Nuclear Reactor எப்பிடி வேலை செய்யும்?
இது ஒரு சாதாரணமான கேள்வி. ஆனால், பதில் சாதாரணமானது இல்லை. ஒரு Nuclear Plant-இல் Fission என்கின்ற செயல்முறையைப் பயன்படுத்துவார்கள். யுரேனியம்-235 போன்ற நிலையற்ற தனிமத்தை எடுத்துக்கொண்டால், அதில் எண்ணற்ற நியூட்ரான்கள் இருக்கும். ஒரு நியூரான் கதிர்வீச்சு என்பது எதையும் துளைத்துச் செல்லும் துப்பாக்கித் தோட்டா போன்றது. கல், மண், காங்கிரீட், இரும்பு என எதையும் துளைத்துச் செல்லும். போதுமான யுரேனியம் அணுகளை ஓரிடத்தில் ஒன்றாகப் போட்டால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் ஒன்றோடு ஒன்று மோதும். அந்த மோதல்களின் தாக்கம் அணுக்களைப் பிரித்து நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கான சக்தியை வெளிப்படுத்தும். இதுதான் fission. இதுபோன்ற இயற்பியல் கோட்பாடுகளைப் படித்தால் அணு உலை எப்படி வேலை செய்யும் என்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.
ஆனால், அந்த Nuclear Reactor எதனால் வெடிக்கும், அப்படி வெடித்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று சொல்வது கடினம். சான்றாக, ஷெர்னோபில் அணு உலை வெடிப்பு! இந்தப் பேரழிவைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன. காற்றுவாக்கில் நாம் பல செய்திகளைக் கேள்விபட்டிருப்போம் என்றாலும், ஒரு தீயைத் தாண்டுவதுபோல அந்தப் பேரழிவை மிக எளிதாகக் கடந்துவிடுகிறோம்.
இந்த உலகத்தில் இதுவரை நிகழ்ந்த எத்தனையோ பேரழிவுகளை இயற்கைதான் நிகழ்த்தியது. ஷெர்னோபில் அணு வெடிப்பு என்பது மனிதனால் நிகழ்ந்த உலகப் பேரழிவு. இயற்கையால் நிகழ்ந்த எத்தனையோ பேரழிவுகளுக்குப் பிறகு மனித குலம் வாழ்ந்திருக்கிறது. மனிதனால் நிகழ்த்தப்படும் உலகப் பேரழிவுகளைக் கடந்து இயற்கையால் வாழ முடியவில்லை!
ஷெர்னோபில் மனித குலத்திற்கான எச்சரிக்கை மணி. இந்த அழிவைக் கண்ணெதிரே எடுத்துக் காட்டும் வெப் சீரிஸ் ஒன்று 2019ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த வெப் சீரிஸின் பெயரே ஷெர்னோபில்தான். 9.3 என்ற IMDb மதிப்பீட்டிட்டில் இருக்கும் இந்த வெப் சீரிஸ் பற்றி இதுக்கு முன்னரே உயிர்மையில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். நிறைய அறிவியல் செய்திகள் இருந்ததால் வெப் சீரிஸை உள்வாங்குவது கடினமாக இருந்தது. வகுப்பின் கடைசி பெஞ்ச் மாணவன், கனமான அறிவியல் புத்தகத்தை முக்கி முக்கிப் படித்தது போன்று இருந்தது இந்த வெப் சீரிஸைப் பார்த்த அனுபவம். பார்த்த பின்பு பல கேள்விகள் எழுந்தன. அவற்றைக் கடைசியில் சொல்கிறேன்.
”பொய்களோட விலை என்ன? அது உண்மை’ன்னு நாம தப்பா எடுத்துக்கப் போறதில்லை. உண்மையான ஆபத்து என்ன’ன்னு கேட்டால், நமக்கு ‘எது உண்மை’ன்னு தெரியாமப் போயிரலாம். அப்ப என்ன பண்ணப் போறோம்? அப்புறம் என்ன மிச்சமிருக்கும்? உண்மைக்கான நம்பிக்கையைக் கைவிட்டுட்டு, கேட்கிற கதைகள்லேயே நாம திருப்தி அடைஞ்சுக்க வேண்டியதா இருக்கும்! அந்தக் கதைகளில் கதாநாயகர்கள் யார்’ன்றது முக்கியம் இல்லை! நாம யார்மேல பழிய போடுறோம்’ன்றத தெரிஞ்சுக்கிறதுதான் முக்கியம். இந்தக் கதையில் அது Anatoly Dyatlov” டேப் ரிகார்டரில் இதனோடு சேர்த்து மேலும் பல ரகசிய வாக்குமூலங்களைப் பதிவுசெய்துவிட்டு, 1988ஆம் ஆண்டு, பேராசிரியர் Valery Alekseyevich Legasov தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். அவர் தூக்குப் போட்டு இறந்த நாளில் இருந்து மிகச் சரியாக இரண்டு வருடம் ஒரு நிமிடத்திற்கு முன்பு, 1986 ஏப்ரல் 26 இரவு 1 மணி 23 நிமிடம் 45வது விநாடியில் Chernobyl அணு உலை வெடி விபத்து நடந்தது. பேராசிரியர் லெகசோவ்வின் தற்கொலைக்கும் அணு உலை வெடிப்பின் மர்மங்களுக்கும் இருக்கும் தொடர்பைக் காட்சிப்படுத்தியுள்ளது ஷெர்னோபில் வெப் சீரிஸ். அன்று, ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த வடக்கு உக்ரைனில் Pripyat நகரத்தில், 1970களில், RBMK – Reaktor Bolshay Moshchnosti kanalny (High Power Channel Type Reactor) என்ற அணு உலை கட்டப்பட்டது. 1000 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்குவதற்காகவும், புளுட்டோனி யத்தை உருவாக்கவும் இந்த அணு உலை வடிவமைக்கப்பட்டது. 1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் நாள் நள்ளிரவில் மிகப் பெரிய வெடிவிபத்துச் சத்தம் கேட்டு பிரிப்யாட் நகர மக்கள் அதிர்ச்சியாகி எழுந்துகொண்டனர். RBMK-வின் 3வது பிளாக்குக்கும் 4வது பிளாக்குக்கும் இடையில் இருந்த அணு உலையின் system control tank வெடித்திருக்கிறது. அணு உலையின் மையமான Core என்ற பகுதி வெடித்து அதன் மேல்மூடி கழன்று
விட்டிருக்கிறது. அணு உலை வெடித்தால் அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சை Dosimeter என்னும் அளவு கோலில் கணக்கிடுவர். ஷெர்னோபிலில் இருந்த டோசிமீட்டரில் கதிர்வீச்சின் அளவு 3.6 Roentgen என்று காட்டுகிறது. அன்று அங்கு இருந்த டோசிமீட்டரில் காட்டும் அதிகபட்ச அளவே 3.6 Roentgen அந்த அளவைத் தொட்டுவிட்டிருந்தது அன்றைய வெடிப்பு.
ஷெர்னொபிலில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் MINSK நகரத்தில் இருக்கும் Byelorussian Institute for Nuclear Energy என்ற அணு ஆய்வு மையத்தில், காலை 9.30க்குத் தோராயமாகக் கணக்கிடும்போது புறவெளியில் கதிர்வீச்சின் அளவு 8 Roentgen இருப்பதைக் கண்டறிகிறார்கள். இவ்வளவு பெரிய கதிர்வீச்சு இருக்கிறது என்றால், ரஷ்யாவின்மீது அமெரிக்கா அணுக்குண்டை வீசிவிட்டதா? uranium- 235 ரியாக்டர் எரிபொருள் இருப்பது தெரிகிறது. அப்படியென்றால் 240 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் அணு உலைக் கசிவா? அதைவிட்டால் 400 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஷெர்னோபில் அணு உலை. அங்கே கசிந்தால் இந்த அளவு கதிர்வீச்சு இங்கே ஏன் வரப்போகிறது! இது ஏதோ புதுவகையான Bomb? புதுவகையான துணை செயற்கைக்கோள் வெடிப்பு? என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை! அணு உலை வெடித்து 8 மணிநேரம் கடந்த பின்பும் அணு ஆராய்ச்சி நிலையத்திற்குக்கூட எந்தச் செய்தியும் சரியாகத் தெரியவில்லை. இது அன்றைய சோவியத் ரஷ்யாவின் நிலை.
சோவியது யூனியனின் அன்றைய தலைவர் கோர்பசேவ் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் அமைச்சரவைக் குழுவின் Deputy
Chairman Boris Yevdokimovich Shcherbina “ஷெர்னோபில்லில் நிலைமை சீராக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ராணுவ வீரர்களும் குடிமக்கள் பாது
காப்புப் படையும் அங்கு எல்லோரையும் பாதுகாக்கிறார்கள். கதிர்வீச்சு அளவு 3.6 Roentgen மேல இல்லை. அது ஒரு chest x-ray-க்கு சமம்!” என்று விளக்குகிறார்.
இந்த இடத்தில் ஒரு செய்தியைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஷெர்னோபிலில் உள்ள RBMK சோவியத் யூனியனால் வடிவமைக்கப்பட்டது. இது graphite-moderated nuclear power reactor என்ற வடிவமைப்பினால் உருவாக்கப்பட்டது. மாறாக, ஏனைய மேற்கு நாடுகள் BWR – Boiling Water Reactor என்ற வடிவமைப்பினால் அணு உலைகளை உருவாக்கியுள்ளன. இவை இரண்டிற்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உள்ளன. BWR-இல் தண்ணீர் coolant and moderator-ஆகச் செயல்படுகிறது. இதில் தண்ணீர் ஆவியாகி சக்தியை உருவாக்கும் turbines என்ற சுழலுக்குள் செல்லும். RBMK-வில் graphite என்பது moderator-ஆகச் செயல்படும் தண்ணீர் coolant-ஆகச் செயல்படும். ”RBMK பாதுகாப்புக் குறைப்பாடு உடையது அதுதான் ஷெர்னோபிலில் வெளிப்பட்டது” என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அமைச்சரவைக் குழு துணைத் தலைவர் பேசியதற்கு Kurchatov Institute of Atomic Energy நிறுவனத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் Valery Alekseyevich Legasov பின்வருமாறு பதில் சொல்கிறார். “அணு உலைக்கு வெளியில் தரையில் கிராபைட் கிடக்கிறது. அணு உலையின் மொத்தப் பகுதியில் அணு உலையின் உள்ளிருக்கும் core என்ற ஒரே ஒரு இடத்தில்தான் கிராபைட்டைப் பார்க்க முடியும். அணு உலைக்கு வெளிப்பகுதித் தரைகளில் கிராபைட் இருக்கிறது என்றால், control system tank மட்டும் வெடிக்கவில்லை. அங்கே இருக்கும் reactor-உம் திறந்திருக்கிறது என்று அர்த்தம். 3.6 Roentgen என்ற கதிர்வீச்சின் அளவு 4 லட்சம் x-ray-க்குச் சமமானது. ஆனால், அங்கு இருப்பது low level dosimeter. அதன் அதிகபட்ச அளவை நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். உண்மை இன்னும் பெரிதாக இருக்கும் என்று தோன்றுகிறது. அந்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள், கைகளில் கிராபைட்டை எடுத்து அப்புறப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கைகளில் இருப்பது கிராபைட் இல்லை, அது நான்கு லட்சம் x-ray கதிர்கள்!”RBMK அணு உலை யுரேனியம்- 235 என்ற தனிமத்தை எரிபொருளாகப் பயன்படுத்து கிறது. யுரேனியத்தில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் ஒளியின் வேகத்தில் பயணிக்கும். அதன் பாதையில் வரும் எல்லாப் பொருளையும் துளைத்துச் செல்லும். ஷெர்னோபில் அணுஉலையில் ஏறத்தாழ 30 லட்சம் கிராம் அணுக்கள் மோதி சக்தியை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. அவையும் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன. காற்று இந்த மொத்த அணுத்துகள்களையும் ஒரு கண்டம் முழுவதும் எடுத்துச் செல்லும். மழை அந்தக் கதிர்வீச்சுகளை பூமிக்குக் கொண்டுவரும். பெரும்பாலான அணுக்கதிர்கள் செயல்பாட்டை நிறுத்தா. சில துகள்கள் 50,000 வருசம் இருக்கும்.
அணு உலையின் கிராபைட்டில் இருக்கும் நியூரான்கள் வேகமாகப் பயணிக்கும். அதற்கு Flux என்று பெயர் RBMK-வில் நியூரான்களின் வேகத்தைக் குறைக்கவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் fuel reactor-ஐச் சுற்றி கிராபைட்டை வைத்திருக்கிறார்கள். அணு உலை core-க்கு மேல் ஏராளமான கிராபைட் சிதறியிருப்பதைப் பேராசிரியர் லெகசோ பார்க்கிறார். அதன்மூலம் அணு உலையின் மொத்தக் கட்டடமும் சிதறியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்கிறார், அணு உலையின் core திறந்திருக்கிறது. முன்னர் 3.6 Roentgen அளவு கதிர்வீச்சுதான் இருக்கிறது என்றார்கள் இல்லையா? அது உண்மையில் அங்கு 15,000 Roentgen அளவு கதிர்வீச்சு வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்கள் கண்களால் பார்க்கும் தீ ஹிரோஷிமாவில் போட்ட அணுக்குண்டைவிட இரண்டு மடங்கு கதிர்வீச்சுகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அறிகிறார்கள். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் இரண்டு மடங்கு கதிர்வீச்சு அளவு கூடிக்கொண்டிருக்கிறது. ஒரு வாரத்தில் இல்லை, ஒரு மாதத்தில்கூட நிற்கப் போவதில்லை. மொத்தக் கண்டமும் அழியும் வரை நிற்கப்போவதில்லை! அங்கு, Byelorussian Institute for Nuclear Energy என்ற நிறுவனத்தில் இயற்பியல் விஞ்ஞானி Ulana Khomyuk என்பவரும் உதவிக்கு வருகிறார். அவர், “மக்கள் அனைவரையும் நிலையான அயோடின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் சொல்லவேண்டும். அயோடின் மாத்திரைகள் நம் உடலில் உள்ள தைராய்டுகள் கதிர்வீச்சுகளை உள்வாங்குவதில் இருந்து தடுக்கும். அயோடின் கொடுத்து மக்களை இந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தவில்லை என்றால், எல்லோரும் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார். மக்களைக் காப்பாற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றினால் அடுத்த விநாடியே ஆவியாகிவிடக் கூடிய 2000O செல்ஷியஸுக்கு மேல் நெருப்பைக் கக்கிக்கொண்டிருக்கும் Core-ஐ அணைக்க வேண்டும். 2600 சதுரக் கிலோமீட்டர் உள்பட்டிருக்கும் விலங்கு, பறவை, ஏனைய உயிரினங்களைக் கொன்று ஆழமாகப் புதைக்க வேண்டும். ஷெர்னோபில் சுற்றியுள்ள கல், மண், மரம் செடிகொடிகள் எல்லாம் கதிர்வீச்சு பாதிப்பில் இருக்கும். அவற்றை எல்லாம் பெயர்த்து எடுத்து மீண்டும் புதைக்க வேண்டும்.
நெருப்போடும் போராடும் தீயணைப்பு வீரர்கள், ராணுவ வீரர்கள் அதிகபட்சம் நாற்பது வயதுகூட தாண்டப்போவதில்லை. அந்த ஷெர்னோபில்லைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடும் பேராசிரியர் லெகசோவ்வும், அமைச்சர் குழு துணைத் தலைவர் ஷெர்பினாவும் இனிமேல் அதிகமாகப் போனால் நான்கு ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. இந்தக் கிரகத்தில் இதற்கு முன்னால் நடந்திராத மிகப் பெரிய ஆபத்தோடு எல்லோரும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் ஸ்வீடன் அணு ஆய்வு மையம் ஷெர்னோபில்லில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சைக் கண்டறிகிறது. வெடித்த ஷெர்னோபில்லை அமெரிக்கா சாட்டிலைட் போட்டோ எடுத்துவிட்டது. ரஷ்யா ரகசியமாக வைத்திருந்த அணு உலை வெடிப்பு உலகம் முழுமைக்கும் தெரிகிறது. முதலில் தீயை அணைக்க வேண்டும். ஏறத்தாழ 5000 கிலோ போரானையும் (Boran) மணலையும் ஹெலிகாப்டரில் கொண்டுசென்று கொட்டுகிறார்கள். உலனா ஹோம்யுக், “தீமேல போரானையும் மணலையும் கொட்டும்போது தீ அணையும்தான்! நீங்கள் பக்கத்தில் இருக்கும் தண்ணீர்த் தொட்டி காலியாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள். ஆனால், தண்ணீர் நிரம்பியிருக்கிறது. தண்ணீர் இருந்தால் அருகில் உள்ள Tank வெப்பம் தாங்காமல் அதிகபட்சமாக 36 மணி நேரம் முதல் 72 மணிக்குள் வெடித்துவிடும்” என்கிறார். டேங்க் வால்வை வெளியிலிருந்து திறக்க முடியாது. உயிரைப் பணயம் வைத்து உள்பக்கமாகச் சென்று மூன்றுபேர் தண்ணீரைத் திறந்து வெளியே அனுப்புகிறார்கள். அந்த மூன்றுபேரின் சாகசத்தை விவரித்து ஏராளமான கட்டுரைகள் வந்துள்ளன. இந்த வெப் சீரிஸில் மிகக் குறைவாகவே காட்டுகிறார்கள். அந்த மூன்றுபேர் அடுத்த சில வருடங்களில் இறந்துவிட்டார்கள் என்று end title card-இல் சொல்கிறார்கள்.
தீயை அணைத்த பின்பு, thermal explosion ஆபத்தை வெற்றிகரமாக முறியடித்த பிறகும் core-க்குள் சூழல் மோசமாகிக்கொண்டே இருக்கிறது. அதன் காங்கிரீட் பேட் அதிகமாகப் போனால் ஆறு முதல் எட்டு வாரங்கள் தாங்கும். அதன்பிறகு meltdown ஆகி நிலத்தடி நீருக்குள் கலக்கும் வாய்ப்பு இருக்கிறது. நிலத்தடி நீர் பிரிப்யாட் ஆறுக்குப் போகும். அந்த நீர் ஐம்பது மில்லியன் மக்களின் குடிநீர் ஆதாரம். மேலும், அந்தத் தண்ணீரால் விவசாயம் கால்நடைகள் பாதிக்கும். இப்போதைக்கு இந்த வெப்பத்தைத் தடுக்க சோவியத் யூனியனில் இருக்கும் நைட்ரஜன் அவ்வளவும் தேவையாக இருக்கிறது. எல்லோருடைய கேள்வியும் ஷெர்னோபில் எப்போது முழுமையான பாதுகாப்பாக மாறும்? இதற்கான பதிலைப் பேராசிரியர் லெகசோவ் சொல்கிறார். புளுட்டோனியம் – 239 என்ற ஒரு தனிமத்தின் பாதி அளவு வாழ்நாள் 24,000 வருடம். அதனால், நம் வாழ்நாளிற்குள் ஷெர்னோபில் ஆபத்தை நீக்கமுடியாது என்பதைச் சொல்லிவிடலாம்” எல்லோருக்கும் தெரிய வேண்டிய பதில் ஒன்றுதான், ஷெர்பினோபில் அணு உலை வெடிப்பதற்கான காரணம் என்ன? அந்த விடை தெரிந்தால்தான் இனிமேல் வரப்போகும் ஆபத்தைத் தடுக்க முடியும்!
ஷெர்னோபில் அணு உலை எப்படி வெடித்தது?
ஷெர்னோபில் வெடிப்பிற்கு 16 மணி நேரத்திற்கு முன்னால், 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் நாள் ஒரு turbine rundown test பண்ண வேண்டும் என்று முடிவு செய்தார்கள். இதனுடைய நோக்கம், அணு உலைக்கு வரவேண்டிய மின்சாரத்தின் அளவு குறைந்தாலும், ரியாக்டர் வேலை செய்கிறதா என்பதைச் சோதிப்பதாகும். அதன்படி, ரியாக்டரின் அளவான 3200 மெகாவாட்ஸிலிருந்து 1600 மெகாவாட்ஸாகக் குறைத்தார்கள். அப்போது நிலையாக இருந்தது. அடுத்தாக சோதனையின் output அளவான 700 மெகாவாட்ஸுக்குக் கொண்டு சென்றார்கள்.
மேற்கொண்டு பரிசோதனை நிகழ்த்துவதற்கு முன்பு ஒரு தொலைபேசி வந்தது. Kiev நகரத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் பரிசோதனையை நிகழ்த்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். அன்றைக்கு இரவுவரை மின்சாரக் குறைபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார். இதுதான் பேரழிவுச் சங்கிலியின் முதல் இணைப்பு. திறமையான அதிகாரிகளாக இருந்திருந்தால் இந்த சோதனையை நிறுத்தியிருப்பார்கள். அன்றைக்கு நிலையத்தில் இருந்த டியட்லோ உள்ளிட்ட மூன்றுபேரும் பரிசோதனைக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக டோப்டூனோவ் என்ற இளம் பொறியியலாளர், “turbine rundown test என்றால் என்னவென்றே தெரியாதே?” எனச் சொல்லியிருக்கிறார். இது இரண்டு பிரச்சினைகளை உருவாக்கியிருக்கிறது.
1. அறிவியல் ரீதியான பிரச்சினை
2. மனிதத் தவறு பேராசிரியர் லெகசோவ் அதற்கடுத்து நடந்த நிகழ்வுகளைப் பின்வருமாறு விளக்குகிறார்.
ஒரு நியூக்கிளியர் ரியாக்டருக்குள் இரண்டு விசயங்கள்தான் நடக்கும். மின்சார உற்பத்தி செய்யும் அந்த ரியாக்டரின் அளவு அதிகரிக்கும் அல்லது குறையும். அங்கு ஆபரேட்டராக இருப்பவர் இதைச் சமனிலைப்படுத்த வேண்டும். RBMK அணு உலையில் ஐந்துவிதமான செயல்கள் நடைபெறும்.
1. யுரேனியம் அணுக்கள் பிரிந்து மோதும்போது ரியாக்டிவிட்டி அதிகரிக்கும். அப்போது ரியாக்டிவிட்டியை சமனிலைப்படுத்தவில்லை என்றால் அது அதிகரித்துக்கொண்டே செல்லும்.
2. Boran control rod – இது காரில் இருக்கும் பிரேக் போல செயல்படும். ரியாக்டிவிட்டியைக் குறைக்கும்.
3. குளிர்ச்சியான தண்ணீரானது system-இல் இருக்கும் சூட்டைக் குறைக்கும். அதை VAID என்பார்கள். ஷெர்னோபில்லில் positive VAID coefficient இருக்கிறது.
4. இதனால் தொட்டியில் எந்த அளவிற்குத் தண்ணீர் இருக்கிறதோ அந்த அளவிற்கு வெப்பம் இருக்கும்.
5. அதிக நீராவி அதிக வெப்பமாகும். இதன் அர்த்தம் நம் கையில் நிற்காத சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். இதைத் தடுப்பதற்கு negative temperature coefficient இருக்கிறது.
நியூக்கிளியர் fuel அதிகமாகச் சூடாகும்போது, அது less reactivity ஆகிவிடும். அதனால் fuel reactivity அதிகரிக்கும். Control rods-உம் தண்ணீரும் அதைக் குறைக்கும். நீராவி அதை அதிகரிக்கும். அதிகரிக்கும் வெப்பம்
அதைக் குறைக்கும். இதுதான் மொத்த நகரத்திற்கும் நெருப்பும் புகையும் இல்லாமல் மின்சாரத்தைக் கொடுக்கின்ற கண்ணுக்குத் தெரியாத நடனம். எல்லாம் இயல்பாக இருக்கும்வரை இது அழகான விசயம்!
ஆற்றலை வெளியேற்ற யுரேனியம் பிரியும்போது அதிலிருந்து புது element வெளிவரும். அதன்பெயர் xenon. இதனை poison என்பார்கள். Core முழுசக்தியோட உற்பத்தி ஆகிக்கொண்டிருக்கும்போது xenon பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு முன்பு எரிந்துவிடும். ஷெர்னோபில்லில் அன்று பத்து மணிநேரம் ரியாக்டரை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அதனால், அதிலிருந்த xenon எரிந்துபோகாமல் இருந்திருக்கிறது. அது core-க்கு விஷமாக அதிகரித்துக்கொண்டிருந்தது.
- நள்ளிரவு 12.38. ரியாக்டர் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது 30 மெகாவாட்ஸில் xenon உருவாகியிருந்தது. ஏறத்தாழ 211 Control rods இருக்கிற அணு உலையில் 205 Control rods-ஐ வெளியே எடுத்துவிட்டார்கள். Control rods என்பது பிரேக் மாதிரி. எரிபொருள் குளிர்ச்சியாக இருந்தது. negative temperature coefficient இப்போது ரியாக்டரைக் குறைக்க அங்கு இல்லை. ஸெனான் விஷம் மிகவும் வலிமையாக இருந்தது. அப்போது மின் சக்தியை 200 மெகாவாட்ஸ் அளவிற்குக் கொண்டுவந்தார்கள். எமெர்ஜென்ஸி சிஸ்டம் இணைப்பில் இல்லை. இப்போது ரியாக்டரைத் தண்ணீரும் ஸெனானும்தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
- நள்ளிரவு 1 மணி. சோதனை செய்ய 700 மெகா வாட்ஸ் வேண்டும். ஆனால் மின் சக்தி அதிகமாக இருக்கிறது. தண்ணீர் குறைவாக இருக்கிறது.
- நள்ளிரவு மணி 1.22.30. ஸ்கேலா கம்யூட்டர் “ரியாக் டரை நிறுத்தவேண்டும்” என்று ஒரு ரிப்போர்ட்டைத் தருகிறது.
- நள்ளிரவு மணி 1.23.04. பொறியாளர்கள் ரியாக்டரைச் சுண்டுவில் போலப் பின்னால் இழுக்கிறார்கள். பரிசோதனை ஆரம்பிக்கிறது. இப்போது அணு உலை நிலை என்னவென்றால், pump நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் ரியாக்டருக்குள் தண்ணீர் போகவில்லை. யுரேனியம் fuel-க்கு இப்போது fresh coolent போக வில்லை. கண்ட்ரோல் ராட்ஸ் இல்லை. அதனால் சமனிலை எதிர்திசையில் திரும்பியது. இதற்குள்ளாக ரியாக்டிவிட்டி அதிகரித்தது. Core-க்குள் மீதமிருந்த
தண்ணீர் வேகமாக நீராவியாகியது, அதனால் VAID உருவாகியது. நீராவி தண்ணீரை மாற்றுவதற்குப் புதிதாகத் தண்ணீர் வரத்து வரவில்லை.
நீராவி வெப்பத்தை அதிகரித்தது. ரியாக்டிவிட்டியை அதிகரித்தது. சக்தி இப்போது அதிகரித்துக்கொண்டிருந்தது. அதைத் தடுக்க வேறு எதுவும் இல்லை.
- நள்ளிரவு மணி 1.23.40. அணு உலையின் அவசர கால உதவிக்கென்று இருக்கும் பொத்தான் AZ-5. இதை
அழுத்தினால் மொத்த அணு உலையும் நின்றுவிடும். ஆனால், shutdown system-இல் ஒரு குறை இருந்தது. முழுமையாக அகற்றப்பட்ட control rods மீண்டும் அதே இடத்திற்கு வந்தன. Rods boran-ஆல் ஆனது. அது ரியாக்டிவிட்டியைக் குறைக்கும். ஆனால், அதன்
முனை கிராபைட்டால் ஆனது. அது ரியாக்டி
விட்டியை அதிகப்படுத்தும்.
- நள்ளிரவு மணி 1.23.42. ரியாக்விட்டியில் மின் சக்தியின் பேரளவு 33000 மெகாவாட்ஸைத் தொட்டது.
- நள்ளிரவு மணி 1.23.45. அணு உலை வெடித்தது. ரியாக்டரில் இருந்த அதன் மூடி தூக்கியடிக்கப் பட்டவுடன் ஆக்ஸிஜன் ஹைட்ரஜனோடும், அதிக அளவு சூடான கிராபைட்டோடும் இணைந்தது. பேரழிவுச் சங்கிலி இப்போது முடிவடைந்தது. நீதிபதிகளின் முன்பு இந்த விசயத்தை விளக்கியதற்
காகப் பேராசிரியர் லெகசோவ் இரண்டு வருடம் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். அதன்பின், வெளி உலகத் தொடர்புகளே இல்லாத அவர் தூக்கிட்டுத் தற்
கொலை செய்துகொண்டார். பேராசிரியர் லெகசோவ் செய்த தவறு என்ன? முதலில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது, உண்மையை மக்களிடம் கொண்டுவருவதற்காக இல்லை. ஓர் அரசுக்கு அது தேவையும் இல்லை. விசாரணை நடத்தப்பட்டதே ஒரு வில்லனையும் ஒரு ஹீரோவையும் கண்டுபிடிப்பதற்காகத்தான். இந்தக் கதையைப் பொறுத்தவரை டியட்லோ ஒரு வில்லனாகத் தொக்காக மாட்டியிருந்தார். பேராசிரியர் லெகசோவ் கதாநாயகனாக உயர்ந்திருந்தார். அதனை அப்படியே அவர் விட்டிருக்கலாம். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தார். இந்த விபத்து ஏன் நடந்தது என்ற கேள்விக்குப் பேராசிரியர் லெகசோவ், “ஏனென்றால், எதற்காக நமது கிராபைட்டில் மேற்கு நாடுகளில் இருப்பதுபோல் containment building இல்லையோ! அதே காரணத்தினால்தான் நம்முடைய core-இல் ஏன் நாம் தரமான விலையுயர்ந்த எரிபொருளைப் பயன்படுத்தவில்லையோ! அந்தக் காரணம்தான், நாம் positive Void coefficient with water – cooled- graphite – moderated reactor உருவாக்கு கின்ற ஒரே நாடாக இருப்பதற்கு என்ன காரணமோ! அதே காரணம்தான்” என்கிறார். இதன்மூலம் சோவியத் யூனியன் தரமில்லாத விலை குறைந்த எரிபொருளையும், மலிவான தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி ஷெர்னோபில் வெடிவிபத்து நடைபெறக் காரணமாக இருந்தது என்கிறார். மேலும், “ஷெர்னோபில்லில் ஆபத்து ஏற்படும் காலங்களில் அவசரத்திற்கு இருக்கும் shutdown பொத்தான் detonator ஆகிவிட்டது” என்றும் அந்த விசாரணையில் தெரிவித்திருக்கிறார். பேராசிரியர் சொல்லிய அந்த உண்மை சோவியத் யூனியனுக்கு எதிராக இருந்து. அதனால்தான் கண்காணிப்புச் சிறைவைக்கப்பட்டார். இந்த வெப் சீரிஸின் வசனங்கள் இரண்டு வகையில் செயல்படுகின்றன. ஒன்று புரிய வைப்பதற்குக் கடினமான அறிவியல் செய்திகளைப் புரியும்படி சொல் கின்றன. மற்றொன்று மனித உளவியலையும் தத்துவ விசாரங்களையும் மிக அழகாகப் பேசுகின்றன.
- எல்லா முட்டாள்தனங்களுக்கு இடையிலும்; எல்லாப் பொய்களுக்கு இடையிலும் இத நீ பண்ணித்தான் ஆகணும். பிரச்சினையை உங்கிட்ட குடுத்தாச்சு, அதுக்கான பதில் கிடைக்கிற வரைக்கும் நிறுத்தமாட்ட. ஏன்’ன்னா? அதுதான் நீ.
- இங்க ஒரு துப்பாக்கியோட நிக்கிற முதல் சிப்பாயி நீ இல்லை!
- சரியான கேள்வி உனக்கு உண்மையைக் குடுக்கும்ன்னு நினைக்கிறியா? ‘உண்மை’ன்னு எதுவும் இல்லை! மேலதிகாரிகள்கிட்ட என்ன வேணும்னாலும் கேளு! நீங்க பொய்யத்தான் வாங்குவீங்க!
- நான் விளைவுகளே இல்லாத மனிதனா இருந்திருக்கேன். ஒரு நாள் முக்கியமான ஆளா இருப்பேன்ன்னு நினைச்சேன். ஆனால், நான் எப்பவும் முக்கியமானவங்க பக்கத்திலதான் இருந்திருக்கேன்.
- எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம், எனக்கு எல்லாமே தெரியும்ன்னு நீ தெரிஞ்சுக்கணும்போன்ற வசனங்களும், அந்த வசனங்கள் அமைந்த இடங்களும் அருமை.
இருந்தாலும் இந்த வெப் சீரிஸின் முக்கியமான குறை என்பது இதன் POV – Point of View. பாகிஸ்தானில் ஓர் அணு உலை வெடிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அதைப் பற்றி இந்திய இயக்குநர் திரைப்படம் எடுத்தால் எப்பிடி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது சோவியத் யூனியன் காலத்து அணு உலை வெடிப்பை அமெரிக்க நிறுவனம் படம் பிடித்துள்ளது. அதனால், கம்யூனிச அரசின் ஒடுக்குமுறை, கருத்துச்சொல்லமுடியாத கெடுபிடி, தகவல் பரிமாற்றக் குறைபாடுகள், அதிகார நெருக்கடி போன்றவற்றை முதன்மைப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். அதிகாரிகளை அடிமுட்டாள்கள் போலச்சித்திரித்துள்ளனர். சான்றாக, அணு உலை வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிவதற்கு மேல் ஹெலிகாப்டரைப் பறக்கவிடும்படி ஓர் அதிகாரி சொல்கிறார். அதே அதிகாரியை இறுதியில், “மொத்த முட்டாள்கூட்டத்திலிருந்து ஒரு நல்லவன அனுப்பிட்டாங்க. கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும்” என்று பேராசிரியர் லெகசோவ் பாராட்டுகிறார். ரஷ்ய அதிகாரிகளை முட்டாள்கூட்டம் என்கிறார்கள். அதேபோல, “யூரி ககாரின் பத்தி நினைச்சுப் பாருங்க! அவர் லான்ஞ் பேட்-க்குப் போறவரைக்கும் விண்வெளிக்குப் போறதப்பத்தி எதுவும் சொல்லல’ன்றத கற்பனை பண்ணிப் பாருங்க! அவருக்கு முன்ன இருக்குறதெல்லாம் இதுக்கு முன்ன பார்க்காத விதிகள், அதுவும் அடிக்கப்பட்டிருக்கு’ன்னு வைங்க என்ன ஆகும்?” எனக் கேட்கிறார்கள். ஆனால், அமெரிக்காவிற்கு முன்னரே விண்வெளிக்கு வீரரை அனுப்பிய ரஷ்யா முன்பின்
அனுபவம் இல்லாத பொறியாளர்களை வைத்து, அடித்தலும் திருத்தலுமாக இருக்கும் விதிமுறைகளின்படி அணு உலையைப் பரிசோதிக்கச் செய்வார்களா?
இப்படியாக, ரஷ்யாவைக் குறைத்து ஒரு வெப் சீரிஸ் எடுப்பதற்கு அடிப்படையாக அமைந்தது நோபல் பரிசு பெற்ற Svetlana Alexievich என்ற எழுத்தாளர் எழுதிய
Voices from Chernobyl என்ற புத்தகம். இவர் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்ட நேர்காணலுக்கும், அதன்பிறகு அவர் பதிவு செய்த நேர்காணலுக்கும் நிறைய வேற்றுமை
கள் இருக்கின்றன. பல இடங்களில் அவருடைய கருத்தை மக்களின் கருத்தாகப் பதிவு செய்திருக்கிறார் போன்ற குற்றச்சாற்றுகளை இவர்மீது வைக்கிறார்கள்.
’காஷ்மீர் பைல்ஸ்’ படம் எடுத்தவருக்கு இந்தியாவில் திரைப்பட விருது கிடைப்பதுபோல் ஷெர்னோபில் பற்றி எழுதியவருக்கு நோபல் பரிசு கிடைத்ததில் ஆச்சர்ய
மில்லை. ஆனால் வெப் சீரிஸ் முழுவதும் உண்மை உண்மை என்று பேசுபவர்கள் அடிப்படையாக எடுத்துக் கொண்டது, உண்மையான புத்தகமா என்பதும் கேள்விக்குறியாகிறது.
அதேபோல வெப் சீரிஸ் முழுவதும் ஹோம்யுக் என்ற விஞ்ஞானி உண்மையைக் கண்டுபிடிக்க அலையாக அலைகிறார். ஆனால், ஷெர்னோபில் பற்றிப்
பத்தாண்டுகள் புலனாய்வு செய்து எழுதிய பத்திரிகையாளர் சொல்கிறார், “உண்மையை வெளிக்கொண்டு வருதற்கு அறிவியல் அறிஞர் தேவையில்லை. ஷெர்னோபில் அணு உலையில் சில சிக்கல்கள் இருந்தன. அவைதான் விபத்துக்குக் காரணங்களாக அமைந்தன என்பது விஞ்ஞானிகள் அனைவருக்கும் தெரியும்” என்று கூறியிருக்கிறார்.
விபத்துக்கு மனிதக் குறைபாடும் அறிவியல் போதாமையும் காரணங்களாக இருந்தன என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் இயக்குநர், ”ஷெர்னோபில் அணு உலை வெடிப்புகூட பெரிதில்லை. அதைவிடக் கொடூரமானது சோவியத் ரஷ்யாவின் பொய்கள், அதிகாரத் திமிர், விமர்சனங்களை ஒடுக்கிய செயல்கள்” என்பதை நிரூபிக்கவே இந்த வெப் சீரிஸை எடுத்திருக்கிறார். பகுத்து ஆராயத் தெரியாதவர்களிடம் அவர் வெற்றியும் பெற்றுவிட்டார்.வெப் சீரிஸ் எடுத்த பின்னணியில் சில நோக்கங்கள் மாறுபாடாக இருந்தாலும், அணு உலைப் பேரழிவைக் காட்டிய விதம் நன்றாக இருந்தது. பின்னணி இசை, எடிட்டிங், நடிப்பு என அனைத்தும் சிறப்பாக இருந்தன.பேரழிவுக்குப் பின்னால், ஆறு லட்சம் பேர் வெளியேறினார்கள். மூன்று லட்சம்பேர் காணாமல் போனார்கள். 75,000 படைவீரர்களில் மூவாயிரம்பேர்தான் உயிரோடு இருந்தார்கள். 400 சுரங்கத் தொழிலாளர்களில் பலர் 40 வயதுக்குள் இறந்துபோனார்கள். விபத்து நடந்த அடுத்த பத்திருபது ஆண்டுகளில் கேன்ஸர் நோயால் ஏராளமானபேர் இறந்துபோனார்கள். “ஷெர்னோபில் வெடித்துச் சிதறியதுகூட சோவியத் யூனியன் உடைந்து போனதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்” என்று அன்றைய ரஷ்ய அதிபர் கோர்பசேவ் சொன்னார். என்றாலும், இன்றும் ஷெர்னோபிலில் இறந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கையாக ரஷ்யா சொல்வது 31 பேர்தான். ‘உண்மை வெற்றிபெறுவதற்காகப் பொய்க்கு நாம் கொடுக்க வேண்டிய விலை என்ன?’ என்று இந்த வெப் சீரிஸில் நம்மிடம் கேட்கிறார்கள். நாம் இதற்கு எப்படி பதில் சொல்லமுடியும். கரூரில் 41பேர் இறந்ததற்கான உண்மையையே இன்னும் கண்டுபிடிக்காத தற்குறிகள் சூழ்ந்த நாட்டில் வாழ்கிறோம். இந்த லட்சணத்தில், ஷெர்னோபில்லில் கேவலம் 31 பேர் இறந்த உண்மைக்கு விலை கேட்டால் எப்படி?!
சங்கர்தாஸ்
drsankardass@gmail.com
