ரோசா பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவின் சோசலிசப் புரட்சிக் கதாநாயகி. அவரின் நூற்றாண்டு நினைவு தற்போது ஜெர்மனி முழுக்க கடைபிடிக்கப்படுகிறது. காரணம், ஜெர்மன் சர்வாதிகார ராணுவத்தினரால் அவர் கொல்லப்பட்டு இந்த வருடத்தோடு நூறு வருடங்கள் ஆகின்றன. சர்வாதிகாரத்தின் கோரத்தை இன்று ஜெர்மனி துயரத்தோடு நினைவுகூர்கிறது.
ரோசா லக்சம்பர்க் 1871 மார்ச் 5இல் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த போலந்தின் சமோஸ்க் நகரில் மர வியாபாரி ஒருவரின் மகளாகப் பிறந்தார். மேலும் அவரின் தந்தை ஜெர்மானிய தாராளவாத கருத்துக்களை உள்வாங்கியவராக இருந்தார். அவரின் தாயார் மதவாதியாக இருந்தாலும் சிறந்த புத்தக வாசிப்பாளராக இருந்தார். அவர்கள் ஜெர்மனி, போலிஷ் மற்றும் ரஷ்யன் மொழிகளை அறிந்தவர்களாக இருந்தார்கள். பின்னர் அவர்களின் குடும்பம் போலந்து தலைநகர் வார்சாவிற்கு இடம் பெயர்ந்தது. இளமைக்காலத்தில் ரோசா உடல்நிலை பாதிக்கப்பட்டு படுக்கையாகி இறுதியில் ஒரு கால் ஊனமுற்றவராக மாறினார். இருந்தும் அவர் மனம் தளராமல் தன் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார்.
ரோசாவின் பள்ளிப்படிப்பு காலம் முழுவதும் வார்சா நகரில் நிகழ்ந்தது. அன்றைய காலத்தில் அங்கு யூதர்களுக்கு எதிரான மனநிலை இருந்தது. இதன் பிறகு ரோசா 1886 இல் போலந்து இடதுசாரிக் கட்சியான தொழிலாளர் கட்சியில் இணைந்தார். அது அவரின் மேல்நிலைப்பள்ளிப் பருவமாக இருந்தது. அந்தக் கட்சியில் சில காலம் செயல்பட்டார். பின்னர் நடந்த நாடு தழுவிய பொது வேலைநிறுத்தக் காலத்தில் அந்தக் கட்சி தடை செய்யப்பட்டது. பின்னர் தலைமறைவாக ரோசா செயல்பட்டார். அங்கிருந்து பின்னர் சுவிட்சர்லாந்திற்குச் சென்றார். அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தத்துவம், வரலாறு, அரசியல், பொருளாதாரம் மற்றும் கணிதப்பாடங்களை ஆழ்ந்து கற்றார். அதன் பின்னர் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டார். அது போலந்தின் தொழிற்துறை வளர்ச்சி என்ற தலைப்பில் பின்னர் புத்தகமாக வெளிவந்தது. அன்றைய காலத்தில் சுவிட்சர்லாந்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்ட அபூர்வமான பெண்களில் ரோசாவும் ஒருவர். அதன் பின்னர் இடதுசாரி அரசியலுக்குள் நுழைந்தார் ரோசா லக்சம்பர்க். அது ஐரோப்பிய மார்க்சியர்களான பிளகானவ் மற்றும் பாவெல் ஆக்ஸ்ல்ராட் போன்றவர்களை அடியொற்றியதாக இருந்தது.
லக்சம்பர்க்கின் அரசியல் வாழ்க்கையின் மற்றொரு பயணமாக அவரின் பத்திரிகை அனுபவம் இருந்தது. இதன் தொடர்ச்சியில் 1893 இல் தோழர்களுடன் இணைந்து தொழிலாளர் துயரம் என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். அது போலந்து சோசலிசக் கட்சியின் தேசியக் கொள்கைகளை எதிர்ப்பதாக இருந்தது. மேலும் சுதந்திர போலந்தின் உருவாக்கம் என்பது ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் ரஷ்யப் புரட்சியின் மூலம் மட்டுமே சாத்தியப்படும் என்று ரோசா நம்பினார். மேலும் தேசியப் போராட்டம் என்பது அந்நாட்டின் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும். வெறுமனே சுதந்திரப் போராட்டமாக அது சுருங்கக்கூடாது என்றார். மேலும் சுய நிர்ணயம் என்ற தேசிய கருத்தாக்கத்தில் மாறுபட்ட நிலைபாட்டைக் கொண்டார். இது லெனினுக்கும் அவருக்கும் இடையேயான கருத்து மோதலுக்கு வழிவகுத்தது. இதனிடையே தோழர்களுடன் இணைந்து போலந்து மற்றும் லிதுவேனியா சோசலிச ஜனநாயகக் கட்சியை ஏற்படுத்தினார். அதன் பிரதான கருத்தியலாளராக மாறினார்
தேசியம் பற்றிய ரோசா லக்சம்பர்க்கின் பார்வை மாறுபட்டது. அவர் தேசியப் பிரச்சினை என்பது வெறும் மொழி என்பதைத் தாண்டி அந்த தேசத்தின் உற்பத்தி வளர்ச்சி சார்ந்த சக்திகளோடும், அதன் முரண்களோடும் உள்ள போராட்டமாக இருக்க வேண்டும் என்றார். மேலும் தேசிய இன சுய நிர்ணய உரிமையை (Nations rights to Self Determination) முதலாளித்துவ உற்பத்தி சமூக அமைப்பிலிருந்து நாம் தேடக்கூடாது என்றார் ரோசா. அது தேசிய இனப்பிரச்சினைக்கு சரியான நடைமுறை தீர்வை அளிக்காது என்றார். இந்த விஷயத்தில் மார்க்சிய தத்துவவாதியான கார்ல் காவுட்ஸ்கியின் தேசியக் கோட்பாடுகளை ரோசா ஓரளவு ஏற்றுக்கொண்டார். காவுட்ஸ்கி கோட்பாடுகளின் தாக்கம்தான் பிந்தைய நாட்களில் ரோசாவின் தேசிய இனப்பார்வையாக விரிவடைந்தது. மேலும் தேசிய இன சுய நிர்ணய விடுதலை மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு விடலாம் என்பது ரோசாவைப் பொறுத்தவரை வெறும் கற்பனாவாதமே. காரணம், அதற்குள் இருக்கும் வெளிப்படையான அரசியல் மற்றும் வர்க்க சக்திகள்தான். காரணம், தேசிய இன அடிப்படையில் அவை விடுதலை பெற்றால் அவை மற்றொரு பூர்ஷ்வா இன மேலாதிக்கத்தில்தான் வரும் என்பது ரோசாவின் கருத்து. மேலும் காவுட்ஸ்கியின் சர்வதேச மதங்கள் குறித்த பார்வையையும் ரோசா தன் தேசிய இன ஆய்விற்கு எடுத்துக்கொண்டார். காவுட்ஸ்கி தேசியவாதமும், சர்வதேசியமும் என்ற தன் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் மொழி எவ்வாறு தேசியத்தை உருவாக்குகிறது என்றும் அதன் பிந்தைய வளர்ச்சி நிலை குறித்தும் விளக்குகிறார். அவரின் பார்வையில் மொழி என்பது சமூக உறவில் மிக முக்கிய கருவி. அந்த சமூக உறவு அதன் பொருளாதார வளர்ச்சியுடன் விரிவடைகிறது. அப்புறம் மொழி வளர்ந்து தேசத்தை விரிவடையச் செய்கிறது. இவை விரிவடைந்து பிற தேசங்கள்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. அவற்றின் மொழியை அழித்து அந்தத் தேசங்களைக் காலி செய்கின்றன. ஒரு கட்டத்தில் ஏகமான சர்வதேசியமாக உருவெடுக்கின்றன என்றார் காவுட்ஸ்கி. இங்குதான் அவர் யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்தை தன் ஆய்விற்கு எடுத்துக்கொண்டார். சர்வதேசிய மதங்களாக உருவான இவை ஒவ்வொரு தேசத்திலும் அவற்றின் மொழியை அழித்துப் பொது முதலாளித்துவ குணாதிசயங்களுடன் வளர்ந்து அவற்றிற்கான பொது மொழியை உருவாக்கிக்கொள்கின்றன என்றார் காவுட்ஸ்கி. யூதத்திற்கு ஜெர்மன், பிரெஞ்சு, ரஷ்யன் ஆகியவை சர்வதேச மொழியாகி இருக்கின்றன. கிறிஸ்தவத்திற்கு ஆங்கிலமும், இஸ்லாத்திற்கு அரபியும் சர்வதேசியமாகி உள்ளன. இவற்றிற்கான தேசங்களில் பல மொழிகள் இருந்தாலும் அவற்றை சிறுமையாக்கி பொதுவான மொழியை இவை முன்னெடுக்கின்றன என்றார் காவுட்ஸ்கி. இன்றைய நிலையில் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை இது ஓரளவு உண்மை என்றாலும், இஸ்லாத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் உண்மையே. காரணம், இஸ்லாமை உலக மயமாக்க அல்லது அரபுமயமாக்க அரபு மொழி சார்ந்த உணர்வை உலக இஸ்லாமியர்களிடையே முன்னெடுத்து வருகின்றன அங்குள்ள முதலாளித்துவ சக்திகள். காவுட்ஸ்கியின் இந்தக் கண்ணோட்டம் ரோசா லக்சம்பர்க்கைக் கவர்ந்ததன் அடிப்படையில் அவர் பிந்தைய கட்டத்தில் தேசிய இனப்பிரச்சினையில் லெனினோடு மாறுபட்டார். தேசிய இன சுய நிர்ணய உரிமையில் எது தேசியம்? எது சுய நிர்ணயம்? அதைத் தீர்மானிப்பது யார்? என்று கேட்டார் ரோசா. அதை முன்னெடுக்க யாருக்குத் தகுதி இருக்கிறது? பூர்ஷ்வா அரசியல் கட்சிக்கா அல்லது பிற கட்சிகளுக்கா? அந்தத் தேசிய இன மக்களின் பொது விருப்பத்தை தீர்மானிப்பது எந்த சக்தி என்பன போன்ற பல கேள்விகளைக் கேட்டார் ரோசா. அதை அந்நாட்டு மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மாறாக, பூர்ஷ்வா சக்திகள் அல்ல என்றார் ரோசா. அதன்படி பிரெஞ்சுப் புரட்சி என்பது அந்நாட்டு மக்களின் தேசிய இன உணர்வின் வெளிப்பாடு. ஆனால் நெப்போலியன் பிரான்சில் தான் மேற்கொண்ட சீர்திருத்தங்களையும், நாடுபிடிக் கொள்கைகளையும் அந்நாட்டு மக்களின் பொது விருப்பமாகப் பிரகடனம் செய்தார். இதுதான் இந்த சுய நிர்ணய கோட்பாட்டின் சிக்கல் என்றார் ரோசா. இவ்வகையில் ரோசாவின் தேசிய இனப் பிரச்சினை சார்ந்த பார்வை முக்கியத்துவம் பெறுகிறது
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரோசா ஜெர்மனிக்குத் திரும்பி அங்கு ஜெர்மன் சோசலிச ஜனநாயகக் கட்சியில் சேர்ந்தார். அங்குதான் அவரின் சக தோழரான லீப்னெக்ட்டின் அறிமுகம் கிடைத்தது. முதலில் ஜெர்மனியில் ரோசா நிரந்தரமாகத் தங்க அவருக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை. பின்னர் ஜெர்மனியைச் சார்ந்த குஸ்தவ் லபக்கை ரோசா திருமணம் செய்து அதன் மூலம் அந்நாட்டுக் குடியுரிமையைப் பெற்றார். மேலும் அங்குள்ள இடதுசாரிக் கட்சியான ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியில் இணைந்து ரோசா தீவிரமாகச் செயல்பட்டார். மேலும் கட்சியின் மகளிர் அணியை வலுப்படுத்தி ஐரோப்பிய உழைக்கும் பெண்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தார். அது ஐரோப்பிய வரலாற்றின் மிக முக்கிய காலகட்டமாக இருந்தது. அந்தத் தருணத்தில் அவருக்கு கிளாரா செட்கினுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் இணைந்து பல அரசியல் போராட்டங்களில் பங்கு கொண்டார். மேலும் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் சில கருத்தியல் சார்ந்த விஷயங்களில் மாறுபட்டார் ரோசா. இருந்தும் அதனோடு இணக்கமாக இருந்தார். பின்னர் முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் அந்தக் கட்சி போரில் ஜெர்மனிய அரசை ஆதரித்த காரணத்தால் அதிலிருந்து விலகினார் ரோசா. பின்னர் முதலாம் உலகப்போருக்கு எதிராக ஸ்பார்ட்டகஸ் லீக் என்ற போர் எதிர்ப்பு அமைப்பைத் தொடங்கி ஜெர்மனியில் போர் எதிர்ப்பு செயல்பாடுகளில் ஈடுபட்டார். மேலும் போரில் ராணுவ வீரர்களாக உழைக்கும் வர்க்க இளைஞர்கள் கலந்து கொண்டு அதில் அநியாயமாக மாண்டு போகிறார்கள் என்றார் ரோசா. முதலாளித்துவம் தன்னை விரிவுபடுத்திக்கொள்ள அப்பாவி உழைக்கும் வர்க்க இளைஞர்களைப் போருக்குப் பயன்படுத்துகிறது என்றார் ரோசா.
ரோசாவின் அரசியல் மற்றும் கோட்பாட்டு பயணத்தின் மிக முக்கிய மாறுபாடு என்பது ரஷ்யப் புரட்சியை அவர் விமர்சித்த விஷயமாகும். அதாவது 1917இல் நடந்த ரஷ்ய போல்ஸ்விக் புரட்சியை அவர் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் தோல்வி என்றார். புரட்சி விஷயத்தில் அவரின் நிலைபாடு பாட்டாளி வர்க்கத்தின் இப்போதைய உடனடிப் பணி என்பது ஏகாதிபத்திய முதல் உலகப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். இந்நிலையில் ரஷ்யப் புரட்சி என்பது தாராளவாத பூர்ஷ்வாக்கள் பாட்டாளிகளின் அதிகாரம் என்ற பெயரில் ஆட்சிக்கு வருவதாகவே இருக்கும் என்றார் ரோசா. இதனை மறுத்த லெனின் ரோசாவின் இந்தக் கருத்து மார்க்ஸ் கால செவ்வியல் குறிப்புகளாகும். நாம் 1917 ஆம் ஆண்டைய ரஷ்யாவில் நிற்கிறோம் என்றார். மேலும் பூர்ஷ்வா கட்சிகளுக்கு எதிரான எங்களின் எதார்த்த அனுபவங்கள் மார்க்ஸ் கால உத்திகளை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளின என்றார் லெனின். லெனின் மற்றும் டிராஸ்ட்கியின் எதிர் வாதங்கள் அன்றைக்கு ஜெர்மானிய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், போல்ஸ்விக் கட்சிக்கும் இடையேயான கருத்தியல் மோதலாகத் தொடர்ந்தன.
ரோசாவின் தத்துவப் பயணத்தில் அவரின் நூல்கள் மிக முக்கியமானவை. குறிப்பாக, மார்க்ஸின் மூலதனத்தின் தொடர்ச்சியாக அவர் எழுதிய மூலதனக் குவியல் (Accumulation of Capital) மிக முக்கியமானது. அதில் மார்க்சின் மூலதனம் சார்ந்த சில விஷயங்களை விமர்சிக்கிறார் ரோசா. மேலும் தேசிய இனப்பிரச்சினை (The National Question) என்ற நூலும் தேசிய இனப்பிரச்சினையை அதற்குரிய தர்க்கத்துடன் மிக ஆழமாக ஆராய்ந்தது. இதனைத்தொடர்ந்து கோட்பாடும் நடைமுறையும் (Theory and Practice), மூலதனக் குவியல் – எதிர் விமர்சனம் (The Capitalist Accumulation – An Anti-Critique) போன்ற முக்கிய நூல்களும் ரோசாவிடமிருந்து வந்தன.
ரோசாவின் கடைசிக்காலம் ஜெர்மானிய சர்வாதிகார அரசிற்கு எதிரான தீவிரப் போராட்டமாக அமைந்தது. இவரும் தோழர் லீப்னெக்ட்டும் இணைந்து அதனை முன்னெடுத்தனர். இந்நிலையில் ரோசா தொடங்கிய போர் எதிர்ப்பு அமைப்பான ஸ்பார்ட்டகஸ் லீக் 1918இல் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியாக உருமாற்றம் பெற்றது. இந்நிலையில் அதே ஆண்டில் ஜெர்மானிய சர்வாதிகார அரசு ரோசாவையும் மற்ற புரட்சியாளர்களையும் ஒடுக்க நினைத்தது. இதனால் ரோசாவும், லீப்னெக்ட்டும் தலைமறைவானர்கள். அவர்களின் இருப்பிடத்தை அறிந்த ஜெர்மானிய ராணுவம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்து சிறைக்குச் செல்லும் வழியில் கொடூரமாக அவர்களைக் கொன்று பிணத்தை ஆற்றில் வீசியது. அவர்களின் உடல்கள் சில மாதங்கள் கழித்துதான் கண்டுபிடிக்கப்பட்டன. ஆக, ரோசாவை சர்வாதிகாரம் கொன்றாலும் அவரின் கருத்தியலை அழிக்க முடியவில்லை. வரலாறு மட்டுமே உண்மையான ஆசிரியர், புரட்சி என்பது பாட்டாளி வர்க்கத்தின் சிறந்த பள்ளி என்று குறிப்பிட்ட ரோசா லக்சம்பர்க், உலக மார்க்சியத்தின் இரு நூற்றாண்டு பயணத்தின் முடிவற்ற கதாபாத்திரமாக இருக்கிறார். அவரின் நூற்றாண்டை ஜெர்மனி இன்றும் நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறது.