காதற் சிறப்புரைத்தல்
காதலர், தம் காதலின் இனிதும், பித்தும் சொல்லும் அதிகாரம்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். (1121)
மென்மொழி பேசும் தலைவியின் தூவெண் பற்களில் ஊறிய நீர் பாலொடு தேனும் கலந்தது போன்ற சுவையுடையது.
பாலொடு தேன் கலந்து இதுவரை அருந்தியதில்லை. ஆயினும் உறுதியாக வாயமுதிற்கு இணையாகாது. வாலெயிற்று நீர் கொஞ்சம் காரமும் உடைத்து. காமம் இடும் காரம் அது.
‘வால்’ எனும் சொல் பழந்தமிழ்க் கவிதைகளில் அடிக்கடி இடம் பெறக்காணலாம்.அது வெண்மை, தூய்மை, பெருமை போன்று பொருள்படும். ‘வாலெயிறு ஊறிய வசை இல் தீ நீர்’ என்கிறது குறுந்தொகை. இந்தத் தீஞ்சுவை நீரைப்பெறாமல் வெறும் செல்வத்தை மட்டும் பெற்று என்னதான் பயனென்று ஒரு தலைவன் பொருட்வயின் பிரிவையே கைவிட்டுவிடுகிறான்.
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. (1122)
உடம்பில் உயிர் எப்படியோ அப்படியானது தலைவியொடு நான் பூண்ட நட்பு.
இந்த ‘உடம்பொடு உயிரை’ ஆண்டாண்டு காலமாக பாவலர் முதல் பாமரர்வரை சொல்லிச் சொல்லி தேய்க்கின்றனர். ஆயினும் அதன் ஆதார இயல்பு காரணமாக அது தேயமாட்டேனென்று அடம்பிடிக்கிறது. கவிதையில் வரும் ‘உயிரே’ எனும் விளி தேய்வழக்காகி வெகுகாலமாகிவிட்ட பின்னும், இசையில் துடிக்கும் ‘உயிரே’ இன்னும் ஜீவனோடுதான் ஒலிக்கிறது. பாடல்களில் அது இன்னும் ‘க்ளிஷே’ ஆகிவிடவில்லை.
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம். (1123)
என் காதலி என்னுள்ளேயே இருக்க வேண்டும். எனில் அதற்குப் பொருத்தமான இடம்தான் என்ன? என் கண்ணிற் கருமணிப் பாவாய்! நீ வேறெங்கேனும் போய்விடு.
வீழுதல் – விரும்புதல், வீழும் திருநுதற்கு- என்னால் விரும்பப்படும் அழகிய நெற்றியையுடைய தலைவிக்கு.
‘கண்ணே’ என்கிற விளியும் காலத்தில் புளித்துவிட்டது. ஆனால் அதன் பாவையை போய்விடு என்று விரட்டுவது சுவாரஸ்யமளிக்கிறது.
‘கண்ணே’விலிருந்து ‘சனியனே’விற்குச் செல்லும் பாதை உளவியல் வல்லுனர்களுக்கு உரியது. அவர்கள் அங்கு இரவு பகலாக வேலை செய்து அரிய பல முத்துக்களை அளித்து வருகிறார்கள்.
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து. (1124)
வாழ்விற்கு உயிர் போன்றவள் தலைவி. எனில் அவள் நீங்கினால் என் உயிர் நீங்குகிறதென்றே பொருள்.
‘காதல் போயின் சாதல், சாதல், சாதல்’ என்று ஓங்கிச் சொல்கிறார் பாரதி. தண்டவாளத்திற்கு தலைகொடுத்துப் படுத்திருக்கும் காதலின் நெஞ்சுரம் நடுநடுங்கச் செய்கிறது. உறுதியாக காதலின் தலைதான் அது. அவனிலிருந்து காதலை மட்டும் உருவி எடுத்துவிட்டால் துள்ளி எழுந்து தூர ஓடிவிடுவான் தலைவன்.
காதல் பன்மைக்கு மாறிவிட்ட காலம்தான் இது. காதலில் தற்கொலைகள் குறைந்துவிட்டதாக வருத்தப்படுகிறது ஒரு திரைப்பாடல். ஆயினும் நமது நாளிதழ்களில் காதலின் ரத்தச் சிவப்புகொட்டாத நாட்கள் குறைவு. காதல் இச்சையன்றி வேறில்லை என்று சொல்வார் உண்டு. எனில் அது ஏன் இன்னொரு உடலைத் தேடிப் போகாமல் பூச்சிக்கொல்லியைத் தேடி ஓடுகிறது?
ஆயிழை – ஆய்ந்து தேர்ந்த ஆபரணங்களை அணிந்தவள்
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம். (1125)
தலைவியை, அவள் குணத்தழகை நான் மறப்பதேயில்லை. மறந்தாலன்றோ நினைப்பதற்கு.
இரண்டாயிரம் வருடங்கள் பழைமையான இந்தக் காதல் காட்சி இன்றுவரை தொடர்ந்து வருகிறது. “என்ன நெனச்சுகிட்டயா?” என்று காதலி கேட்கிறாள். “மறந்தாத்தான நெனைக்கறதுக்கு…” என்று ஒரு போடுபோடுகிறான் தலைவன். “ப்ராடுப் பயடா நீ…” என்று காதலி ஏசினாலும், அப்போது அவள் கண்களில் சின்னதொரு வெட்கம் துள்ளத்தான் செய்கிறது.
ஒள்ளமார்க் கண்ணாள் – ஒளிர்ந்து போர் செய்யும் கண்களை உடையவள்
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர் (1126)
அவர் என் கண்ணிலிருந்து போக மாட்டார். நான் இமைத்தால் அதற்காக வருந்தவும் மாட்டார். அவ்வளவு நுண்ணியர் எம் காதலர்.
ஊரில் அலர் மிகுந்துவிட்டது. அது தணியும்வரை தலைவியைக் காண்பதைத் தவிர்க்கிறான் தலைவன். தலைவியைக் காண வாராத தலைவனைப் பழித்துப் பேசுகிறாள் தோழி. அத்தோழிக்கு தலைவியின் பதிலுரையாகச் சொல்லப்படுகிறது இப்பாடல். என்னைவிட்டு எங்கேயும் போய்விடவில்லை எம் தலைவன். அவன் என் கண்ணுள்ளேதான் இருக்கிறான். ஆனால் உங்களைப் போன்ற ‘ஊனக்கண்’ கொண்டோர்க்கு அவன் தெரிவதில்லை என்று தன் காதலின் சிறப்புரைக்கிறாள் தலைவி.
பருவரல் – வருந்துதல், நுண்ணியர் – கட்புலனாகா நுண்ணியர். ‘நுண்ணிய அறிவுடையார்’ என்கிறது மணக்குடவர் உரை.
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து (1127)
என் காதலர் எப்போதும் என் கண்ணுள்ளேயே உள்ளார். அவர் வருந்தி மறைந்து விடுவாரோ என்றஞ்சித்தான் நான் மைகூட எழுதுவதில்லை.
அலங்கரித்த விழிகளைக்காட்டிலும் அவ்வளவு பிரகாசம் இந்தப் பேதையின் விழிகளில்.
கரத்தல்-, மறைதல், கெடுதல்
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து (1128)
எளிது: நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து
சூடான எதையும் நான் உண்ண அஞ்சுகிறேன். உண்டால் என் நெஞ்சத்துள் இருக்கிற காதலரை அது சுட்டுவிடாதா என்ன?
‘கண்ணுள்ளே காதலர் இல்லை’, ‘நெஞ்சத்தார்க்கு வெய்துண்டால் சுடாது’ போன்ற அசட்டு உண்மைகளால் கவிதைக்கோ, காதலுக்கோ ஒரு பயனும் இல்லை. காதல் வந்தவுடன் அறிவு பல காத தூரத்திற்குப் பறந்துவிடுகிறது. அறிவு பறந்தவுடன் இன்பம் விளைந்துவிடுகிறது. காதலில் நீ எவ்வளவுக்கெவ்வளவு முட்டாளோ அவ்வளவுக்கவ்வளவு இன்பம்.
உணவை உண்டால் அது வாய், உணவுக்குழாய் வழியே நேராக இரைப்பையை அடைந்துவிடுகிறது. இடையில் நெஞ்சத்திற்கு என்ன சோலி என்கிற உங்கள் அனாட்டமி குச்சியைக் கவிதையின் குறுக்கே நீட்டாதீர். இது கவிதை… அதுவும் காதல் கவிதை. இங்கு அது வைத்ததுதான் அனாட்டமி.
வேபாக்கு – வேகுதல், சுடுதல்
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர். (1129)
கண்ணுள்ளே இருக்கும் காதலர் மறைந்து விடுவாரோ என்றஞ்சித்தான் நான் இமைப்பதேயில்லை. இதையறியாத இவ்வூர் அவரை என் உறக்கத்தின் பகைவன் என்று பழிக்கிறது .
கரத்தல் – மறைதல் ஏதிலர்- பகைவர், அயலார்
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர். (1130)
எப்போதும் என் உள்ளத்தே மகிழ்ந்திருக்கிறான் தலைவன். அதை அறியாத இவ்வூரோ அவனை அன்பிலன் என்று தூற்றும்.
ஊருக்கு சகலமும் கண்முன்னே நிகழ வேண்டும். நெஞ்சத்துள் பார்க்கும் வல்லமை அதற்கில்லை. தலைவன் தலைவியுடன் உறையவில்லை எனவே அவனுக்கு அன்பில்லை என்று தூற்றுகிறது ஊர். ஒருவிதத்தில் உடனுறைவதைக் காட்டிலும் உள்ளத்துறைவது சேமமானது. ஓயாமல் உடனுறைகையில் பரவசங்கள் மங்கத் தொடங்கிவிடுகின்றன. காதலின் புத்தம் புதிய ப்ரிண்டில் ‘மழைக்கோடுகள்’ விழுந்து விடுகின்றன. ‘அதீத நெருக்கம் குழந்தைகளையும் வெறுப்பையும் உருவாக்கும்’ என்கிறார் ஒரு அயல் தேசத்து அறிஞர்.