கள்ளக்குறிச்சி அருகே சின்னச் சேலத்தில் பள்ளி மாணவி ஒருவரின் மரணம் ஏற்படுத்திய சர்ச்சைகள்-கலவரங்கள் தமிழகத்தில் உருவாகிவரும் ஒரு புதிய அபாயகரமான சூழலை அடையாளம் காட்டுகின்றன. இந்தப் பிரச்சினை உருவானவிதம் சமூக வலைத்தளங்களும் சமூக விரோதிகளும் ஒருங்கிணையும் ஒரு அபாயகரமான புள்ளியைக் காட்டுகின்றன.

அந்த மாணவியின் மரணம் தற்கொலை என்று சொல்லப்பட்டது. அந்த மாணவியின் தற்கொலைக் கடிதம் ஒன்றும் காவல்துறையினரால் வெளியிடப்படுகிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. அமைச்சர் நேரில் செல்கிறார். ஆனால் அடுத்த சில தினங்களில் இறந்த மாணவியின் அம்மா ஓர் உணர்வுபூர்வமான காணொளியை வெளியிடுகிறார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. தொடர்ந்து ரிட்டயர்டு மூத்த பத்திரிகையாளர்களும் சவுக்கு சங்கர் போன்ற டிஜிட்டல் கூலிப்படையினரும் களத்தில் குதிக்கின்றனர். விதவிதமான சதிக்கோட்பாடுகள். உண்மையைத் தேடுவதற்குப் பல வழிகள் இருக்கலாம், ஆனால் எந்த ஆதாரமும் அற்று ஊடகங்களால் வண்டிவண்டியாய் கற்பனைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. சில தினங்களுக்குப் பின் பள்ளியின் முன் பெரும் கும்பல் கூடுகிறது. பள்ளி தாக்கப்படுகிறது. வாகனங்கள் எரிக்கப்படுகின்றன. சான்றிதழ்கள் எரிக்கப்படுகின்றன. பொருள்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று நீதிமன்றம் கூறுகிறது. சமூக வலைத்தளங்களில் மேலும் சதிக்கோட்பாடுகள் பரவுகின்றன. யூ ட்யூப் சேனல்களில் உளவுத்துறையும் காவல்துறையும் கலவரங்களைத் தடுக்க தவறிவிட்டன என்ற பிரச்சாரம் ஓயாமல் மேற்கொள்ளப்படுகிறது. மாணவிக்கு காதல் விவகாரம் இருந்தது, பள்ளியில் மாணவி இறந்த அன்று போதை விருந்து நடந்தது என்று என்னென்னவோ கூறப்பட்டது.
எதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. யூகங்கள், கற்பனைகள், எப்படியாவது இதற்கு அரசை பொறுப்பாக்க வேண்டும் என்ற அரசுக்கு எதிரான டிஜிட்டல் ஊழியக்காரர்களின் மூர்க்கம். ஒரு மரணம் அல்லது தற்கொலை சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் விசாரிக்கப்படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கான கோரிக்கைகளில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் எதற்காக அவ்வளவு பெரிய வன்முறை தூண்டப்பட்டது? தூண்டியவர்களின் கொள்ளையடித்தவர்களின் நோக்கம் என்ன? அவர்களை ஒருங்கிணைத்தவர்கள் யார்? சில சாதி அமைப்புகள் என்று சொல்லப்படுகிறது. மத அமைப்புகள் என்று சொல்லப்படுகிறது. கலவரத்தில் ஈடுபட்டவர்களில் சமூக வலைத்தளங்களினால் தூண்டப்பட சில பொதுமக்களும் இருந்திருக்கலாம். ஆனால் தாக்குதலிலும் வன்முறையிலும் ஈடுபட்டவர்கள் திட்டமிட்ட நோக்கங்களுடன் வந்திருக்கிறார்கள்.

இது ஒரு சோதனை முயற்சியாகத் தோன்றுகிறது. அதாவது எந்த சூழ்நிலையையும் ஒரு கலவரச்சூழலாக மாற்ற முடியும் என்பதை சோதித்துப் பார்த்திருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். திடீர் கும்பல் வன்முறை கட்டுப்படுத்த முடியாத ஒன்று என்பதை பாபர் மசூதி விவகாரத்தில் இருந்து பார்த்து வருகிறோம். ஒரு உணர்ச்சிபூர்வமான சம்பவம் நடந்தால் அதுகுறித்து ஒரு வதந்தியை முதலில் உருவாக்குவது. ஒரு மாணவியின் தற்கொலையை மதமாற்ற சம்பவமாகத் திரித்தது போல. பிறகு அந்த வதந்தியை அண்ணாமலை போன்ற அரசியல்வாதிகளும் வாட்ஸப் வதந்தியாளர்களும் உண்மைபோன்ற ஒரு பொய்யாகக் கட்டமைக்கின்றனர். இந்தப் பொய்கள் மின்னல் வேகத்தில் பயணம் செய்கின்றன. அதற்குப்பின் என்ன உண்மை வெளிவந்தாலும் மோசமான விளைவுகளும் தாக்கங்களும் நிகழ்ந்து முடிந்துவிடுகின்றன.

மாணவியின் தற்கொலை விவகாரத்திலும் அதுதான் நடந்தது. இதுபோன்ற மரணங்களை பலகோணங்களிலும் ஆராய வேண்டும்.
தனியார் பள்ளிகள் மதிப்பெண்களுக்காகச் செய்யும் கெடுபிடிகள் அப்பள்ளிகளை சித்ரவதை முகாம்களாக மாற்றியிருக்கின்றன. நாமக்கல் பள்ளி மாடல் கல்விக்கு மட்டுமல்ல, மனித உரிமைகளுக்கும் எதிரானது. ஆனால் இந்த மாடலை சற்றுக் கூடுதலாகவோ குறைவாகவோகத்தான் எல்லா தனியார் பள்ளிகளும் பின்பற்றுகின்றன. இதில் ஒரு மாணவனோ மாணவியோ மன அழுத்தத்திற்கு ஆகாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அதிலும் படிப்பில் சற்றே பின்தங்கக்கூடிய மாணவர்கள் அடையும் மனஅழுத்தத்திற்கு அளவே இல்லை. பிள்ளைகளை மூலதனமாகக் கருதும் பெற்றோர்களின் பேராசையும் 100 சதவிகித வெற்றியை தங்கள் வணிக ’பிராண்டிங்’காகக் கருதும் பள்ளி நிர்வாகங்களின் வெறியும் சேர்ந்து குழந்தைகளின் மன வளத்தையும் உடல் நலத்தையும் பாழாக்குகின்றன. பல தனியார் பள்ளிகள் வெளி உலகின் பார்வையிலிருந்து துண்டிக்கப்பட்டவையாக இருக்கின்றன. கற்பித்தல் தொடர்பான ஒரு பொது வழிமுறைக்குள்ளும் கண்காணிப்பிற்குள்ளும் வெளிப்படைதன்மைக்குள்ளும் இப்பள்ளிகள் கொண்டுவரப்படவேண்டும். அவை தனி ராஜ்ஜியங்களாகச் செயல்பட அனுமதிப்பது மிக மிக ஆபத்தானது. தனியார் பள்ளிகள் பல்வேறு மட்டங்களில் கொண்டிருக்கும் ’லாபி’ காரணமாகவும் பணபலம், சாதிய பலம் காரணமாகவும் காலங்காலமாக கட்டற்ற அதிகாரத்தை அனுபவித்து வருகின்றன. இந்த அதிகாரம் ஒடுக்கப்படவேண்டும்.

இரண்டாவதாக இரண்டாயிரத்தின் குழந்தைகள் வளரும் புதிய பண்பாட்டுச்சூழல் பல்வேறு சவால்களைக் கொண்டதாக இருக்கின்றன. மனித குல வரலாற்றில் இதுவரை எந்தத் தலைறைக் குழந்தைகளுக்கும் கிட்டாத வெளிப்பாடுகளுக்கு இந்தத் தலைமுறை குழந்தைகள் முகம் கொடுக்கின்றன. அவர்களின் அறிதல்களுக்கும் மனமுதிர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. போன தலைமுறையினர் இருபது வயதில் அடையக்கூடிய உடல் மன உணர்வுகளை இப்போதெல்லாம் 13 வயதில் அடைந்துவிடுகின்றனர். இது ஏற்படுத்தும் உணர்வுச் சிக்கல்களை, உறவுச் சிக்கல்களை கையாளமுடியாமல் தடுமாறுகின்றனர். பல சமயங்களில் ஆசிரியர்களோ பெற்றோர்களோ இந்தச் சிக்கல்களைப் புரிந்துகொள்ளாமல் கையாளும்போது அதன் விளைவுகள் மோசமாக இருக்கின்றன. மேலோட்டமான ஒழுக்கக் கோட்பாடுகள், போலி குடும்ப கெளரவங்கள் வழியே இளம் மனங்களை நீங்கள் ஒருபோதும் அணுகமுடியாது. பள்ளிகளில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உண்மையில் முதலில் கவுன்சிலிங்க் அளிக்கப்படவேண்டியவகள் ஆசிரியர்களும் பெற்றோர்களும்தான். மாறிவிட்ட புதிய உலகின் குழந்தைகளை எப்படிக் கையாள்வது என்று அவர்களுக்கு எந்த அடிப்படை அறிவும் இல்லை.

அடுத்ததாக இதுபோன்ற உணர்வுபூர்வமான சம்பவங்கள் நடைபெறும்போது அவற்றை தங்கள் குரூர வணிகத்திற்காகப் பயன்படுத்தும் சமூக ஊடக புரளியாளர்கள். ‘ வியூவ்ஸ்’ வேட்டைக்காக இவர்கள் எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கின்றனர். இது ஊடகப் போட்டி மட்டுமல்ல. சாதிய, மதவாதம் அரசியல் சக்திகளின் கையாளாகவும் செயல்படுகின்றனர். இன்றைக்கு ஒரு பொய். அடுத்த நாளே அதற்கு நேர் எதிரான பொய் . எந்த கூச்சநாச்சமோ பொறுப்புணர்வோ கிடையாது. சில அரசியல் சக்திகளின் டிஜிட்டல் அடியாட்களாகவும் இதைச் செய்து வருகின்றனர்.
இந்த சமூக வலைத்தள வதந்தி பரப்புவர்கள், யூ ட்யூப் கூலிப்படையினரின் பிரதான இலக்கு திமுகவும் திமுக அரசும் திராவிடமும்தான். எந்தெந்த வழிகளில் எல்லாம் இவற்றிற்கு எதிரான பொய்களையும் அவதூறுகளையும் பரப்ப முடியுமோ பரப்புவது.

திமுக, திராவிடத்தின்மீதான சமீபத்திய இலக்கு கலைஞரின் பேனா. கலைஞரின் பேனா சின்னத்தை கலைஞரின் நினைவிடத்தின் பின்னே மெரீனா கடற்கரையில் தமிழக அரசு அமைக்கவிருக்கிறது என்ற ஒரு தகவல் பலரையும் ஆத்திரமடைய வைத்திருக்கிறது. அரசியல் கோமாளிகளில் துவங்கி சுற்றுச்சூழல் கோமாளிகள்வரை கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இதில் மனிதாபிமானக் கோமாளிகள் வேறு.

ஒரு அரசு கொள்கை- பண்பாடு சார்ந்த எந்த விஷயத்தை முன்னெடுத்தாலும் இந்தக் காசை ஏழைகளுக்கு ஏதாவது செய்யலாமே என்ற போலிக்கூக்குரல் ஆபாசமானது. இலவச கல்வி, இலவச மருத்துவம், இலவச ரேஷன் , இலவச உணவு என எவ்வளவோ சமூக நலத்திட்டங்களுக்காக பல்லாயிரம் கோடி ரூபாயில் அரசு செலவு செய்கிறது. இந்தியாவில் மிகச்சிறந்த சமூக நல அரசு தமிழகத்தில் இருக்கிறது. மக்களின் வரிப்பணத்தை எப்படி செலவு செய்யவேண்டும் என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முடிவு செய்யும். அரசு இதைச் செய்யவேண்டும் என்று சொல்ல ஒருவருக்கு உரிமை உண்டு. அதற்குப்பதில் இதைச் செய் என்பதெல்லாம் பித்துக்குளித்தனம். ஏழைகளுக்காக இவ்வளவு துடிப்பவர்கள் தங்கள் வருமானத்தில் அவர்களுக்குச் செய்தது என்ன? கார் கண்ணாடியைத் தட்டும் எளியோருக்கு ஒத்தை ரூபாய் கொடுக்க மனம் இல்லாதவர்கள்தானே ஏழைகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். ஒரு அரசுக்கு தலைமைத்துவம், பண்பாடு, வரலாறு சார்ந்த எவ்வளவோ இலக்குகள் இருக்கும். அப்படி இருந்தால்தான் அது அரசு. நினைவுச்சின்னங்களும் மக்களுக்காகத்தான். ஏனெனில் மக்கள் வெறும் சோற்றால் மட்டுமல்ல, நினைவுகளாலும் வரலாறுகளாலும்தான் வாழ்கிறார்கள்.

திராவிட எதிர்ப்புப் பிரச்சார இயந்திரத்தின்மீது பெருமளவு பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பணத்தின் பருக்கைகளுக்காக புதுப்புது காக்கைகள் வந்து சேர்ந்தவண்ணம் இருக்கின்றன.

திராவிடம் இதை வலிமையாக எதிர்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பொய்களின் கரையான்கள் இந்தத் திராவிட நிலத்தை அரித்துவிடும்.