ஒரு விசேசம் என்று வந்தாலோ அல்லது இழவு காரியம் நிகழ்ந்துவிட்டாலோ மட்டுமே வெள்ளை வேட்டி கட்டும் வழக்கமுடையவனான சின்ராசுவிடம் பத்திற்கும் மேலாக வேட்டிகள் சேர்ந்துவிடும் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. எட்டுமுழ வேட்டி, நாலுமுழவேட்டி என்றெல்லாம் பாகுபாடுகள் அறியாதவனான அவன் இரண்டு வேட்டிகளைத் துவைத்துக் காயவைத்து தூக்கிக்கொண்டு போய் குறுநகரில் அறிந்த தைப்பாளரிடம் கொடுத்து ஜிப்பா அடித்து வைத்துக்கொண்டான்.

தைக்கப்பட்ட ஜிப்பாவை எந்த விசேசத்திற்குப் பயன்படுத்துவது என்றுதான் தெரியவில்லை. இவனிருக்கும் கிராமத்திலோ, இவன் செல்லும் குறுநகரிலோ ஜிப்பா அணிந்துசெல்லும் மனிதர்களை இவன் பார்த்ததே இல்லை. இருந்தாலும் வேட்டி சும்மா கிடக்கிறதேயென ஜிப்பா தைத்து வைத்துக்கொண்டான்.

தஞ்சாவூரிலிருந்து ஈங்கூர் ரகுவின் தோட்டத்திற்கு வந்து சேர்ந்திருந்த இவனது நண்பன் ஜாகீர், தன் மகளின் திருமண அழைப்பிதழை ரகுவுக்கும் இவனுக்கும் கொடுக்க வேண்டி அழைத்திருந்தான் சென்ற மாதத்தில். ஈங்கூர், ஈரோடு மாவட்டம் பெருந் துறையிலிருந்து சென்னிமலை செல்லும் வழியில் இருக்கிறது. ரகு என்கிற ரகுமனோகரன் ஈங்கூரில் பிறந்து ஈங்கூரிலேயே பிழைப்பை ஓட்டுவதால் நண்பர்களுக்கு ஈங்கூர் ரகுவாகினார். சின்ராசு ஈங்கூருக்கும் மேற்கே சிப்காட் தாண்டி எலையாம்பாளையத்தில் வசிப்பவன். சின்ராசு தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு பத்துக் கிலோமீட்டர் பயணித்தான்.

கொரோனா காலம் துவங்கியதிலிருந்து தூரத்து நண்பர்களையெல்லாம் இவன் நேரில் சந்திக்கவே முடிந்ததில்லை. பேச்செல்லாம் அலைபேசி வாயிலாகத்தான். சின்ராசு சென்ற சமயம் தோட்டத்தின் சொந்தக்காரரான ரகு தலையை ஏனோ சாய்த்தவாறே ஜாகீரிடம் பேசிச் சிரித்தபடியிருந்தார். முதலில் அதைச் சரியாகக் கவனிக்காத சின்ராசு தனக்குத்தான் பார்வைக்கோளாறு வந்துவிட்டதோவென அஞ்சினான். பின்பாக அவர் கழுத்துக்கு எதுவோ நிகழ்ந்துவிட்டதையறிந்து அதுபற்றி அவரிடமே விசாரித்தான்.

கடந்த ஒருவருடகாலமாகவே கழுத்து வலி யென்றும் உங்களைப்போலவெல்லாம் முழுதாக அண்ணார்ந்து பார்க்கவோ, திரும்பிப்பார்க்கவோ முடிவதில்லையென்றும் சொல்ல, ‘அடக்கெரவத்தே!’ என்றான் இவன். ‘வைத்தியம் ஏதாவது பார்க்கிறீர்களா?’ என்றான் தொடர்ந்து. ‘பெருந்துறையில இருந்து வைத் தியர் ஒருத்தரு இன்னிக்கித்தான் வந்து குப்புற என்னைப் படுக்கப்போட்டு ஒரே திருப்புல நாற்பது நெட்டை யெடுத்துட்டுப் போயிருக்காரு! கண்ணுல தண்ணி முட்டீருச்சு! இனி ரெண்டு நாளு கழிச்சு வர்றதா சொல்லிட்டுப் போயிருக்காரு!’ என்றவரிடம் ‘ஆயில் எதாச்சிம் தடவுறக்கு கொடுத்திருக்காரா?’ என்றான். ‘ஆமா, மின்னுது பாருங்க பொடணி!’ என்று சட்டைக் காலரை நகர்த்திக்காட்டியதும், நண்பன் ஜாகீர் பக்கம் திரும்பினான்.

ஜாகீர் இவனுக்கென்ற அழைப்பிதழைத் தன் பேக்கிலிருந்து எடுத்து நீட்டியபடி, ‘கண்டிப்பா திருமணத்துகு வந்து சேர்ந்துடு சின்ராசு! ரெண்டு நாள் முன்னால வந்தாலும் சந்தோசம். ரூம் எல்லாம் இருக்கு!’ என்றான். இவன் அழைப்பிதழை வாங்கி விரித்துப்பார்த்தான். எல்லா நண்பர்களுக்கும் ஊரு ஊராகச் சென்று அழைப்பிதழ் வைத்தாகிவிட்டது என்றும் அனைவருமே வந்து சேர்ந்துவிடுவார்களென்றும் நம்பிக்கையாய்ச் சொன்னான். ‘கண்டிப்பாய் வந்துவிடுகிறேன்!’ என்று இவனும் சொல்லி வைத்தான்.

“ஆளு இப்படிக் குச்சியாட்டம் எளைச்சிப்போயிட்டியே சின்ராசு? சோறு மூணுவேளை ஒழுங்கா திங்கறியா? நீயி வெறும் பொரியைத் தின்னுட்டே டாஸ்மாக் சரக்கு அடிக்கிறவனாச்சே!” என்று ஜாகீர் சொல்லவும் இவனுக்குத் தன் உடம்பின் மீது கரிசனம் உண்டாயிற்று அப்போது. போக, சமீப காலங்களில் இவனைப் பார்ப்பவ ரெல்லாம் ‘‘ஆஸ்பத்திரியில இருந்து எப்ப வந்தே?” என்றே கேட்கிறார்கள்.

“ஆமா ஜாகீரு, சோப்புப்போட்டு தண்ணி வாக்குறப்ப பொத பொதன்னு ஒடம்பு இருக்கும் முன்னெல்லாம். இப்ப சோப்பை எலும்புகளுக்குத் தேய்க்கிறாப்ல தான் இருக்கு. கொரோனா வந்த பீதியிலேயே பாதி ஒடம்பு போயிடுச்சு! ஏனுங்க ரகு என்ன இன்னமும் ஈங்கூரு நாலு ரோட்டுக்கிட்ட போலீஸ் நின்னுட்டு வண்டிகளை நிப்பாட்டிட்டு மாஸ்க் எங்கே? மண்டை ஓடு எங்கேன்னுட்டு இருக்காங்க? நான் வேற முன்னத்த நெனப்புலயே மாஸ்க் இல்லாம வந்துட்டேன். காக்கி உடுப்புகளைப் பார்த்ததும் அப்பிடியே சொய்ங் குன்னு வண்டியைத் திருப்பி துண்டுக்காட்டு வழியில ஒட்டீட்டு இந்தச் சந்துல உள்ளார முட்டி வந்தேனுங்க! அதென்ன துண்டுக்காடு போற வழியில அத்தனை ஆட்களும் இந்திக்காரனுங்களா இருக்காங்க? அத்தனை ஊடுகபொட்டி பொட்டியா இருக்குதுக? நானெங்கியோ வேற மாநிலத்துக்குள்ளார நொழைஞ்சிட்டனோன்னு நினைச்சிட்டேன்!” என்றான்.

“ஆமாங்க! ஈங்கூர்ல இருக்குற அத்தனை கடைகண்ணிகளும் அவிங்களை நம்பித்தான் ஓடுது. அவிங்கெல்லாம் இல்லையின்னா இங்க என்ன இருக்கும்? டாஸ்மாக் பக்கம் போயிப்பாருங்க.. பன்னண்டு மணியில இருந்து ராத்திரி பத்துமணி வரைக்கும் ‘கரே புரே க்யா? டிகே’ன்னுட்டு அவனுங்கதான் நின்னுட்டு இருப்பானுங்க! கொரோனா வந்து எல்லார்த்தையும் தொழில் பண்ணுறக்கு இல்லாம பண்ணீட்டுதுல்லொ!நாப்பது எருமைங்களை படபடன்னு கழிச்சு உட்டுட்டு பதினாலு ரூம் கட்டிப்போட்டன்லொ!”

“ஆமாங்க! இதுல வர்றப்ப நாலஞ்சு பொம்பளைங்க கலரு கலரா டிரஸ் போட்டுட்டு இடுப்புலயும் தோள்மேலயும் பொடுசுகளைத் தூக்கிட்டு ரோட்டுக்குப் போயிட்டு இருந்தாங்க! ஆமா, பதினாலு ரூமும் ஃபுல் ஆயிடுச்சுங்ளா? ஒன்னு ரெண்டு காலி இருக்குதா?”

“தமிழ் ஆளுங்களுக்கு ரூம் குடுக்க மாட்டேன் நானு!”

“பின்ன யாருக்குக் குடுப்பீங்க? அன்னைக்கி நாலஞ்சி

டிக்கெட்டுக தமிழ் ஆளுங்கதான இருந்தாங்க!”

“சண்டைகட்டீட்டே இருந்தானுங்க! போங்கடா ரூமும் கிடையாது ஒன்னுங் கிடையாதுன்னு முடுக்கி உட்டுட்டேன். இப்ப ஒரிசா, குஜராத், வெஸ்ட் பெங்கால், ஜார்க்கண்டு, அஸ்ஸாம் ஆட்கள்தான் இருக்காங்க! ஒரு பிரச்சனையும் இல்ல அவங்களால. ஆம்பளைங்கெல்லாம் ஸ்டீல் கம்பெனிக்கி வேலைக்கி போவாங்களாட்ட இருக்கு. மஞ்சள் கலர்ல ஹெல்மெட் போட்டுட்டு போவானுங்களே! பொட்டு பொடுசுக, பொம்பளைங்கன்னு பதினாலு ரூம்புலயும் எழுவத்தஞ்சிடிக்கிட்டுக இருக்காங்க!”

“பாரத விலாஸ்னு சொல்றீங்க?’’ என்று ஜாகீர் உள்நுழைந்தான்.

“ஏனுங்க, தென்னை மரத்துல இருந்து வுழுற தேங் காயிக, மொளகா செடியில இருக்குற மொளகாயிகள, சொரக்காயெ எல்லாம் அவுங்க எடுத்துக்கறதில்லையா?”

“அதெல்லாம் கைவைக்க மாட்டாங்க! பாருங்க அந்தப்பக்கம் பெரிய தண்ணித்தொட்டி கட்டிவிட்டு ருக்கேன். அப்பப்ப தண்ணியை போசீல மோந்து மோந்து குளிச்சுக்குவாங்க! இந்தக்காலத்துல போயி எருமைகளைக் கட்டி வச்சுட்டு அதுக்குத் தீவனம் வாங்கிப் போட்டு ஆளுகூலி குடுத்து கணக்குப்போட்டா ஒன்னுமே மிஞ்சலீங்களே! இப்ப பாருங்க கழுத்து வலிக்கி வைத்தியம் பண்ணீட்டு நேம்பா உக்கோந்துட்டேன்!”

அப்போது கதவுக்கு அருகாமையில் ‘கைக் கைக்’கென இரண்டு குட்டி நாய்கள் வாலை ஆட்டிக் கொண்டு வந்து நிற்கவே, ரகு எழுந்து டேபிளின் மீதிருந்த பால்பாக்கெட்டுகள் இரண்டை கத்திரி போட்டு வெட்டிக்கொண்டு போய் அதன் குண்டாவினுள் ஊற்றினார்.

“நாட்டு நாயே வளர்த்த மாட்டீங்களே.. ரெண்டைப் புடிச்சிருக்கீங்க?”

“சாப்பாட்டையெல்லாம் இந்திக்காரனுங்க வேஸ்ட் பண்ணுறாங்க சின்ராசு. மிச்சமாகறதையெல்லாம் கொண்டி கொட்டிடறாங்க! இதுகளாச்சிம் தின்னுட்டு பெருக்கட்டுமேன்னு தான். நைட்டானா சப்பாத்தி சாப்பிடுதுக! எப்பிடியும் பிச்சு வீசிடறானுங்க! கதையைக் கேளுங்க சின்ராசு.. மொதல்ல ஒன்னைத்தான் ஊருக் குள்ள இருந்து தூக்கீட்டு வந்து உட்டுருந்தேன். அது என்னடான்னா வெடியறதுக்குள்ள ஆயா கிட்டயே போயிட்டுது. ஒரு கிலோ மீட்டர் வரும்ல இங்கிருந்து? இத்தினிக் கூண்டு குட்டி பாருங்க மோப்பம் பிடிச்சுட்டே போயிருச்சு! அப்புறம் கூடவே இன்னொன்னையும் கொண்டாந்து உட்டங்காட்டி தான் இந்தப் பத்து நாளா இங்கியே கெடக்குதுக!”

“நான் போட்டா எடுத்து ஃபேஸ்புக்குல போடலீங்க

இதுங்களை!”

”ஆமாங்க எடுத்துறாதீங்க! நாலு நாயைப் போட்டா எடுத்தே கொன்னு போட்டீங்க! அதென்ன ராசி அப்பிடி உங்களுக்கு?”

“யாரு கண்டா.. ஒருவாட்டி வர்றப்ப இருக்குற நாயி அடுத்தவாட்டி வர்றப்ப இருக்குறதில்ல. கேட்டா பக்கத்து தோட்டத்துக்காரரு மருந்து வெச்சி கொன்னு போட்டாருங்கறீங்க. இல்லன்னா அதுவாவே செத்துக் கெடந்துதுன்னு சொல்றீங்க! ஆனா நீங்க முன்ன வச்சிருந்ததுக எல்லாம் நாயிகளா? எல்லாம் வெளிநாட்டுல இருந்து இறங்குன கழுதைங்க மாதிரில்ல இருந்துச்சுக! நாயிகன்னா நம்ம நாட்டு நாயிக தான் சரி, இதுங்களுக்குப் பேரு வச்சுட்டீங்களா? இந்திப்பேரா, அவனுங்களே வச்சுட்டானுங்களா?. அமிதாப், ஷாரூக்ன்னு?”

“பில்லா, ரங்கான்னு வெய்யிங்க ரகு!” ஜாகீர்தான் குரல்கொடுத்தான்.

“நல்லாத்தான் இருக்குதுங்க.. டேய் பில்லா! கேடி பில்லா! டேய் ரங்கா! கில்லாடி ரங்கா!”

”இந்தச்சாலைக்கி வந்தா பில்லா ரங்கா.. அங்க பாரத விலாஸ்க்குள்ள முட்டுனா அவனுங்க என்ன பேரு வச்சானுகன்னே தெரியாதே! ஆமாங்க ரகு.. நீங்க தான் எஜமான்னு இதுங்களுக்குத் தெரியுமா?” என்றான் கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த ஜாகீர்.

“பின்ன, நான்தான் இதுகளோட ஆயாகிட்ட இருந்து தூக்கீட்டு வந்து உட்டேன். இப்ப பால் ஊத்துறன்லொ! பிஸ்கட் பாக்கெட் வாங்கி வச்சிருக்கேன். டேய் பில்லா! டேய் ரங்கா!”

தோட்டத்திலேயே இருந்து சிறப்பித்துவிட்டு ஜாகீர் அடுத்த நாள் மீண்டும் ஒருமுறை அனைவரும் கண்டிப் பாக மகளின் திருமணத்திற்கு வந்துவிடுமாறு சொல்லி விட்டு விடைபெற்றான். அந்த திருமணத்திற்கு ஈங்கூர் பகுதியிலிருந்து யாராலும் செல்ல முடியாமல் போயிற்று. திருமணம் முடிந்த நான்காவது நாள் போனில் சின்ராசை அழைத்த ஜாகீர் ,’வந்து சிறப்பிச்சுட்டீங்கடா! உங்களுக்காக அவ்ளோ தூரம் வந்து பத்திரிகை வச்சா இப்பிடி பண்ணிட்டீங்களேடா!’ என்று கடிந்துகொண்டான். சின்ராசுவால் எந்தப்பதிலையும் அவனுக்குக் கொடுக்க முடியவில்லை. நல்ல முகூர்த்த நாள் அது. கட்டிச்சோத்து விருந்து என்றும், மாப்பிள்ளைக்கி பொண்ணு பாக்கப் போகணும் என்றும் ரகு ஒதுங்கிக் கொண்டார். இவனும் ஏதாவது எழவு காரியம் நிகழ்ந்துவிட்டதாகச் சொல்லி ஜாகீருக்கு மனநிம்மதியைத் தரலாமெனத்தான் நினைத்தான். நண்பனிடம் போய் இனி விழாத பிணத்தைப்பற்றிச் சொல்லி என்ன ஆகப்போகிறதென விட்டுவிட்டான்.

இதோ திருமண காரியங்கள் எல்லாம் முடிந்த ஒரு மாதம் கழித்து சின்ன ஓய்வுக்காகத் தோட்டம் வந்து இரண்டு நாள் தங்கிவிட்டுச் செல்வதாயும், ரகுவிடம் பேசிவிட்டதாயும் சொன்னான் ஜாகீர். ‘தாராபுரம் வந்தாச்சு! காங்கயம் வந்தாச்சு! இன்னும் கெளம்பலியா சின்ராசு? இதா சென்னிமலை வந்தாச்சு!” என்று தன் பேருந்துப்பயணத்தை இவனுக்கு போன் வழியாக

சொல்லிக்கொண்டே வந்தான் ஜாகீர்.

ஜாகீரின் மகள் திருமணத்தன்று அணிந்துகொள்ளலாமென நினைத்திருந்த ஜிப்பாவைக் கழுத்து வழியாக விட்டுஅணிந்துகொண்டு நீவிப்பார்த்தான் சின்ராசு. ஆளுயரக் கண்ணாடி முன்பாக நின்று பார்த்து, எடுப்பாகவே இருப்பதாக நம்பினான். நீலவர்ண ஜீன்ஸ் பேண்ட்டை அணிந்து கொண்டு தன் இரு சக்கர வாகனத்தை ஈங்கூர் நோக்கி எலையாம்பாளையத்திலிருந்து எடுத்தான்.

சாலையில் சுற்றும் நாய் ஒன்று குரைத்துக்கொண்டே இவன் வாகனத்தை சிறிது தூரம் துரத்திவிட்டு ஓய்ந்தது. இவனுக்கு இருதயம் துடிக்க ஆரம்பித்துவிட்டது. பேசாமல் வீடு போய் கழற்றி வைத்துவிட்டு சந்தைக் கடை பனியனையே அணிந்துகொண்டு செல்லலாமா! என நினைத்தான். ஆனாலும் நாலுபேர் பார்த்தால் தானே அழகாய் உள்ளதா அசிங்கமாய் உள்ளதா? என்று கருத்து சொல்வார்கள். கருத்தின்படி நடந்துகொள்வோமே என்றும் நினைத்தான். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் பிறகு சொந்தபந்தத்தில் எதாவது விசேச அழைப்பு வந்தால் மட்டுமே ஜிப்பாவை அணிய முடியும். ஜிப்பா தைத்து இரண்டு மாததிற்குப் பக்கமாகிவிட்டது.

சின்ராசு தோட்டத்து செட்டில் வண்டியைக் கொண்டுபோய் நிப்பாட்டியபோது சாலைக்கதவு திறந்திருந்தது. முன்பாகவே ஜாகீர் வந்துவிட்டான் போல என நினைத்துக் கொண்டு வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த மோர்க்கேன் மற்றும் உப்பு மிளகாய்த்தூள் கலந்த மாங்காய்த்துண்டு பாக் கெட்டையும் எடுத்துக்கொண்டு சென்றான். ஜாகீர் லுங்கியில் வெறும் மேலோடு கட்டிலில் அமர்ந்திருந்தான்.

“வருக வருக சின்ராசு! ரகு எங்கியோ ஈரோடு வரைக்கிம் போயிருக்கிறதா சொன்னாப்ல. மதியமா வந்துடுவாப்லையாமா. அந்த நாயிங்க வெளிய நின்னுச்சுங்களா ரெண்டும்?”

“ஆமா, இந்திக்காரிங்களோட தண்ணித்தொட்டிக்கிட்ட குதிச்சுட்டு வெளையாடிட்டு நின்னுச்சுங்களே.. ஒருமாசத்துல உருளைக்கட்டைகளாட்ட ஆயிடுச்சுக பில்லாவும் ரங்காவும் பார்த்தியா ஜாகீரு!”

“நல்லா ஆச்சுக ரெண்டும்.. அட, நான் தோள்ல பேக்கைப் போட்டுட்டு வர்றேன்.. என்னையப்பார்த்துட்டு பல்லைக்கிஞ்சுதுக! கடிச்சுக்கிடிச்சு வெச்சுருமோன்னு பயந்துட்டேன். பில்லான்னும் ரங்கான்னும் சத்தம் போட்டுப்பார்த்தேனே.. ஊஹூம். அப்புறம் பொடியானுங்க ரெண்டுபேரு ’ஜீஜூ’ கத்தீட்டு வந்தங்காட்டி கம்முன்னு அவனுங்க பொறத்தாண்டி வாலை ஆட்டீட்டு போகுதுங்களே! உச்சாவுக்கு வேறபோகோணும் நானு, நாயிங்களுக்கு பயந்துட்டு இங்கியே உக்கோந்துட்டேன் கம்முன்னு!” என்றவனைப் பரிதாபமாய் பார்த்தான் சின்ராசு.

“என்னையப்பார்த்துட்டு சும்மாதான நின்னுச்சுக ஜாகீரு!”

“நீயி எதாச்சும் எடுத்து சடீர்னு வீசீருவே.. உன் மூஞ்சியப் பார்த்தாவே அதுங்க பயந்துக்கும். ஏன் தாடி மீசையெல்லாம் வச்சிருக்கே? வில்லனாட்டவே இருக்கேடா!”

“பாப்பாவோட கல்யாணத்தன்னைக்கி மேடைக்கிப் போட்டா புடிக்க வர்றப்ப இந்த ஜிப்பாவைத்தான் போட்டுட்டு வரோணும்னு நினைச்சிருந்தேன்!”

“கிழிச்சே! ஏண்டா பத்திரிகை குடுத்தா வீட்டுக்குக்கூட எடுத்துட்டுப் போக மாட்டீங்களாடா? பாரு, அப்பிடியே டேபிள் மேல இன்னுங் கெடக்குதுக! வர்றவனுங்களா இருந்தாத்தான வீட்டுக்கு எடுத்துட்டுப் போவீங்க! போங்கடா!”

“சரி, அதான் நடந்து முடிஞ்சிருச்சே வுடுடா! ஜிப்பா எப்படி?”

“அதான் இந்திக்காரன்னு நினைச்சுட்டு நாய்களே உன்னைக் கடிக்காம விட்டுருக்குதுங்களே! இந்த டீவியை ஆன்பண்ணி ஓடுதான்னு பாரு.. ஏர்டெல்லாட்ட இருக்கு. நாளான்னிக்கி ஐபிஎல் ஃபைனல் வேற இருக்குது. இன்னிக்கி நடக்குற மேட்ச்சுல எவன் ஜெயிச்சாலும் நேரா ஃபைனலுக்குப் போயிருவான். ஆட்டம் பார்க்கணும் நானு!”

“ஆமால்ல! நீ சொன்னங்காட்டி தான் இங்க ஒரு ஃபோர் டபுள் டீவி இருக்குறதையே பாக்குறேன் நானு..இத்தனை நாளா என் கண்ணுக்கு டிவிப்பொட்டியே தெரியல பாரேன். நானெல்லாம் டிவி பாக்கவா தோட்டம் வர்றேன்!” என்ற சின்ராசு அதை ஆன் செய்து சேனல் மாற்றினான்.

”ஒன்னும் ஓடலையே ஜாகீரு.. ரீசார்ஜ் பண்ணியிருந்தாத் தானே சேனல் ஓடும்! ரகுவுக்கு ஒரு போனைப் போடு. போன்லயே ரீச்சார்ஜ் பண்ணி உட்டுருவாப்ல!”

“நானு இப்பத்தான் கூப்பிட்டுப் பேசினேன். இவ னேண்டா பொழுதினிக்கிம் கூப்டுட்டே இருக்கான்னு நினைச்சுக்குவாப்ல! நீயே கூப்பிடு, உன்னோட போன்ல இருந்து!” என்று ஜாகீர் சொல்லவும் சின்ராசு ரகுவை அழைத்தான்.

வெள்ளோடு பக்கம் வந்துவிட்டதாகவும் அரைமணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தபிறகு தோட்டம் வருவதாகவும் சொன்னவரிடம், ரீசார்ஜ் விசயம் சொன்னான். இதென்ன, இப்பவே பத்து நிமிசத்துக்குள்ள போட்டு உட்டுடறேன். செட்டை ஆன்லயே வையுங்க! ஃஆப் பண்ணிடாதீங்க!’ என்று சொன்னவருக்கு, சரிங்க, என்று சொல்லி வைத்தான்.

“போட்டு உட்டுருவாரு இப்ப, வெளித் திண்ணையில வாழைத்தாரு வெட்டி வெச்சு பழுத்துக்கிடக்கு.. சொரக்காயிக நீளமா நாலண்ணம் கிடக்கு.. வீட்டுக்குப் போறப்ப நானு ரெண்டு சொரக் காயிகளை தூக்கிட்டு போகணும்” என்றான் சின்ராசு. பத்து நிமிடத்தில் டிவியில் சேனல்கள் ஓடியது. சன் மியூசிக் சேனல் சென்று சப்தத்தைக் கூட்டினான் சின்ராசு.

“டேய், காது அவிஞ்சு போயிருமாட்ட இருக்குது.. சவுண்டைக் கம்மி பண்ணு.”

“இந்திப்பாட்டு கேக்கலாம்…

மொழி புரியலன்னாலும் கேக்க நல்லாயிருக்கும்” என்றவன் தேடிப்போய் இந்திப்பாடல் சேனல் ஒன்றில் நிப்பாட்டினான். ஷாருக்கான் தான் இவர்களுக்கு அடையாளம் தெரியாத பெண்ணுடன் பாடியபடி ஆடிக்கொண்டிருந்தான், ரயில்பொட்டிமீது ஏறி நின்றுகொண்டு.

“சல சய்ய சய்ய சய்யா சய்யா.. சல சய்யா..”

“இந்தப்பாட்டை யாரு பாடினது தெரியுமா சின்ராசு? சுக்வீந்தர்சிங்கு!” “யாரு பாடுனா என்ன? கேக்குறதுக்கு நல்லா இருக்குது பாரு!” என்றபோது பில்லாவும் ரங்காவும் கதவுக்கு அருகாமையில் வந்து குந்த வைத்து டிவியை வாலை ஆட்டிக்கொண்டு கவனித்துக் கொண்டிருந்தன.எதேச்சையாக கதவுக்கருகாமையில் அசைவுகள் தென்படவே சின்ராசு முகத்தை திருப்பினான்.

“ஜாகீரு! இந்த நாயிங்களைப்பாருடா! வாலை என்னமா ஆட்டீட்டு இந்திப்பாட்டு பாக்குதுங்க!”

“அட ஆமால்ல, எங்கே சன் மியூசிக் வையி பார்ப்போம்” என்று ஜாகீர் சொன்னதும் சின்ராசு சன்மியூசிக் வைத்தான். ‘சுட்டும்விழிச் சுடரே.. “என்று வாயை அசைத்துக்கொண்டு சூர்யா மரங்களுக்கிடையே அசினைத் துரத்திக் கொண்டிருந்தான். பில்லாவும் ரங்காவும் அடுத்த நிமிசமே இடத்தைக் காலி செய்து விட்டு ஓடி விட்டன.

இருவரும் தங்களுடைய முகங்களை உற்றுப்பார்த்துக் கொண்டார்கள்.

“பாரதவிலாஸ்ல ரூமு ரூமுக்கு இந்திப் படங்கள்தானே ஓடும்.. அதைப் பார்த்துப் பார்த்து இந்த நாயிங்களுக்கு இந்தி மட்லும் தான் தெரியும் போலிருக்கு! தமிழ் நஹி மாலும் போல!” என்றான் ஜாகீர். சின்ராசுக்குத்தான் கிளர்ச்சியான அதிசயமாய் இருந்தது. அப்போது மீண்டும் வாசலில் நிழலாடவே வெளியே பார்த்தான் சின்ராசு. இரண்டு இந்தி குடும்பஸ்த்ரீகள் சின்ரா சுவைக் கையை அசைத்துக் கூப்பிட்டார்கள். சின்ராசுவுக்கு வெட்கம் வேறு வந்து தொலைத்தது. மட்ட மத்தியானத்தில்கூப்பிடுகிறார்களே!

“க்யா?”ன்னு கேட்டுட்டுப் போடா.”

“உனக்கு இந்தி தெரியுமா ஜாகீரு?”

“எனக்கெங்க தெரியும்? என்னன்னு கேக்குறக்கு, க்யா! அப்புறம் ச்சார் ரன் கலியே, ச்சேரன் கலியேன்னு கிரிக்கெட் பாக்குறப்ப தெரிஞ்சிக்கிட்டது தான்.” அவன் சொல்லிக்கொண்டிருக்கையில் சின்ராசு எழுந்து வெளிவாசலுக்கு வந்தான். ‘கித்னா பைசா?’ என்று ஒருத்தி சொரக்காயைக் கையை நீட்டி ஜாடையாய் கேட்டாள். இன்னொருத்தி கொஞ்சமாய் தமிழ் பேச முயற்சித்தாள்.

“காயி வெலெ கித்னா சாரே?” அவள் உ ள்ளங்கையில் ஐம்பதுரூபாய்த்தாள் ஒன்று சுருண்டு கிடந்தது.

சின்ராசு ஒரு காயை எடுத்து அவளிடம் கொடுத்தான். அவள் ரூபாயை நீட்ட, இவன் ஊமை பாஷையில் வேண்டாமென மறுத்தான். ஒரு நன்றி கூட சின்ராசுவுக்கு சொல்லாமல் அவர்கள் ஹிந்தியில் உரையாடிக்கொண்டே சென்றார்கள். அவர்களிடம் இரண்டு நாய்களைப்பற்றியும் விசாரிக்கலாமென நினைத்தான் அவர்கள் சென்றபிறகு! இப்படியே போனால் ஹிந்தி கத்துக்கத்தான் வேணுமோ?

ஒருவேளை பில்லாவும் ரங்காவும் ஹிந்தியைக் கற்றுக்கொண்டு விட்டனவோ? முதலாக கேரளத்து மனிதர்கள் தமிழ்நாட்டில் வந்தமர்ந்து பேக்கரிகளில் அமரவும், வாடகைவீடு பிடித்து அமரவும் செய்தார்கள். ஆனால் இப்படி வடமாநிலத்தவர்கள் போல ஆக்கிரமிப்பு நடத்தவில்லை. இவர்கள் கொத்துக் கொத்தாக குறுநகரங்களிலும், பெருநகரங்களிலும் திரிகிறார்கள். அவர்கள் தமிழைப்பழக வேண்டுமென நினைப்பதுகூட இல்லை.

நம் ஆட்கள் தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியில் பேசவும் பழகிக்கொள்ளவும் துவங்கியிருக்கிறார்கள். இந்தி திணிப்பெல்லாம் இங்கு நடைபெறவேயில்லை. அதுவாகவே நிதானமாகப் பரவிக்கொண்டிருகிறது. ஹிந்திவாலாக்களுக்கு வாடகைக்கு வீடு கட்டிக்கொடுத்து தங்கவைத்து காசுபார்க்க வேண்டுமென்ற நினைப்பை எது தூண்டியது?. தமிழ் ஆட்களைத் தங்க வைப்பதைவிட பிரச்சனையே கொடுக்காத, பண்ணாத ஆட்களாக எப்படி அவர்கள் மனதளவில் உயர்ந்தார்கள்? இது இப்படியே இன்னமும் பத்துவருட காலம் வரை தொடருமா? வாய்ப்பு குறைவுதான் என சின்ராசு யோசித்தான். ஆக்கிரமிப்பு என்பது மிக நிதானமாகத் தான் துவங்கும். அதன் ஒவ்வொரு நகர்வும் அதன் எல்லையை அடையும் வரை மிகவும் நிதானமாகவே தான் இருக்கும்.

பாரதவிலாஸ் பகுதியில் ஹிந்திப்பாடல் ஒன்று சப்தமாகக் கேட்டது. பில்லாவுக்கும் ரங்காவுக்கும் ரகு இன்னமும் வீட்டிலிருந்து மீதமான சோற்றை எடுத்து வந்து கொடுக்கிறாரா? அப்படியிருந்தால் இங்கே எங்காவது தானே அவைகளின் குண்டான் கிடக்க வேண்டும்? அப்படி எந்தக் குண்டானும் சின்ராசுவுக்குத் தட்டுப்படவில்லை.

“ஏன் வெளியவே நின்னுட்டே சின்ராசு? அவுளுங்க போயிட்டாளுங்களா? சொரக்காயை வாங்கீட்டுத் தானே போனாளுங்க?” ஜாகீர் குரல் அறைக்குள்ளிருந்து கேட்கவே சின்ராசு அறைக்குள் நுழைந்து சேரில் அமர்ந்தான். “ரெண்டுபேரும் தகத்தகன்னு கப்ளீகரம் பண்ணுறாப்ல மின்னலடிச்சாங்களா? கண்ணு தெரியாதவனாட்டம் வந்து குக்கீட்டியே சின்ராசு? ஊட்டுல இருந்தாலும் லிப்ஸ்டிக் பூசியிருந்திருப்பாளுங்களே?”

“இல்ல ஜாகீரு, இன்னும் பத்து வருசம் கழிச்சி நாம இங்க வந்தா ரகுவுக்கே வாடகைக்கி ஒரு ரூமை ஹிந்திக்காரன் குடுத்திருப்பான்னு நினைக்கேன்.”

“போடா, நீ பேசீட்டாலும்! அதே.. சத்தமில்லாம எலக்ட் ரிக் ஸ்கூட்டர்ல வந்துட்டாப்லையாட்ட இருக்குது ரகு.. ஜன்னல்ல நீலக்கலர் வண்டியொன்னு பார்த்தனே! ஒரு வரவேற்பை போட்டுவோம்!” ஜாகீர் எழுந்து அறையை விட்டு வெளியேறினான். சின்ராசு எட்டிப் பார்க்கையில் பில்லாவும் ரங்காவும் பாரதவிலாசுக் குள்ளிருந்து தலைதெறிக்க ஓடி வந்தன. ரகு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விட்டு இறங்கலாமென நினைக்கையில், ஓடி வந்த இரண்டும் அவரைப்பார்த்து பற்களைக் கிஞ்சியபடி, ‘ஜாவ்! ஜாஆஆவ்! ஜாவ்! ஜாஆஆஆவ்!’ என்று அவரது காலைக் கடித்தே விடுவது போல கோபத்தில் கத்தின.

ரகு மிரண்டுபோய் வண்டியிலிருந்து இறங்காமல் அப்படியே வண்டியைத் திருப்பினார். ‘சுடே! சுடே! சுடே!’ என்று அவரும் அவைகளை நோக்கிக் குரலிட்டுப் பார்த்தார். அவரது இரண்டு கண்களும் வெளியே வந்து விழுந்துவிடுமோவென்ற அச்சத்தில் இருந்தன. சின்ராசு எழுந்து நாய்களை நோக்கி விரைந்தான். அவை இவனைப்பார்த்து வாலை வேகமாக ஆட்டியபடி ‘ஆஆவ்! ஆவ்வ்வ்வ்வொவ்! ஆஆஆவ்வ்!’ என்றன. பின்பாக காரியத்தில் கண்ணாக இருந்தபடி ரகுவை தோட்டத்தை விட்டே விரட்டும் முயற்சியில் இறங்கின.

“தும்பமே வேண்டாமடா சாமீ!..” என்றவர் மின்னலாய் எலக்ட்ரிக் ஸ்கூட்டரைக் கிளப்பி வந்த பாதையிலேயே தீயாய்க் கிளம்பினார். அவரை விரட்டிக்கொண்டே, ‘ஜாவ் ஜாவ் ஜாவ்!’ என குரைத்துக்கொண்டே அவை சிறிது தூரம் ஸ்கூட்டரை விரட்டிக்கொண்டு சென்றுவிட்டுக் களைப்பாய்த் திரும்பி சின்ராசுவை நோக்கி வாலை ஆட்டியபடி ஓடிவந்து நின்றன. அவை, சம்பவம் செய்து விரட்டிய தங்களை சின்ராசு பாராட்ட வேண்டுமென நினைத்தனபோலும்! சின்ராசு அவைகளைப்பார்த்து, ‘ஜாவ்! ஜாவ்!’ என்று சப்தமிட்டான். அவைகள்பாரதவிலாஸ் நோக்கி ஓட்டம் பிடித்தன.

ரகுவின் அழைப்பொலி இவன் அலைபேசிக்கு வந்தது. எடுத்து காதுக்குக் கொடுத்தான்.

“ரெண்டு நாளு நானு தோட்டத்துப்பக்கம் வேலை யொன்னுமில்லீன்னு வரலீங்க சின்ராசு.. அதுக்குள்ள பாருங்க என்னை அடையாளம் மறந்துட்டுதுக ரெண்டும்! அங்க ஹிந்திக்காரனுங்க யாராச்சிம் வெளிய நின்னா கூப்பிட்டு ரெண்டையும் புடிச்சு கட்டி வைக்கச் சொல்லுங்க! கட்டிவெச்ச பொறவு எனக்குக் கால் பண்ணுங்க.. அப்புறம் வர்றேன்!”

“ரங்கா பில்லான்னு சத்தம் போட்டிருந்தீங்கன்னா கம்முன்னு இருந்திருக்கும்லங்க?”

“அதெங்கீங்க..அந்தப்பேரைச் சொல்லிக் கூப்பிட்டா திரும்பிப் பாக்குறதுகூட இல்ல! அவனுங்க தான் என்னமோ ‘ஜீஜு’ன்னுட்டு இருப்பானுங்க! சரி கட்டிவெச்சுட்டு கூப்பிடுங்க!” ரகு போனை வைத்து விட்டார்.

ஜாகீர் சின்ராசுவிடம், ‘என்ன சொல்றாப்ல ரகு?’ என்றான்.

“அடிவானம் கறுத்துச்சுன்னா அப்பவே மழை பெய்யும் றாரு!” என்றான் சின்ராசு.