அதுவொரு காலம்.

அப்போதெல்லாம் காங்கிரஸ் கூட்டமென்றாலே சத்திய மூர்த்தி பவனில் கதர்வேட்டிகள் டார்டாராய் கிழியும்.இப்போது கிழித்துவிடக்கூட ஆளில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

அம்மாதிரி வேட்டி கிழிந்த பொழுதொன்று. அப்போதைய காங்கிரஸ் மாநிலத் தலைவரான வாழப்பாடி யாரிடம் செய்தியாளர்கள் ஏன் இப்படிக் கிழித்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

“குளத்தில் அலையடிக்காது. காங்கிரஸ் பேரியக்கம் பெருங்கடல்” என்று இலக்கியத் தரமாய் பதிலளித்தார்.

இந்தப் பதிலுக்குள் ஒளிந்திருந்த சாமர்த்தியம் இன்றும் ஆச்சரியப்படுத்தக் கூடியது.

அதே மாதிரி ஆச்சரியத்தைதான் சமீபத்திய அதிமுக அடிதடிகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அதிமுகவில் ஏன் அடித்துக் கொள்கிறார்கள் என்றால், அங்கே ஜனநாயகம் இருக்கிறது என்று அக்கட்சிக்கு முட்டுக் கொடுக்கிறார்கள், அக்கட்சிக்கும், தனக்கும் ஸ்தான பிராப்தியே இல்லாத சமூக ஆர்வலர்கள் பலர்.

அதிமுகவினரே சிந்தித்திருக்காத இந்த முரட்டு முட்டுப் பதிலைக்கேட்டு மெரீனாவில் அடக்கமான புரட்சித்தலைவி அம்மாவும், புரட்சித்தலைவர் அவர்களும் திடுக்கிட்டுப் புரண்டு படுத்திருப்பார்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.

 அதிமுக என்றொரு கட்சி, தமிழ்நாட்டுக்கு எந்தக் காலத்திலுமே தேவைப்பட்டதில்லை என்பதுதான் உண்மை.

கலைஞருடனான தன்னுடைய தனிப்பட்ட ஈகோ உரசலைத் தவிர்த்து, அதிமுகவை எம்.ஜி.ஆர். தோற்றுவிக்க வேறேதேனும் இனநலனோ, மொழிநலனோ, கொள்கைப்பிடிப்போ காரணமாக இருந்ததா என்ன?

‘திமுகவிடம் கணக்கு கேட்டேன். நியாயம் கேட்டேன். எனவே தனிக்கட்சி ஆரம்பித்தேன்’ என்றார் எம்.ஜி.ஆர்.

பலரும் மறந்த விஷயம். அப்போது திமுகவின் பொருளாளராக இருந்தவர் எம்.ஜி.ஆர். கணக்கு காட்ட வேண்டிய நிலையில் அவர் தான் இருந்தார்.

மேலும் –

வருமானவரித்துறை, சினிமாவில் அவர் சம்பாதித்த பணத்துக்குதான் கணக்கு கேட்டுக் கொண்டிருந்தது. டெல்லிக்காரர்கள் கேட்டதை இவர் செவ்வனே செய்து கொடுத்தார். அதுதான் திமுகவில் பிளவு.

எனவேதான் –

அதிமுகவின் கொள்கையென்ன என்று கேட்டதுக்கு, சொல்ல பதில் இல்லாமல் ‘அண்ணாயிஸம்’ என்று டயர் உருட்டினார்.

‘அண்ணாயிஸம் என்றால் என்ன?’வென்று கேட்டால், ‘அண்ணா என்னவெல்லாம் சொன்னாரோ, அதெல்லாம்தான் அண்ணாயிஸம்’ என்றார்கள் அதிமுகவினர்.

தெளிவு பெற கேள்வி கேட்டவர்களுக்குதான் தலைக்குள் நட்டு, போல்டு கழண்டது.

எம்.ஜி.ஆருக்கு அரசியல் ஈடுபாடு என்பதே, தன்னுடைய சினிமாப் படங்களுக்கு கூட்டம் சேர்த்துக்கொள்ள குறுக்குவழி உபாயம்தான்.

இல்லையேல் மொழிப்போர் உச்சத்தில் தமிழகம் தகித்துக் கொண்டிருந்தபோது கோவாவில் தன் புதுப்பட ஹீரோயினோடு டூயட் பாட்டுக்கு ஆடிப்பாடிக் கொண்டிருந்திருப்பாரா?

அப்படி ஆடிப்பாடிய ஹீரோ ஒரு கட்சி ஆரம்பித்தார். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியையும் பிடித்தார்

.அவரோடு ஆடிப்பாடிய ஹீரோயினும் பிற்காலத்தில் அதே கட்சிக்குத் தலைமைப் பொறுப்பேற்றார். அக்கட்சியின் சார்பாக அவரும் தமிழ்நாட்டையும் ஆண்டார்.

உலகிலேயே வேறெங்காவது இத்தகைய கேலிக்கூத்துகள் அரங்கேறியிருக்குமா என்பது சந்தேகம்தான்.

அத்தகைய அதிரடியான சாதனைகள் பலவற்றுக்கும் சொந்தம் கொண்டாட கோமாளிகளின் கூடாரமான அதிமுகவுக்கு முழு உரிமையும் உண்டு.

சாதி ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தே திராவிட இயக்கம் பிறந்தது.

எவரும் சாதிப்பெருமை பேசக்கூடாது என்று சொல்லி, இந்த இயக்கத்தவர் தத்தம் பெயருக்கு பின்னால் இருந்த சாதியப் பின்னொட்டுகளை துறந்தார்கள்.

பதிலுக்கு பட்டம் பெற்று, அந்தப் பட்டத்தைபெருமை யாக தங்கள் பெயருடன் இணைத்துக் கொண்டார்கள்.

பெயரில் திராவிடம் இருந்தாலும் அதிமுக முதமுதலாகப் பங்கேற்ற திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரின் பெயர் மாயத்தேவர்.

அதுநாள் வரை திராவிடக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் சாதிப்பெயரோ, பட்டமோ இடம்பெறாது.

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத்தந்த அத்தேர்தலில் மாயத்தேவர் பெற்ற அபரிதமான வெற்றி, பிற்காலத்தில் நடந்த தேர்தல்களின் வேட்பாளர் தேர்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

திமுக, சாதிகளுக்கு எதிரான இயக்கமென்று ஏற்கனவே பெயர் பெற்றிருந்தது.

எனவே எண்ணிக்கை அடிப்படையில் திரட்சி பெற்றுக் கொண்டிருந்த சாதிகளுக்கு திமுகவென்றாலே வேம்பாய் கசக்கும்.

இந்நிலையில் திமுகவுக்கு இருக்கும் அம்மாதிரியான சமூகநீதி நெருக்கடிகள் எதுவும் தனக்கில்லை என்பதை வெளிப்படையாகவே சமரசத்துக்கு முன்வந்தது அதிமுக.

இதனால் தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திரண்டு கொண்டிருந்த பெரும் சாதிகளின் டார்லிங்’ ஆனார் எம்.ஜி.ஆர். திராவிட இயக்கத்தின் இயல்பான பார்ப்பனீய எதிர்ப்பும் அவரிடம் மிஸ்ஸிங் என்பதைப் பூரிப்போடு பார்த்தது டெல்லி.

தேசியக்கட்சிகள் தேர்தலில் மோதி திமுகவை அழித்தொழிக்க முடியாது என்கிற நிலையில், திராவிட லேபிளுடனேயே தேசிய அரைக்கிறுக்குப் பண்புகளோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமென செயல்பட்ட எம்.ஜி.ஆரை வாராது வந்த மாணிக்கமாக அவாள் கொண்டாடியதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?

எம்.ஜி.ஆர் மூன்று தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றார். பத்தாண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தார். அவர் உயிரோடு இருந்தவரை கலைஞரால் அவரை வெல்லவே முடியவில்லை என்று இன்றும் பெருமை பேசக்கூடியவர்கள் உண்டு.

உண்மை என்னவென்றால்?

எம்.ஜி.ஆர் சாதியத் திரட்சிகளை தன்னுடைய தேர்தல் வெற்றிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் ‘மேனன்’ சாதியை சேர்ந்தவரான அவர்,

தன்னை தமிழ் சாதியான ‘மன்றாடியார்’ என்று நிறுவ தலைகீழாக நின்று தண்ணீர் குடித்த கொடூரக் காமெடி யெல்லாம் நடந்தது. ஒருவகையில் இன்றைய சீமானுக்கு முன்னோடியாக கூட எம்.ஜி.ஆரை சொல்லலாம்.

கலைஞர், சாதிய ஏற்றத்தாழ்வுகளை சமரசமின்றி எதிர்த்ததால் தேர்தல்களில் தொடர்ச்சியாகப் பின்னடைவு பெற்றார். பார்ப்பனீயத்துக்கு எதிரான படைத்தளகர்த்தராக கடைசிவரை களத்தில் நின்றார்.

திமுகவின் கதை முடிந்தது என்றே பலரும் முடிவு கட்டியிருந்த காலக்கட்டத்தில், மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றது. இடைப்பட்ட காலத்தில் அஞ்ஞாதவாசம் புரிந்திருந்தாலும், மீண்டும் திராவிட இயக்கக் கொள்கைகளின் அடிப்படையிலான சட்டங்களையும், திட்டங்களையும் நடைமுறைக்குக் கொண்டுவருவதில் மும்முரம் காட்டியது.

அந்த ஒரு காரணம் போதாதா?

சுப்பிரமணியசாமியும், ஆர்.வெங்கட்ராமனும் கூட்டணி போட்டு திமுக ஆட்சியைக் கலைப்பதற்கு. போதாக்குறைக்கு அவர்கள் சாதியை சார்ந்த ஜெயலலிதாவே, அதிமுகவுக்கு தலைமை வேறு ஏற்றிருந்தார். அதுநாள் வரை அதிமுகவைப் பின்னணியில் இயக்கிக் கொண்டிருந்த பார்ப்பனீயம், நேரடியாகவே அக்கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றி இருந்தது.

ஒரு திராவிடக் கட்சிக்கு பார்ப்பனத் தலைமையா என்று மனம் கொதித்தாலும், அதிமுகவினருக்கு அப்படியெல்லாம் சூடு, சொரணை அப்போது வந்துவிடவில்லை. இப்போதும் வரப்போவதில்லை.

என்னதான் சட்டமன்றத்திலேயே கூட ‘நான் பாப்பாத்தி’ என்று நெஞ்சை நிமிர்த்தி, ஜெயலலிதா அறிவித்துக் கொண்டிருந்தாலும் கூட வாக்குக்காக தமிழ்நாட்டின் பெரும் சாதிகளோடு அவர் சமாதானம் பேணவேண்டியிருந்தது.

அதற்காக அவருக்கு சமூகநீதி முகமூடியும் தேவைப்பட்டது. சசிகலாவின் சாதியும் அவசியப்பட்டது.

இவ்வாறாக தேர்தல் என்பதை ஒரு மசாலாப்படத்துக்கு உரிய சுவாரஸ்யத்தோடு, வாக்காளனின் நாடித்துடிப்பு பிடித்து அணுகுவது அதிமுகவின் பண்பாடு. என்னதான் இருந்தாலும் அக்கட்சியின் நிறுவனரும், பிற்பாடு கட்சியை 30 ஆண்டுகள் நடத்தியவரும் சினிமாக்காரர்கள்தான் இல்லையா? இயல்பிலேயே வெகுஜனரசனை அவர்களுக்குக் கைவந்த கலையாக இருந்தது

.87ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் காலமானபோதும் அதிமுக இப்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் குழப்பங்களையே சந்தித்தது. எனினும், ஜெயலலிதாவின் தலைமையில் அவர்கள் வெகுவிரைவிலேயே திரண்டு தங்கள் கட்சியைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

அதிமுக தலைமைக்கு அடிப்படைத் தகுதியான நட்சத்திர அந்தஸ்து ஜெயலலிதாவுக்கு இருந்ததே அதற்கு அடிப்படைக் காரணம்.

விசிலடித்து, கைத்தட்டி, குனிந்து, காலில் விழுந்தே பழகிவிட்ட அதிமுகவினருக்கு அப்படியான ஒரு ‘ஸ்டார்’ மட்டுமே தலைமையேற்க முடியும்.

எனவேதான் –

ஒலிம்பிக் திருவிழா கணக்காக கூவத்தூர் எபிசோடை கொண்டாட்டமாக ஆரம்பித்திருந்தாலும் சசிகலாவால், அதிமுகவைத் தன் கைப்பிடிக்குள் முழுமையாக வைத்துக் கொள்ள முடியவில்லை.

ஒருவேளை ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே சினிமாவில் குறைந்தபட்சம் அக்கா, அண்ணி, அம்மா வேடங்களிலாவது நடித்திருந்து தனக்கொரு நட்சத்திர அந்தஸ்தை சசிகலா ஏற்படுத்திக் கொண்டிருந்தால், இப்போது ஊர் ஊராக ஊர்வலம் போய் லோல்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

மேலும் –

எடப்பாடி, பன்னீர் அல்ல என்பதை அவர் உணராமல் போய்விட்டார். இதை உணரவேண்டிய காலகட்டத்திலும் கூட அவர் பெங்களூரில் ஊதுபத்தி உருட்டிக் கொண்டிருந்தார்.

காலம் கடந்து அதிமுகவின் தலைமைப் பொறுப்பை அவர் கோரும்போது, காட்சிகள் பெருமளவில் மாறிவிட்டிருந்தன.

சசிகலாவின் காலில் மண்புழுவாக ஊர்ந்துதான் முதல்வர் பதவியை எடப்பாடி பெற்றிருந்தாலும், அதிமுகவுக்கே உரிய பண்பை அவர் துல்லியமாக கணித்திருந்தார்.

நிமிர வேண்டிய நேரத்தில் நிமிர்ந்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தை உணர்ந்திருந்தார்.

பன்னீரின் தர்மயுத்த சமயத்தில் சசிகலா மற்றும் தினகரனோடு இணக்கமாக இருந்ததைப் போலவே பாவலா காட்டி, சசிகலா பெங்களூருக்குச் சென்றிருந்த நிலையில் நைசாக பன்னீரோடு ஓர் ஒப்பந்தத்துக்கு முன்வந்தார். இதில் பாஜகவின் கை இருக்கிறதென்றாலும், சசிகலாவை பகைத்துக் கொள்வது என்கிற துணிச்சலான முடிவை எடுக்கும் புத்திசாலித்தனம், அதிமுகவில் எடப்பாடியைத் தவிரவேறு எவரிடமும் இல்லை.

இதன் மூலமாக எவ்வித செல்வாக்கும் இல்லாத எடப்பாடி, நாலரை ஆண்டு காலம் தமிழ்நாட்டைஆளும் அரிய வாய்ப்பை பெற்றார்.

வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீடு என்கிற நடை முறைக்கு சாத்தியமில்லாத ஒரு வெற்று அறிவிப்பை பாமக கூட்டணிக்காக தேர்தல் தேதி அறிவிப்புக்கு சற்று நேரம் முன்பாகக் கடைசிநேர அறிவிப்பாக அறிவித்தார் எடப்பாடி.

அதன் மூலமாக பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், பன்னீர்செல்வம் சார்ந்த சமூகத்தையும் உசுப்பேற்றினார்.

அவ்வறிவிப்பால் ஏற்பட்ட பிரச்சினைகளை பன்னீர் செல்வம்தான் எதிர்கொள்ள வேண்டுமென பந்தை, இந்தப் பக்கமாக தட்டிவிட்டு கொங்கு மண்டலத்தில் தன்னுடைய சாதியினரைத் திரட்டும் பணியில் பிஸியானார் எடப்பாடி. கடைசியில் தன் சொந்த சமூகத்தின் ஆதரவையே இழந்த பன்னீர்தான்.

தன்னுடைய சமூகத்திலேயே தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பு தனக்கு மட்டும்தான் கிடைத்தது என்பதை கொங்குமண்டலத்துக்கு பறையடித்து அறிவிக்காததைத் தவிர்த்து, மீதி எல்லா முறையிலும் முரசடித்தார் எடப்பாடி.

எம்.ஜி.ஆரும், ஜெயலிதாவும் எப்படி தென் தமிழகத்து சாதித் திரட்சியை தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டார்களோ, அதே பாணியில் மேற்கு மண்டல சாதித் திரட்சியை தனக்கு வாகாகப் பயன்படுத்திக் கொண்டார் எடப்பாடி.

இதன் விளைவாகவே இனி அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை தேவையில்லை, இனி தானே புரட்சித்தலைவர், இனி தானே புரட்சித்தலைவி என்று அறிவித்துக் கொள்கிற சடங்குகளை பொதுக்குழு மாதிரி சம்பிரதாயங்களை மீறாமல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

எடப்பாடியின் அதிர்ஷ்டம், இப்போது அதிமுகவில் ‘ஸ்டார்’ என்று சொல்லிக் கொள்ளக்கூடிய வகையில் சினிமா நட்சத்திரங்கள் யாரும் போட்டியில் இல்லை. சிவாஜி ரசிகரான பன்னீர்செல்வம்தான் பழனிசாமியின் ஒரே போட்டி.

பன்னீர்செல்வத்தை, அவர் சாதியிலிருந்து முடிந்தவரை தூரப்படுத்திய அதே நேரத்தில், தன்னை மேலும் மேலும் தன் சாதியின் அடையாளமாக மாற்றிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் தெற்கு; இன்று பழனிசாமி காலத்தில் மேற்கு என்று சாதிகள்தான் அதிமுகவை இயக்கின்றனவே தவிர கொள்கைகளோ, தலைவர்களோ அல்ல.

இதே பழனிசாமியை ஈஸியாக வீழ்த்த யாராவது ஒரு சினிமா நடிகை வந்தாலேகூடப் போதும். ஏனெனில் அதிமுகவினர் தங்கள் கட்சியிடமிருந்து எதிர்பார்ப்பது அரசியலை அல்ல, அன்லிமிடெட் எண்டெர்டெயின்மெண்ட்டைத்தான்.