முதற் பிணி
சீமான், பெரியாரை மிக இழிவாகப் பேசி அவதூறு செய்திருப்பது புதியதல்ல என்றாலும் இம்முறை அது திட்டமிட்ட குற்றச் செயலாக அனைவருடைய பார்வைக்கும் புலப்பட்டிருக்கிறது.
தமிழுக்குத் தொண்டாற்றி தமிழை அழகுறச் செழிப்பாக்கியவர்களுள் ஆண்டாளும் ஒருவர் என கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படைத் தொடரில், யாரோ எழுதியிருந்த கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததை ஒரு குற்றமாக எடுத்துக் கொண்டு, அது ஆண்டாள் பற்றிய வைரமுத்துவின் கருத்துதான் எனச் சங்கிகளால் பெரிதும் இழிவு செய்யப்பட்டார். அவரை மட்டுமல்லாது அவருடைய தாயார் வரை இழுத்து மிகக் கீழ்த்தரமாகப் பேசியிருந்தார் எச்.ராஜா.
திட்டமிட்டு நடத்தப்பட்ட அந்தத் துல்லிய தாக்குதலில் ஒட்டுமொத்தச் சங்கிக் கூட்டமும் திரண்டெழுந்து வைரமுத்துவை குற்றவாளியாக்கிவிட துடியாய் துடித்தது. அப்போது இதைச் சாக்காக கொண்டு வைக்கப்பட்டதுதான் அவர் மீதான Me Too புகார்களும்.
அன்று திமுக ஆட்சி இல்லாத நிலையிலும் பொய்யர்களால் வைரமுத்துவின் கெண்டைக் கால் ரோமத்தைக் கூடச் சீண்டவியலவில்லை. ஆனால் இப்போது நடந்து கொண்டிருப்பது பெரியாருக்குப் பிடித்த திராவிட மாடல் ஆட்சி.
அந்த ஆட்சியில், சீமான் இப்படி பொதுவெளியில் இவ்வளவுக் கீழ்த்தரமான பொய்களால் பெரியார் மீது அமிலத்தை வீசியெறிந்ததைக் கண்டுதான் பலருக்கும் ஆற்றாமையால் சினம் பொங்கியெழுந்திருக்கிறது!
கவிப்பேரரசு எப்படி மேற் கோள்காட்டி ஒரு செய்தியைச் சொன்னாரோ, அதேரீதியில் பல கருத்துக்களை மேற்கோள் காட்டி பெரியார் எழுதியிருக் கிறார். பேசியிருக்கிறார்.
சான்றுக்கு, தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை குறள் பெரியாருக்கு ஒவ்வாத ஒன்று.
அதென்ன கணவனைத் தெய்வம் போல் தொழுது அவன் என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டு வணங்குபவள் பெய் என்றால் மழை பெய்துவிடுமா ? எங்கே அப்படி யாரையாவது நிற்க வைத்து சொல்லச் சொல்லுங்கள் ? இதெல்லாம் பெண்களை நிரந்தர அடிமையாக்கி வைத்திருக்க ஆண்கள் விரித்து வைத்திருக்கும் பொய் வலைகள் என்று சாடுவார்.
அவர் சாடுவது இத்தகைய குறளின் தன்மையைத் தானே அன்றி மொத்த திருக்குறளையும் அல்ல. அதனால்தான் தங்கத்தட்டில் விருந்து பரிமாறி ஓரத்தில் கொஞ்சம் நரகலை வைத்தாற்போல என்று இத்தகைய கருத்து தொனிக்கும் குறள்களை வர்ணிப்பார். உடனே சீமானியர்கள் திருக்குறளையே பெரியார் மலம் என்றுவிட்டார் எனத் தொகுறுவார்கள்!
மேற்கண்ட குறளுக்கு பெரியார் வெகுண்டெழுவது போலவே அனைவரும் உரை எழுதி வைத்திருக்க, ஒருவர் மட்டும் அந்த உரையிலும் பெரியாரியத்தை புகுத்தி
யிருந்தார். அவர்தான் திருவள்ளுவருக்கு 133 அடியில் பிரம்மாண்டச் சிலையை குமரிக்கடலில் நிறுவியவர். வள்ளுவர் கோட்டத்தை நிர்மாணித்தவர். 25ஆவது ஆண்டு நிறைவுவிழாவைச் சிறப்புற கொண்டாடித் தீர்த்தார்கள் அந்தச் சிலைக்கு!
அந்தச் சிலையை சீந்தாமல் கைவிட்டிருந்தது முந்தைய ஜெயலலிதா மற்றும் எடப்பாடி அரசுகள். ஸ்டாலின் முதல்வரானதும் அங்கே ஒரு கண்ணாடி நடைப்பாலத்தை உலகத்தரத்தில் நிறுவினார். வள்ளுவம் இன்னும் உலகளாவிய புகழ்பெறும்.
சரி. கலைஞரின் உரை என்ன தெரியுமா ?
“கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி, பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போல, தன்னையும் அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.”
இந்த உரையை பெரியாரால் இகழ முடியுமா ?
ஆனால் இது வள்ளுவரின் கருத்து இல்லை அல்லவா ?
இது கலைஞரின் பகுத்தறிவு கருத்து.
அதனால்தான் கல்லானாலும் கணவன், புல்லா னாலும் புருஷன் போன்ற எந்தப் பிற்போக்கு பொன்மொழிகளையும் தலைமேல் ஏற்கக்கூடாது அவைகளை உடைத்து நொறுக்க வேண்டும், அது இந்தக் குறளுக்கும் பொருந்தும் என்றவர் பெரியார்!
சிறுமதிக்கூட்டம் தனக்குத் தேவையானதைப் பொறுக்கிக் கொண்டு, “பாருங்கள் பாருங்கள் பெரியார் குறளையும் அடித்து நொறுக்கச் சொல்கிறார். அவ
ருடைய சிலைகளை நாம் அடித்து நொறுக்க வேண்டாமா?” எனக் கொக்கரிக்கின்றனர்.
வாட்ஸ்அப்களில் அலையெனத் திரண்டு வரும் அவதூறு வன்மங்களையெல்லாம் தரவுகள் என நம்பி பொதுத்தளத்திற்கு உரையாட வரலாமா ?
இத்தனைக்கும் இந்த சீமான் ஏகப்பட்ட பெரியார் கட்சிகளின் கூட்டங்களில் சிறப்பு பேச்சாளராக பேசி அறிமுகமானவர். பெரியார் புகழ் பாடியவர். அவருக்குத் தெரியாதா பெரியார் இப்படி பேசியிருக்க வாய்ப்பேயில்லை என்று ? பிறகேன் அத்தகைய இழிவான அவதூறுகளை அவரால் சொல்ல முடிகிறது ?
பணம். எதிர்மறை கருத்துக்களால் வரும் தற்காலிகப் புகழ்.
இத்தகைய பேராசைகளுக்கு அடிமையான எவனொருவனும் வரலாற்றில் நிலைபெற்றதே இல்லை. அதைப்பற்றி இவர்களுக்கு கவலையுமில்லை. சொகுசாக வாழ பணம் எவ்வழியிலேனும் வரவேண்டும். அதற்காக எத்தகையப் பொய்கள் பேசவும் துணியும் கூட்டத்தின் தலைவன் சீமான்!
கி.பி 2007 – 2009 காலகட்டத்தில் ஈழத்தில் போர் உச்சகட்ட ஆவேசத்துடன் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஈழத்தில் எங்கு காணினும் குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூடு, ரத்தவாடை, பிணக்குவியல் …
அந்தப் பொழுதில், புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்ததாகவும், அவர் தனக்கு கறியிட்லியைக் கொடுத்து விருந்தோம்பியதாகவும், தான் என்னென்ன சாப்பிடுகிறேன் என்று ஒரு புலி குறிப்பெடுத்துக் கொண்டதாகவும், ஆமைக்கறியை அவித்து தின்றுவிட்டு அந்த ஆமையோட்டையே கவிழ்த்து கடலில் படகாய் உபயோகித்ததாகவும், அரிசிக்கப்பலைக் கடத்தி அதனுள் ஏ கே 47 துப்பாக்கியைக் கொண்டு சுட பயிற்சிகளை மேற்கொண்டதாகவும் … அப்பப்பா, இவர் இப்படியாக உருட்டிவிட்ட பொய்களை எண்ணவே முடியாது. பொய்கள்தான் தனக்கு வாகாக வருகிறதே, பிரபாகரனுக்குச் சொன் னதை பெரியாருக்கும் சொல்வோமெனச் சொல்லி, வசமாகச் சிக்கிக் கொண்டார் சீமான்!
இதுகாறும் சீமானின் புலிப்பாசத்தை நம்பி அவருடைய நிலைப்பாட்டை பெரிதாக விமர்சித்திராத பெரியாரிஸ்ட்கள் கூட, சீமானின் இத்தகையக் கீழ்த்தர
பேச்சால், அருவருப்பாக அவரை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். பெரியாரியர்களுக்கே உரிய தரவுகளுடன் பேசும் தன்மையைக் கொண்டு அவருக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர். காவல் நிலையங்களில் புகார்களும், நீதிமன்றங்களில் வழக்குகளும் சீமானுக்கெதிராக குவிந்து வருகின்றன. பெரியாரை இழித்துப் பேசிய அந்த வாய் நிச்சயம் நீதிமன்றத்தால் உடைக்கப்படும்.
ஆனாலும் இந்தத் தீராப்பிணி எப்படி தமிழ்நாட்டைத் தொற்றியது ? யார் அதற்கு காரணம் ? இவ்வளவு கீழ்த்தரமான ஓர் ஆளுக்கு எப்படி முப்பத்தைந்து லட்ச வாக்குகள் கிட்டின ? அது ஏன் வாழையடி வாழையாக ஒரு கும்பல் தமிழர்களை ஏமாற்றிக் கொண்டே வருகிறது ? எத்தனை காயங்கள் வடுவாக இருந்தும் மறதி எப்படி அந்த ஏமாளிகளுக்குள் நிரந்தரமாக வசிக்கிறது? இந்தக் கேள்விகளுக்கு விடைகள் கிட்டுமா ?
இரண்டாம் பிணி
இதுவுமே புதிதாக வந்த தொற்றுப் பிணிதான். பேரண்டமே அஞ்சி நடுங்கிய கொரோனா காலகட்டத்தில் அத்தோடு பயணித்து தமிழகம் வந்த பிணி. பிணி நுண்ணுயிரியின் பெயர் அண்ணாமலை.
இவர் அடிக்கும் கூத்துக்கள் இருக்கிறதே ? பொதுமக்கள் இப்படி உருண்டு புரண்டு வடிவேலு, கவுண்டமணி, சந்தானம் காமெடிகளுக்கு கூடச் சிரித்ததில்லை.
சீமானின் பேச்சில் தவறில்லை என்றும், பெரியார் அப்படி பேசியதற்கான தரவுகள் தன்கைவசம் உள்ளதாகவும் நாளை காலைக்குள் அதை உங்களிடம் தருவேன் என்றும் ஊடகங்களின் முன் உத்தரவாதம் தந்தார் அண்ணாமலை.
இன்று போய் நாளை வாராய் என்று போர்டு எழுதிவிட்டு உட்கார்ந்த ராமனைப் போல், அண்ணாமலையும் நாளை காலை வரவும், தரவுகள் தரப்படுமென நோட்டீஸ் ஒட்டிவிட்டுப் போய்விட்டார். பாவம் ஊடகவியலாளர்கள். தினமும் போய் அவரிடம் தரவுகள் எங்கே எனக் கேட்க நோட்டீசைப் படிச்சீங்களா இல்லையா என்றுவிட்டுப் போய்விடுகிறார். இதில் யார் கோமாளி என்றே நமக்குப் புரியவில்லை. அவர் அப்படி சொல்லி இன்றோடு முப்பது காலைகள் கடந்துபோயின!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்முறைக்கான புகார் கிட்டிய அடுத்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டு, அவரை நீதிமன்றத்திலும் நிறுத்தி, உரிய விசாரணையை மேற்கொண்டு வருகிறது காவல்துறை. ஆனால் இதுவரை குற்றவாளிகளையே கண்டுபிடிக்காததைப் போலவும், தமிழ்நாட்டில் தினமும் இதுபோன்ற சம்
பவங்கள் நடைபெறுவதாகவும், தமிழ்நாட்டுக் காவல்துறை துப்பறியும் திறனின்றி இருப்பதாகவும் கட்டமைக்க தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தீராமல் முயன்று வருகிறது. இந்த இரண்டாம் பிணி அதற்காக ஒரு நாடகத்தை அரங்கேற்றியது. அதுதான் நகைச்சுவையின் உச்சம்.
ஒரு தலைவருக்குரிய எந்தத் தகுதியுமற்றவர் அண்ணாமலை. இனி செருப்பு போட மாட்டேன், சாட்டையால் என்னை அடித்துக் கொள்வேன் என்றெல்லாம் ஸ்டண்ட் அடித்தார். சரி, சும்மா ஊடகங்களின் முன் சீன் காட்டுறார் என மக்கள் நினைக்க ;
மறுநாள் அவருடைய வீட்டின் முன் அரை நிர்வாணக் கோலத்தில், துணியால் நெய்திருந்த வாலால் தன்னை எட்டுமுறை அடித்துக் கொண்டார் அண்ணாமலை. ஆறுமுறை மட்டுமே அடித்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு ஆரம்பித்தவர் எட்டுமுறை விளாசிக் கொண்ட பின்னரே விழித்த அவருடைய நண்பர்களின் கூட்டம், அய்யோ போதும்ண்ணா என்று அணைத்துக் கொண்டது. அவர் அப்படி அடித்துக் கொள்வதை அவருடைய நண்பர்கள் கூட விரும்பியதுதான் அவர் வாங்கி வந்த வரம். மற்றபடி மக்களோ அவர் தன்னை நூறுமுறை அடித்துக் கொண்டிருந்தாலும் அதை ரசித்துக் களிக்கவே காத்திருந்தனர். பின் நாடகம் முடிந்ததும், ச்சை இதெல்லாம் ஒரு பிழைப்பா எனச் சாடி கலைந்தனர்!
Utter Flop ஆன அந்த நாடக் காட்சிகளால் வெறுப்புற்ற அவருடைய கட்சியினரே இதைச் சகிக்காது, டெல்லி மேலிடத்திற்கு அவர் மீது ஒரு புகார் கடிதத்தை எழுதுவது போல் எழுதி அதை அனுப்பாமல், வீம்புக்கென்றே சமூக வலைத்தளங்களில் இருக்கும் ஊடகங்களுக்கு கசிய விட்டனர்.
பின் அவர்களே சில நிமிடங்களில் அது போலிக்கடிதம் என்றும் முத்திரையிட்டனர். ஆனால் அதற்குள் அந்தக் கடிதம் பல லட்ச மக்களின் பார்வைக்குப் போய்விட்டது!
அந்தக் கடிதம் எச்.ராஜா பெயரால் எழுதப்பட்டிருந்தது. அண்ணாமலை & கோ எவ்வாறெல்லாம் தொழிலதிபர்களை ED, IT பெயர்களைக் கூறி மிரட்டிபணத்தைச் சுரண்டிப் பெறுகின்றனர் என விலாவாரியாக எழுதப்பட்டிருந்தது. அதற்கேற்ப அண்ணாமலையின் நண்பர், உறவினர் வீடுகளிலும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினரால் சோதனைகள் நிகழ்த்தப்பட்டன. அதில் பல கோடி ரூபாய் மோசடிகள் செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கான ஆவணங்களை கைப்பற்றியிருப்பதாகவும் சார்ந்த துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்!
அதன்பின் அண்ணாமலையிடம் மயான அமைதி.
இந்த இரண்டாம் பிணியைப் பற்றி பெரிதாக நாம்அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. கிளை நுனியில்அமர்ந்துகொண்டு அதே கிளையைத் தன் வாளாலேயே வெட்டிக் கீழே விழுந்து முடிந்து போகவிருக்கும் பிணிதான் இது. முதற்பிணியைப் போலவே மூன்றாம் பிணி ஒன்று உள்ளது. அதுவும் தீராப்பிணிதான்!
மூன்றாம் பிணி
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக கலைஞரும், ஸ்டாலினும் இருந்தபோது ஆட்சியாளர்கள் எப்படி நடுங்கியிருப்பார்கள் ?
கலைஞரின் எந்தவொரு அறிக்கைக்கும், அதில் பொதிந்திருக்கும் சொற்களுக்கும் துணுக்குறாத ஆட்சியாளர்கள் அரிது. குறிப்பாக எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் உடனடியாக அவருடைய அறிக்கைகளுக்கு பதிலளித்துவிடுவார்கள்.
ஓர் எதிர்கட்சிக்குரிய தகுதி என்பது அதுதான். அதேபோல ஸ்டாலின் சட்டசபைக்குள் இருந்தாலே ஜெயலலிதாவுக்கு BP அதிகரித்துவிடும். தொண்டை நரம்புகள் புடைக்க அவர் ஸ்டாலினின் கேள்விகளுக்கு ஆவேசமாக பதிலளிப்பார். கலைஞரிடம் கூட அவர் அவ்வளவு அஞ்சி நடுங்கியதில்லை. விஜய்காந்த் நாக்கைத்துருத்திய போதெல்லாம் அதை இடது கையால் டீல் செய்தவர், ஸ்டாலினிடம் ஏனோ அத்தகைய வித்தைகள் எடுபடாமல் துவண்டார். வலுவான எதிர்க்கட்சி அப்படி இருந்தால் மட்டுமே மக்களாட்சி தழைக்கும். மக்கள் சர்வாதிகாரப் பிடிக்குள் வீழாமல் நிம்மதியாக வாழ முடியும். ஆனால் இப்போது நமக்கு வாய்த்திருக்கும் எடப்பாடியார் செய்வது என்ன ?
சான்றுக்கு இந்த அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை சம்பவத்தையே எடுத்துக் கொள்வோம். பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்த சில மணி நேரங்களிலேயே அறிவியல் துணைகொண்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்டான். அவன்தான் அந்த வன்முறையை நிகழ்த்தியவன் என்று அந்தப் பெண் மூலம் நீதிமன்றத்தில் உறுதியும் செய்துவிட்டனர். இப்போது நடந்து கொண்டிருப்பது அவன் இதுபோல இன்னும் எத்தனை பேரை மிரட்டி என்னென்னவெல்லாம் செய்திருக்கிறான் என்கிற தரவுகளைத் திரட்டுவதுதான். போக, அவன் 2018 எடப்பாடியார் ஆட்சியின் போதே ஒரு பெரிய கடத்தல் வழக்கில் பிடிபட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனில், அவன் என்றிலிருந்து, யாருடைய ஆதரவுடன் இதையெல்லாம் செய்துக் கொண்டிருக்கிறானென துருவித் துருவி விசாரணை, நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் எந்த ஒளிவு மறைவும் திமுக அரசிடம் இல்லை.
ஆனால் சிறிதும் அறமின்றி, குற்றவாளிக்கு ஆதரவாக திமுக அரசு நடந்து கொள்கிறதென அவதூறு பேசி வசமாக வைத்து செய்யப்பட்டார் எடப்பாடியார். எங்கு தெரியுமா? தமிழ்நாடு சட்டமன்ற அவையில். தேவையா?
பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்முறைச் சம்பவங்களில், அன்று ஆண்ட அதிமுகவின் ஆட்சியாளர்களின் மகன்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பல பெண்கள் இருந்தும் ஒரே ஒரு பெண்தான் துணிந்து புகாரளிக்க முன்வந்தார். நம்புங்கள். பல நாட்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை.
பின், துப்பறியும் புலனாய்வு ஏடுகளில் குறிப்பாக நக்கீரன் ஊடகத்தில், பாதிக்கப்பட்ட பெண், கயவர்களிடம் கெஞ்சுவது போன்ற ஆடியோ ரிலீஸ் ஆனபின்னரே கைது நடவடிக்கைகள் துவங்கின. அதற்குள் பல தரவுகள் அழிக்கப்பட்டிருந்தன!
மறைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் பெயர், முகவரியை ஊடகங்களுடனான சந்திப்பில் வைத்து வெளிப்படையாக வேண்டுமென்றே சொன்னார் அன்றைய கோவை கண்காணிப்பாளர் பாண்டியராஜன். பொள்ளாச்சியில் துணை கண்காணிப்பாளராக பதவியிலிருந்த இவர், மதுக்கடைகளை மூடச் சொன்ன பெண்களை அறைந்து செவிடாக்கிய மகிழ்ச்சியில் கிட்டிய பதவி உயர்வுதான் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பதவி. அந்த நன்றிக்கு ஈடாக இந்த ஈனச் செயலைப் புரிந்து அன்று கடுமையானக் கண்டனத்திற்குள்ளானார்!
இப்பேர்ப்பட்ட இழிவான சம்பவங்களின் போதெல்லாம் ஆட்சி புரிந்த எடப்பாடியார்தான், இன்று சிறந்த நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் அரசை செயல்படவில்லை, பெண்களுக்கெதிரான அரசு என்றெல்லாம் சட்டப்பேரவையில் முழங்கினார். பதட்டமின்றி இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் இந்த பொள்ளாச்சி சம்பவங்களின் போது எடப்பாடியார் அரசின் செயல்பாடுகளை தேதி வாரியாக அடுக்கியபின் கப்சிப் ஆனார்!
பேரவைத் தலைவர் அப்பாவு முன் சமர்ப்பிக்கப்பட்ட அந்த பொள்ளாச்சி சம்பவ ஆவணங்களைப் பார்த்த பின், முதலமைச்சர் சொன்னதுதான் சரி, எதிர்க்கட்சித் தலைவர் முன் வைத்த வாதங்கள் பொய்யானவை என இறுதி தீர்ப்பளித்தார் சபாநாயகர். இப்படி குட்டுப்பட்டும் எடப்பாடியார் திருந்தினாரா என்ன ?
போன வாரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளத் திருட்டுக்களை தடுத்தார் என சமூக ஆர்வலரான திரு.ஜகபர் அலி படுகொலை செய்யப்பட்டார். அதைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி ஒரு கண்டன அறிக்கையை வெளியிட, அதை அப்படியே பிரதி எடுத்து வரிகளைக்கூட மாற்றாமல் அதிமுக லெட்டர் பேடில் வெளியிட்டார் எதிர்க்கட்சித் தலைவர். எவ்வளவு வெட்கக்கேடு?
மண்டபத்தில் இருக்கும் யாரோ ஒருவரை அழைத்து எழுதிக் கூட சுயமான அறிக்கையாக அதைக்காட்டிக் கொண்டிருக்கலாமே ? அதற்குக் கூடத் தகுதியற்றவரெல்லாம் எதிர்கட்சித் தலைவராக இருக்க நேர்ந்தது நம் நாட்டிற்க்கு எவ்வளவு பெரிய பின்னடைவு ?
தமிழகத்தின் தீராப்பிணிகளாகப் படிந்துவிட்ட இந்த மூன்று வைரஸ்கள் என்று நம்மை விட்டு அகலும் ? அந்நாளே மக்களாட்சியின் பொன்னாள். கலைஞர் போன்ற, ஸ்டாலின் போன்ற ஆட்சியாளர்கள் மட்டு மல்லாது, நமக்கு அவர்களைப் போன்றே எதிர்க்கட்சித் தலைவர்களும் அமைந்தால் எவ்வளவு உன்னதமாக இருக்கும்?
காத்திருப்போம்!!!
rashraja1969@gmail.com