மோடி அரசாலும் எடப்பாடி அரசாலும் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்கிற ஆழமான உணர்வின் காரணமாக, தமிழர்கள் வாக்குச்சாவடியில் ஒரு சுயமரியாதை இயக்கத்தையே நடத்தியிருக்கிறார்கள்.

*

அனைத்திந்தியப் போக்கை முறியடித்து தமிழ்நாடு தனக்கென ஒரு முடிவை உறுதிசெய்தது எதிர்பார்த்த ஒன்றுதான். இங்கே இப்படி நடப்பது முதல் முறையும் அல்ல. இந்த முடிவுக்கான முதன்மையான காரணங்களைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தமிழ்நாடு பெரியார் மண், இங்கே ஆர்.எஸ்.எஸ். பருப்பு வேகாது என்கிற கருத்து வெற்றிபெற்றுவிட்ட மனநிலையையும் காண்கிறோம். உண்மைதான். ஈரோட்டுக் கிழவன் போட்ட எல்லைக்கோட்டைத் தாண்டமுடியாமல்தான் அமித் ஷா தடுமாறுகிறார். ஆனால் நாம் சற்று ஆழமாக இதைப் பார்க்கவேண்டும்.

இது அதிமுக – பாஜக – பாமக என்கிற பொருந்தாத கூட்டணியின் தோல்வி என்றும் பாஜக தமிழர்களைக் குறைத்து எடைபோட்டுவிட்டது என்றும் கூறப்படுகிறது. இதுவும் உண்மைதான். இரட்டை ஆட்சியெதிர்ப்பு மனநிலை அதிமுக அணியின் தோல்விக்கு ஓர் அடிப்படையான காரணம் என்பதிலும் ஆச்சரியமில்லை.

திமுக கூட்டணி ஒழுங்காகச் செயல்பட்டு வெற்றிக்கனியைத் தட்டிச்சென்றுவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டாமலிருக்கமுடியாது. ஸ்டாலின் தன் தலைமைத்துவத்தை உறுதிசெய்திருக்கிறார். மக்கள் மத்தியிலுள்ள எதிர்ப்புணர்வையும் அதிருப்திகளையும் கோரிக்கைகளையும் நன்றாக உணர்ந்துகொண்டிருந்த ஸ்டாலின் மிகச்சரியாக அதைக் கையாண்டார் என்பதை திமுகவின் தேர்தல் அறிக்கை காட்டியது. போராட்டக்களத்தில் இருந்த அமைப்புகள், மக்களின் குரல்கள் அதில் எதிரொலித்தன. அதில் சில கூறுகள் காங்கிரசின் தேர்தல் அறிக்கையிலும் பிரதிபலித்தன. தமிழ்நாடு தமிழ்நாட்டிலிருந்து ஆளப்படவேண்டும், நாக்பூரிலிருந்து அல்ல என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியது எந்த அளவுக்கு இக்கூட்டணி தமிழர்களின் மனத்தை சரியாக எடைபோட்டிருக்கிறது என்பதைக் காட்டியது. எனவே இப்போது வீசிய அலை பாஜக – அதிமுகவுக்கு எதிராக வீசிய அலை மட்டுமல்ல, திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக வீசிய அலையும்கூட. ஆனால் இந்த உண்மையும்கூட சித்திரத்தை முழுமையாக ஆக்கிவிடவில்லை.

இது எந்த விதத்திலும் ஒரு வழக்கமான தேர்தல் இல்லை. திமுக அணியினர் வாங்கிய இடங்களின் எண்ணிக்கையும் வாக்குகளின் அளவும் அதிமுக அணி இழந்த இழப்பின் அளவும் வேறு சில சேதிகளையும் சொல்கிறது. மக்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பிடித்த கட்சிகளுக்கு வாக்களித்தார்கள் என்கிற அளவில் இதைப் பார்க்கமுடியாது.

இந்தியா முழுக்க மோடி சுனாமி வீசியபோது, தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பு பூகம்பம் வெடித்தது. கேரளம், ஆந்திரமும் அப்படித்தான் என்றாலும் அங்கே பாஜக அணி என்ற ஒன்று வலுவாகப் போட்டியிடவில்லை. கேரளத்தில் காங்கிரஸ் அல்லது இடதுசாரிகள் யார் வெற்றிபெற்றாலும் பாஜகவுக்குப் பலனில்லை. ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆர்சிபி என்பது பழைய காங்கிரஸ்தான். தமிழ்நாட்டில் மோதியதோ பாஜக உருவாக்கிய அதிமுக தலைமையிலான அணியும் திமுக கூட்டணியும்.

வாக்களிப்பு நாளுக்கு முந்தைய நாள் சென்னையிலிருந்து கூட்டம் கூட்டமாகக் கிளம்பி மக்கள் சொந்த ஊருக்கு தீபாவளி, பொங்கலுக்குப் போவதைப் போல சென்றபோது, முகநூல் நடுத்தர வர்க்கம் அதை எப்படிப் பார்த்து தெரியுமா? ஓட்டுக்கு கொடுக்கிற பணத்தை வாங்குவதற்காக ஓடுகிறார்கள் பாருங்கள் என்று கேலிசெய்தது. ஆனால் ஒரு வாக்குக்கு முன்னூறோ ஐநூறோ சில இடங்களில் ஆயிரமோ கூட கொடுத்திருக்கலாம் என்றாலும்கூட, அதை வாங்குவதற்கு ஆயிரம் இரண்டாயிரம் செலவழித்து ஊருக்குப் போவார்களா? மக்கள் பணம் வாங்கியிருக்கலாம். பணம் கொடுத்தவர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் மக்கள் வாக்களித்தே தீரவேண்டும் என்கிற வெறியில்தான் கிளம்பிச்சென்றிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. யாரையோ பழிதீர்க்கவேண்டும் என்கிற வெறி இருந்திருக்கிறது. யாரை என்பதைத் தெரிந்துகொண்டோம். ஆனால் ஏன்?

ஏன் என்கிற கேள்விக்கான பதிலைப் பெற கொஞ்சம் சமூக உளவியலையும் நாடவேண்டும். தமிழக மக்களின் மோடி எதிர்ப்பு வாக்குகளுக்கு மிக முக்கியமான காரணம், தாங்கள் பாஜகவினராலும் மோடியாலும் அவமதிக்கப்பட்டோம் என்கிற உணர்வுதான். அதாவது ஓர் உளவியல் சார்ந்த சுயமரியாதை இயக்கமே இங்கே நடந்து முடிந்திருக்கிறது!

பாஜகவின் இந்துத்துவத்தையும் அதன் பொருளாதாரக் கொள்கைகளையும் பார்த்து, இது நமக்கு எதிரானது என்கிற உணர்வில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை விட, காவிகளால் தாங்கள் அவமானப் படுத்தப்பட்டோம் என்பதாலும் இவ்வளவு இழிவுடன் ஒரு மாநில ஆட்சி நடக்க முடியுமா என்கிற வெட்கக் கேட்டாலும் எழுந்த உணர்வே இந்த மிகப்பெரிய மாற்றத்துக்குக் காரணம் என்று தோன்றுகிறது. வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பது போல வலுவான முதல்வர் ஒருவர் இல்லாமல் போனதும் சாதாரணத் தமிழனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தளபதியற்ற படைபோல தமிழ்நாடு ஆகிவிட்டதால் தானே இங்கே எஸ்.வி.சேகர்களும் எச்.ராஜாக்களும் இப்படி ஆட்டம் போடமுடிகிறது என்கிற ஆதங்கம் ஒரு சூறாவளிச் சுழலாக தமிழகமெங்கும் அடித்திருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட சூழலில் மக்கள் நீட், ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன், எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களை எதிர்த்துப் போராடியபோது அஇஅதிமுக, பாஜக அரசுகள் அவற்றை எதிர்கொண்ட விதம் மக்கள் மத்தியில் கடுங்கோபத்தை உருவாக்கியிருக்கிறது. அதனால் உருவான இந்த எதிர்ப்புணர்வு, அரசியல் மூளையையும் தாண்டி அரசியல் இதயத்துக்குள் நுழைந்திருக்கிறது.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தபோது நிலைமை இப்படி இல்லை. கூடங்குளம் பகுதி மக்களைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு ஆதரவில்லை; அதுமட்டுமல்ல, அப்போது நிலவிய மின்வெட்டுப் பிரச்சினைக்குக்கூட சுப.உதயகுமார்தான் காரணம் என்று பரப்பப்பட்ட பழித்தூற்றல்கள் வெற்றிபெற்றிருந்தன.

ஆனால் இன்று தூத்துக்குடி அல்லது நெடுவாசலில் நடக்கும் போராட்டங்கள் உடனடியாக பரவலான ஆதரவைப் பெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல; தமிழர்கள் பரவியுள்ள பல நாடுகளிலும் அது எதிரொலிக்கிறது. 2013 இல் ஈழ ஆதரவு மாணவர் போராட்டங்களின்போது இதற்கான வித்துகள் இடப்பட்டன. கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு போராட்டமும் மிகப்பெரிய அளவுக்கு மக்களின் பங்கேற்பையோ ஆதரவையோ பெறுகின்றன. இந்த உணர்வு தமிழர்களின் அரசியல் அறச்சீற்றமாக அடியோட்டத்தில் வளர்ந்துகொண்டே வந்தது. இது 2017 ஜனவரி ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலிருந்து ஒரு பொதுப்போக்காகவே எழுந்திருக்கிறது. அதாவது அதன் பிறகு தமிழகம் தழுவிய பொதுப் போராட்ட மனநிலை ஒன்று உருவாகிவிட்டது. எல்லாப் பிரச்சினைகளையும் எல்லோருடைய பிரச்சினைகளாகவும் பார்க்கப்படுகிற சிவில் சமூக பரிமாணம் எட்டப்பட்டிருந்தது.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரு அலங்காநல்லூர் விஷயமாகப் பார்க்கப்படவில்லை. அது தென் தமிழ்நாட்டின் சமாச்சாரமாகவும் பார்க்கப்படவில்லை. ஏன், அது ஜல்லிக்கட்டுப் பிரச்சினையாகவும் கூட பார்க்கப்படவில்லை. மாறாக, தமிழர்களின் கலாச்சார உரிமை சார்ந்த பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது. என் பிரச்சினையில் நீ தலைநுழைக்காதே என்பதும் என் பிரச்சினையில் தீர்வு காணும் உரிமை எனக்கே உள்ளது என்பதும்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் அடிநாதம். அன்றொரு தட்டி முளைத்திருந்தது. “இது மாட்டுப் பிரச்சினை அல்ல, தமிழ்நாட்டுப் பிரச்சினை” என்று அது கூறியது.

அதன் பிறகு வெள்ளம் வந்தாலும் புயல் வீசினாலும் தமிழகத்திலும் உலக நாடுகளிலும் உள்ள தமிழர்கள் மின்னல்வேகத்தில் செயல்பட்டு தமக்கிடையில் ஒரு தற்காலிக ஒருங்கிணைப்பை உருவாக்கிக் கொண்டு செயல்பட்டார்கள். அரசாங்கம் லாயக்கற்றது, நமக்கு நாமே உதவி செய்துகொள்ள வேண்டும் என்கிற யதார்த்த நிலை மட்டுமல்ல இதற்கான காரணம்; மாறாக கூட்டுப் பொறுப்புணர்வு வலுப்பெற்றிருக்கிறது என்பதும் ஒரு காரணம். அடையாளங்களின் அரசியல் கோலோச்சியிருந்த இடத்தில் பிரச்சினைகளின் அரசியல் நிரம்பத் தொடங்கிவிட்டது.

சுற்றுச்சூழல், மொழி, அரசு நிர்வாகம், நீர், நிலம் என அரசியல் தன்மையுள்ள களங்களில் நாம் எதிர்வினையாற்றியதை குணாம்ச ரீதியிலான மாற்றம் என்றே கூறலாம். அதுதான் இந்தியாவில் தமிழ்நாட்டின் மீதான வியப்பாகவும் உருவானது. அந்த வியப்பு நமக்கான உரமாக மீண்டும் மாறுகிறது. இதே ஒருங்கிணைப்பு தான் காவிரி பிரச்சினையின் போது மிகப் பெரிய #gobackmodi பரப்புரையாக எழுந்து டிவிட்டரில் உலக அளவில் போக்குற்றது. அதன் பிறகு எப்போதெல்லாம் மோடி தமிழ் நாட்டுக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் அது வெடித்தது.

அனிதாவின் மரணம் ஒரு உணர்வுரீதியிலான திருப்பம். அது தமிழ்நாட்டையே உலுக்கிவிட்டது. ஏதோ ஒன்று நம்மிடமிருந்து பறிக்கப்படுகிறது என்கிற துயரமும் ஆற்றாமையும் உருவானது. நீட் தேர்வுக்குப் போன மாணவிகளின் மூக்குத்திகளை ஆராய்ந்த அதிகார வர்க்கம் மக்களை அவமதித்தது. தூத்துக்குடி படுகொலைகள் தமிழ் மனத்தை அறுத்தன. ஸ்நோலினும் அனிதாவைப் போல ஒரு தேவதையானாள்.

இந்தச் செயல்பாடுகளினூடாக உருவான ஒரு தமிழ் பொதுமனநிலை சாதி, மத, வட்டார வித்தியாசங்களைத் தாண்டி உருப்பெற்றுவந்த நிலையில், தமிழ்நாட்டிலுள்ள ஆர்எஸ்எஸ் – பாஜகவும் அதிமுகவும் அதை எப்படி எதிர்கொண்டன என்பதில்தான் இன்றைய தேர்தல் முடிவின் ரகசியம் இருக்கிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பாஜகவினர் தமிழ்நாட்டில் செய்துவந்த வேலைகள் தமிழர்களிடம் எதிர்ப்புணர்வைச் சம்பாதித்ததற்கு தமிழர்களின் அரசியல் அறிவு மட்டும் காரணமல்ல. மாறாக, மக்களிடம் சிறிதுசிறிதாக எழுந்த எதிர்ப்புணர்வை மதிக்காத பாஜகவின் செயல்பாடுகளே பெரிய காரணம். வெற்றி பெறமுடியாத மாநிலத்தில் பழிவாங்கவாவது செய்யலாம் என்று அமித் ஷாவின் லோக்கல் கூட்டாளிகள் நினைத்திருக்கிறார்கள். இந்தப் புள்ளியில்தான் அந்த மாற்றம் நடைபெற்றது.

தமிழர்களிடம் முதலில் நேரடியாகவே அவமான உணர்வையும் பிறகு எதிர்விளைவாக தன்மான உணர்வையும் தூண்டிவிட்டதில் தமிழ்நாட்டு பாஜக ஆற்றிய பங்கு அளப்பரியது. பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்ட தலைவர்களும் எஸ்.குருமூர்த்தி, எஸ்.வி.சேகர் போன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் ஐந்து சானல்களிலும் தினம் இரண்டிரண்டு பேராக (ஒருவர் பாஜக பிரதிநிதி, மற்றொருவர் சமூக ஆர்வலர்) வந்தமர்ந்து தமிழ்நாட்டின் முன்னுரிமைகளையும் கோரிக்கைகளையும் நிராகரித்துவந்த தொலைக்காட்சி விவாதங்களும் சமூக ஊடங்களில் எழுதிக் குவித்த காவிச் சிந்தனையாளர்களும் இந்த நிலையைத் தீவிரப்படுத்தினார்கள். இன்னொரு பக்கம் ஈபிஎஸ்- ஓபிஎஸ்களின் முதுகெலும்பில்லாத நடவடிக்கைகளும் பாண்டியராஜன்களும் ராஜேந்திர பாலாஜிகளும் செய்துவந்த ஸ்லீப்பர் செல் நடவடிக்கைகளும் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றின. எப்படி இருந்த தமிழ்நாடு இப்படி ஆகிவிட்டதே என்கிற உணர்வு அலையாக அடித்தது.

இதன் எதிரிடையாக தமிழகம் முழுக்க பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் போராடிவந்த நவக்கிரக-முக அமைப்புகள் ஒருங்கிணையத்தொடங்கின். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில்கூட கட்சிகள்-அமைப்புகள் என்றிருந்த முரண் பிரிவினை பிறகு மெல்லக் கரைந்து எதிர்க்கட்சிகளும் போராட்டக்காரர்களும் ஒன்று சேர்ந்தார்கள். ஒரு காலத்தில் தேர்தல் பாதை திருடர் பாதை என்று சொன்ன புரட்சிகர அமைப்பினர் முதல் பலரும் பாஜக – அஇஅதிமுகவைத் தோற்கடிக்க நேரடியாக களம்கண்டார்கள். சிலர் நேரடியாக திமுக கூட்டணிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். கடைசியில் எங்களை காங்கிரஸ் வெற்றிபெற்றால் போதும் என்று ஏங்கவைத்து விட்டீர்களேயடா பாவிகளா என்று கதறிக்கொண்டே ஓர் ஈழ ஆதரவுத் தோழர் களமிறங்கினார்.

மோடியின் அரசு அதிமுக அரசை அவமதிப்பதும் எஸ்.வி.சேகர், எச்.ராஜா போன்றவர்களின் அடாவடியும் பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தையும் பெரியாரையும் மீண்டும் உயிர்ப்பித்துவிட்டது. சாதாரண மக்கள் மத்தியில் மட்டுமல்ல, அறிவுஜீவிகள், ஊடகவியலர்கள், தொழில்முனைவோர்கள் என எல்லாத் தரப்பினரும் புதிய தன்மானக் காப்பு இயக்கமாக உருத்திரண்டார்கள். இப்போதே இந்த அளவுக்கு பார்ப்பனர்கள் நடந்துகொள்கிறார்கள் என்றால் பெரியாரின் காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்கிற கேள்வி லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் உள்ளத்தில் விழுந்ததன் எதிரொலியாக கருப்புச்சட்டைப் பேரணிகள் வலம்வந்தன.

திராவிட இயக்கத்தின் இரண்டாம் தலைமுறைக் காலத்தில் ஏற்பட்ட சமரச உணர்வு பின்வாங்கி, இளம் திராவிட இயக்கவாதிகள் மீண்டும் பெரியாரிடமும் அண்ணாவிடமும் சென்றார்கள். ‘நாகரீகம் கருதி’ பார்ப்பனர்களை விமர்சிப்பதைத் தவிர்த்துவந்த நல்ல உள்ளங்கள் கூட அந்தத் திரையைத் தூக்கிக் கடாசிவிட்டுப் பேசத்தொடங்கின.

கருப்புச் சட்டைகளும் நீலச்சட்டைகளும் சிவப்புச்சட்டைகளும் ஒன்று சேர்ந்தன. முன்னுதாரணமற்றவகையில், திராவிட அமைப்பினரும் தமிழ்த்தேசியர்களும் கைகோர்த்தனர்.

பெரியார் மட்டுமல்ல, அண்ணாவும் மீண்டும் கடற்கரையிலிருந்த அவரது நினைவிடத்திலிருந்து எழுந்தார். அண்ணாவின் கருத்துகள் எந்த அளவுக்கு இன்றைக்கும் பொருத்தப்பாடு உடையவையாக இருக்கின்றன என்பதைப் பார்த்த தமிழ் இளம் அரசியல் செயல்பாட்டாளர்கள் ஆச்சரியப்பட்டார்கள். பணத்தோட்டம் நூலைப் படித்துவிட்டு ஒரு இளம் தமிழ்த்தேசியவாதி இவ்வாறு முகநூலில் பதிவிட்டார்: “அப்ப நாம எதையுமே புதுசா சொல்லலியா?” அண்ணாவிடம் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருந்ததா இல்லையா என்பதைவிட அவர் எல்லாச் சரியான கேள்விகளையும் கேட்டிருக்கிறார் என்பதை தமிழ்நாடு புரிந்து கொள்ளத் தொடங்கியது. தன்னாட்சித் தமிழகம் அண்ணாவின் ஐம்பதாம் ஆண்டு நினைவு நாளில் தன்னாட்சி மாநாட்டை நடத்தியபோது, தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் பிரிவினரும் கலந்து கொண்டார்கள். இந்து தமிழ்த்திசை அண்ணாவின் மாபெரும் தமிழ்க்கனவை 800 பக்க நூலாக வெளியிட்டபோது விற்பனையில் சாதனை படைத்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஜெயலலிதாவின் மறைவும் கருணாநிதியின் மறைவும் தமிழர்களின் உளவியலில் ஒரு பாதிப்பை உருவாக்கவே செய்தன. சட்டென்ற தலையற்ற உடல்போல தமிழ்நாடு சரிந்தது. உயிரோடு இருக்கும்போது அப்பா அம்மாவோடு சண்டை பிடித்துக்கொள்கிற பிள்ளைகள் பெற்றோர்களின் மறைவின்போது எப்படிக் கதிகலங்குவார்களோ அப்படி கதிகலங்கியது. ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் தலைவர்களாக இருப்பவர்கள் என்பதால் அல்லாமல், தலைவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதால்தான் முதல்வர் பொறுப்புகளுக்கு வந்தவர்கள் என்பதால், அந்த அவலம் சற்று கூடுதலாக இருந்தது. மோடி அவர்களைப் படுத்தியெடுக்க, அவர்கள் மோடியிடம் மண்டியிட்டுக்கிடக்க, அவமானத்தின் உச்சத்தில் இருந்தான் தமிழன். பாசிஸ்ட் என்றும் தடாதடை பிராட்டியார் என்றும் ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட ஜெயலலிதாகூட தேவதையாகத் தோற்றமளித்தார்.

அதிமுகவைக் கொஞ்சம் கொஞ்சமாக பாஜக கரைத்துக்கொண்டிருந்தது. ரஜினி – கமல்களின் கனவுகள் நமக்குக் கொடுங்கனவுகளாக இருந்தன. சமூகத்தில் சாதிவெறியர்கள் பெரிய அளவுக்கு ஆட்டம் போட்டார்கள். ஆணவப்படுகொலைகள் திசையெங்கும் நடந்தன. தமிழ்ச்சமூகம் வெறும் சாதியப் பிரிவுகளாக நிரந்தரமாகப் பிரிந்துபோய்விட்டதோ என்கிற அச்சம் எழுந்தது. இந்த நேரத்தில் மதவாதிகளும் சாதியவாதிகளும் கடைந்தெடுத்த வாக்கு வியாபாரிகளும் துரோகிகளும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தபோது மக்கள் உஷாராவிட்டார்கள். பாஜகவிடம் அதிமுக சரணடைந்து கூட்டணி அமைத்தது. நேற்றுவரை அதிமுகவினரை டயர் நக்கிகள் என்று கிண்டலடித்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களிடமே கூட்டணிக்குச் செல்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போதுகூட, எட்டுவழிச்சாலைகள் திட்டத்தை எதிர்க்கும் பாமக தலைவரை மேடையில் வைத்துக்கொண்டு, அந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று பாஜக தலைவர் சொல்கிறார். மக்கள் ரசிக்கவில்லை. தேமுதிக என்கிற கம்பெனியின் ஒவ்வொரு அசைவும் கோபத்தை உருவாக்குகிறது.

ஒரு பக்கம் இத்தகைய இழிவுகள், மறுபக்கம் உரிமைப் பறிப்பு ஆகியவை சம காலத்தில் செயல்பட்டன. தமிழர்கள் இயற்கைச் சீற்றங்களால் துவண்டபோது தில்லி உதவவில்லை. மாறாக, தமிழர்களின் குரல்கள் நசுக்கப்பட்டன. இறுதியில் மத்திய, பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்ட சம்பவங்கள் தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் பேரதிர்ச்சியாக தமிழக இளைஞர்களிடம் பரவி அச்சத்தைக் கூட்டியது.

மாநில உரிமை, இட ஒதுக்கீடு என்றெல்லாம் தங்கள் உரிமைகளைக் காத்துவந்த மக்கள், திடீரென அரசியல் அகதிகளாக உணர்ந்தார்கள். தமிழ்நாடு இந்தியாவின் காலனியாக மாற்றப்படுவது போன்ற உணர்வும் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான, 250 பில்லியன் டாலர் மதிப்புள்ள தமிழ்நாடு இப்படிச் சுரண்டப்படுகிறதே என்கிற அதிர்ச்சியும் பாஜக தங்களை அவமதிக்கிறது என்கிற கோபமும் அஇஅதிமுக இப்படி சரணடைந்து கிடக்கிறதே என்கிற அவமானமும் மக்களின் மனத்தில் தீயாக கனன்று கொண்டிருந்திருக்கவேண்டும்.

அதுதான் தேர்தலின் முடிவாக வெளிப்பட்டது. கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழநிச்சாமியின் சாதிக்கணக்குகள் பொய்த்தன. முக்குலத்தோர் மத்தியில் டி.டி.வி.தினகரனின் சாதிக்கணக்குகள் பொய்த்தன. வன்னியர் மத்தியில் ராமதாஸ்களின் எதிர்ப்பார்ப்புகள் பொய்த்தன. தேவேந்திரகுல வேளாளர்கள் கிருஷ்ணசாமியைத் தூக்கியெறிந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நாடார் சமூகத்தைக் கைப்பற்றிவிட்டோம் என்று இறுமாந்திருந்த பாஜகவினர் தங்கள் மாநிலத் தலைவர் தமிழிசையும் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் அவமானகரமான முறையில் தோற்றுப்போனதைக் கண்டு அதிர்ந்துபோனார்கள். கோவை, திருப்பூரில் தொழில்சமூகத்தைக் கைப்பற்றிவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த அவர்களுக்கு அங்கே பலத்த அடி விழுந்தது.

சாதி. மத, வட்டார, வர்க்க வேறுபாடுகள் கடந்து தமிழர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். அவர்களில் எண்பது சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்துக்கள்தான், தங்கள் சாதிகள் குறித்த பெருமிதங்களும் உணர்வுகளும் உடையவர்கள்தான். ஒரு மென்-இந்துத்துவத்தோடு சமரசம் செய்யத்  தயங்காதவர்கள்தான். ஆனால் நீங்கள் அவர்களது தன்மானத்துக்குச் சவால்விட்டீர்கள் என்றால் அவர்களுக்குள் இருக்கும் சுயமரியாதை நெருப்பு எரிய ஆரம்பித்துவிடுகிறது. வளர்ந்த ஓர் மாநிலத்தின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அதை நசுக்கி அவர்களை அச்சுறுத்திவிட்டீர்கள் என்றால் பகுத்தறிவோடு பழிவாங்கும் உணர்வு மேலெழும். பாஜகவினர் எங்கோ ஓரிரு பெரியாரின் சிலைகளை உடைத்தார்கள். கோடிக்கணக்கான தமிழர்கள் மனங்களில் பெரியார் மீண்டும் தோன்றினார்.

வேறு எந்தக் காரணத்தையும்விட அவமானம் மிகப்பெரிய அரசியல் காரணியாகும். அதுவும் சுயமரியாதை இயக்கம் நடந்த மண்ணில் அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலிருக்க முடியுமா? தில்லி ஏகாதிபத்தியம் தமிழர்களையும் மலையாளி களையும் கன்னடர்களையும் வங்காளிகளையும் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களுக்கும் மேற்கு மாநிலங்களுக்குமான அரசாகத் தனது அரசை உருமாற்றிக்கொண்டிருக்கிறார் மோடி. ஆனால் மொழியுணர்வும் தேசிய இன உணர்வும் மிக்கவர்களிடம் அவமானத்தை விதைத்தால் என்ன நடக்கும்?

பாஜகவின் அறிவாளிக் கூட்டத்தைக் கண்டு நகைக்காமல் இருக்கமுடியவில்லை. 2017 ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் சேதியை இவர்கள் படிக்கவேயில்லை! இப்போது நடந்ததும் ஜல்லிக்கட்டுதான் – அரசியல் ஜல்லிக்கட்டு. இதுவும் ஓட்டுப் பிரச்சினை அல்ல, தமிழ்நாட்டுப் பிரச்சினை!

(கட்டுரையாளர் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர். அவரைத் தொடர்புகொள்ள: zsenthil@gmail.com)