சுனில் குமார் குப்தா ரயில்வே துறையில் வேலைபார்த்துக்கொண்டிருந்தவர். அவருக்குக் காவல்துறையில் பணி புரிய வேண்டும் என்ற ஆசை. அதனால் தில்லி திகார் ஜெயிலில் காவல் உதவிக் கண்காணிப்பாளர் (ASP) பணியிடத்திற்கு வாய்ப்புபெற்று வருகிறார். வந்த இடத்தில் சிறைக் கண்காணிப்பாளர் அவரிடம், “இங்கு இடம் காலியாக இல்லை… தவிர
உன்னைப் போன்ற மென்மையானவர்கள் இங்கு பணியாற்ற முடியாது. பஞ்சாப் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் இதுபோன்ற இடங்களில் பணியாற்ற முடியும்” என்று சொல்லி வெளியே அனுப்பி விடுகிறார்.

ரயில்வே துறையில் பார்த்த வேலையை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் இங்கு வந்திருக்கிறார். அதே வேலையில் மீண்டும் தொடர்வதற்கான கால அளவும் முடிந்துவிட்டது. புதிய வேலையும் கை தவறிப் போய்விட்டது. என்ன செய்வது
என்று தெரியாமல் சுனில்குமார் திகைத்து நிற்கிறார். அப்போது கடவுளின் தூதர் போல ஒருவர் வருகிறார். பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறார். யாரையும் எழுந்து கொள்ள வைக்கும் ஒரு தோற்றம். நுனி நாக்கில் அழகான ஆங்கிலத்தில், “Looks like there is a problem with your appointment, do you want really job?” என்று கேட்கிறார். சுனில் குமார் ஆமாம் என்று தலையாட்டுகிறார்.

அவர் சிறைக் கண்காணிப்பாளரிடம் செல்கிறார். ஒரு சில வினாடிகள் கூட ஆகி இருக்காது. மீண்டும்வந்து, சுனில் குமார் குப்தாவிடம் பணி ஆணை வழங்கிவிட்டுச் சென்றுவிடுகிறார். ‘திகார் சிறையில் அவர் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அதிகாரிபோல’ என நினைத்துக் கொள்கிறார். “அவர் யார்?” என்று விசாரிக்கிறார். “அவன் சார்லஸ் சோப்ராஜ்” என்கிறார்கள். ஒரு சிறைக் கைதி!

சார்லஸ் சோப்ராஜ் 1980-களில் புகழ்பெற்ற ஒரு சீரியல் கொலைகாரன். திருடன், மோசடிக்காரன், டிரக்ஸ் மாஃபியாவும்கூட. அவனை எல்லோரும் Bikini Killer என்றும் Splitting Killer என்றும் The Serpent என்றும் அழைக்கிறார்கள். ஏறத்தாழ 20 கொலைகளைக் செய்தவன். அதில் தாய்லாந்தில் மட்டும் 14 கொலைகளைச் செய்திருக்கிறான். ”A charming conman and he had the power to influence people in a manner nobody could imagine” என்று அவனைப் பற்றி சுனில் குமார் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார். சிவப்பு ரோஜாக்களில் வரும் கமல்ஹாசனின் தோற்றம் சார்லஸ் சோப்ராஜிடமிருந்துதான் எடுத்திருக்க வேண்டும்.

வெளிநாட்டுப் பயணிகள் வரும்போது, அவர்களை மிக எளிதாக கவர்ந்து, கொலைசெய்துவிட்டு, அவர்களுடைய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி இன்னொரு நாட்டிற்குத் தப்பித்துப் போய்விடுவது அவன் வாடிக்கை. அழகான பெண்களை அனுபவித்துவிட்டு, கொலை செய்து, அவர்களின் உள்ளாடைகளைக் கவர்ந்து செல்வது
அவனுடைய பழக்கம். அதனால்தான் அவனை Bikini killer என்று அழைத்திருக்கிறார்கள். அவனைப் பற்றி Mai aur Charles என்ற படம் வந்திருக்கிறது. ஓர் ஆவணப் படத்தை BBC/ Netflix தயாரித்திருக்கிறார்கள். இந்த பிளாக் வாரண்ட் வெப்சீரிஸில் சார்லஸ் சோப்ராஜ் பற்றிய காட்சிகளை அழகாகப் படமாக்கியுள்ளார்கள்.

சார்லஸ் சோப்ராஜை 1976 முதல் 1997 வரை திகார் சிறையில் அடைத்திருக்கிறார்கள். கைதியாக இருந்தாலும் சிறை அதிகாரிகளைவிட வலிமையான நபராக வலம் வந்திருக்கிறான். சோப்ராஜுக்குத் திகாருக்குள் பெண்கள், போதைப்பொருள், மதுபானங்கள் என சகலமும் கிடைத்திருக்கின்றன. அவன் சிறைக் கைதிகளின் ஆடையை உடுத்துவதில்லை. “சிறை அதிகாரிகள் பேசுவதை Dictaphone என்ற கருவியில் பதிவு செய்து அதை வைத்து மிரட்டி அவர்களைப் பணிய வைக்கிறான்” என்று சொல்வது உண்டு. உண்மை என்னவென்றால், அவன் பணத்தினால் திகார் சிறையை விலைக்கு வாங்கி இருந்தான். 20 கொலைகள் செய்திருந்தாலும், அவனுடைய பணத்திற்கும் தோற்றத்திற்கும் மிரட்டலுக்கும் திகார் சிறை பணிந்திருந்தது. அதேசிறையில் 500 ரூபாய்க்காகக் கொலை செய்த இரு
அப்பாவிகள் அநியாயமாகத் தூக்கில் ஏற்றப்பட்டிருக்கிறார்கள்.

சுனில் குமார் குப்தா தில்லி திஹார் சிறையில் ஜெயிலராக இருந்த போது கிடைத்த அனுபவங்களை, சுநேத்ரா சௌத்திரி என்ற பத்திரிகையாளரோடு இணைந்து எழுதியதுதான் Black Warrant: A confession of a Tihar Jailer. இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து பிரபல இயக்குநர் விக்ரமாதித்திய மோத்வானே இந்த வெப்சீரிஸ் உருவாக்கியிருக்கிறார். 10 ஜனவரி 2025இல் நெட்பிளிக்ஸில் வெளியானது. வெப் சீரிஸ் உலகைப் பொறுத்தவரை இப்போது இந்தியாவின் hot topic இதுதான்.

கதை என்று சொல்வதைவிட திஹார் சிறையில் நடந்த முக்கியமான தூக்கு தண்டனைகள்; ரவுடியிசங்கள்; கொலைகள்; போராட்டங்கள் ஆகியவற்றைத் தொகுத்து ஏழு பகுதிகள் கொண்ட வெப் சீரிஸை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

சுனில் குமார் திகார் சிறையில் காவல் உதவிக் கண்காணிப்பளராகச் சேர்கிறார். “உன்னால இங்க தாக்குப் பிடிக்க முடியாது. ஆயிரக்கணக்கான stress இருக்கும். இன்னைக்கி என்னஆகும்னு பயமா இருக்கும்” என எச்சரித்துத்தான் அவரைத் திஹார் சிறைக்குள் அனுப்புகிறார்கள்.

திஹார் சிறையில் ஒரு வழக்கம் இருக்கிறது. எந்தக் கைதி பாம்பைக் கொல்கிறானோ அவனுக்குத் தண்டனைக் காலத்தில் 15 நாட்கள் குறையும். சர்ஜூ என்ற அப்பாவி “நான்தான் பாம்பைப் பிடித்தேன்” என்கிறான். அந்த சிறையில் இருக்கும் கொடூரமான ரவுடி தியாகி. அவனுடைய அடியாள் நீலா. அவனும் “நான் தான் பாம்பைக் கொன்றேன்” என்கிறான். தோமர் என்ற காவல் கண்காணிப்பாளர், “இரண்டு பேரும் போட்டி போடுவதால் இருவருக்கும் தண்டனை ரத்து கிடையாது” என்கிறார். அப்போது சுனில் குமார், “இரண்டு பேரில் யாரோ ஒருவர் பாம்பை பிடித்தார்கள்தானே, அப்படியென்றால் அவர்களுக்குரிய இனாம் கிடைக்கவேண்டும் அல்லவா?” என்று கேட்கிறார்.

“அப்படி என்றால் அந்தப் பாம்பை பிடித்தது யார் என்று நீயே கண்டுபிடி” என்கிறார் தோமர். சுனில் குமார் விசாரணையைத் தொடங்குவதற்குள் நீலா அந்த அப்பாவி சர்ஜூவைக் கத்தியால் வெட்டி விடுகிறான். ரத்தம் சுனில் குமாரின் முகத்தில் தெறிக்கிறது. ரத்தவாடையோடுதான் திஹாரில் பணி வாழ்க்கை தொடங்குகிறது.

சர்ஜூவிடம் “நீ பாம்பை எப்படிக் கொன்றாய்?” எனக் கேட்கிறார் சுனில். “பதினைஞ்சு நாள் தண்டனை குறையுதுன்னா நான் புலியக்கூட கொல்வேன். சார், ஏன் பொய் சொல்லப்போறேன். பொய் சொன்னா அந்த ரவுடிங்க என்னை உயிரோட விடுவாங்களா?” என்கிறான். அவன் சொல்வதில் உண்மை இருக்கிறது. ஆனால், சிறையிலிருக்கும் மற்ற அதிகாரிகள் சுனிலுக்கு உதவி செய்ய மறுக்கிறார்கள்.

சிறையில் உயர்ந்த பதவியில் இருப்பவர் Director General of Police (DGP). திஹாரைப் பொறுத்தவரை அவரைவிட உயர்ந்த பொறுப்பில் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் சார்லஸ் சோப்ராஜ். அவன் பார்க்காத குற்றமோ தண்டனையோ இல்லை. அதனால், அவனிடம் இதற்கான தீர்வு கிடைக்கும் என நினைத்து சுனில் குமார் அவனிடம் இதுபற்றிக் கேட்கிறார். அவன் நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொல்கிறான்,

“When a poor pickpocket, who can greatly benefit from a slight reduction in his sentences, does everything he can in a cell full of rats. He catches a snake. And then you bully, a double murderer comes in between the poor man and his reward. I am not sure if this guy will get his remission of 15 days I can try. Tihar needs more officers like you”

அந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும் காலத்தில், “சார்லஸ் சோப்ராஜ் திஹார் சிறையில் சகல வசதிகளோடு உலா வருகிறான்” என்ற செய்தி இந்தியன் எக்ஸ்
பிரஸில் வெளிவருகிறது. சிறையில் சார்லஸ் சோப்ராஜுக்குக் கிடைக்கும் பெண்கள்,
போதைப்பொருள், மதுபானங்கள், வசதிகள் பற்றிய பேச்சுகள் நாடெங்கும் பரவுகின்றன. இதனால் உள்துறை அமைச்சர் சிறையைப் பார்வையிட வருகை தருகிறார் அப்போது கைதிகள் ஆரவாரம் செய்கிறார்கள். ஒரு சிறைக் கைதி மதுபானம் குடித்துவிட்டு உளறிக்கொட்டுகிறான். உள்துறை அமைச்சர் கடுப்பாகிறார்.

விளைவாக, சிறை அதிகாரிகள் எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள். சிறைக் கண்காணிப்பாளர் தோமருக்கு சுனில்மேல் அதிபயங்கர கோபம் வருகிறது. ‘அவன் விசாரணை என்று இறங்கியதால்தான் சிறையிலிருக்கும் ரவுடிகள் உள்துறை அமைச்சர்வரை புகார் கொடுத்துவிட்டார்கள்’ என நினைக்கிறார். அப்போதும் சுனில் குமார், “அந்த அப்பாவிக்குப் பதினைஞ்சு நாள் இனாம் கிடைக்கணும்… நான் சோப்ராஜ்கிட்ட கேட்டேன். அவன்கூட இதைத்தான் சொன்னான்” என்கிறார்.

தோமருக்குத் தாங்கமுடியாத எரிச்சல் வருகிறது. “டேய் மயிரு… நீ என்ன கேட்கணும்னு நினைக்கிறாயோ அதைத்தான் சோப்ராஜ் சொல்லுவான். இந்த இரக்கம்… மத்தவங்க மேல நம்பிக்கை… புத்தகத்துல வரக்கூடிய பொன்மொழிகளை வச்சுக்கிட்டு திகார்ல ஒன்னும் கிழிக்க முடியாது. இதுக்கு இங்க மதிப்பு இல்லை…! இந்த ஜெயில்ல எல்லாமே பாம்புங்கதான். சிலது கடிக்கும், சிலது கடிவாங்கும்… பாம்ப யாரு கொன்னாங்கன்னு நான் சொல்லவா? நீலாதான் கொன்னான்!” என்கிறார். யார் வலிமையாக இருக்கிறானோ அவன் பக்கம் நிற்பதுதான் திஹாரின் நியாயங்கள்…!

சுனில் குமார் காலத்தில் திஹார் சிறையில் பல சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஒருமுறை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்காகக் கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்கு வருகிறார்கள். வந்தவுடன் தங்களுக்கும் சார்லஸ் சோப்ராஜ்போல முதல் வகுப்பு சிறை வேண்டும் என்கிறார்கள். சார்லஸ் சோப்ராஜ் இருப்பது முதல் வகுப்புக்கும் மேல் என்பது அந்த மாணவர்களுக்குத் தெரியாது.

யாராலும் திஹார் சிறையிலிருந்து தப்பிக்க முடியாது என்ற நிலை இருந்ததை இந்த மாணவர்கள்தான் உடைக்கிறார்கள். ஒரே நேரத்தில் 180 மாணவர்கள் சிறையிலிருந்து தப்பிப்போய் விடுகிறார்கள். சரி அவர்களை வெளியில்போய் பிடித்துவிடலாம் என்றால் அதுவும் முடியாது. ஏனெனில் எல்லோரும் காரல் மார்க்ஸ், மும்தாஜ் மஹல், சே குவேரா, லெனின் எனப் பெயர்களைக் கொடுத்து சிறைக்கு வந்து, பின்னர் தப்பித்தும் போயிருக்கிறார்கள்.

அவர்கள் எப்படி தப்பித்தார்கள்? சுனில் குமார் மறுபடியும் சார்லஸ் சோப்ராஜின் உதவியை நாடுகிறார். “You know one person escaping can be done secretly but for hundred and eighty to just disappear – It has to be something simple like a magician’s trick. You know everyone is awake, yet they are sleeping like you were sleeping when they all escaped” என்கிறான். அதன்பிறகுதான் சுனிலுக்குத் தெரிகிறது. எல்லோரும் விழித்தி
ருக்கும் நேரத்தில் சிறையின் முன்வாசல் வழியாகத்தான் எல்லோரும் தப்பித்திருக்கிறார்கள். அது எப்படி என்பதை வெப் சீரிஸைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

180 மாணவர்கள் மட்டுமில்லை, இன்னொருவனும் திஹாரின் முன்வாசல் வழியாகத் தப்பித்துச் சென்றிருக்கிறான். அவன் வேறு யாராக இருக்க முடியும்? சார்லஸ் சோப்ராஜ்தான். 1987ஆம் ஆண்டு, ஒரு ஞாயிற்றுக்கிழமை தனக்குப் பிறந்த நாள் என்று லண்டையும், 50 ரூபாயையும் எல்லோருக்கும் கொடுத்திருக்கிறான்.. லண்டை சாப்பிட்ட எல்லோரும் மயங்கி விழுந்திருக்கிறார்கள். ஏனென்றால் எல்லாமே போதை மருந்து கலந்த லண்டுகள். ஒருபட்டப்பகலில் சிறைக்காவலர்கள் எல்லாம் மயங்கிக் கிடக்க, வாயில் சிகரெட்டைப் பிடித்துக்கொண்டு முன்வாசல் கேட்டைத் திறந்து ஸ்டைலாகச் சென்ற சோப்ராஜ் இந்த மண்ணுலக அதிசயங்களில் ஒருவன்.

திஹார் சிறைக்கும் இருக்கும் ரவுடிகள், லஞ்சம் வாங்கும் ஜெயிலர்கள், சிறைக்கைதிகளின் ரேஷன், கம்பளி எனச் சகலத்தையும் கொள்ளையடிக்கும் சிறையதிகாரிகள் என எல்லா சம்பவங்களையும் இந்த வெப் சீரிஸ் நன்றாகக் காட்டுகிறது. எனக்கு இந்த வெப் சீரிஸில் பிடித்த அருமையான காட்சி ஒன்று இருந்தது.

“திஹார் சிறையில் நிறைய கதைகள் இருக்கு. அதை யாரும் சொல்றது இல்ல. அத கேக்குறதுக்கும் யாரும் தயாராக இல்லை. நிறைய பேரு இங்க இருக்காங்க. ஏன்னா பெயிலுக்குக்கூட அவங்கிட்ட பணம் இல்லை.

இங்க எந்தக் கைதிய எடுத்தாலும் அவங்க நிரபராதியா இருக்குறதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு. எத்தனையோ பேரு வந்துட்டுப் போயிட்டாங்க. யாரும் சிறைவாசிகளோட நலன யோசிச்சதே இல்லை” என்று அக்கவுண்டண்டாக வேலை பார்க்கும் சைனி என்பவர் சுனில் குமாரிடம் சொல்கிறார்.

“தனிப்பட்ட ஒத்த ஆளால என்ன செஞ்சிட முடியும்?” என்று கேட்கிறார் சுனில் குமார். அவரிடம், “இந்தத் திகார்ல எப்பவாச்சும் மயில பார்த்திருக்கீங்களா? திகார்ல பாம்பு மட்டும் இல்லை, மயிலும் இருக்கு. ஒரு மயிலால இந்த திஹார அழகாக்க முடிஞ்சுச்சுனா ஒரு ஆபீஸரால நல்லது செய்ய முடியும்” என்று சைனி சொல்கிறார். அவருடைய வார்த்தை சுனில் குமாருக்குள் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்துகிறது

அதன்பின் அப்பாவி சிறைக் கைதிகளை வெளியே கொண்டு வருவதற்கு சட்ட ரீதியான உதவிக்கு அவர் முயற்சி செய்கிறார். பிற்காலத்தில் சுனில் குமார், சிறைக்குள் நீதிமன்ற விசாரணை, திறந்தவெளி சிறை, தில்லி நகருக்குள் சென்றுவரும் திறந்தவெளி சிறை எனப் பல்வேறு சிறைத்துறை சீர்திருத்தங்களைச் செய்வதற்கு மேற்கூறிய சம்பவமே காரணமாக இருந்திருக்க வேண்டும்.

பிளாக் வாரண்ட் என்ற இந்த வெப் சீரிஸ் இப்போது எல்லோராலும் பேசப்படுவதற்குக் காரணம் கடந்த காலத்தில் நடந்த தூக்குத் தண்டனைகளைப் பற்றி இந்த வெப்சீரிஸ் பேசுவதால்தான். சுனில் குமார் காலத்தில்,

பில்லா மற்றும் ரங்கா – 1982

கார்டர் மற்றும் உஜாகர் – 1983

மெக்பூல் பட் – 1985

சத்வந்த் மற்றும் கேஹர் – 1989

அஃப்சல் குரு – 2013

ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்திருக்கி றார்கள். இவர்களில் மெக்பூல் பட்டுக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றுவது வரையான பகுதி வெப் சீரிஸாகியிருக்கிறது.

பில்லா – ரங்கா தூக்கு தண்டனையைப் பற்றிய சட்ட ரீதியான அறிவிப்புகளை சுனில் குமார் கவனித்துக் கொள்கிறார். அவர்களைப் பற்றி பேட்டி எடுக்க பிரதிபா சென் என்ற பத்திரிகையாளர் வருகிறார். சுனில் குமாரிடம், “Dying testimony வாங்கிட்டீங்களா? do they express regrets? accept their crimes?” என்று கேட்கிறார்.

Dying testimony என்றால் ஒரு குற்றவாளிடம் அவரைத் தூக்கில் போடப் போகிறோம் என்பதைச் சொல்வது. ஆனால் அது என்னவென்று அப்போதுவரை சுனில் குமாருக்கு தெரியாது. முறையான பயிற்சி கொடுத்து அந்தக் காலத்தில் ஜெயிலர்களை நியமிக்கவில்லை. சுனில்
குமார் தோமரிடம் Dying testimony பற்றிக் கேட்கிறார். “அதையெல்லாம் விட்டுத்தள்ளு. முதல்ல தூக்கு போட்டு வேலைய முடி” என்கிறார் தோமர். திஹாருக்கு என்று எந்த விதியும் இல்லை. ஒருவேளை இருந்தால் அதைப் பின்பற்றுவதுமில்லை. திஹார் ஒரு குறிப்பிட்ட வழிமுறையில் இயங்குகிறது. அது என்னவென்று யாருக்கும் தெரியாது.

பில்லா-ரங்கா என்ற இருவரும் செய்த குற்றங்கள் 1978இல் கப்பல்படை கேப்டனின் பிள்ளைகளான பதினாறு வயது கீதாவைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதும், பதினான்கு வயது சஞ்சையைக் கத்தியால் குத்திக் கொன்றதும்.

அவர்களுக்குத் தூக்கு தண்டனை முடிவு செய்யப்பட்டாலும், விடைதெரியாத கேள்விகள் பல இருக்கின்றன. அதைத் தெரிந்துகொள்ள பத்திரிகையாளர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால், கடைசிவரை அவர்களைச் சந்திக்கவிடாமலேயே தூக்கு தண்டனையை நிறைவேற்றுகிறார்கள். பில்லா- ரங்கா மட்டுமில்லை தூக்கில் ஏற்றப்பட்டவர்கள் அனைவருக்குப் பின்னாலும் ரகசியங்கள் பல இருந்திருக்கின்றன. அந்த ரகசியங்கள் எல்லாம் அவர்கள் நிரபராதிகளாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைச் சொல்கின்றன. ஆனாலும் ஒவ்வொரு முறையும், குற்றம் சாற்றப்பட்டவர்களோடு நியாயங்களையும் சேர்த்துத்தான் தூக்கில் ஏற்றுகின்றனர்.

சான்றாகச் சில விசயங்களைப் பாருங்கள்:

“கீதா, சஞ்சய் ஆகியோர் பரம்வீர் சக்ரா விருது வாங்கியவர்கள். அவர்களுடைய
அப்பா கப்பற்படை அதிகாரியாக இருந்தவர். அதனால்தான் அவர்கள் கொலை வழக்கு தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது.

கொலை செய்யப்பட்ட நாளில், கீதாவும் சஞ்சையும்அகில இந்திய வானொலியில் யுவ வாணி நிகழ்ச்சிக்காகப் புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய வீடு தௌலத்கான் சாலையில் இருந்திருக்கிறது. மாலை ஆறு மணிக்குக் கிளம்பியவர்கள், போக்குவரத்து நெரிசல் காரணமாக நின்றிருக்கிறார்கள். அவர்களை நந்தா என்ற மருத்துவர் லிஃப்ட் கொடுத்து கோலி தத் கன்னா என்ற இடத்தில் இறக்கிவிட்டிருக்கிறார். அங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில்தான் வானொலி நிலையம் இருந்திருக்கிறது.

அப்போதுதான் பில்லாவும் ரங்காவும் ஃபியட் காரில் அந்த வழியாக வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு லிஃப்ட் கொடுத்து ஏற்றி வேறு பாதையில் சென்றிருக்கிறார்கள். இதைக் கண்டு அலறிய கீதாவும், சஞ்சையும் பில்லா ரங்காவோடு போராடி
யிருக்கிறார்கள். பகவான் தாஸ் என்பவர் இதைப் பார்த்திருக்கிறார். மக்கள் பலர் அந்தக் காரை நிறுத்துவதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள். பாபுலால் என்பவர் தன்னுடைய சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த கார் கதவைத் திறப்பதற்காகப் போராடியிருக்கிறார். அவரால் முடியவில்லை. அவர் 6:45க்கு போலீஸ் கன்ட்ரோல் ரூமில் இந்த தகவலைச் சொல்லி இருக்கிறார். அந்த காரின் எண்ணையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

பில்லாவும் ரங்காவும் சிறுமியைக் கற்பழித்து விட்டு பிறகு கத்தியால் குத்திக் கொண்றிருக்கிறார்கள். சிறுவனையும் கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறார்கள். கொலை செய்த பிறகு, மூன்று நாள் கழித்து கொலை\யுண்ட ரத்தக்கறையுடைய அந்த ஆடையை மறைத்துக் கொண்டு ஒரு ரயிலில் ஏறியிருக்கிறார்கள். அவர்கள் ஏறிய ரயில் பெட்டியில் ராணுவ வீரர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்கள்மேல் சந்தேகப்பட்டு போலீஸில் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தக் கதையில் புனைவு செய்யப்பட்ட பல நாடகங்கள் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. மும்பையில் சாதராண குற்றவாளிகளாக இருந்தவர்களுக்கு ஃபியட் கார் எப்படி வந்தது? அதுவும் 1978 காலகட்டத்தில்? அப்படியே ஃபியட் கார் கிடைத்தாலும் அதில் கொலை
செய்யும் ஆயுதங்கள் எப்படி வந்தன? வன்புணர்வுக்காகவோ அல்லது பணத்துக்காகவோ கடத்துபவர்கள் இத்தனைபேர் பார்க்கும்படியாகவா கடத்துவார்கள்? கொலை செய்த பிறகு ரத்தக் கறையுடைய துணியை மூன்று நாள் வைத்திருப்பார்களா? ஃபியட் காரில் சென்று கொலை செய்தவர்கள், அந்தக் காரிலேயே சென்றிருக்கலாம் அல்லவா? அவர்கள் ஏன் மூன்று நாள் கழித்து ரயிலில் ஏறவேண்டும்? இரண்டுபேருமே சிங்குகள்தான். அப்படியே பஞ்சாப்புக்குத் தப்பி ஓடியிருக்க முடியாதா? வன்புணர்வு செய்து கீதாவைக் கொன்றதாக வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் தடயவியல் துறையில் வன்புணர்வு செய்ததற்கான சான்று கொடுக்கவில்லை. அவ்வளவு வசதியான அப்பா தன் குழந்தைகளை ஏன் வானொலி நிலையத்திற்குச் சென்றுவிடவில்லை? இப்படி நிறைய கேள்விகளுக்கு விடைதெரியாமல்தான் இரண்டுபேர் தூக்கில் ஏற்றிக் கொல்லப்பட்டார்கள். பில்லா-ரங்கா வழக்கில் நடந்த அத்தனை விசயங்களும் நிர்பயா வழக்கிலும் நடந்தது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

சில விசயங்களைத் திரையில் வெளிப்படையாகக் காட்டமுடியாது. பில்லாவையும் ரங்காவையும் தூக்கிலேற்றிய பிறகு, அது பற்றிய விபரங்களைப் பத்திரிகையில் கொடுப்பதற்கு, சுனில் குமார் ஓர் அறிக்கையைத் தயார் செய்கிறார்.சிறையில் இருக்கும் ஒரு கைதிதான் தட்டச்சு செய்கிறார். அவர் தட்டச்சு செய்யும் ஒவ்வொரு முறையும் கையை அழுத்திப் பிடித்துத் தன் வலிகளைப் போக்குகிறார். “ஏன் என்னாச்சு?” எனக் கேட்கிறார் சுனில். “என் மீது போட்ட குற்றத்தை ஒத்துக்க சொல்லி அடிச்சாங்க. அந்த அடி தங்காம நான் ஒத்துக்
கிட்டேன். அப்பதான் என்னுடைய கை இது மாதிரி
ஆச்சு” என்கிறார். இந்த பதிலுக்கும் பில்லா மற்றும் ரங்காவின் வழக்குக்கும் தொடர்பு இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள்.

பில்லா-ரங்கா கதையைவிட அதிகமான கேள்விகளை எழுப்பக்கூடியது கார்டர் உஜாகர் வழக்கு. முன்னாள் ஜனாதிபதி வி.வி. கிரியின் விருப்பமான கண் வைத்திய
ராக இருந்தவர் நரேந்திர சிங் ஜெயின். இவர் தன்னோடு பணிபுரிந்த சந்திரேஷ் சர்மா என்ற பெண்ணோடு திருமணம் கடந்த உறவில் இருக்கிறார். இதனை நரேந்திர சிங்கின் மனைவி வித்யா கண்டிக்கிறார். அதனால் சிங்கும் சந்திரேஷும் சேர்ந்து வித்யாவைக் கொல்ல சதித்திட்டம் போடுகிறார்கள். கார்டர் உஜாகர் என்ற இரண்டு கூலித் தொழிலாளிகளுக்கு 500 ரூபாய் கொடுத்து, வித்யாவைக் கொலைசெய்கிறார்கள். 1973ஆம் ஆண்டு இந்தக் கொலை நடக்கிறது. விசாரணை நீதிமன்றம் நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கிறது.

வழக்கு மேல்முறையீட்டில் தில்லி உயர்நீதி மன்றத்திற்குப் போகிறது. கோச்சார் என்ற நீதிபதி கூலிக்காகக் கொலை செய்த கார்டர் உஜாகர் என்ற இருவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறார். கொலை செய்யச் சொன்ன நரேந்திர சிங், சந்திரேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறார். 20 கொலைகளைச் செய்தவன் சர்வ சுதந்தரமாக சிறையில் வாழ்ந்த போது 500 ரூபாய்க்குக் கொலை செய்த இரண்டு ஏழைகள் தூக்கில் தொங்கினார்கள் என்பதைக் கேட்பதற்குச் சிரமமாகத்தான் இருக்கிறது.

Death Warrant என்பதன் இன்னொரு பெயர்தான் Black Warrant. ஒரு குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை எங்கு நடக்கும்; எப்போது நடக்கும் என்ற நீதிமன்றத்தின் ஆணையைத்தான் Black Warrant என்று கூறுகிறார்கள். கார்டருக்கும் உஜாகருக்கும் தூக்கு தண்டனை வழங்கிய கோச்சார் என்ற நீதிபதியிடமிருந்து Black Warrant-ஐ சுனில்குமார்தான் வாங்கியிருக்கிறார். “இந்த தீர்ப்பை வழங்கிய கோச்சார் மன உளைச்சலில் இருந்திருக்க வேண்டும்” என்று தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சுனில் குமார்.

வித்யாவைக் கொலை செய்த கூலித் தொழிலாளிகள் தூக்கிலேற்றப்பட்டார்கள். கொலை செய்யச்சொன்ன நரேந்திர சிங்கும் சந்திரேஷும் அதே சிறையில் நூலகப் பணியில் இருந்திருக்கிறார்கள். சிறைக்குள்ளும் அவர்கள் காதல் லீலைக்கு குறைவில்லை. காட்டர் உஜாகர் தூக்கிலிடப்பட்ட மூன்று ஆண்டுகள் கழித்து, நரேந்திர சிங்கும், சந்திரேஷ் சர்மாவும் நன்னடத்தையின் காரணமாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், சந்திரேஷ் சர்மா சிறைத்துறை பெண் காப்பாளரைத் தலையில் அடித்துக் காயப்படுத்தியவர் என்கிறார் சுனில் குமார் குப்தா. சிறை வலிமையானவர்களுக்கானது. நீதிமன்றங்கள் செல்வந்தர்களுக்கானது. இந்திய ஜனநாயகம் உயர்ஜாதியினருக்கானது. இந்த நிலை எப்போதும் மாறப்போவதில்லை.

இந்த வெப் சீரிஸில் சில விசயங்களை மறைமுகமாகச் சொன்னார்கள் இல்லையா? அதேபோல சுனில் குமார் தன்னுடைய புத்தகத்திலும் சில விசயங்களை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். அதில் அஃப்சல் குருவின் தூக்கைப் பற்றிக் கூறும்போது, ”அந்தத் தூக்குத்தண்டனையை நிறைவேற்றிய அன்று இரவு நான் தேம்பித் தேம்பி அழுதேன்” என்கிறார். 2013இல் அஃப்சல் குருவைத் தூக்கிலேற்றும்போது சுனில் குமார் முப்பது வருடங்களுக்கு மேல் பணியாற்றிவிட்டார். எத்தனையோ தூக்குத் தண்டனைகளையும் பார்த்துவிட்டார். இருந்தும் அஃப்சல் குருவைத் தூக்கில் ஏற்றும்போது சுனில் குமார் ஏன் அழுதார்?

அவர் முஸ்லிம் இல்லை. அவர் ஒரு கம்யூனிஸ்டும் இல்லை. வேதங்களைப் பாராயணம் செய்து வாழும் சராசரி இந்தியர்தான் சுனில் குமார். இருந்தும் ஏன் அழுதார் என்றால் தூக்கில் ஏற்றியது அஃப்சல் குருவை இல்லை, நியாயத்தை என்பதை அவருடைய மனசாட்சி அவருக்குச் சொல்லியிருக்கிறது. சுனில் குமாரின் இந்த மனசாட்சிதான் வெப் சீரிஸின் தனித்துவமாக அமைகிறது; திஹார் சிறையில் நடக்கும் பல அநியாயங்களை வெளியே கொண்டுவந்திருக்கிறது.

ஒரு நீதிபதி Black Warrant-இல் கையெழுத்து போட்ட பிறகு பேனாவின் nib-ஐ உடைத்து விடுவார். அவர் ஏன் இப்படி உடைக்கிறார் என்பதற்கான சட்டபூர்வமான விதிகள் எதுவும் சொல்லப்படவில்லை. சில காரணங்களைச் சொல்கிறார்கள்.

             ஒரு நீதிபதி தன் தீர்ப்பைத் தானே மறு ஆய்வு செய்யக்
கூடாது என்பதற்காக உடைக்கிறார்.

             ஒரு பேனா ஒருவனுடைய உயிரை வாங்கிய பிறகு வேறு எதற்காகவும் பயன்படக்கூடாது என்பதற்காக உடைக்கிறார்.

             ஒரு பேனா ரத்தத்தைச் சுவைத்து விட்டது அதனால் அது இன்னொரு உயிரையும் குடித்து விடக்
கூடாது என்பதற்காக உடைக்கிறார்.

             ஒரு குற்றவாளியைக் கொன்ற பிறகு சந்தோசமாகவும் இருக்கக்கூடாது, வருத்தப்படவும் கூடாது. அதனால் பேனாமுனையை உடைத்து அந்த நினைவுகள் வராமல் இருப்பதற்காக உடைக்கிறார்.

என்று பல காரணங்கள் சொல்வது உண்டு. ஆனால், இந்தியாவில் பிளாக் வாரண்டில் கையெழுத்துப் போடும் பேனாமுனைகள்

             இஸ்லாமியர்களுக்காக உடைகின்றன.

             சீக்கியர்களுக்காக உடைகின்றன.

             தாழ்த்தப்பட்டவர்களுக்காக உடைகின்றன.

ஒருபோதும் உயர்ஜாதியினருக்காக உடைவதில்லை என்பதைப் புரிந்துண்டால் பேனாமுனையை உடைப்பது சட்டரீதியில் சொல்லப்படாத பைத்தியக்காரத்தனம் என்பதைத் தவிர வேறில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

drsankardass@gmail.com