இளமுலை
………………………
‘ஈர்க்கிடை புகா இளமுலை’ மேல்
மாணிக்கவாசகன் கண்ட கனவு
ஆயிரம் வருடங்களாக
நெஞ்சில் கனல் மூண்டு தகிக்கிறது
அன்பே
உன் இளமுலை மேல்
நான் கண்ட காட்சிகள் ஐந்து
அந்தகார இருளில்
உன் நிர்வாணத்தின் மேல்
மின்னலொன்று
உன் முலைகள் நடுவே கடந்து சென்ற கணத்தில்
உன் கொங்கைகள் நின்று எரியக் கண்டேன்
கிணற்று நீரில்
நீ கழுத்தளவு நீரில் நீந்துகையில்
உன்னோடு நீந்தும்
உன்னிரு இளம்முலை நடுவே
ஒரு கணம் ஊர்ந்து சென்ற நாகம்
பிறகு நிரந்தரமாக தன் நஞ்சை இழந்தது
புலரும் பொழுதொன்றின் முதல் கிரணம்
அருகில் உறங்கிக்கொண்டிருந்த
உன் தளும்பும் இளமுலை கடந்து
இந்த பூமியில் படர்ந்தபோது
அன்று இரண்டு சூரியன்கள் உதித்தன
கட்டுக்கடங்காது இறுகித் திமிரும்
உன் இளமுலையில்
ஒரு முலை பருகித் திளைக்கையில்
மறுமுலையின் காம்புகள்
காற்றில் வாளென சுழன்று ரத்த ருசி கேட்கிறது
அன்பே
இறுகிய உன்னிரு இளமுலை நடுவே
நான் பலிபீடத்தில் தலைவைத்தாற்போல
முகம் புதைந்திருந்த வேளையில்
மலைப்பாறையில் பட்டுத் தெறிக்கும்
மழைக்காலத்தின் முதல் மழைத்துளிபோல
உன் கண்ணீர் துளியொன்று
உன் முலைகளில் பட்டுத் தெறித்து
ஆறாகப் பெருகியதே
அது ஏனென்று சொல்
*
எனக்கு நீ இருக்கும் விதம்
…………………………………………
அருந்திக்கொண்டே தூங்க
உன் முலைகள்
இல்லாவிட்டால் என்ன
இதோ
இந்த நிலவு இருக்கிறது
அணைத்துக்கொண்டே தூங்க
உன் உடல் இல்லாவிட்டால் என்ன
இதோ உன்னால் எப்போதோ
அணைத்துக்கொள்ளப்பட்ட
என் உடலே எனக்கு இருக்கிறது
*
வசந்தம் வந்துவிட்டது
…………………….
வசந்தகாலம் வந்துவிட்டதா என்ன?
என் சிநேகிதிகளுக்கு
புதிய காதலர்கள் கிடைத்திருக்கிறார்கள்
என் காதலிகளுக்கும்கூட புதிய காதலர்கள் கிடைத்திருக்கின்றனர்
மஞ்சள் மலர்கள் சாலைகளெங்கும் உதிர்ந்திருக்கின்றன
அன்பின் ரகசிய மொழிகள்
காற்றை ஈரமாக்கிக்கொண்டிருக்கிறது
பழைய நண்பர்களை என்னசெய்வதென்று தெரியவில்லை
பழையை காதலர்களை என்ன செய்வதென்று தெரியவில்லை
அவர்களை சமாதானப்படுத்தவேண்டியிருக்கிறது
அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது
அது மயக்க மருந்து இல்லாமல்
அறுவை சிகிச்சை செய்வதுபோன்றது
அவர்களுடனான சந்திப்புகள்
வெடிகுண்டின் மேல் அமர்ந்திருப்பதுபோல இருக்கிறது
சீக்கிரம் வரும்படியான அழைப்புகள்
எப்போது வருமென்று தெரியாது
எங்கேயிருக்கிறாய் என்று
தொலைவிலிருந்து கேட்கும் கேள்விகளுக்கு
அருவமான பதில்களை சொல்ல வேண்டியிருக்கிறது
வேறு வழியின்றி
அலைபேசிகளை மேசையில்
குப்புற சரித்துவைக்கவேண்டியிருக்கிறது
யாரோ யாருக்கோ காத்துக்கொண்டேயிருக்கிறார்கள்
எல்லாவற்றையும்
இடையறாது திட்டமிடவேண்டியிருக்கிறது
காற்றில் விலகும் திரைகளை
இழுத்துவிட்டுக்கொண்டே
இருக்கவேண்டியிருக்கிறது
சந்தேகங்கள், பொய்களின் விஷக்காற்று
நுரையீரலில் நிரம்புகிறது
சமாதானங்களை உருவாக்குவது
களைப்பூட்டும் வேலை
அவசரமாக கிளம்பவேண்டியிருக்கிறது
மகிழ்ச்சியற்ற இடங்களுக்கும்
மகிழ்ச்சியான இடங்களுக்குமிடையே
சிறிய தூரம்தான் இருக்கிறது
பழைய நண்பர்கள் , பழைய காதலர்கள்
நோய்மையைப் போன்றவர்கள்
மறதி ஒரு சிறந்த மருந்து
அதை எல்லோருமே எடுத்துக்கொள்வது நல்லது
அது சர்வரோக நிவாரணி
புதிய நண்பர்களிடம் புதிய காதலர்களிடம்
பழைய நண்பர்களை, பழைய காதலர்களை
அண்டைவீட்டாரைப்பற்றி சொல்வதுபோல
சொல்ல வேண்டியிருக்கிறது
பின்னிரவுகளில்
அசையாத ஒற்றை நட்சத்திரங்களைப்
பார்த்தவண்ணம் அமர்ந்திருக்கிறேன்
பூங்காக்களில் எல்லோரும் போனபிறகு
அந்த இடம் வேறொன்றாக மாறுவதைக்கண்டு வியக்கிறேன்
கடற்கரைகளில் நீருக்குத் திரும்பமுடியாமல்
மணலில் துள்ளும் மீன்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன்
திரையரங்குகளில்
ஒரே ஒரு டிக்கெட்டுடன்
ஏதோ ஒரு படத்தைப் புரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
லிஃப்டில் யாரோ ஒரு பெண்
ஒரே ஒரு கணம் புன்னகைத்து
வெளியேறிச் செல்கிறாள்
யார் கண்டது
எதிர்காலத்தில் அவள் என் புதிய காதலியாகவோ
சிநேகிதியாகவோ இருக்கக் கூடும்.
வசந்தம் வந்தே விட்டது
*
பிரிவின் சங்கீதங்கள்
………………………………..
நான் உன்னை ஆரத்தழுவி
ஆயிரம் ஜென்மங்களின் பந்தமிதுவென
முலையருந்திக்கொண்டிருந்த
உன்மத்த வேளையில்தானா
எங்கிருந்தோ அந்த சாபக்குரல்
நெஞ்சின் ஆழத்தில் கேட்கவேண்டும்?
‘சீக்கிரமே நாம் பிரியப்போகிறோம்’
நான் திடுக்கிட்டு எழுந்து உட்காருகிறேன்
அந்தக் குரல் இதயமற்றதாக இருந்தது
‘உண்மையில்
நாம் சீக்கிரம் பிரியப்போகிறோமா?’
எனக்கண்ணீருடன் கேட்கிறேன்
பிரகாசமான வெளிச்சத்தில்
உன் நிர்வாண உடல்
ஒரு நெருப்புக்கோளமென சுழன்றுகொண்டிருந்தது
‘அப்படி ஏன் நினைக்கிறாய்?
நம் உடல்கள் அழியும்வரை
இந்த உறவு அழியாது’
என்கிறாய் இறுகக்கட்டிக்கொண்டே
எனக்கு மூச்சுத்திணறியது
‘இல்லை
இந்தக் கணத்திற்காகத்தான்
கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியிருந்தார்
இந்த நாளின் நம் அன்பின் நடனத்திற்காக…
பிறகு பத்திரமாக உன்னை
வீட்டில் விடுவதற்காக…
அது நிறைவுற்றுவிட்டது
கடவுளின் விருப்பம் நிறைவேறியபிறகு
அவர் ஒரு கணம்கூட நான் தாமதிப்பதை
விரும்ப மாட்டார்’ என்றபோது
உன் தாபத்தின் தழல்
சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தது
நாம் பிரியத்தான் வேண்டுமா?
எஞ்சிய வாழ்வு
………………………
தூங்கிக்கொள்ள
இரண்டு கண்கள் போதாது
அவ்வளவு தூக்கம்
நிற்க
ஒரு மர நிழல் போதாது
அவ்வளவு கோடை
மறக்க
ஒரு மனம் போதாது
அவ்வளவு பார்த்தாகிவிட்டது
இருக்க
இந்த ஒரு வாழ்வு போதாது
அவ்வளவு மிஞ்சியிருக்கிறது
*
இச்சைகளின் நகரம்
……………………………….
இந்த ஆறாவது தளத்திலிருந்து
இந்த நள்ளிரவில்
மங்கலான போதையில்
நான் காணும் காட்சிகள் யாவும்
இந்த இரவுக்கு மட்டுமானவை
ஆயிரம் விளக்குகளால்
ஒளிரும் இந்த நகரம்
ஆயிரம் ஆயிரம்
விரிந்த முலைகளும்
அகன்ற கால்களுமாய்
வா வா என்றழைக்கிறது
இந்த நகரத்தில்தான்
நீயும் வாழ்கிறாய்
இந்த அழைப்பை என்னால்
தட்ட முடியுமா தெரியவில்லை
ஆறாவது தளத்தின் மாடத்திலிருந்து
ஓரடி தூரம்தான் இருக்கிறது
நான் உன்னிடம் வர
ஒரு எட்டுதான் இருக்கிறது
அவ்வளவு விளக்குகள்
அவ்வளவு இருட்டு
*
முட்டைகோஸ்
……………………………….
அடம் பிடிப்பதில்லை
மாத்திரைகளை ஒழுங்காக சாப்பிடுகிறேன்
பகலோ இரவோ
பெரும்பாலும் தூங்கிவிடுகிறேன்
கோரிக்கைகள் என்று எதுவுமில்லை
ஆசைகள் என்று எதுவுமில்லை
உரிமை பாராட்டுதல்கள் என்று எதுவுமில்லை
ஃப்ரிஜ்ஜில் வைக்கப்பட்ட முட்டைக்கோஸ் போல
சலனமற்று அமர்ந்திருக்கிறேன்
இந்தக் காலைப் பொழுது
வெளியே வா என என்னை அழைக்கிறது
இந்த நாள் வீட்டிற்கு வெளியே இருந்து கூப்பிடுகிறது
வெளியே வந்து பார்த்தால்
அங்கு யாரும் இல்லை
அது மாயமானின் குரல்
என்னை வேண்டாம் என்று சொல்வதை
நான் கேட்க விரும்பவில்லை
நான் சிறு குழந்தையைப்போல பின்னாலேயே வருபவன்
நான் தவிர்க்கப்படுவதை அறியும் கணத்தில்
சட்டென முகம் வாடிவிடும்
என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலாது
மகிழ்ச்சியான உலகத்தில்
நான் ஒரு அனாவசியமான குறுக்கீடு
அதை உண்மையாகவே நிறுத்த விரும்புகிறேன்
எதையும் கேள்வி எழுப்புவதை நிறுத்த விரும்புகிறேன்
நான் ஏமாற்றப்படுவதாக நினைக்கவில்லை
நான் என்னை நானே ஏமாற்றிக்கொள்கிறேன்
எனக்குத் தூக்கம் வருகிறது
நான் தூங்கிக்கொண்டே இருக்கும்போது
இந்த உலகம் நிம்மதியாக இருக்கிறது
மாத்திரைகளைக் கைவிடவேண்டாம் என
பதட்டத்துடன் கூறுகிறது
ஒரு சூடான காபி அருந்துவேன்
பிறகு நிம்மதியாகத் தூங்குவேன்
என்னை யாரும் அழைப்பார்கள் என்ற கவலை இல்லாமல் தூங்கிப்போவேன்
இரவுகள் தானே வரும் போகும்
பகல்கள் தானே வரும்போகும்
எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு இருக்கிறது
ஒரு முட்டைக்கோஸாகத் தன்னை மாற்றிக்கொள்வது
அப்படி ஒன்றும் மோசமானதல்ல
மேலும் நான் தூங்கிக்கொண்டே இருந்தால்
என்மீதான வெறுப்பு கணிசமாகக் குறைந்துவிடும்
*