இந்தியாவில் யூட்யூப் தளத்தை பாவிப்பவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்?

46 கோடிப் பேர் என்கிறது சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ஒரு நாளைக்கு செய்தித்தாள்கள் வாசிக்கப்படுவதும் ஏறத்தாழ இதே அளவில்தான்.

டீனேஜ் வயதுகளில் வாழும் இளைஞர்களில் இரண்டில் ஒருவர், தகவல்களை யூட்யூப் மூலமாகதான் அறிகிறார்களாம். மரபான ஊடகங்களான செய்தித்தாள், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றையெல்லாம் சமூகவலைத்தள ஊடகங்கள் வென்று விட்டனவா என்று கேட்டால்…?

எண்ணிக்கை அடிப்படையிலும், அவை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் அடிப்படையிலும் ‘ஆமாம்’ என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி. யதார்த்தம் இதுதான்.

“காலையிலே பேப்பரை தொறந்து காபி குடிச்சிக்கிட்டே ஒவ்வொரு பக்கமா புரட்டி…” என்றெல்லாம் நீங்கள் பேச ஆரம்பிக்கும்போதே, பொடிசுகள் அவர்கள் பாட்டுக்கு ப்ளூடூத் ஹெட்செட்டைக் காதில் மாட்டிக்கொண்டு, பாட்காஸ்ட் கேட்டுக்கொண்டே வாக்கிங் போக ஆரம்பித்து விட்டிருப்பார்கள்.

இந்தியாவில் யூட்யூப் பாவிப்பவர்கள் மட்டுமே 46 கோடிப் பேர் என்றால் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமெல்லாம் பயன்படுத்துபவர்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், கணக்கே போட இயலாத அளவுக்கு ஏகப்பட்ட எண்கள் வரும். இக்காலகட்டத்திலும் பிடிவாதமாக மரபார்ந்த ஊடகங்களை நடத்தி வருபவர்களை தர்மாஸ்பத்திரி நடத்தும் கொடைவள்ளல்கள் என்றே பாராட்டியாக வேண்டும். மரபான ஊடகங்களுக்கும், அவசர ஆத்திரத்துக்கு ஊடகமாகி விட்ட சமூகவலைத்தள ஊடகங்களுக்கும் அடிப்படையில் என்னென்ன வேறுபாடுகள் என முதலில் பார்ப்போம்.

ஒரு செய்தியை உருவாக்குவதிலும் அதை விவாதமாக மாற்றுவதிலும் இரு ஊடகங்களுக்கும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசங்கள் உண்டு. ஒரு செய்தித்தாளோ, டிவி நிறுவனமோ ஒரு தகவலைப் பகிர்வதற்கு ஆயிரத்தெட்டு கொள்கைகளையும், வழிமுறைகளையும் வைத்திருக்கும். எதுவெல்லாம் செய்தி, எதையெல்லாம் பகிரவேண்டும் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் ஒன்றுக்குப் பத்து முறை தினமும் மூளையைக் கசக்கிக் கொண்டிருப்பார். அச்சுப் பத்திரிகையை வாசிக்கும் வாசகருக்கோ, டிவி செய்தியை நுகரும் நேயருக்கோ செய்திகளின் உருவாக்கலிலோ, விவாதத்திலோ பெரும்பாலும் பங்கேற்பு இல்லை. அவர்கள் கொடுப்பதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். மாறாக, யூட்யூப் போன்ற நவீன ஊடகங்களில் இதற்குநேரெதிரான நிலை இருக்கிறது. இங்கே ஒவ்வொருவருமே தனக்கென்று ஓர் ஊடகத்தை உருவாக்கிக் கொண்டு, தனக்கு என்னென்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் செய்தியாக, தகவலாக எல்லோருக்கும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த கட்டற்ற சுதந்திரம்தான் சமூகவலைத்தள ஊடகங்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் அளவற்ற மவுசுக்குப் பிரதான காரணம்.

மரபார்ந்த ஊடகங்கள் அடிப்படையில் செய்தி வழங்கு
வதற்காக உருவானவை. ஒவ்வொரு செய்தியை வெளியிடும்போதும், அச்செய்தி தொடர்பான பிரச்சினையோ சிக்கலோ தீர்வு காணப்பட வேண்டும் என்கிற அக்கறையோடே வெளியிடப்படும். சமூக ஊடகங்களுக்குப் பெரும்பாலும் அந்த அக்கறையெல்லாம் இல்லை. அன்றன்றைய பிரச்சினையை பேசிவிட்டு ஹிட்ஸ் தேத்தினோமா, வைரல் ஆக்கினோமா என்று போய்க்கொண்டே இருப்பவர்கள். ஏற்கனவே வெளியிட்ட செய்திகளுக்கோ, தகவல்களுக்கோ ‘ஃபாலோ-அப்’ செய்யக்கூடிய தன்மை அநேகமாக சமூக ஊடகங்களுக்கு இல்லை. மேலும் இவற்றின் நோக்கமே பொதுவாக பொழுதுபோக்குதான். இதை சொன்னால் யூட்யூபர்கள் மேலே விழுந்து பிறாண்ட வருவார்கள். எனினும் உண்மை அதுதான். உலகமே அழியப் போகிறது என்கிற தகவல் வந்தாலும், அதையும் பொழுதுபோக்கான நடையில்தான் ஒரு சமூகவலைத்தளம் அணுகும். இன்றைய 2கே தலைமுறையினர் தேவையின்றி மூக்கு சிந்த விரும்புவதில்லை, அவர்கள் சென்ட்டிமெண்ட்டுகளுக்கு எதிரானவர்கள் என்று நம்பப்படுகிறது. எனவே அவர்கள் மனோபாவத்தைக் குறிவைத்தே சமூக ஊடகங்கள் இயங்குகின்றன.

சமூக ஊடகங்களுக்கு இருக்கும் பெரிய பலம் என்னவென்றால் அதன் வாசகர்கள் அல்லது நேயர்கள் சம்பந்தப்பட்ட செய்தி அல்லது தகவலுக்கு உடனுக்குடன் எதிர்வினை ஆற்ற முடிகிறது என்பதுதான். இந்த ஜனநாயகத் தன்மை மரபார்ந்த ஊடகங்களிடம் கிட்டத்தட்ட இல்லை. வாசகர் கடிதங்களையே கூட பல ஊடகங்கள் போனால் போகிறது என்று இரு பக்கங்களை ஒதுக்கி, ஒப்புக்குச் சப்பாணியாகதான் வெளியிடுகின்றன.

மரபார்ந்த ஊடகங்களின் பெரும் பலவீனம் என்பது அதற்குரிய ஒற்றைத்தன்மை (ஒற்றைத் தலைமை அல்ல). அச்சு ஊடகம் எழுத்து வாயிலாக மட்டுமே வெளிப்படும். அதிகபட்சம் வண்ணப்படங்களை அச்சிடலாம். வானொலியில் ஒலி மட்டுமே கேட்கும். டிவி பரவாயில்லை; ஒளியும் உண்டு, ஒலியும் உண்டு. ஆனால் சமூக ஊடகங்களைப் பொறுத்தவரை ஆடியோ, வீடியோ, டெக்ஸ்ட், கிராஃபிக்ஸ் என்று அத்தனை விஷயங்களையுமே சாதாரணமான ஒரு app மூலமாக அட்டகாசமாக வழங்க முடியும்.

சோஷியல் மீடியாவின் வேகம், பழைய மீடியாக்களுக்கு இல்லை என்பது பொதுவாக கூறப்படும் ஒரு குற்றச்சாட்டு. எனினும் சோஷியல் மீடியா மேலோட்டமானது, மரபார்ந்த ஊடகங்கள் எந்தவொரு செய்தியையும் அதன் ஆழம் வரை ஊடுருவித் தரும் பண்பு கொண்டது.

எவர் வேண்டுமானாலும் தனி நபர் ஊடகமாகத் தலையெடுக்கலாம் என்பதே சோஷியல் மீடியாவின் பெரும் பலம். பெரிய முதலீடும் தேவைப்படாது. ஆனால் ஒரு செய்தித்தாளோ, பத்திரிகையோ தொடங்கவோ, டிவி நடத்தவோ லட்சங்களில் தொடங்கி கோடிகளில் முதலீடு வேண்டும். ஒரு சில நபர்கள் இணைந்து ஓர் ஊடகத்தை தொடங்கிவிட முடியாது. பல நூறு
கரங்கள் கோர்த்துதான் மரபான ஊடகத்தை தொடங்கி, நடத்த முடியும். சரி. பலம், பலவீனத்தையெல்லாம் விட்டு விட்டு விஷயத்துக்கு வருவோம்.

பத்திரிகையாளர்களைக் காட்டிலும் பலமிக்கவர் களாக சோஷியல் மீடியா ஆட்கள் உருவாகிறார்களா?

ஆம். ஆனால், இந்த நிலை எவ்வளவு காலத்துக்கு நீடிக்குமென்று சொல்ல முடியாது. ஏனெனில் பத்திரிகை
யாளர்களுக்கு உரிய நம்பகத்தன்மை, வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மை போன்றவை சோஷியல் மீடியாவில் கிட்டத்தட்ட இல்லை எனலாம்.

யூட்யூபிலோ, ஃபேஸ்புக்கிலோ வருபவை பெரும்பாலும் பொய்யான ஜோடிக்கப்பட்ட தகவல்கள் என்பதை அறிந்திருந்தும் கூட அவற்றிலிருக்கும் மசாலாத் தன்மைக்காகவே அதை நுகர்வோர் மிகவும் அதிகம். மரபான ஊடகங்களே கூட தங்களது யூட்யூப் / ஃபேஸ்புக் பக்கங்களை இதுமாதிரி பரபரப்புத்தன்மைக்கு ஆட்படுத்திக் கொண்டிருக்கின்றன.

மக்களின் குரலை மற்ற எந்த ஊடகத்தைக் காட்டிலும் சமூகவலைத்தள ஊடகங்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அவர்களது கருத்துகளை செவிமடுத்துப் பல லட்சம் பேரிடம் சேர்க்கின்றன என்பதெல்லாம் உண்மைதான். எனினும் கூட சோஷியல் மீடியா தகவல்கள் நம்பகத்துக்
குரியவை என்கிற அந்தஸ்தைப் பெற முடியவில்லை. எல்லா தளத்திலுமே கிரிமினல்களும், புரோக்கர்களும் ஊடுருவது உண்டு. சோஷியல் மீடியாவும் இந்தக் கிரிமினல்களின் வக்கிரங்களுக்குத் தப்பவில்லை.

சோஷியல் மீடியாவில் பிரபலமானவர்கள் இன்ஃப்ளூயன்ஸர்கள் என்கிறார்கள். நன்கு படித்தவர்கள், தொழிற்முறை துறை நிபுணர்கள் போன்
றோர் ஆரம்பத்தில் இன்ஃப்ளூயன்ஸர்களாக இருந்தது உண்மைதான். காலப்போக்கில் டுபாக்கூர்களும் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். பல்வேறு தகிடுத்தத்தங்களைச் செய்து தங்களுக்கு அதிகளவிலான ஃபாலோயர்ஸை உருவாக்கிக் கொண்டு எல்லாத் தரப்பையும் பிளாக்மெயில் செய்யவும், மிரட்டவும் தங்கள் பிரபலத்தைப் பயன்
படுத்திக் கொள்கிறார்கள்.

பொதுவாக சமூக வலைத்தளங்களுக்குக் கருத்து சுதந்திரக் கட்டுப்பாடு சற்றுமில்லை என்பதே புரோக்கர்களின் புகலிடமாக இது மாறுவதற்கு ஏதுவாகி விட்டது. எனவேதான் ஒரு சாதாரணப் பத்திரிகையில் பணிபுரியும் நிருபரைவிட பன்மடங்கு பிரபலமான, பன்மடங்கு சம்பாதிக்கும் யூட்யூபர் ஒருவரால் நிருபருக்குரிய அந்தஸ்தை சமூகத்தில் பெறமுடிவதில்லை.

புரோக்கர்களுக்குப் பிடித்தமான துறைகள் சினிமாவும், அரசியலும். அதிகம் பணம் கொழிக்கக்கூடிய துறைகள் என்பதால் இவற்றைக் குறிவைத்தே தங்கள் சமூகவலைத்தள செயல்பாடுகளை இவர்கள் அமைத்துக் கொள்கிறார்கள்.

2016ஆம் ஆண்டு இந்தியாவில் சோஷியல் மீடியா தளங்கள் செழித்து வளர்வதற்குரிய ஆண்டாக அமைந்தது. அப்போதுதான் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ என்கிற செல்லுலார் சேவையை அறிமுகப்படுத்தினார். குறைந்த விலையில் நிறைய டேட்டா பிளான்கள் கிடைத்ததால், கையில் ஸ்மார்ட்போன் வைத்திருந்தவர்கள் எல்லாருமே சமூகவலைத்தளங்களில் பங்கேற்க ஆர்வம் கொண்டனர். இதை ‘ஜியோ எஃபெக்ட்’ என்கிறார்கள்.

2015இல் சமூகவலைத்தளங்களில் ஆர்வத்தோடு ஈடுபட்டிக் கொண்டிருந்த இந்தியர்களின் எண்ணிக்கை, அடுத்த ஐந்தே ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரித்தது.

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் டிரெண்ட் ஆகக்கூடிய விஷயங்கள் நாட்டின் பிரதமரையே கூட தூக்கம் தொலைக்குமளவுக்குத் தாக்கப்படுத்துகிறது. மேலும், மரபார்ந்த ஊடகங்கள் பூசிமெழுகி வந்த விஷயங்களை, எந்தக் கவலையுமின்றி அமாவசைக்குப் பூசணிக்காய் போட்டு உடைப்பதைப் போல நடு ரோட்டில் போட்டு உடைக்கின்றன யூட்யூப் சேனல்கள். அரசியல் சண்டைகளும் விவாதங்களும் டீக்கடைகளில், தெருக்களில், மேடைகளில், மன்றங்களில், பத்திரிகைகளில், டிவி சேனல்களில் நடந்த காலங்கள் மலையேறி, அவை சமூகவலைத்தளங்களில் நடக்கத் தொடங்கியிருக்கின்றன என்பதைப் பழைய ஊடக ஜாம்பவான்களே இன்று ஒப்புக் கொள்கின்றனர். இன்று பெரிய டிவி சேனல்களுக்குப் போட்டியாக சக சேனல்கள் இல்லாமல், அவ்விடத்தை யூட்யூப் சேனல்கள் கைப்பற்றி இருக்கின்றன.

வேளாண்சட்டங்களைத் திருத்தும் ஒன்றிய அரசை எதிர்த்து சில காலம் முன்பாக லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் திரண்டது, முழுக்க முழுக்க சமூகவலைத்தளங்களின் சாதனை என்கிறார்கள். ஏனெனில், இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஒன்றிய அரசு சாம, தான, பேத, தண்டமென அனைத்தையும் பயன்படுத்தி டிவி சேனல்கள் மற்றும் அச்சுப் பத்திரிகைகளை அச்சுறுத்தி, போராட்டம் குறித்த
செய்திகள் எதுவும் பாசிட்டிவ்வாக வெளிவராத அளவில் பார்த்துக் கொண்டது. எனினும் யூட்யூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை மட்டுமே தங்கள் தகவல் ஊடகமாகப் பயன்படுத்தி போராட்டத்தில் பிரும்மாண்ட வெற்றியை எட்டினார்கள் களத்தில் கடைசிவரை நின்ற விவசாயிகள்.

உங்களிடம் இன்று ஒரு ஸ்மார்ட் போனும், அட்டகாசமான ஐடியா ஒன்றும் இருந்தால் போதும். நீங்களே ஒரு சேனல்தான்.

சமீபத்தில் ஒரு மலையாள செய்தி சேனலுக்கு லைசென்ஸைப் புதுப்பிக்க ஒன்றிய அரசு மறுத்தது. ரொம்ப நன்றி என்று பெரிய கும்பிடு போட்டுவிட்டு அந்த சேனலை யூட்யூப் சேனலாக மாற்றி, முன்பைக் காட்டிலும் லாபகரமாக நடத்தி வருகிறார் அதன் முதலாளி.

சாதி, மதம், வயது உள்ளிட்ட தடைகளை உடைத்தெறியும் வாய்ப்பை சமூகவலைத்தளங்கள் வழங்குவதால், அதன்பால் ஈர்ப்பு கொண்டு ஏராளமானோர் இதைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் 2020 கொரோனா லாக்டவுன், லட்சக்கணக்கானோரை யூட்யூபுக்கு கொண்டு வந்தது. இந்த சோஷியல் மீடியா எந்தளவுக்கு வளர்ச்சியை எட்டிக் கொண்டிருக்கிறதோ, அந்தளவுக்கு கிரிமினல் மயமாகிக் கொண்டிருக்கிறது என்பதும் கவலைக்குரிய விஷயம்.

சமூகவலைத்தள பிரபலத்தைத் பயன்படுத்தி கோயிலுக்கு வசூல் என்று பல லட்சத்தை சுருட்டிய பலே வாலிபர் பற்றிய செய்தியை நீங்கள் செய்தித் தாள்களில் வாசித்திருக்கலாம். வேண்டியதைத் தராவிட்டால், உங்களைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்புவேன் என்று லட்சுமிகாந்தன் காலத்து டெக்னிக்கை சோஷியல் மீடியாவிலும் பயன்படுத்தி கல்லா கட்டிக் கொண்டிருக்கும் பிளாக்மெயிலர்களும் ஏராளமாக உருவாகி இருக்கிறார்கள்.

இதையெல்லாம் கட்டுப்படுத்த புதிய சட்டங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் அரசுகளுக்கு இருக்கிறது. ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில் நுட்ப சட்டங்கள், ஓரளவுக்கு அந்த அரசு சமூகவலைத்தளங்களைக் கட்டுப்படுத்த வகை செய்கின்றன. மாநில அரசுகள்தான் பாவம், திண்டாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு சமூகவலைத்தள குற்றவாளியை கோர்ட்டில் நிறுத்தி தண்டனை வாங்கித்தர வேண்டு
மென்றால், நீதிபதியைத் திருப்திப்படுத்தக் கூடிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இன்னும் update ஆகாத இந்திய நீதிமன்றங்கள், இதெல்லாம் ஒரு குற்றமா என்று குற்றவாளிகளைத் தொடர்ந்து விடுதலை செய்து வருகின்றன.

அளந்து அடியெடுத்து வைத்து வளராமல், காட்டுத்தனமாக வளரும் வளர்ச்சி எந்தவொரு துறைக்குமே நல்லதல்ல. துரதிருஷ்டவசமாக சோஷியல் மீடியா அப்படித்தான் வளர்ந்திருக்கிறது. உலகில் உருவாக்கப்படும் எதுவுமே ஏதோ ஒரு கட்டத்தில் ஓர் ஒழுங்குக்கு வந்துதான் ஆகவேண்டும். சோஷியல் மீடியாவும் வருமென்று நம்புவோம்.

yuvakrishna@gmail.com