பதினாறு வயதுடைய சிறுமியை அவளது தாயே கட்டாயப்படுத்தி, பல முறை கருமுட்டை தானத்திற்கு உட்படுத்திய சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிச்சத்திற்கு வந்தது. குழந்தைப் பருவத்தையே இன்னும் முழுமையாகத் தாண்டாத ஒரு சிறுமியிடமிருந்து கருமுட்டையை எடுத்துப் பணம் ஈட்டலாம் என்ற எண்ணமே இரக்கமற்ற மன நிலையின் வெளிப்பாடாகத்தான் இருக்க முடியும். கொஞ்சமும் மனிதத்தன்மை இல்லாத செயலாகத்தான் அதைப் பார்க்க முடியும். அதுவும் அதை அவளது தாயே செய்வதை நாம் எப்படி புரிந்து கொள்வது? அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், இது முதல் சம்பவம் அல்ல, இது போன்ற ஏராளமான சம்பவங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நடந்து வருவதைத்தான் நாம் இந்தச் சம்பவத்தில் இருந்து உணர முடியும். சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த மனைவியை பல முறை கருமுட்டை தானத்திற்குக் கட்டாயப்படுத்திய கணவனைப் பற்றிய செய்தி ஒன்றையும் நாம் படித்திருப்போம்.

கருமுட்டை தானம் என்பது கடந்த சில வருடங்களில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அதையொட்டிய சட்ட விரோதச் செயல்களும், மோசடிகளுமே கூட இந்தக் காலங்களில் பெருமளவு கூடியிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்? மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட தனியார் செயற்கை கருத்தரிப்பு மையம் அரசாங்கத்தால் மூடப்பட்டு விட்டது. அது மட்டுமே தீர்வா? உண்மையில் செயற்கை கருத்தரித்தல் துறையில் என்னதான் நடக்கிறது?

உலக அளவில், செயற்கைக் கருத்தரித்தலுக்கான சந்தையில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. பெரும்பாலான அயல் நாடுகளைச் சார்ந்த குழந்தையில்லாத தம்பதிகளுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு இந்தியாதான் முதல் தேர்வு. இறுக்கமான விதிமுறைகள் இல்லாததும், மிக சுலபமாக வாடகைத் தாய்கள் கிடைக்கும் சூழல் இங்கிருப்பதும் முக்கியமான காரணம். உலகம் முழுக்க ஒரு வருடத்தில் பத்து லட்சம் செயற்கை கருத்தரித்தல்கள் நடக்கின்றன அதில் 2.5 லட்சம் அதாவது 25 சதவீதம் இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கான செயற்கை கருத்தரித்தல் மையங்கள் இந்தியாவில் திறக்கப்பட்டிருக்கின்றன, சென்னை போன்ற பெருநகரங்கள் மட்டுமில்லாமல் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் கூட இப்படிப்பட்ட மையங்கள் சமீப காலங்களில் முளைத்திருக்கின்றன. நாம் பார்க்கும், கேட்கும் விளம்பரங்களில் மூன்றில் ஒன்று செயற்கை கருத்தரித்தல் மையம் சார்ந்ததாக இருக்கிறது. அந்த அளவிற்கு இந்தத் துறை சமீப காலங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

குழந்தையில்லை என்ற ஒரு பெண்ணின் உணர்வு சார்ந்த பிரச்சினையை ஒட்டி விரிவடைந்திருக்கும் இந்தச் சந்தை, அந்தப் பிரச்சினையை எத்தனை கவனத்துடன் கையாள்கிறது? தங்களது குழந்தையை உருவாக்கித்தரும் பொறுப்பை மருத்துவமனையை நம்பி தம்பதிகள் கொடுக்கிறார்கள், அதை எத்தனை பொறுப்புணர்வோடும், அறத்தோடும் இந்த மருத்துவமனைகள் கையாள்கின்றன? குறைந்தபட்சம் இதையெல்லாம் கண்காணிப்பதற்கு முறையான நெறிமுறைகளாவது இருக்கின்றதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘நிச்சயம் இல்லை’ என்பதுதான் பதிலாக இருக்கிறது.

பெட்டிக்கடைகள் போல எல்லா இடங்களிலும் புதிதாக உருவாகி வரும் இந்த ஏராளமான செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கென்று இன்று வரை எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை, கண்காணிப்பும் இல்லை என்பதுதான் கொடுமையானது. சட்ட விரோதச்செயல்களும், மோசடிகளும் நடப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கும் இந்தத் துறை ஏன் இன்னும் முறைப்படுத்தப்படாமலேயே இருக்கிறது என்பதுதான் ஆச்சர்யமானது.

பல வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்திருக்கும் இந்த சந்தைக்கு, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் “செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கான சட்டம்” (Assisted Reproduction Treatment Bill 2021) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அது இன்னமும் கூட செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதுதான் உண்மை. ஒருவேளை செயல்பாட்டிற்கு வந்தாலும் இதில் நடக்கும் மோசடிகளையும், சட்ட விரோதச் செயல்களையும் முழுமையாகத் தடுக்க முடியுமா என்பதும் சந்தேகமே.

செயற்கை கருத்தரித்தல் என்றால் என்ன?

எந்த ஒரு கருத்தடை சாதனங்களும் இல்லாமல், சில வருடங்கள் முறையான பாலுறவிற்குப் பிறகும் தம்பதிகளால் இயற்கையான முறையில் கருவுற முடியவில்லையென்றால் அந்த தம்பதிகளில் யாராவது ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ உடல்ரீதியான காரணங்கள் ஏதாவது இருக்கும். அதை முறையாகக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும். ஒருவேளை அவர்களின் பிரச்சினை சரி செய்ய முடியாததாக இருக்கும் பட்சத்தில் கருவுறுதலையே செயற்கையாக உருவாக்கி குழந்தையைப் பெறும் அளவிற்கு நவீன அறிவியல் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இந்த செயற்கை கருவுறுதலில் பல வகைகள் இருக்கின்றன. அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் கருவுறுதலைப் பற்றிய சில அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

எப்படிக் கரு உருவாகிறது?

பாலுறவின்போது வெளியாகும் ஒரு ஆணின் விந்துவானது, பெண்ணின் கருப்பையை அடைகிறது. பெண்ணின் சினைப்பையில் இருந்து ஒவ்வொரு மாதமும் கருமுட்டைகள் உருவாகி ஃபெலோபியன் குழாய் வழியாக கருப்பைக்கு வந்து காத்திருக்கும். இப்படிக் காத்திருக்கும் கரு
முட்டையுடன் விந்தணு சேர்ந்து கருவை உருவாக்குகிறது. இந்தக் கரு பெண்ணின் கருப்பையில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு குழந்தையாகப் பிறக்கிறது.

பெண்ணிடம் கருமுட்டை உருவாவதில் பிரச்சினைகள் இருக்கும்போதோ அல்லது ஆணின் விந்தணுவில் பிரச்சினை இருக்கும்
போதோ அல்லது கருப்பையின் அமைப்பில் பிரச்சினை இருக்கும்போதோ கரு உருவாவதில் அல்லது வளர்ச்சியடைவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு தம்பதியினரின் குழந்தையின்மைக்கு இவையெல்லாம் காரணங்களாக சொல்லப்படுகின்றன.

சில நேரங்களில் கருமுட்டையின் மரபணு பிரச்சினையும், விந்தணுவின் மரபணு பிரச்சினையும் கூட குழந்தையின்மைக்குக் காரணமாக இருக்கலாம். அதனால் தம்பதியினருக்கு குழந்தையில்லை என்றால் அதற்கு அந்த ஆணும் காரணமாக இருக்கலாம், பெண்ணும் காரணமாக இருக்கலாம் அல்லது இருவரும் காரணமாக இருக்கலாம். செயற்கை கருத்தரித்தலில் உலகளாவிய வழிகாட்டிகள் அனைத்தும் இருவருமே காரணமாக இருப்பதற்குதான் வாய்ப்பு அதிகம் என்று சொல்கிறது. அதனால் இருவரையும் முழுமையாகப் பரிசோதித்து என்ன காரணம் என்று கண்டறிந்து அதை முழுமையாக சரி செய்வதுதான் கருவுறதல் மருத்துவர் செய்ய வேண்டிய முதல் வேலை.

செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைகளின் வகைகள்:

ஆணிடமும், பெண்ணிடமும் குழந்தையின்மைக்கான காரணங்கள் நிறைய இருந்தாலும், அவற்றை சரி செய்ய முடியாத நிலையில் மூன்று விதமான செயற்கை கருத்தரித்தல் முறைகள் தான் பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றன:

IUI (In Utero Insemination)

IVF (In Vitro Insemination) மற்றும்

Surrogacy என்னும் வாடகைத்தாய் முறை.

IUI (In Utero Insemination):

பெண்ணின் கருப்பையில் அல்லது கருப்பையின் வாயிலில் ஏதேனும் பிரச்சினை இருக்கும்போது விந்தணுவால் கருமுட்டையை நீந்தி அடைய முடியாது. அந்த நிலையில் ஆணின் விந்தணுவை ஊசி வழியாக நேரடியாக கருப்பையின் உள்ளே செலுத்தும் முறைதான் இது. கருப்பைக்குள் செலுத்தப்பட்டாலும் அங்கிருந்து கருமுட்டையை தேடி நீந்திச் செல்ல வேண்டியது விந்தணுவின் வேலை. செயற்கை கருத்தரித்தலில் இருக்கும் முறைகளிலேயே இதுதான் மிகவும் எளிதான முறை.

சோதனைக் குழாய் கருத்தரித்தல்:
IVF (In Vitro Insemination)

பெரும்பாலான செயற்கை கருத்தரித்தலில் மேற்கொள்ளப்படும் முறையாக IVF இருக்கிறது. பொதுவாக ஆரோக்கியமான கருமுட்டையும், ஆரோக்கியமான விந்தணுவும் சேர்ந்து கருவைத் தாயின் கருப்பையில் உருவாக்கும். ஒருவேளை தாயின் கருமுட்டை ஆரோக்கியமாக இல்லையென்றால் அல்லது விந்தணு ஆரோக்கியமாக இல்லையென்றால் கரு உருவாகாது அல்லது ஆரோக்கியமற்ற கரு உருவாகும். அந்தச் சூழ்நிலையில், நல்ல கருமுட்டையைத் தாயிடமே உருவாக்கி அல்லது வேறு யாராவது பெண்ணிடம் ஆரோக்கியமான கருமுட்டையைக் கொடையாகி வாங்கி அது சோதனைக் குழாயில் பாதுகாக்கப்படும், அதே போல ஆணிடம் ஆரோக்கியமான விந்தணுவை உருவாக்கியோ அல்லது வேறு ஒரு ஆணிடம் விந்தணுவைத் தானமாக பெற்றோ அதையும் சோதனைக் குழாயில் சேமித்து இறுதியில் இரண்டையும் சோதனைக்குழாயிலே சேர்த்து கரு (Embryo) உருவாக்கப்படும். இந்தக் கரு சில நாட்கள் சோதனைக் குழாயிலே வைத்து அது நல்ல ஆரோக்கியமான நிலைக்கு வந்தவுடன் தாயின் கருப்பைக்குள் (Embryo Transfer) செலுத்தப்படும்.

ஒரு பெண்ணிடம் ஒரு மாதவிடாய் பருவத்தில் அதிகபட்சமாக எட்டில் இருந்து பத்து கருமுட்டைகள்தான் உற்பத்தி ஆகும். செயற்கை கருத்தரித்தலில், இந்தக் கருமுட்டையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஹார்மோன் ஊசிகள் போடப்படும், ஒரு IVF சைக்கிளில் கிட்டத்தட்ட பத்து ஊசிகள் வரையும் கூட சில நேரங்களில் போடப்படும், இந்த ஹார்மோன் ஊசிகள் அனைத்தும் மிகவும் வலி நிறைந்த ஊசிகள். ஒருவேளை கருமுட்டையைத் தானமாக பெறும் பட்சத்தில் தானம் கொடுக்கும் பெண்ணிற்கும் இத்தகைய ஊசிகள் தொடர்ச்சியாக போடப்பட்டு பிறகு சிறிய அறுவை சிகிச்சை வழியாக கருமுட்டை பிரித்தெடுக்கப்பட்டு சோதனைக்குழாயில் பாதுகாக்கப்படும். அதே போல ஆணுடைய விந்தணுவும் பெறப்பட்டு அதற்கு மரபணு சோதனை செய்து சோதனைக் குழாயில் பாதுகாக்கப்படும். ஒருவேளை விந்தணு தானம் பெறும்போது விந்தணு காப்பகத்தில் இருந்து மரபணு சரியாக உள்ள விந்தணு பெறப்பட்டு சோதனைக் குழாயில் பாதுகாக்கப்படும். சில நாட்களில் அந்த விந்தணுவையும், கருமுட்டையும் சேர்த்து சோதனைக்குழாயிலேயே கரு உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படும், இந்த கரு சில நாட்கள் மேற்பார்வைக்குப் பிறகு நல்ல வளர்ச்சியடையும் நிலைக்கு வந்த பிறகு சிறிய அறுவை சிகிச்சை வழியாக பெண்ணின் கருப்பையில் வைக்கப்படும்.

கருவை கருப்பையில் வைத்ததற்குப் பிறகும் கூட வலி நிறைந்த ஹார்மோன் ஊசிகள் தொடர்ச்சியாக பிரசவ காலம் முழுக்க செலுத்தப்படும், செயற்கைக் கருவுறுதல் சிகிச்சையில் மிகுந்த கடினமான ஒன்றாக இந்த ஊசிகளும் அது ஏற்படுத்தக்கூடிய வலியும்தான் என நிறைய பெண்கள் சொல்வார்கள். நடக்க முடியாது, உடலில் தடிப்பு ஏற்படும், சில நேரங்களில் உடல் முழுவதும் அரிப்பு, ஒவ்வாமை கூட ஏற்படலாம். பிரசவ காலம் முழுவதும் ஒரு பெண் கிட்டத்தட்ட 40 ஊசிகள் போட வேண்டியிருக்கும். செயற்கை கருத்தரித்தலில் மிக அதிகமாக பின்பற்றும் முறையாக இந்த சோதனைக் குழாய் கருத்தரிப்புதான் இருக்கிறது.

Surrogacy என்னும் வாடகைத்தாய் முறை:

தம்பதியினரில், பெண்ணின் கருப்பை கருவைச் சுமக்க முடியாத அளவிற்குப் பலவீனமாக இருக்கும் பட்சத்தில், அந்தப் பெண்ணுடைய கருமுட்டையையும், ஆணின் விந்தணுவையும் சேர்த்து சோதனைக்குழாயில் உருவாக்கப்படும் கருவை இன்னொரு பெண்ணின் கருப்பையில் வைத்துப் பிரசவம் வரை கருவை வளர்க்கும் முறையே வாடகைத்தாய் முறை. வாடகைத்தாயில் இரண்டு வகைகள் உண்டு, ஒன்று, கருப்பையை மட்டுமே பிரசவ காலம் வரை கொடுக்கும் வாடகைத்தாய் முறை. இந்த முறையில் வாடகைத்தாயிற்கும் குழந்தைக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இன்னொரு வகையில், தம்பதியரில் பெண்ணின் கருமுட்டையை உபயோகப்படுத்த முடியாத நிலை வரும்போது ஆணின் விந்தணு வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு கரு உருவாக்கப்பட்டு, வளர்க்கப்படும். இந்த முறையில் வாடகைத்தாயின் கருமுட்டையே பயன்படுத்தப்படுவதால் குழந்தையோடு மரபணு ரீதியாக வாடகைத்தாய்க்குத் தொடர்பிருக்கும்.

எளிமையாகப் புரிந்துகொள்ள, முதல் முறையில் வாடகைத்தாய் கருப்பையை மட்டுமே கொடுக்கிறாள், கருமுட்டையும், விந்தணுவும் தம்பதியினருடையது. இரண்டாவது முறையில் கருமுட்டையையுமே வாடகைத்தாயே கொடுக்கிறாள்.

இந்தியாவைப் பொறுத்தவரை வாடகைத்தாய் முறைக்கான சட்டம் 2021 டிசம்பர் மாதம்தான் நிறைவேற்றப்பட்டது, அதன்படி 35 வயதுக்குக் கீழே இருக்கும் குடும்பத்தை நிறைவு செய்த பெண் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க முடியும். வாடகைத்தாய் சந்தையில் இந்தியா உலகளவில் கடந்த பத்து வருடங்களாக முன்ணணியில் இருக்கிறது, வாடகைத் தாய்க்காக இந்தியாவிற்கு மருத்துவ சுற்றுலா வரும் வெளிநாட்டுத் தம்பதிகள் மிக அதிகம், ஆனால் அதற்கான சட்டமே சில மாதங்களுக்கு முன்புதான் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. அதனால் இதிலும் இது வரை எந்த நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை, பெரும்பாலான அரசின் வழிகாட்டுதல்கள் காற்றில் தான் விடப்படுகின்றன.

இந்தச் சிகிச்சை முறைகளில் என்ன பிரச்சினைகள்?

இன்றைய சூழ்நிலையில் நகர்ப்புறத்தில் இருக்கும் தம்பதிகளில் ஆறில் ஒருவருக்கு குழந்தையின்மை பிரச்சினை இருக்கின்றன என்கின்றன ஆய்வுகள். இந்தியா முழுக்க இன்றைய தேதியில் கிட்டத்தட்ட 28 மில்லியன் தம்பதியினர் இந்தச் செயற்கை கருவுறுதல் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த நிலையில், குழந்தையின்மையைப் பொறுத்தவரை இரண்டு உண்மைகளை நாம் உணர்ந்து கொள்வது மிக முக்கியமானது. ஒன்று, குழந்தையின்மைக்கு தம்பதிகள் இருவரின் பிரச்சினைகளுமே பெரும்பாலான நேரங்களில் காரணமாக இருக்கின்றன. இரண்டாவது உண்மை, குழந்தையின்மைக்கு உடல்நலப் பிரச்சினைகள் மட்டுமல்ல, மனநல பிரச்சினைகளும் காரணமாக இருக்கின்றன. ஆனால் கருவுறுதலுக்கான நமது சிகிச்சை முறைகள் பெண்ணின் மனவுளைச்சலைக் கவனம் கொள்ளாதது மட்டுமல்ல, இன்னும் அதை மோசமாக்கும் வகையில்தான் அமைந்திருக்கின்றன.

அதனால் குழந்தையின்மை என்று வரும் தம்பதியினர் இருவரையுமே உடல் ரீதியாகவும், மன
ரீதியாகவும் முழுமையாகப் பரிசோதித்து அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதை சரி செய்யும் சிகிச்சையைத் தொடங்க வேண்டும். ஆனால் நமது மரபார்ந்த குடும்ப மதிப்பீட்டின்படி குழந்தையின்மை என்றாலே அதற்குப் பெண் மட்டுமே முதல் காரணம், அதனால் குழந்தையின்மைக்கான சிகிச்சையையுமே பெண்கள் மட்டுமே எடுக்க வேண்டும். கருத்தரித்தல் தொடர்பாக நாம் கொண்டிருக்கும் இந்த பழமைவாத எண்ணமே செயற்கை கருத்தரித்தலில் நடக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணமாக இருக்கிறது. நமது இந்த எண்ணத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் பெரும்பாலான தனியார் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் குழந்தையின்மை என்று வரும் தம்பதியினரை முழுமையாக பரிசோதனை செய்யாமலேயே பெண்ணிடம்தான் பிரச்சினை என்று எடுத்துக்கொண்டு உடனடியாக IVF சிகிச்சையை பரிந்துரை செய்கிறார்கள்.

பெரும்பாலான செயற்கை கருத்தரித்தல் மையங்கள் எடுத்தவுடன் IVF சிகிச்சையைத் தான் பரிந்துரை செய்
கின்றன. ஒரு IVF சிகிச்சை எடுத்துக்கொள்ள குறைந்த
பட்சம் இரண்டு லட்சங்களாவது ஆகும் என்பது ஒருபுறம் இருந்தாலும் இந்த சிகிச்சை ஏற்படுத்தக்கூடிய உடல் ரீதியான, உளவியல் ரீதியான வலியும், வேதனைகளுமே மிக அதிகம். வலி நிறைந்த சிகிச்சை முறைகள், கட்டுப்படுத்தப்பட்ட அன்றாட வாழ்க்கை முறைகள், பெண்ணின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத குடும்பத்தினரின் அணுகுமுறை, அவளை எந்திரமாக பாவிக்கும் மருத்துவமனை சிகிச்சைகள், எல்லாவற்றுக்கும் மேலாக நிச்சயமற்ற முடிவு (அதாவது ஐந்தில் மூன்று IVF சிகிச்சைகள் தோல்வியில்தான் முடிகின்றன என்கின்றன ஆய்வு. அதனால் அத்தனை துயரங்களையும் ஒரு பெண் பொறுத்துக்கொண்டு வந்தாலும் கூட உறுதியாக குழந்தை பிறந்து விடும் என்ற உத்தரவாதமும் இல்லை) என அத்தனையும் சேர்ந்து செயற்கை கருவுறுதல் சிகிச்சை பெண்ணிற்கு மிகுந்த மனவுளைச்சலைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது.

கருமுட்டை தானத்தில் நடக்கும் மோசடிகள்:

செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையில் பெரும்பாலான நேரங்களில் கருமுட்டை இன்னொரு பெண்ணிடம் இருந்து தானமாகவே பெறப்படுகிறது. விந்தணுக்களை தானம் செய்வது என்பது எளிமையானது, ஏனென்றால் ஒரு முறை வெளிப்படும் விந்துவில் லட்சக்கணக்கான விந்தணுக்கள் வெளியேறும். அதில் ஆரோக்கியமான ஒன்றை சேகரிப்பதில் பெரிய சிரமம் எதுவும் இருக்காது. ஆனால் கருமுட்டை என்பது அப்படியல்ல. நல்ல ஆரோக்கியமான சினைப்பையில் இருந்து ஒவ்வொரு மாதவிடாய் பருவத்திலும் அதிகபட்சமாக எட்டில் இருந்து பத்து கருமுட்டைகளே உருவாகும். அதிலும் ஆரோக்கியமான கருமுட்டை என்பது ஒன்றோ அல்லது இரண்டோதான் கிடைக்கும். அதனால் கருமுட்டை தானம் செய்ய ஒரு பெண் முன் வந்தால் முதலில் அந்தப் பெண்ணிற்கு கருமுட்டையைத் தூண்டும் ஹார்மோன் ஊசிகள் சில நாட்கள் கொடுக்கப்படும், பிறகு கருமுட்டை முழுமையாக வெளியேறியதை ஸ்கேன்கள் மூலம் உறுதி செய்துகொண்டு, சிறு அறுவை சிகிச்சை மூலம் அந்த கருமுட்டை வெளியே எடுக்கப்பட்டு சேகரிக்க வேண்டும். அதிகபட்சமாக ஆறு அல்லது எட்டு கருமுட்டைகளே ஒரு நேரத்தில் எடுக்க முடியும். அதற்காக அந்தப் பெண் இரண்டு வாரங்களாவது தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டும், தேவையான ஊசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் கருமுட்டை எடுக்க எடுக்க அதன் தரம் குறைந்து கொண்டே வரும், வெளிநாடுகளில் ஒரு பெண்ணிடம் அதிகபட்சமாக எட்டு முறை கருமுட்டை தானம் பெறும் வழக்கம் இருக்கிறது, செயற்கை கருத்தரித்தலுக்கான புதிய சட்டம் நிறைவேற்றும்வரை இந்தியாவில் ஒரு பெண்ணிடம் இருந்து பல முறை கருமுட்டை தானம் பெறப்பட்டிருக்கிறது. ஆனால் சமீபத்திய சட்டம், ஒரு பெண் அவளது வாழ்நாளில் ஒரே ஒரு முறை தான் கருமுட்டை தானம் செய்ய முடியும் என்கிறது. 35 வயதிற்கு உட்பட்ட திருமணமான, குழந்தைப் பேறுடைய பெண் மட்டுமே கருமுட்டை தானம் செய்ய முடியும் என சமீபத்திய சட்டம் சொல்கிறது.

கருமுட்டைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இந்த விதிமுறைகள் பெரும்பாலும் எங்கும் பின்
பற்றப்படுவதில்லை என்பதுதான் நாம் கேள்விப்படும் சம்பவங்களில் இருந்து தெரிகிறது. ஒரு கருமுட்டை தானத்திற்கு இருபதாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் வரை கொடுக்கப்படுகிறது. அதனால் நிறைய நேரங்களில் தானம் கொடுக்கும் பெண்ணின் வயதையும், அடையாளத்தையும் போலி அடையாள அட்டை வழியாக மறைத்து நிறைய முறை கருமுட்டை பெறப்படுகிறது. ஒரு மைனர் பெண்ணிடம் இருந்து பல முறை கருமுட்டை தானம் பெறப்பட்டிருப்பது இந்த வகையிலான மோசடியே!.

கருமுட்டை தானம் செய்பவர்களின் பொது அட்டவணையை ஏற்படுத்தாமல் இருப்பதும், அதைக் கண்காணிக்கும் பொது அமைப்பு என்று ஒன்று இல்லாமல் இருப்பதுமே அதில் இந்த மோசடிகள் நடப்பதற்குக் காரணமாக இருக்கிறது. குறைந்தபட்சம் மாநில அளவிலாவது இதற்கான அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். என்னதான் இடைத்தரகர்கள் பெண்ணின் அடையாளத்தை மறைத்து, வயதைக் குறைத்து கருமுட்டை தானத்திற்கு கட்டாயப்படுத்தியிருந்தாலும், அதைப் பெறும் மருத்துவமனை எப்படி இதைக் கவனிக்காமல் இருந்திருக்க முடியும்? கருமுட்டை கொடுக்கும் பெண்ணிடம் பேசியிருந்தாலே அதைக் கண்டுபிடித்திருக்க முடியும். ஆனால் மருத்துவமனை அவ்வளவு பொறுப்பின்றி இதில் நடந்து கொண்டிருப்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்களையும் ஒற்றைக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருவது அவசியமாகும். இல்லையென்றால் இதில் நடக்கும் சட்ட விரோதச் செயல்களை, மோசடிகளைத் தடுக்க முடியாது.

அதே போல விந்தணு தானத்திலும் கூட சில மோசடிகள் நடக்கிறது என்பதையும் சில நேரங்களில் கேள்விப்படுகிறோம். விந்தணு கொடை பெறுவதையோ அல்லது கருமுட்டை தானம் பெறுவதையோ தம்பதியினரிடம் மருத்துவமனைகள் கலந்துரையாடுவது இல்லை, அதை முறையாகத் தம்பதியினரிடம் தெரிவிப்பதும் கூட இல்லை என்ற புகார்களையும் நாம் அலட்சியப்படுத்த முடியாது. கருவுறுதல் சிகிச்சையில் இயல்பாக இருக்கும் ரகசியத்தன்மையே இதன் தவறுகளை வெளியே தெரியாமல் காப்பாற்றுகின்றன.

என்ன செய்ய வேண்டும்?

செயற்கை கருத்தரித்தல் துறையைப் பொறுத்த வரையில் தேசிய அளவில் தனியார் மருத்துவமனைகளே ஆதிக்கம் செலுத்து கின்றன. அரசாங்க மருத்துவமனைகளில் இதற்கான அடிப்படை வசதிகள்கூட இல்லை. குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்து வரும் சூழலில் இதற்கான தரமான, நியாயமான சிகிச்சையை அரசாங்க மருத்துவமனைகள் முன் நின்று வழங்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார். வெளி நோயாளி பிரிவில் இதற்கென கூடுதலாக ஒரு அறையைத் திறந்துவைத்து விட்டு அரசாங்க மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரித்தல் வசதி இருக்கிறது என்று சொல்வதோடு நிறுத்திவிடக்கூடாது. செயற்கை கருத்தரித்தல் துறையின் அதிநவீன மருத்துவ அறிவியல் வளர்ச்சியையும், சாதனங்களையும் கொண்டு வர வேண்டும், மிகவும் தரமான மருத்துவ உபகரணங்களையும், மரபணு ஆய்வகத்தையும் உள்ளடக்கிய அதி சிறந்த மையத்தை அமைத்திட வேண்டும். இதற்கான நிபுணர்களை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட செயற்கை கருத்தரித்தல் மையத்தைப் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வர வேண்டும்.

தனியார் மையங்களை முறைப்படுத்து வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைக் குறைந்தபட்சம் மாநில அளவிலாவது உருவாக்க வேண்டும். உறுப்பு மாற்று சிகிச்சைக்காக நாம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கிற நெறிமுறைகளையே நாம் முன்மாதிரியாக கொள்ள முடியும். உறுப்பு மாற்று சிகிச்சை அரசாங்கத்திலோ அல்லது தனியாரிலோ எங்கு நடந்தாலும் அதற்குரிய பொது அட்டவணையில் வந்து விடும். அதே போலவே மாநில அளவில் இதற்கான பொது கண்காணிப்பு அமைப்பைத் தொடங்க வேண்டும்.

சிகிச்சை முறைகளில் வெளிப்படைத் தன்மையைப் பின்பற்ற வேண்டும். தம்பதிகளுக்குப் பெரும்பாலான நேரங்களில் என்ன பிரச்சினை, என்ன சிகிச்சை, என்ன தீர்வு, அதன் சாதக பாதகங்கள், அடுத்தடுத்த சிகிச்சை முறைகள், அதன் விளைவுகள் என எதுவும் சொல்லப்படுவதேயில்லை. குறிப்பாக, இது தொடர்பாக பெண்கள் எந்த விவரமும் இல்லாமலே தான் இருக்கிறார்கள். கருவை உண்டாக்க இன்னொரு பெண்ணிடம் கருமுட்டை தானமாகப் பெறப்போகிறோம் என்பது சில நேரங்களில் பெண்களிடம் சொல்லப்படுவதில்லை. அத்தனையும் தம்பதிகளிடம் வெளிப்படையாக விவாதித்து செயல்படுத்தும் அளவிற்கு சிகிச்சை முறைகளில் வெளிப்படைத்தன்மையைப் பேண வேண்டும்.

கருமுட்டை தானத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க தேவையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்த சட்ட வரைவின்படி, ஒரு பெண் ஒரு முறை மட்டுமே தனது வாழ்நாளில் கருமுட்டை தானம் செய்ய முடியும் என்கிறது. செயற்கைக் கருத்தரித்தலுக்கான தேவைகள் அதிகரித்து வரும் சூழலில் இது முறையாகப் பின்பற்றப்படுவது சந்தேகமே, இதையொட்டி நிறைய மோசடிகள் உருவாவதற்கே வாய்ப்பு இருக்கிறது. கருமுட்டை தானம் செய்வதற்கான ஒரு பொதுவான கண்காணிப்பு அட்டவணையை மாநிலம் முழுவதும் உருவாக்க வேண்டும். கருமுட்டைத் தானம் செய்யும் பெண்கள் கட்டாயம் அதில் பதிய வேண்டும். பெண்ணின் வயது, குடும்பம், உடல் ரீதியான பிரச்சினைகள் போன்றவையெல்லாம் அதன் வழியாகக் கண்காணிக்க வேண்டும்.

குழந்தையின்மை தொடர்பாக நமது சிந்தனைகளில் மாற்றம் வேண்டும்:

ஒரு தம்பதியினருக்குக் குழந்தை இல்லை என்றாலே உடனடியாக அந்தப் பெண்ணை குற்றவாளிக்கூண்டில் ஏற்றி அவளது பெண்மையை நிரூபிக்கச் சொல்லும் மனப்பான்மைதான் இன்னமும் இந்த சமூகத்தில் இருக்கிறது. கருத்தரித்தல் என்பது இருவருடைய உடலும், மனமும் சம்பந்தப்பட்டது என்பதையே நாம் இன்னும் உணரவில்லை. அதே போல குழந்தையில்லை என்பதை ஒரு தம்பதியினரின் திருமண வாழ்க்கையின் தோல்வியாகவும், ஒரு வம்சத்தின் அழிவாகவும் பார்க்கக்கூடிய பார்வையும் இங்கு இருக்கிறது. குழந்தையின்மை தொடர்பாக சமூகமும், குடும்பமும் கொண்டிருக்கும் இந்த எண்ணங்கள் தான் தம்பதியினரின்மீது ஒரு தொடர்ச்சியான அழுத்தத்தைக் கொடுக்கிறது. “எப்படியாவது குழந்தை பெற்றே ஆக வேண்டும்” என்ற நிர்ப்பந்தம்தான் இது சார்ந்து நடக்கும் பல மோசடிகளை ஊக்குவிக்கிறது அல்லது கண்டும் காணாமல் கடந்து செல்லத் தூண்டுகிறது.

நவீன வாழ்க்கை முறையில் குழந்தை என்பது அந்த தம்பதிகளின் தனிப்பட்ட தேர்வாக விட வேண்டும், அதில் முடிவெடுக்கும் பொறுப்பை தம்பதியினரிடமே கொடுக்கும் அளவிற்கு சமூகம் இதில் முதிர்ச்சியடைய வேண்டும். அப்போதுதான் நிர்ப்பந்தங்கள் எதுவுமில்லாமல் முறையான சிகிச்சையைப் பெறும் அளவிற்குத் தம்பதிகளும் தயாராவார்கள்.

பெண்ணின் மனநலம்:

கருவுறுதலில் உடலைப் போல மனதின் பங்கும் நிறைய இருக்கிறது. ஆரோக்கியமான ஒரு பெண்ணின் மனநிலைக்குக் குழந்தை கருவுறுதலிலும், அதன் வளர்ச்சியிலும் முக்கியமான பங்கிருக்கிறது எனப் பல அறிவியல் தரவுகள் சொல்கின்றன. ஆனால் செயற்கை கருவுறுதல் சிகிச்சையைப் பொறுத்த வரை பெண்ணை ஒரு பண்டமாகவும், குழந்தை பெற்றெடுக்கும் எந்திரமாகவுமே அணுகுகிறது. அந்த சிகிச்சையில் இருக்கும் பெண்ணிற்கு மருத்துவ ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் கொடுக்கப்படும் மனஅழுத்தம் மிக அதிகம். தன்னால் குழந்தை பெற முடியாது என்பதை உணர்ந்து கொண்டு அந்த அதிர்ச்சியை வெளிகாட்டிக்கொள்ளாமலேயே இன்னொரு பெண்ணிடம் கருமுட்டையைத் தானம் பெற்று கருவை சுமக்கும் நிலைக்கு உடனடியாக அந்தப் பெண் வந்து விட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இந்த சூழ்நிலையில் அந்தப் பெண்ணிற்கு ஏற்படும் மன உளைச்சலை யாருமே கண்டுகொள்வதில்லை அல்லது முக்கியத்துவம் கொடுப்பதேயில்லை. அதே போல உடல் ரீதியான பல வலிகளை அந்தப் பெண் படும்போதும் “குழந்தைக்காக இதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாதா?” என அந்த வலிகள் நிராகரிக்கப்படுகின்றன. இரண்டாவது, மூன்றாவது IVF சைக்கிளில் இருக்கும் பெண்ணிடம் “குழந்தை பெற்று வந்தால்தான் நீ வீட்டுக்குள் வர முடியும் என அம்மா சொல்லிவிட்டார்கள்” என அமைதியாகச் சொல்லும் கணவன்களை நான் எனது அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். இவையெல்லாம் சேர்ந்து அந்தப் பெண்ணைத் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. இந்த மன உளைச்சலே நிறைய நேரங்களில் சிகிச்சையின் தோல்விக்குக் காரணமாக இருக்கிறது. இதை மருத்துவர்களும் உணர்வதில்லை, குடும்பமும் உணர்வதில்லை. தோல்விக்கும் அந்தப் பெண்ணையே ஏதோ ஒரு வகையில் குற்றம் சாட்டி அடுத்த IVF க்குத் தயார் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.

தாய்மை என்பது ஒரு பெண்ணின் தேர்வாக இல்லாமல் அதன்மீது சமூகங்கள் கட்டமைத்திருக்கும் போலி புனித பிம்பங்களின் தொகுப்பாக இருந்தால் அது நுகர்வாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. அந்த நுகர்வுக் கலாச்சாரத்தில் ஆரம்ப கட்ட விளைவுகளைத்தான் நாம் செயற்கை கருத்தரித்தல் ஒட்டி சமீபத்தில் நடக்கும் மோசடிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இது தொடக்கமே! நாம் விழித்துக்கொள்ளாவிட்டால் இதன் தீவிர விளைவுகளை இனி வரும் காலங்களில் நாம் பார்ப்போம்!

sivabalanela@gmail.com