தேசியத் திரைப்பட ஆவணக்களரியின் இயக்குநராக பிரகாஷ் மாக்டம் பொறுப்பேற்ற பிறகு, அங்கு பாதுகாக்கப்படும் படங்களில் சிறந்தவைகளைத் தெரிந்தெடுத்து அவற்றைப் புதுப்பிக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்தார். புதுப்பிப்பது மட்டுமல்லாமல் அவைகளை டிஜிட்டல் வடிவில் மாற்றி, காண்பதற்கு எளிதாக ஆக்குவது திட்டம். அப்படி உருமாற்றப்பட்ட ஒரு கருப்பு-வெள்ளை தமிழ்ப் படம், ‘குடிசை’ (1979). குறுந்தட்டு வடிவில் சில மாதங்களுக்கு முன் எனக்குக் கிடைத்தது. தமிழ் சினிமா வரலாற்றில் இது இடம் பிடிக்க வேண்டிய முக்கியமான படைப்பு என்று பார்த்த சில நிமிடங்களிலேயே தெரிந்தது.

இந்தப் படத்தை இயக்கிய ஜெயபாரதியின் வேறு சில படங்களை நான் பார்த்து அவைகளைப் பற்றி எழுதியிருக்கின்றேன். அவருடைய படைப்புகளில் நான் முதலில் பார்த்தது உச்சிவெயில்.(1990) பிறகு நண்பா… நண்பா (2002) பார்த்தேன் இரண்டுமே அருமையான படங்கள்.
ஜெயபாரதியின் எல்லா படங்களுமே ஒரு இலக்கியப் படைப்பை சார்ந்து உருவாக்கப்பட்டவை. அவர் முதலில் ஒரு சிறுகதை எழுத்தாளராகத்தான் இயங்கிக்கொண்டிருந்தார். அவரது பெற்றோர், ராமமூர்த்தி, சரோஜா இருவருமே எழுத்தாளர்கள். குடிசை கதைகூட அவரது தந்தை கணையாழி இதழில் எழுதிய ஒரு தொடர்கதைதான்..

தமிழ் சினிமாவில் நவீன யதார்த்தபாணி (Neo realist) படங்கள் வெகு அரிதாகவே தோன்றின. தமிழ்த்திரைக்கு யதார்த்த சினிமாவை அழுத்தமாக அறிமுகப்படுத்தியவர் ஜெயகாந்தன். உன்னைப்போல் ஒருவன் என்ற தனது குறுநாவலை 1964இல் படமாக்கினார்.. பின்னர் வந்த துரையின் பசி (1979) யையும் சேர்த்துக்கொள்ளலாம். யதார்த்தத்திலிருந்து வெகு தூரம் விலகியிருந்த தமிழ்த்திரைக்கு, உன்னைப்போல் ஒருவன் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் ஒரு புதுமையாகவந்தது. விளிம்பு நிலை மக்களைக் கதாமாந்தர்களாக கொண் டிருப்பதே ஒரு புதுமைதானே.

சினிமா என்றாலே அது பொழுதுபோக்கிற்காகத்தான் என்று நம் பொதுப்புத்தியில் பதிந்து விட்டதால், இந்தப் படங்கள் வந்த பொழுது மக்களிடையே எவ்வகையான வரவேற்பையும் பெறவில்லை. படவிழாக்களில் கவனிக்கப்பட்டது வேறு விஷயம்.
எழுபதுகளில் இறுதியில் பெரிய தமிழ்த்திரையுலகில் நட்சத்திரங்களின் ஆதிக்கம் மறைய ஆரம்பித்தபோது பல புதிய, இளம் இயக்குனர்கள், புதிய நடிகர்களை வைத்து தங்கள் பாணியில் படங்களை உருவாக்கினர்கள். அவர்கள் யதார்த்த பாணியை நோக்கி நகர்வது மிகவும் அழுத்தமாக வெளிப்பட்டது. தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த பிரக்ஞை, கசடதபற போன்ற சில சிறுபத்திரிகைகள் சினிமாவில் (நடிகர்கள் மீது அல்ல) ஆர்வம் காட்டி கட்டுரைகள் வெளியிட்டன. இந்தக் காலகட்டத்தில் தான் ஜெயபாரதி வருகின்றார்.

தனது சினிமா உலக அனுபவம் பற்றி ஜெயபாரதி எழுதியுள்ள இங்கே எதற்காக (2010) என்ற நூலில் அவரது முதல் படமான குடிசை உருவானது பற்றி விவரமாகப் பதிவு செய்திருக்கின்றார். ஜ்வாலா என்ற பெயரில் தன் சினிமா கம்பனியைப் பதிவு செய்து வேலையை தொடங்கினார். நன்கொடையாக சேகரித்தும், இசைக்கச்சேரி நடத்தியும் பணம் திரட்டி இந்தப் படத்தை முடித்திருக்கின்றார். அதிலும் இரண்டு கட்டங்களாக படத்தை எடுக்க வேண்டி யிருந்தது. எண்பத்தி எட்டாயிரம் ருபாய் செலவில் முழுப்படத்தையும் எடுத்து முடித்தார் ஜெயபாரதி.
இதில் பணியாற்றிய கமலா காமேஷ், டில்லி கணேஷ், தண்டாயுதபாணி யாவருமே சினிமாவிற்குப் புதிது. இயக்குனரும் அப்படித்தான். அவர் யாரிடமும் உதவியாளாராக இருந்து சினிமாவிற்குள் நுழையவில்லை.

படத்தின் ஆரம்பகாட்சியின் முதல் பிம்பவே அதற்கு நல்ல அறிமுகமாக அமைந்துள்ளது. சென்னை திரைப்பள்ளியில் சினிமா படப்பிடிப்பை முறையாகக் கற்ற ராபர்ட் – ராஜசேகர் இருவர்தான் படப்பிடிப்பு. இது அவர்களது முதல் படம். அருமையான காட்சிப்படிமங்கள். படம் முழுவதும் வெளிப்புறப் படப்பிடிப்பு தான், ஒரு குடிசையுள் சில காட்சிகள் தவிர. காமிராவின் அசைவுகளும் மெதுவாக, கண்ணுக்கு இதமாக இருக்கின்றன. அநாவசியமான நகர்வுகள் இல்லை. இந்த இரட்டையர்தான் பின்னர் பாலைவனச்சோலை (1981) படத்தை இயக்கிப் பிரபலமானவர்கள்.

குடிசை ஒரு சிறிய கிராமத்தில் விளிம்புநிலையில், வறுமையின் பிடியில் வாழ்ந்து வரும் ஒரு ஜோடியின் கதை. ஏழை குடியானவக் குடும்பம். குடிகாரக் கணவன் மனைவியின் தங்கையை காமுறுகின்றான். ஒரு டீக்கடைக்காரரும் வருகின்றார். வெகுசில கதை மாந்தர்களே இதில் தோற்றம் தருகின்றனர். கிராமிய நடனம் ஒன்று அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளது.

ஜெயபாரதி பிம்பங்களின் வலிமையை உணர்ந்து அவற்றைக் கதை நகர்த்த திறம்படப் பயன்படுத்தியிருக்கின்றார். இலக்கியப் பின்புலம் வார்த்தைகளுக்குள் அவரைக் கட்டிப்போட்டு விட வில்லை. சொற்சிக்கனத்தை கவனமாகக் கடைப்பிடிக்கின்றார். இதை அவரது எல்லா படங்களிலும் பார்க்கலாம். தேவையுள்ள தருணங்களில் மட்டும் பின்னணி இசை ஒலிக்கின்றது. மற்றபடி கதை அமைதியின் பின்னணியில் நகர்கின்றது.

படம் வெளிவந்து சபையர் தியேட்டரில் மூன்று வாரம் ஓடியது. படத்தை சென்னையில் பார்த்த மிருணாள் சென் மனந்திறந்து பாராட்டி
யிருக்கின்றார். பார்வையாளர் மனதில் ஒரு திரைப்படம் ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்த வேண்டுமானால் அதில் நம்பகத்தன்மை இருக்க வேண்டும். அந்தத் தன்மையின் அடிப்படை யதார்த்தம். படத்தின் தாக்கம் நன்றாக அமைந்தால், இயக்குனர் சொல்ல வரும் கருத்து பார்வையாளர்கள் மனதில் பதிந்து பாதிப்பை ஏற்படுத்தும். இயக்குனர் உருவாக்கும் அந்தக் கற்பனை உலகினுள் பார்வையாளர் நுழைந்து வசதியாக சஞ்சரிக்க யதார்த்த வாதம் கைகொடுக்கின்றது. திரைப்படம் ஒன்றைப் பார்க்கிறோம் என்ற உணர்வு எழாமல் இருக்க, கதாபாத்திரங்களின் உணர்வுகளுடன் பார்வையாளர் ஒன்றிப்போவது நல்ல சினிமா அனுபவமாக அமைகின்றது, பாடல்கள் இத்தகைய அனுபவத்திற்கு இடையூறாக வரும் என்பதால் பல இந்திய இயக்குனர்கள் பாடல்களைத் தவிர்க்கிறார்கள் ஜெயபாரதியும் அதையேதான் தன் படங்களிலும் கடைப்பிடிக்கின்றார்.

குடிசை, ஏழைபடும் பாடு (1951)போன்ற படங்கள் புனேயில் இருப்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் தமிழ் சினிமாவின் பல அரிய படைப்புகளை இப்போது பார்ப்பதே அரிது. கே.ராம்னாத்தின் மனிதன் (1954), டி.வி. சந்திரனின் ஹேமாவின் காதலர்கள் (1985) போன்ற படங்களும் இப்பட்டியலில் அடங்கும்.

theodorebaskaran@gmail.com