ஒரு பழைய பெண்கள் பள்ளியில் நாங்கள் முகாமிட வேண்டியிருந்தது, ஆக வீரர்களுள் சிலர் இரவைக் கழிக்க ஆகச்சிறந்த இடம் பள்ளியின் வான்வழித்-தாக்குதலுக்கானப் புகலிடமே எனத் தீர்மானித்தார்கள். டேனியல் எனும் கிறிஸ்துவனோ தனது கம்பளியையும் மற்ற படுக்கையையும் எடுத்துக் கொண்டு திறந்தவெளி முற்றத்துக்குத் தலைப்பட்டான்.

“உண்மையைச் சொன்னால், இந்தச் சூயிங்கம் கிறிஸ்துவன் ஒரு கிறுக்கன்,” எனக் குறிப்பிட்டான் வீரர்களில் ஒருவன், பனைமரம் போன்ற ஓர் உயரமான மனிதன், அவனுடைய வாய் முழுக்க வறண்ட பாணால் நிரம்பியிருந்தது.

“அனேகமாக நம் இஸ்லாமியர்களோடு உறங்க அவன் விரும்பாதிருக்கலாம்,” மற்றொரு வீரன் கருத்துரைத்தான்.

அவ்விளைஞர்கள் குரங்குகள். டேனியலைப் பற்றிய உண்மை அவர்களுக்குத் தெரியாது. வகுப்பறைகளில் பெண்கள் அமர்ந்த மேசைகளைத் தேடிப்பிடித்து சுயமைதுனம் செய்வதில் அவர்கள் மும்முரமாயிருந்தனர். ஒரேயொரு ஏவுகணை போதும் நொடியில் அனைவரும் கருகிப்போன ஆணுறுப்புகளாகி விடுவார்கள். இதைப்போன்ற அபத்தமான போர்களில், டேனியலின் கொடை என்பது உயிரைக் காக்கவல்லது. குவைத் போரின்போது நாங்களிருவரும் ஒன்றாயிருந்தோம், அவனது அற்புத ஆற்றல்கள் மட்டும் இல்லாதிருந்தால் நாங்கள் பிழைத்திருக்கவே மாட்டோம். மனச்சோர்வைத் தருகிற அவனுடைய இயல்பை மீறியும், டேனியலைச் சாதாரணமான ரத்தமும் சதையும் நிரம்பிய மனிதனாக எண்ணவியலாது. அவன் ஓர் இயற்கையின் ஆற்றல்.

அவனுக்கு நெருக்கமாக எனது கம்பளியை விரித்து மல்லாந்து படுத்தேன், அவனைப் போலவே, விண்வெளியை வெறித்தபடி.

“உறங்கிப்போ, அலி, எனது நண்பா. உறங்கிப்போ. இன்றிரவு எந்த அறிகுறியும் தெரியவில்லை. உறங்கிப்போ,” அவன் என்னிடம் சொன்னான், பிறகு உடனே குறட்டை விடத்தொடங்கினான்.

டேனியல் எப்போதும் சூயிங்கம்மை மென்று கொண்டிருப்பான். வீரர்கள் அவனுக்குச் சூயிங்கம் கிறிஸ்துவென ஞானஸ்நானம் செய்திருந்தனர். டேனியலின் மெல்லும் குணம் ஒருவகையில் ஆற்றலுக்கான மூலம் என நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன், அவனது மூளைக்குள்ளிருந்த திரையின் பேட்டரியை அது ரீசார்ஜ் செய்தது. ராடார் தொகுதியில் பணிபுரிவதென்பதே அவனது வாழ்நாள் கனவு. உயர்நிலைப்பள்ளி முடித்தபிறகு வான்படையில் சேர அவன் விருப்பம் கொண்டிருந்தான், ஆனால் அவனுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது, அனேகமாக ஏனென்றால் எழுபதுகளில் அவன் தந்தை தீவிர கம்யூனிஸ்டாக இருந்தவர். பெண்களையோ அல்லது கால்பந்தையோ மற்ற ஆண்கள் நேசித்ததுபோல ராடாரை அவன் நேசித்தான். ராடார் அமைப்புகளின் படங்களைச் சேகரித்ததோடு அலைவரிசைகளையும் குறிகைகளையும் பற்றி பேசியவாறே இருப்பான், யாரோ பெண்தோழியோடு வைக்கோற்போருக்குள் அவன் கட்டிப்புரண்டான் என்பதைப்போல. கடந்த போரின்போது, அவன் சொன்னது எனக்கு நினைவுள்ளது, “அலி, மனிதர்களே ஆகச்சிறந்த ராடார் ரிசீவர்கள், மற்ற விலங்குகளுடன் ஒப்பிட. உன்னுடைய ஆன்மாவை உடலை விட்டு வெளியேற்றுவதையும் பிறகு மீண்டும் அதை உள்ளழைத்து வருவதையும் மட்டும் வெறுமனே நீ பயிற்சி செய்ய வேண்டும், மூச்சை வெளியேற்றி உள்ளிழுப்பதைப் போல.” ராடார் சமன்பாட்டைத் தனது வலதுகரத்தில் அவன் பச்சை குத்தியிருந்தான்.

Pr=PtGtArF4(4)2Rt2Rr2

வான்படையில் சேரும் டேனியலின் நம்பிக்கைகள் நொறுங்கியபிறகு, ராணுவ மருத்துவக்குழுவில் சேர அவன் விருப்பம் தெரிவித்தான். ஆனால் ராடாரைப் பற்றிய தனது ஆர்வத்தை அவன் கைவிடவில்லை, மேலும் அவனைப் பற்றி அறிந்த எவருமே இவ்வெறியைக் கண்டு ஆச்சரியம் கொள்ளமாட்டார்கள், ஏனெனில் அந்தச் சூயிங்கம் கிறிஸ்துதான் அவனளவில் உலகின் மிகவும் விசித்திரமான ராடாராக இருந்தான். குவைத்தில் நிகழ்ந்த போரின் பயங்கர இரவுகள் இன்னும் எனக்கு நினைவுள்ளன. வீரர்கள், வாத்துக் குஞ்சுகள் போல அச்சமுற்றவர்களாக, அவன் எங்கு சென்றாலும் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள். கூட்டமைப்பின் விமானங்கள் எங்களுடைய மறைகுழிகளின் மீது வெடிகுண்டுகளை வீசிப்போகும், எங்களால் ஒருமுறைகூடத் திருப்பிச் சுடமுடியாது. ஏதோவொரு அறுதியான, அதியற்புத ஆற்றலோடு நாங்கள் போரிடுவதாக உணர்வோம். எங்களால் முடிந்ததெல்லாம் இன்னும் இன்னும் மறைகுழிகளைத் தோண்டி எலிகளைப் போல ஒவ்வொரு இடமாக ஊர்ந்து செல்வது மாத்திரமே. இறுதியில் நாங்கள் பாலைவனத்துக்கு அருகாமையில் முகாமிட்டிருந்தோம். எங்களிடம் மிச்சமிருந்ததெல்லாம் கடவுள் குறித்த நம்பிக்கையும் டேனியல் எனும் கிறிஸ்துவனின் ஆற்றல்களும் மட்டுமே. ஓரிரவில் மற்ற வீரர்களோடு சேர்ந்து நாங்கள் மறைகுழிக்குள் உணவருந்திக் கொண்டிருந்தவேளையில் வயிறு வலிப்பதாக டேனியல் புகார் வாசித்தான். வீரர்கள் உண்ணுவதை நிறுத்தினார்கள், அவர்களின் ஆயுதங்களைக் கையில் எடுத்துக் கொண்டு, எழுந்து நிற்கத் தயாரானார்கள், அனைவரும் டேனியலின் வாயைப் பார்த்தவாறே.

“பெரிய நீர்த்தொட்டியின் நிழலில் நான் படுத்துக்கொள்ள விரும்புகிறேன்.” கிறிஸ்து இறுதியில் சொன்னான்.

மறைகுழியை நீங்கிக் கிளம்பியவனோடு வீரர்களும் இணைந்து கொண்டனர், அவனேதோ ஏவுகணைகளுக்கு எதிரான கவசமென்பதைப்போல அவனுக்கு நெருக்கமாயிருக்க முண்டியடித்தபடி. நிழலில் அவர்கள் அவனைச் சுற்றி அமர்ந்தார்கள். சரியாக முப்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு மூன்று குண்டுகள் மறைகுழியின் மீது விழுந்தன. அந்த ஒருமுறை மட்டுமல்ல. கிறிஸ்துவின் முன்னுணர்வுகள் பல வீரர்களைக் காப்பாற்றின. டேனியலோடு இருக்கையில் போர் ஒரு கார்ட்டூன் களமாக மாறியது. கண்சிமிட்டுவதற்குள், யதார்த்தம் அதன் ஒருங்கிணைப்பை இழந்திடும். அது சின்னாபின்னமாகிச் சிதற, மாயங்களுக்குள் நீங்கள் சிக்கிக்கொள்வீர்கள். ஓர் எடுத்துக்காட்டுக்கு, தலைமையகக் கட்டிடத்தின் மீது ஓர் அமெரிக்க உலங்கூர்தி மோதவிருப்பதை டேனியலினுடைய தொடையிடுக்கின் தொடர் அரிப்புகள் முன்னறிவித்ததை நீங்கள் என்னவென்று புரிந்து கொள்வீர்கள்? டேனியலிடமிருந்து அடுத்தடுத்து வந்த மூன்று தும்மல்களால் படுபயங்கர ராக்கெட் தாக்குதலை முன்னறிவிக்க முடியுமென்று சொன்னால் நம்பமுடிகிறதா? கடலில் இருந்து அவற்றை எங்கள் மீது அவர்கள் எய்தார்கள். வீரர்களாகிய நாங்கள் செம்மறியாடுகள் போல, காமிக்ஸ் புத்தகங்களின் போர்களில் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம்.

கிறிஸ்து பற்றிய அறிக்கைகளை உச்ச-அதிகாரத்திடம் சமர்ப்பித்திருப்பதான வதந்திகளை நான் கேள்விப்பட்டேன். ஆனால் அந்நாட்களின் குழப்பங்களும் எங்களுடைய ராணுவத்தின் தோல்வியும். பூச்சிகளைப் போல அவர்கள் நசுக்கப்பட்டார்கள். அதிகாரத்திலிருந்தவர்களை அவற்றின்மீது கவனம் செலுத்தவிடவில்லை. மந்திரவாதிகள், மறையியலாளர்கள் மற்றும் அற்புத சக்தி படைத்த மனிதர்களின் மீது ஜனாதிபதிக்கு இருந்த ஆர்வங்கள் பற்றியும் பல கதைகள் உலவின. எண்பதுகளின்போது எதிர்பாராதவகையில் ஆன்மிக உளவியல் குறித்த பல புத்தகங்கள் அவருடைய யோசனையின் பேரில்தான் ஈராக்கில் மொழிபெயர்க்கப்பட்டதாக அவர்கள் சொன்னார்கள், ஏனென்றால் வளர்ச்சியுற்ற நாடுகள் மனோவசிய வழிமுறைகளை உருவாக்கி அவற்றை ஒற்றாடலுக்குப் பயன்படுத்துவதாக அவர் கேள்விப்பட்டிருந்தார். அறிவியலும் மறையியலும் எப்படிப்பார்த்தாலும் ஒன்றுதான் என ஜனாதிபதி எண்ணினார்; ஒரேபோன்ற ரகசியங்களை வெளிப்படுத்த வெறுமனே அவை வெவ்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தின.

தனது முன்னுணரும் ஆற்றல்களைப் பற்றி கிறிஸ்து பெருமை பீற்றவில்லை, அவற்றை அபூர்வமானதாகவும் கருதவில்லை. எதிர்காலத்தைக் கணிக்கும் மனிதகுலத்திறன் குறித்த கதைகளை அவன் வரலாற்றிலிருந்து சொல்வான். தனக்கிருந்த ஆற்றலை எண்ணி மகிழ்ச்சியடைவதை அவனது உளச்சோர்வு டேனியலுக்குச் சாத்தியமற்றதாக ஆக்குகிறதென்னும் முடிவுக்கு நான் வந்திருந்தேன். ராடாரில் அவனுக்கிருந்த ஆர்வமும்கூட அவனுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. மகிழ்ச்சி குறித்த அவனுடைய எண்ணங்கள் மர்மமாயிருந்தன. ஏதோவொரு ஆழ்மனத் தெளிவின்மையைக் கண்டு அவன் அஞ்சினானென்பதை அவனிடமிருந்து நான் புரிந்துகொண்டேன். இந்த மர்மமான உலகில் நாம் வெறுமனே எத்தனை செயலற்றவர்களாகவும் அற்பமானவர்களாகவும் இருக்கிறோம் என்பதற்கான மற்றொரு சமிக்ஞையே தனது ஆற்றல் என அவன் எண்ணினான். ஒரே நேரத்தில் கேலியானதாகவும் அச்சமூட்டுவதாகவும் குணங்களைக் கொண்ட ஓர் ஈராக்கிய எழுத்தாளரின் கதையைத் தனது இளவயதில் வாசித்ததாக அவன் என்னிடம் சொன்னான். அந்தக்கதையின் நாயகன் காலமென்னும் கற்பனையான நதியில் நிகழும் பயங்கரச் சண்டைக்குப் பிறகு ஒரு சுறாமீனால் விழுங்கப்படுவான். அங்கே இருட்டுக்குள் சிறைபிடிக்கப்பட்டவனாக அமர்ந்து அவன் தனிமையில் யோசிப்பான், “என் கண்முன்னால் உலகம் நிலைகுலைகிறது என்கிற எனது நிலையுணர்வையும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் எவ்வாறு என்னால் ஒருமைப்படுத்திப் பார்க்கவியலும்?” ‘‘வாழ்நாள் முழுக்க என்னை அழுத்திக் கொண்டிருக்கும் கேள்வி அது. பிளந்திருக்கும் காயத்தைப்போல எப்போதும் அது என்னை விழிப்போடு வைத்திருக்கிறது” என்றான் கிறிஸ்து.

மறுநாள் காலை நாங்கள் விழித்தபோது அமெரிக்கப்படைகள் பாக்தாத்தின் எல்லைப்பகுதிகளை வந்தடைந்திருந்தன. சில மணி நேரங்களுக்குப் பிறகு சர்வாதிகாரியின் சிலையை அவர்கள் இடித்துத் தள்ளினார்கள். நம்பவியலாத ஒரு மீயதார்த்த அதிர்ச்சி அது. குடிமக்களின் ஆடைகளை அணிந்து நாங்கள் எங்களுடைய குடும்பங்களுக்குத் திரும்பிச் சென்றோம். வெறுமனே அதுவும் மற்றொரு பார்வையற்றவர்களின் போராகத்தான் இருந்தது, எங்களுடைய படையணியைச் சேர்ந்த யாரும் ஒருமுறைகூடச் சுடவில்லை.

அவையாவும் முடிந்த பிறகு, டேனியலை நான் பலமுறை சந்தித்தேன். தனது வயதுமுதிர்ந்த அம்மாவோடு வாழ அவன் திரும்பிப் போயிருந்தான். நாட்டில் பெருங்குழப்பங்கள் தலைதூக்கியபோது, பாக்தாத்தில் இருந்த அவனுடைய வீட்டுக்குச் சென்று அவனைப் பார்த்தேன். ராணுவத்துக்குத் திரும்பிப்போவது குறித்து அவனிடம் பேச நினைத்தேன். தானும் சர்வாதிகாரியை வெறுத்ததாக என்னிடம் அவன் சொன்னான், ஆனாலும்கூட ஆக்கிரமிப்பாளர்களின் ஆதரவு ராணுவத்துக்கு அவன் பங்களிக்க மாட்டான் என்பதையும். அதன் பிற்பாடு அவனை மீண்டும் நான் சந்திக்கவில்லை. என்னைப்பொருத்தமட்டில் நான் ராணுவத்துக்குத் திரும்பினேன், டேனியலோ தன் தாயைப் பார்த்துக் கொள்ளத் திரும்பிச் சென்றான். அவனுக்கு இரண்டு சகோதரிகள் இருந்தனர், பல வருடங்களுக்கு முன்பே கனடாவுக்கு அவர்கள் குடிபெயர்ந்திருந்தனர், அவனது மற்ற உறவினர்களும் ஒருவர் பின் ஒருவராக நாட்டை விட்டு வெளியேறினர், போர்களாலும் மதம்-சார்ந்த பைத்தியக்
காரத்தனங்களாலும் துரத்தப்பட்டு. அவனுடைய பெரிய குடும்பத்தில், அவன் அம்மா மட்டுமே மீதமிருந்தார். தனது நேரத்தில் பெரும்பான்மையை டேனியல் வீட்டில்தான் கழித்தானென்பதை நான் தெரிந்து கொண்டேன், புதினங்களையும் கலைக்களஞ்சியங்களையும் வாசித்தபடி, செய்திகளைத் தொடர்ந்தவாறும் தன் தாயைக் கவனித்துக் கொண்டும், தன்னுடைய செவித்திறன், பார்வையோடு நினைவுகளையும் அவள் இழந்திருந்தாள். முதுமை அவளை உலகத்திடமிருந்து பிரித்திருந்தது. அம்முதிய பெண்மணி மலமும் சிறுநீரும் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த முடியாதவளாக இருந்தாள். ஒவ்வொரு சில மணி நேரங்களிலும் கிறிஸ்து அவளது டயாபர்களை மாற்றுவான். அவன் தாயின் மரணம் அந்த இடத்தோடு அவனைக் கட்டிப்போட்டிருந்த கயிற்றை அறுத்தெறியக்கூடும். குடிபெயர்ந்து போகவும் அவன் ஏதும் திட்டமிடவில்லை. ஒரு நீண்ட கடிதத்தில், நாட்டை விட்டு வெளியேறும்படி அவனது மூத்த சகோதரி அவனுக்கு வலியுறுத்தினாள், ஆனால் கிறிஸ்துவும் அவன் அம்மா போலவே தீர்க்கமாயிருந்தான். சாத்தானின் தூண்டுதலை அவர்களிருவரும் நிராகரித்தார்கள். தொலைந்த அவர்களின் சொர்க்கத்தை நீங்கிப்போவதை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை கூட்டுப்பிரார்த்தனைக்குப் பிறகு, அதன் கெபாப்களுக்காகப் புகழ்பெற்ற உள்ளூர் உணவகத்துக்கு கிறிஸ்து தன் அம்மாவை அழைத்துப்போனான். அந்த இடத்தின் தூய்மைக்காகவும் குழந்தைகளுக்கெனத் தனித்த இருக்கைகளை ஒதுக்கிய வழிமுறைக்காகவும் அதை அவன் விரும்பினான். உணவகம் நிறையவே மாறியிருந்தது. கடைசியாகத் தான் அங்கு வந்துபோன சமயத்தை அவனால் நினைவுகூர முடியவில்லை. மூலையில் காலியான இருக்கையைத் தேர்ந்தெடுத்து, தன் அம்மா அங்கே உட்காருவதற்கு உதவினான் கிறிஸ்து. பரிசாரகனின் அருமையான நகைச்சுவை அவனுக்கு உற்சாகமூட்டியது. அந்த மனிதன் பதார்த்தங்களின் பெயர்களையும் கசாப்புக்குப் பயன்படும் அன்றாடப் பொருட்களின் பெயர்களையும் மாற்றி மாற்றிச் சொன்னான். வாடிக்கையாளர்கள் வெடித்துச் சிரித்ததோடு அவனை ரசித்தார்கள். இதுபோன்ற ஆர்டர்களை அவன் அறிவித்தான்: “வெடித்துச் சிதற வைக்கும், மூளையைக் கலங்கடிக்கும், குடலைப்பிடுங்கியெறியும் ஒரு கெபாப். ஒரு பிரிவினைவாத ஸ்டூ. இரண்டு எரிபொருள் அரிசியுணவும் பீன்ஸ்களும்.”

காரமாக மிளகுப்பொடி தூவிய ஒன்றரை கெபாப்களும், ஒரு கோப்பை அய்ரனும்2 உடன் குளிர்ந்த பழரசமும் கொண்டு வரும்படி கிறிஸ்து கேட்டுக் கொண்டான். அவனுக்குத் தேவையான உணவோடு திரும்பிவந்த பரிசாரகன் ஆர்வக்கோளாறான மனிதர்கள் பற்றிய நகைச்சுவை ஒன்றைக் கூறினான். கிறிஸ்து இணக்கமாகப் புன்னகைத்தான். தன் அம்மாவின் விரல்களை அவன் மென்மையாகப் பற்றித் தூக்கி, சூடான கெபாப்களையும் வறுத்த உருளைகளையும் அவள் உணரும் வண்ணம் அவற்றின் மீது வைத்தான். பிறகு அவ்விரல்களை மீண்டும் மேசையின் முனையில் அவற்றுக்கான இடத்தில் கொண்டு வைத்தான். சுவைமிகுந்த உணவில் கொஞ்சமாகப் பிட்டு அவளது வாய்க்குள் அழுத்தினான், அதீதமான, சுயநலமற்ற அன்போடு அவளைப் பார்த்துப் புன்னகைத்தபடி.

ஓர் இளைஞன் கிறிஸ்துவின் மேசையில் தான் அமரலாமா எனக் கேட்டான். பருத்த உடலோடும் முகத்தில் இறுக்கமான உணர்வோடும், அனேகமாக அவனுக்கு இருபது வயதிருக்கலாம். சற்றதிக வெங்காயத்தோடு ஒரு கெபாப்பைக் கொண்டுவரும்படி அவன் பணித்தான். உண்மையில் அவன் சற்று அழகாகத்தான் இருந்தானென்றாலும் இடைவிடாமல் தனது கழுத்தைச் சொறிந்தவாறே இருந்தான், ஏதோ சிரங்கு பிடித்தவனைப்போல. அவனது கண்கள் ஒவ்வொரு மேசையாகச் சுற்றிச் சுற்றி வந்தன. டேனியல் சாலட் இருந்த தட்டைத் தன் அம்மாவின் விரல்களுக்கருகே நகர்த்தி வைத்து அதிலிருந்த காய்கறிகளை அவள் உணரச் செய்தான். அவளுக்கு இன்னொரு வாய் ஊட்ட தயாராகியிருந்தான். அந்த இளைஞனோ திருட்டுத்தனமாக அவர்களைப் பார்த்தவாறிருந்தான். அவன் வினோதமானவனாகவும் தென்பட்டான். ஒரு துண்டு இறைச்சியை மென்றவாறே அதை விழுங்க அவன் முயற்சித்தான், அவனுடைய அழகிய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தவாறிருந்தது. டேனியல் அவனைப் பற்றிய எச்சரிக்கையோடு இருந்தான். அவன் முன்னால் குனிந்து தன்னால் ஏதும் உதவ முடியுமாவென்று கேட்டான். கேள்வியை அவன் மீண்டும் கேட்டான், ஆனால் அவ்விளைஞனின் கண்கள் தட்டின் மீதே நிலைத்திருக்க டேனியல் சொன்னதை அவன் கேட்டதாகத் தெரியவில்லை. அவன் மெல்லுவதைத் தொடர்ந்தான், கண்ணீர் தொடர்ந்து வழிந்தவாறி
ருந்தது. அவன் கைக்குட்டையை வெளியே எடுத்தான், தனது கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, மூக்கைச்  சுத்தம் செய்தான். உணவகத்தைச் சுற்றி நோட்டமிட்டான், பிறகு டேனியலின் கண்களுக்குள் வெறித்துப் பார்த்தான். வேறொரு முகத்தை வெளிப்படுத்தும்வகையில் அவனுடைய குணநலன்கள் மாறின, ஏதோவொரு முகமூடியைக் கழற்றி எறிந்தாற்போல. தனது மேலங்கியின் விளிம்பை இறுகப்பற்றி, தனது மார்பை வெளிக்காட்டும் ஒருவனைப் போல, அதை விலக்கித் திறந்தான்.

“இதுவொரு வெடிகுண்டுப்பட்டை. யாரும் ஒருவார்த்தை பேசினாலும் என்னை நானே வெடிக்க வைப்பேன்” அவ்விளைஞன் சொன்னான், பயமுறுத்தும் ஓரப்பார்வையால் அந்த முதிய பெண்மணியைப் பார்த்தபடி.

நட்புறவுகளின் துப்பாக்கிச்சூட்டில் நான் கொல்லப்பட்டேன், நானேதான். ஊடுருவலுக்குப் பிறகு அமெரிக்கப்படைகளோடு சேர்ந்து நாங்கள் கூட்டுக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தோம். கிராமத்தின் ஒரு வீட்டிலிருந்து யாரோ எங்களை நோக்கிச் சுட்டார்கள். பைத்தியம்பிடித்தாற்போல அமெரிக்கர்கள் எதிர்வினை ஆற்றினார்கள், நாங்கள்தான் அவர்களைச் சுடுகிறோம் என்று நினைத்தார்கள் போல. நான் மூன்று முறை தலையில் சுடப்பட்டேன். அடுத்த உலகில் நான் கிறிஸ்துவைச் சந்தித்தேன், எங்களிருவருக்கும் அதீத மகிழ்ச்சி. கெபாப் உணவகத்தில் எவ்வித அர்த்தமுமின்றி அவ்விளைஞனிடம் தான் சிக்கிக்கொண்டதைப் பற்றி அவன் என்னிடம் சொன்னான். அச்சம் மட்டுமே அவனை முடமாக்கியிருக்கவில்லை, முக்திநிலை பற்றிய ஏதோவொரு மர்மமான விருப்பமும் அவனுக்கிருந்தது. சில கணங்களுக்கு அவன் அந்த இளைஞனின் கண்களுக்குள் உற்றுப்பார்த்தான். அவன் கிறிஸ்துவை நோக்கி குனிந்தான், எழுந்து தன்னோடு கழிவறைக்கு வரும்படி அவனிடம் சொன்னான். முதலில் அவன் தனது இடத்தை விட்டு நகரவில்லை, ஏதோ கல்லாக மாறியதைப்போல. பிறகு தன் அம்மாவின் நெற்றியில் முத்தமிட்டு அவன் எழுந்து நின்றான்.

கழிவறைகளுக்குப் போகும் பாதையில் அவ்விளைஞன் முன்னால் சென்றான். கதவை மூடிவிட்டு வெடிகுண்டுப் பட்டையின் பொத்தானில் தன்னுடைய விரல்நுனியை வைத்தான். தனது மறுகையால் இடைவாரிலிருந்து அவன் ஒரு துப்பாக்கியை உருவி அதை டேனியலின் தலைக்குக் குறிவைத்தான். இந்தப் புள்ளியில் அவ்விளைஞன் உண்மையில் கிறிஸ்துவை இறுக அணைத்ததைப் போலிருந்தான், கைகளிரண்டும் அவனைச் சூழ்ந்திருக்க, ஏனென்றால் அந்த இடம் மிகவும் சிறியதாக இருந்தது. தனக்கு என்ன வேண்டுமென்பதை அவன் எடுத்துரைத்தான்: அவனுடைய இடத்தில் வெடிகுண்டுப்பட்டையை டேனியல் அணிந்துகொள்ள வேண்டும், அதற்குப் பதிலாக முதியவளின் உயிரை அவன் காப்பாற்றுவான்.

அதீத மிரட்சியின் பிடியிலிருந்த அவ்விளைஞனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. உணவகத்துக்கு வெளியே இருந்து யாரோ அந்தக் குண்டுவெடிப்பை படம்பிடிப்பதாக அவன் சொன்னான், தன்னைத்தானே அவன் வெடிக்கச் செய்யாவிட்டால் அவர்கள் அவனைக் கொன்றுவிடுவார்கள் எனவும். பதிலுக்கு டேனியல் ஏதும் சொல்லவில்லை. அவர்களுக்கு வியர்க்கத் தொடங்கியது. வாடிக்கையாளர்களில் ஒருவர் கழிவறைக்கதவைத் தள்ளித் திறக்க முயன்றார். இளைஞன் தொண்டையைச் செருமிக்கொண்டான். பிறகு, உணவகத்தை விட்டு முதிய பெண்மணியைப் பத்திரமாகத் தான் அழைத்துப் போவதாக மீண்டும் கிறிஸ்துவிடம் உறுதிகூறினான், ஆனால் டேனியல் தன்னைத்தானே வெடிக்க வைக்காவிட்டால் அவளை அவன் கொல்வான். அரை நிமிட மௌனம் கடந்து சென்றது, பிறகு தன்னுடைய தலையசைப்பால் அவன் அதற்கு ஒத்துக்கொண்டு இளைஞனின் கண்களுக்குள் வெறுமனே வெறித்துப் பார்க்க ஆரம்பித்தான். பட்டையைக் கழற்றி அதை அவனுடைய இடுப்பில் சுற்றிக் கொள்ளும்படி இளைஞன் சொன்னான். அவ்வறை மிகவும் குறுகலான ஒன்றென்பதால் அந்த வழிமுறை கடினமானதாக இருந்தது. இளைஞன் வெகு கவனமாகப் பின்வாங்கிச் சென்றான், வெடிகுண்டுப்பட்டை அணிந்த கிறிஸ்துவை மட்டும் கழிவறைக்குள் விட்டு. பிறகு உணவகத்தின் மூலையில் அமர்ந்திருந்த முதிய பெண்மணியை நோக்கி அவன் விரைந்து சென்றான். அவளுடைய தோளில் மெல்லத் தட்டி அவளது கைகளை அவன் பற்றிக் கொண்டான். அவள் எழுந்து கொண்டு, ஒரு குழந்தையைப் போல அவனைப் பின்தொடர்ந்து போனாள். உணவகம் ஆட்களால் நிரம்பத் தொடங்கியிருக்க, கூச்சல்களின் அளவும் அதிகரித்தவாறிருந்தது, மக்களின் சிரிப்பாலும் கத்திச்சண்டையைப்போல உரக்க ஒலியெழுப்பிய முட்கரண்டிகளாலும்.

கிறிஸ்து முழங்காலிட்டு அமர்ந்தான். அவனுக்குச் சுவாசிக்க சிரமமாயிருக்க, தனது காற்சட்டையில் அவன் சிறுநீர் கழித்திருந்தான். கழிவறையின் கதவைத் திறந்து உணவகத்துக்குள் ஊர்ந்து சென்றான். யாரோ அவனைக் கதவருகே பார்த்துவிட்டு அலறியபடித் திரும்பி ஓடினார்கள், “மனித வெடிகுண்டு, மனித வெடிகுண்டு!”

தப்பிப்பதற்காக ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஒருவரையொருவர் மிதித்துத்தள்ளி ஓடியபோது, அந்தக் குழப்பத்துக்கு மத்தியிலும், தன் அம்மாவின் இருக்கை காலியாக இருப்பதை கிறிஸ்து பார்த்தான், பிறகு அவன் பொத்தானை அழுத்தினான்.

குறிப்புகள்:
1. ஒரு பேட்டியில் இங்க்மர் பெர்க்மேன் கேட்ட புகழ்பெற்ற கேள்வி.
2. அய்ரன் (Ayran). குளிர்ந்த நீரும் தயிரும் சில சமயங்களில் உப்பும் கலந்து செய்யப்படும் குளிர்பானம்.

karthickpandian@gmail.com

ஹஸன் ப்ளாஸிம் (1973)
ஈராக்கைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞரும் திரைப்பட இயக்குனருமான ஹசன் ப்ளாஸிம் அரசியல் காரணங்களால் புலம்பெயர்ந்து தற்போது ஃபின்லாந்தின் ஹெல்சிங்கியில் வசிக்கிறார். சதாம் ஹுசைனின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட குர்துக்களின் கட்டாய இடப்பெயர்வு பற்றிய The Wounded Camera எனும் திரைப்படம் உட்பட ப்ளாஸிமின் பல திரைப்படங்கள் அரசு அடக்குமுறைக்கு எதிரானவையாக இருந்த சூழலில் அவர் நாட்டை விட்டு வெளியேறும்படி ஆனது. 2010-ஆம் ஆண்டுக்கான Independent Foreign Fiction Prize-க்கான நீள்பட்டியலில் ப்ளாசிமின் முதல் சிறுகதைத் தொகுப்பான The Madman of Freedom Square இடம்பிடித்தது. அவரது இரண்டாம் தொகுப்பான The Iraqi Christ 2013-இல் வெளியானது. அவருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு The Corpse Exhibition பென்குயின் பதிப்பகத்தால் 2014-இல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் The Iraqi Christ தொகுப்புக்காக Independent Foreign Fiction Prize -ஐ வென்ற முதல் அராபிய எழுத்தாளரானார் ஹஸன் ப்ளாஸிம். இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் ப்ளாசிமின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. Allah99 என்கிற அவருடைய முதல் நாவல் 2020-இல் வெளியாகியுள்ளது.