முந்தின இரவின் புத்தாண்டு கொண்டாடத்தில் தலைகேறிய போதை விடிந்த பின்னும் இன்னும் குறையாமல் உடலில் தளும்பிக்கொண்டு இருந்தது. போதையில் தெருவில் கிடந்த பல முகங்கள் ஞாபகத்திற்கு வந்து போயின. வாசிக்கும் பழக்கம் இருந்ததினால் போதை குறித்து வாசித்த சில கவிதைகள் கோர்வையாய் இல்லாமல் சிதறுண்ட சொற்களாக அங்குமிங்கும் அலைந்துகொண்டு இருந்தது. போதை குறித்து ஒரு மொழிபெயர்ப்பு கவிதையை இளங்கோ கிருஷ்ணன் மேடையில் பேசியதைத் திரும்ப திரும்ப நினைத்து பார்க்கிறேன். அது…. கடைசியாய் குளிர் சாதனப்பெட்டியில் போய் உட்கார்ந்தது போல முடியும், ஆனால் நினைவில் வரவில்லை. போதை மட்டுமில்லையென்றால் மனம் முழுக்க பல்வேறு நெருக்கடிகளை சுமந்து திரியும் மனிதன் நிலை என்னவாகும். மனித சமூகம் தோன்றிய காலத்தில் தோன்றிய மதுவை எப்படி ஒழிக்க முடியும். அது இல்லை என்றால் இது என்று போய்க்கொண்டே தானே இருப்பான். ச்சை என்னென்னமோ ஓடுகிறது இல்லை உளறுகிறேன். “மேற ராத்தே மோசம் தும் பார்த்துபா” போனின் ரிங் டோன் வெகு நேராமாக அழைக்கிறது. “நியூ இயர் அதுவுமா எவண்டா இம்சிக்கிறது” அழைப்பு நின்றபாடில்லை. வக்கீலாக இருப்பது எவ்வளவு பெரிய தொல்லை. வக்கீல் பேக்கரியைத் திறந்ததும் திறந்தோம் விடிஞ்சா பண்ணு கொடு டீ கொடுன்னு ஒரே இம்சை”.
“ஹெலோ யாரது ”
“டே நான்தான்’
“நான்தான்னா ?“
“நான்தான்னா? பெயர் இல்லையா?” அப்படி நான் கேட்கும்போது வக்கீல் என்ற மிதப்பு இருந்ததை மிதந்தபடியே உணர்ந்தேன். பொதுவாக யாரிடமும் இப்படி பேசுவதில்லை. நானா பேசுகிறேன்? உள்ளே இருந்து ஒருவன் பேசுகிறான். என் வாய் அவன் பேசும் கருவி.
“சாந்தி பேசுறேன்டா ”
மூளைக்குள் சாந்தி என்ற பெயருடைய சித்திரங்கள் வந்தது. வந்த சித்திரங்கள் எதுவும் என்னை உரிமையோடு “டே” என்று அழைக்கும் முகங்கள் அல்ல. யாரது?.
“நியாபகம் வந்துச்சா?” என்று மீண்டும் அந்த குரல் கேட்டது. வந்தது போலவும் இருந்தது இல்லை போலவும் உள்ளது. எதிர் முனையில் பேசிய குரல் ஏதோ சிக்கலில் இருப்பது மட்டும் உணர முடிந்தது. சாந்தி யாரென்று தெரியவில்லை என்று அறிந்தபின்பு பேச்சை தொடர எதிர் முனை தயக்கம் இருப்பதை போதையிலும் மூளை சொல்லியது.
“சரி, என்ன விஷயம் சொல்லுங்க”
“கொஞ்சம் உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் வரை வர முடியுமா”
“என்னாச்சு?
“சந்தேக கேசுல என்னை கூட்டிட்டு வந்துட்டாங்க, தெரிஞ்ச வக்கீல் யாராவது வர சொல்லிச் சொல்றாங்க”
……………………………. நீண்ட நேரம் ஒரு அமைதி நிலவியது.
“நெஜமாவே என்னை யாரென்று தெரியலையா” என்று அந்த குரல் கேட்கும்போது எனக்குள் குற்றவுணர்வு மேலெழுந்து நின்றது. இவ்வளவு நம்பிக்கையோடு பேசும் குரல் யாருடையது. கேட்ட குரல் என்று இப்போது மங்கலாக காதின் அருகே குரலின் நிழல் ஆடியது. ஆனால் கண்டடைய முடியவில்லை. “சரி, நான் வரேன் வையுங்க, ஒரு மணி நேரம் ஆகும்.” “ம்”.
வருடத்தின் முதல் நாளில் வரும் வருமானத்தை விட வேண்டாம். அதனை மறுத்தால் சென்டிமென்ட்டாக வருடம் முழுக்க பீசும் கேசும் காசு வராமல் போனால் என்ன செய்வது என்று லெமன் டீ போட்டு போதையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்தேன். தலைக்குக் குளித்தபின்பு இன்னும் கொஞ்சம் கரைந்தது.
“என்னை தெரியலையாட?” என்ற குரல் கொடுத்த தொந்தரவு இன்னும் அப்படியே மனதுக்குள் உலாவிக்கொண்டு இருக்கிறது. உரிமையோடும் நம்பிக்கையோடும் பேசும் ஒருவரை அடையாளம் தெரியவில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய வலி. இப்படி யாரவது நம்மிடம் நடந்து கொண்டால் எவ்வளவு மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கும். நீண்ட காலத்துக்கு பிறகு வரும் அழைப்பின் குரல்கள் பல நேரம் இம்சையைத்தான் கொடுக்கின்றன. இப்படி எப்போதாவது ஒருநாள் அவள் அழைத்து எப்படி இருக்கீங்க என்று கேட்க மாட்டாளா என்று இப்போதும் மனம் கிடந்து அல்லாடுகிறது. இன்னும் சொல்லப்போனால் அவள் அழைப்பாள் என்ற நம்பிக்கையோடே இன்னும் இந்த எண்ணைப் பாதுகாத்து வருகிறேன் என்பதுதான் உண்மை.
சரியாக ஒருமணி நேரத்திற்குப் பத்து நிமிடம் முன்பு “கிளம்பிட்டையா” என்று அதே அழைப்பு. “சார்” என்று பவ்வியமாக விளிக்கும் வழக்கடிகளுக்கு மத்தியில் உரிமையோடு பேசும் குரல். “வந்துட்டே இருக்கேன் ஒரு கால் மணிநேரம்” என்றேன். “ஓகே ஓகே வா. நான் இங்க தான் இருக்கேன்” என்று சொல்லி போனைத் துண்டித்தாள். அந்தக் குரலில் கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது. எப்போதும் கேட்கும் பெண்களின் குரல் அல்ல.
சந்திரனாக இருக்குமோ என்று மனசு சொல்லிய நொடியில் கண்ணிலிருந்து பொலபொலவென்று நீர் கொட்டியது. அங்குமிங்குமாக அப்பிக்கிடந்த போதையும் கண நேரத்தில் இறங்கி, பொட்டல் நிலம்போல விரிந்தது. ஜன்னலின் வழியாகப் பார்த்த அந்த ஏக்க முகம் சட்டென முன்னே வந்து நின்றது.
நாங்கள் அப்போது குடியிருந்த வீட்டின் அருகில்தான் சந்திரன் இருந்தான். என்னைவிட மூன்று வயது அதிகமிருக்கும். இருவரும் சேர்ந்துதான் புளியங்காய் அடிக்கப்போவோம். அய்யனார் கோவிலின் ஆலமரத்தில் ஆளுக்கொரு விழுதைத் தத்தெடுத்து அதில் குரங்காய் தொங்கிக்கிடப்போம். குளத்தில் பிடித்த மீனை வீட்டிலிருந்து கொண்டுவந்த உப்பும் மிளகாய்த்தூள் போட்டு அங்கேயே வறுத்து தின்ன நியாபகம் என்று எல்லாம் நேற்று நடந்ததுபோல நகர்கிறது. கொடூரமான வாழ்க்கை சங்கிலியின் துண்டித்துப் போன கண்ணியவன்.
புதிய எண்ணிலிருந்து மீண்டும் ஒரு அழைப்பு “ஹெலோ அட்வகேட் சாரா?”
“ஆமங்க சார் நீங்க?”
“உக்கடம் ஸ்டேஷன் எஸ்.ஐ. பேசுறேன். நீங்க இங்க வறீங்களா?”
“அங்க தான் வந்துட்டு இருக்கேன் சார்.”
“ஓகே சார் வாங்க” இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பள்ளிக்கூடம் முடிந்து திரும்பும் வேளையில் அவன் சொல்லிய செய்திகள் இன்னும் அப்படியே கேட்கிறது. “டே எனக்கு என்னமோ பண்ணுது என்னான்னு தான் தெரியல.”
“அப்படி என்ன பண்ணுது?”
“நான் ஒரு பொட்டபுள்ள கணக்கா இருக்கிற மாதிரி தோணுது.”
அவன் பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட நாடகத்திலும் பெண் வேஷம்தான் கட்டினான். பெண்ணுக்கான அனைத்து நளினமும் அப்படியே இருப்பதாக நாடகம் முடிந்தபின்பு ஆசிரியர் அவனைப் பாராட்டினார். அதைக் குறிப்பிட்டு சொன்னான். “என்னடா பொட்ட புள்ளையாகவே மாறிட்டையா அந்த வேஷம் அப்படி புடுச்சு போய்டுச்சா.” “தெரியல. ஆனால் கொஞ்ச நாளாவே என் உடம்புல என்னமோ நடக்குது, மனசு முழுக்க நீ பொட்ட புள்ள தானேனு ஒரு அசிரீரி கேட்குது” என்றவனைக் கிண்டல் செய்துகொண்டே வந்தேன்.
ஒரு மாதத்திற்குப் பிறகு ஜன்னல் வழியாக அழைத்தவன் அவளது அக்காவின் தாவணியைப் போட்டு “எனக்கு நல்ல இருக்கானு பார்த்து சொல்லு” என்றான். பார்க்க பெண் பிள்ளையைப்போல் அசலாக இருந்தான். அன்று மாலை அவனது அம்மாவும் அப்பாவும் அவனை அடித்து தோலை உரித்து இருந்தார்கள். அதன்பின்பு பள்ளிக்கூடமும் அனுப்பவில்லை ஜன்னல் வழியாக மட்டுமே பேசுவான். அவனுக்குப் பேய் பிடித்துள்ளதாக அவனது அம்மா சொன்ன கதையால் நண்பர்கள் யாரும் அவனது வீட்டுப் பக்கம் போகவே இல்லை. அவன் ஜன்னல் வழியாகப் பேச அழைக்கும்போது கேட்காதது போல கடந்து போகப் பழகிக்கொண்டோம்.
அவனது வீட்டிலிருந்து வாரம் ஒருமுறையாவது அவனை அடித்து துவைக்கும் சத்தம் மட்டும் வெளியே கேட்கும். அவனது வீட்டின் ஜன்னலின் கீழ் விளையாடுவதற்காக அடுக்கி வைக்கப்பட்ட இரண்டு கல்லின் மீது நின்று ஒருமுறை பார்க்கும்போது அவன் உடல் முழுக்க காயங்களோடு அம்மணமாகக் கிடந்தான். அவனது அப்பா “தேவிடியா மகனே, எங்க குடும்ப மானத்தை வாங்கவே வந்து சேர்ந்தையே” என்று கத்திக்கொண்டு இருந்தார். ஜன்னலின் வழியே யாரோ எட்டிப் பார்ப்பதாக உணர்ந்த அவன் தலையை மெல்லமாகத் திரும்பிப் பார்த்தான். அந்தக் கண்களை இருபதாண்டு கழித்தும் என்னால் மறக்க முடியவில்லை. அவனை எதற்கு அடிகிறார்கள் என்று எதுவும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அவனைப் பார்த்து இரண்டு மாதங்களுக்கு மேல் கடந்திருந்த ஒரு மதிய வேளையில் குற்ற உணர்வில் யாருமில்லாத நேரம் அவனுக்குப் பிடித்த பலாப்பழத்தின் ஐந்து துண்டுகளைப் பேப்பரில் சுற்றி ஜன்னலின் வழியே அழைத்தேன். அப்போது அவன் தலை மொட்டையடிக்கப்பட்டு இருந்தது. உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்தது. அழுக்கு சட்டையோடு இருந்தான். சொல்லமுடியாத சோக ரேகை அவனது முகத்தில் அப்பிக்கிடந்தது. என் கையைப்பிடித்து அழுதான் “என்னை எப்படியாவது காப்பத்துடா, ரொம்ப அடிக்கிறாங்க, நான் எந்த தப்பும் பண்ணல” என்று சொல்லும்போது அவன் உடல் நடுங்கியதைக் கவனித்தேன். எப்போதும் கலகலவென சிரிக்கும் முகத்திலிருந்த புன்னகை தொலைந்து போயிருந்தது. அவன் திரும்பத் திரும்ப “என்னை எப்படியாவது காப்பாத்துடா” என்று இறைஞ்சினான். எப்படி காப்பற்றுவது? அந்த வயதில் அவனுக்காக அழுவதைத் தவிர என்னிடம் எந்த ஆறுதலும் இல்லை.
பலாப்பழத்தின் துண்டுகளை அவன் உண்ணும்போது பல நாட்களாக நல்ல உணவைச் சாப்பிடாத ஏக்கம் தெரிந்தது. “தேங்க்ஸ்டா” என்றான். பதிலுக்கு நான் என்ன சொல்வதென்று தெரியவில்லை. “நாளைக்கு எங்க வீட்டுல எல்லோரும் குல தெய்வ கோயிலுக்குப் போறாங்க அப்போ என்னை வீட்டுக்குள்ள வச்சுதான் பூட்டிட்டுப் போவாங்க, அப்போ யாருக்கும் தெரியாம கதவைத் திறந்து விடுறியா? நான் எங்காவது போய் பொழச்சுகிறேன்” என்றான்.
“வீட்டை விட்டு ஓடிப்போறையா?”
“ஆமாம் என்னை அடிச்சே கொன்னுடுவாங்க போல.”
“எங்க போவ?”
“எங்கையோ போறேன்.”
“பூட்ன வீட்டை உடைக்கவா?”
“அதெல்லாம் வேண்டாம் எங்கிட்ட ஒரு வீட்டுச் சாவி இருக்கு, இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்னு முன்னமே ஒன்னு ஒழிச்சு வச்சு இருக்கேன் அதை உங்கிட்ட கொடுக்கிறேன். கதவைத் திறந்து அப்படியே பூட்டி விடலாம்.” என்றான்.
“எனக்கு பயமா இருக்குடா”
“பயப்புடாத. யாருக்கும் சந்தேகம் வராது. ப்ளீஸ், அடி தாங்க முடியல. புரிஞ்சுக்கோ ” என்று அவன் சொல்லும்போது அவன் கண்ணில் நீர் வழிந்து கொண்டு இருந்தது. சமவயது நண்பன், என்னவென்று சொல்ல முடியாத துயரத்தில் கிடந்து அல்லாடுவது பார்க்க பரிதபமாக இருந்தது. “சரி, யாருக்கும் தெரியாமல் திறந்து விடுறேன்”. அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்.
வெளியே நின்று நோட்டம் பார்த்தால் சந்தேகம் வருமென்று எங்கள் வீட்டு ஜன்னல் வழியே அவனின் வீட்டைப் பார்த்துக்கொண்டே கிடந்தேன். அந்தி சாய்ந்த நேரத்தில் அவன் வீட்டின்முன்பு வந்து நின்ற அம்பாஸிடர் காரில் எல்லோரும் ஏறினார்கள். ஊரின் எல்லைவரை யாரும் கவனிக்காதவாறு என் சைக்கிளை மிதித்தபடியே பின் தொடர்ந்தேன். அய்யனார் கோவில் திட்டின்மீது ஏறி நின்று பார்த்தபோது காரின் முகப்பு விளக்கின் வெளிச்சம் சிறுபுள்ளியாய் மறைந்திருந்தது. வேக வேகமாகத் திரும்பி வந்தபோது நான் வரமாட்டேன் என்று நம்பிக்கையற்று மூலையில் சாய்ந்து கிடந்தவனை ஜன்னலில் பார்த்து “டே சந்திரா உங்க அம்மா அப்பா போய்ட்டாங்க” என்றேன். உயிர் வந்ததைப்போல ஜன்னலின் வழியே எனது கைகளைப் பற்றி முத்தம் கொடுத்தான். அவனது கட்டிலுக்கு கீழே இருந்த பெட்டியை இழுத்து உடைகளைக் களைத்து ஒரு சாவியை எடுத்து என்னிடம் நீட்டினான். நரகத்திலிருந்து விடுவிக்கும் சாவி என்றான். கையில் கிடைத்த சில துணிகளை எடுத்து அவனது புத்தகப் பையில் திணித்தான். அவளது அக்காவின் தாவணியும் அதிலிருந்தது. கதவைத் திறந்தபோது அவன் முகத்தில் உரசிப்போன காற்றை ஆழமாக சுவாசித்தான். என்னைப் பார்த்து அவன் சிறு புன்னகையை சிந்தி “ம்ம் பூட்டு போலாம்.” என்றவன் அவனே என் கையிலிருந்த பூட்டை வாங்கி வீட்டைப் பூட்டி என் சைக்கிளில் ஏறி அமர்ந்தான். “ம்ம்.. உட்காரு” என்று பின் கேரியரைக் காண்பித்தான். அவன் சைகை பேச்சு எல்லாம் எனக்கு புதியதாக இருந்தது. நான் எதுவுமே பேசவில்லை அவனே பேசி அவனே பதிலும் சொல்லிக்கொண்டான். வீட்டுக்குப் பின்னாலிருக்கும் ஒத்த தடத்தின் வழியே அவனே சைக்கிளை மிதித்தான். அவன் யார் கண்ணிலும் படுவதைக் காட்டிலும் நான் படக்கூடாது என்ற ஜாக்கிரதை இருந்தது. புறவழிச்சாலை வந்து சேரும்போது நன்றாக இருட்டியிருந்தது. தூரத்தில் வரும் ஒரு பேருந்தைக் கையை காட்டி நிறுத்தினான். என்னைக் கட்டிபிடித்தவன் “உன்னை எப்போதும் மறக்க மாட்டேன். தேங்க்ஸ்டா” என்று ஓடிப்போய் பேருந்தில் ஏறிக்கொண்டான். ஜன்னலின் வழியே கையைக் காட்டியவன் முகத்தில் விடுதலை உணர்வின் சாயல் இருந்தது. பேருந்து தூரம் செல்லச் செல்ல சொல்லமுடியாத ஏதோவொரு பாரம் எனக்குள் அழுத்தியது.
சந்திரன் ஓடிப்போனது அவர்களது குடும்பத்துக்கு ஏதோவொரு வகையில் நிம்மதியாக இருந்ததாகவே பட்டது. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. குடும்பமானம் தப்பித்த உணர்வு இருந்தது. ஒரு மாதத்தில் நகரத்துக்கு குடி பெயர்ந்து போவதாகச் சொல்லி வீட்டைக் காலி செய்து சென்றார்கள். அதன்பிறகு எந்தத் தொடர்பும் எனக்கும் அவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு டவுன் ஹாலில் என்னைப் பார்த்த அவனது அம்மா எதுவும் பேசாமல் கையைப்பிடித்து அழுதாள். அவளது மகனைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கலாம். அவனைத் திறந்துவிட்டது நான்தான் என்று இப்போதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் மகனை இழந்த துயரம் அவளது முகத்தில் வழிந்த கண்ணீரில் தெரிந்தது. அவளால் என்ன செய்ய முடியும். நீண்ட நேர விசாரிப்புக்கு பிறகு “எப்போதாவது அவனைப் பார்த்தால் எங்கிட்ட பேச சொல்லுவியா? அவன்ட்ட மன்னிப்பு கேக்கணும்” என்று சொல்லியவள் அதன்பின் எதுவும் பேசாமல் அவளது எண்ணை ஒரு தாளில் எழுதி எனது பாக்கெட்டில் வைத்து போனாள்.
ஒருமுறை பொள்ளாச்சி பஸ்ஸ்டாண்டில் அவனைப் பார்த்ததாக நீதிமன்றத்தில் சந்தித்த நண்பன் தமிழ்மணி சொன்னான். “அச்சு அசலா பொம்பள மாதிரியே இருக்கான், நீ வக்கீல் ஆனதை சொன்னப்ப ரொம்ப சந்தோசப்பட்டான். உன் நம்பர் கேட்டு வாங்கினான்” என்று தமிழ்மணி அன்று சொன்னது நினைவு சுருளுக்குள் வந்து போனது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்த உரிமையின் குரலைத் திரும்பக் கேட்கிறேன்.
உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் நுழைகையில் என்னமோ ஒரு படபடப்பு இருந்தது. முந்தினநாள் குடிபோதையில் பிடித்த வாகனங்கள் நிறைந்து கிடந்தது. வரவேற்பு அறையின் இடது மூலையில் போடப்பட்டிருந்த பெஞ்சில் சந்திரன் உட்கார்ந்துகொண்டு இருந்தான். கடைசியாய் மொட்டையடிக்கப்பட்ட சந்திரனாக இல்லாமல் நீண்ட தலைமுடியோடு, வட்ட பொட்டில் மஞ்சள் நிற புடவையில் பெண்ணாக உட்கார்ந்திருந்தான். அருகில் இன்னொரு திருநங்கை இருந்தாள். கண்கள் விரிய “எப்படி இருக்க” என்றான். குரல் வராமல் தடுமாறினேன். “நல்ல இருக்கையா”! என்று அடுத்த கேள்வியை போட்டான். தொண்டை அடைத்து எச்சில் முழுங்குவதைப் பார்த்தபடி அவனே சொன்னான் “நான் ரொம்ப நல்ல இருக்கேன், ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல வேலை செய்யுறேன் ” என்றான். இப்போதும் அவனே கேட்டு அவனே பதில் சொல்லிக்கொண்டான்.
“வாங்க வக்கீல் சார், எப்படி இருக்கீங்க” தெரிந்த எஸ்.ஐ. தான்.
“நல்ல இருக்கேன் சார்.”
“நைட் பஸ்ச்டாண்டுல நின்னுட்டு இருந்தாங்க, சும்மா விசாரிக்கக் கூட்டி வந்தோம், வேலை செய்யற இடத்துல விசாரிச்சோம். டவுனுக்கு வந்தவங்க பஸ் கிடைக்காம பஸ்ஸ்டாண்டுல உட்கார்ந்திருக்காங்க. கூட்டிட்டிப் போங்க.. ஒரு சின்ன என்கொயரிதான், உங்க பெயரை சொன்னாங்க, தெரிஞ்சவங்களா?” என்றார்.
“ரொம்ப வேண்டப்பட்டவங்க” என்றேன். அப்போது அவரது சிரிப்பில் ஒரு கள்ளம் இருந்ததைக் கவனித்தேன். “ஓகே சார் நான் வரேன்” என்றபடி வெளிய போகலாம் என்று தலையசைத்தேன். காவல்நிலையத்திலிருந்து வெளியே வந்தபின்பும் அமைதி நிலவியது. அவனே ஆரம்பித்தான் “நல்ல இருக்கையா?” என்றான்.
“நல்ல இருக்கேன்.”
“யப்பா உன் குரலைக்கேட்டு எவ்வளவு வருசமாச்சு” அருகிலிருந்தவளை அறிமுகப்படுத்திவிட்டு “வக்கீலுக்கு என்ன பீஸ் வேண்டும்” என்றான். “பரவாயில்லை, அதெல்லாம் வேண்டாம்” என்று மெல்லிய சிரிப்போடு சொன்னேன்.அதே சிரிப்பு. “ஒரு நிமிஷம் நில்லு இதோ வந்தறேன்.” “எங்க போற?”.
“இரு வரேன்” சொன்னவன் வேக வேகமாக பஸ்ஸ்டாண்டுக்குள் போனான். சிறிது நேரத்தில் திரும்பியவன். கையில் வைத்திருந்த பேப்பரை நீட்டினான். வாங்கத் தயங்க. “திறந்து பாரு” என்றான். பேப்பருக்குள் பலாப்பழ சுளைகள் இருந்தது. அதன் வாசம் மூவரைச் சுற்றியும் விரிந்தது. “ம்ம்.. சாப்பிடு” என்று சொல்லியவன் அவனே ஒன்றை எடுத்து முகத்துக்கு முன்னே நீட்டினான். அதை சாப்பிடும்போது “தித்திப்பா இருக்கா?” என்றான். ‘ஆமாம்’ என்று தலையாட்டினேன். “என் வாழ்க்கையும் இப்போ தித்திப்பாதான் இருக்கு” என்றான். “நான் கூப்பிட்டேனில்லை, அதுதான் என் நம்பர் “ என்றான். போனை எடுத்து எண்ணை சந்திரன் என்று டைப் செய்து அதனை அழித்து சாந்தி என்று பதிந்தேன். அவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.