போலச் செய்பவர்
உடலெங்கும் உப்பு பொரிய வேலையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தேன். நீண்ட நாளின் களைப்புக்கு ஆசுவாசமாக டவுன் பஸ்ஸில் ஜன்னலோர இருக்கை கிடைத்தது. அதிக கூட்டமில்லை. இருக்கைக்கு ஒருவர் என்ற வீதமாகவே ஆட்கள் அமர்ந்திருந்தனர். பேருந்தின் டியூப் லைட்டிலிருந்து கசிந்த மங்கிய புராதன வெளிச்சம் காலக் குழப்பத்தை விளைவித்தது. அதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக தல்லாக்குளம் நிறுத்தத்தில் அவர் ஏறினார்.
வேகமாக ஏறியவர் நேராகப் பேருந்துக்கு மத்தியிலிருந்த கம்பியின் மேல் முதுகை வாகாகச் சாய்த்து நின்றுகொண்டார். தூரத்திலிருந்து பார்க்கும்போதே தெரிந்துவிட்டது. ஏறியவர் வெள்ளை நிறத்தில் கோட், பூட்ஸ் அணிந்து நடிகர் கமல்ஹாசனின் இரட்டை போல இருந்தார். அதுவும் எண்பதுகளின் கமல்ஹாசன். அவரைப் போலவே அலையலையாய் பாவும் சிகை, முகம், குறிப்பாக நல்ல முட்டைக் கண்கள், நிறம் மட்டும் ஒரு பூச்சுக் குறைவு. அதை நிவர்த்தி செய்யும் பொருட்டோ என்னவோ ரோஸ் பவுடரால் மேக்கப் போட்டிருந்தார். அதைக்கூடக் கலைக்கவில்லை.
பார்ப்பதற்கு என்றில்லை. அவர் கம்பியில் சாய்ந்து நிற்கும் பாவனை, கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கும்போது காற்றில் ஆடிய கைகள் என ஒவ்வொன்றிலும் கமலைப் பிரதி செய்தார். பேருந்திலிருந்த அத்தனைப்பேரும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம். சிலர் எந்தக் கூச்சமும் இல்லாமல் நேராகவும் என்னைப் போன்ற சிலர், பேருந்தின் பெரிய கண்ணாடி வழியே தெரியும் சாலையைப் பார்ப்பதைப் போன்றும் அவரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தோம். அவருக்கும் அது தெரிந்தே இருந்தது. அதனால்தானோ என்னவோ அவர் பேருந்திலும்கூட கமல்ஹாசனைப் போலவே நின்றுகொண்டிருந்தார்.
தற்செயலா அல்லது வேண்டுமென்றே டிரைவர் போட்டாரா என்று தெரியவில்லை. ‘நீல வான ஓடையில்’ பாடல் பேருந்தில் ஒலிக்கத் தொடங்கியது. அதைக் கேட்டதும் அவர் முகம் சட்டென மலர்ந்ததை நான் கவனித்தேன். அது அந்தப் பாடலில் ஶ்ரீதேவியை கமல் பார்க்கும்போது அவர் முகம் மலர்ந்ததைப் போலவே இருந்தது. ஸ்பீக்கரில் ஓடிய பாடலோடு சேர்ந்து தானும் அதைப் பாடினார். அந்தப் பாடலில் கமல் காட்டும் அத்தனை முக பாவனைகளையும் கொண்டுவந்தார். சில இடங்களில் சற்று மிகையாகவே செய்தார். இடையில் என்னைப் பார்த்து ஒரு முறை சிரித்தார்.
மெதுவாக நடந்து பின்னால் என் இருக்கைக்குப் பக்கத்தில் வந்தார். என்னிடம் புருவத்தை உயர்த்தி உதடுகளைக் கீழே இறக்கி எனக்கு அருகில் உட்கார்ந்து கொள்ளலாமா என்று ஜாடையில் கமலைப் போலவே கேட்டார். நான் இருக்கையிலிருந்த என்னுடைய சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கீழே வைத்து அவருக்கு வசதி பண்ணிக்கொடுத்தேன். அவர் தன் கோட்டைக் கழற்றி மடியில் வைத்துக்கொண்டார். அவரிடமிருந்து காட்டமான வாசனைத் திரவியத்தின் மணம் எழுந்து வந்தது.
நன்றி சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, “இப்போதான் ஒரு கச்சேரி முடிச்சுட்டு வரேன்.” என்றார். இதைச் சொல்லும்போதுகூட கமலைப் போலவே குரலில் ஏற்ற இறக்கத்துடன் பேசினார்.
“எப்போயிருந்து இதைப் பண்றீங்க?”
“சின்ன வயசுல இருந்தே எனக்குக் கமல்ன்னா ரொம்பப் பிடிக்கும். விளையாட்டா அவர் மாதிரி பண்ணிட்டு இருப்பேன். ஒரு நாள் திருவிழா மேடையில ஏத்திவிட்டாங்க. அப்போ ஒரே கைத்தட்டு, வரவேற்பு. அப்படியே இதுக்குள்ள வந்துட்டேன்.” இதை இவ்வளவு கோர்வையாகச் சொல்லவில்லை. கமலைப் போல இடைவெளி விட்டு விட்டு திக்கித் திக்கிச் சொன்னார்.
“வேற ஏதும் வேலை பார்க்குறீங்களா?”
“ஆமாமா.. இதை நம்பிச் சாப்பிட முடியாது சார். வீட்டுப் பக்கத்துல எலக்ட்ரானிக்ஸ் ரிப்பேர் ஷாப் ஒண்ணு வச்சுருக்கேன். பேரு குருதிப்புனல் எலக்ட்ரானிக்ஸ்.” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். அதுவும் கமல் சிரிப்பதைப் போலவே இருந்தது.
“நான் கார் மெக்கானிக். அபூர்வ சகோதரர்கள் கமல் மாதிரி.” என்று சொல்லிச் சிரித்தேன். இதைச் சொன்னதும் அவர் நெருக்கமாக உணர்ந்திருக்க வேண்டும். என்னைப் பார்த்து வாஞ்சையாகச் சிரித்தார்.
என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர் தன் பெயர் “ராஜேஷ் கமல்” என்றார். அதைச் சொல்லும்போது முகத்தைக் கையால் தடவிக்கொண்டது எல்லாம் அப்படியே கமல்தான்.
“எனக்கும் ரெண்டு பெண் பிள்ளைங்க சார்” என்றார். நான் தனியன் என்று சொல்லியும் அவர் ‘எனக்கும்’ என்று சொல்லியதில் யாரை உடன் சேர்த்துக்கொண்டார் என்பது புரிந்தது. நான் அவரைப் பார்த்துச் சிரித்தேன்.
“இப்படியே பழகிட்டீங்களோ” என்றேன். கேட்ட பிறகுதான் அந்தக் கேள்வி அவரைச் சங்கோஜப்படுத்துமோ என்று யோசித்தேன்.
“ஆமாமா.. கடைக்கு வர்றவங்ககூட நான் இருந்தாத்தான் வராங்க. அதுவும் தினம் ஒரு கெட்டப்ல இருக்கணும்னு வேற எதிர்பார்க்குறாங்க. அதுல என்னவோ அவங்களுக்கு ஒரு சந்தோசம். அதை ஏன் நாம கெடுக்கணும்!” என்றார்.
இதைச் சொல்லும்போது சலிப்போ விரக்தியோ துளியும் இல்லை. மாறாக உற்சாகமாக இருந்தார். எப்படி ஒருவர் தானாக இல்லாமல் இன்னொருவரைப் பிரதி செய்வதை இவ்வளவு கொண்டாட்டமாகச் சொல்ல முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவர் வீட்டுக்குப் போனதும் எப்படி தன் மனைவியை எதிர்கொள்வார்? தன் குழந்தைகளை எப்படி அள்ளிக் கொஞ்சுவார்? என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
பேருந்தில் ‘மாருகோ மாருகோ’ பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது பேருந்து முழுவதும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது. பாட்டுச் சத்தம்கூட குறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதற்குத் தன் கைகளால் தாளம் தட்டிக்கொண்டிருந்தார்.
“கமலை நேர்ல பார்த்துருக்கீங்களா?” என்று கேட்டேன்.
அவர் உதட்டைப் பிதுக்கி, ‘இல்லை’ என்பதாகத் தலையாட்டினார்.
நான் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்ததும் எழுந்து வெளியேறினேன். பேருந்து என்னைக் கடந்து போனபோது கவனித்தேன் அவர் காலைத் தளர்த்தி முன்னே நீட்டித் தலையைப் பேருந்து இருக்கையின் மேல் சாய்த்துக்கொண்டு ராஜேஷாக ஆகியிருந்தார்.
O
அத்தை வீடு
அத்தை வீட்டுக்கு வந்திருக்கிறேன். கரிசல் பூமியில் இந்த வீட்டைப் போலக் குளிர்ச்சி நிறைந்த ஒரு வீட்டை இதற்கு முன்போ பின்போ கண்டதில்லை. வீட்டை எடுத்துக் கட்டும்போது வேண்டுமென்றே உத்தரத்தை உயர்த்திக் கட்டியதும் வெயில் நேரடியாக இறங்காத வண்ணம் அமைக்கப்பட்ட சுவர்களும் அதற்குப் பிரதான காரணங்கள்.
அத்தை இருப்பது சேத்தூரில். அந்த ஊரில் அப்படி ஒரு வீட்டை யாரும் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க மாட்டார்கள். வரிசையாக ஐந்தாறு லாரிகளை நிறுத்தி வைக்கும் அளவுக்குப் பரந்த தெரு. அத்தெருவில் திண்ணை வைத்த வாதாம் மரத்தை ஒட்டியிருக்கும் சந்திலிருக்கிறது அத்தையின் வீடு. மாமாவுடைய பூர்வீக வீடு. அது எளிய ஆஸ்பெட்டாஸ் சிமெண்ட் ஓடு போட்ட வீடாக இருந்த நாளிலிருந்து தெரியும். மாமா வேலைக்காக ஓமனுக்குப் போன பிறகு, ஓட்டைப் பிரித்து காங்கிரீட் போட்டு மாடி எழுப்பிக் கட்டிவிட்டார்கள். பின்னால் விட்டிருந்த தோட்டத்தையும் இழுத்துப் பெரிதாக கட்டினார்கள். அது எல்லோரும் செய்வதுதான் என்றாலும் பிரத்தியேகமாக ராஜஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்ட மார்பிள், தேக்கால் இழைக்கப்பட்ட கதவுகள், ஜன்னல்கள், உத்தரக் கட்டைகள் என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தார் மாமா. சுண்ணம் அடித்த சுவர்களை மட்டுமே பார்த்திருந்த எனக்கு வளவள பெயிண்ட்களை சுவரிலும் அடிப்பார்கள் என்பதே அத்தை வீட்டைப் பார்த்துத்தான் தெரியும்.
அத்தை வீடு எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. ஒரு முறை படுக்கை அறையின் சுவரை ஒட்டிப் போடப்பட்டிருக்கும் கட்டில் இன்னொரு முறை வரும்போது அறையின் நடுவில் போடப்பட்டு கட்டிலுக்கு இரண்டு பக்கமும் சின்ன மர ஸ்டூல்கள் வைக்கப்பட்டிருக்கும். சாப்பாட்டு மேசை அடுப்படியை ஒட்டி இருக்கும். மறுமுறை வரும்போது அது ஹாலுக்கு வந்திருக்கும். திரைச் சீலைகள், சோபா கவர்கள் என எல்லாமும் மாறும். சாமி செல்ப்பில் இருக்கும் சாமிப் படங்கள்கூட வரிசை மாறியிருக்கும். புதியன புகும்.
அத்தைக்கும் மாமாவுக்கும் குழந்தைகள் கிடையாது. மாமாவும் வெளிநாட்டுக்குக் கிளம்பிவிட்டால் அத்தை மட்டும்தான் வீட்டிலிருப்பாள். அவள் எப்படி தனியாளாகப் பீரோவையும் கட்டிலையும் நகர்த்திப் போடுகிறாள் என்று ஆச்சரியமாக இருக்கும்.
மாற்றிப் போடுவது ஒரு பக்கம் என்றால், வீடும் படு சுத்தமாகப் பராமரிக்கப்படும். ஓர் இடத்தில் தூசையோ அழுக்கையோ பார்க்க முடியாது. அத்தனைக்கும் பெரிய வீடு. ஆள் வைத்துப் பராமரிப்பதெல்லாம் இங்கே வழக்கத்திலேயே இல்லை. வெறுங்காலில் நடந்தால் வழுக்கும் அளவுக்குச் சுத்தம் பேணப்படும்.
“அத்தே.. நீ சும்மாவே இருக்க மாட்டியா?”
“ஏன்டா.. நான் என்ன பண்ணேன்?”
“இங்க இருக்கிறத எடுத்து அங்க வைக்கிறது. அங்க இருக்கிறத எடுத்து இங்க வைக்கிறது. எப்போ பார்த்தாலும் எதையாவது மாத்தி மாத்தி வச்சுடுற. அடுத்த முறை மாமா வரும்போது வேற ஏதோ வீட்டுக்கு வந்துட்டமோன்னு குழம்பப்போறார்.”
இதைக் கேட்டதும் கலகலவென சிரித்தாளே தவிர வேறெதையும் சொல்லவில்லை. என் தலைமுடியைக் கலைத்துவிட்டு டீ வைக்கப் போய்விட்டாள்.
என்னுடைய பள்ளியில் படித்த நண்பன் லிங்கம் அதே கிராமத்திலிருந்தான். அவனைப் பார்க்கும் சாக்கில் அடிக்கடி அத்தை வீட்டுக்கு வருவேன். ஒவ்வொரு முறையும் ஒருவிதமாகக் காட்சி தரும். எப்போதும் திகைப்பாக இருக்கும்.
கல்லூரி, வேலை, திருமணம் என்று அங்கே போய் வருவது குறைந்து போனது. இடையில் அப்பாவுக்கும் மாமாவுக்கும் பூர்வீகச் சொத்து சம்பந்தமாக ஏதோ மனஸ்தாபம் உண்டாகி இரு வீட்டுக்கும் பேச்சு வார்த்தையே நின்று போயிருந்தது. ஆனால், நான் போய் வந்துகொண்டுதான் இருந்தேன். ஒவ்வொரு முறையும் அந்த வீட்டின் தன்மை மட்டும் மாறவில்லை.
கடைசியாக ஊருக்கு வந்திருந்தபோது லிங்கம்தான் அத்தைக்கு உடல்நலம் சரியில்லை என்ற தகவலைக் கூறினான். அம்மாவிடம் கேட்டபோது உதட்டைப் பிதுக்கினாள்.
போய் பார்த்தேன். சிறுநீரகங்கள் பழுதாகி டயாலிசிஸ் செய்துகொண்டிருந்தாள் அத்தை. ரத்தம் சுண்டி, ஆளே முற்றிலுமாக மாறியிருந்தாள். வாடி வதங்கி அவளை அப்படிப் பார்த்ததேயில்லை. மாமா வேலையைவிட்டு நிரந்தரமாக ஊருக்குத் திரும்பியிருந்தது மட்டுமே அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல்.
அதன் பிறகு இப்போது வருகிறேன். இந்த முறை மட்டுமே போன முறை பார்த்தபடியே இருக்கிறது வீடு. எல்லாப் பொருட்களும் இடம் மாறாமல், போட்டது போட்டபடி அப்படி அப்படியே இருக்கின்றன. கை கழுவுமிடத்திலிருக்கும் கண்ணாடி மேல் நூலாம்படை பூத்திருக்கிறது. சோபாவின் கைப்பிடிகளில் மெல்லிய தூசு அப்பியிருக்கிறது. பாட்டி படத்தில் போடப்பட்டிருக்கும் பூ வாடிக் கருகி உதிர்ந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எப்போதும் தவழும் அமைதி கலைந்து வீடே களேபரமாயிருக்கிறது. எப்போதும் சளசளவென சத்தம் போட்டு அலையும் அத்தை நடு வீட்டில் அமைதியாகப் படுத்திருக்கிறாள்.
நிச்சலனத்திற்கும் சலனத்திற்கும் சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறேன். மாமா அந்த வீட்டின் மற்றொரு தூணைப் போல அப்படியே சமைந்துபோயிருந்தார்.
எந்தக் கணத்திலும் அத்தை எழுந்து வந்துவிடுவாள். இடம் மாறாமல் தூசு படிந்து இருக்கும் பொருட்களை எடுத்து ஒழுங்கு செய்வாள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். கைகளையும் கால்களையும் கட்டி கிடத்தி வைத்திருந்தனர். அக்கட்டுகளை அவிழ்க்க வேண்டும், தலைமாட்டில் எரியும் விளக்கையாவது நகர்த்தி வைக்க வேண்டும் என்று கை பரபரத்தது. எதுவும் செய்ய முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.
நேரம் ஆனதும் அவளை வண்டியில் ஏற்றினார்கள். நானும் ஏறினேன். வீட்டைத் திரும்பிப் பார்த்தேன். அது ஒரு முறை தன்னால் குலுங்கிக்கொண்டது.
பிரார்த்தனை
அன்று அலுவலகத்தில் பெரிதாக வேலையில்லை. அமெரிக்க வங்கி ஒன்றில் ஆடிட்டிங் பணி. டிசம்பர் மாதம். வேலைப்பளு குறைவு. நாட்கள் போகப் போக ஆட்கள் நீண்ட விடுமுறையில் செல்ல ஆரம்பித்திருந்தனர். வழக்கத்துக்கு மாறாக ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிட்டேன். நித்யாவும் கல்லூரி முடித்து வந்திருந்தாள். சென்னையின் புகழ்பெற்ற கல்லூரியின் துணைப் பேராசிரியர். அங்கேயே முனைவர் படிப்பைத் தொடர்கிறாள். அவளுக்கும் அன்றோடு கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறை தொடங்குகிறது.
விடுமுறையைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். பெங்களூருவிலிருக்கும் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் அங்கிருந்து ஷர்கலேஸ்புரா செல்லலாம், அருமையான இடம் என்று அழைத்துக்கொண்டிருந்தான்.
நாங்கள் பேசினாலே இந்த மானு குட்டிக்கு ஆகாது. ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு கலைத்துவிட ஆரம்பிப்பாள்.
“அப்பா, எனக்கு போர் அடிக்குது.”
“போய் கலர் பண்ணுடா கண்ணா”
“இல்ல.. பண்ணிட்டேன். போர் அடிக்குது.”
“சரி.. அந்த பில்டிங் பிளாக்ஸ் எடுத்து விளையாடு.”
“அப்போ நீயும் வர்றியா?”
“நான் அம்மாகிட்ட பேசிட்டு இருக்கேன்ல. நீ போய் விளையாடு.”
“முடியாது. நீயும் வா!” என்று சொல்லி மடியில் அமர்ந்துகொண்டாள். அவளிருக்கும்போது என்னுடைய முழுக் கவனத்தையும் அவளுக்கே வேண்டுவாள். நித்யா முகத்தில் எரிச்சல் மண்டியது.
“பில்டிங் பிளாக்ஸ் வேணாம். போய், யூனோ ஆடு!” என்று சொல்லிக் கீழே இறக்கினேன்.
அவள் கீழே இறங்கி நன்று என் மடியில் சாய்ந்தபடி, “யூனோவும் தனியா ஆட முடியாது. நீயும் வா.”
“மானு கண்ணா.. உள்ளே பாட்டியோட விளையாடு.”
“அய்யோ அப்பா.. பாட்டி இஸ் அ சீட்டர்!”
அதற்குமேல் நித்யாவுக்குப் பொறுமையில்லை. “யேய் மானஸா.. என்ன எதிர்த்து எதிர்த்து பேசிட்டு இருக்க. அப்பா சொல்றார்ல பேசிட்டு இருக்கோம்னு. போய் பாட்டியோட விளையாடு. இல்லன்னா கலர் பென்ஸ் எடுத்துட்டு வந்து படம் போடு. சும்மா தொண தொணன்னு” என்று அதட்டினாள். கல்லூரியில் மாணவர்களிடம் பேசிப் பேசி இயல்பாகவே அவளுடைய குரல் கட்டித்தன்மை பெற்றுவிட்டது.
என்னிடமிருந்து விடுவித்துக்கொண்டு கண்களில் நீர் தேங்க அம்மாவின் அறைக்குள் சென்றாள். என் கண்கள் அவளைத் தொடர்ந்ததை நித்யா கவனித்துவிட்டள்.
“போதும் போதும். உம் பொண்ணு ஒண்ணும் அழுதழுது கரைஞ்சுட மாட்டா”
“ஹே பாவம்டி. அவளுக்கும் அம்மாவுக்கும் அஞ்சு நிமிசம்கூட ஒத்து வராது. அடிச்சுப்பாங்க.”
“அவளாச்சு அவ பாட்டியாச்சு. நீ விடு.”
“கண்லாம்கூட கலங்கிடுச்சு.”
“அதெல்லாம் சும்மா நடிப்பு. நீயிருக்கிறனால ஆக்சன் போடுறா. நீ பிளானுக்கு வர்றியா?”
அதற்கு மேல் ஏதாவது சொன்னால் கடைசியில் அம்பு என் பக்கம்தான் திரும்பும் என்பதை அறிவேன். மனசெல்லாம் அம்மாவின் அறையிலிருந்தது. ஷர்க்கலேஸ்புரா, வாகைமான், வயநாடு என்று ஒவ்வொன்றாகப் பேசிப் பேசி இறுதியில் ஷர்க்கலேஸ்புராவே செல்லலாம் என்று முடிவாகிவிட்டது. எத்தனை இரவு பகல், என்னென்ன பார்க்கலாம், எங்கு தங்கலாம் என்று ஒவ்வொன்றாகப் பேசப் பேசச் சுற்றுலாவுக்கான உற்சாகம் தன்னாலே தொற்றிக்கொண்டது.
ஒரு பெட்டி மட்டும் வாங்க வேண்டியிருக்கும் என்று பேசிக்கொண்டிருக்கும்போது மானஸா அம்மாவின் அறையிலிருந்து வெளியே வந்தாள். கையில் வரைபட நோட்டும் பெரிய ஸ்கெட்ச் பாக்ஸும் இருந்தன. நாங்கள் அமர்ந்திருந்த சோபாவுக்குப் பக்கத்தில் ஒரு பாயை விரித்து அதன் மேல் அமர்ந்து வரைய ஆரம்பித்தாள்.
எங்களிடம் கோபம் கொண்டவளாகக் காட்டிக்கொண்டாள். அதற்கு மேல் என்னால் பொறுக்க முடியவில்லை.
“நாமெல்லாம் அடுத்த வாரம் டிரிப் போறோம். யாருக்கெல்லாம் புது டிரெஸ் வேணும்?” என்று தூண்டிலைப் போட்டேன்.
நித்யா, “எனக்கு எனக்கு” என்றாள்.
மானஸா தலையை நிமிர்த்தவில்லை. படத்திலேயே கண்ணாய் இருந்தாள்.
“புது டிரெஸ் மட்டுமில்ல. மேக்கப் கிட்கூட உண்டு.”
மசியவில்லை.
“அப்பா, ஒரு புது மாஜிக் கத்து வச்சுருக்கேன். சொன்னபடி கேட்டா அதைப் போட்டுக் காட்டுவேன்.” என்றேன்.
ஓரக் கண்ணால் என்னைப் பார்த்தாள். லேசாக குறுஞ் சிரிப்பு எட்டிப் பார்த்தது.
“ஆமா.. வா வா.. கிட்ட வா” என்று அழைத்தேன்.
வரைந்துகொண்டிருந்ததை அப்படியே போட்டுவிட்டு என் பக்கம் வந்தாள்.
“சரி இப்படி நில்லு” என்று சொல்லி எனக்கு முன்னால் அவளை நேராக நிமிர்ந்து நிற்கச் செய்தேன். கை கால்களை ஒட்டி இருக்கச் செய்து, கண்களை மூடச் சொன்னேன். மூடினாள்.
“இப்போ நான் உன்னை மறைய வைக்கப் போகிறேன். கண்ணை மட்டும் திறக்கக் கூடாது” என்றேன்.
முணுமுணுத்து மந்திரம் போல் ஒன்றைச் சொன்னேன். அவள் தலை முதல் கால் வரை என் இரண்டு கைகளாலும் திருஷ்டி கழிப்பதைப் போலத் தடவினேன். தலையில் மெதுவாகக் குட்டினேன். சிரித்தாள். சிரிக்கக் கூடாது என்று மிரட்டினேன். வேண்டுமென்றே என் செய்கைகளைத் தீவிரப்படுத்தினேன். வேக வேகமாகச் செய்தேன். குரலில் கடுமையேற்றினேன். அறையெங்கும் அமைதி.
“மாயதேவி மாந்தீரிகமாயி பூமிவிட்டு மறைந்திடு. பூலோகம் துறந்திடு. அர்ரேஹோம். அர்ரேஹோம். அர்ரே அர்ரேஹோம்.” என்று திரும்பத் திரும்ப இதையே சொன்னேன். ஒவ்வொரு முறையும் குரலை ஏற்றினேன். அம்மா அறையிலிருந்து எட்டிப் பார்த்துச் சிரித்துவிட்டு உள்ளே போய்விட்டாள்.
“மறைந்திடு மறைந்திடு மறைந்திடு.” என்று சொல்லி அவளை மெதுவாகப் பின்னால் தள்ளினேன்.
“அவ்வளவுதான்! முடிந்தது.” என்றேன்.
அதற்காகவே காத்திருந்தவளைப் போல நித்யா, “ஹே எங்கப்பா மானஸாவைக் காணோம்.” என்றாள்.
“அதான் மந்திரம் போட்டாச்சே. மறைஞ்சுட்டா.”
“அய்யோ..”
இப்போது மானுக்குட்டி கண்ணைத் திறந்து எங்களைப் பார்த்துச் சிரித்தாள். இருவரும் அவளைப் பார்க்காதது போல் நடித்தோம்.
“ஹே என்னப்பா.. அவ இன்னும் டின்னர்கூட சாப்பிடல.”
“விடு விடு இனி அவளுக்குப் பசிக்கவே பசிக்காது. அதான் மறைஞ்சு போயிட்டாளே.”
“அப்பா நான் இங்க இருக்கேன்.” என்று கெக்கபிக்கவென்று சிரித்தாள்.
“இதோ பார் குரல் மட்டும் கேக்குது. ஆளக் காணோம்.” என்றேன் முகத்தை ரொம்பவும் தீவிரமாக வைத்துக்கொண்டேன். நித்யாவும் அப்படியே செய்தாள்.
“மானஸா.. மானு கண்ணா” என்று பரிதவிக்கும் குரலில் நித்யா நடித்தாள்.
“அம்மா இதோ இருக்கேன்.” என்று சொல்லி நித்யா பக்கம் வந்து அவள் அவளைத் தொட்டாள். இவள் அவளைத் தொட்டுத் தடவி,” இங்கதான்ப்பா இருக்கா. ஆனா எனக்குத் தெரிய மாட்டுறாளே!” என்றாள்.
மானுக்குட்டியின் முகம் இப்போது மெதுவாக வாட ஆரம்பித்தது. நித்யா இது போல விளையாடுபவள் இல்லை. அதனால் உண்மை என்று நம்பத் தொடங்கிவிட்டதை அவள் முகம காட்டிக்கொடுத்தது.
“மானுக்குட்டி” என்று அவளிருக்கும் இடம் தெரிந்தே அவள் மேல் படாதவண்ணம் காற்றில் கைகளால் துழாவினேன்.
“அப்பா.. நான் இங்க இருக்கேன்.” என்றாள் மெல்லிய குரலில்.
“கண்ணா கண்ணா” என்று சொல்லி நடிப்பைத் தொடர்ந்தேன்.
“அவள் முகம் சோர்ந்து போனது. எந்த நொடியிலும் அழத் தொடங்கலாம். சட்டென எழுந்து வேகமாக அம்மாவின் அறைக்குள் சென்றாள்.
சென்ற வேகத்தில் ஓவென அழுதபடி அறையிலிருந்து வெளியே வந்தாள். அம்மாவும் நடித்திருப்பாள் போல.
“நான் உண்மையிலேயே மறைஞ்சுட்டேன். அப்பா என்னைக் காப்பாத்து” என்றாள். அவளை வாரி அணைத்துக்கொள்ளப் போன என்னை நித்யா பார்வையாலே தடுத்தாள். இரக்கமற்றவள்.
“மானா கண்ணா.. எனக்கு மறைய வைக்க மட்டும்தான் தெரியும். திரும்பக் கொண்டுவரத் தெரியாதே” என்று வேண்டுமென்றே அவளிருக்கும் திசையைப் பார்க்காமல் வேறு பக்கமாய் பார்த்துச் சொன்னேன். இப்போது ஏனோ எனக்குத் தொண்டை அடைத்தது.
“அய்யோ அப்பா..” என்று கத்தியவள், விறுவிறுவென்று ஹாலிலிருந்த பூஜை அறைக்குப் பக்கம் போய், கதவைத் திறந்தாள். அம்மாவைப் போல கீழே அமர்ந்து கண்களை மூடி எதையோ வேண்ட ஆரம்பித்தாள்.
“ஹே பாவம்டி பைத்தியம்.” என்றேன்.
“அட சும்மா இரு. என்னதான் பண்றான்னு பாப்போம்.” என்றாள் சிரித்தப்படி. “பாரேன் பக்தியெல்லாம் இருக்கு.” என்றாள் கிசுகிசுக் குரலில்.
மனத்துள் “சைக்கோ” என்று திட்டிக்கொண்டேன்.
கண்களை மூடி, கைகளைக் கூப்பி, “ஸாரி ஸாரி” என்று எதையோ சொல்லி முணுமுணுத்தாள். ரொம்பவும் தீவிரமாக சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தாள். சட்டென வயதேறியவளைப் போலக் காணப்பட்டாள். சோபாவிலிருந்து எழப் போன என்னை நித்யா கைப் பிடித்து நிறுத்தினாள். விடுவிக்க முயன்றேன். இறுக்கிப் பிடித்து இழுத்தாள்.
“போடி பைத்தியம்” என்று விடுவிடுத்துக்கொண்டு பூஜையறைப் பக்கமாகத் திரும்பினேன். அங்கே மானுக்குட்டியைக் காணவில்லை. முணுமுணுக்கும் பிரார்த்தனைக் குரல் மட்டும் கேட்டது.
O