I

இந்தப்போரின் அவலத்தை

நான் யாரிடத்தில் போய்ச் சொல்வேன்?

(1)

பெரிய செப்புக்கங்காளங்களில்

ஊற்றிவைக்கப்பட்டிருக்கும் சிவப்பில்

ஆழதுயின்று கொண்டிருக்கும்

திராட்சை மதுவிடம் சொல்வேன்.

அதில்தான் இந்த அழகிய பெருநிலவு

சிறுமியரின் ஒளிமிகுந்த ஆடைகளின்

கிழிக்கப்பட்ட துண்டுகளாய்

மிதந்து கொண்டிருக்கிறது.

(2)

முதுகுத்தண்டில் குண்டடிபட்ட

கிழவனின் கடைசிப் பெருமூச்சாய்

தெருவோரக் குட்டிச் சுவரில் கால் அகட்டி

கனத்துக்கிடக்கும் இந்த

வெம்மை நிறைந்த இரவிடம் சொல்வேன்.

அதன்கர்ப்பத்தில் தான் கட்டடங்களில் ஓரங்களை

கேக்கின் சுவைமிகுந்த கெட்டிப்பகுதியாய்

வெள்ளைப்பற்களால் கடித்துத்தின்னும்

ஏவுகணைகள் ஈவிரக்கமில்லாத

குருட்டு விந்துத்துளிகளாய்

கைகளில் மணக்கின்றன.

(3)

தெருவிளக்கின் வெளிச்சத்தில்

சன்னலிலிருந்து கறுப்புத் துப்பாக்கி முனைகளாய்

துருத்திக் கொண்டிருக்கும் நீண்ட தண்டுகளையுடைய

இந்த ரோஜாக்களிடம் சொல்வேன்.

அவற்றின் இதழ்களின் அதிர்வுகளில்தான்

பசி என்னும் மிருகம் எரியும் பெரிய கண்களுடன்

இந்த நகரம் முழுவதும் சலசலக்கிறது.

 

II

போர், வலதுகை

கட்டைவிரல் மீது

மிககவனமாகவைக்கப்பட்டு

காற்றில் சுண்டி விடப்பட்ட

ஒளிமிகுந்த

வெள்ளி நாணயம்.

நாணயம், எங்கேபோய்

விழும்என்று

ஆவலோடு பார்த்துக்

கொண்டிருக்கும்

பலநூறாயிரம்

கண்களின் –

கூடல் முடிந்தபின்பு

படுக்கையில் திரும்பிப்படுத்து

தனிமையைத் தேடும்

பெருமூச்சுகள் நிறைந்த

ஆயாசத்தில்

 

உடம்புக்குப் பின்புறமாய்

படுக்கைவிரிப்பில்

கறுப்பாகக் கனத்திருக்கும் –

ஈரவட்டங்களாய், அதன்

பலநூறாயிரம், வன்முறை.

 

III

போர்க்காலத்தில்:

போராளி அல்லாதவர்களை

வரிசையாக நிற்கச்

சொல்லி,

அவர் விரைகளை

இதயத்தின் வடிவமாய்

பறவையின் சிறகுகளாய்

சேர்த்துவைத்திருக்கும்

விரல்களால் –

மலர்களில்

இறக்கைகள்அதிர

அமர்ந்திருக்கும்

பட்டாம் பூச்சிகளைப்பிடிப்பதுபோல் –

பிடித்து நசுக்குவதும்

நுட்பமானது.

ஆயிரம் வயலின்களின்

உருண்டை விழிமிரள

பறித்து எடுத்து வந்த.

குதிரைமயிர்.

வயலினில் தேர்ந்த

வித்தைக்காரனின் விரல்கள்

வழுக்கிக்கொண்டு

போவது போலவே

அவள் ஆடையை இடுப்புக்கு

மேல்தூக்கிவிட

சற்று தூரத்தில்

துப்பாக்கிகளின் எண்ணெய்

நெடியில் கிறங்கியவனாய்

அவள்கணவன்

உருண்டை விழிகள்மிரளக்

கைகளில் ஏந்திய

தன் முகத்தையே கடித்து

தின்று கொண்டிருப்பான்.

தூக்கிய ஆடைக்குக்

கீழே தின்றதற்குச்

சாட்சியாக

இறக்கைகள் அதிர

பட்டாம்பூச்சி அமர்ந்திருக்கும்

கொத்தாக, அவளுடைய

சூடானசிவப்புமலர்.

IV

வன்முறையை வாளிப்பான

சவுக்காய்ப் பயன்படுத்துகிறவர்கள்

உண்டு.

அந்தச்சவுக்கின் நுனி

உன் காதுக்கும் கழுத்துக்கும்

இடையில் உள்ள குளிர்ந்த

புள்ளியை

நாக்கால் நக்கும் உனக்குப்

பொருத்தமான உடலை உடைய

அழகான பெண்ணின் வெம்மையும்

நனைதலும் உள்ளதாய்

இருக்கும்.

போருக்குப் போகும் எல்லா

இடத்திற்கும் கனமான

மார்புகளாய்த் தூக்கிக் கொண்டு

போகிறவர்கள்

உண்டு –

மலைகளின் மீதாக,

பரந்த புல்வெளிகளில்,

வெயிலின் விந்து

கைகளில் பிசுபிசுக்கும்

பாலை வனங்களில்,

உங்களுக்கு அருகில் இருக்கும்

நகரகட்டடங்களில்,

வெம்மையும் நனைதலுமாக

இரண்டு கனமான முலைகள் –

இரண்டு பக்கமும் ஊமையாய்

ஆச்சரியத்தோடு விழித்துப்

பார்க்கும்

மீன்களாக

போர் எப்போதும் இருக்கிறது:

இரண்டு கனமான பாறைகளைத்

தோளுக்குமேல் தூக்கி

தூரவீசுவதாய்,

நதியில் வாலடித்து மறையும்

மீனின் அசைவாய்

பூமியையும், நதியின் போக்கையும்

மாற்றிப்போடும் சம்பவமாய்

காதுக்கும் கழுத்துக்கும்

இடையில் உள்ள

குளிர்ந்த

புள்ளியை

நக்கிவிட்டுப் போவதாய்.

 

V

உனதுமாசுகள் இல்லாத

உடம்பில்

துப்பாக்கிரவைகள்

துளைத்த

துவாரங்கள்

உன்மீது சூடப்பட்ட

ஒரு மல்லிகைப்பூக்களைப் போல்

துல்லியமும், கனமின்மையும்

வாய்ந்தவை.

துளைகளைச் சுற்றி இருக்கும்

உன் முத்தங்களை ஒத்த

மெல்லிய துகள்கள்,

உன் கனவுகள் அனைத்தும்

சுழலும் பிரம்மாண்டமான

பால்வெளி,

நல்ல காற்றோட்ட முள்ள

மகா விஷ்ணுவின் படுக்கை.

ரவைகள் உனக்குள் நுழைந்தபோது

உன் உடம்பு கனமேஇல்லாமல்

லேசாக, உன்கைகளை

உயரத்தூக்கி வெப்பம் நிறைந்த

கடலுக்குள் கால் வைத்த

சிலிர்ப்பாக

சின்ன நடுக்கத்துடன்

கண்கள் செருக

ஆழப் பெருமூச்சுவிட்டிருப்பாய்;

உன்னைப்பிய்த்துத்

தின்ன ஆரம்பித்திருக்கும் சகதியில்

பாதங்கள் பரபரக்க,

தொடைகளின் நடுவே

காட்டு மூலிகைகளின்

வாசனை கிளம்ப

கிளையிலிருந்து விடுபட்ட

செந்நிறப்பூவாக, காற்றில்

அழுகிப்பழுத்த மாமிசத்தை மொய்க்கும்

ஈக்களின் குதூகலத்தோடு

சுய இன்பம் போல் யாருடனும்

பகிர்ந்து கொள்ள முடியாத

மரணம் சம்பவித்திருக்கும்.

ஒரு கோப்பை வோட்காவின் கரிப்போடு

உன்னைத் தழுவ வந்த

நிழல் போன்ற அந்நியனை, நீ

உனது பிரசித்திபெற்ற முத்தங்களால்

ஆரத்தழுவிக் கொண்டாயோ

தெரியாது.

ஆனால் கடைசிவரைக்கும்

வெயிலில் பூரித்த உன் மார்புகளையும்

மடியில் பதிந்திருக்கும்

மல்லிகை பூக்களைப் போன்ற

துல்லியமும், கனமின்மையும்

கொண்ட தூமைத்துணிகளையும்

இரண்டு கைகளாலும்

பொத்தியபடியே

செத்திருக்கிறாய்.

 

VI

வன்முறை என்பது

அகலத்திறந்த குடை.

லேசாய் வளைந்து,

பார்வைக்குப் பளபளப்பாக

கூர்மை மிகுந்த கம்பிகளாய்

ஒரு பயம் நிறைந்த தலைமுறையின்

நாக்குகள் தலைக்கு மேலே

ஒளிவட்டமாகி இருக்கின்றன.

அவற்றின்

வழியாகப் பகல்

வியர்த்து வெள்ளிநிற

உடுப்புகளைக்

களைந்து அம்மணமாகிறது.

 

இதே குடையைத்தான்

என் அப்பனும், தாத்தன்களும்

கையில் வைத்திருந்தார்கள்,

நடுவில் முதுகுத்

தண்டைப் போன்ற

விறைப்பான சலவையோடு:

நாய்களை விரட்ட, சந்தைக்

கூட்டத்தில் கடக்க விடாதவர்களின்

கண்களைக் குருடாக்கி மகிழ,

கல்யாண வீடுகளிலும்

கோவில்களிலும் வேண்டா

தவர்களின் வார் அறுந்த

செருப்புக்களை நிமிண்டி

தூரப்போட.

அந்த வளைந்த கைப்பிடியின்

வழவழப்பில்தான் அவர்களுடைய

ஆண்மை இருந்தது.

பலதரப்பட்ட அம்மாக்களின்

கைச்சூட்டோடு

இப்போது என் கைக்கு

வந்திருக்கிறது.

என் மொத்த ஆண்மையும்

யாரையும் குத்தி விடாத படி

குடையை மடக்கிக்

கிளம்புவதில்தான் இருக்கிறது

சாமர்த்தியம்.

 

writersithurajponraj@gmail.com