அந்தப் பேருந்து மிதமான வேகத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தது. தன்னுடைய முழு கவனத்தை இரண்டாவது கீரில் இயங்கிக்கொண்டிருக்கும் பேருந்தை மூன்றாவது கீருக்கு மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார் ஓட்டுநர். படிக்கட்டுகளில் தொங்கிகொண்டே பயணம் செய்யும் பயணிகளிடம் நான்காவது முறையாக டிக்கெட் எடுக்கும்படி, அமர்ந்த இடத்திலிருந்தே அறைகூவல் விட்டுக்கொண்டிருந்தார் நடத்துநர். கடைசி இருக்கையில் ஒரே அடுக்காக அமர்ந்திருக்கும் ‘பூ’கட்டும் பெண்களின் புரணிபேசும் சத்தமும் ஓட்டுநருக்குப் பின் அமர்ந்திருக்கும் பள்ளிச் சிறுவர்களின் மிகைப்படுத்தப்பட்ட பேச்சுகளுக்குமிடையே பேருந்து, சென்னைப் போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து சென்றது. நான்காவது கீரில் வேகமெடுத்த பேருந்தின் சக்கரங்கள் காலியான சாலையை விரைவாக முத்தமிட்டுச் சென்றன. கலைந்த முடியுடன் கையால் தடவிவிடும்படி வளர்ந்திருக்கும் தாடியுடன் கடலளவு தனிமையுடன் ஆழ்ந்த சிந்தனையை சுமந்து வேகமாகக் கடந்து செல்லும் கட்டிடங்களைப் பார்த்தவாறே முழுமையாக அழிக்கமுடியாத கடந்தகால நினைவுகளுடன் அந்தப் பேருந்தில் பயணம் செய்கிறான் அஸ்வின். காற்றின் வேகத்தில் தனது ஏர்நெற்றியில் கலையும் முடியைத் தனது வலது கையால் மெதுவாக ஒழுங்குபடுத்தினான்.

அன்றொரு நாள்…

“தலையை இப்படிப் படியவாரி சீவாதன்னு உன்ன எத்தனமுற சொன்னாலும் கேக்க மாட்டியா” என்று தனது கையால் அஸ்வினின் தலையைக் கலைப்பது அனிதாவிற்குப் பிடித்த செயல்.

“இப்டி இருந்தாதான் உனக்கு எப்பையுமே அழகு குட்டி” என்று சொல்லி அஸ்வினின் கன்னத்தை அழுத்தமாகக் கிள்ளுவது மற்றொரு பிடித்த செயல்.

இப்படியாக அவனது உடலைத் தொட்டுத் தொட்டு, கிள்ளிக் கிள்ளி அடித்து அடித்துப் பேசுவது அனிதாவின் வழக்கம். எந்தச் செயலுக்கும் எதிர்வினை ஆற்றாமல் ஒரு தீர்க்கமான பார்வையை அனிதாவின் கண்களுக்கு எதிராக வீசி மெல்லிய புன்னகையுடன் எல்லாச் செய்கைகளையும் கடப்பது அஸ்வினின் வழக்கம்.

27B பேருந்தில் ஏறிவிட்டால் போதும், சொர்க்கத்தில் மிதந்துகொண்டே இருப்பதுபோல் எண்ணம் தோன்றும் இருவருக்கும். பயணிகளின் சலசல பேச்சுக்கள், போக்குவரத்து நெரிசல், வாகனங்களின் இரைச்சல் என்று எதையுமே பொருட்படுத்துவதில்லை இவர்களின் காதல். பல வருடங்களுக்கு முந்தைய தோழி இப்போது நெருங்கிய காதலியானதற்குப் பெரிய கதையெல்லாம் ஒன்றுமில்லை, காமம்தான் மொத்த மாயவேலைகளையும் இருவருக்குள் நிகழ்த்தி கண்கள் வழியாக இப்படிக் காதலைக் கடத்திக்கொண்டிருக்கிறது.

ஆசை ஆசையாய் நாள் முழுக்க மொபைல் வழியாகப் பேச்சுகள் தொடர்ந்த காலங்கள், சூரியன் வந்து நிலவு போய், நிலவு போய் சூரியன் வரும்வரை நீடித்தது. ஒரு கட்டத்தில் பேச்சுகள் சலித்தது. மௌனமாகக் கண்கள் பேசும் தருணங்களுக்காக இரு உள்ளங்களும் காலை 27B பேருந்துக்காகக் காத்திருப்பது பேராசையாக மாற்றிற்று.

அந்தப் பேருந்தில் பயணம் செய்யும்போதெல்லாம், அவர்கள் ஒரு அழகான உணர்வை உணர்ந்தார்கள். கண்கள் நான்கும் இடைவெளியில்லாமல் பேசி, விரல்கள் பின்னிக் கால்கள் உரசிக் கொண்டு, இனிய ராகமொன்று நெஞ்சோடு இணைந்திருக்க அவர்கள் முழுமையான காதலில் மூழ்கி ஒரு தனி உலகில், இல்லை இல்லை, ஒரு தனித்த பால்வெளியில் இருப்பதுபோல் உணர்ந்திருந்தார்கள் எப்போதும்.

அனிதாவுடன் பழக ஆரம்பித்த சில நாட்களில் அஸ்வினின் செய்கைகள் முற்றிலுமாக மாறின. விடியற்காலையில் சூரியனிடம் பேசினான், நட்சத்திரங்களிடம் அதிகம் பேசுவதில்லை, முடிகள், நகங்கள் வேகமாக வளர்ந்தன. அவனை அவனே மிக பலசாலியாக உணர்ந்தான். அவனது செயலில் தெளிவுகூடின. மனதிற்குள் நிறைவான மகிழ்ச்சி. புலன்கள் அனைத்தும் அவன் மூளையுடன் ஒன்றுபட்டது. ஆமாம், இது கண்டிப்பாக காதலே!

காதலை உணர்தலே ஒரு பெரிய தவம். அதும் காமம் நீர்த்துப்போன காதல் கிடைப்பது தெய்வீகமானது என்று சொல்வார்களே! அதுபோல ஒரு உணர்வை அஸ்வின் முழுமையாக அனிதாவிடம் உணர்ந்தான். அந்த உணர்வில் இருத்தலே போதும் என்றும், அதுவே உண்மையான காதல் என்றும் நம்பத் தொடங்கினான்…

மற்றொரு நாள்…

சொர்க்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது,

அவள் கண்களில் முழுமையாக மூழ்கிப் போனவனை தனது உதட்டசைவின் மூலம் மீட்டாள் அனிதா.

“ஹே, நாம இந்த பஸ்லையே நம்ம கல்யாணத்த வச்சிக்கலாமா?”

உதட்டை, பசுவின் மடியைப் பால் கரக்கும்போது உழவன் தொடுவதுபோல தொட்டு இழுத்துவிடலாமா என்று சிந்தித்தான் அஸ்வின்.

“ஹே ப்ளீஸ் குட்டி, நாம இந்த பஸ்லயே கல்யாணம் பண்ணிக்கலாமா சொல்லு சொல்லு” என்று கொஞ்சும் கண்களில் கேட்டாள்.

அஸ்வினுக்குப் பேசவேண்டும்போல தோன்றியது,

“உன் பக்கதுல இருக்குறமாதிரி ஒரு சுகம் இந்த உலகத்துல எதுவுமே இல்லை அனி. உன்ன பாத்துக்கிட்டே, உன்கூட பேசிக்கிட்டே, உன்ன தொட்டுக்கிட்டே இருக்கணும், ஏதோ ஒரு பால் வாசனை உன்மேல… இல்லை உன்கூட சுத்திக்கிட்டே இருக்கு. அது எப்பயுமே என்னை மயக்கத்துல வச்சிருக்கு. என்னால உன்ன பிரிஞ்சி இருக்க முடியுமான்னு தெரியல. உன்னோட உயிரற்ற ஒரு பிம்பம் என்கூடவே சுத்திக்கிட்டு இருக்கு. போதாததுக்கு உன் கண்ணு, கடவுளே! என்னமாதிரியான ஒரு படைப்பு நீ. என்னால முடியல அனி, மூச்சுவாங்குது, பேச முடியல. உன் தோள்ல சாஞ்சிக்கவா?”

அஸ்வினின் பேச்சு, எதுவும் சொல்ல முடியாத ஒரு ஆழ்ந்த நிசப்தநிலைக்கு அனிதாவை நகர்த்திச்சென்றது. அஸ்வின் பேசும்போதெல்லம் அனிதா இந்த நிலைக்கு அனிச்சையாகச் சென்றுவிடுவாள்.

சிறிதுநேர இடைவெளி.

அனிதா, “குட்டி, ஏன் என்னைய இப்படி ரசிக்கிற? இத்தன நாள் எங்கடா போன? என் வாழ்க்கையில எனக்காக இப்டி ஒருத்தன் இருக்கானு நா கண்டுபிடிக்க இவ்ளோ நாள் ஆச்சா! அய்யோ… உன்ன அப்டியே மடியிலபோட்டு தாலாட்டு பாடி தூங்கவைக்கணும்னு தோணுதுடா..I LOVE UUUUUU குட்டி…”

பிறகொரு நாள்…

ஆறுமாத காலங்கள் 19 நாட்கள் 8 மணிநேரம் ஆகியிருந்த அவர்களின் காதலுக்கு அந்தப் பேருந்தின் கண்பட்டது.

அஸ்வினுடன், கரு மேகங்கள் சூழ்ந்த வானத்தின் தொடர்ச்சியாக நீளும் சாலையைப் பார்த்தவாறு 27Bக்காக பயணிகள் நெடுநேரம் காத்திருந்தனர்.
சரியாக 8:30துக்கு வரும் 27B, அன்று தாமதமாக வந்தது. அவளும்தான். என்றுமில்லாத அளவிற்கு அன்று பேருந்தில் நிற்க முடியாத கூட்டம். ஒருவழியாகப் பேருந்தில் இருவரும் ஏறி ஸ்பரிசங்கள் ஒட்ட நின்றுகொண்டிருந்தார்கள்.

அனிதாவிடம் ஏதோ ஒன்று குறைவதுபோல உணர்ந்தான் அஸ்வின்.

அனிதா இப்படியாகத் தொடங்கினாள்.

“அஸ்வின் எனக்கு கல்யாணம் பண்ண… (தயக்கமாக)… விட்ல பேசுறாங்க…”
அனிதாவின் கழுத்தை உற்றுப் பார்த்து, அதில் தாலி தொங்குவதுபோல் நினைத்துப் பார்த்தான் அஸ்வின்.

“உன்ன வேணானு உங்கிட்ட என்னால சொல்ல முடியாது, நீதான் வேணுன்னு அவங்ககிட்ட என்னால வாயக்கூட திறக்க முடியாது.”
தலைகுனிந்து “நீ புரிஞ்சிப்பன்னு நினைக்கிறன் அஸ்வின்.”

வந்ததிலிருந்து அவள் வாயிலிருந்து ‘குட்டி’ என்ற வார்த்தை வரவில்லையே என்றுமட்டுமே நினைத்தது அவனது மூளை.
கருமேகங்கள் தான், சேமித்துவைத்த நீரை பூமியில் ஊற்றக் காத்திருந்தது. பேருந்து, சாலையில் உள்ள குண்டுகுழிகளில் ஏறி இறங்கி ஆடிஆடிச் சென்றது.

அஸ்வினிடம் மௌனம்…

“ப்ளீஸ்… அஸ்வின் எதாச்சும் பேசு… நான் இப்ப என்ன பண்ணனும்?”

பேருந்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருக்கும் பயணிகள் கண்ணாடிகளைக் கீழே இறக்கிவிடுகிறார்கள்.

மௌனம்…

சாரல்… சாரல்… அனிதாவின் கண்களில் கண்ணீர்.

“அஸ்வின் நா என்ன பண்ணனும் சொல்லுடா, ப்ளீஸ்…”

மௌனம்…

“நம்ம ரெண்டு பேரும் செக்ஸ் வச்சிக்கலாம், பேபி ஃபார்ம் ஆயிடும். அப்புறம் நம்மள யாராலும் பிரிக்க முடியாது.” பதட்டமாக உளறினாள்.

முகத்தை மழையின் பக்கம் திருப்பினான் அஸ்வின். ஆழ்ந்த மௌனம்..

பேருந்து இறுதி நிறுத்தமான அண்ணாசதுக்கம் வந்து நின்றது. நடத்துநர் பயணிகள் இறங்குவதற்கு முன்பு ஒரு அறிவிப்பை அறிவித்தார்:

“மெட்ரோ ரயில் பணிக்காக இந்த வழித்தடத்துல 27B இனிமே வராது. 27Cதான் வரும். பயணிகள் எல்லாரும் அத பயன்படுத்திக்கோங்க” என்றார்.
தன்னுடைய நிறுத்தம் வந்தவுடன் அனிதா குடையுடன் இறங்கிச் சென்றுவிட்டாள். நீண்ட நேரம் பேருந்தில் அமர்ந்திருந்த அஸ்வினை நடத்துநர் கடைசியாக இறக்கிவிட்டார்.

மழை பெய்து ஓய்ந்திருந்தது.

வெறுமை நிறைந்த ஞாயிற்றுக்கிழமையின் பின்பகலில்…

இரண்டு வருட மெட்ரோ ரயில் பணி முடிவடைந்து, இன்று 27B தனது வழித்தடத்தில் இயங்கப் போகிற செய்தி கேட்டு அஸ்வின் அந்தப் பேருந்தில் பயணிக்கிறான். அந்தப் பேருந்து மிதமான வேகத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தது. காற்றின் வேகத்தில் கலையும் முடியைத் தனது வலது கையால் ஒழுங்குபடுத்துகிறான் அஸ்வின்.

சிறிதுநேர பயணத்திற்குப் பிறகு அடுத்த நிறுத்தத்தில் அனிதா கையில் குழந்தையுடன் பேருந்தில், இல்லை. அவர்களது சொர்க்கத்தில் நுழைகிறாள்.
அவளது கொஞ்சும் கண்களைப் பார்த்தவாறே இருக்கிறான். அவள் இன்முகத்துடன் அவனது அருகில் வந்து அமர்கிறாள். பால் வாசனை வீசுகிறது. கண்மூடி அவள் தோல் சாய்கிறான்.

ஒருவேளை அது, அவனுடன் சுற்றும் அவளது உயிரற்ற பிம்பமாகக்கூட இருக்கலாம்.

ஓவியங்கள்: கிரிஜா ஹரிஹரன்