என்னோட பேரு முத்துராசுங்கொ! வயசும் எனக்கு அறுவத்தி ரெண்டு ஆயிப்போச்சுங். இப்ப மூணி வருசமா நானு பாட்டல் பொறுக்கிட்டு இருக்கனுங்க. உங்களுக்கு வெளக்கமா சொல்லணும்னா கோட்டர் பாட்டலை பொறுக்கீட்டு போயி பழைய இரும்புக்கடையில போட்டா பாட்டலுக்கு ஒரு ரூவா கெடைக்குமுங்க! மூணு வருசத்துக்கும் முன்ன நானு நாலு வருசம் ஒரு கம்பெனில வாட்ச்மேனா போயிட்டு வந்துட்டு இருந்தனுங்க. அதுக்கும் முன்ன பத்து வயசுலயிருந்து காட்டு வேலைக்கித்தான் போயிட்டு இருந்தேன்.
முத்துராசுன்னு கூப்புட்டா இப்ப மூணுவருசமா வேற யாரையோ கூப்புடறாங்கன்னு நினைச்சுக்குவேனுங்க. எம்பட பேரே எனக்கு மறந்து போயி ‘ஒடக்காயி’ அப்படின்னு கூப்பிட்டாத்தான் ‘தேனுங்க!’ அப்புடிம்பேன். யாரு எனக்கு ஒடக்காயின்னு மொதல்ல பேருவெச்சுச் சொல்லி கூப்பிட்டாங்கன்னு தெரீலீங்க. ஆனா இப்பெல்லாம் எல்லாரும் ஒடக்காயின்னுதான் என்னை பேருவெச்சு கூப்புடறாங்க. பாக்குறக்கு கொஞ்சமா முதுவுல கூனு போட்டாப்புல ஆளும் குச்சி கணக்கா இருக்கறதால அப்படி பேரை பண்டியுட்டாங்க!
போன மாசம் எங்கம்மா செத்துப்போச்சுங்க. பதினாறாம் நாளு அவுளுக்கு சாமி கும்புடற வரைக்கிம் நான் பாட்டல் பொறுக்க இந்த டாஸ்மார்க்கு கடைப்பக்கமே வரலீங்க. ஊட்டுல எழவு உழுந்துட்ட பொறவு பொழப்பெ பாக்க போவ முடியாதில்லீங்க. கெவுருமெண்ட்டு எங்க சனத்துக்கு ஊட்டை கட்டிக்குடுத்து இரவத்தஞ்சி வருசத்துக்கும் மேல இருக்குமுங்க. முன்னாடியெல்லாம் தென்னங்கீத்து மேஞ்சு சாலையில தானுங்க சனமே படுத்துப்பொழச்சுது.
எங்காயா நல்ல பாட்டுக்காரிங்க. காட்டுவேலைக்கி கடைசிக்காலம் வரைக்கிம் போயிட்டு வந்தா. ஈக்குமாத்து குச்சி கணக்கா குள்ளமா இருப்பாளுங்க. வயசு தொன்னூறுக்கும் மேலதான் இருக்கும்னு கணக்குச்சொல்றனுங்க. கடேசியா எங்களை கொஞ்சம் சீரழிச்சிப்போட்டாளுங்க! நோவுன்னு ஒருநாளுகூட ஆசுபத்திரிப்பக்கம் அவ போனதில்லீங்க.
பாஞ்சு வருசத்திக்கிம் முன்னால இன்னாரு தோட்டத்துல அவ கூலிக்கிப் போயிட்டு இருக்காள்னு கரேச்சா சொல்லலாமுங்க. ஆனா கடைசி ஆக ஆக கோழி கூப்புடற நேரத்துல கெளம்பிட்டாள்னா மத்தியானமா ரெண்டு மணிக்கிம் மேலதான் ஊடு வந்து சேருவாளுங்க. இடுப்புல ஒரு சுருக்குப்பையி வச்சிருப்பாளுங்க. அதுக்குள்ளார பொயிலக்குச்சிக, நாலா கிழிச்ச வெத்தலை துண்டுக, நாலு பாக்கு வச்சிருப்பா. நாலா மடிச்ச ரூவா நோட்டுகளும் வச்சிருப்பா.
கெடையில அவ உழுந்து நாலஞ்சி மாசம் கிடந்தாளுங்க! கக்கூசு பக்கமா கயித்துக்கட்டலை போட்டுப் படுக்க வச்சிட்டோம். கக்கூசுக்கு அவளால எந்திரிச்சே போவ முடியாது. கஞ்சி, கூலுன்னு நீராகாரம் தான் ஊத்தீட்டு இருந்தமுங்க. அதும் அப்பிடியே பொறவுக்கால போயிருமுங்க! எப்பிடியோ எங்கம்மா போயிச்சேந்து இப்ப ஒரு மாசமாயிடிச்சு பாத்துக்கங்களே!
நானு சிவ்வியாருபாளையத்துல பொண்னு கட்டுனவனுங்க! அவ பேரு பொன்னம்மான்னு தான் நினைக்கிறேன். அவளும் குள்ளச்சி தான் எங்கம்மாளாட்டமே. எங்கம்மாளையும் அவளையும் சோடியா நிக்க வெச்சா ஒன்னக்கண்டாப்புல கரேச்சா இருக்கும். ரெண்டு பேரும் நல்ல குடிகாரிங்க. எங்கம்மா அவளுக்கு வாரம் ஒரு தடக்கா ஊட்டுல கறி செஞ்சா பாட்டல் வாங்கியாந்து ஊத்தியுட்டுருவா. எங்கம்மா கெடையில கெடக்கப்ப இவ பாட்டலு வாங்கியாந்து அவுளுக்கு ஊத்தியுட்டு கொன்னு போட்டா!
எம்பட குடும்பம் இனி எப்பயும் ஊருக்குள்ள மத்தவங்க பொழைக்கிறாப்ல மானம் மருகாதிய காப்பாத்திட்டு நல்லவிதமா நாலு சனம் மதிக்கறாப்ல ஓட்ட முடியாதுங்க! அவ்வளவுதான். எங்காயாவோட எல்லாம் போச்சு. என்னடா ஒடக்காயி இப்பிடிச்சொல்றனேன்னு கேக்கீங்களா? வேற எப்பிடிங்க நானு சொல்றது?
ஊருக்குள்ள என்னோட சம்சாரத்தெ குள்ளச்சீன்னு தான் சொல்லுவாங்க. அவ கிட்டப்படுத்து இப்ப இருக்குமுங்க இருவது வருசத்துக்கும் மேல. பொட்டி ஊட்டுக்குள்ளயே இருவது வருசமா நான் போறதில்லீங்க! வெளிய வாசப்படியோரத்துல தான் தலையை மேக்க அண்டக்குடுத்து கிழக்க காலை நீட்டி திப்புட்டை போர்த்தீட்டு படுத்து தூங்கீருவேன். இவளுக்கும் வயசு அம்பது இருக்குமுங்க. இவளொரு பொம்பளையின்னு நாலு பெரிய மனுசங்க அப்பப்ப பைக்கில வந்து கஞ்சி காச்சீட்டு போயிட்டு இருக்காங்க!
நானு அதப்பத்தியெல்லாம் கண்டுக்கறதில்லீங்க. அவுங்கள்ல யாராச்சிம் வந்தா படுத்துட்டு இருக்குறவன் எந்திரிச்சி ‘வாங்க!’ அப்பிடின்னு சொல்லிட்டு வடபக்க சுவத்துல முதுகை அண்டக்குடுத்து உக்கோந்துக்குவனுங்க! சித்தங்கூரியத்துல எனக்கு டம்ளர்ல சரக்கு கொண்டாந்து ‘இந்தா புடி!’ அப்பிடின்னு நீட்டுவா. நானும் வாங்கி குடிச்சுட்டு, திங்கறதுக்கு எதாச்சிம் நீட்டுறாளான்னு பார்ப்பேன். ஒன்னுமில்லீனா அப்புடியே குறுக்கிப் படுத்துக்குவேன்.
உள்ளார கட்டல்ல எம்பட பையன் எந்த நேரமும் பொட்டி டிவி பார்த்துட்டே வெட்டி முண்டமா கிடக்கறானுங்க. அவன் அவ்வளவுதானுங்க! அவனோட அண்ணனாட்டமே சீமெண்ணெய் ஊத்தி பத்த வச்சிக்கிட்டானுங்க ஒரு வருசம் மிந்தி. அண்ணங்காரன் செத்தங்காட்டி பரவால்லங்க. சொந்தத்துல தங்கச்சி முறையாவுற புள்ளையப்புடிச்சி லோடு பண்டியுட்டுட்டானுங்க. புள்ளையூட்டுல கட்டித்தரமாண்டன்னு சொல்லிட்டாங்க. தீயைப் பத்த வெச்சுட்டு செத்துட்டான். அந்தப்புள்ளையும் இவன் செத்துப்போனங்காட்டி அதும் தீயை பத்தவச்சிட்டு செத்துப்போச்சு!
இந்த சின்ன நாயும் பதினெட்டு வயசுல பாஞ்சு கிலோ மீட்டருக்கு அந்தப்பக்கத்துல் ஒரு புள்ளையப்புடிச்சி நொங்கீட்டான். கலியாணம் பண்டி ஸ்டேசனுக்கெல்லாம் போயி ஒரே அலைச்சலு போங்க! அப்புறம் பாருங்க மறுக்காவும் ரெண்டு வருசம் கம்பெனிக்கி பைக்கெல்லாம் வாங்கீட்டு போயிட்டு சத்தமில்லாம வந்துட்டு இருந்தானுங்க. திடீர்னு போன வருசம் தீயப்பத்தவச்சுட்டு கூத்தை ஆரம்பிச்சு ஆசுபத்திரில போயி கிடந்தான். கையி வெல்லுக எல்லாம் கொக்கரவட்டிக கணக்கா கோணச்சு கோணச்சு நிக்கிதுக. முதுவு நெஞ்செல்லாம் புருடு புருடா கிடக்கு. செலவு பண்டுனா எதோ சோத்தை அள்ளித்திங்கறாப்ல பண்டி உடறதா டாக்குட்டருங்க சொன்னாங்க. செலவுக்குக் காசு?
மடியில முடிஞ்சும், பேங்க்குல கொஞ்சம் பணமும் போட்டு வச்சிருந்தா எங்காயா. அவ தான் என் சம்சாரத்த கூட்டிட்டு போயி பணம் இரவத்தஞ்சாயிரம் எடுத்துக்குடுத்துருக்கா. அட வர்ற வழியிலயே செல்போனு, பாட்டலுகன்னு வாங்கீட்டு வந்துட்டாளுங்க இந்தக்குள்ளச்சி. சும்மா அம்மாவும் பையனும் நாலஞ்சி நாளு செரியாந்த குடியுங்க! ரெண்டுபேரும் குண்டி வெடிச்சு போயிருவாங்கன்னுதான் இருந்தேன். அந்த கொக்கரவட்டி வெல்லுங்களை வச்சுட்டு டம்ளரைக்கூட புடிச்சு குடிக்க முடியாதவனுங்க அவன். இவ டம்ளரைக்கொண்டி அவன் வாயில வெச்சு ஊத்தணும் பாத்துக்கங்க!
பாருங்.. பாருங்க சித்தெ இதெ! இந்த அக்குரமத்தெயெல்லாம் பாக்கணும்னு எம்பட தலையில எழுதீஇருக்குது பாருங்க! இவனும் இப்ப ஒரு பாட்டலு குடிச்சிட்டானாட்டம் இருக்குதுங்க! சைசா கட்டல்ல இருந்து எந்திரிச்சி வெளிய போறான் பாருங்க.. இனிப்பாருங்க எங்காச்சிம் போயி ரோட்டுல உக்கோந்துட்டு ஊட்டுக்குள்ள போன மனுசன் பைக்க எடுத்துட்டு போன பின்னாடிதான் வருவானுங்க. ஆயாள என்ன வேலை செய்ய உட்டுட்டுப் போறாம்பாருங்க ஈத்தரெ!
இரவது வயசுல நான் எப்பேருப்பட்ட பாட்டுக்காரன் தெரியுமுங்களா? இவன் இருவது வயசுல பண்ற கூத்தைப்பாருங்களேன். சாவுற வரைக்கிம் இனி இவன் ஒரு வேலையும் செஸ்சு பொழைக்க முடியாது. இவஞ்சோட்டுப்பசங்க ஊருக்குள்ளார எப்பிடி பொழைக்கிறாங்க தெரியுங்களா? எம்பட காலத்துல தான் ஒரு வேலியுஞ்சிக்காம காட்டுவேலைக்கிப் போனேன். இப்ப அப்படிங்களா? இந்திக்காரன் கூட இப்ப போனவாரம் வந்து கிழபக்கத்துக்காட்டுக்காரன் காட்டுல தட்டறுத்து போரு போட்டு குடுத்துட்டு போறான். ஊடுமேல ஊடு கட்டீட்டு இருக்கறாங்க சனம். வேல மேல வேல இன்னதுன்னு இல்லாம கெடக்குது. கொஞ்சங்கூட வெக்கமில்லாம போதையில போயி ரோட்டும்பேர்ல உக்கோந்து எந்திரிச்சுட்டு வந்து கட்டல்ல படுத்துக்கறது ஒரு பொழைப்பாங்க?
ஏனுங்க சாக்குப்பையில பாட்டலைப் பொறுக்கியாந்து கொட்டிக்கட்டி டிவீஎஸ்ல பொறவுக்கு கவுறு போட்டுக்கட்டி தினமும் ஒருநடையாச்சிம் கொண்டு போயி பழைய இரும்புக்கடையில போட்டுருவனுங்க நானு. நோம்பி நாள்னா ரெண்டு தாட்டிக்கூட கொண்டி போடுவனுங்க. சாக்குப்பையில முன்னூறு முன்னூத்தம்பது பாட்டலு போட்டு கட்டலாமுங்க. இந்தக்கடைய சுத்திலும் அவத்திக்கி வேப்பை மரங்க குட்டான் குட்டானா நிக்கிதுங்க. ஒவ்வொரு மரத்துக்கடியிலும் பன்னண்டு மணியிலிருந்து பத்துமணி வரைக்கிம் குக்கீட்டு குடிப்பாங்க.
பெரிய மனுசங்க கார்ல வந்து அதை நிப்பாட்டிட்டு சம்மணம் போட்டு உக்கோந்து குடிப்பாங்க. ஆனா அவங்க வாங்குற பாட்டலுங்க வேற டிசைனா இருக்கும். அதுங்க ஆவாது. இந்தப்பொழப்புக்கே நாலு பேரு.. ‘என்னடா ஒடக்காயி.. பாட்டல் பொறுக்கி தினமும் ஆயிரம் ரூவா சம்பாதிக்கிறே.. உன்னையாட்டமே நாங்களும் பாட்டல் பொறுக்க வந்துடலாம்னு பாக்கோமடா!’ அப்பிடிம்பாங்க. பொறாமைங்க!
பாட்டல் பொறுக்கியே நானு கோடீசுவரன் ஆயிடுவன்னு நினைக்கிறாங்க. நூறு ரூவாய்க்கி பெட்ரோலு போட்டன்னா மூணு நாளைக்கி வண்டி ஓடுமுங்க. கணக்கு போட்டுட்டு ஓட்டுறேன். இனிப்பாருங்க வண்டீல பொறவுக்கு டயரு மொண்ணை பாம்பாட்டம் இருக்குது. அதை மாத்துறதுக்கு காசு வேணும்.
எங்கம்மா செத்தப்ப கடனு வாங்கினதா சொல்றாளுங்க ஊட்டுக்காரி. இவளும் வந்த புதுசுல அங்கீம் இங்கீம் பல வேலைக்கி போயிட்டு வந்துட்டு தான் இருந்தாளுங்க. கடேசியா காட்டு வேலைக்கி போறதைக்கூட உட்டுட்டு கம்பெனிக்கி போனாளுங்க. பையன் இப்பிடி பண்டுனதுல இருந்து அவனுக்கு சேவகம் பண்டீட்டு ஊடே கதின்னு படுத்துட்டா.
இனியெல்லாம் அவ வேலைக்கி போவ மாட்டாளுங்க. பையனும் அவ்வளவுதான். எங்கம்மாவுக்கு நானு ஒரே பையன். என்னையப்பத்தி அதுக்கு நல்லாத்தெரியும். எங்கையில ஒன்னுமிருக்காதுன்னு எங்கம்மாளுக்கு தெரியாதுங்களா? அவ எழவை எடுக்க அவ தலையணையில பஞ்சுக்குள்ள பணம் வச்சிருந்தாளுங்க. இவ எங்கிட்ட கடனை வாங்கிப் பொணத்தை எடுத்தேன்னு சொல்றா!
ஒரு நாளு மப்புல ‘டேய் பாட்டல் பொறுக்கி.. பையன் குடிக்கோணுங்கறான். இந்தா அம்பது ரூவா இருக்குது.. மிச்சத்தெ நீ போட்டு வாங்கீட்டு சீக்கிரமா வந்து சேருன்’னு நிக்க்கிறா என் முன்னாடி பேயாட்ட! எந்திரிச்சி நாலு மிதி உட்டனுங்க! ‘கொல்றாண்டா! கொல்றாண்டான்னு’ பையனை கூப்புடறா. ஆமா, அவன் மளார்னு எந்திரிச்சி வந்து இவளை காப்பாத்திடுவான். ஆயாளுக்கு மிதி உழுகுதுன்னு அவன் எந்திரிச்சி வந்துகூட பாக்கலைங்க! நல்லா நெஞ்சு நெஞ்சா கீழ கெடந்தவளை நாலு மிதி உட்டேன். எத்தனை வருசத்து கோவங்கறீங்க எனக்கு.
அப்புறம் நாலஞ்சி நாளு சோறும் ஆக்குல ஒன்னும் ஆக்குல அவ. நெஞ்சு வலி, அந்த வலி இந்த வலின்னு கவுருமெண்டு ஆஸ்பத்திரிக்கி போயிட்டு போயிட்டு வந்து படுத்தே கிடந்தா. இந்தபுட்டுர் பைக்கில வர்றவங்க செரியா இந்தப்பக்கம் இப்பெல்லாம் வர்றதில்லையாட்ட இருக்குதுங்க! ரெண்டுமாசமா ஒரு ஆளு நடமாட்டமில்ல. குடிக்கறதுக்கு பாட்டலும் வாங்கீட்டு வந்துட்டு.. அரிசிக்கிம் பருப்புக்கும் பணமும் கேட்டா யாருக்குங்க குடுக்குறதுக்கு பணம் கொட்டிக்கிடக்குது? அப்புறம் ஒரு ராசி வேணுமுங்கள்ல எதுக்கானாலும். இதே இத்துப்போன குடும்பம். சாவுமேல சாவு உழுந்த ஊடு. ஊடு கட்டுனப்ப உள்ளார சுண்ணாம்பு அடிச்சது. அவங்க வர்றப்பெல்லாம் ஆயா பாயுலயும், மகன் கட்டல்லயும் படுத்துட்டு டிவி பொட்டிய பார்த்துட்டே கெடந்தா, பூடை புடிச்ச ஊடுன்னு நினைப்பாங்களா மாட்டாங்களா? சொல்லுங்க நீங்களே!
ஊட்டுல கேஸ் அடுப்பு, குக்கரு போசி எல்லாத்தையும் கொண்டி வித்து ரெண்டு பேரும் குடிச்சி முடிச்சிட்டாங்க. ஊட்டுல நல்ல சாமானம் எல்லாத்தையும் கொண்டி வித்துட்டாங்க. டிவி பொட்டிய வித்தா ரெண்டு கோட்டருக்கு ஆவும். விக்க மாட்டீங்கறாங்க. மேல சுத்துற பேனை எப்ப கழட்டுவாங்கன்னு தெரியல. எம்பட டிவிஎஸ் பைக்கை வித்துப்போடுவாங்கன்னு மனசு சொன்னங்காட்டி வர்றவழியிலயே பஞ்சாயத்து தலைவரு ஊட்டுல கொண்டி அவரு காருக்கிட்ட நிப்பாட்டிட்டு ஊட்டுக்கு வந்துடுவனுங்க. வர்றப்ப நாலு வீட்டுச்சாமான் வாங்கிக் கொண்டாந்து வாசப்படியில வெச்சுட்டு படுத்துக்குவேனுங்க. அவ கையில பணமா குடுத்தா நேரா குடிக்கத்தான் போறாளுங்க. இப்ப சரியா ஊட்டுல திங்கறதில்லீங்க நானு. இருந்தா அவளே வட்டல்ல போட்டு எனக்குக் கொண்டாந்து நீட்டுவா.
ஏனுங்க.. இத்தனை சனம் இந்த ஒரு பாட்டலு கடையில தினமும் வந்து உக்கோந்து குடிக்குதுங்களே.. எப்பிடிங்க முடியுது? எங்க உள்ளூரு பொடிப்பசங்க கூட இங்க வந்து குட்டானா உக்கோந்துட்டு குடிச்சுட்டு போறானுங்க! ’மாமா.. பணமிருந்தா முன்னூறு ரூவா குடு.. அடுத்தவாட்டி நாங்க வர்றப்ப திருப்பி குடுத்துடறோம்’னு.. மாமா போடறானுங்க! ஊருக்குள்ள ஒடக்காயிக்கி இன்னிக்கி நல்ல சம்பாத்தியம்னு பேசுவானுங்க!
இன்னிக்கி பாட்டலு பொறுக்க சாயந்தரமா நாலு மணிக்கித்தான் வந்து சேர்ந்தனுங்க. வண்டியை கொண்டி பொட்டிக்கடைக்காரரு பொட்டிக்கிட்ட ஓரமா கொண்டி நிறுத்தீட்டு.. ‘அப்புறமுங்க.. ஏவாரமெல்லாம் இன்னிக்கி உங்குளுக்கு பரவால்லீங்களா?’ அப்பிடின்னேன்.
“எங்க ஒடக்காயி வேவாரம்? வெளியில இருந்து வர்றவங்க அவங்களே தீனியும் தண்ணி பாட்டலும் கொண்டாந்துடறாங்க.. வந்ததுல இருந்து டம்ளரு ரெண்டு குடுங்க, டம்ளரு மூனு குடுங்கன்னு வர்றாங்க.. வேவுச்சு கொண்டாந்த சுண்டலு குண்டான்ல அப்பிடியே கெடக்குது.. முந்தா நேத்து வாங்கி வச்ச வெள்ளரிக்காயிக சுருங்கி கெழவி கையாட்ட கிடக்குதுங்க.. கொலுமிச்சங்காயி வேணா மளார் மளாருன்னு போகுது. பாதி அறுத்து மொளகாப்பொடி தூவி குடுங்கன்னு சொல்றாங்க! பாதியை வச்சுட்டு நானென்ன பண்றது? பேசாம நானும் உன்னோட சேர்ந்து பாட்டலு பொறுக்க வந்துடலாம்னு இருக்கேண்டா ஒடக்காயி!’’
“ஆமாங்க.. நீங்க ஒருத்தருதான் பாக்கியா இருந்தீங்க.. நீங்களும் சொல்லிட்டீங்க! பாட்டலு பொறுக்க வர்றேன்னு!”
“பின்ன ஒரு பொழுதுக்கும் கூடி நானூறு ரூவா ஆகுது. நாளைக்கி ஞாயித்துக்கிழமை நாலு சனம் வரும். இரநூறு ரூவாயிக்காச்சிம் மாங்காயி, கொய்யான்னு வாங்கிட்டு வந்து கடையில போடணுமில்ல!”
’ஆமாங்க! ஆமாங்க’ன்னு சொல்லிட்டே சாக்குப்பையை தூக்கீட்டு கடைசிக்கோட்டு மரத்துக்கு நடந்தனுங்க! அங்கங்க மரத்துக்கடியில நாலு பேரு மூணு பேருன்னு வட்டம் போட்டு உக்கோந்து சொந்த விசயங்கள பேசிட்டு குடிச்சுட்டு இருந்தாங்க! ஓரமா தள்ளிக்கிடக்குற பாட்டிலை எடுத்து சாக்குக்குள்ளார போடனும்னா முன்னப்பின்ன என்னை பார்த்த மகராசனுங்களா இருந்தா ஒன்னும் சொல்ல மாட்டாங்க! ‘ஏண்டா ஒடக்காயி.. இப்பத்தான் வந்தியா? இந்த மரத்துக்கடியிலயே பத்துப்பாட்டலு கிடக்குமாட்ட இருக்குதே!’ அப்படிம்பாங்க. ‘ஆமாங்க மகராசரே!’ அப்படின்னு தான் சொல்லுவனுங்க. குடிச்சுட்டா நிறைய பேசுவாங்க.. அவங்களுக்கு பேச்சுத்துணைக்கி நின்னுட்டா எம்பட பொழப்பு போயிருமுங்க! இருட்டு கட்டீருச்சுன்னா பாட்டலெது பாம்பெதுன்னே தெரியாதுங்களே!
பாட்டல் பொறுக்கீட்டு இருக்கப்ப சிலபேருக்கு போதையில பாசம் அதிகமாயிருமுங்க! ‘நீ அரைக்கட்டிங்கி ஊத்திக்கடா ஒடக்காயி!’ அப்படின்னு நீட்டுவாங்க! ‘இல்லிங்க மகராசரே.. எனக்குக் குடிப்பழக்கமே இல்லீங்க!’ அப்படின்னு சிரிச்சமானிக்கி சொல்லீருவேன். உக்கார வச்சு ஊத்தியுட்டுட்டு அவிங்களுக்குள்ள சண்டையாயிப் போச்சுன்னா என்னையப் போட்டு மிதிப்பாங்க! அந்தப் பேரெழவெல்லாம் நமக்கெதுக்குங்க? நானே ரோட்டுச்சோத்தை தின்னுட்டு திரியறவன். தாங்குவனுங்களா?
அப்படித்தானுங்க நடுக்காட்டுல வந்து நின்னுட்டு சுத்திலும் பார்த்தேன். எந்த மரத்தடி காலியா கிடக்குதுன்னு தான் பார்த்தனுங்க! மேகோட்டுல ரெண்டு மரம் காலியா கிடந்துச்சு! அதுங்களப்பார்த்து நடையுட்டேன். நான் வந்து சேர்ந்தப்ப நாயிங்க காலை நீட்டியுட்டு படுத்துக்கெடந்துச்சுங்க! அரவங்கேட்டு ரெண்டு கண்ணை முழிச்சு பார்த்துச்சுக! ரெண்டும் பொட்டைங்க! ‘அட ஒடக்காயா?’ அப்படின்னு பார்த்துட்டு மூழி முறிச்சுட்டு அப்பிடியே கிடந்துச்சுங்க! ‘மத்தியானமே வவுத்துக்கு தீனிய ரொப்பீட்டீங்களா? அதான் சாயந்திரமா ரெஸ்ட்ல இருக்கீங்களா?’ அப்படின்னு அதுங்க கிட்ட பேசிட்டே பாட்டலை எடுத்து சாக்குப்பையில போட்டனுங்க!
திடீருன்னு ஒரு பொட்டை எந்திரிச்சதீம் கிழக்க பார்த்து ஓடுச்சு! இதுக அப்படித்தான். சித்தங்கூரியம் படுத்துக்கிடக்கும். அப்புறம் வயித்து நினைப்பு வந்ததீம் ‘தப்புறு குப்புறு’ன்னு ஓடி புதுப்பார்ட்டிங்க உக்காந்திருந்தா அங்க போயி நின்னுட்டு மோப்பம் புடிக்கும். அப்பத்தான் பார்த்தனுங்க.. அந்த பொட்டை எந்திரிச்சி ஓடுன இடத்துல ஐநூறு ரூவா நோட்டு கிடக்குது!
அடங்கொப்புறானே!ன்னு மடிச்சிக்கிடந்ததை எடுத்தா மூணு நோட்டுக இருக்குது! அடிச்சிதுடா இன்னிக்கி லக்கி ப்ரைசு! அதை எடுத்துக்கொண்டு போயி மேக்கெ கொஞ்சதூரம் வந்து பெரிய ஓடக்கல்லுக்கு அடியில தூக்கி திணிச்சுட்டனுங்க! இப்பிடி மகராசருங்க குக்கீட்டு குடிக்கப்ப அம்பது, பத்துன்னு சில்லறைய போதையில விட்டுட்டு போயிருவாங்க. அதையெல்லாம் ஒரு கணக்குன்னு பாக்க மாட்டாங்க! ஆயிரத்து ஐநூறு ரூவாய்ங்க இது! திரும்பியும் இங்க வந்து தேடுவாங்க! பாட்டல் பொறுக்கி நானு. எங்கிட்டத்தான் இருக்குமுன்னு நேரா வருவாங்க! கல்லுக்கடியில வெச்சுட்டம்னா எப்ப வேணாலும் வந்து எடுத்துக்கலாம். எனக்குன்னா ஒரே படபடப்பா இருக்குதுங்க! ஆயிரம் ரூவாய ஒட்டுக்கா கையில வச்சிருந்ததெல்லாம் வாட்ச்மேனா கம்பெனிக்கி போயிட்டிருந்தப்பத்தானுங்க.
எப்பயும் போல நிதானமா பாட்டல்களை பொறுக்கி சாக்குப்பையில போட்டு முதுவுல போட்டுட்டு போயி பொட்டிக்கடைக்கிட்ட இறக்குனனுங்க! இன்னொரு அரிசிச்சிப்ப சாக்கை தூக்கிட்டு மறுக்காவும் பொறுக்கிட்டு வரலாம்னு கிளம்புறப்ப புட்டுர் பைக்கில ரெண்டு பேரு வந்து இறங்குனாங்க! ‘எட்றா பணத்தை எரப்பானிக்கி பொறந்தவனே!’ அப்படின்னு உட்டான் பாருங்க ஒருத்தன் என் காதுமேல ஒரு அப்பு! ‘ஐயோ சாமீ’ன்னு கொரலு குடுத்துட்டே திருகீட்டு போயி உழுந்துட்டனுங்க!
“கடை முன்னாடி ரவுசு பண்டீட்டு இருந்தீங்கன்னா எனக்கு ஆவாதப்பா! அக்கட்டால சித்த போங்க! போலீசு செக்கப்புக்கு வர்ற நேரமிது! நீங்க பாட்டுக்கு சத்தம் போட்டுட்டு நின்னீங்கன்னா ‘பொட்டிக்கடையை இனிமே தொறக்கவே வேண்டாம்னு சொல்லிருவாங்க!” என்று பெட்டிக்கடைக்காரர் சொல்லவும் அவர்கள் நிதானித்தார்கள். ‘பணம் ரெண்டாயிரத்தை குடிச்ச எடத்துல உட்டுட்டு போயிட்டமுங்க! இந்தாளுதான் பாட்டல் பொறுக்க அவத்திக்கி போயிருக்கான்.. இவன் கிட்டத்தான பணமிருக்கும்!”
“அதுக்குன்னு வயசான மனுசனை வந்ததீம் அப்பட்டம் போடறீங்க? செத்துக்கித்து போயிட்டான்னா நானுல்ல ஸ்டேசனுக்கும் கோர்ட்டுக்கும் செலவு பண்டீட்டு அலையணும்! கடைய வுட்டு போங்க சித்த அக்கட்டால! நாயமா நின்னு ஏப்பா எடுத்தியா? பார்த்தியான்னு கேக்குறதை உட்டுட்டு.. குடிச்சிட்டா எல்லாரும் ஊட்டுல போயி பிய்யவா திங்கறாங்க? சோறுதான திங்கறாங்க!”
“பொட்டிக்கடைக்காரரே! நீங்க சித்த கம்முன்னு இருங்க! சொல்லிட்டீங்கள்ல அக்கட்டால போவச்சொல்லி.. யோவ் வாய்யா நீயி..”ன்னு சொல்லி என்னை தூக்கி நிறுத்தி பொட்டிக்கடைய விட்டு தள்ளி ஒரு மரத்தடிக்கி ஓட்டீட்டு வந்துட்டாங்க!
“பணத்தை எடுத்தியாடா?”
“என்னுங்கோ மகராசரே பணம் பணமுங்கறீங்கொ! இப்பத்தானுங்க வந்து இவத்திக்கி ஏழெட்டு மரத்துக்கடியில பாட்டல்களை பொறுக்கியாந்து வண்டிக்கிட்ட வச்சுட்டு சின்னச்சாக்கை எடுத்துட்டு கிளம்புனனுங்கொ!”
“இப்பிடிக்கேட்டா பணத்தை குடுக்க மாட்டான் மாப்ளெ இவன்! இன்னொன்னு உடு அவன் காது மேல! அவன் துணியை மொத அவுரு.. லுங்கிய கழட்டு..”
பாருங்க இவிங்க அக்குரமத்தெ! லுங்கிய இழுத்து உட்டுட்டாங்க ஒரு மவராசரு! கோமணம் கட்டியிருந்தேன் நானுங்க! மேல பனியன்ல இருந்த ஜோப்பை கையை உட்டு தேடி டர்ருன்னு கிழிச்சிப்போட்டாப்லைங்க அந்த மவராசரு. கோமணத்தையும் உருவீட்டுத்தான் போதையில மறுவேலை பாப்பாங்கன்னு நானு குந்த வச்சு உக்கோந்துட்டனுங்க!
அப்புறம் நாலு சனம் அவத்திக்கி எனக்கு இல்லாமயா போயிடுச்சுங்க! என்ன சத்தம்னு வந்து குமிஞ்சிட்டாங்க! ‘எடுத்திருந்தா குடுத்துரு ஒடக்காயி.. பாவம் அவங்க என்ன சோலிக்கி வாங்கி வச்சிருந்தாங்களோ!’ அப்படின்னாப்ல ஒரு மகராசரு. ‘குடிச்சிட்டா அவ்ளோ போதை ஏறுதா உங்களுக்கெல்லாம்? பாக்கெட்ல இருக்கிற பணம் எப்பிடி குடிக்கிற எடத்துல உழுந்துடும்? வெதைச்சா மொளைக்கிற வெதையா அது? நீங்க போன பின்னாடி யாராச்சிம் அங்க உக்கோந்து குடிச்சுட்டு எடுத்துட்டு போயிருப்பாங்க! அவங்களை யாருன்னு காங்குறது? பாட்டல் பொறுக்குற ஒடக்காயப்போயி அடிக்கீங்க?’ ’ஒடக்காயி அன்னிக்கிக்கூட மரத்துக்கடியில கெடந்த டச்சுப்போனை எடுத்தாந்து கடை சேல்ஸ் மேனேஜர்கிட்ட குடுத்துட்டு போனவனப்பா!’
அரைமணி நேரத்துக்கும் மேல ஆயிடுச்சுங்க இந்த பஞ்சாயத்து முடியறதுக்கு. இருட்டும் கட்டீருச்சு! நான் அந்த மரத்துக்கிட்டயே பாட்டில் பொறுக்க இன்னும் போவே இல்லீங்க மவராசரேன்னு தரையில அடிச்சி சொல்லிட்டேன். அப்புறம் மெதுவா கூட்டம் கலைஞ்சிட்டுது. பணம் இல்லன்னு அதை தொலைச்சவங்களும் போயிட்டாங்க. நானு மெதுவா எந்திரிச்சி தூரமா கிடந்த லுங்கியை எடுத்து கட்டிக்கிட்டேன். பொட்டிக்கடைக்காரரு சார்ஜர் லைட்டு போட்டிருந்தாரு. தண்ணிப்பாட்டலு ஒன்னு குடுக்கச்சொல்லி வாங்கி மூஞ்சியை துளி கழுவீட்டு குடிச்சிட்டு கேனை தூரமாப்போட்டேனுங்க.
“இனியெங்க இருட்டுல போயி நீயி பாட்டலு பொறுக்கப்போறே ஒடக்காயி.. பொறுக்குன மூட்டையை கொண்டுபோயி போட்டுட்டு நாளைக்கி வா!”
“ஆமாங்க பொட்டிக்கடைக்காரரே! காத்தால யாரு மூஞ்சீல முழுச்சனோ.. இப்பிடி ஈடு வாங்கிட்டு நிக்குறேன்!”
“அவனுங்க பிச்சிப்பாளையத்துல இருந்து வர்ற பசங்க தான். போனமாசம் ‘இதா இப்ப வந்து குடுத்துடறேனுங்கண்ணான்னு ஒரு லிட்டர் தண்ணிக்கேனும், ரெண்டு டம்ளரும் கொய்யா ரெண்டும் வாங்கிட்டு போனானுக!.. இன்னும் காசு குடுக்கறானுங்க.. அட வாங்கினாப்போச்சாது.. மறுக்கா கடைப்பக்கமே வர்றதில்ல ஒடக்காயி!’ குடிச்சுப்போட்டு போயி எந்த ஓட்டையில பணத்தை உட்டானுங்களோ.. இங்க வந்து சத்தம் போட்டுட்டு சண்டெக்கட்டீட்டு போறானுங்க.. சேரி நீ வண்டீல தூக்கி வச்சி கட்டீட்டு போ.. நான் ஏழரை மணி வரைக்கும் பார்த்துட்டு லைட்டு சார்ஜ் மூஞ்சதீம் கடையை சாத்தீட்டு போறேன்!”
அவிங்க சொல்றதும் சரிதான்னு பெரிய மூட்டையை இறுக்கிக்கட்டி தூக்கி டிவிஎஸ்சில் பொறவுக்கு வச்சுக்கட்டி அசையுதா சாயுதான்னு பார்த்துட்டு வண்டியை நேரா எடுத்துட்டு கிளம்பிட்டனுங்க! இரநூத்தம்பது பாட்டலுதான் இருந்துச்சுன்னு பணத்தை வாங்கிட்டு நேரா புரோட்டா கடையில மூனு புரோட்டா பார்சல் கட்டீட்டு கடைக்கே வந்துட்டனுங்க! பின்ன ஆயிரத்தி ஐநூறு ரூவாயை கல்லுக்கடியில உட்டுட்டு போவமுடியுங்களா ஊட்டுக்கு? நேரா டாஸ்மார்க்கு கடைக்கி போயி நூத்தம்பது ரூவா சரக்கு வாங்கிட்டனுங்க! ‘ஒடக்காயி.. என்ன சத்தமா கெடந்துச்சாட்ட இருந்துதா?’ அப்படின்னாரு மேனேஜரு.
“ஆமாங்க எஜமானரே.. பணத்தைக் கூடப்போட்டுட்டாங்களாம்.. நீ எடுத்தியான்னு என்னைய அடிச்சுப்போட்டாங்க!”
“பொட்டிக்கடைக்காரரு ஒன்னுஞ் சொல்லலியா?”
“அவரு என்னத்தீங்க சொல்லுவாரு.. அவரு அப்பலையாவே பூட்டீட்டு போயிட்டாராட்ட இருக்குது.. வயித்துப்பசிங்க.. நீங்க ஏவாரத்தப்பாருங்க!’’’ அப்பிடின்னுட்டு வெளிய வந்தேனுங்க! இந்த நேரத்துல காட்டுக்குள்ளார இருட்டுல ஒருத்தரும் உக்கோந்து குடிக்க மாட்டாங்க! எல்லா மரமும் இருட்டுல சும்மாதான் நிக்கும். டிவிஎஸ்ல இருந்த புரோட்டா பார்சலை எடுத்துட்டு வண்டிக்கவர்ல இருந்த தண்ணிக்கேனை தூக்கீட்டு மேக்கால நடந்தனுங்க!
எப்பயும் பார்த்தீங்கன்னா சாமத்துல இந்தக்கடைக்கி வரமாட்டனுங்க. ரோட்டும்பேர்ல இருக்குற கடையிலயே அரை கட்டிங்குக்கு ஆள் கிடைச்சா சேர்ந்து ஒன்னா வாங்கி ஆளுக்கு பாதி குடிச்சுட்டு போறவனுங்க நானு. இன்னிக்கி ரொம்ப வருசங்கழிச்சி ஈடு தின்னுட்டனுங்களா.. ஒரு கோவம் தான். கோட்டரை அன்னாந்து ஊத்தீட்டு புரோட்டாவைத் தின்னுட்டு கையை கழுவீட்டு எந்திரிச்சனுங்க.
நல்ல சுத்தலா இருக்குது! கல்லைத்தேடிப்போயி பெறட்டி உட்டுட்டு பணத்தை எடுத்து பாகெட்டுல வச்சுட்டு நேரா டிவிஎஸ் வண்டிக்கி வந்தனுங்க! டிவிஎஸ் வண்டியில இடது கைப்புடியை வெளிய இழுத்து கொழாய்ல பணத்தை திணிச்சி கைப்புடியை உள்ளார சொருவீட்டு கிளம்பிட்டனுங்க!
மெயின் ரோட்டுக்கு வந்து அழகா எதிர்க்க வர்ற வண்டீக லைட்டு வெளிச்சத்துக்கு சிரமப்பட்டு ஓரமா ஓட்டீட்டு வந்துட்டனுங்க! இனிப்பாருங்க எங்கூரு போற ரோட்டுல சனமே இருக்காது! ஆனா டிச்சுக்குழி இருக்குது. பார்த்து நிதானமாத்தான் போயிக்கோணும். ஆனாப்பாருங்க தலைசுத்தல்ல டிச்சுக்குள்ள வண்டியை உட்டுட்டேன்! உட்டது உட்டமானிக்கி நேரா போயி நின்னுச்சு வண்டி. ஆனா நான் தெம்பக்கமா சாயங்காட்டி அதும் தெம்பக்கமா சாய்ஞ்சு என்னெ அமுத்தீட்டுது!
ஒருமணி நேரங்கழிச்சி ரோட்டுல போன எங்க ஊரு ஆளுங்க பார்த்து என்னை தூக்கி உட்டு வண்டியை மேல எடுத்தாந்தாங்க! நல்லவேளை.., வண்டீல பெடல் கட்டை மட்டும் பிஞ்சி போச்சு. எனக்கு இடதுபக்கமா தோள்பட்டையில் விண்ணுன்னு ஒரு வலி. ‘ஏண்டா ஒடக்காயி.. ஆள் இருக்குற சைசுக்கு உனக்கெல்லாம் என்னடா குடி?’ அப்படின்னு கேட்டானுங்க ஒருத்தன்.
‘ஆமா, எனக்கெல்லாம் என்ன குடி வேணும்னு கிடக்குது! இப்ப குழியில உழுந்து செத்திருந்தா மறுக்காவும் ஒரு எழவுதான எம்பட ஊட்டுல! ஆவாது! இந்தக்கருமம் இத்தோட போச்சாது!’ மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டேன். இனிமே நானு குடிக்க மாட்டனுங்க மவராசரே!
000