Balasaraswati: The Dancer Who Popularised Bharatnatyam To The World | #IndianWomenInHistoryசினிமா என்பது கலைகளின் கூட்டு.அனைத்து வகையான கலைகளும் சினிமாவில் இடம்பெற்று வளர்சிதை மாற்றங்களை அடைந்தே வருகின்றன. அவைகளுள் நடனமும் ஒன்று. பேசும்படங்களின் முதல் 2 பத்தாண்டுகளில்  நடனங்களுக்கிருந்த தொடர்பை ஓரளவு அலசுவதே இக் கட்டுரை.

நடனம் என்பதன் தோற்றுவாய் என்னவாக இருக்கும்?  (பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை வீழ்த்தியவுடன் உற்சாகமாக வெளிப்படுத்தும் அங்க அசைவுகள் எனக்கு நினைவுக்கு வருகிறது). உணர்வுகளின் வெளிப்பாடே நடனமாகின்றது. உடல்மொழியால் உணர்வுகளைத் தொடர்புறுத்தும்  நிகழ்த்துக் கலையாகவும் நடனம் இருக்கிறது. விளையாட்டு, நடனம் ஆகியவை சோம்பல் நீக்கி உடற்தகுதியைத் தக்கவைத்துக் கொள்ளும் பயிற்சி முறையாகவும் அமைந்துள்ளது. மனிதருக்கு மனிதர், வட்டாரத்திற்கு வட்டாரம் அவை வேறுபாடுகளைக் கொண்டிருப்பதால் நடனங்களில் பல்வேறு வகைகள் தோன்றுகின்றன.

குறத்தி நடனம்

தென்னிந்தியாவின் முதல் படமான காளிதாஸ்(1931) படத்தில் குறத்தி நடனம் இடம் பெற்றது. நாடகங்களில் நிகழ்த்தப்பட்டு வந்த குறத்தி நடனத்தை சோதனை முயற்சியாக டி.பி.ராஜலக்‌ஷ்மி ஆடிக்காட்ட, அதை அப்படியே 2 ரீல்கள் கொண்ட துண்டுப்படமாக எடுத்து, காளிதாஸ் துண்டுப்படத்துடன் இணைத்துக் காட்டப்பட்டது. பின்னாட்களில், அதை நடனம் என்று ராஜலக்‌ஷ்மியே ஏற்றுக் கொள்ளவில்லை. காளிதாஸ் எனப்படும் கதைப்படம் 4 ரீல்கள் கொண்டது. மேலும் கீர்த்தனை, தேசப்பற்று பாடல்கள் கொண்ட துண்டுப்படம் 3 ரீல்களும் கொண்டது. இவையனைத்தும் இம்பீரியல் மூவிடோன் தயாரிப்பு.  அவையல்லாமல், சாகர்மூவிடோன் தயாரிப்பாக ஜான்சிபாய், ஆர்டி (ஹாடி எனப்பட்ட எஸ்.எம்.ஹாடியாக இருக்கலாம் என்பது என்னுடைய கணிப்பு) ஆகியோரின் குறத்தி நடனமும் இணைக்கப்பட்டது. அது, காளிதாஸு–க்கும் முன்பே எடுக்கப்பட்டது. ஒலிவந்தவுடன் ஆடல்பாடலுக்கே முதன்மை வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம். இவ்வாறு முதல் படம் முதல் தொழிற்பட்ட குறத்தி நடனம்,   ஜிப்ஸி நடனம் போன்றவை பின்னர் வந்த காலகட்டத்திலும் நீடித்தது.

நாட்டார் கலைகள்

மேலும், துவக்கக் கால பேசும்படங்களில் வண்ணான்-வண்ணாத்திப் பாட்டு, இடையன்-இடைச்சி  ஆகிய நாட்டுப்புறக் கதை பாத்திரங்கள் பெரும்பாலான படங்களில் இடம்பெற்றன. நகைச்சுவையைக் கணக்கில் கொண்டு சேர்க்கப்பட்ட இவ்வகைக் காட்சிகளில் நாட்டுப்புறப் பாணியிலான நடனங்கள் இடம்பெற்றிருக்கும் என்றே கணிக்க முடிகிறது. புலிக்கலைஞன், காவடியாட்டம்,தெருக்கூத்து போன்ற நாட்டார்கலைப் பாடல்கள் மற்றும் நடனங்களை சினிமாவில் தொடர்ந்து இடம்பெறச் செய்ததில் காளி ரத்னம் முதன்மையாகக் குறிப்பிடத் தகுந்தவர்.

கவர்ச்சி நடனம்

பேசும்படங்களின் துவக்கக் காலங்களில் தேவதாசி மரபு நடைமுறையில் இருந்தே வந்தது. கலைகளிலும்,கல்வியிலும் சிறந்தவர்களாகவும், சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவர்களாகவும் தேவதாசிகள் இருந்துள்ளனர். நலிந்த பிரிவினரும் இருந்துள்ளனர். கோயிலில் கடவுளைத் துதித்து நடனம் ஆடுவதுபோல , ஊர்ப் பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள் முன் ஆடிக்காட்டும் ஒரு வழக்கமாகவும், திருவிழாவில் பொதுமக்கள் காணும்படி ஆடவும் மாற்றங்களைப் பெற்றிருக்கிறது. அதுவே, பின்னர் சினிமாவிற்கும் பரவியது. மேலும், ஆங்கிலப் படங்களின் தாக்கத்தில் மேற்கத்திய இசையும், நடனமும் தமிழ்ப் படங்களில் இடம் பெற்றிருந்தது. மது குடிப்பகங்கள், விடுதி போன்றவற்றில் நிகழ்த்தப்பட்ட பெண்களின் நடனங்கள், சண்டைக்காட்சிகளும், சாகசங்களும் கொண்ட சமகாலக் கதைப்  படங்களில் இடம் பெற்றன. அவ்விரண்டு வகைகளிலும்  பார்வையின்பத்தை அளிக்கும் வகையிலான ஆடைக்குறைப்பும், உணர்ச்சிகளைத் தூண்டும் வெளிப்பாடுகளும் இடம் பெற்றன. இன்றுவரை, இவ்வாறான கவர்ச்சி நடனங்கள் ’ஐட்டம் சாங், ஐட்டம் டான்ஸ்’ என நீடிக்கின்றன. அந்தக் காலப்படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியவர்கள் என்று சாந்தாதேவி, ஜெ.சுசீலாதேவி, அசூரி போன்றோரைக் குறிப்பிடலாம்.

அசூரி என்கிற ஆங்கிலோ இந்தியர் இந்திப் படங்களில் பெரும்பாலும் நடனமும், சில கதாபாத்திரங்களிலும் நடித்தவர். அசூரியே இந்தியாவின் முதல் ’ஐட்டம் ஆட்டக்காரராக’ அறியமுடிகிறது. அசூரியின் நடனம் இடம்பெற்ற தமிழ்ப் படங்களெல்லாவற்றிலும், அவருடைய நடனக் காட்சியுடன் கூடிய விவரங்களுடன் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.  சென்னையைச் சேர்ந்த சுந்தரம் சவுண்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பான பூகைலாஸ்-1938, மும்பை தயாரிப்பான டூஃபான் குயின்(1939) போன்ற  படங்களில் அசூரியின் நடனம் இடம்பெற்றிருந்தது. லவங்கி படத்தில் சொந்தக் குழுவினருடன் ஆடியிருந்தார். பாலே, காபரே, பரதம் போன்ற நடனக் கலைகளில் தேர்ந்தவர் அசூரி.

1935-இல் வெளியான ரத்னாவளி படத்தில் ஜெ.சுசீலாதேவியின் கவர்ச்சி நடனம் இடம்பெற்றதற்கான நிலைப்படங்கள் கிடைக்கின்றன. மேலும் பல படங்களில் இதுபோன்ற கவர்ச்சியாக ஆடியவர், பின்னர் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகியானார். அவர் ஆடியவை சுமார் ரகம் என்றே விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. சென்னை சீனிவாசா சவுண்ட் சிட்டி ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்ட தூக்குத் தூக்கி-1935 படத்திலும் ஒரு கவர்ச்சி  நடனம் இடம் பெற்றுள்ளதை ஆவணங்களில் காணமுடிகிறது. அவருடைய பெயர் பற்றிய விவரங்கள் இல்லை.

அப்போது பெரும்பாலும் புராணப்படங்களே எடுக்கப்பட்டு வந்த  நிலையில் இந்திரலோகத்துப் பெண்களான ஊர்வசி, மேனகை, ரம்பை போன்றோர் சபையில் ஆடும் காட்சிகள், கிட்டத்தட்ட அனைத்துப் படங்களிலுமே  நீக்கமற கலந்திருந்தன.

 

சதிராட்டமா? பரத நாட்டியமா?

What is the Future of Betis of the Devadasis? | NewsClickதென்னிந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் அடையாளங்களுள் ஒன்றாகவே பரத நாட்டியம் உள்ளது. பழங்காலக் கோயில் சிற்பங்களில் நடனம் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். தொன்றுதொட்டே தேவதாசிகளால் நிகழ்த்தப்பட்டு வந்த ஆடற்கலை சதிர்க் கச்சேரி,சதிராட்டம்,தாசியாட்டம், சின்ன மேளம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. அவைகளுக்குள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் போன்ற வரலாற்றை விளக்கப் புகுந்தால் நிறைய கற்கவும், எழுதவும் வேண்டியதாகிவிடும். தேவதாசிகளைக் கோயில்களுக்கு பொட்டுக் கட்டும் பழக்கம் இருந்தது. பொட்டு கட்டப்படும் பெண்கள் இறைபணி செய்து, இறைவனைத் துதித்து ஆடல்பாடல் நிகழ்த்துவார்கள். குடும்பப் பெண்களைப் போலான திருமண வாழ்வு அவர்களுக்கு மறுக்கப்பட்டது. மாறாக, தேவதாசி சமுதாயப் பெண்கள்  பரத்தையர்களாக விளங்கினர். இவற்றையெல்லாம் எதிர்த்து டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி அவர்களால் 1927இல் முன்மொழியப்பட்ட தேவதாசி ஒழிப்புச் சட்டத்தின் விளைவால் கோயில்களில் மானியம் பெற்று ஆடிவந்த தேவதாசிகள் சிக்கல்களை சந்திக்க நேர்ந்தனர். சென்னையில் 1928இல் துவக்கப்பட்ட சங்கீத வித்வத் சபை (ம்யூசிக் அகாடெமி) சில ஆண்டுகள் சென்ற பிறகு நடனக்கலை மீதும் தன்னுடைய ஆர்வத்தையும், அக்கறையையும் செலுத்தத் துவங்கியது. சதிர் நடனம் ஆலயங்களில் நடத்தப் பெறக்கூடாது என்று  1930ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டதாக பத்மா சுப்ரமண்யம் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, சதிரின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டவர்கள் கையாண்ட உத்திகளில் ஒன்றே ’பரத நாட்டியம்’ எனப் பெயர் மாற்றியது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். சபையில் பரத நாட்டியம் ஆடப்படுவதற்கு எதிர்ப்புகள் வலுவாக எழுந்த சூழலிலும் ம்யூசிக் அகாதெமியின் பொறுப்பிலிருந்த ஈ.கிருஷ்ண அய்யர் என்பவர் நடத்திக் காட்டினார். சுகுண விலாச சபாவிலும் உறுப்பினரான கிருஷ்ணய்யர் பரதக்கலையை வித்வான்  நடேச அய்யர் என்பவரிடம் கற்று நாடகங்களில் நிகழ்த்தியவர். ’’நாட்டியம் ஆட ஆரம்பிக்கும் முன் அதைக் குறித்து அதன் பெருமையை பத்து பதினைந்து நிமிடங்கள் பேசிவிட்டுப் பிறகுதான் அக்கலையை ஆரம்பிப்பார். இப்படி பல இடங்களில் பிரச்சாரம் செய்து குல ஸ்திரீகளும் இக் கலையைக் கற்கலாம் என்ற ஒரு கோட்பாட்டை பரவச் செய்தார்.உலகெங்கும் புகழ்பெற்ற  நாட்டியக் கலை நிபுணராகிய ராம் கோபால் என்பவரை பரத நாட்டியம் கற்கும்படி செய்தார்’’ என்று எழுதியிருக்கிறார் பம்மல் சம்பந்த முதலியார் ( நான் கண்ட நாடகக் கலைஞர்கள்).

1930-களின் துவக்கத்திலிருந்தே புத்துயிர் பெறத்துவங்கியது பரத நாட்டியக் கலை. அப்போது புகழ்பெற்றவராக விளங்கிய பெண்மணி பாலசரஸ்வதி. தேவதாசிப் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்து சிறுவயது முதலே நடனம் பயின்றவர். கந்தப்பன் என்னும் நட்டுவனாரிடம் நாட்டியம் பயின்றார். உதயசங்கர் போன்ற உலகப் புகழ்பெற்ற நடனக் கலைஞர்களுடன் ஒப்பிட்டு பாலசரஸ்வதியை மிகவும் உயர்த்திப் பாராட்டி எழுதியவர் கல்கி. பாலசரஸ்வதிக்கு இணை யாருமே இல்லை என்றார்.

இன்றும் புகழ்பெற்று விளங்கும் நாட்டியப் பள்ளியான  கலாக்‌ஷேத்ராவை 1936இல் நிறுவியவர் ருக்மணிதேவி. பந்த நல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்ற நட்டுவனாரிடம் பரதக் கலையை 3 ஆண்டுகளுக்கும் மேலாக கற்றுத் தேர்ந்தவர்.  பாலசரஸ்வதி பரதக்கலைக்கு புத்துயிர் அளித்தார் என்றால், ருக்மணிதேவி அருண்டேல் கௌரவமும், அந்தஸ்தும் அளித்தார் என்கிறார் கல்கி. அதன் பிறகு, குடும்பப் பெண்கள் பரதம் கற்பதும் பரவலானது. இதுவே, பரதக் கலையின் சுருக்கமான வரலாறு.

சினிமாவில் பரத நாட்டியம்

சினிமாவில் ஒலிவந்த பிறகு ஆடல்பாடல் ஆகியவை நாடகத்தின் நீட்சியாக இடம்பெற்றன. தேவதாசி மரபினர்களில் ஆண்கள் நட்டுவனார்களாகவும் நடிகர்களாகவும்,  பெண்கள் நடன மங்கைகளாகவும் நடிகைகளாகவும் பலரும் சினிமாவுக்கு படையெடுக்கத் துவங்கினர். Dancing Girl என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட தமிழ்ப் படத்தின் தலைப்பு ‘தாசிப் பெண்’  என்பதாகும். குடும்பப் பெண்கள் சினிமாவில் சேரத் தயங்கினர்.

திரைப்படத்தின் விளம்பரங்களிலேயே  நடனக் கலைஞர்கள், நடன வகைகள் ஆகியவற்றைப் பற்றி குறிப்பிடும் அளவுக்கு சினிமாவில் நாட்டியம் இருந்தது.

1934இல் வெளியான லவகுச என்கிற தமிழ்ப் படத்தில் முதன்முதலில் பரத நாட்டியம் புகுத்தப்பட்டதாக ஆடல் பாடல் இதழாசிரியர் மா.வே.வீரராகவன் குறிப்பிட்டிருக்கிறார். அதையடுத்து வந்த படங்கள் பெரும்பாலானவற்றில் பரத நாட்டியம் இடம் பெற்றதாகவும் கூறியிருக்கிறார். எனினும், அண்மையில் கிடைத்த ஆவணத்தின்படி, 1932இல் வெளிவந்த காலவ மஹரிஷி அல்லது சித்திரசேனன் உபாக்யானம் என்ற படத்தில் இந்திரலோகத்தில் ஊர்வசியின் நடனக் காட்சியைக் கொண்ட நிலைப்படம், அப்போதே செவ்வியல் நடனம் இடம்பெற்றதை உறுதி செய்கிறது.  தற்போதைய நடிகை லக்‌ஷ்மியின் பாட்டியும், ருக்மணியின் தாயாருமான ஜானகி என்பவர் பரத நாட்டியக் கலைஞர் என்று குண்டூசி கோபால் பதிவு செய்திருக்கிறார்.   நுங்கம்பாக்கம் ஜானகி என்றும் அழைக்கப்பட்டுள்ளார். காலவ மஹரிஷியில் ஆடியிருப்பவர் அவராக இருக்க வாய்ப்புகள் உள்ளன. இதுவரை உறுதியாகவில்லை. எஸ்.எஸ்.ஜானகி என்றொருவரின் பெயரும் சமகாலத்தில் சமமான நிலையில் காணமுடிகிறது. இருவரும் ஒருவரேதானா என்பது உறுதியாகவில்லை.

சங்கீதமும், பரதமும் தெரிந்த ஜானகி 1930களின் படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த படங்கள் சிலவற்றில் ஜானகியின் மகள் பேபி ருக்மணி நடித்துப் புகழ்பெற்றிருந்தார். அவருடைய நடிப்பிற்காகவும், குறிப்பாக நடனத்திற்காகவும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. வழுவூர் ராமையா பிள்ளையிடம் பயின்ற பேபி கமலாவின் பரதம் உள்ளிட்ட நடனங்களுக்காகவே சில திரைப்படங்கள் புகழடைந்தன.

பாலசரஸ்வதியின் நடனம் உதய சங்கரால் படம்பிடிக்கப்பட்டதெனினும் அவை சினிமாவில் பயன்படுத்தப்படவில்லை. பாலசரஸ்வதியின் பிற்காலத்தில் அவருடைய நடனத்தை சத்யஜித் ரே படப்பதிவு செய்திருக்கிறார்.

1936ஆம் ஆண்டு வந்த வெளியான ராஜா தேசிங்கு படத்தில் ருக்மணிதேவியின் பரத நாட்டியம் இடம் பெற்றது. பரத  நாட்டியத்தை தனியாகப் படம்பிடித்து படத்துடன் இணைத்துக் காட்டப்பட்டது.

’சைரந்தரி’ அல்லது ’கீசக வதம்’ (1939) என்ற தமிழ்ப் பேசும் படத்தில் பிருஹன்னளையாக ஈ.கிருஷ்ணைய்யர் தோன்றி அழகாக பரத நாட்டியம் ஆடியது பலராலும் பாராட்டுப் பெற்றது.

வெளிநாட்டவரான ராகினிதேவியின் பரத நாட்டியம் டம்பாச்சாரி-1935,  வஸந்த சேனா,சந்திரமோஹனா-1936 போன்ற படங்களில் இடம்பெற்றது.

1937இல் வெளிவந்த விக்ரம ஸ்திரி சாஹஸம் படத்தில் இந்திரலோக ஊர்வசியாக நடித்து,  நடனமும் ஆடியவர் அந் நாளில் பரத நாட்டியத்தில் புகழ்பெற்றவரான காஞ்சிவரம் கண்ணம்மாள் என்பவர். அவருடைய பரத நாட்டியம் சதிலீலாவதி-1936 உள்ளிட்ட  மேலும் சில படங்களில் பயன்படுத்தப்பட்டது. .

1938இல் வெளிவந்த ஜலஜா அல்லது நாட்டிய மகிமை என்னும் திரைப்படம் இந்தியாவின் முதன் முதலாக வெளிவரும் நடனப் படம் என்று அறிவிக்கப்பட்டது. நடனம் அமைத்த நட்டுவனார் எஸ்.ஷண்முகம்.   ’பாட்டும் ஆட்டமும் சேர்ந்தால் தங்கத்துக்கு மணம் வந்தாற்போல். பாட்டு பெண்களுக்கு அவசியமானது.  நாட்டியம்  பெண்மையை மேன்மையாக்குவது’ என்ற அறிவிப்போடு விளம்பரப்படுத்தப்பட்ட படம்  . தமிழ் சினிமாவின் தரமுயர்த்த பாடுபட்டவர்களில் ஜி.கே.சேஷகிரி, ஏ.என்.கல்யாணசுந்தரம் ஆகியவர்களும் குறிப்பிடத் தகுந்தவர்கள். அவர்களுடைய உருவாக்கமான ஜலஜா படத்தில் பரத நாட்டியக் கலையில் மிக்க மாண்புடன் ஜொலித்த காலஞ்சென்ற ஸ்ரீமதி வரலக்ஷ்மியின் சின்னமாக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது. ஸ்ரீமதி வரலக்ஷ்மி, ஜலஜா படப்பிடின்போதே இறந்துவிட்டவர். இவரோடு எப்போதும் இணைந்த நட்சத்திரமாய் விளங்கிய கும்பகோணம் பானுமதி கதையின் மையப்பாத்திரத்தில் நடித்தார். பரத நாட்டியத்தின் பெருமையை விளக்கி பிரமிக்கச் செய்த ஏற்பாட்டின்படியான படத்தில் நடித்த இவர்களிருவரும் தேவதாசி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

தேவதாசிகளின் கலைத்திறன் மற்றும் வேசி நிலைக்குத் தள்ளப்படும் அவலம் போன்ற யதார்த்த வாழ்வை சித்தரித்த சமகால சாட்சியமாகவே ஜலஜா படத்தின் கதை இருக்கிறது.

எம்.எஸ்.பட்டம்மாள், யோகம்-மங்களம் சகோதரிகள், நட்ராஜ்-சகுந்தலா இணையர், தாரா சௌத்ரி போன்றோரின் நாட்டியங்கள் 40களின் படங்களில் பரவலாக இடம்பெற்றது. கதாநாயகனாகவும் , வில்லனாகவும் புகழ்பெற்ற நடிகர் ரஞ்சன் பரத நாட்டியம் பயின்று, அதை சினிமாவிலும் பயன்படுத்தியவர். ’நாட்டியம்’ என்னும் பத்திரிகையையும் நடத்தினார்.

நடன மங்கையாக சினிமாவில் நுழைந்து மெல்ல உயர்ந்து கதைநாயகியாகி, பின்னர் தமிழகத்தின் முதல்வராகவும் திகழ்ந்தவர் வி.என்.ஜானகி.

ஜலஜா படத்திற்கு அடுத்து நாட்டியங்களுக்கென்றே சிறப்பான இடத்தை அளித்து எடுக்கப்பட்ட படம் இந்தி மொழிப் படம் ’கல்பனா’. 1948இல் வெளியான கல்பனா, கே.ராம்நாத், ஏ.கே.சேகர் போன்றவர்களின் பங்களிப்புடன்   சென்னை ஜெமினி ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டது. நாடெங்கும் நடனத்தில் புகழ்பெற்றிருந்தவர்கள் அனைவரையும் உள்ளடக்கி எடுக்கப்பட்ட ஒரு படம் . அந்தப் படத்தில் பத்மினி அறிமுகனார். திருவாங்கூர் சகோதரிகள் எனப்பட்ட லலிதா, பத்மினி, ராகினி ஆகியோரும் கல்பனா படத்திற்குப் பிறகு வந்த கிட்டத்தட்ட அனைத்துப் படங்களிலும் ,  நாட்டிய நாடகங்கள், நடனம் போன்றவற்றை நிகழ்த்தினர். அவை அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்டது.

நடன ஆசிரியர்கள்

பரதம், இந்துஸ்தானி, நாட்டுப்புற நடனங்கள், மேற்கத்திய நடனங்கள், பாம்பு நடனம் போன்ற பல்வேறு வகையான நடனங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், அப்போதைய திரைப்படங்களில் அரிதாகவே நடன ஆசிரியர்களின் பெயரைக் காணமுடிகிறது.  நடனக் கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தவர்களே பெரும்பாலும் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காட்சிகளில் தோன்றினர். எனினும், குறிப்பிட்ட பாடல்களுக்கோ அல்லது பொதுவாகவோ நட்டுவனார்களிடம் பயிற்சி பெற்றவர்களே. நடனக் கலைஞர்கள் அல்லாத பொதுவான நடிகர்கள் எவ்வாறு நடனம் ஆடினர் என்ற விவரம் இல்லை.  தாமாகவே ஆடினரா, நடன ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனரா என்பதில் தெளிவில்லை. எனினும்,  V.B.. ராமையா பிள்ளை என்கிற வழுவூர் ராமையா பிள்ளை,  பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்ற புகழ்பெற்ற நட்டுவனார்கள் பெயரையே சில படங்களில் காணமுடிகிறது. மேலும் திரையில் நடனமாடியவரான நட்ராஜ், சில படங்களில் நடன ஆசிரியாக இருந்துள்ளார்.  நாட்டியத்தை சிறப்பித்தே எடுக்கப்பட்ட இன்னொரு படம் நாட்டியராணி-1949. அந்தப் படத்தின் நடன ஆசிரியர் வி.மாதவன். பண்டிட் போலோநாத் சர்மா, அனில் குமார் சோப்ரா போன்ற வட இந்தியர்கள் பெயரையும் காணமுடிகிறது. நடன மங்கையாக அறிமுகமாகி பின் கதை நாயகியாக வளர்ந்த பி.எஸ். சரோஜாவை மணந்தவர் போலோநாத்.

1947இல் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் சென்னை மாகாணத்தில் நிறைவேறியது. அதற்கு முன்பு  வரையிலான திரைப்படங்களில் தாசி கதாபாத்திரங்களும், அவர்கள் ஆடிய சதிராட்டம், பரத நாட்டியம் ஆகியவையும் பெரும்பாலான படங்களில் இடம்பெற்றன. இன்றும் எஞ்சியுள்ள படங்களில் அவற்றைக் காணலாம்.

எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினருக்கும் பொதுவாக அல்லாமல் இன்று அனைத்து சாதியினரும் கற்கும் ஒரு கலையாக பரத நாட்டியம் திகழ்கிறது. நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு மக்கள் வரை பெண்களும் ஆண்களும் கற்கும் கலையாக இன்று பரதக்கலை திகழ்கிறது.

மேலும், குடும்பப் பெண்கள் பரத நாட்டியம் கற்பது இழிவு என்னும் நிலையிலிருந்து இன்று பெருமைக்குரிய தெய்வீகக் கலையென்னும்    நிலையை கடந்த 90 ஆண்டுகளில் அடைந்தத்தின்  பின்னணியில் சினிமாவின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத் தகுந்தது.

 

நன்றி

1.கல்கி வளர்த்த கலைகள் 2.தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வெள்ளி விழா மலர்-1980

தியடோர் பாஸ்கரன், ராண்டார் கை, பெ.வேல்முருகன், பொன்.செல்லமுத்து, மனு சதீஷ், P.V.கோபாலகிருஷ்ணன், வள்ளியப்பன் ராமநாதன்