அமிர்தம் லாட்ஜ்

அந்த அப்பார்ட்மெண்டில் அலெக்ஸாண்டர் வீட்டிற்கு அடுத்த வீட்டிற்குப் புதிதாக ஒரு குடும்பம் வாடகைக்கு வருகிறது. அந்தக் குடும்பத் தலைவர் ரயிலில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் என்று அலெக்ஸாண்டர் தெரிந்து வைத்திருந்தார். பிற விவரங்களை பின்னர் தெரிந்துகொள்வோம் என்று நினைத்தார். அடுத்த வீட்டிற்குப் பொருட்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. மேலாண்மை செய்துகொண்டிருந்தவர்தான் அடுத்த வீட்டிற்குக் குடிவருகிறவர் என்று நினைத்தார். அவர் பொருட்களை எங்கெங்கே இறக்கி வைக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஓர் ஆட்டோ வந்து நின்றது. ஒரு பெண் இறங்கினாள். அவர் உடனே அவளை அடையாளம் கண்டுகொண்டார். அவள் கிளாரா. பார்த்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. அவள் அவரைப் பார்க்கவில்லை.

அலெக்ஸாண்டர் வீட்டுக்குள் வந்துவிட்டார். பழைய நினைவுகள் மனதில் மேலெழுந்து வந்தன. பழைய கிளாராவை நினைத்துக்கொண்டார்.

அலெக்ஸாண்டர் பணிபுரிந்த அலுவலகத்தில் கிளாராதற்காலிக ஊழியராகப் பணிபுரிந்தாள். வசதியற்ற குடும்பம். அவளுக்கு முதலில் சுப்பிரமணியத்திடம் தொடுப்பு இருந்தது என்று சொல்வார்கள். அவர் வேறு ஊருக்கு மாறுதலாகிச் சென்றுவிட்டார். அலெக்ஸாண்டரின் மேசையின் எதிர்ப்புறத்தில் கிளாரா நாற்காலியில் உட்கார்ந்திருப்பாள். அலெக்ஸாண்டருக்கு உதவியாகஅவர் சொல்லும் வேலைகளைப் பார்க்குமாறு மேலதிகாரி அவளுக்கு உத்தரவிட்டிருந்தார். அவளுக்குச் சுருட்டை முடி. மூக்கு சற்று விடைத்திருக்கும். பெரிய உதடுகள். மெலிந்த சிவந்த உதடுகள் தரும் கவர்ச்சி ஒருவிதம் என்றால் இந்தப் பெரிய உதடுகள் தரும் கவர்ச்சி இன்னொரு விதம். அலெக்ஸாண்டருக்குத் தன் காலில் இன்னொருவரின் கால் தேய்ப்பது போலிருந்தது. காலை இழுத்துக்கொண்டார். கிளாராவைப் பார்த்தார். அவள் ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள். இவர் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவள் தனக்குத் தரும் சமிக்ஞை என்று அவர் அறிந்துகொண்டார்.

வாசலில் யாரோ காலிங் பெல்லை அழுத்தி, பெல் ஒலித்தது. அலெக்ஸாண்டர் வந்து கதவைத் திறந்து பார்த்தார். கிளாரா நின்றுகொண்டிருந்தாள்.

“எப்படி நான் இங்கிருப்பது தெரியும்?” என்றார்.

“என்ன… பக்கத்து வீட்டுக்காரரைத் தெரியாதா. காலையில் நீங்கள் வாக்கிங் போகும்போது பார்த்தேன்.”

“சாமான்கள் இறங்கிக் கொண்டிருக்கும்போது நீங்கள் ஆட்டோவில் வந்து இறங்கினீர்கள். அப்போதே உங்களைப் பார்த்துவிட்டேன்.”

“உங்க கணவர் வரக் காணோம்.”

“குழந்தைகள் எங்கே இருக்காங்க.”

“ஒரே பையன். கல்யாணமாகி அமெரிக்காவிலே இருக்கான். உங்களுக்கு…”

“எனக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் கல்யாணமாகி கோயம்புத்தூர்லே இருக்கா. மகனுக்கு சமீபத்துலேதான் கல்யாணமாச்சு. அவங்க கூடத்தான் நான் இருக்கேன். ரெண்டு பேரும் வேலை பாக்கிறாங்க. என் மனைவி இறந்து போயிட்டாங்க. ரத்தப் புற்றுநோய். காலையிலே மருமக சமைச்சு வைச்சுட்டுப் போயிருவா. ரெண்டு பேரும் சாயந்தரமா வருவாங்க. ஒத்தை ஆளா பொழுதைப்

போக்கிக்கிட்டு இருக்கேன். சர்ச்சுக்குப் போவேன். டி.வி. பாப்பேன்.”

“வொய்ப் இறந்து எவ்வளவு காலமாச்சு?”

“அஞ்சு வருஷம். கஷ்டப்பட்டு இறந்தா.”

சற்று நேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.

“என் ஞாபகம் வருமா?” என்றாள் கிளாரா.

“எப்பவாவது வரும்.”

“எப்ப வரும்?”

“காமம் வரும்போது ஞாபகம் வரும். பழசை யோசிக்கறப்ப ஞாபகம் வரும்.”

“கடைசியா, என்னக் கூட்டிக்கிட்டு ஒவ்வொரு

லாட்ஜா போயி இடமில்லாம சுத்திக்கிட்டு இருந்தோம்.

கடைசியா ஒரு லாட்ஜ்லே இடம் கிடைச்சது. ரூம் பையன் வாங்கிக் கொடுத்த மட்டன் பிரியாணியின் ருசி இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு. நீங்க கில்லாடிதான். அந்த அனுபவம் சாகறவரை ஞாபகத்துலே இருக்கும்.”

“எனக்கும் அந்த அனுபவம்தான் மொத்தஅனுபவங்கள்லே முதலா ஞாபகத்துக்கு வருது.”

“அதுக்கப்புறம் என் கல்யாணத்துலே உங்களைப் பாத்தேன். திருச்சிக்குப் போயிட்டோம். கல்யாணத்துக்கப்புறம் பத்தினியா மாறிட்டேன்.”

“இப்பவும், பத்தினிதானா?”

“ஆமா. கல்யாணம் ஆயிருச்சுன்னா பத்தினிதானே. வயசும் கூடிக்கிட்டே போகுது.”

“வயசு கூடாம இருக்கறப்ப நாம சந்திச்சிருந்தாலும் பத்தினிதானா?…”

“ஆமா. கல்யாணத்துக்குப் பின்னால் நான் பத்தினியாயிட்டேன்.”

“சரி. நல்லதுதான். ஆரம்பிச்சா அப்புறம் நிக்காது. தொடர்ந்துகிட்டே போகும். வாழ்க்கை குழம்பிரும்.”

“சரியாச் சொன்னீங்க” என்றாள் கிளாரா. சற்றுநேரம் மௌனம் நிலவியது. “அவர் வந்துருவாரு. பிறகு அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கறேன். நல்ல மனுஷன்.”

“அவள் எழுந்தாள். அலெக்ஸாண்டரும் எழுந்தார்.

“அந்த லாட்ஜ் பேர் என்ன?” என்றாள்.

“அமிர்தம் லாட்ஜ்” என்றார்.

“ஆமாம். அமிர்தம்தான்” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே அவள் வெளியேறினாள்.

“அவர் வெளியே போயிருக்கார். நான் கல்யாணம் பண்றப்ப அவர் டெம்ப்ரவரியாத்தான் ரயில்வேயிலே வேலை பாத்தார். பின்னாலே எப்படியோ பெர்மணன்ட் ஆயிட்டார். ரிட்டயர்டும் ஆயாச்சு.”

 

சவுந்தர்யா – சுப்புலட்சுமி

சிறையிலிருந்து வெளியே வந்தான் இசக்கிமுத்து. அவனுடைய மனைவியின் அண்ணன் வெளியே காத்திருந்தான். ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். மனைவியைப் பார்த்தான். அவள் பதட்டத்திலும் வெட்கத்திலும் இருந்தாள். திருமணமாகி ஆறுமாத காலத்தில், ரவியைக் கொலை செய்த வழக்கில் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று விடுதலை பெற்றுள்ளான்.

“அண்ணே, மாமா டீ சாப்பிடறாங்களான்னு கேளுங்க.”

“ஏன் நீயே கேட்க வேண்டியதுதானே” என்றான் அண்ணன்.

இசக்கிமுத்து மனைவியை நன்றாகப் பார்த்தான். சிறையில் பார்க்க வருபவர்களின் கூட்டத்திற்கிடையே அவளைப் பார்த்தது. இப்போது வீட்டில் சுதந்திரமாகப் பார்க்க முடியும். பேசமுடியும். இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி டீ தயாரிக்க உள்ளே போனாள்.

“வடிவு அவுங்க அப்பா வீட்டுக்கு ஊர் கிடா வெட்டுக்குப் போயிருக்கு. வந்ததும் உங்களைப் பாக்க கூட்டி வர்றேன்.”

“அதான் ஏற்கனவே ஊர் கிடாவெட்டுக்குப் போனதா சொன்னீங்களே. மெதுவா வரட்டும். நான் அதையெல்லாம் ஒரு விஷயமா நெனைக்கிறவனில்லை” என்றான் இசக்கிமுத்து.

இசக்கிமுத்து, சுப்புலட்சுமி கல்யாணத்தின்போது சுப்புலட்சுமியின் அப்பா மட்டும் இருந்தார். அம்மா ஏற்கனவே காலமாகியிருந்தார். சுப்புலட்சுமியின் அண்ணன் மாரிமுத்துவும் அப்பாவும் கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள். மாரிமுத்துவிற்கு ஏற்கனவே வடிவுக் கரசியுடன் கல்யாணமாகியிருந்தது. மாரிமுத்துவின் குடும்பத்தோடு அப்பா இருந்தார். சுப்புலட்சுமியையும் இசக்கிமுத்துவையும் தனிக்குடித்தனம் வைத்தார்கள். இசக்கிமுத்து சிறைக்குச் சென்ற பின்னர், அப்பா, சுப்புலட்சுமியுடன் இருந்தார். ஆறுமாதத்திற்கு முன் அவர் காலமாகிவிட்டார்.

சுப்புலட்சுமி டீ கொண்டுவந்தாள். டீயைக் குடித்துவிட்டு மாரிமுத்து, இசக்கிமுத்துவைப் பார்த்துச் சொன்னான்.

“காலையிலேயே கறி வாங்கி தங்கச்சிகிட்டே கொடுத்துட்டுத்தான் உங்களைப் பாக்க வந்தேன்.”

இசக்கிமுத்து சிரித்துக்கொண்டான். “நன்றி

மாப்பிள்ளே” என்றான்.

“நான் போயிட்டு வாரேன்” என்றான் மாரிமுத்து. “அண்ணே, அண்ணியும் இல்லை. மத்தியானம் சாப்பிட வந்துரு” என்றாள் சுப்புலட்சுமி.

“என் சிநேகிதக்காரன் ஒருத்தன் சாப்பிடக் கூப்பிட்ருக்கான். வான்கோழி பிரியாணி வைக்கறானாம். நாளைக்குக் காலையிலே வெள்ளன உன் அண்ணி வந்துருவா. அவளைக் கூட்டியாரேன்.”

சுப்புலட்சுமி அவனை இருக்குமாறு அழுத்திக் கூறவில்லை. ‘உண்மையோ பொய்யோ அண்ணன் நாங்க தனியா இருக்கட்டும்னு நெனைச்சுப் போறாரு’ என்று நினைத்துக்கொண்டாள்.

மாரிமுத்து சென்றுவிட்டான். இசக்கிமுத்துவும் சுப்புலட்சுமியும் தனியாக இருந்தார்கள். சுப்புலட்சுமிக்குப் படபடப்பாக இருந்தது. இசக்கிமுத்து எழுந்து கதவைச் சாத்தினான். சுப்புலட்சுமியின் கையைப் பிடித்து இழுத்து அணைத்துக்கொண்டான். அணைப்பு இறுகியது. சுப்புலட்சுமி நெளிந்தாள். “ராத்திரி வைச்சுக்குவோம். சமையல் பண்ணனும்” என்றாள்.

“அதுவரைக்கும் தாங்காதே.”

“வெளிச்சமா இருக்கு. நீங்க பல வருஷங்கழிச்சி வந்திருக்கிங்க. யாராவது பாக்க வருவாங்க. கதவு சாத்தியிருந்துச்சுன்னா என்ன நெனைப்பாங்க? வேண்டாங்க” என்றாள்.

அவன் பிடியை விட்டான். அவள் ஓசையில்லாமல் கதவைத் திறந்து வைத்தாள். அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே அடுக்களைக்குச் சென்றாள்.

அடுக்களையிலிருந்து ஆட்டுக்கறி சமைக்கும் வாசனை வந்தது. படுக்கையில் கண்மூடிப் படுத்திருந்த இசக்கிமுத்துவிற்கு ரவி இறந்த சம்பவம் நினைவிற்கு வந்தது. ரவி அவனுக்கு நெருங்கிய நண்பன். மொத்த நண்பர்களிலும் அவனே முதல் இடத்தில் இருந்தான். ரவியினால் பல காரியங்களைச் செய்ய முடிந்தது. சூழ்நிலையைக் கையாளும் விதத்தில் கெட்டிக்காரனாகவும் புத்திசாலியாகவும் சாமர்த்திய சாலியாகவும் இருந்தான். பொருளாதாரத்திலும் அவனுக்கு நல்ல முன்னேற்றம் இருந்தது. தன் மனதில் அவன் மேல் பொறாமை ஏற்படுவதை இசக்கிமுத்து உணர்ந்திருந்தான். ரவியின் மனைவி சவுந்தர்யா அழகானவள். சிவந்த நிறம் உடையவள்.

அன்று இருவரும் மது அருந்த முடிவு செய்து, கோழி, சுக்கா வறுவல், மது பாட்டில், நொறுக்குத் தீனியுடன் சாமிக்கண்ணுவின் தென்னந்தோப்பிற்குள் நுழைந்து நிழல் பார்த்து, பெட்ஷீட்டை விரித்து உட்கார்ந்தார்கள். குடிக்க ஆரம்பித்தார்கள். ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது திடீரென்று பிடித்த நடிகைகள் பற்றிப் பேச்சு வந்தது. இசக்கிமுத்துவிற்கு அந்தச் சமயம் ரவி மனைவி சவுந்தர்யாவின் தோற்றம் நினைவுக்கு வந்தது. அவர்களுக்குள் சண்டை மூண்டது. இருவரும் அதிக போதையில் இருந்தார்கள். போதையிலும் தன்மீது தப்பு இருப்பதாக இசக்கிமுத்துவிற்கு மெலிதாகத் தோன்றியது. சண்டையில் தான் ஜெயிக்கவேண்டும் என்ற உணர்வு தோன்றியது. அண்ட்ராயர் பையில் வைத்திருந்த மடக்குக்கத்தியை எடுத்து ரவியைக் குத்திவிட்டான். அவனைக் கொல்லவேண்டும் என்று நினைக்கவில்லை; ஜெயிக்கவேண்டும் என்ற நினைப்பு உந்தித் தள்ளியது. அந்தக் கணத்தில் அவனுக்கு சுப்பு லட்சுமி நினைவுக்கு வந்தாள். சரியான நாட்டுக்கட்டை தான் என்ற எண்ணம் தோன்றியது. ரவியை மேலும் சில தடவை குத்தினான். ரவி கீழே விழுந்தான். பிறகு அவன் இறந்துவிட்டானென்று தோன்றியது.

இசக்கிமுத்து தன்னையறியாது தூங்கிவிட்டான். சுப்புலட்சுமி வந்து அவன் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து எழுப்பலாமா வேண்டாமா என்று யோசித்தாள். சமையல் முடிந்து தயார் நிலையில் இருந்தது.

“மாமா, எந்திரிங்க மாமா. சாப்பாடு ரெடியாயிருக்கு” என்று அவனை எழுப்பினாள். அவன் விழித்து அவளைப் பார்த்து அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

“மாமா, வாசக்கதவு திறந்திருக்கு” என்று அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டாள்.

“சுப்பு, நீ சரியான நாட்டுக்கட்டை” என்று அப்போது இசக்கிமுத்து சொன்னான்.

 

கண்ணாடிப் பொருள்

சா ப்பாட்டிற்கு வழி இல்லாத குடும்பத்தில் பிறந்தவனுக்கு ‘செல்வம்’ என்று ஏன் பெயர்வைத்தார்கள் என்று பலதடவை அவன்யோசித்திருக்கிறான். எப்போதும் பணத்தட்டுப்பாடு. கடன் வாங்கினால், அதைத் திரும்ப செலுத்த வழி இல்லை. அநியாயமான வட்டி. வேறு வழி இல்லாத நேரத்தில் கடன் வாங்கி, கட்டமுடியாத நேரத்தில் வட்டிக்காரன் மாதச் சம்பளத்தை அப்படியேபிடுங்கிக்கொண்டு, அவன் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் தவித்திருக்கிறான்.

சின்ன வயதில் தன்னையும் அம்மாவையும் தவிக்கவிட்டு வேறு ஊரில் இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் அப்பாவைக் கொன்றுவிட வேண்டும் என்ற ஆத்திரம் அந்தச் சின்ன வயதில் அடிக்கடி தோன்றுவதுண்டு. காலையில் அம்மா சமைக்கமாட்டாள். வழி இல்லை. மதியம் பள்ளியில் கொடுக்கும் உணவுதான் பசி ஆற்றும். இரவு இருள் வந்தபின் அம்மா அடுப்பைப்பற்ற வைப்பாள். பெரும்பாலும் உப்புமா. வார் அறுந்து தைத்த ஒரு ரப்பர் செருப்பை அம்மா கொடுத்தாள். அதை அணிந்துகொண்டுதான் பள்ளிக்கூடம் செல்வான். பறம்போக்கில் குடிசை வீடு. தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட வேண்டும்.

செல்வத்தை ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டாள். சில மாதங்களில் இறந்துவிட்டாள். அருகிலிருப்பவர்கள் செலவு செய்து மயானத்தில் எரித்தார்கள் . செல்வம் பள்ளிக்கூடத்தைவிட்டு நின்றான். டூவீலர் வொர்க்ஷாப்பில் வேலை பார்த்தான். கடை ஓனர் நல்லவரும் கெட்டவருமாக இருந்தார். ஒரு நாளில் குறைந்தது இரண்டு தடவையாவது அடித்துவிடுவார். அவர் அவனுக்கும் சேர்த்து மதியச் சாப்பாடு கொண்டுவருவார். அனாதை என்பதால் அன்றாடம் சாப்பாடு வேண்டும் என்பதால், இரவு உணவுக்குப் பணம் கொடுப்பார். காலை உணவு எப்போதுமே கிடையாது. இரவு உணவுக்குக் கொடுக்கும் பணத்தை சமயங்களில் சாப்பிடாமல் சேமித்து வைத்து, ஒரு நல்ல ஆடை வாங்கி வைத்திருக்கிறான். கடையில் வாங்கித்தரும் டீயே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. ஓனரிடம் தலையில் கொட்டு வாங்கி தலையே மரத்துப்போய்விட்டதாக அவனுக்குத் தோன்றுவதுண்டு. எவ்வளவு காலந்தான் இப்படி டூவீலர் மெக்கானிக் ஓனருக்கு உதவியாக இருப்பது என்ற எண்ணம் ஏற்பட்டது. எப்படியோ கஷ்டப்பட்டு, நண்பர்கள் உதவியுடன் ஓர் இடத்தை வாடகைக்குப் பிடித்து தனியாக மெக்கானிக் ஷாப் போட்டான். அதிலிருந்தபடியே கார் ஓட்டக் கற்றுக்கொண்டான். பிறகு அவனுக்கு இப்படி அழுக்கு உடையுடன் நாள் முழுவதும் இருப்பது அலுப்பைத் ஏற்படுத்தியது. வாடகைக் கார் ஓட்டினான். இப்போது ஒரு டாக்டருக்கு டிரைவராக இருக்கிறான். ஆஸ்பத்திரிக்குச் சென்றுவருவது, சூப்பர் மார்க்கெட் சென்று சாமான்கள் வாங்கிவருவது என்று வேலை அமைந்தது. நீண்ட பிரயாணங்கள் ஏதும் இருக்காது. ஒருமுறை ஏற்காடு சென்றுவந்தார்கள். டாக்டரின் மனைவி செல்வத்தை அலட்சியமாக நடத்துவாள். அவமதிப்பாகப் பேசுவாள். வேலைக்காரனைப்போல் நடத்துவாள். அவனுக்கு அவளை ஸ்க்ரூ டிரைவரால் குத்தவேண்டும் போல் இருக்கும்.

டாக்டர் நல்லவர். எப்போதும் சிந்தனையிலிருப்பார். தேவையில்லாமல் பேசமாட்டார். அவருடைய மனைவி அவருக்கு நேர் எதிராக தொணதொண என்று பேசிக்கொண்டிருப்பாள். இப்போது அவள் சூப்பர் மார்க்கெட்டிற்குள் இருக்கிறாள். வெளியே வரநேரமாகும். ஏகப்பட்ட பொருட்களை வாங்கிவருவாள். டிக்கியில் வைக்கவேண்டிய பொருட்களை டிக்கியிலும், ஸீட்டில் வைக்கவேண்டிய பொருட்களை ஸீட்டிலும் வைக்கவேண்டும். செல்வம் காரிலிருந்து கீழே இறங்கி நின்றான்.

வெளியே இருந்த ஐஸ்கிரீம் பெட்டியருகே ஒரு தாயும் குழந்தையும் நின்றுகொண்டிருந்தார்கள். குழந்தை ஏதோ கேட்க, அதன் தாய் ஐஸ்கிரீம் டப்பா வாங்கிக் கொடுத்தாள். குழந்தை சாப்பிடுகிறேன் என்று வாய் முழுக்கப் பூசிக்கொண்டிருந்தது. அவனுக்கு அந்தக் குழந்தையைப் பார்க்கப் பூரிப்பாக இருந்தது. அந்தக் காலத்தில் அவனால் ஒரு மிட்டாய்கூட சாப்பிட முடியாது. சரியான உணவு, உடை இல்லை. அம்மா அழுவதைப் பார்த்துக்கொண்டு பரிதாபமாக உட்கார்ந்திருப்பான்.

டாக்டரின் மனைவி சூப்பர் மார்க்கெட்டின் வாசலில் நின்று அவனைக் கூப்பிட்டாள். கூப்பிட்ட விதமே அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சென்று பொருட்களை எடுத்துவந்து அவள் கூறியபடி அடுக்கினான். அவள் கார் ஸீட்டில் உட்கார்ந்து, ஆணையிட்டுக்கொண்டிருந்தாள்.

அவன் பொருட்களை அடுக்கும்போது ஒரு துர்ச்சம்பவம் நடந்தது. ஒரு கண்ணாடிப் பொருளைத் தவறவிட்டுவிட்டான். அது கீழே விழுந்து நொறுங்கியது. டாக்டரின் மனைவி துர்ச்சொற்களினால் அவனைத் திட்டினாள். அவன் கார் டிரைவர் சீட்டின்கீழ் வைத்திருந்த நீண்ட ஸ்க்ரூ டிரைவரை எடுத்துவந்து, அவளைக் கீழே தள்ளி அவள் தொண்டையில் ஸ்க்ரூ டிரைவரை வைத்து அழுத்தினான். அவள் இதை எதிர்பாராத அதிர்ச்சியில் கத்தினாள். அப்போது ஒரு கை அவன் கையைப் பிடித்தது.

அவன் திரும்பினான். “நான் ஒரு எழுத்தாளன். நீ தீமை செய்கிறாய். நம்பிக்கையை விதை.”

“என் வா ழ்க்கையே துயரமா கத்தானே அமைந்துள்ளது.”

“அது அப்படித்தான். நம்பிக்கையை விதைக்கவேண்டும். அந்த ஸ்க்ரூ டிரைவரை எடு.”

அவன் எடுத்தான். அவளிடம் “மன்னித்துக்கொள்ளுங்கள்” என்றான். அவள் திகைத்துப்போயிருந்தாள். அவன் டிரைவர் ஸீட்டில் உட்கார்ந்து காரை ஓட்டினான். டாக்டரின் மனைவி பயந்து உட்கார்ந்திருந்தாள். அந்த எழுத்தாளனைக் காணோம். ‘வேலை போய்விடும். வேறு வேலை தேடவேண்டும்’ என்று யோசித்துக்கொண்டே செல்வம் காரை ஓட்டினான்.