பூஜை அறையில் எப்பொழுதும் மங்கலான மஞ்சள் ஒளி இருந்து கொண்டேயிருக்கும். சுதா, காலையில் அவ்வறைக் கதவைத் திறந்த போது ,மஞ்சள் ஒளி வழக்கத்தை விட, சற்றுக் கூடுதலாக இருப்பது போல் அவளுக்குப் பட்டது.
ஸ்வாமிப் படங்களுக்குப் பின்னால் ஜன்னல். வீட்டுக்கு வெளியேயிருந்த மரத்தின் இலைகள் காற்றில் உறைந்த நிலையில் இருப்பன போல் அசையாமல் நிற்பன போல் தெரிந்தன…
அறை உயிர் பெற்று எழுவது போல் அவளுக்குத் தோன்றிற்று.
சுரேஷ் இன்று பெல்ட் போட்டுக் கொள்ளவில்லையா? அலுவலகத்துக்குச் சீக்கிரம் போகவேண்டுமென்று நேற்றிரவு படுக்கப்போகும் முன் சொன்னான். புறப்பட்டுப் போய்விட்டானா? ஏழரை மணிக்குள்ளாகவா? சாத்தியமில்லை. பெல்ட் போடாமல் போகமாட்டானே? அவனுடைய பெல்ட், பாலாஜி படத்துக்கு எதிரே வட்டமாய்ச் சுருண்டு கிடந்தது.
சுரேஷ் கன கச்சிதமாய் தன் உடம்பை வைத்துக் கொண்டிருந்தான். நாள் தவறாமல் ‘ஜிம்’முக்குப் போவான். ஒரு வேளை, இப்பொழுது ‘ஜிம்’முக்குப் போயிருப்பானோ? இருக்காது. சுரேஷ் எங்கே?
அவள் அறையைவிட்டு வெளியே வந்தாள்.
சுரேஷ் வாசலிலிருந்து உள்ளே வந்தான். கையில் ஒரு ‘ஃபைல்’.
‘எங்கே போனே?’ என்றாள் சுதா,
‘அவன் ‘ஃபைலை’க் காண்பித்தான். ‘கார்லேந்து எடுத்துண்டு வந்தேன்’ என்றான்.
‘உன் பெல்ட் பெருமாள் படத்துக்கு முன்னாலே கீழே கிடக்கே?’
‘என் பெல்ட்டா? என் பாண்ட்லியே இருக்கு அது.எப்படிக் கீழே கிடக்கும்?’’
‘ஸ்வாமி உள்ளே போய் பாரு.’
சுரேஷ் போனான்.
‘எங்கே இருக்கு? என்ன சொல்றே நீ?’ என்றான் அவன்.
சுதா, ஸ்வாமி அறைக்குள் வந்தாள்.
பெல்ட் அங்கு இல்லை!
‘இங்கேதானே இருந்தது? எப்படிப் போச்சு?’ என்றாள் சுதா.
அதற்குள் சுரேஷ் தன் ‘பான்டை’ எடுத்துக் கொண்டு வந்தான். அதைச் சுதாவிடம் காண்பித்தான்.
பெல்ட், பான்ட்’டில் தொங்கியது
பெல்டிலிருந்த துளைகள் அவளுக்குக் கண்களாகத் தெரிந்தன.
‘’இது பெல்டா?’ என்று குரலைச் சற்று உயர்த்திக் கலவரத்துடன் கேட்டாள்.
‘ஆர் யூ கிரேஸி?’ என்றான் சுரேஷ்.
‘நிச்சியமா சொல்றேன், அப்பொ நான் பார்த்தபோது ஒண்ணு சுருண்டு கிடந்தது. உன் பெல்ட்ன்னு நினைச்சேன்..’
‘அது இப்பொ எங்கே?’
‘தெரியலியே!’
‘பாம்பா இருக்குமோ?’“பெல்டில் மறைந்தது பாம்பு, பாம்பில் மறைந்தது பெல்ட்’. இப்பொ பெல்டையும் காணோம், பாம்பையும் காணோம். ஸுன்யவாதம்..’ என்று புன்னகையுடன் கூறினான் சுரேஷ்.
‘விளையாடாதே. பாம்புதான். அதோ அந்த மரத்திலேந்து ஜன்னல்.
வழியா உள்ளே வந்திருக்கு? ‘ட்யூப் லைட்டை’ப் போடு..’
‘ஜன்னல் சாத்தியிருக்கே, எப்படி வரமுடியும்? சூட்சும சரீரமா?’ என்று
கேட்டுக் கொண்டே அவன் விளக்கைப் போட்டான்.
விளக்கு, சிறிது நேரத் தயக்கத்துக்குப் பிறகு ஒளிர்ந்து,பிறகு அணைந்து
விட்டது.
சுதா கணவனைக் கலவரத்துடன் பார்த்தாள்.
‘ ஏன் அப்படிப் பாக்கறே? ‘ஃப்யூஸ்’ ஆயிருக்கு, அவ்வளவுதான்’.
என்றான் சுரேஷ்.
‘இப்பொவா ஆகணும்? எனக்கு என்னமோ பயமாயிருக்கு,பாம்புதான்’
என்றாள் சுதா.
‘சரி, அதான் இந்த விளக்கு இருக்கே? நான் ஸ்வாமிப் படங்களுக்குப்
பின்னாலே பாக்கறேன்..’ என்று கூறிக்கொண்டே போகத் தொடங்கினான்
சுரேஷ்.
‘ப்ளீஸ்.. போகாதே! இங்கே வா’ என்று கத்தினாள் சுதா.
‘ வாட் ஈஸ் யுவர் ப்ராப்ளம்?’ என்று கேட்டான் சுரேஷ்.
‘அங்கே பாம்பு இருந்தா, உன்னாலே என்ன பண்ண முடியும்? வேண்டாம்,
விஷப் பரீட்சை..’
‘விஷப் பரீட்சை! கரெக்டா சொன்னே! விஷப் பரீட்சை,லிட்டரலி‘ என்று திரும்பி வந்து அவள் கைகளைக் குலுக்கினான் சுரேஷ்.’ஆமாம், நீ எப்பொ குளிச்சே?’ என்றான் தொடர்ந்து.
‘நான் இன்னும் குளிக்கலே.. ஸ்வாமியை நமஸ்காரம் பண்ணலாம்னு கதவைத் திறந்தேன்.. ‘அது’ இருந்தது’.
‘எது?’ பாம்பா,பழுதையா?’
‘உனக்கு எல்லாம் விளையாட்டா இருக்கு..எனக்கு பயமா இருக்கு.. ‘ என்றாள் சுதா.
‘நான் அப்பொ கேட்டது ‘metaphorical’ கேள்வி, ‘நீ எப்பொ குளிச்சேங்கிறது. .பாம்பு ஒரு’fertility symbol’. புரியறதா? ‘
‘நாப்பது நாளாறது.. அப்பொ பாம்பு என் வயத்துக்குள்ளே இருக்குங்கிறியா?’
‘ ரியலி? என்கிட்டே நீ சொல்லவேயில்லியே? ‘குட்! கிரேட் நியூஸ்’ என்று
சொல்லிகொண்டே அவளைக் கட்டிக் கொண்டான் சுரேஷ்.
‘என்ன சொல்றே நீ? பாம்பு என் வயத்துக்குள்ளே இருக்கிறதா ‘க்ரேட் நியூஸ்?’
‘பாம்பு இல்லே, ஒரு குட்டி சுதா இருக்கா. பாம்பு ஒரு fertility symbol. உன் அடிமனசிலே…’அவன் சொல்வதற்குள் சுதா குறுக்கிட்டாள்.
‘ப்ளீஸ்.. உன் ஸ்டுப்பிட் சைகாலஜியெல்லாம் வேணாம்.. பாம்புக்கே பொறுக்காமெ, அது இங்கே இருந்ததுன்னா, உன் ‘போர்’ தாங்காமே ஓடிப் போயிடும். சொர்ணம் வருவா இப்பொ.. ரெண்டு மாசம் முன்னாலே அவ வீட்டுக்குள்ளே பாம்பு வந்துடுத்தாம். அவ புருஷன்தான் பிடிச்சு வெளியே வயக் காட்டிலே கொண்டு போய் விட்டானாம். பாம்பை அடிச்சுக் கொல்லக்கூடாது. அவகிட்டே சொல்லி அவ புருஷனை வரச் சொல்லலாம்’ என்றாள் சுதா.
அப்பொழுது வாசல் மணி ஒலிக்கும் சப்தம் கேட்டது.
‘இதோ அவளே வந்துட்டா… கதவைத் திற. நான் ஸ்வாமி ‘ரூம்’ கதவைச் சாத்திண்டு வரேன்.’
‘எனக்கு ‘ஆபீஸ்’ சீக்கிரம் போயாகணும். பாம்பு,,மந்திரவாதியெல்லாம். உன்பொறுப்பு.. நான் வாசல் கதவைத் திறந்துட்டுக் குளிக்கப்போறேன்’
சுரேஷ் வாசல் கதவைத் திறந்தபோது, ‘கரு’ ‘கரு’வென்று வளர்ந்திருந்த ஒரு நீண்ட தாடி அவனை வரவேற்றது . திருநீறு பூசிய நெற்றி முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்ட வட்ட வடிவமான குங்குமப் பொட்டு. மலைக்குப் போகும் கோலத்தில் ஓர் இளைஞன் நின்று கொண்டிருந்தான்..
‘சொர்ணம் குழந்தையைக் கூட்டிகிட்டு ‘ஸ்கூலு’க்குப்போயிருக்காங்க…டீச்சர் வரச்சொன்னாங்களாம்.. சொல்லச் சொன்னாங்க’.
சுரேஷ் ஒன்றும் புரியாமல் தன்னைப் பார்ப்பதைக் கண்டு, அவன் புன்னகையுடன் சொன்னான்;’ சொர்ணம் என்னைச் சொல்லிட்டு வரச் சொன்னாங்க..என் பேரு ராஜு.’
சொர்ணத்தின் கணவன் என்று யூகித்துக் கொண்டான் சுரேஷ்.
‘அப்படியா? உள்ளே வாங்க.. உங்களுக்குப் பாம்பைப் பத்தித் தெரியுமா?’ என்றான் சுரேஷ்.
‘எதுக்குக் கேக்கறீங்க?’ என்றான் ராஜு. தன் தாடியைப் பரிவுடன் நீவிக்கொண்டே.
‘சொர்ணம் வரமாட்டாளா?’ என்று கேட்டுக் கொண்டே, சுதா அப்பொழுது
வந்தாள்.
‘வருவாங்க…. டீச்சர் வரச் சொன்னாங்களாம், பாப்பாகூட பள்ளிக்கூடம் போயிருக்காங்க..’
‘ ஸ்வாமி உள்ளே ஒரு பாம்பு வந்திருக்கு. வந்திருக்கான்னு நிச்சயமாத் தெரியலே.. காத்தாலே பார்த்தமாதிரி இருந்தது. இப்பொ காணோம். எனக்கு ஒரே பயமா இருக்கு.. நீங்க கொஞ்சம் வந்து பாத்தீங்கன்னா..’மனசு நிம்மதியா இருக்கும்.’
‘அவருக்கு ‘டயம்’ இருக்கான்னு கேக்காமே நீ பாட்டுக்கு பேசிண்டே போறியே/ என்றான் சுரேஷ்.
‘பரவாயில்லீங்க… இன்னிக்குத் திருவாதிரை நட்சத்திரம் ,பஞ்சமி திதி. நாகம் வந்திருச்சுதுன்னா விசேஷங்க. ‘
‘யாருக்கு விசேஷம்? நமக்கா ,நாகத்துக்கா?’ என்றான் சுரேஷ்.
‘சரி, நீ குளிக்கப் போ.. ‘ஆபிஸு’க்குச் சீக்கிரம் போகணும்னு சொன்னியே
என்றாள் சுதா.
‘நாகம் எந்த உள்ளேங்க இருக்கு?’ என்றான் ராஜு.
‘நாகம் இருக்கான்னு எனக்குத் தெரியலே..நீங்கதான் சொல்லணும். முதல்லே பெல்ட் மாதிரி தெரிஞ்சுது. அப்புறம் மறைஞ்சு போச்சு..என் பிரமையாகவுமிருக்கலாம்..’
ராஜுவை அழைத்துக் கொண்டு ஸ்வாமி அறை அருகே சென்றாள் சுதா.
இது ஒரு சுவாரஸ்யமான அநுபவமாக இருக்கும்போல் சுரேஷுக்குப் பட்டது. ஆனால் அன்று அவனால்அலுவலகம் போகாமலிருக்க முடியாது. பத்து மணிக்கு ஒரு முக்கியமான ‘மீட்டிங்’..
அவன் குளிப்பதற்காகச் சென்றான்.
குளியலறைக்குச் சென்று விளக்கைப் போட்டதும், அவனுக்கு ஏதோ ஒன்று நிழலாக ஓடி மறைவது போல் ஓருணர்வு தோன்றியது.
இதென்ன பைத்தியக்காரதனம்? சுதாவைக் கிண்டல் செய்துவிட்டுத் தானே பயத்துக்கு அடிமையாவது வேடிக்கைதான்! பயம் ஒரு தொற்று நோய். சுதாவுக்கு அவனுடைய பெல்ட் ஏன் பாம்பாகத் தெரிந்தது? அவள் கனவில் பாம்பு வந்திருக்குமோ? உலகமெங்கும் பழங்காலத்திலிருந்தே பாம்பைப் பற்றி ஏராளமான கதைகள்,நம்பிக்கைகள். பைபிளில், ஏவாளுக்குப் பாலுணர்வு தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது பாம்புதான்! நாகர்கோயிலருகே ஒரு கோவிலில் ஏராளமான பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கிடந்த காட்சி அவன் மனக்கண் முன் வந்து நின்றது. அவன் திருமணம் ஆவதற்குமுன் அங்கு போயிருக்கிறான்..
அந்தக் கோயிலுக்குச் சென்று பாம்புக்குப் பாலூற்றினால், புத்திர பாக்கியம் உண்டாகுமென்பது நம்பிக்கை! சுதா அங்குப் போக வேண்டுமென்று நச்சரித்துக் கொண்டிருந்தாள். போகவேண்டுமென்று எண்ணியதாலோ என்னவோ அவள் ‘குளித்து’ நாற்பது நாட்களாகிவீட்டன! .
அவன் குளியலறையைவிட்டு வெளியே வந்தான்.
சுதா ஸ்வாமி அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தாள்.
‘ஏன் இங்கே நிக்கறே? ராஜு எங்கே?’
அவள் ஸ்வாமி அறையை நோக்கிக் கையைக் காண்பித்தாள்.
‘பாம்பு இருக்கா?’
‘உள்ளே போனவுடனேயே ‘இங்கே நாகம் வந்திருக்கு,இப்பொ இருக்கான்னு தெரியலே,பாக்கறேன், நீங்க வெளியே இருங்க’ன்னான். நான் வந்துட்டேன்’என்றாள் சுதா.
‘வந்திருக்குன்னு எப்படித் தெரிஞ்சதாம்?’
‘பாம்புலியே புழங்குகிறவாளுக்குப் பாம்பு வாசனை தெரியாதா?’
‘பாம்புலியே புழங்கறானா? உனக்கு எப்படித் தெரியும்?’..’
‘திருத்தணி பக்கத்திலே அவன் கிராமத்திலே பாம்புக்குன்னு ஒரு கோயில் இருக்காம். .பரம்பரை பரம்பரையா இவன் குடும்பந்தான் கோயில் பூசாரியாம்..இவன் அப்பா சின்ன வயசிலேயே போயிட்டாராம். இவன் தாத்தா அங்கே இன்னும் பூசாரியா இருக்காராம்..’
‘உனக்கு அவனைப் பத்தி இவ்வளவு தகவல்கள் எப்படித் தெரியும்?’
‘அவன்தான் இப்பொ சொன்னான்’
‘பாம்பு ஒளிய உள்ளே எங்கே இடமிருக்கு? இன்னுமா தேடறான்?’ என்றான் சுரேஷ்.
‘தெரியலியே!. இன்னொரு விஷயம் ‘பாம்பு’ ‘பாம்பு’ன்னு சொல்லாதே ‘நாகம்’னு சொல்லு. அப்படித்தான் சொல்லணும்னான் ராஜு.’
‘சம்ஸ்கிருதத்திலே சொன்னாத்தான் மரியாதையா? இதோ பாரு, ஜன்னலோ மூடியிருக்கு. நம்மைத் தாண்டி பாம்பு- ஐ ஆம் ஸாரி- பாம்பார், தமிழ்லியே மரியாதையா சொல்றேன், போயிருக்கமுடியாது. அதனாலே’… என்று சொல்லிவிட்டு நிறுத்தினான் சுரேஷ்.
‘அதனாலே?’
‘உனக்கு நேத்து ராத்ரி பாம்பு சொப்பனம் வந்திருக்கலாம்.. உனக்கே ஞாபகம் இருக்கணும்னு அவசியமில்லே.. என்ன சொப்பனம்னு துளிக் கூட நினைவுக்கு வராமெ போகறதுமுண்டு.. அதனாலே உனக்கேற்பட்ட பிரமைதான் பாம்பு..’
சுதா அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றாள்.பிறகு சொன்னாள்:: ‘அப்பொ பாம்பு வந்திருக்குன்னு ராஜு ஏன் சொல்லணும்?’
‘ஒரு வேளை உன் சொப்பனத்திலே வந்த பாம்பையும் அவனாலே மோப்பம் பிடிக்க முடிஞ்சதோ என்னவோ?’
‘அந்த வாசனை படுக்கை அறையிலேன்னா இருக்கணும், ஸ்வாமி உள்ளே எப்படி வந்தது?’
‘உன்கிட்டே இருக்கு அந்த வாசனை, ‘ரூம்’ எதிலியுமில்லே..’
அப்பொழுது ஸ்வாமி அறைக் கதவு திறந்தது. ராஜு வெளியே வந்தான். அவன் அவர்களுடன் எதுவும் பேசாமல் அவர்களைக் கடந்து சென்றான்.
‘நாகம் இல்லியா?’ என்றாள் சுதா.
அவன் பதில் சொல்லவில்லை. தாடியை நீவிக்கொண்டே ‘ஹாலி’ல்
‘டைனிங் டேபிள்’ நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு
உட்கார்ந்தான்.அவன் சிந்தனையில் ஆழ்ந்திருப்பது போல் தோன்றிற்று.
‘என்ன யோசிக்கறீங்க?’ என்றான் சுரேஷ்.
‘ தட்சகன் தெரியுமா உங்களுக்கு?’ என்று கேட்டான் ராஜு.
‘யார் அவர், எங்கே இருக்கார்? அவர் பாம்.. நாகம் பிடிப்பாரா?’ என்றாள்
சுதா..
‘என்ன அறியாமை!’ என்று வேதனையின் வெளியீடாக அவன் முகத்தில்
ஒரு புன்னகை தோன்றியது.
‘பழத்தில் வந்து பரிட்சித்தைக் கொன்றவன் தட்சகன் .மஹாபாரதம்
படிச்சிருக்கீங்களா?’
‘மஹாபாரதத்துக்கும் எங்க ஸ்வாமி உள்ளே பாம்…நாகம் வரதுக்கும் என்ன
சம்பந்தம்?’ என்றாள் சுதா.
‘’உங்க முன்னோர்கள்ளே யாரோ ஒருவர் நாக ஹதம் செய்திருக்காரு..
பரிகாரம் பண்ணனும்..’
‘உங்க முன்னோர்னா, யாரு, என்னோட முன்னோரா, இவளுடைய
முன்னோரா?’ என்று கேட்டான் சுரேஷ்.
‘உங்க முன்னோர்தான்.. கல்யாணத்துக்கப்புறம் உங்க முன்னோர்தான்
இவங்களுக்கும் முன்னோர்…’ என்றான் ராஜு.
‘திருவாதிரை, பஞ்சமி, பாம்பு வரது விசேஷம்னு சொல்லிட்டு இப்பொ
பரிகாரம் பண்ணனுங்கிறீங்க.. இப்பொ அங்கே பாம்பு இருக்குங்கிறீங்களா?’
என்றான் சுரேஷ்.
‘இதோ பாருங்க.. பரிகாரம் பண்ணறதும், பண்ணாமெ இருக்கிறதும் உங்க
இஷ்டம்.. இப்பொ அங்கே நாகம் இல்லே.. மறுபடியும் வராதுன்னு
என்னாலே உறுதியா சொல்ல முடியாது..நல்ல நாளுங்கிறதினாலேதான்
எச்சரிக்கை கொடுக்க வந்திருப்பாரு நாக ராஜான்னு எனக்குத் தோணுது.
நம்பறதும், நம்பாமெயிருக்கிறதும் உங்க பிரியம்’ என்று சொல்லிக்
கொண்டே எழுந்தான் ராஜு.
‘உட்காருங்க, ராஜு.. பரிகாரம்னா என்ன செய்யணும்?’ என்றாள்
சுதா.
‘ஜெனமஜேயன் சர்ப்ப யாகம் பண்ணி நாகப் பரம்பரையே அழிக்கப்
பாத்தாரு, முடிஞ்சுதா? அடக்க முடியலேன்னா, அடி பணியனும்,அதுதான்
வாழ்க்கைத் தத்துவம், இல்லீங்களா? ‘ என்றான் ராஜு சிரித்துக்
கொண்டே..
‘உங்களுக்கு எப்படித் தெரியும், என் முன்னோர் யாரோ ஒருவர் நாக
ஹதம் பண்ணார்னு..? என்று கேட்டான் சுரேஷ்.
‘அது தொழில் ரகசியம். அதெ பத்தியெல்லாம் கேட்கக்கூடாது’ என்றான்
ராஜு மர்மப் புன்னகையுடன்.
‘நீங்க பரிகாரம் சொல்லுங்க..இன்னொண்ணு.. நான் முழுகாமேயிருக்கேன்,
நாப்பது நாளறது.. நான் பரிகாரம் பண்ணலாமா?’
‘பாத்தீங்களா,பாத்தீங்களா! அதெ நீங்க முதல்லே சொல்லியிருக்கணும்..
நாகராஜா கடாட்சந்தான் இது.. இப்பொத்தான் நீங்க பூஜை பண்ணி
ஆகணும் அதுதான் பரிகாரம்..’
‘என்ன பூஜை?’
‘ நாப்பத்தெட்டு நாள், ஸ்நாநம் செய்திட்டு, ஈரப் புடவையோட
பாம்பு புத்தை ஒம்பது தடவைபிரதட்சணம் செய்திட்டு பாம்பு புத்துக்குப்
பால் வார்க்கணும்.. புரிஞ்சதுங்களா?’
‘நாப்பத்தெட்டு நாள் ஈரப் புடவையோடவா? நான் பாம்புப் புத்தை எங்கு
போய் தேடறது?’ என்றாள் சுதா.
‘’அப்படி முடியாட்டா, பாம்புக்குப் பதிலா கண்ணுக்குப் படற ஒரு பூனைக்
குட்டிக்குப் பால் வார்க்கலாம், இல்லியா? நம்ம சாஸ்திரங்களெல்லாம்
கெடுபிடி பண்ணாது. திருத்தங்கள் இல்லாமெ இருக்காது..சரிதானே ராஜு?’
என்றான் சுரேஷ்,ஏளனத்தின் சாயைத் துளிக் கூட தெரியாத
குரலில்.
ராஜு அவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தான். முகத்தில் புன்னகை
லேசாகத் தெரிந்தது.
‘சரி.. நான் உங்க பூஜை அறைக்குப் போய் ஒரு மணி நேரம் தியானம்
பண்றேன்.. நீங்க எந்தக் காரணத்துக்காகவும் இந்த அறைக் கதவைத்
திறந்து பாக்கக்கூடாது.. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு திறக்கலாம்.
இதுதான் பரிகாரம்.. அப்புறம் எந்த நாகமும் உங்க வீட்டுக்கு வராது.
பிறக்கிற குழந்தைக்கு ஆணாயிருந்தா நாகராஜன்னு பேர் வைங்க.
பொண்ணா இருந்தா நாகம்மான்னு வைங்க.. என்பேரும் நாகராஜன்தான்,
கூப்பிடறது ,ராஜு..’என்றான் அவன்.
சுதா சுரேஷைப் பார்த்தாள். இது பற்றி அவன் முடிவு செய்ய
வேண்டுமென்று அவள் விரும்புவது போல் அவனுக்குப் பட்டது.
‘சரி செய்யுங்க.. ‘ என்றான் சுரேஷ்.
‘நீ ‘ஆபீஸ்’ போகலியா?’ என்றாள் சுதா.
‘நான் ;மீட்டிங்’கை மத்தியானம் வச்சுக்கிறேன்.. ‘ போன்’ பண்றேன்
‘ஆபீஸு’க்கு’ என்றான் சுரேஷ்.
‘ எனக்கு ஒரு லிட்டர் பால் வேணும். பாலை ஒரு பாத்திரத்திலே ஊத்திக்
கொடுங்க. சரியா, ஒரு மணி நேரம் கழிச்சுக் கதவைத் திறங்க.’ என்றான்
ராஜு.
சுதா கேட்டாள்’ ‘ஃபிரிட்ஜ் பால் தேவலையா?’
‘பரவாயில்லே.. எந்தப் பாலா இருந்தா என்ன? பாத்திரத்திலே கொடுங்க.’
சுதா ஒரு பாத்திரத்தில் பாலைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.
அவன் பாலை வாங்கிக்கொண்டு பூஜை அறைக்குள் சென்றான்.
அவன் கதவைச் சாத்தினான். ‘நான் தாழ்ப்பாள் போட்டுக்கிலீங்க. உங்களை
நம்பறேன், கதவைத் திறக்க மாத்திங்கன்னு’ என்றான் புன்முறுவலுடன்.
சுரேஷ் ‘ஆபீஸு’க்குப் போன் செய்தான். அவன்’செக்ரட்ரி’ ரஞ்சனா
எடுத்தாள்.
‘மீடிங்’ ‘லஞ்சு’க்கு அப்புறம்னு எல்லார்கிட்டேயும் சொல்லிடு.இப்பொ
எனக்கு வீட்டிலே கொஞ்சம் அவசரம் காரியமிருக்கு.’
‘சரி’.. நான் குளிச்சிட்டு வந்துடறேன். ‘ஹால்’லெ இருங்க. சொர்ணம்
வந்தாலும் வரலாம்’
‘சீக்கிரம் குளிச்சிட்டு வா.. ‘
ராஜு ஒரு மணி நேரம் தியானம் செய்கிறேன் என்று சொன்னதற்குத் தான்
உடனே ஒப்புக் கொண்டது சுரேஷுக்குச் சற்று ஆச்சர்யமாகவிருந்தது.
ஏதோ ஓருணர்வு அவனுக்குள்ளிருந்து அவனை ஒப்புக்கொள்ளத் தூண்டியது போல் அவனுக்கு இப்பொழுது பட்டது.
என்ன காரணம்?
சுதா அவனுடைய பெல்ட் போன்ற ஒன்றைப் பார்த்ததாகச் சொல்கிறாளே,அது பிரமைதானா? அவனுடைய குடும்பத்தில் யாரோ நாக ஹதம் செய்திருக்க வேண்டுமென்று கூறினானே, அம்மாவுக்கு எழுதிக் கேட்க வேண்டும்..அம்மாவின் குடும்பத்தில் இருக்காது. அப்பா குடும்பத்தில்தான். அவனுடைய அப்பா கும்பகோணத்தில் அவர் தாத்தா வீட்டுக் கொல்லைப் புறத்தில் பாம்புகளின் நடமாட்டம் உண்டு என்று கூறியிருக்கிரார். அந்த வீடுகளிலெல்லாம் கழிப்பறை கொல்லைப் புறத்துக் கோடியிலிருக்கும். இரவு கழிப்பறைக்குப் போக வேண்டுமென்றால் அது பெரிய சாகஸந்தான் என்று அவன் அப்பா சொல்லியிருக்கிறார். கொல்லைப்புறப் பாம்புகளில் ஏதேனுமொன்று அடித்துக் கொல்லப் பட்டிருக்கலாமோ?
அவனுக்குச் சிரிப்பு வந்தது. .விஞ்ஞான உலகில் இப்படியெல்லாம் சிந்திப்பது என்ன பைத்தியக்காரத்தனம்!
சுதா குளித்துவிட்டு வந்தாள்.
‘இன்னும் சொர்ணம் வரலியா?’ என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.
வாசல் மணி ஒலித்தது.
சுதா திறந்தாள்.
ஒர் இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
‘யாரு, என்ன வேணும்?’என்றாள் சுதா.
‘நான் சொர்ணத்தோட ‘ஹஸ்பெண்ட்’ இன்னிக்கு அவ வேலைக்கு வரமாட்டா.. சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்..’
சுதா திடுக்கிட்ட நிலையில் கணவனைப் பார்த்தாள். சுரேஷ் அதிர்ச்சியில் எழுந்து நின்றான்.
அப்படியானால், ராஜு யார்?
‘நீங்க சொர்ணம் வர நேரமாகும் சொல்ல வேற யாரையானும் அனுப்பிச்சங்களா?’என்றான் சுரேஷ்.
‘இல்லியே?’ என்றான் சொர்ணத்தின் கணவன்.
‘ராஜு தன்னைச் சொர்ணத்தின் கணவன் என்று சொல்லிக் கொள்ளவேயில்லையே? அவர்களாகவே தானே அப்படி நினைத்துக் கொண்டார்கள்!
‘வேற யாரானும் வந்து சொன்னாங்களா?’ என்றான் சொர்ணத்தின் கணவன்.
‘உங்க பேர் என்ன?’ என்று கேட்டான் சுரேஷ்.
‘நாகராஜன். ராஜுன்னு கூப்பிடுவாங்க.’
சுரேஷும் சுதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
சுரேஷ் மணியைப் பார்த்தான்.
இன்னும் கால் மணி இருந்தது.
பரவாயில்லை. யார் இந்தப் போலி ஆள்? சும்மா விடக் கூடாது அவனை.
சுரேஷ் பூஜை அறையைத் திறந்தான்.
அறை காலியாக இருந்தது!.
பால் பாத்திரம் கழுவி விடப்பட்டது போல் ‘பள பள’ என்றிருந்தது. பால் இல்லை!
ஜன்னல் கதவு திறந்திருந்தது!
வெளியே மரத்தில் சலனம்! இலைகள் அசைந்தன.
‘ட்யூப் லைட்’ எரியத் தொடங்கியிருந்ததால் அறை பிரகாசமாயிருந்தது!