மதன்,

நான் எப்போதும் உன் நினைவிலிருப்பேன் என்ற நம்பிக்கையில் இந்த மின்னஞ்சலை அனுப்புகிறேன். சமீப நாட்களில் உன் உடல் நிலை மோசமடைந்து வருவதாக நீ உன் வலைதளத்தில் எழுதியதிலிருந்து இத்தனை நாட்கள் எனக்குள் அமைதியாக இருந்த அலைகள் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டன. என்னால் அதை அமைதிப்படுத்தவோ விட்டு விலகவோ முடியவில்லை. ஆகவே நீண்ட இந்த மெளனத்தை கலைக்க வேண்டிய சூழல். நீ என்னைப் பார்ப்பதையோ அல்லது நான் உன்னைப் பார்ப்பதையோ நான் நிச்சயம் விரும்பவில்லை. அது நம் இருவரின் உடல் மற்றும் மனநிலைக்கு ஏற்ற ஒன்றல்ல. நீ ஒரு வாழ்க்கையைத் தொடங்கி அதை கிட்டதட்ட வாழ்ந்துமுடித்துவிட்டாய். உனக்கென மனைவி, அழகான மகள் உன்னையும் உன் எழுத்தையும் நேசிக்கும் வாசகர்கள் நண்பர்கள் என நீ நிறைவாய் இருப்பதாய் நம்புகிறேன். நீ எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே நான் உன் எழுத்தை தொடர்ந்து வாசித்துவருகிறேன். உன் வலைதளப் பதிவுகளை நான் தவறவிட்டதேயில்லை. உன் எழுத்தில் நான் இருக்கிறேனா என்று எப்போதுமே என மனம் ஆவலுடன் தேடும். இதுவுரை நான் என்னை உன் படைப்புகளில் கண்டதேயில்லை. சில நேரம் மனம் அதற்கு ஏங்கினாலும், நீ அவ்வாறு செய்யாதது எனக்கு சந்தோஷமே. நம்முடைய ரகசியங்கள் நமக்கானவையென நீ கருதியதாக நான் நினைத்துக்கொண்டேன். ஒருவேளை அது வேறுவிதமாகவும் இருக்கலாம். ஆனால், எனக்கு எது மகிழ்ச்சியளிக்கக் கூடிய பதிலோ அந்த பதிலேயே திருப்தியடைந்துக் கொள்வேன். 

பல வருடங்களுக்குப் பிறகு உனக்காக எழுதும் இந்த நேரத்தில் நம் இருவருக்குமிடையேயான நினைவுகளில் மூழ்கித் திளைக்கிறேன். அது பட்டுப்போய் காய்ந்து மக்கிவிட்ட ஒரு மரத்தில் திடீரென்று ஒரு பசுமையான இலையைக் கண்டால் ஏற்படும் சந்தோஷத்தைத் தருகிறது. பட்ட மரம் துளிர்காதுதான். ஆனால், அப்படியொரு சந்தோஷம். உன்னைப் பற்றி அனைத்துமே நீண்ட நாட்களுக்கு முன்பே நான் தெரிந்துகொண்டேன். நீ அத்தனைப் பிரபலம். உன்னைப் பற்றிய சர்ச்சைகள், நீ உண்டாக்கும் சர்ச்சைகள் என அனைத்தையும் ரசிப்பேன். ஆனால், எனக்கு மட்டும் ஒன்று தெரியும். இது என்னுடைய மதன் இல்லை என்று. அவனது வெட்கம் கலந்த சிரிப்பை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். ஒருவேளை உன் மனைவி அதைப் பார்த்திருக்கலாம். ஆனால், அது எப்போதும் எனக்கானது என்று திடமாக நம்புகிறேன். அப்படியொரு சிரிப்பை நீ மீண்டும் எழுந்து வந்து எனக்காக சிரிக்க வேண்டுமென்றே விருப்பத்திலேயே இதை உனக்கு எழுதுகிறேன். நீ மீண்டு வந்து இந்தக் கடிதத்தைப் படித்தால் உன் உதடுகளில் அந்த சிரிப்பு வரும் என்று நம்புகிறேன். உன்னை ஒருமுறை நேரில வந்து பார்க்க ஆசைதான். ஆனால்….

இப்படிக்கு,
உன் சந்திரா…

கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு நீண்ட நேரமாக அப்படியே உட்கார்ந்திருந்தால் அனு. இது உண்மையா? அப்பாவிற்கு உண்மையில் ஒரு காதல் இருந்ததா? அப்பாவால் அம்மாவைத் தாண்டி இன்னொரு பெண்ணை நேசிக்க முடியுமா? தன் மேல்கூட அப்பாவால் அந்த அன்பைக் காட்ட முடியாதே. அப்பாவின் இப்பிறவியானது அம்மாவிற்கானது என்று அவர்களைத் தெரிந்த யாரைக் கேட்டாலும் சொல்வார்களே. அனுவின் தலைக்குள் ஆயிரம் தும்பிகள் பறந்து ஏதோ ஒரு பெரும் மழைக்கான சமிக்ஞையை அவளுக்கு உணர்த்தியது.

மதன் என்கின்ற மதனகோபல் ஒரு எழுத்தாளர். பல முக்கிய  நாவல்கள் மற்றும் சிறுகதைகள் மூலம் இலக்கியத்தில் தன் பெயரை ஆழப் பதியவைத்துள்ளவர். சமீபத்தில் கடும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். சமீபத்தில் சிகிச்சையில் இருக்கும் அவருடைய புகைப்படம் ஒன்று வெளிவந்து பெரும் சர்ச்சையானது. மதனகோபாலுக்கு என்ன ஆனது என்ற பெரும் விவாதம் சமூகவலைதளங்கில் பேசுபொருளானது. கடந்த சில ஆண்டுகளாக அவருக்குத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த சினிமா வாய்ப்புகளை அவர் மறுத்துக்கொண்டேயிருந்தார். சினிமா தனக்கு சரிவராது என்று சொன்னார். ஒருவேளை அவர் சினிமாவில் எழுதியிருந்தால் மருத்துவ செலவிற்கு ஆகியிருக்கும் என்று பேசிக்கொண்டார்கள். மதனுடைய இன்சூரன்ஸ் சம்பந்தமான கோப்புகளை அவர் கணினி மற்றும் மின்னஞ்சலில் தேடிக்கொண்டிருந்தபோது தான் அனுவின் பார்வையில் இந்தக் கடிதம் பட்டது.

அனுவால் இன்னும் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை. இதை அம்மாவிடம் சொல்லலாமா என்று தோன்றிய  எண்னத்தை உடனே தன் மனதிலிருந்து அழித்தாள். அம்மாவால் இதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது. மேலும் அப்பாவின் மீதுள்ள பிம்பத்தை அம்மாவின் மனதிலிருந்து அழிக்க அவள் விரும்பவில்லை. அவள் மீண்டும் அந்தக் கடிதத்ததைப் படித்தாள். அதில் மறைந்திருந்த அளவற்ற அன்பைப் பரிசுத்தமான காதலை அவளால் உணர்ந்துகொள்ள முடிந்தது. இப்போது என்ன செய்ய. அப்பா மீண்டும் வந்து இதற்கு பதில் எழுதட்டுமென்று விட்டுவிடுவதா. ஆனால், அப்பா திரும்ப வரவேயில்லையென்றால். அனு என்னென்னவோ யோசித்தாள். இறுதியாக இதைப் பற்றி யோசிக்கவோ முடிவு செய்யவோ தான் யார் என்று அவளுக்குத் தோன்றியது. முதலில் அடுத்தவரின் கடிதத்தைப் படித்ததே தவறு. இதில் அதைப் பற்றி யோசிப்பது முட்டாள்தனம் என்று அவள் தனக்குத் தானேச் சொல்லிக்கொண்டாள்.  அவள் அந்த மின்னஞ்சலை அன் ரீடாக மாற்றிவிட்டு அதை மூடப்போகும் நேரத்தில் மீண்டும் ஒரு புதிய மின்னஞ்சல் வந்தது.

மதன்,

உன்னை ஒரே ஒருமுறை பார்க்க வேண்டும்.

இப்படிக்கு,
உன் சந்திரா.

அனுவிற்கு என்னவோ போல் இருந்தது. இனி சந்திரா அப்பாவின் வாழ்க்கைக்குள் வந்து தன்னுடைய மற்றும் தன் அம்மாவினுடைய வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்று நம்பினாள். ஒருமுறை அந்த சந்திரா வந்து சந்தித்துவிட்டுப் போவதில் என்னவாகிவிடப்போகிறது என்று அவள் தனக்குள்ளேயேக் கேட்டுக்கொண்டாள். மேலும் தன் அப்பாமீது இவ்வளவு காதலுடன் இருக்கும் ஒரு பெண்ணின் மீது ஒரு ஈர்ப்பும் அவளைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் எழுந்தது. அவள் மெதுவாக தன் கைகளை விசைப்பலகையின் அருகே கொண்டு சென்றாள். அவள் கைகள் நடுங்கின. ஒருகனம் தன் அம்மாவை நினைத்துக்கொண்டாள். இது தன் அம்மாவிற்குச் செய்யும் துரோகமாக அவளுக்குத் தோன்றியது. மறுகணம் அவ்வளவு தூரமெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டு சந்திராவின் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பத் தொடங்கினாள்.

சந்திரா அவர்களுக்கு,

நான் எழுத்தாளர் மதன் அவர்களின் மகள் அனு. அப்பாவின் மின்னஞ்சலிலிருந்து அவர் அனுமதியில்லாமல் உங்களுக்கு இந்தப் பதிலை எழுதுகிறேன். இதன் காரணமாக அப்பா என் மீது கோபப்படமாட்டார் என்றே நம்புகிறேன். அவரை உண்மையில் நீங்கள் நன்கு தெரிந்தவராக இருப்பவராயின் உங்களுக்கு அது தெரியும். இப்போதிருக்கும் நிலைமையில் அப்பாவால் தங்கள் கடிதத்திற்கு பதில் எழுத முடியாது. அப்பாவை நேரில் ஒருமுறை சந்திக்க வேண்டுமென்ற தங்களின் விருப்பத்தின் நியாயத்தை என்னால் உணர முடிகிறது. உங்களுக்கு விருப்பமிருப்பின் நீங்கள் தாராளமாக அப்பாவை மருத்துவமனையில் நேரில் வந்து சந்திக்கலாம். வருவதாக இருந்தால் தெரிவிக்கவும்.

இப்படிக்கு
அனு.

மின்னஞ்சலை அனுப்பிவிட்டு அனு சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு எந்த பதிலும் வரவில்லை. பெருமூச்சொன்றை விட்டுவிட்டுத் தனது தேவையான காப்பீட்டுத் தகவல்களை தனது மின்னஞ்சல்லுக்கு அனுப்பிவிட்டு கணினியின் இயக்கத்தை நிறுத்தினாள். எழுந்து சமையலறைக்குச் சென்று தண்ணீர் குடித்தாள். திடீரென்று ஏதோ தோன்றியவளாய் வேகமாக அப்பாவின் படுக்கையறைக்குச் சென்று அங்கு அவர் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் புகைப்பட ஆல்பங்களைத் தேடத் தொடங்கினாள். தான் ஏன் இதையெல்லாம் செய்கிறோம் என்று கேள்வி அவளுக்குள் ஊசலாடிக்கொண்டிருந்தது. தன் அப்பா என்னதான் தனக்கு சுதந்திரம் கொடுத்திருந்தாலும் தான் அத்துமீறிக்கொண்டிருக்கிறோம் என்கிற உறுத்தல் அவளுக்கு ஏற்பட்டது. இருந்தாலும் அதையெல்லாம் தாண்டிய ஒரு ஆர்வம் அவளை இயக்கிக்கொண்டிருந்தது. ஒருவழியாக அவள் தனது அப்பாவின் கல்லூரிப் புகைப்படங்களை தேடிக் கண்டடைந்தாள்.

மிகவும் பழைய கருப்பு வெள்ளைப் புகைப்படம். பாதி முகங்கள் தெரியவேயில்லை. இதில் யார் சந்திராவாக இருக்குமென்று யோசித்தாள். யாராவது இதில் தனது அப்பாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களா என்று தேடினாள். அப்படி எதுவும் இல்லை. வழக்கத்திற்கு மாறாக அவளால் எதுவும் தென்படவில்லை. ஏமாற்றமாக வீட்டைப் பூட்டிக்கொண்டு மருத்துவமனைக்குப் புறப்பட்டாள்.

அனு மருத்துவமனைக்குச் சென்றபோது அவள் அம்மா வார்டில் இல்லை. போன் செய்து கேட்டபோது கேன்டீனில் இருப்பதாகச் சொன்னாள். அவளுக்கும் அப்போது ஒரு காபி தேவைப்பட்டதால் கேண்டீனை நோக்கிச் சென்றாள். அம்மாவின் முகம் சட்டென அவள் மனதில் தோன்றி, ஏதோவொரு உணர்வை ஏற்படுத்தியது. ஒருவேளை இதெல்லாம் அம்மாவிற்குத் தெரிந்தால் அவள் எப்படி எடுத்துக்கொள்வாள். அவள் மனநிலை என்னவாக இருக்கும். அம்மாவின் இடத்தில் தான் இருந்திருந்தால் நாம் என்ன மாதிரியாக எதிர்வினையாற்றியிருப்போம். அனுவால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. ஆனால், தான் சந்திராவிற்குப் பதில் எழுதியது தவறு என்று மட்டும் அவளுக்குத் தோன்றியது. அம்மா அப்பாவைப் பற்றி நினைப்பதிருக்கட்டும், தன்னைப் பற்றி என்ன நினைப்பாள் என்று அனு அஞ்சினாள்.

அம்மா அவளுக்காக ஒரு காபி வாங்கி வைத்திருந்தாள். அனுவைப் பார்த்ததுமே அவள் அம்மா, “ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்றாள்.

அனு பதற்றமாக, “ஒன்னுமில்லையே.” என்றாள்.

“ஆபீஸ்ல வரச்சொல்றாங்களா?”

“அதெல்லாம் இல்ல. கொஞ்சம் டயர்ட்.” என்று சொல்லிக்கொண்டே தனது கைப்பேசியில் அப்பாவினுடைய மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தாள். திறந்ததுமே அவள் கண்கள் ஒலிர்ந்தன. அதைப் பார்த்துமே அவள் அம்மா, “என்னடி ஆச்சி?” என்றாள்.

“ஒன்னுமில்ல, ஒரு மெயில்.” என்று சொல்லிவிட்டு சந்திராவிடமிருந்து வந்திருந்த அந்த மின்னஞ்சலைத் திறந்தாள்.

அன்பு அனு,

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. உன்னிடமிருந்து மின்னஞ்சலையும், அதில் இப்படியொரு அழைப்பையும் நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. நான் நேரில் வந்து உன் அப்பாவிற்கோ அல்லது உங்கள் குடும்பத்திற்கோ எந்தவித அசவுகர்யத்தையும் ஏற்படுத்த விரும்பவிலை. நீ புரிந்துகொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உன் அப்பாவின்  முகம் எப்போதும் என் மனதில் கலையாமல் பிரகாசமாக உள்ளது. உன் அழைப்பிறகு நன்றி. நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியாக இரு.

இப்படிக்கு,
சந்திரா

மின்னஞ்சலைப் படித்ததும் அனு உடனடியாகப் பதில் எழுதினாள்.

சந்திரா அவர்களுக்கு

நீங்கள் வருவதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் அம்மாவிடம் இதைப்பற்றியெல்லாம் எதுவும் பேசவில்லை. பேசப்போவதுமில்லை. ஒரு பிரபல எழுத்தாளர் என்ற முறையில் என் அப்பாவை பலர் சந்திக்க வருகிறார்கள். ஒருசிலரை நாங்கள் அனுமதிக்கவும் செய்கிறோம்.

//அனு மின்னஞ்சலை டைப் செய்துகொண்டிருக்கும்போதே, அவள் அம்மா, “நான் போறேன் நீ குடிச்சிட்டு வா.” என்று சொல்லிவிட்டு எழுந்துச் சென்றாள்.//

அதனால், நீங்க வருவதில் எந்தவித சிக்கலும் இருக்காது.

இப்படிக்கு,
அனு.

என்று டைப் செய்துவிட்டு அதை ஒருமுறை சரிபார்த்துவிட்டு அனுப்பினாள். இந்த முறையும் மறுத்தால் கட்டாயப்படுத்த வேண்டாமென்று நினைத்துக்கொண்டாள். சில நிமிடங்களிலேயே பதில் வந்தது.

அனு,

நாளை மாலை நான்கு மணிக்கு வருகிறேன்.

இப்படிக்கு,
சந்திரா.

மின்னஞ்சலைப் படித்ததும் அனுவிற்குப் பதற்றமானது. நாளை சந்திரா வரும்போது முடிந்தவரை அம்மா இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்தாள். அடுத்த நொடியே “ச்சீ, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். முகம் தெரியாத யாரோ ஒருத்திக்காக தன் அம்மாவை ஏன் துரத்த வேண்டும். சில மணி நேரத்தில் எப்படி அவள் தன் மனதில் இப்படியொரு இடத்தைப் பிடித்தாள். எப்படியும் அவள் தன்னை யாரென்று வெளிக்காட்டிக்கொள்ளப் போவதில்லை. அதிகப்பட்சம் வாசகி அல்லது பழைய கல்லூரித் தோழி என்றுதான் அறிமுகப்படுத்திக்கொள்ளப் போகிறாள். ஏன் இவ்வளவு தூரம் தான் அந்த சந்திராவிற்காக யோசிக்கிறோம். ஒருவேளை அவள் அப்பாவின் விருப்பமானவள் என்பதற்காகவா? இருக்கலாம்.

அனு, சந்திராவின் மின்னஞ்சல்லுக்கு பதிலளித்துவிட்டு மறுநாளுக்காக காத்திருக்கத் தொடங்கினாள். மதன் லேசாகப் பேச ஆரம்பித்திருந்தார். அவர் தன் மகளைப் பார்த்தவுடன், “ஏதாவது பிரச்சனையா?” என்று மெதுவாகக் கேட்டார். அனு இல்லையென்று தலையசைத்தாள். அவர் கண்கள் திருப்தியடையவில்லை. அருகில் அம்மாவும் இல்லை. மின்னஞ்சல்லைப் பற்றி சொல்லிவிடலாமா என்று யோசித்தாள். பிறகு வேண்டாமென்று முடிவு செய்தாள். அவர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவரைப் பார்க்க பார்க்க அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் மனதில் தன்னையும் தன் அம்மாவையும் தவிர இன்னொரு பெண் இருந்திருக்கிறாள் என்பதை அந்த நொடி வரை அவளால் நம்ப முடியவில்லை. சிந்தனையிலிருந்து மீண்டு அவரைப் பார்த்தாள். அவர் தூங்கிவிட்டிருந்தார்.

மறுநாள் காலை அனு வீட்டிற்குச் சென்று விரைவாகக் குள்ளித்துவிட்டு புறப்படத் தயாரனாள். மின்னஞ்சல் ஏதாவது வந்திருக்கிறதா என்றுப் பார்த்தாள். எதுவும் வரவில்லை. அவள் விரைவாக மருத்துவமனைக்குச் சென்று தன் அம்மாவை வீட்டிற்கு அனுப்பிவைத்தாள். ‘ஏழு மணிக்கு மேல் வந்தா போதும் நான் பாத்துக்கிறேன்’ என்று யதார்த்தமாகச் சொன்னாள். அவள் அம்மா எதுவும் சொல்லாமல் புறப்பட்டுச் சென்றாள்.

காலையிலிருந்தே நண்பர்கள் சிலர் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். மதனின் பதிப்பாளர் வந்து அவரைப் பார்த்துவிட்டு அனுவிடம் நீண்ட நேரம் பேசிக்கோண்டிருந்தார். மதனைப் பற்றிப் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவருடைய எழுத்துக்களைப் பற்றி சிலாகித்தார். ஆனால், அனுவின் காதுகளில் எதுவுமே விழவில்லை. அவள் யோசனைகள் முழுக்க சந்திராவைச் சுற்றியே இருந்தது. பதிப்பாளர் மதியம் பனிரென்டு மணி வரை பேசியிருந்துவிட்டுப் போனார். அதன் பிறகு அவள் உள்ளே சென்று அப்பாவிற்கு சாப்பாடு கொடுத்துவிட்டு மாலை யாரோ வருவதாக சொன்னார்கள் என்று சொன்னாள். அவர் யார் என்னவென்று எதுவும் கேட்கவில்லை. அவள் மதிய உணவு சாப்பிட வேண்டுமென்பதையே மறந்திருந்தாள். ஆனால், மீண்டும் மீண்டும் தனக்குள், தான் ஏன் இவ்வளவு ஆர்வமாக இருகிறோம் என்று கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

நேரம் ஒரு மரவட்டையைப் போல ஊர்ந்துகொண்டிருந்தது. அனு அடிக்கடி மின்னஞ்சலைத் திறந்துப் பார்த்தாள். சந்திராவிடமிருந்து எதுவும் வரவில்லை. தான் ஏன் சந்திராவின் கைப்பேசி எண்ணைக் கேட்கவில்லை அல்லது தன்னுடையதைக் கொடுக்கவில்லை அவளுக்குத் தோன்றியது. இது முழுக்க முழுக்க எதிர்பாராத ஒரு சூழல். இதில் வழக்கமான முறையில் நடந்துகொள்வது வெகு சிரமம் என்று தனக்கு தானே சமாதானப்படுத்திக்கொண்டாள்.

மதியம் மூன்றரை மணிக்கு மதன் நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்திருந்தார். அனுவிற்கு யாரென்று தெரியவில்லை. “பேசிட்டு சீக்கிரம் வந்துடுங்க அங்கிள்” என்று அவரை உள்ளே அனுப்பிவிட்டு சந்திராவிற்காகக் காத்திருந்தாள். சந்திராவின் நினைப்பில் உள்ளே சென்றவரையே அவள் மறந்துவிட்டாள். நான்கு மணியை நெருங்க நெருங்க அனுவிற்குப் பதற்றம் அதிகரித்தது. அந்தப் பக்கமாக வரும் அப்பா வயதுடைய ஒவ்வொரு பெண்ணையும் இதுதான் சந்திராவா என்று எதிர்பார்த்து உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால், அவர்கள் வரும் வழியிலேயே வேறு அறைக்குச் சென்றார்கள் அல்லது அவளைக் கடந்து வேறு எங்கோ சென்றார்கள். நான்கு மணிக்கு மேல் நேரத்திற்கு சிறகு முளைத்துப் பறக்க ஆரம்பித்தது. அனு தன் அம்மா எதிரில் வருவதைப் பார்த்துப் பதற்றமாகி நேரெமென்ன என்று கைப்பேசியைப் பார்த்தாள். மணி ஐந்து இருபது. அப்போதுதான் அப்பாவின் நண்பர் ஒருவர் உள்ளே சென்றதே அவள் நினைவிற்கு வந்தது. இனி சந்திரா வருவாள் என்ற நம்பிக்கை அனுவிற்குக் குறைய ஆரம்பித்தது.

“என்னடி ஒரு மாதிரியா இருக்க?” என்றாள் அனுவின் அம்மா.

“ஒன்னுமில்லமா. தலைவலி.”

“யார பாத்துட்டு இருக்க?”

“அதுவா… என் ஆபீஸ் பிரண்ட் வரன்னு சொன்னாங்க.”

“உள்ள யாரோ இருக்க மாதிரி இருக்கு.”

“ம். யாரோ அப்பா ப்ரெண்டாம். ரொம்ப நேரமா இருக்காரு.”

“ஏன்டி. சீக்கிரம் அனுப்ப வேண்டியதுதான” என்று திட்டிக்கொண்டே அவள் வேகமாக அறைக்குள் சென்றாள். அவள் அறைக்குள் சென்று சிறிது நேரத்திற்கெல்லாம் அவர் வேகமாக வெளியே வந்தார். அனுவைப் பார்த்து தலையாட்டிவிட்டு வேகமாக சென்றுவிட்டார்.

ஏழு மணி வரை அனு காத்திருந்தாள். அதன் பிறகு மெல்ல எழுந்து அறைக்குள் சென்றாள். அப்பா கண்களை மூடிப் படுத்திருந்தார். தூங்குகிறாரா இல்லையா என்று தெரியவிலை. மூச்சு சீராக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. அம்மா அவர் கால்மாட்டில் படுத்திருந்தாள். அவள் மெல்ல அறையைவிட்டு வெளியே வந்து நாற்காலியில் உட்கார்ந்து சந்திராவிற்கு மின்னஞ்சல் அனுப்பத்தொடங்கினாள்.

சந்திரா அவர்களுக்கு,

நான் தங்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்தேன். தங்களால் வர இயவில்லையென்றால் எனக்கு ஒரு தகவல் தந்திருக்கலாம்.

இப்படிக்கு,
ஆனு

இந்தமுறை அனு தன் கைப்பேசி எண்ணை சேர்த்திருந்தாள். சில நிமிடங்களிலேயே பதில் வந்தது.

அனு,

புரியவில்லை. நான் மாலை மூன்றரை மணிக்கே வந்தேனே. உன்னிடம்தான் வந்துக் கேட்டேன். நீதான் என்னை அறைக்குள் அனுப்பினாய். போகும்போது உன்னிடம் சொல்லிவிட்டுத்தானே சென்றேன்.

இப்படிக்கு,
சந்திரா

அனு அந்த மின்னஞ்சலை அதிர்ச்சியாக மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருந்தாள். மூன்றரை மணிக்கு வந்தது ஒரு ஆண். அவருடைய உருவத்தை நினைவில் கொண்டுவர முயற்சித்தாள். ஐந்தரையடி, கருப்பு உருவம், கொஞ்சம் குண்டு, முன் தலை வழுக்கை. முகத்தை சரியாக நினைவில் கொண்டுவர முடியவில்லை. கிட்டத்தட்ட அப்பாவின் வயது. அனு அந்த மின்னஞ்சல்லுக்குப் பதில் எழுதினாள்.

மூன்றரை மணிக்கு வந்தது ஒரு வயதான ஆண். இன்று மாலை எந்தப் பெண்ணும் வரவில்லை.

  • அனு

நீண்ட நேரமாகியும் எந்தவித பதிலும் வரவில்லை. அனு மீண்டும் மீண்டும் கைப்பேசியை சோதித்துக்கொண்டிருந்தாள். எதுவுமே வரவில்லை.

அறையை விட்டு அனுவின் அம்மா வெளியே வந்து கழிவறையை நோக்கிச் சென்றாள். அனு மெல்ல எழுந்து அறைக்குள் சென்றாள். மதன் அவளைப் பார்த்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. அவரால் தன் மகளின் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. அனு இன்னும் குழப்பத்தில்தான் இருந்தாள். அவரிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்து அறையைவிட்டு வெளியேறத் திரும்பினாள்.

“அனு…” என்று மெல்லிய குரலில் அழைத்தார் மதன்.

அவள் திரும்பி அவரைப் பார்த்தாள். மதன் மெதுவாகப் பேசினார்.

“அனு… என் லேப்டாப், டி-டிரைவ்ல எக்ஸ் அப்படின்னு ஒரு போல்டர் இருக்கும். அதுல “சந்திரா” அப்படின்னு ஒரு நாவலோட டிராப்ட் இருக்கும். நான் செத்ததுக்கு அப்பறம் நீ அந்த நாவல பப்ளிஷ் பண்ணனும்.” என்றார்.

அனு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

“பண்ணுவியா?”

“அப்படி பண்ணா என்ன ஆகும்னு தெரியுமா?”

“தெரியும்.”

“என்னப் பத்தியும் அம்மாவப் பத்தியும் யோசிச்சீங்களா?”

மதன் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பிறகு, “அனு… அது என்னோட கடைசி ஆசை. ஆனா நான் உன்னக் கட்டாயப்படுத்தல. முடிவ நீயே எடு” என்றார். இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். கழிவறைக்குச் சென்ற அவள் அம்மா மீண்டும் அறைக்குத் திரும்பினாள்.

“நீ போயிட்டுக் காலையில வாயேன்டி” என்றாள் அவள் அம்மா. அனுவிற்கும் வீட்டிற்குப் போக வேண்டுமென்பது போலத்தான் இருந்தது. சரியென்று தலையாட்டினாள். அறையை விட்டு வெளியேற நினைத்தவள், திரும்பி தன் அப்பாவிடம், “சாயங்காலம் ஒரு அங்கிள் வந்தாரே அவர் பேரு என்ன?” என்றாள். ஒருகணம் அவளை விநோதமாகப் பார்த்தார் மதன் மெல்ல சொன்னார்:

“சந்திரா… சந்திரகுமார்…”