(கீரனூர் ஜாகிர் ராஜாவின் பஷீரிஸ்ட் தொகுப்பை முன்வைத்து)
எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜாவின் சிறுகதைகள் தமிழ் இலக்கிய உலகில் புனைவு சார்ந்த குவியத்தைப் பெற்றிருக்கின்றன. அவை பெரும்பாலும் தமிழ் இஸ்லாமிய சமூகம் சார்ந்த அறியப்படாத பகுதிகளுக்குள் பயணம் செய்பவை. எவரும் கவனிக்காத அந்தப் பகுதி கதைகளாக நகர்கிறது. துருக்கித்தொப்பி, மீன்காரத்தெரு, கருத்த லெப்பை வரிசையில் பஷீரிஸ்ட் ஓர் சிறந்த கதை தொகுப்பு.மொத்தம் பத்து கதைகளை இது உள்ளடக்கி இருக்கிறது. ஒவ்வொன்றுமே உள்ளார்ந்த நிலையில் அதற்கான கதை வடிவங்களோடு புனைவு வெளியில் நகர்கின்றது. கதை வெளியும் அதன் கருவும் எல்லையற்றவை. குறிப்பிட்ட வடிவ அமைப்பைத் தாண்டியவை. அது எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம். குறிக்கலாம். விரிக்கலாம். கதை எப்படி புனையப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே இது மாறும். அது வாசிப்பின் விகசிப்பை அடிப்படையாக வைத்தும் தன்னை நகர்த்தும். மேலும் கதைகளில் எதார்த்தம் காலியாகி விட்டது என்ற வாதம் தமிழ்ச்சூழலில் அடிபட்டுவிட்டது. காரணம், எப்போதுமே எதார்த்தம் உயிர்பெற்றே வந்திருக்கிறது. கதைகள் எப்போதுமே ஒன்றைப் பிரதிபலிக்கவோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தவோ செய்து கொண்டு தான் இருக்கின்றன. தமிழில் புனைவுகளில் புதிய போக்குகள் மூலம் அந்த மரபு மீறப்பட்டாலும் எதார்த்தம் அதற்கிணையாகப் பின் தொடரும் புனைவாக வந்து கொண்டுதான் இருக்கிறது. தொன்னூறுகளில் மாயஎதார்த்தம் கதைகளை ஆக்கிரமித்து தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய போக்கை உற்பத்தி செய்தது. கோணங்கி தொடங்கி லட்சுமி சரவணக்குமார் வரை அம்மாதிரியான போக்கு தொடர்கிறது.
இந்தத் தொகுப்பில் முதல் கதையான வெண்ணிற மதுவகை மது சார்ந்த வாழ்வின் வலிகளும், துயரங்களும், அதன் எதார்த்த நிகழ்வுகளும், குடித்தல் செயல்பாட்டின் காரணிகள் குறித்தும் உரையாடுகிறது. சில தருணங்களில் குடித்தல் என்பது வெறுமனே கேளிக்கை செயல்பாடு என்பதைத் தாண்டி அது ஒரு கலையாக எப்படி மாறுகிறது என்பதாகக் கதை உருள்கிறது. குறிப்பாக மதுவிடுதிகளில் குடித்தல் என்பது காலங்காலமாக ஒரு தொடர்ச்சியான செயல்பாடாக இருந்து வருவதை அவதானிக்க முடியும். இந்தக் கதையில் நாராயணன் விடுதியில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எவர் வரவையோ எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறான். அப்போது அவனின் காதலியை மனதில் நினைத்து திட்டுகிறான். இந்த இரண்டும் ஒரு சேர நிகழ்கிறது. வெண்ணிற மதுவுடன் அவனுக்கான பக்க உணவுகளும் மேசையில் வந்து குவிகின்றன. இந்நிலையில் அவன் அவனுக்கான உணவைத் தேர்ந்தெடுக்கிறான். மேலும் ஒரு கட்டத்தில் அவன் குடிநோயாளியாக மாறி மற்றொரு உன்னத நிலையாகத் தன்னை உணர்கிறான். மேலும் குடி மனநிலை பெரும்பாலும் தனிமையை விரும்பாது. அது கூட்டுத்தனத்தையே விரும்பும். இந்தக் கதையில் நாராயணன் அவ்வாறான விரும்பியாக இருக்கிறார். குடி எப்படி மனிதனைப் பல்வேறு கட்ட நிலைகளுக்கு விரித்துக் கொள்கிறது, பல மனங்களை உற்பத்தி செய்கிறது என்பதாக இருக்கிறது வெண்ணிற மது வகை.
பஷீரிஸ்ட் கதை இந்தத் தொகுப்பின் மையமாக இருக்கிறது. மொத்தக் கதைகளின் குவியப்படலாக இருக்கிறது. கதைக்களம் பேருந்தில் ஒருவரின் நீண்ட தூர பயணத்தைப் பற்றியதாக இருக்கிறது. பயணக்காட்சிகள் ஒரு பெரும் அனுபவ சித்திரத்தை உருவாக்குகின்றன. பஸ்ஸில் அவர் ஏறுவதில் தொடங்கி இறங்குவது வரையிலான அனுபவப் பதிவு கதையாக நகர்கிறது. திருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்குப் பயணம் செய்பவர் அதே பேருந்தில் பழனி வரை செல்ல விரும்புகிறார். பின்னர் திண்டுக்கல்லில் இறங்கி வேறு பேருந்து பிடித்து பழனி செல்லலாம் என்று கருதும் அவர் பேருந்தில் விளையாட்டாக நடந்து கொள்கிறார். குறிப்பாக வெளியே கையை நீட்டுகிறார். அதற்கு நடத்துநரும், ஓட்டுநரும் எதிர்ப்பு தெரிவித்துக் கையை வெளியே எடுக்கச் சொல்கின்றனர். மேலும் இவரின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் சக பயணி ஒருவரும் கையை வெளியே நீட்டியதற்காக இவரைத் திட்டுவது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. இதைக் கண்டிக்க தகுதி பெற்ற நடத்துநரும் கடைசி இருக்கையில் உட்கார்ந்து பெண்ணுடன் பேசும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இப்படியான விநோத விளையாட்டுகளை நிகழ்த்தும் கதாபாத்திரமாக பஷீரிஸ்ட் இருக்கிறது. இந்தப் பயண நிகழ்வு கதையில் சாதாரணமாக கடந்து போகாமல் அதற்குள் ஒரு சிறந்த புனைவு இழலாடிக்கொண்டே இருக்கிறது. மேலும் சக பயணியிடம் மலையாளத்தில் உரையாடும் தன்மையும், அந்த மொழி சார்ந்தும், நிலம் சார்ந்தும் உரையாடும் தன்மையும் இதில் இடம் பெறுகிறது. பேருந்து பயணம் கதாநாயகர்களுக்கு சிறந்த அனுபவ வாசிப்பைக் கொடுக்கிறது. இதில் பயணமும், பயணமற்ற நிலையும் தனித்து இயங்குகின்றன. கதையில் இரண்டுமே அதனதன் போக்கில் நிகழ்கின்றன. இதன் தொடர்ச்சியில் இது சிறந்த மொழி கடப்பு கதைவெளியாக இருக்கிறது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இருமொழிகள் இதில் பின் தொடர்ந்து பயணிக்கின்றன. மேலும் இங்கு கதைமாந்தர் என்பது பிரதி பெயர்ச்சொல்லாக, பிரக்ஞை பூர்வமாக தன் சுயம் சார்ந்த பிரதிபலிப்பாக இருக்கிறது. ஓர் அர்த்தத்தில் சுயமே இந்தக் கதையில் உரையாடுகிறது எனலாம். அதுவே இந்தக் கதையின் புனைவாக்கத்தை இன்னும் வலுவாக்கம் செய்கிறது.
புளிப்பான காதல் கதை ஆண், பெண் இருவரின் காதல் கதைகளைப் புனைவில் அதன் நெகிசிப்பின் வடிவமாக வெளிப்படுத்துகிறது. காதல் என்பது உடைமை அல்ல. மாறாக அது ஒரு போற்றுதல், பாராட்டுதல் என்பார் ஓஷோ. பூவைக் கண்டால் அதன் போக்கில் விட்டுவிடுவது போன்றது காதல். ஆனால் பெரும்பாலான காதல்கள் அனைத்துமே பெண்ணை உடைமையாக கருதும் ஒன்றாகத்தான் இருக்கின்றன. இங்கு பெண்ணின் மனதோடு இணைத்து பெண்ணின் உடலும் உடைமையாகிறது. இந்தக் கதையில் ஜீவனும், மாலதியும் காதலர்கள். காதலின் தருணத்தில் அடிக்கடி வாதா மரத்தின் அடியில் உட்கார்ந்து மணிக்கணக்கில் உரையாடுவார்கள். அது அவர்களின் நனவிலி மனதில் ஆழப்பதிந்த ஒன்றாக மாறியது. இந்நிலையில் திருமணம் என்பது ஒருவகையில் காதலுக்கு எதிர்நிலையில் இருக்கிறது. முந்தைய உரையாடல்கள் இப்போது இல்லை. இந்த இடத்தில் பெண் வீட்டை நிர்வகிப்பவளாகவும், குழந்தை பெறும் இயந்திரமாகவும் மாறுகிறாள். மாலதியின் கதையும் அதுதான். அவள் திருமணம் முடிந்து கர்ப்பிணியாகி பிரசவத்திற்காகத் தாய்வீட்டிற்குச் செல்லும்போது ஜீவனின் குழந்தை பிறப்பு சார்ந்த குறுஞ்செய்திகளால் மிகுந்த சங்கடத்திற்குள்ளாகிறாள். மேலும் ஜீவன் அவளிடம் அவ்வளவாக அலைபேசுவதுமில்லை. மேலும் ஜீவன் வாதா மரத்தின் புனர் நினைவுகளால் உந்தப்பட்டு அதைக் குறித்து வெளிப்படுத்தும் வரிகள் முக்கியமானவை. “நமக்கான புராதன கல்லறை தோட்டத்தில் இன்றும் நமக்குப் பதிலாக பாம்புகள் ஊர்ந்து கொண்டிருக்கின்றன.” காதலர்களின் அனுபவங்களும், கதாபாத்திரங்களும் இந்தக் கதையில் உரையாடல் மூலம் மாய எதார்த்தமாக வெளிப்படுகிறது.
சிதைந்த மனம் வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களையும் புள்ளியிட்டுச் செல்கிறது. அந்தக் கட்டங்களை சராசரி மனிதன் எதிர்கொள்ளும் விதம் எதிர்பாராத தொடர்ச்சியை அளிக்கிறது. இதனால் மனிதன் அடிக்கடி நெருக்கடிகளை சந்திக்கக்கூடிய நபராக மாறிப் போகிறான். ஜாகிர்ராஜாவின் கதைகள் அம்மாதிரியான மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இப்படியான சராசரி மனித வாழ்வைப்பற்றிக் குறிப்பிடும் பிற கதைகளிலிருந்து இந்தக் கதைகள் தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கின்றன. மேலும் தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் சிக்கல்களை வெளிப்படுத்தும் பிற கதைகளிலிருந்து இவை மாறுபடுகின்றன. காரணம், இது அவரின் முந்தைய கதைகளைப் போலல்லாமல் சகலவிதமான மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களையும், நெருக்கடிகளையும் பேசுகிறது. வெறும் எதார்த்தத்தையும், பிரதிநிதித்துவத்தையும் மட்டுமல்லாமல் அதனைத் தாண்டியும் தன்னை மாயவெளியாக விரித்துக்கொள்கிறது. ஒவ்வொரு கதைகளுடன் நாம் நகரும்போதும் இதனை உணர்ந்து கொள்ள முடியும். மேலும் வெறுமனே சம்பவங்களைக் கோர்க்காமல் அதனைத் தாண்டிய புனைவாக இவை கடந்து செல்கின்றன. பஷீரிஸ்ட் தொகுப்பின் கதைகள் அனைத்துமே நமக்கு சரியான புனைவு அனுபவத்தைக் கொடுக்கின்றன எனலாம்.
பஷீரிஸ்ட் (சிறுகதைகள்)
ஆசிரியர் கீரனூர் ஜாகிர் ராஜா
உயிர்மை பதிப்பகம் பக்கம்: 128; விலை:130;
புதிய எண்.79, ப.எண்.39 மேற்கு போயஸ் சாலை
(இளங்கோ சாலை – அண்ணா அறிவாலயம் பின்புறம்) தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
ஜிமீறீமீ: 044 – 48586727, 90032 18208.