எப்படியாவது ஒரு ஆண்மகனைத் தேடிக் கொள்ளத்தான் வேண்டும்.
மேசை மீதிருந்த கனமான கண்ணாடி உருண்டையைக் கையில் எடுத்துக் கொண்டவள் அதை உள்ளங்கைக்குள் வைத்தபடி சிலமுறை உருட்டினாள்.
உருண்டை, கௌசல்யா வேலையில் சேர்ந்த புதிதில் இருபது வருடங்களுக்கு முன்னால் அப்பாவும் அம்மாவும் பரிசாக வாங்கித் தந்தது. உருண்டைக்குள் குடியிருந்த குளுமை கையின் வழியாக உடம்புக்குள் புகுந்து கன்ன மேடுகளில் ஏறி அவள் கன்னங்கள் சின்னத் தீச்சுடர்களாக ஜொலிப்பதாக கௌசல்யாவிற்குத் தோன்றியது.
உறைந்து போயிருக்கும் உருண்டையின் குளிர்ச்சிக்குள்ளும் எப்படி தனக்குள் இருப்பது போலவே வெப்பம் கனன்று கொண்டிருக்கிறது என்று கௌசல்யா தனக்குத்தானே வியப்புடன் சொல்லிக் கொண்டாள். இப்போது அவளுடைய உள்ளங்கைக்குள் கண்ணாடி உருண்டை கனமாய், குளத்திற்குள் எறிந்த கல்லாய் அமர்ந்திருந்தது.
உருண்டையும் தன்னைப் போலவே இருக்கிறது என்று அவள் தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் போதே வெனீஸ் நகரத்திற்கு எதிரே அமைந்திருக்கும் முரானோ முதற்கொண்ட குட்டிக் குட்டி இத்தாலிய தீவுகளில் மிகத் தரமான கண்ணாடிப் பொருள்கள் தயாரிக்கப்படுவது அவள் நினைவுக்கு வந்தது. அவள் கற்பனையில் நீலக் கடல்வெளிக்கு எதிர்புறமாகச் சுட்ட மண்ணின் நிறத்தில் இருக்கும் ஒரு கண்ணாடிப் பட்டறைக்குள் தலை நிறைய சுருட்டைத் தலைமயிரோடு நெருப்புக்கு முன்னால் நின்றபடி வலுவான வாலிபன் ஒருவன் கண்ணாடிப் பொருள்களை உருவாக்குவது காட்சியாய் எழுந்தது.
எப்படியும் ஆறடி உயரமாவது இருப்பான். அல்லது ஐந்தடி பதினொன்று அங்குலம்? எப்படியும் ஐந்தடி பத்துக்குக் குறையாது. பலகைபோல் இறுகியிருந்த மெலிந்த உடல். கை வைக்காத பனியனும் மிக இறுக்காமான கால்சட்டையும் அணிந்திருந்தான். கால்சட்டை அவனது இறுக்கமான கணுக்கால்களைத் தொடாமலேயே முடிவு பெற்றிருந்ததைக் கவனித்த கௌசல்யா மனதுக்குள் அவனைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள்.
நெருப்புக்கு முன்னால் நின்றிருந்த இளைஞனின் கையில் நீண்ட ஊதுகுழல்போல் ஒரு குழாய் இருந்தது. அவன் ஊதுகுழலை வாயோடு பொருத்தியிருந்தான். அதன் மறுமுனையில் பெரிய அண்டாவில் கொதித்துக் கொண்டிருந்த கண்ணாடிக் குழம்பிலிருந்து ஒரு கையளவு அவன் மூச்சுக் காற்றின் உதவியால் வட்ட வடிவமாய் வீங்க ஆரம்பித்திருந்தது. உருண்டையாய்த் திரள ஆரம்பித்திருந்த கண்ணாடியை இன்னும் பெரிதாகச் செய்ய அவன் ஊதுகுழலுக்குள் ஊதியபடியே அதைக் கைகளால் மெல்லத் திருப்பிக் கொண்டே இருந்தான்.
அவன் அப்படித் திருப்பிய போது அவன் கைகளின் இறுகித் திரண்டிருந்த வலுவுள்ள தசைகள் திமிர்ந்து வெளிப்பட்டு மிக அழகாய்த் தெரிந்தன. அவன் அணிந்திருந்த வெள்ளை பனியனுக்குள் கடலில் பல மணிநேரம் நீந்தியும் மரப்படகிலேறி மீன்பிடித்தும் வெண்கலமாகியிருந்த மேனியும் முகமும் எதிரே எரிந்து கொண்டிருந்த தீயின் வெளிச்சத்தில் ஜொலித்தன. கறுத்த முகத்தில் நீளமாக முனைகளில் சின்ன வளைவோடு குவிந்திருந்த கனிவான உதடுகளில் புன்னகை சுத்தமான பாலாய்ப் பொங்கியிருந்தது.
கௌசல்யா தொடக் கூடாத ஒன்றைத் தொட்டு விட்டதைப்போல் கையிலிருந்த கண்ணாடி உருண்டையை மேசைமீது கூச்சத்தோடு வீசினாள். பின்னர் எழுந்து பறவைக் கூண்டைப்போலிருந்த தனது சின்ன அலுவலக அறையை விட்டு வெளியேறி கதவுக்கு அடுத்த பக்கமாய் இருந்த சிறுவர் நூலகத்துக்குள் போய் பலவிதமான வண்ணங்களோடும் கேளிக்கைச் சித்திரங்களோடும் கண்ணைப் பறிக்கும்படி இருந்த புத்தகங்களுக்கு முன்னால் நின்று கொண்டாள்.
சின்ன அரங்கம்போல் வடிவமைக்கப்பட்டிருந்த சிறுவர் நூலகத்தையும் தாண்டி நடந்தால் பெரியவர்களுக்கான நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான பெரிய நூலகம் வரும்.
வேலை நாள் மதியம் என்பதால் சிறுவர் நூலகம் வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு சில இளம் வயது பெண்கள் மாத்திரம் நூலத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த மெத்தென்ற வட்ட இருக்கைகளிலும் சாக்கு மூட்டைகளைக் கவிழ்த்து வைத்ததைப் போலிருந்த பருத்த ‘பீனி’களிலும் அமர்ந்து அவர்களுக்கு அருகில் நின்றிருந்த சின்னக் குழந்தைகளுக்குப் மடியில் திறந்து வைத்திருந்த புத்தகங்களிலிருந்து கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் அம்மாக்களின் அசையும் வாய்களையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தன.
கௌசல்யா கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்த பெண்களின் மேலாடைக்குள் கனமான கண்ணாடி உருண்டைகளைப்போல் பெருத்திருந்த மார்புகளை சின்ன வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள். தாய்மை அடைந்துவிட்ட பிறகு பெண்களின் மார்பகங்கள் எவ்வளவு அலட்சியம் நிறைந்தவையாக மாறிவிடுகின்றன என்று அவளுக்குத் தோன்றியது.
கேள்வி: சற்று முன்னால் அவள் கையிலிருந்த கண்ணாடி உருண்டையைப் போலவே அவர்களது குளிர்ந்த மார்புகளுக்கு உள்ளேயும்கூட சொல்லில் அடங்காத வெப்பம் பெருகிக் கொண்டிருக்குமா? அல்லது குழந்தை பெற்றுவிட்ட பிறகு எல்லாம் முடிந்து விட்டதென்று சகலமும் வற்றிப்போய் அவர்களது மார்புகளும் கனமாகி சகிக்க முடியாத குளுமைக்குள் உறைந்துபோய்க் கிடக்குமா?
கனமான குளிர்ந்த கண்ணாடி உருண்டையை மீண்டும் பிடித்துக் கொண்டிருப்பதைப் போலவே கௌசல்யாவின் வலது உள்ளங்கை ஏனோ குறுகுறுத்தது.
“என்ன இப்ப சீனப் புத்தகமெல்லாம் படிக்க ஆரம்பிச்சுட்டியா?”
கௌசல்யா திடுக்கிட்டு நிமிர்ந்தாள். பக்கத்தில் செசிலியா நின்றிருந்தாள். குழந்தைகள் நூலகப் பிரிவின் நெடுநாள் தலைவி. கொஞ்சம் குதிரையின் சாயலில் இருந்த நெடிய முகத்திலும் பெரிய பழுப்புநிறக் கண்களிலும் அவள் கனிவை மட்டுமே காட்டியதால் கௌசல்யா வழக்கமாய் இத்தகைய தருணங்களில் காட்டும் எரிச்சலை அவளிடம் காட்டவில்லை. ஏதோ ஒரு வகையில் மூக்கு சுருங்க உதடுகளின் ஓரங்கள் குலைந்து கோணலாகிப் போக செசிலியாவைப் பார்த்து புன்னகைத்தாள். செசிலியாவின் பல குழந்தைகளைப் பெற்று பெருத்த இடுப்பு அவளது வடிவமே இல்லாத சாயம்போன பாவாடைக்குள்ளிருந்து இரண்டு கைப்பிடிகளாய்த் துருத்திக் கொண்டிருந்தது.
கௌசல்யா மீண்டும் செசிலியாவைப் பார்த்து உதடுகள் கோணலாய் பிதுங்கி நிற்கச் சிரித்தாள்..
“…”
“எங்க, பெரியவங்க லைப்ரரியில இருக்குற புத்தகத்த எல்லாம் படிச்சு முடிச்சுட்டு இப்ப குழந்தைங்க லைப்ரரியில இருக்குற புத்தகத்தை படிச்சு முடிக்க வந்திருக்கியோனு நெனச்சு பயந்துட்டேன்.”
கௌசல்யாவின் முன்னாலிருந்த புத்தக அடுக்குகளில் முறையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சீன மொழிப் புத்தகங்களில் அச்சிடப்பட்டிருந்த சீன எழுத்துக்கள் யாவையும் குதூகலத்தோடு கை கால்களை ஆட்டி அசைத்து நடனமாடிக் கொண்டிருக்கும் ஆட்களைப்போலவே கௌசல்யாவிற்குத் தோன்றின.
எத்தனை ஆனந்தமான எழுத்துக்கள்! எழுத்துகளை இவ்வளவு ஆசையாகப் படிக்கும் நான்கூட எப்போதாவது இப்படி கை கால்களைக் கவலையில்லாமல் வீசியபடி துள்ளிக் குதித்திருக்கிறேனா என்று கௌசல்யா தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். கண்ணாடி உருண்டைபோன்ற கனமான இறுகிய மவுனமே அவளுக்குப் பதிலாக வந்தது.
கௌசல்யா குதூகலத்தில் குதித்து ஆட ஆரம்பித்தால் முதலில் அவளுடைய கனமான கறுப்பு உடம்பு தடையாக இருக்கும் என்பது அவள் எண்ணம். இரண்டாவது அவளுடைய கனமான மூக்குக் கண்ணாடி மூக்கிலிருந்து விலகி கோமாளித்தனமாய் நிற்கும். குதித்து ஆடுவதற்கு உடம்பின் கனம் ஒரு காரணம் என்பது சரியாகக் கூட இருக்கலாம்.
ஆனால் தன்னை மறந்து ஆடாமல் இருப்பதற்கு உடம்பின் கறுப்பு நிறம் ஏன் ஒரு காரணம் என்று கௌசல்யா தன்னை ஒருமுறைகூட கேட்டுக் கொள்ளவில்லை.
“கௌசி, உங்கிட்ட நான் ஒண்ணு சொல்லட்டுமா?”
முறைதவறி விலகியிருந்த சில புத்தகங்களைச் சின்னப் பதற்றோத்தோடு குனிந்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்த செசிலியா நிமிர்ந்து கௌசல்யாவிடம் ஏதோ ரகசியத்தைச் சொல்லப் போவதைப்போல் அருகில் வந்தாள்.
அது நூலக ஊழியர்களுக்கான வருடாந்திர மதிப்பீடுகள் நடக்கும் மாதம். கௌசல்யா சற்றுக் கர்வத்துடன் காதுகளைத் தீட்டிக் கொண்டு நின்றாள்.
“நாற்பத்தஞ்சு வயசுல புத்தகத்தோட படுக்கைக்குப் போறது கேவலம். நீ ரொம்ப புத்திசாலியான பொண்ணுதான். ஆனா இந்த வயசுல படுக்கைக்குத் தேவையானது புத்தகமில்ல, ஆம்பிளைதான்.”
சொல்லிவிட்டுச் செசிலியா மெல்லச் சிரித்தாள். அவள் கன்னங்கள் முரானோ கண்ணாடிப் பட்டறைத் தீயில் பளபளப்பதுபோல சிவந்திருந்தன. சிறுவர் நூலகத்தில் அமர்ந்திருந்த தாய்மை எய்திய பெண்களும் குழந்தைகளும் அவளையே உற்றுப் பார்த்து செசிலியாவைப்போலவே மெல்லச் சிரிப்பதாக இப்போது கௌசல்யாவிற்குத் தோன்றியது.
குழந்தைகள் நூலத்தில் பொழிந்து கொண்டிருந்த கண்ணைப் பறிக்கும் விளக்குகளின் வெளிச்சத்தில் பல்லாயிரம் தேனீக்களின் ரீங்காரம் நிறைந்து கௌசல்யாவின் காதுகளை அடைத்தது.
ஒரு பெண்ணின் வாழ்நாளில் எத்தனை விதமான படிப்பினைகளை. எத்தனை விதமான நீதி போதனைகளைக் கேட்க வேண்டியதாக உள்ளது என்று கௌசல்யா சலித்துக் கொண்டாள்.
இதே குழந்தைகள் நூலகத்தில் குழந்தைகளுக்கான கதை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது கௌசல்யாவின் வேலை. குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உபயோகமான பல்வேறு தலைப்புகளில் கௌசல்யா வாரந்தோறும் கருத்தரங்கங்களையோ, மேடை விவாதங்களையோ, கதைகூறும் போட்டிகளையோ ஏற்பாடு செய்வாள். அந்த நிகழ்ச்சிகளுக்கான சுவரொட்டிகளைக் கணினியில் வடிவமைத்து அவளே நூலகக் கட்டடம் முழுவதும் மாட்டி வைப்பாள். சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வாள். நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அவற்றைப் பற்றிச் சின்னதாய்ப் புகழ்ந்து புகைப்படங்களோடு அதே வலைதளங்களில் பதிவிடவும் செய்வாள்.
வார இறுதி நாட்களில் கௌசல்யாவே காலையும் மாலையும் பாலர் வகுப்புக் குழந்தைகளைக் கூட்டி வைத்துக் கொண்டு புத்தகங்களிலிருந்து கதைகளைச் சொல்வாள். அதிலும் பாட்டி வடை சுட்டு விற்ற கதை எல்லா மொழி குழந்தைகளுக்கும் நிறையவே பிடிக்கும்.
ஒரு முறை கௌசல்யா கதை சொல்லி முடித்த பிறகு ஆறு வயதான சீனப் பொடியன் ஆள்காட்டி விரலைத் தலைக்குமேல் தூக்கி ஆட்டியபடியே கௌசல்யாவிடம் கேட்டான்:
“டீச்சர், நாம எல்லாரும் வடை சுட்டு விக்குற பாட்டியா இருக்கணுமா, காக்காவா இருக்கணுமா இல்ல அந்த நரியா இருக்கணுமா?”
அப்பாவும் அம்மாவும் வடை சுட்டு விற்கும் கிழவியாக இருக்கத்தான் கௌசல்யாவிற்குப் படித்துப் படித்துச் சொல்லித் தந்திருந்தார்கள்.
கதை நிலழ்ச்சி முடிந்து ரிவர் வேலி சாலை பக்கமாய் சாம்பல் நிறமான சிங்கப்பூர் ஆறு மல்லாந்து கிடக்க பீர் குடித்துக் கொண்டே பையனின் கேள்வியைக் கௌசல்யா மாதவியிடம் சொன்ன போது மாதவி பீரின் நுரைபோலவே குபீரென்று சிரித்தாள்.
“ஆமா கௌசு – குழந்தைகளுக்குக் கதைகள் ரொம்பப் பிடிக்கும்னு நீயும் உங்க நூலகமும் சத்தியம்கூட பண்ணுவீங்க போலிருக்கே.. பின்ன எதுக்கு கதைகளப் படி, படினு குழந்தைகள இழுக்க இத்தனை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்றீங்க?”
“நல்ல கதைகளா இருந்தாலும் அத விளம்பரபடுத்தணுமில்லயா?”
“விளம்பரப்படுத்தலன்னா?”
“எத்தனையோ நல்ல கதைங்க புத்தக அடுக்குல தூங்கறதப் போல இந்தக் கதைகளும் தூங்கும்…”
‘நீ இத்தனை வருஷத்துக்கு அப்புறம் உன் வீட்டுப் படுக்கையில தனியா தூங்குறதப் போலதானே கௌசு’ என்றுதான் மாதவி சொல்ல நினைத்தாள். ஆனால் சொல்லவில்லை. கௌசல்யா மாதவிக்குத் தொடக்கப் பள்ளியிலிருந்தே தோழி. அவளுக்குக் கௌசல்யாமீது அன்பும் பரிதாபமும் இருந்தது.
மாதவியின் உரையாடலால் கௌசல்யாவிற்குக் கோபம் வந்திருக்க வேண்டும். பீர் கோப்பையை அவர்களுக்கு முன்னாலிருந்த சின்ன வட்ட மேசைமீது சப்தமெழ வைத்தாள். அது லேசான பீர் போதையாகவும் இருந்திருக்கலாம். கோபம், போதை இரண்டுக்கும் ஒரே சாயல்தான்.
குழந்தைகளுக்கான கதை நிகழ்ச்சிகளில் ஆழ்ந்திருந்ததில் கௌசல்யா காலையிலிருந்து எதையும் சாப்பிடவில்லை.
“ஏன் உன்னை மாதிரி பொம்பளைகளுக்கு எல்லாமே செக்ஸ்லயே வந்து முடியுது மாதவி? ஒரு பொண்ணுக்கு வாழ்க்கையில உடலுறவத் தவிர வேற எந்த ஆசை, குறிக்கோள், கனவு எதுவும் இருக்கக் கூடாதா? அப்படினா மூணு பிள்ளைய பெத்து இறக்கிட்டு நீயேன் ஆம்பளயே வேணாம்னு திவாகர் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கிகிட்ட?”
எதிரியின் நெஞ்சுக்குள் அவன் எதிர்பாராத தருணத்தில் கத்தி இறக்குதல் என்பது கலை. ஆனால் இந்தக் கலை எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கைவந்து விடாது. பல வருடங்களாய் வஞ்சகமாக, தந்திரம் நிறைந்த மனிதர்களால் பலபேர் முன்னிலையில் கத்தி குத்து வாங்கிச் செத்துப் பிழைத்தவர்களுக்கே இந்தக் கலை சாத்தியமாகிறது.
“லூஸு கௌசு, செக்ஸ் உனக்கு அசிங்கமா படுதா? செக்ஸும் சரி, கதையும் சரி மனுஷங்க செய்யுற வேற எந்தக் காரியமானாலும் சரி, மத்தவங்களோட சேர்ந்து வாழ உபயோகிக்கிற ஒரு தந்திரம்தான். கதை படிக்கிறோம், நல்ல சினிமா பார்க்குறோம். பார்த்துட்டுச் சும்மாவா இருக்கோம்? உடனே அதைப் பத்தி நாலு பேர்கிட்ட பேசலயா? மோசமான சினிமானா ஃபேஸ்புக்ல போயாவது கழுவி ஊத்தாமலயா இருக்கோம்? கதைக்கு விளம்பரம் பண்ணா தப்பில்ல. செக்ஸுக்கு விளம்பரம்னா மட்டும் தப்பா? நல்ல உடுத்திக்கிறது, பல்லு வெளக்குறது, உன்ன மாதிரி அறிவாளினு நாலு பேர் கிட்ட காட்டிக்கிறது எல்லாமே உன்னோட செக்ஸ் வச்சுக்க சொல்லி, அதாவது சேர்ந்து வாழச் சொல்லிப் பண்ற விளம்பரம்தான்…”
சின்ன தட்டிலிருந்த பொறித்த கடலைகளை மாதவி கௌசல்யா பக்கமாய்த் தள்ளி வைத்தாள்.
“என் விவாகரத்தச் சொல்லிக் காட்டிக் கேவலப்படுத்துனா நான் தூக்கு மாட்டிகிட்டுத் தொங்குவேன்னு நினைச்சியா கௌசல்யா? அந்த மனுஷன் குடிகாரன். பொம்பள பொறுக்கி. ஓயாம என்னையும் குழந்தைகளையும் அடிக்குற வெறிநாயி. அவன்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கத்தான் வாங்குவேன். அந்தாளோட கல்யாணம் வேணாம்னுதான் விலகினேன். செக்ஸோ மத்த ஆண்களோட சகவாசமோ வேணாம்னு விலகல. கூடி வாழ்றது மனுஷங்களோட இயல்பு கௌசல்யா. இதப் புரிஞ்சுக்காதவங்க உன்னை மாதிரி கற்பனையிலேயே சுய இன்பம் தேடிக்க வேண்டியதுதான்.”
அந்த இரண்டு பெண்களாலும் கடலைகள் கொறிக்கப்பட்டன. பீர் அருந்தப்பட்டது. வாழ்க்கையைப் பார்த்துக் சலித்துப்போன நாற்பது வயது பெண்ணாய் சாம்பல் நிற நதி அசமந்தமாய் அவர்கள் முன்பாகக் கடந்து போனது.
கௌசல்யா தன் கற்பனையில் இதுவரை உருவாக்கிய ஆண்களின் உருவங்களை நினைத்துக் கொண்டாள்.
“அப்படினா எனக்குப் பிடிச்சா மாதிரி ஒரு நல்ல மனுஷன் வர வரைக்கும் காத்திருக்க நினைச்சு கலியாணம் பண்ணிக்காதது என் தப்புனு சொல்றியா மாதவி? அப்பா அம்மாவுக்கு அடங்குன மகளா இருந்தது தப்பா? அவங்க எனக்குக் கலியாணம் பண்ணி வைப்பாங்கனு நம்புனது தப்பா?”
கௌசல்யாவின் கேள்விகள் கடந்து போய்க் கொண்டிருந்த வாகனங்களின் இரைச்சலுக்கு நடுவே விம்மலாய்க் கேட்டன.
“கலியாணம் பண்ணிக்காதது உன் தப்பில்ல கௌசல்யா. அது ஏதோ சொர்க்கத்துல நிச்சயிக்கப்பட்டிருக்குனு நினச்சு இங்க முயற்சி எடுக்காம கதையிலயும் கற்பனையிலயும் மூழ்கி இருந்த பாரு அதுதான் தப்பு.”
மிகப் பழைய கதை அல்லது தொன்மம்: மிக உயரமான அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக் குதிரையில் முரானோ பட்டறையில் ஊதுகுழலைக் கொண்டு அழகிய கண்ணாடிப் பொருள்களை வடிவமைக்கும் வலுவுள்ள இளைஞனின் தோற்றத்தோடு ராஜகுமாரன் ஒருவன் வருகிறான். அவன் குதிரையிலிருந்து இறங்காமலே கௌசல்யாவை ஒரு கையால் வளைத்துத் தூக்கி மிக வேகமாகக் குதிரையை வெகு தூரத்துக்கு ஓட்டிச் செல்கிறான். சுபம்.
“என் உருவத்தையும் நிறத்தையும் இப்ப இருக்குற வயசையும் பார்த்துட்டு இன்னமும் யாராவது வருவான்னு எனக்கு நம்பிக்கை இல்ல மாதவி.”
“உன்னைப் பார்த்து வராம போகலாம் கௌசல்யா. ஆனா நீ உன்னையே தேர்ந்தெடுத்துக்கப் போறதில்ல. எந்த முன்முடிவும் இல்லாம வாய்ப்புக்குத் தயாரா இருக்குறதுதான் உன் வேலை. கூடி வாழுற இயற்கைக்கு எதிரா உன்னையே ஏமாத்திக்கிறது இல்ல.”
கௌசல்யாவின் முன்னால் அசமந்தமாய் நகர்ந்த நதி அவளுக்குத் திடீரென்று எங்கிருந்தோ கிளம்பி எல்லாவற்றையும் நனைத்த சூரிய வெளிச்சத்தில் பொன்போல பீர்-இன் நிறத்தில் போதை நிறைந்ததாக ஜொலிக்க ஆரம்பித்திருந்தது.
“அப்படி யாரும் வரலனா?”
“கிழவியோட வடைக்கு ஒரு காகமும் அதுக்குப் பின்னால ஒரு நரியும் பாட்டுப் பாடிக்கிட்டும் புகழ்ந்து பேசிக்கிட்டும் வரலியா. அப்படி வரலனாலும் நீ வாழ்க்கைய ஒரு கை பார்த்த சந்தோஷத்தோட போய்ச் சேரலாம்.”
ஆனால் நாற்பந்தைந்து வயதுவரை கனவுகளிலும் வேலையிலும் மூழ்கித் தனக்கென ஓர் ஆளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளாதது கௌசல்யாவின் தவறில்லைதான்.
***
அந்தச் செயலியில் ஆண்களும் பெண்களும் பலவிதமான புகைப்படங்களாகவும் குறிப்புகளாகவும் நிறைந்து கிடந்தார்கள். முன்பே திருமணமானவர்கள், விவாகரத்தானவர்கள், திருமணமாகி இப்போது சட்டப்பூர்வமான பிரிவுக்குக் காத்திருப்பவர்கள், எப்போதுமே திருமணமாகாதவர்கள் என்று பலதரப்பட்டவர்கள் அங்கிருந்தார்கள்.
இத்தனைக்கும் மேலாக அந்தச் செயலியின் வாசகம் கௌசல்யாவிற்குப் பிடித்திருந்தது:
“விரலால் வலது பக்கம் தேய்த்தால் போதும், உங்களுக்கான ஒரு எதிர்காலச் சொர்க்கம் காத்திருக்கிறது. அறுபத்தெட்டு வெள்ளி தொண்ணூற்று எட்டுக் காசுகளில் உங்கள் உள்ளத்தைக் கவரக் கூடிய வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.”
கௌசல்யா புத்தக அடுக்குகளுக்குள் முன்னால் நின்று புத்தகங்களின் அட்டைகளை ஆராய்ந்து கொண்டிருந்த செசிலியாவிடம் எதையும் சொல்லாமல் ஒரு ரகசிய புன்னகையோடு சிறுவர் நூலகத்தின் வேறொரு பகுதிக்கு அகன்று சென்றாள்.
கௌசல்யாவும் அந்தச் செயலியில் இருந்துதான் ஒருவனைத் தேர்ந்தெடுத்திருந்தாள். ஐம்பது வயதில் விவாகரத்தானவனாய். குழந்தைகள் இல்லாதவனாய். ஓரளவுக்கு கட்டான உருவத் தோற்றம் உள்ளவனாய். ஓரளவு மதிப்பான வேலையில் இருப்பவனாய். பல மாதங்கள் அவனோடு செயலியின் வழியாகப் பேசி அவன் சொல்வது அனைத்தும் உண்மைதான் என்று ஓரளவு உறுதி செய்து கொண்ட பிறகு அவனைச் சந்திக்க ஒப்புக் கொண்டாள்.
செசிலியாவோடு பேசிய அந்த நாளில் வேலை முடிந்தபின் நூலகத்தின் அருகிலிருக்கும் காபிக் கூடம் ஒன்றில் அவனைச் சந்திப்பதாக ஏற்பாடு.
பலமுறை கற்பனையில் பார்த்துப் பழகிப்போன முரானோ கண்ணாடிப் பட்டறை இளைஞனின் சற்றே வயதான பிரதியாக கௌசல்யா அவள் சந்திக்கப் போகும் செயலி மனிதனை நினைத்தாள்.
நூலகக் கழிவறையில் முகத்தை நன்றாக அழுந்தத் துடைத்து என்றைக்கும் தொட்டுப் பார்த்து அறியாத ஒப்பனைகளை லேசாய் முகத்தில் பூசிக்கொண்டு வெளியே நடந்து வந்தபோது கௌசல்யா தன்னையே தனக்கு அந்நியமாக உணர்ந்து கொண்டாள்.
ஆனால் காபிக் கூடத்தில் காத்திருந்த ஆளோ தெள்ளத் தெளிவான வகையில் அறுபது வயதுக்கும் மேற்பட்டவனாக இருந்தான். நாகரிகம் கருதி சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய் விடாமல் அவனுக்கு முன்னால் கௌசல்யா அமர்ந்தபோது அவள் உருவத்தை கண்களில் ஒருவகையான அலட்சியத்தோடு நோட்டமிட்டான்.
வாயில் அடக்கிய கடினமான பொருளைப்போல் காபியை மென்று விழுங்கியபடி கௌசல்யா அவனிடம் ஒரு கேள்வி கேட்டபோது மஞ்சளேறிய மிகப் பெரிய பற்கள் தெரியச் சிரித்தான்.
அவன் அமர்ந்திருந்த இருக்கையில் அவன் உடம்பு பெருத்திருந்தது. இருக்கைக்கும் காபி கோப்பைகள் வைத்திருந்த மேசைக்கும் இடையே சட்டைக்குள் அவன் பெருவயிறு துருத்திக் கொண்டிருந்தது.
“அட, அந்தப் படத்தில் இருக்குறது நான்தான்.”
“அம்பது வயசுனு சொன்னதா….”
“ஆமா, சரியாத்தான் சொன்னேன்.. அது பாருங்க அது என்னோட அம்பது வயது போட்டோதான். ஹே ஹே ஹே…”
பெரிய நகைச்சுவை ஒன்றைச் சொல்லிவிட்டவனைப்போல் தொந்தி அதிரச் சிரித்தான்.
அடுத்த பத்து நிமிட உரையாடலில் அந்த மனிதன் திருமணமானவன் என்றும் அவனுக்கு வளர்ந்த மகன்களும் மகளும் உள்ளார்கள் என்றும் கௌசல்யாவிற்குத் தெரிய வந்தன. முப்பது வருடத் திருமண வாழ்க்கை கசந்துவிட்டதாம். தன்னை உண்மையாகப் புரிந்துகொள்ளும் ஒரு தோழி வேண்டுமாம் அவனுக்கு.
பிறகு முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு கௌசல்யாவை உற்றுப் பார்த்தான்.
“இந்த நாற்பத்தஞ்சு வயசுல இந்த உருவத்தோட நீங்க அதிகம் எதிர்ப்பார்ப்ப வச்சுக்குறது ரொம்ப ரொம்ப தப்பு கௌசல்யா. இந்த வயசுல என்னென்ன சந்தோஷம் கிடைக்குதோ அதை ஏத்துக்கக் கத்துக்கணும். என்ன நான் சொல்றது?”
கௌசல்யாவின் காதுக்குள் ஒரு காகம் இடைவிடாமல் கரைந்தது. நாற்பத்திரண்டு நிமிடங்களை அந்த மனிதனோடு செலவழித்து விட்டு மீண்டும் பறவைக் கூண்டு போலிருந்த அவளது அலுவலக அறைக்குள் வந்தபோது அவள் மேசை மீதிருந்த கண்ணாடி உருண்டை அவளைப் பார்த்துசிரிப்பதுபோல் கௌசல்யாவிற்குத் தோன்றியது.
செசிலியா, சிறுவர் நூலகத்தில் இடைவிடாமல் கதை சொல்லிக் கொண்டிருந்த திருமணமான இளம்பெண்கள், அவர்களின் வாய்களையே கண் அசையாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களது குழந்தைகள், அந்த முரானோ கண்ணாடிப் பட்டறை இளைஞன், மாதவி, அந்தச் செயலி மனிதன் எல்லோரும் அவள் கண்களுக்கு முன்னால் தோன்றி உபதேசம் செய்தார்கள்.
பின்பு மேசைமீது கனமாய் தனக்குள் உறைந்திருந்த கண்ணாடி உருண்டையோடு சேர்ந்து கொண்டு அவர்கள் அவளைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தார்கள்.
“இனிமே எதிர்ப்பார்ப்ப வளர்த்துக்குவியா?”
கண்ணாடி உருண்டையின் சிரிப்பொலியும் அவர்களது குரல்களும் கௌசல்யாவின் குரலைப்போல் இருந்ததுதான் ஆச்சரியம்.
ஆனால் அந்தச் சிரிப்பொலிகளின் நடுவினிலும் கௌசல்யா தான் இனிமேலும் அந்த உறைந்துபோன கண்ணாடி உருண்டை இல்லை என்பதை உணர்ந்தாள். செயலி சொன்னதைப்போல ஒற்றை விரலசைவில் அறுபத்தெட்டு வெள்ளி தொண்ணூற்று எட்டுக் காசுகளில் அவளுக்குச் சொர்க்கத்துக்குப் போகும் வழி கிடைத்திருந்தது.
தன் உருவம் எப்படி இருந்தால் என்ன? தனக்கு வேண்டிய ஆணைப் பற்றிய எதிர்பார்ப்புகளை விட்டு கொடுக்கக் கௌசல்யா தயாராய் இல்லை.
கௌசல்யா மேசை மீதிருந்த கண்ணாடி உருண்டையைக் கையில் எடுத்தாள். தனது அலுவலகத்தின் கட்டாந்தரைமீது அதைக் குறிபார்த்து எறிந்தாள். அப்பாவும் அம்மாவும் வாங்கித் தந்த உருண்டை தரையில் சுக்குநூறாக உடைந்து சிதறியது.
கண்ணாடி உருண்டை சிதறிய நேரத்தில் கௌசல்யாவிற்கு உள்ளே இருந்து வெகு ஆழத்தில் கனமான இசை ஒன்று புறப்பட்டுப் பெருகியது.
கௌசல்யா அந்த இசைக்கு ஏற்ப தனது கனத்த உருவத்தை, தனது உடலின் கறுப்பை, திருமணமாகாத தனது பெரிய முலைகளை, கைகளை, கால்களை அசைத்து ஆட ஆரம்பித்தாள். அந்த இசைக்கு ஏற்ப அவள் உடம்பும் இருப்பும் வெகு இயல்பாய்க் குலுங்கி ஆடின.
மணக்க மணக்க கடை சுட்டு விற்கும் கிழவியாக மட்டுமல்ல, புகழ்ந்து பேசும் நரியாகவும், ஏமாந்து போகும் காகமாகவும் மாறி மாறி வாழ்வதுதான் மனிதர்களின் கூடி வாழ்தலின் இயல்பு என்று அந்த இசை அவளுக்குள் உணர்த்தியது.
கௌசல்யாவின் கைகளும் கால்களும் மிகுந்த குதூகலத்தில் வேகமெடுக்க ஆரம்பித்தன. அவள் தன்னையும் மறந்து தன் இருப்பில் லயித்தபடி ஆடிக் கொண்டிருந்தாள். அவளுக்குள் இருந்து பொங்கிய இசை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
அவள் காலடியில் கண்ணாடி உருண்டையின் சில்லுகள் சுடர்விடும் மலர்களாகச் சிதறிக் கிடந்தன.