“All history is written in Sperm and Blood”
-Gaspar Noe
மனிதனின் கீழ்மைகள் மற்றும் இருண்ட பக்கங்கள் மீது ஆர்வமற்றவர்கள், மனித இருப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் மகான்கள்தான். மனிதர்கள் காலங்காலமாகப் புனித பிம்பங்களால் தங்களைக் கட்டமைத்துக்கொண்டு நிரம்பி வழிகின்றார்கள். ஆக்கவல்லவன், உலகின் மிக உன்னதமான படைப்பு மனிதன் என்பதைத்தாண்டி அவன் அழிக்கவும் வல்லவன் என்பதைத் தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்தான் இங்கு ஏராளம்.
சுவர்க்கம் சார்ந்து வேதநூற்புனைவுகள் பலதும் விளக்கிட முற்பட்டாலும் அவற்றைப் பூமியில் நிகழ்த்துவது என்பது முரண். “எல்லாமே சுபம், எல்லாமே நலம்” என்ற ஒரு கோட்பாடே பூமியில் கிடையாது. உண்மையில் சுவர்க்க பூமியாக இவ்வுலகைக் கட்டமைக்கவே அரசும், சமூக ஒழுங்கு விதிமுறைகளும் முயற்சிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். குறிப்பிட்ட ஒழுங்கின்படி நடக்கவும், அவ்வொழுங்கை மீறுபவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்பதுமான அதிகாரக் கட்டமைப்புகளில் இருந்தே வன்மங்கள் ஊற்றெடுக்க ஆரம்பிக்கின்றன. நரகின் திறப்பு பூமியில் இலகுவாக நிகழ்த்தப்படுகின்றது. மனிதர்கள் ‘அடையாளங்கள்’ என்னும் பேரிலும் ‘சட்டம்’ என்னும் பேரிலும் நரகத்தின் வாசனையைக் காலங்காலமாக நுகர்ந்து கொண்டிருக்கிறார்கள். மனித இனமே தன் இனத்தைக் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த வரலாற்றுப் பெருமைகளைத் தன்னகத்தே கொண்டவர்கள்தான் நாம். இங்கு சுவனம் என்னும் வார்த்தை வெறுமனே நரகத்தின் எதிர்ச்சொல் அல்லது ஒரு போலிப்புனைவேயன்றி வேறில்லை.
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பன்முகக் கலாச்சாரவாதமும் (Multiculturalism) அதனுள் நிலவும் முரண்பாடுகளும் முடிவுக்குக் கொண்டுவரப்படாத ஒன்று. பல்வேறுபட்ட நாடு, சமூகங்களிலிருந்து குடிபெயர்ந்த மனிதர்கள் பிரான்ஸைப் புகலிடமாக கொண்டு வாழ்கையில், கலாச்சார முரண்பாடுகளும், அடையாள அதிகார வன்முறைகளும் தவிர்க்க முடியாததாகவே இருந்துவிடுகிறது. ஒவ்வொருவரும் இன்று தாராளவாதம் மற்றும் மதவாதம் என்னும் இரண்டு கொள்கைக்குள்ளும் நின்றுகொண்டு துன்புறுகின்றனர். அறிவொளியில் நிரம்பிய மேற்கிலும்கூட பெண்தான் இன்னும் பண்பாட்டின் காவியாக இருந்துகொண்டிருப்பது தாராளவாதத்தின் அபத்தம். அவரவர் கொள்கைகளின் பின்னணியிலிருந்து அகம்சார்ந்த வன்மங்களும் காழ்ப்புணர்வுகளும், அதனைத் தொடர்ந்து புறம்சார்ந்த வன்மங்களும் தோற்றுவிக்கப்படுகின்றது.
தனிமனித அல்லது குழுக்களின் அடையாளங்கள், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் மனிதர்கள் பிறர்மீது திணிக்கும் மதிப்பீட்டுப் பார்வைகளுமே வன்மங்களுக்கான உந்து சக்தியாக இருந்துவிடுகிறது. பூமியில் நிகழ்த்தப்பட்ட குறிப்பிட்ட மனித வன்மங்களின் தொகுப்பை, மரணத்தை நோக்கிய உச்சகட்ட அனுபவப் பயணமாக காட்சிப்படுத்திய திரைப்படம்தான் இயக்குனர் Gaspar noeவின் ‘Climax’. ‘வெறுமனே ரத்தமும் சதையும் பல்வேறு உணர்வுகளையும் கொண்ட மனிதர்களால் மாத்திரம் நிரம்பிய ஒரு பாதுகாப்பான சூழல், திடீரென அசாதாரணமான சூழலாக மாற்றப்பட்டு, பாதுகாப்பை இழந்து, மனிதனைக் கண்டு மனிதனே அஞ்சி ஓடி ஒளிந்துகொள்கின்ற கொடூரத்தை அனுபவமாக சுவைக்க அழைக்கின்றது.’ மனிதர்களின் அழிவை நோக்கிய ஒரு கொடுங்கனாப்பயணத்தை திரையில் பிரம்மாண்டமான பல்வகைத் தன்மைகொண்ட நடனங்களுடன் பேச ஆரம்பிக்கிறது ‘Climax’.
பிரெஞ்சு நாட்டின் பிரம்மாண்டமான கொடியின் முன்னால், நிகழ்த்தப்படும் முதலாவது நடன ஒத்திகையானது, பல்வகைத் தன்மைகளுடன்கூடிய கலாச்சாரம், பண்பாடுகளால் பின்னப்பட்ட பிரெஞ்சு சமூகத்தைப் பிரதிபலிப்பதோடு, அவர்கள் அங்கு உருவாக்க முயற்சி செய்யும் கொண்டாட்டமான, உலகின் கதையை முன்னிறுத்திப் பேசுகிறது. ராணுவப்படை அணிவகுப்பு, கட்டுப்பாடு, குழப்பம், விடுதலை, தனிமனித சுதந்திரம், ஒற்றுமை போன்ற கருப்பொருளை நிறுவி அதனையே ஒரு சந்தமாகப் பயன்படுத்தி உணர்ச்சிமிக்க கொண்டாட்ட அனுபவத்தை நிகழ்த்திவிடுகின்றது. ஆரம்பத்தில் வேறுபட்ட பன்னாட்டு மனிதர்களை ஓரிடத்தில் பார்த்ததும் பார்வையாளர்களுக்கு ஆர்வத்தையும், மிரட்சியையும் ஏற்படுத்தாமல் இல்லை. இறுதியில் மூர்க்கத்தனமாக சமூகங்கள் தங்களுக்குள் குலைந்து, முரண்பட்டு வன்மமாக அழித்தலுக்குள்ளாக்குதல் நிகழ்தல்தான் மாபெரும் துயர்.
பல பண்பாட்டு சமூகங்களுடன் பின்னிப்பிணைந்து காணப்படும் பிரான்ஸ் எதிர் நோக்கும் தற்கால அரசியல், சமூகச் சிக்கலையும் அவற்றின் கோணத்தையும் மறைமுகமாக உருவக வடிவில் வெளிப்படுத்திப் பேசுகின்றது. இன்னும் ‘தத்துவார்த்த அடிப்படையில் மாத்திரம்’ பன்முகக் கலாச்சாரவாதத்தை ஏற்றுக்கொண்ட பிரெஞ்சு சமூகம் தற்காலத்தில் அதனை நடைமுறைப்படுத்தும்போது எவ்வாறான சிக்கல்களுக்கும் முரண்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்பதனைப் பிரதிபலிக்கின்றது. குறிப்பாக ஐரோப்பிய சமூக பன்மைத்துவக் கலாச்சாரவாதத்தின் தோல்வியையும் (The Failure of Multiculturalism) ‘Climax’ விமர்சிக்கின்றது.
முதலாவது நடன ஒத்திகையின் பின்னர் மது அருந்த இடைவேளை. இரு நீளமான ஷாட்கள்மூலம் அங்குள்ள நடனக்கலைஞர்கள் பற்றிய ஒரு பிம்பத்தை இயக்குனர் தந்துவிடுகிறார். நீண்ட உரையாடலில் அங்குள்ளவர்கள் மனநிலை, யார் யாரை விரும்புகிறார், யார் யாரை வெறுக்கிறார், யார் யாரைப் புணர ஆசைக்கொள்கிறார்? அவரவர் பாலியல் தேர்வுகள், இன்னும் பிரெஞ்சு நாட்டின்மீது கொண்ட வெறுப்புகள், ஆணாதிக்க மனநிலை என்பன வெளிப்படுத்தப்படுகின்றன. உண்மையில் ஒரு மனிதனை யார், அவன் எத்தகைய நிலையையும் பின்புலத்தையும் கொண்டவர் என்பதை அறிந்துகொள்ள பாலியல் பற்றிய வெளிப்படையான உரையாடல்கள் போதுமானது. Irrevesible திரைப்படத்தில் வன்புணர்ந்து கொண்டிருப்பவனின் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளைக்கொண்டே அவன் யார்? எத்தகைய பின்புலத்தைக் கொண்டிருப்பவன் என்பதைக் கண்டுபிடித்திருப்போம் இல்லையா? அது போன்றதொரு உரையாடல். ஒரு காட்சியை வசனம் எவ்வாறு நகர்த்தவேண்டும்? இன்னும் அந்த வசனம் காட்சியை எவ்வாறு செறிவாக்கி அவர்கள் பற்றிய ஒரு புரிதலைக் கொடுக்க வேண்டும் என்பதற்கு இக்காட்சிகள் சான்று.
இரண்டாவது, நடன அரங்கம் தன்னிச்சையாக உருவாக்கிய வட்டத்தினுள் நிகழ்த்தப்படும் நீளமான Top angle shots. இந்நடனக்காட்சியில் ஒவ்வொரு தனி நபரின் நகர்வும் ஒருவித உணர்ச்சிப் பிழம்புகளை வெளிப்படுத்தியும் அவர்களது தார்மீக ஒழுக்கங்களைக் கட்டவிழ்த்தியவாறும் ஒன்றித்துக் காணப்படும். அவர்களது அகச்சிக்கல்கள், தேவைகள், அவர்கள் உணர்ந்தவை, இன்னும் யார் யாரைத்தேடுகின்றனர்?, யாரை யாரை எதிர்கொள்கின்றனர். என்றவாறு முழுவதுமாக எவ்வித எல்லைகளும், தடைகளுமற்ற அவர்களின் நடனங்கள் வெளிப்படுத்தியது. இந்நடனம் மனிதர்கள் பற்றிய பிரக்ஞையை அதிகப்படுத்துவதோடு பிரான்சில் இருபதாம் நூற்றாண்டில் எழுந்த Expressionism, Cubism, Dadaism ஓவியங்களையும் நினைவூட்டிச் செல்லும். முக்கியமாக இந்த Top angle shots கியூபிசத்திற்கே (Cubism) உரித்தானது. பார்வையாளனின் பார்வையை மேலும் விஸ்தரிக்கவும், ஏக காலத்தில் மேலே, கீழே பக்கவாட்டுப் பகுதி போன்றவைகளைப் பார்வையாளர்கள் நகராமல் ஒரே இடத்திலிருந்தபடியே பார்ப்பதற்கான புதுமாதிரி இடத்தையும் பரிமாணத்தையும் அர்த்தப்படுத்திக்காட்டவல்லது. பார்வையாளர்கள் அந்த நடனக்காட்சியை எந்தக் கோணத்தில் எடுத்துப் புரிந்துகொள்வது? என்றவாறு மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் திளைக்கச் செய்திருக்கும்.
அங்குள்ளவர்கள் அருந்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட ஒருவகை மதுபானத்தை (Sangiriya) அருந்தியபின் ஒவ்வொருவரும் அசாதாரணமாக நடந்துகொள்ள ஆரம்பிக்கிறார்கள். ஒரு பெண் திடீரென நின்றவாறே சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கிறார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரும் தங்கள் மனங்களில் படிந்துள்ள ஆசைகளையும், அந்தரங்கங்களையும் கட்டவிழ்த்துவிட, ஆரம்பிக்கின்றனர். அவர்களுக்குள் சமூகங்களால் கட்டமைக்கப்பட்ட ஒழுக்க விதிமுறைகள் குலைத்துப் போடப்படுகின்றன. இவை அனைத்தும் அவர்களுக்குள் குடிகொண்டிருந்த கயமைகளாகவும் பிற மனிதர்கள்மீது செலுத்தும் வன்முறை மற்றும் அடக்குமுறைகளாகவுமே வெளிப்பட ஆரம்பித்தன. ஒவ்வொருவரும் அவரவர் தோற்றத்தில், நடத்தையில் இன்னொருவருக்கு தவறானவர்களாகத் தோன்ற ஆரம்பிக்கின்றனர். இன்னும் அவர்கள் சுய அறங்களைத் தொலைத்தவர்களாக மாற்றப்படுகின்றார்கள். அவர்களது பயணம் மோசமடைந்து அவர்களுக்குள்ளிருக்கும் பழங்குடிவாதம் இன்னும் இன்னும் மேலோங்குவதைக் காட்சிகளில் உணரக்கூடியதாக இருக்கும்.
திரைப்படத்தில் Selva (Sofia Boutella) என்னும் பிரதான துணைக் கதாபாத்திரம் மாத்திரம் சுய பிரக்ஞை மற்றும் பித்துநிலை இரண்டிற்கும் இடையில் சிக்கித் துன்புறுகிறார். LSD அந்த மதுபானத்தினுள் பழிவாங்கும் நோக்கிலோ அல்லது ஏதோ ஒரு சுவாரசியத்தை எதிர்பார்த்தோ யாரோ ஒருவரால் செலுத்தப்பட்டதாக அங்குள்ள குறிப்பிட்ட சிலர்மீது சந்தேகத்தின்பேரில் வன்மங்கள் நிகழ்த்தப்படுகின்றன.
மதுவை அருந்தாமலும் பெரிதாக பெண்கள்மீதும் நாட்டம்கொள்ளாமலும் தனித்து திரிந்த அரேபிய முஸ்லிம் Omar மீது முதலில் பழி போடப்பட்டு அந்த சமூகத்தை விட்டே நடுநிசிப் பனியிரவில் வெளித்தள்ளப்படுகிறான். உண்மையில் ஆரம்பகட்ட சுய அறிமுகத்தின்போதுதான் சுவனத்தை நம்புவதாக கூறியிருப்பான். அந்தவகையில் அவன் அங்குள்ள யார்மீதும் எவ்வித தேவையற்ற விமர்சனங்களும் முன்வைக்கவில்லை. இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட மதுவை நுகர அவன் விரும்பவில்லை. அவ்வளவுதான். இச்சம்பவத்தை தற்கால பிரெஞ்சு சமூகத்தில் நிகழும் முஸ்லிம்களுக்கும் தாராளவாத பண்பாட்டு சமூகமாகத் தன்னை நிறுவிக்கொண்டுள்ள பிரஞ்சு சமூகத்திற்கும் இடையில் நிகழும் கலாச்சார முரணைக் குறியீடாகக்கொண்டு வெளிப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். அதிலும் தாராளவாதக் கொள்கையைத் தன்னகத்தே கொண்டவர்கள் எதிர்நோக்கும் மிகப்பெரும் பதட்டம் மற்றும் அச்சங்களில் ஒன்று, அவர்களருகில் எவ்வித விமர்சனங்களோ வியாக்கியானங்களோ இல்லாமல் இருக்கும் மதவாதிகளை / அடிப்படைவாதிகளை முகங்கொள்வதுதான். அவர்கள் தங்களது கட்டற்ற இருப்பைப்பற்றி என்ன நினைப்பார்கள், எவ்வாறு விமர்சிப்பார்கள் என்ற பதட்டம் ஒருவித அருவெருப்பாகவும் குரோதமாகவும் தாராளவாதக் கொள்கையைக் கொண்டவர்கள் மனதில் ஊற்றெடுக்க ஆரம்பித்து விடுகின்றது.
“எங்களைப்போன்ற தாராளவாத நடவடிக்கையில் ஈடுபடாதவர்கள் எங்களைச் சார்தவர்களல்ல; அவர்களே குழப்பத்திற்கும் வன்முறைக்கும் காரணம்” என்பதாக, தற்காலத்தில் மதத்தின் பெயரிலான அதீதமான ஒழுக்கங்களைத் தன்னகத்தேகொண்ட முஸ்லிம்களை நாட்டைவிட்டு வெளியேற வைத்தால் நாட்டில் அனைத்தும் சுபமாகி சீராகிவிடும் என்ற பிரெஞ்சுக்காரகளின் போலி நம்பிக்கையை பறைசாற்றிய காட்சிதான் அந்த Omar ஐ வெளியேற்றிய காட்சி. அவனை வெளியேற்றிய பின்னும் வன்மங்கள் நீண்டு கொண்டுதான் இருந்தது.
அடுத்து சந்தேகப் பார்வையானது மது அருந்தாமல் கர்ப்பமுற்றிருக்கும் நிலையில் நோய்வாய்ப்பட்ட Louவை நோக்கித் திரும்பி அவளைச் சிதைக்கின்றது. திரைப்படத்தில் ஆரம்பத்தில் கருச்சிதைவுற்று ரத்தம் தோய்ந்தவளாக வரும் காட்சி கனமானது. இயக்குநரின் அனைத்து திரைப்படங்களிலும் கருக்கலைப்பு, அது தொடர்பான சமூக விமர்சனம் மற்றும் தனிமனித தேர்வு சுதந்திரம்சார்ந்து கேள்விகளைச் சுவடுகளாக விட்டுச்செல்வது இத்திரைப்படத்திலும் இடம்பெறத் தவறவில்லை. தன்னுடன் அமர்ந்து சற்றுமுன்னர்வரை உணர்வுப்பூர்வமாகப் பேசிக்கொண்டிருந்த நண்பன் Serpent, வேறு ஒருவனால் தன் காதலி கர்பமாக்கப்பட்டாள்; இருந்தாலும் நான் அவளைக் காதலிக்கிறேன், அவளுக்காக செல்வேன் என்று தன்மீது மென்மையான பிம்பத்தைக் கட்டமைத்தவன் உட்பட கூட்டத்துடன் சேர்ந்து, வெளிவராத சிசுவைக் கொல்லத் துடித்துக் கூச்சலிட்டுக்கொண்டு, “இந்தக் குழந்தையின் தந்தை யார்? நீ மணமுடித்தவளா? அதை அடித்துக்கொல், பின்னர் உன்னை நீயே மாய்த்துக்கொள், நீ இவ்வுலகில் வாழத் தகுதியற்றவள்” என்பதாக அவளது நடத்தை மற்றும் பண்பாடு விமர்சிக்கப்பட்டு, போதை தலைக்கேறிய குழுக்களால் தற்கொலை செய்வதற்கான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்ட வண்ணம் இருந்தன. அவளை அவளே காயப்படுத்தாவிடில் தாங்களே கொன்று தின்றுவிடும் மனநிலையில் அத்தனைப் பேரின் ‘பெண் ஒழுக்கம்’ தொடர்பான வன்மங்களும் கட்டவிழ்க்கப்பட்டன. இவ்வுலகில் மனிதப் பிறப்புபற்றியே பெண்ணால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கையில் குழந்தையின் தந்தை யார் என்ற அடையாளம் தெரியாத விடத்து இவ்வுலகில் வாழ்வதென்பதே பெரும்பாடு. இங்கு ஒரு குழந்தையின் அடையாளம் மற்றும் குடும்பக் கட்டமைப்பு, சமூக அங்கீகாரம் சார்ந்து அனைத்து சிக்கலும் ஒரு பெண்ணைச் சுற்றியே வட்டமடிக்கின்றது. இத்தகைய சூழலில், ‘இவ்வுலகானது மனிதர்கள் அடையாளங்களற்று வெறும் உயிரியாக வாழத் தகுதியற்ற இடம்’ என்பதை பிரதிபலிப்பதாகவே பிறக்காத அந்த சிசுவை தாயே வயிற்றிலடித்துக் கொல்லும், கொல்லத் தூண்டும் காட்சி.
இது தவிர்த்து David அமெரிக்காவைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரமாகக் காட்சிப்படுத்தப்படுகிறார். ஆனால் இந்த நாட்டைச் சேர்ந்தவர்தான் என்பதற்கான ஆதாரங்களை இயக்குநர் நம் நனவிலியுடன் நம்மை அறியாமலே தொடர்புபடுத்தி உணரச்செய்திருப்பார். கிட்டத்தட்ட Love திரைப்படத்தில் வரும் பிரதான கதாபத்திரமான Murphyயின் இருப்பையும் தோற்றத்தையும் ஒத்தவராக நம் சிந்தைக்குள் புகுத்தப்படுவார். Love திரைப்படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கதாபாத்திரமாக வரும் Murphyபிரான்சில் வசித்தபோதும் ஒரு அமெரிக்கனாக இருந்து தன்னுடைய சிக்கலான உளவியலை வெளிப்படுத்தியிருப்பார். பாலியல்சார்ந்த பன்முக இச்சைகள் மற்றும் பின்தொடரும் காதல் (stalking Love) என்பன David கதாபாத்திரத்திலிருந்து வெளிப்படும் (Selva David இருவருக்குமிடையில் தளர்வான ஒரு காதல் தூவப்பட்டிருக்கும்.) இருந்தாலும் பாரியளவில் பிரெஞ்சு சமூகம்மீது விமர்சனங்கள் ஏதும் அற்றவராக இருப்பார். இவரைக் கறுப்பினத்தவர்கள் குழுக்களாக விமர்சித்துக் கொண்டிருபார்கள். அவரது தோற்றம், பாலியல் தேர்வு மற்றும் பாலியல் நோய்கள் என்றவாறு அவர்சார்ந்த விமர்சனங்களும் காழ்ப்புணர்வுகளும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும். அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் நிறப்பாகுபாட்டினால் குறிப்பாக வெள்ளை மேலாதிக்கம் (White supermacy), நாசிசவாத தலைதூக்கல்களினால் அங்கு காலங்காலமாக நிகழ்ந்தேறிய கறுப்பின அடிமைத்தனங்கள் மற்றும் வன்மங்கள்பற்றி நாம் அறிவோம். அவற்றின் ஒரு பழிவாங்கும் படலமாகவே Davidஐ கறுப்பினத்தவர்கள் அனைவரும் சேர்ந்து அடித்து அவரது நெற்றியில் நாசிஸ சின்னத்தை லிப்ஸ்டிக்கினால் வரைந்து, கடைசிவரை அடித்தே கொல்வதனையும் காணலாம். பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட கறுப்பினத்தவர்களுக்காக எந்த ஒரு நீதியும் வழங்கப்படாத நிலையில், அவர்களுக்குள்ளே வன்மங்கள் எந்தெந்த மட்டங்களிலிருந்து வெளிப்படுகின்றன என்பதற்கான சாட்சியாக இக்காட்சியை எடுத்துக்கொள்ளலாம்.
அடுத்து பாலின உறவுச்சிக்கல்களில் பெருவாரியான சமூகங்களால் விமர்சிக்கப்படுவது Incest என்னும் ரத்த உறவுகளுக்குள்ளான காதல். காம இச்சைகள் பற்றியது. இயக்குனரின் முந்தைய படங்களான I Stand alone, Enter the void போன்ற திரைப்படங்களில் Incest உறவுச்சிக்கலின் தன்னிலை சார்ந்த நியாயங்களை முன்வைத்தும் அந்த உறவுக்குள் நிலவும் Possiveness மற்றும் சமூக அச்சங்களையும் வெளிப்படுத்தியது போன்று இத்திரைப்படத்திலும் Gazelle, Taylor என்னும் இரு கதாபாத்திரங்களைக் கொண்டு ஒவ்வொரு அடுக்குகளிலும் பேசப்படுகின்றது. ஆரம்பத்தில் Omar மீது பழிபோட்டு வெளிதள்ளத் தூண்டுதலாக இருந்தது Gazelle, Omar இன்மீது பித்தேறி அவன் பின்னால் அலைந்து திரிந்ததை சகிக்க முடியாமல் அவளது சகோதரன் Taylor இன் வெளிப்படையான பழிவாங்குதலே அன்றி வேறில்லை.
அதே போன்று தன் சகோதரி David உடன் இணக்கமாகத் திரிந்ததைக் கண்ட Taylor அவனையும் தாக்குகின்றான். ஒருகட்டத்தில் Gazelle உடன் Taylor வன்மமாக உறவுகொண்டிருக்கும்போது அதை David பார்த்துவிடுகின்றான். இதை அறிந்த சகோதரர்களான இருவரும் போதை தலைக்கேறிய பித்துநிலையிலும் சமூகத்தின் விமர்சனப்பார்வை குறித்து அச்சம்கொள்ள ஆரம்பிக்கின்றனர். Gazzele தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும், பெற்றோரிடம் சொல்லி முறையிடுவேன் என்றும் கூறி தன் சகோதரனை அச்சுறுத்துகிறாள். அவன் அவளை சமாதானம் செய்ய எத்தனிக்கிறான். விடிந்து உலகமே அமைதியானதும் அவன் தங்கையிடம் கூறும் முதல் வார்த்தை “தயவுசெய்து அப்பாவிடம் சொல்லிவிடாதே” என்பதுதான். குறிப்பாக Davidஐ கூட்டாகச் சேர்ந்து கொன்றதற்கு, இவர்களது அந்தரங்க உறவை 3வது நபரான David பார்த்ததும் ஒரு பெருங்காரணம். இங்குதான் ரத்த உறவுகளுக்குள் நிகழும் பாலியல் தொடர்புகளுக்கு, சமூகம் வழங்கும் தார்மீக ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடானது, மனிதர்களுக்குள் அச்சத்துடன்கூடிய வன்மத்தைக் கட்டமைத்திருப்பதனைக் காணலாம்.
இந்த மதுக் கொண்டாட்டத்தில் பெரிதாக ஆர்வமற்ற நான்கு நபர்கள் Omer, Louயுடன் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் Emmanuelleயும் அவளது மகனும்கூட இறந்துபோகிறார்கள். Emmanuelle ஆரம்பத்தில் இருந்தே தன் நிகழ்ச்சியை ஒழுங்குற நிகழ்த்த வேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பார். இந்நிகழ்வில் பெரிதாக ஈடுபட ஆர்வமில்லாமல் யாரையும் துன்புறுத்தாமல் ஒதுங்கியிருந்த அப்பாவிகள் அங்கு நடந்த குளறுபடிகளால் இறுதியில் மாய்ந்துபோகிறார்கள்.
மதுபானத்தில் LSD கலந்தது யார் என்கிற சந்தேகப் பர்வையை அங்குள்ள ஒவ்வொருவரது செயற்பாடுகள் மூலம் பார்வையாளர் அறிந்துகொள்ள ஆவலுற்றிருந்தாலும் இயக்குனர் அதை நிகழ்த்தியவர் யார் என்பதற்கான ஆதார துணுக்குகளைத் திரைப்படத்தில் சில காட்சிகளில் வைத்துவிடாமலும் இல்லை. இது இயக்குனரது படங்களைத் தொடர்ச்சியாக உள்வாங்கிப்பார்ப்பவர்களுக்கு ஒரு அற்புதமான விளையாட்டாகக்கூட தோன்றலாம்.
Berlin ஐச்சேர்ந்த Psyche என்னும் நடனப்பெண்ணின் மீதான சந்தேகம் இறுதியில் அவள்தான் செய்தாள் என்பதை ஊர்ஜிதப்படுத்தி விட்டிருக்கும். அவள் ஆரம்பத்தில் தன்னைப்பற்றிய அறிமுக உரையாடலின்போது தனக்கு Drugs இல் ஆர்வமில்லை என்றும், தான் அத்தகைய பயன்பாட்டையுடைய நண்பர்களையும் நாட்டையும் வெறுப்பதாகவும் கூறியிருப்பாள். அவளது நெருங்கிய நண்பன் ஒருவன் தன்னை வழியனுப்பும்போது கண்களுக்குள் Drugs துளிகளை உள்வாங்கிக் கொண்டதாக புகார் செய்து கொண்டிருப்பாள். இன்னும் ஜெர்மானிய நடிகையான Christiane- F போன்று மரணிக்க விரும்பாத நபராகவும் தன்னை முன்னிறுத்திக்கொள்வாள். திரைப்படத்தின் இறுதி வரை அவள் மாத்திரம் எந்த வன்மங்களுக்குள்ளும் ஆளாகாமல் விடிந்த பின்னும் தான்தோன்றித்தனமாக ஆடிக்கொண்டிருப்பாள். இறுதியில் தன் அறைக்குள் சென்று பையிலிருந்து சொட்டுமருந்துக் குப்பியை எடுத்து தனது ஒருபக்க கண்ணுக்குள் மாத்திரம் விட்டுக்கொள்வாள். இன்னும் ‘LSD Psychohtherapy’ மற்றும் ஜெர்மனிய நடிகையான Christiane- F தன் இளமைக்காலத்தில் Drugs பயன்பாடு மற்றும் அவற்றின் துன்பியல் அனுபவம் பற்றி சுய சரிதையான “Wir kinder vom Bahnhof zoo” என்னும் ஜெர்மனிய புத்தகமும் அவளது பைகளுக்குள்ளிருந்து வெளிப்பட்ட வண்ணமிருக்கும்.
‘Boring is a Unique Chance’ என்னும் வாசகம் திரையில் பிறப்பிக்கப்பட்ட பின்னர், சலிப்பூட்டும் விடயங்களை மிகவும் வெறுப்பவளாக Psycheஐ நாம் புரிந்து கொள்கிறோம். தன் பின்னால் அலைந்து திரியும் பெண்ணை “நீ சலிப்பூட்டுகிறாய், தொந்தரவு செய்யாதே” என்று கூறி அவளைப் புறக்கணித்துக்கொண்டே இருப்பாள். இன்னும் அவள் யாரிலும் நாட்டம் கொள்ளவுமில்லை. எதுவும் புதுமையாகச் செய்யவுமில்லை. “ஏன் அவளே தன்னிடமுள்ள LSDஐ மதுபானத்தில் கலந்துவிட்டு அமைதியாக அங்கு நிகழ்ந்தேறும் வன்மங்களை வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கக்கூடாது?” என்னும் கேள்வி இறுதியில் பெரும்பாலோர் மனதில் தோற்றுவிக்கப்பட்டிருக்கும்.
LSDயைப் பயன்படுத்துவதற்கான அனைத்து விதிமுறைகளையும் அதுசார்ந்த அறிவையும் பெற்றுக்கொண்டு எடுப்பவர்களுக்குப் பெரும்பாலும் அது ஒரு சிறந்த பயண அனுபவமாகவே (Goodtrip) இருக்கும். இன்னும் எதை உள்ளெடுத்துக்கொண்டோம் என்ற எந்த எதிர்பார்ப்பும் பிரக்ஞையுமற்று சந்தேகத்துடன் எடுத்துக் கொண்டவர்களுக்கு அது ஒரு கொடும் பயணமாகவே (Badtrip) அமைந்துவிடுகிறது. ஒருவித அசாதாரணமான நோய்த்தன்மைகாளான மாயத்தோற்றங்கள் (Hallucination), பகுத்தறிவற்ற முரண்பாடான நடவடிக்கைகள் (Irrational Behaviour), வன்மங்கள் (aggression and violence) மனப்பயம் போன்றவைகளைத் தோற்றுவித்து விடுகின்றது.
தொழில்நுட்பம் மற்றும் ஆக்கப்பூர்வமான படைப்பாக்கம் சார்ந்து இந்த நூற்றாண்டில் திரையில் நிகழ்த்திய புதுமையில் பெரும்பங்கு இயக்குனருக்குண்டு. வழக்கம் போல காட்சிச்சிதறடிப்புகள், புதுமையான கேமராக்கோணம், ஒளிப்பதிவு, எடிட்டிங் என்பவை பிரம்மிப்பூட்டும். கடவுளின் கையில் சிக்கிய கேமராவைக்கொண்டு சாத்தான் கதை எழுதியது போன்று noeவின் ஒவ்வொரு திரைப்படக் கதைகளும் கேமராக்கோணங்களும் அதிர்ச்சியுறவைக்கும். கிட்டத்தட்ட 19 தரமான இசைக்கோர்வைகள் தேர்ந்தெடுத்துப் பொருத்தப்பட்டுள்ளன. “திரைப்படங்களில் இசை ஒரு கட்டளைக்கருவி;அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்” என்னும் கூற்றுக்கிணங்க இசை சரியான இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும். மேலும் மக்கள் திரை அரங்குகளில் காட்சியைப் பார்ப்பதை விட அதை செவிமடுப்பதன் மூலம் பயத்தையும் ஒருவித உளவியல் பாதிப்பையும் ஏற்படுத்தும் வல்லமை இசைக்குண்டு என்பதை நிரூபித்திருக்கும். இசைக்கலைஞர் Thomas Bangalterஇன் மின்னணு இசை இதில் முக்கியத்துவம் வாய்ந்தது. திரைப்படம் பல்வேறுபட்ட இசைக்கோர்வைகளால் பின்னப்படிருப்பினும் இவரது இசை மாத்திரம் மது அருந்திய பின் நிகழும் குழப்பங்களுடன் தனித்துத்தெரியும். (Thomas Bangalter – Sangiya / climax OST) இன்னும் கொடுங்கனவின் அச்சத்தை இவரது இசைகள் தோற்றுவித்துக்கொண்டிருக்கும்.
இயக்குனரின் பிற திரைப்படங்களிலிருந்து இத்திரைப்படத்துடன் நேரடியாகப் பொருந்துவதற்கு சற்று அந்நியமாகக் காணப்பட்ட விடயம் “உணர்வுப்பகிர்வின் நெருக்கம்”. பிற திரைப்படங்களில் குறிப்பிட்ட இரண்டு அல்லது மூன்று கதாபாத்திரங்களை மையமாகக்கொண்டு மாத்திரம் அவர்களுக்கிடையில் அன்பு, காதல், காமம் போன்றவை பார்வையாளரின் மனதுக்கு நெருக்கமானவகையில் காட்சிப்படுத்தப்பட்டு உணர்வூட்டப்பட்டிருக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை மட்டும் மையப்படுத்தி பேசும் சாத்தியப்பாடுகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. முக்கியமாக இது தனி நபர் சார்ந்த உணர்வுச்சிக்கலை மாத்திரம் பேச முற்படவில்லை. பன்னாட்டுப் பண்பாடுகளின் பிரதிபலிப்பான கிட்டத்தட்ட இருபது நடனக் கலைஞர்களைக்கொண்ட குழுவின் தனியர்களையும் குழு மனநிலையையும் அவர்களுக்குள்ள உணர்வுச்சிக்கல்களையும் ஒட்டுமொத்தமாக ஒரே திரைப்படத்தில் பேச முனைகின்றது. ஒவ்வொருவரது பெயரை நினைவில் வைத்துக்கொள்வதே பெரும் சவால். திரும்பத் திரும்ப பார்க்கவேண்டி இருக்கும்.
Noe யதார்த்தத்தையொத்த படைப்பை மட்டுமே நோக்காகவல்லாமல் மாறாக (surreal) கனவுலகத்தினுள் நுழைந்து (psychedelic) மாயத்தோற்றங்களினால் பார்வையாளர்களை ஆட்கொண்டு குறியீட்டுத்தொனியில் அவர் உருவாக்கிய உலகினுள் பார்வையாளர்களை உலவ விடுகின்றார். திரைப்படத்தின் ஆரம்பத்தில் பிரான்சில் 1996 ல் நிகழ்ந்த உண்மைச்சம்பவம் என்றே இயக்குனர் குறிப்பிட்டிருக்கையில் அவை யதார்த்தமாகவிருக்க LSDயின் பின்னர் அங்கு நிகழும் Badtripஐ நாமும் சேர்ந்து அனுபவித்து அவர்களனுபவிக்கும் மாயத்தோற்றங்களுக்குள் ஆட்கொள்ளப்படும் விதம் (psychedelic) மாயத்தோற்றங்களினால் கட்டமைக்கப்படுகின்றது.
இதே பாணி அவரது அத்தனை படங்களிலும் ஏதோ ஒரு வடிவத்தில் பிரதிபலிக்கப்பட்டிருக்கும். இந்த Visual psychedelic trippy இன் மீதான தீராத ஆர்வத்திற்குப் பிரதானமாக Kubrick இன் 2001: a space odyssey இருந்து விடுவதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் திரைப்படத்தின் ஆரம்பத்தில் வரும் நேர்காணலில் அந்த தொலைக்காட்சிப் பெட்டியைச் சுற்றி இயக்குனர் உள்வாங்கிய தத்துவார்த்த நூல்கள், இன்னும் ஏகப்பட்ட திரைப்படங்கள் குறிப்பாக surreal திரைப்படங்களின் மாஸ்டரான Luis Bunuel இன் Un chain Andalou(1929), மற்றும் Zombi2(1979), Taxi Driver(1976), Salo (1975), Suspiria(1977), possession(1981) போன்ற மனிதனின் இருண்ட பக்கங்களையும் வன்மங்களையும் பேசும் திரைப்படங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதனைக்காணலாம். ஆக, திரைப்படத்தினுள் நுழைய முன்னமே ஒரு சில அனுமானங்கள் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டு விடுகின்றது. அதே போன்று மேலே குறிப்பிட்ட திரைப்படங்களின் தாக்கம் பல இடங்களில் அவதானிக்க கூடியவாறு இருந்து விடுகின்றது. உதாரணமாக, possession திரைப்படத்தில் isebella adjani தன்னைத்தானே நாசம் செய்து கருக்கலைத்தல் செய்யும் கொடூர நடிப்புக்காட்சி, Lou தன்னைத்தானே வயிற்றிலடித்துக் கருக்கலைப்பு செய்யும் காட்சிக்கு ஒரு தூண்டுதலாக இருக்கலாம். காரணம், இரண்டுமே சமூக விமர்சனங்களுக்குப் பயந்து மேற்கொள்ளும் வன்மங்களே. அடுத்து suspiria திரைப்படத்தில் ஒரு நடனப்பாடசாலையினுள் காரணமே இன்றி நிகழ்த்தப்படும் கொலைகளும் அதற்காக அறைகளைச் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் காட்சியமைப்புகளும் குறிப்பாக அச்சுறுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இசைக்கோர்வைகளும், ஒளியமைப்புகளும் climax திரைப்படத்தில் பெருந்தாக்கம் செலுத்தியிருப்பதனை உணர முடிந்தது.
climax மனிதர்களின் வீழ்ச்சியின் துயரத்தைப் பேசுகிறது. மனித வலிக்கும் இன்பத்துக்கும் இடையே உள்ள எல்லைகளைக் கலைத்துவிடுகிறது. கூட்டுவாழ்க்கை என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. ஒருவரது சமூகத்துடன் ஒருவர் இணைக்கப்படாத விடத்து அவற்றைத் துறந்து தங்களுக்குச் சார்பான சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டியதுதான் நியதியாக இருப்பினும் தங்களுக்குச் சார்பானவர்கள் என்று இவ்வுலகில் யாரைச் சொல்லிவிடமுடியும்? ஏதோ ஒரு விடயத்தில் முரண்பாடு மற்றும் குழுவான மதிப்பீடுகளை (judgemnets) தோற்றுவித்துவிடுகின்றது. முழுமையாக மனித விடுதலைகான சகாப்தத்தில் இருந்துகொண்டே அதிலிருந்து மேலெழுந்து வர ஆரம்பித்து, மிக அடிப்படைவாதங்களுடன் கூடியதாக மாறி நரகத்தினுள் வீழ்ந்துவிடுகின்றது. வாழும் பூமியில் நரகத்தைக் கட்டமைத்து அதன் விளிம்பில் ஒழுக்கம், பண்பாட்டு விழுமியம் என்னும் பெயரில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள், அந்நரகில் வீழ்ந்து பயணிக்க Drugs போதுமானது. மனித சிதைவுகளுக்குள் பரந்துபட்ட உருவகமான துயரத்தைக் கண்டறிந்து அத்துயர்மிகு உலகிற்குள் நம்மையும் சேர்த்து அழைத்துச்சென்றிருக்கிறார் Noe.