வெறுக்கும் குரல்

 

என்னை வெறுக்கும் குரலை

எனக்குத் தெரியும்

என் அன்பை

அவமதிக்கும் சொல்லை

எனக்குத் தெரியும்

 

தெரிந்ததுபோல

காட்டிக்கொள்ள மாட்டேன்

 

இரு கலைகள்

 

நெற்றியில் இட்ட குங்கும் கலையாமல்

முத்தமிடுவது ஒரு கலை

 

கண்ணில் தீட்டிய

மை கரையாமல் அழுவது

பெரும் கலை

 

மாயமலர்களின் இரவு

தூக்கம் பிடிக்கவில்லை

என் துயரத்தின் யாழ்

அதிர்ந்துகொண்டே இருந்தது

 

எழுந்து என் செடிகளிடம் போனேன்

அகாலத்தில் மலர்ந்திருந்தது

அபூர்வ மலர் ஒன்று

 

‘ உனக்கு நான் இருக்கிறேன்’ என்றது

‘என்னை உன் கையிலேந்தி

நுகர்ந்து பாரேன் ‘ என்றது

எனக்குத் திகைப்பாக இருந்தது

 

இது அசல் மலரா

என் பிரமைகளின் பிசாசு விளையாட்டின்

மாய மலரா என்று குழப்பமாக இருந்தது

 

ஆனாலும்

அந்தச் செடியருகே

உட்கார்ந்துகொண்டேன்

விடியும் வரை

அந்த மலர் அருகிலேயே இருப்பேன்

 

காலைவரை

அது உதிராமலோ

மறையாமலோ இருந்தால்

அது என்னுடைய மலரென்று

கையோடு எடுத்துச் செல்வேன்

 

மற்றபடி

இது மாயமலர்களின் இரவு

 

இன்னும் அந்த எக்ஸலேட்டரில் தான் இருக்கிறாயா?

 

நீ எக்ஸலேட்டரில் இறங்கிவரும்போது

முழு அலங்காரத்துடன்

ஒரு அன்னம் தரையிறங்குவதுபோன்ற

ஒரு புகைப்படத்தை

ஒரு முறை கண்டேன்

அந்தப் படத்தில்

உன் கண்களில் ஒருபோதும் கண்டிராத

மகிழ்ச்சியை நான் கண்டேன்

 

அதே எக்ஸலேட்டரில்

உன்னை அதுபோல படம் எடுக்க

நான் பலமுறை முயன்றிருக்கிறேன்

அந்த ஃப்ரேமை நான் அமைப்பதற்குள்

எக்ஸலேட்டர் நகர்ந்துவிடும்

அல்லது அந்த ஃப்ரேமில் நீ

அன்னத்தைப் போல அல்ல

அதன் உதிர்ந்த இறகைப்போல இருப்பாய்

 

நான் கண்ட அந்தப் புகைப்படத்தை

எடுத்த கண்கள்

உன்னை எங்கிருந்து

அந்தக் கோணத்தில் எடுத்தன என்பதை

அப்போதே என்னால் யூகிக்க முடிந்தது

அது ஒரு புதிய காதலில்

அப்போதுதான் நீ ததும்பத் தொடங்கிய

தருணமாக இருக்கக்கூடும்

 

அன்பே

நீ இன்னும் அந்த எக்ஸலேட்டரில்தான்

வந்து கொண்டிருக்கிறாயா?

அந்தப் புகைப்படம்

அப்படித்தான் காட்டுகிறது

 

அன்பை நினைக்க ஒரு அன்பு

 

“நம் அன்பின் நினைவுகள்

ஒன்றுகூட உனக்கில்லையா?”

என்று கண்ணீருடன் கேட்க வந்தேன்

தன்மானம் தடுத்துவிட்டதால்

கேட்கவில்லை

 

அப்புறம்தான் தோன்றியது

அன்பை நினைத்துப் பார்க்கவும்

ஒரு அன்பு வேண்டும் என்பது

 

 

தோழர்களும் தோழிகளும்

 

யாராவது ஒரு பெண்

‘தோழர்’ என்று அழைத்தால்

முன்பெல்லாம்

அவர் கம்யூனிஸ்டாக இருப்பாரோ

என்று நினைத்துக்கொள்வேன்

 

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

 

பின்னால்தான் தெரிந்தது

தோழர் என்பது

பால் பேதம் நீக்கப்பட்ட

பாலின ஈர்ப்புகள் சுத்திகரிக்கப்பட்ட

ஒரு தூய அருஞ்சொல் என்று

 

எச்சரிக்கையாக

“அண்ணா” என்று சிலர் அழைக்கிறார்கள்

“தோழர்” என்று சிலர் அழைக்கிறார்கள்

மெய்யாகவே

தோழமையோடும் அழைப்பவர்களும்

இருக்கத்தான் செய்கிறார்கள்

 

‘தோழர்’ என்று அழைத்த

ஒரு பெண்மீதுகூட

மருந்துக்கும் ஒரு கெட்ட எண்ணம் தோன்றியதில்லை

ஒரு துளி காதல் அரும்பியதில்லை

எத்தகைய ஒரு தற்காப்புக் கலை

என்பதை நினைத்தால்

வியக்காதிருக்க முடியவில்லை