரித்துள்ளார். தினமும் ரயிலில் பயணிக்கிற இளம் பெண்ணுக்குச், சக பயணியான இளைஞனைப் பார்த்தவுடன் மனதில் அரும்பிடும் ஈரமான உணர்வுகள் பொங்கி வழிகின்றன. அவள் தன்னுடைய விருப்பத்தை அவனிடம் சொல்ல முடியாமல் தவிக்கிற தவிப்பை மனுஷா ப்ரபானி நுணுக்கமாகச் விவரித்துள்ளார். அவள் வெள்ளந்தியானவள் என்று தோன்றினாலும் அவளுக்குள் கொப்பளித்திடும் காதல், அவளைத் திமிரான மனுஷியாக மாற்றுகின்றது.
மனித இருப்பின் ஆதாரமும் கொண்டாட்டமும் மிக்க காதல் என்ற சொல், ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்துகிற உணர்வுகள் அளவற்றவை. உலகில் வாழும் எல்லா உயிரினங்களும் மறு உற்பத்திக்காக ஆணும் பெண்ணும் இணை சேர்கின்றன. அவ்வளவுதான். அங்கே காதல் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனிதர்கள் மட்டும்தான் காதல் என்ற சொல்லின் வழியாக ஒருவரையொருவர் நேசித்து, காலந்தோறும் மகிழ்கின்றனர். மனத்திற்கு மிகவும் நெருக்கமான காதல், படைப்பாளர்களின் மனதில் காலந்தோறும் சலனங்களை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. காதல் என்றாலே கிளுகிளுப்பு, மகிழ்ச்சி என்று சராசரி இளைஞனும் இளைஞியும் நினைக்கும்வேளையில் மனுஷா ப்ரபாவின் கதை, பெண் – ஆண் உறவின் காதலின் ஆழத்தை அழுத்தமாகப் பதிவாக்கியுள்ளது. பொதுவாக இளம்பெண்ணின் அசலான மனவோட்டம் காதல் உணர்வில் ததும்புகிறது. யாரோ இருவரின் காதல் அனுபவங்கள் என்பதற்கு அப்பால் வாசிப்பின்மூலம் கதைப் பிரதிக்குள் இருந்து வெளியேறிய கதைமாந்தர்கள், வாசகரிடம் காதல் கதைகளைப் புதிதாக உருவாக்குகின்றன. காதலை முன்வைத்துச் சொல்லப்பட்டுள்ள ’’பின்தொடர்தல்’ கதையை வாசிக்கையில் காதலர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியும் வேதனையும் ஏற்படுவது ஒருவகையில் விநோதம்தான். யதார்த்தத்தில் காதலர்களின் அனுபவங்கள், பிரதிகளின் வழியாகப் பதிவாகி, அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லப்படும் விநோதம் நிகழ்கின்றது.
பின்தொடர்தல் கதையைத் தேர்ந்தெடுத்துத் தமிழாக்கிய எம்.ரிஷான் செரீப்பின் இலக்கியச் செயல்பாடு முக்கியமானது. சிங்கள மொழி என்றாலே கசப்பும் வெறுப்பும் நிலவுகிற தமிழ்நாட்டுச் சூழலில் சிங்களவரும் அனபான மனிதர்கள் என்ற பிம்பத்தை மொழிபெயர்ப்புப் படைப்புகள்மூலம் உருவாக்குகின்ற ரிஷான் செரீப்பின் பணி, வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். நுகர்பொருள் பண்பாட்டின் ஆதிக்கத்தில் போலிகளின் நகல்களைக் கொண்டாடுகின்ற சூழலில் அசலான வாழ்க்கையை விவரிக்கின்ற இதுபோன்ற கதைகள் வெறுப்பு அரசியலை கேள்விக்குள்ளாக்குகின்றன.
’காதலற்ற கதை’, ’நெட்டையும் குட்டையும்’, இலையுதிர்க்கால மேலங்கியும் அடைமழைக்கால விழிகளும் ஆகிய மூன்று கதைகளும் காதலின் வெவ்வேறு பரிமாணங்களைப் பதிவாக்கியுள்ளன. காதல் விநோதமானது; கவர்ச்சியானது; மாயமான முறையில் மனித குலத்தின்மீது நிழலாகப் பற்றிப் படர்ந்திருப்பது. கொண்டாட்டம், மகிழ்ச்சி, பதற்றம், ஏக்கம், விழைவு, தவிப்பு, காத்திருப்பு, சீற்றம், கொந்தளிப்பு, கோபம், பயம், மயக்கம் எனப் பல்வேறு உணர்வுநிலைகளில் காதல் ஏற்படுத்தும் அனுபவங்கள் அளவற்றவை. காதல் என்ற உணர்வைப் பெண் மைய நோக்கில் விவரிக்கிற மனுஷ ப்ரபானி எழுதிய கதைகளில் இதுவரை பெண் பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள புனைவுகள் நொறுங்குகின்றன. இனக்குழு வாழ்க்கையில் எளிமையாக இருந்த பெண்- ஆண் பாலியல் துய்ப்பும் மகிழ்வும், இன்று முடிவற்ற சுழலுக்குள் சிக்கிக்கொண்டிருப்பதைக் காதல்மூலம் அறிய முடிகின்றது. காதல் மனித இருப்பின் ஆதாரம் என்ற புரிதலுடன் மனுஷா ப்ரபானி காதலை முன்வைத்து ஏன் இப்படியெல்லாம் மனிதர்கள் சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்கின்றார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். காதல் வயப்பட்ட இரு உள்ளங்களில் தோன்றும் உணர்வுகளை நெட்டையும் குட்டையும் கதை நுட்பமாகச் சித்திரித்துள்ளது. சேபாலிகா என்ற குள்ளமான பெண்ணுக்கும் மேலாளரான நெட்டையான ஆணுக்கும் இடையில் அன்பினால் உருவான ப்ரியம், ஒரு கட்டத்தில் காதலாகக் கசிகின்றது. எப்படி இந்த மாயம் இருவருக்குள்ளும் நிகழ்ந்தது என்ற கேள்வி வாசிப்பில் தோன்றுகின்றது? எப்பொழுதும் இறுக்கமான முகத்துடன் பெண்களை வெறுமனே உடலாகக் கடந்து போகின்ற ஆணுக்குள் நிகழ்ந்த வேதியியல் மாற்றங்கள்தான் என்ன? மனுஷா ப்ரபானி காதலில் மூழ்கித் தத்தளிக்கிறவர்களின் மனதில் விரிந்திடும் முடிவற்ற உணர்வுகளை எழுத்தில் பதிவாக்குவதில் வெற்றியடைந்துள்ளார்.
’மாதவிலக்கு மற்றும் தொல்லுயிர் எச்சம்’ கதை, பெண் மொழியில் விரிந்துள்ளது. ஒருபோதும் ஆண் நினைத்திராக பெண்ணுடலும் மனமும் இணைந்த கதை, வாசிப்பில் தொந்தரவு செய்கின்றது. கதைசொல்லியான பெண்ணின் முதல் காதல் நிறைவேறாமல் போனது ஒருபுறமும் அவளால் நேசிக்கப்பட்டவனின் புறக்கணிப்பு ஒன்னொருபுறமும் நெருக்கடிக்குள்ளாக்குகின்றன. பெண்ணின் இருப்பு அடையாளப்படுத்தப்படாத சூழலில் வாழ்ந்திடுமாறு நிர்பந்திக்கப்பட்ட பெண் எதிர்கொள்கின்ற மனதின் தவிப்புகள், அளவற்றவை. இப்பொழுது திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயான பின்னரும் மாதந்தோறும் மாதவிலக்கின்போது முன்னர் தன்னைப் புறந்தள்ளிய ’கழுதை’யின் நினைவு வந்து அவளைத் துயரமடைச் செய்கின்றது. பெண்ணுடலின் புதிர்கள் குறித்துப் புரிதலற்ற மரமண்டைகளான பெரும்பாலான ஆண்களின் மனதில் கதை வாசிப்பில் கேள்விகளை எழுப்புகிறது.
“ எனது மனைவிக்கு எப்பொழுது மாதவிடாய் வருகிறது என்று எனக்கே தெரியாது என்று எந்தக் கணவன் சொல்கிறானோ அவன்தான் இந்த உலகத்தில் ஆகவும் மோசமான கொடியவன்…அனைத்தும் அறிந்த புத்தர் பெருமானே மாதவிலக்குக் காலத்தை பெண்களுக்குரிய வேதனைக் காலமாகப் பார்த்திருக்கிறார் என்றால் இந்தச் சாமான்யர்களான ஆண்கள் ஏன் மாதவிடாயை வெகுசாதாரண விடயமாகப் பார்க்கிறார்கள்?” மனுஷா ப்ரபானி கதையின் ஊடாகக் கட்டுரையாகக் கதைத்திருப்பது கதைக்குப் புதிய பரிமாணத்தைத் தந்துள்ளது.
மரபணுக்களின் வழியாகக் காலந்தோறும் பதிவாக்கியுள்ள பெண் பற்றிய பிம்பம். இன்று சிதலமாகியுள்ளது. ஒப்பீட்டு நிலையில் பெண்ணுடல் இயற்கையுடன் நெருக்கமானது, மாதந்தோறும் வெளியாகும் மாதவிலக்கு, மகப்பேறு, குழந்தைக்குப் பாலூட்டுதல் போன்றன பெண்ணின் இருப்பைத் தனித்துவமாக்கியுள்ளன. சமூக உருவாக்கத்தில் ஆணுடன் சேர்ந்து வாழ்ந்திடும் பெண் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளும் கொண்டாட்டங்களும் அளவற்றவை. சக மனுசியான பெண்ணின் இயல்பைப் புரிந்திடாமல் பெரும்பாலான ஆண்கள் தவிக்கின்றனர். ‘உம்மணாமூஞ்சிக் குடும்பத்தின் மருமகளாக…’ என்ற கதையின் தலைப்புப் பெண்ணின் பிரச்சினையைச் சித்திரித்துள்ளது. திருமணம் என்ற உறவில் இதுவரை அறிமுகமற்ற இன்னொரு வீட்டிற்கு மருமகளாகப் போகின்ற பெண் மனரீதியில் எதிர்கொள்கின்ற வெறுமையை மனுஷா ப்ரபானி பதிவாக்கியுள்ளார். கணவன், மாமியார், நாத்தனார் என்ற சிறிய குடும்பத்தில் எல்லோரும் உம்மாணாமூஞ்சிகளாக் இருக்கும்போது புதிதாக வந்த இளம் பெண்ணின் மனம், நினைவுகளின் வழியாக முன்னும் பின்னும் தவிக்கிறது. எதையும் கண்டுகொள்ளாத கணவனின் அன்றாடச் செயல்பாடுகள் அவளுக்கு வெறுப்பை அளிக்கின்றன. பொதுவாகச் சக மனிதரைச் சகிப்பதுதான் பெரிய விஷயம். ஒருவரையொருவர் பொறுத்துக் கொள்வது ஒருவகையில் சிக்கலானது. வாசிப்பின்மூலம் உம்மணாமூஞ்சி வாழ்க்கையில் வாழ நேர்ந்திடும் சூழலில் கதைசொல்லியான பெண்ணைப் புரிந்துகொள்ள முடிகிறது. குடும்ப நிறுவனம் செலுத்துகின்ற அதிகாரத்தைக் கேள்விக்குளாக்கிடும் கதைசொல்லி, பிரதியின் வழியாக வெளியேறி நிலவெளிக்குள் உலாவுகின்றார். நோர்வே நாடக ஆசிரியரான ஹென்றிக் இப்சன் 1879 ஆம் ஆண்டு எழுதிய ’பொம்மையா? மனைவியா?’ நாடகத்தின் முதன்மைப் பாத்திரமான மனைவி அனுபவிக்கிற கசப்பும் வெறுமையும் 2024 ஆம் ஆண்டிலும் தொடர்கின்றன என்பதுதான் மனுஷா ப்ரபானி சொல்கின்ற கசப்பான சேதி.
காதலை முன்னிறுத்திடும் சங்க இலக்கியப் பாடல்களின் தொடர்ச்சி நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புகளில் பெரிய எண்ணிக்கையில் தொடர்ந்திடவில்லை. இத்தகைய சூழலில் சிங்களப் பெண் படைப்பாளர் மனுஷா ப்ரபானி எழுதியுள்ள சிறுகதைகளில் இருந்து காதலை முன்வைத்திடும் கதைகளைத் தேர்ந்தடுத்து மொழிபெயர்க்க வேண்டும் என்ற காத்திரமான நோக்கத்துடன் செயல்பட்டுள்ள எம்.ரிஷான் ஷெரீப்பின் பணி, கவனத்திற்குரியது; போற்றுதலுக்குரியது. பின்தொடர்தல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் வாசிப்பில் மகிழ்ச்சியை அளித்தாலும், இன்னொருபுறம் வாசகரின் மனநிலையைத் தொந்தரவு செய்திடும் வல்லமையுடையன. அதுவே இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆகப் பெரிய பலம்
பின்தொடர்தல். மனுஷா ப்ரபானி திஸாநாயக்க. தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப். சென்னை; எழுத்து பிரசுரம். பக்கம்:125; விலை;ரூ.150/-. தொடர்புக்கு:89250 61999