‘‘மிஸ்டர் நம்பி, நீங்கள் சென்னையிலோ பெங்களூரிலோ பாகிஸ்தான் உளவாளிகளைச் சந்தித்து நமது நாடு பிரான்ஸிலிருந்து பெற்றிருந்த வைகிங் ராக்கெட்டின் வரைபடங்களைப் பல கோடி ரூபாய்க்கு விற்றுள்ளீர்கள்” என்றார் ஏ என்று அடையாளப்
படுத்தப்பட்ட ஐ.பி. அதிகாரி. ஐ.பி. அதிகாரிகள் தங்கள் பெயர்களையும், பதவியையும் வெளியே சொல்வதில்லை. இந்த விசாரணை திருவனந்தபுரம் அருகேயுள்ள ஒரு தனியார் விடுதியின் விருந்தினர் மாளிகையில் நடந்து கொண்டிருந்தது. புகழ்பெற்ற ராக்கெட் விஞ்ஞானியான நம்பி நாராயணனும் இன்னொரு விஞ்ஞானியான சசிகுமாரனும் பாகிஸ்தானுக்கு உளவு வேலை செய்ததாகக் கைது செய்யப்பட்டு ஐ பியின் கட்டுப்பாட்டிலிருந்தனர்.

“வரைபடங்களை வைத்து ராக்கெட் தயாரிப்பது சாத்தியமே இல்லை.”

“எப்படி சொல்கிறீர்கள்” அதிகாரி கேட்டார்.

“நாங்கள் பிரான்ஸ் நாட்டுடன் சட்டபூர்வமான ஒப்பந்தம் செய்து கொண்டு வைகிங் ராக்கெட் எஞ்சின்
செய்யும் தொழில்நுட்பத்தைப் பெற்று வந்தோம். அதன் பின்பு பதினைந்து ஆண்டுகள் பல விஞ்ஞானிகள் கடுமை
யாக உழைத்து, பல பயிற்சிகள் பெற்று நூறு முறை பிரெஞ்சுத் தொழிற்சாலைக்குச் சென்று வந்த பிறகே அதன்
அடிப்படையிலான விகாஸ் எஞ்சினை உருவாக்க முடிந்தது. வெறும் வரைபடங்கள் தேவையே இல்லை.”

“ஒருவேளை பாகிஸ்தானுக்குத் தேவைப்படலாம் இல்லையா?”

“அவர்களுக்கு ஏன் தேவைப்பட வேண்டும்? வரைபடங்களும் ஒப்பந்தமும் தொழில்நுட்ப உதவியும் பிரான்சிடமிருந்து சட்டபூர்வமாகவே கிடைக்குமே. ஏன் இந்தியாவிடமிருந்து ரகசியமாகப் பெற வேண்டும்?”
———————
‘‘டாக்டர் நம்பி, நீங்கள் எப்போது முதல் முதலாக டாக்டர் அப்துல் காதிர் கானைச் சந்தித்தீர்கள்?”

‘‘யார் அது?”

“நடிக்காதீர்கள் நம்பி. டாக்டர் அப்துல் காதிர் கான் பாகிஸ்தானின் தலைமை அணுசக்தி விஞ்ஞானி. நீங்கள் அவரைச் சந்தித்து ராக்கெட் தொழில்நுட்பத்தை விற்பது தொடர்பாகப் பேசியுள்ளீர்கள். எங்களுக்கு எல்லாம் தெரியும்”

“அணு விஞ்ஞானிக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தில் என்ன வேலை? அப்படியே இருந்தாலும் நமக்கு அதாவது இந்தியாவுக்கு ஒரு தொழில்நுட்பம் வேண்டும் என்றால் அந்த உளவு வேலைக்கு அப்துல் கலாம் அல்லது கஸ்தூரிரங்கனையா அனுப்புவோம்”

‘‘யெஸ், நீங்கள் சொல்வது சரிதான்.”

நம்பிக்கு சட்டென்று ஒரு விஷயம் புரிந்தது. தனது கேள்விகள் அவர்களைக் குழப்பவில்லை. தான் விவாதத்தில் வெற்றி பெறவில்லை. அவர்கள் தன்னிடம் விசாரிப்பதன் மூலம் தாங்கள் புனைந்துள்ள கதையில் உள்ளஓட்டைகளை அடைக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டார். தான் பதில் கேள்விகள் கேட்கக் கேட்க அவர்கள் தங்கள் கதையில் உள்ள பலவீனமான இடங்களைக் கண்டுகொண்டு அவற்றை மாற்றித் தங்களுக்கு எதிராக ஒரு வலிமையான வழக்கைத் தொடுக்க முனைகிறார்கள். உண்மையில் அவர்கள் வழக்கில் உள்ள ஓட்டைகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம்
தான் அவர்களுக்கு உதவுகிறோம்.
———————
இந்தக் கட்டுரைக்கும் மாதவன் நடித்து இயக்கிய ரக்கெட்ரி படத்துக்கும் சம்பந்தமில்லை. ஆனால் அந்தப் படம் “Spies From space” என்ற ராஜசேகரன் நாயர் எழுதிய அட்டகாசமான நூலை நினைவுபடுத்தியது. இந்த ஏவுகணை விஞ்ஞானிகள் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாகச் சொல்லப்படும் விவகாரம், நமது ராக்கெட் தொழில்நுட்பங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்தது பற்றிய வழக்கு, அதன் பின்னணியில் உள்ள பன்னாட்டு சதிகள், உள்ளூர் அற்பத்தனங்கள், வணிகம் ஆகியவற்றை அணுவணுவாக ஆராய்ந்து எழுதப்பட்ட நூல். மிகுந்த அறிவுபூர்வமான பார்வை கொண்ட எழுத்து என்பது மேற்சொன்ன உரையாடலில் இருந்து தெரிகிறது இல்லையா? உலகம் முழுவதும் பெரிதாகப் பேசப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இந்த நூல் இந்திய வாசகர்களிடையேகூட பெரிதாகச் சென்றடையவில்லை.

இந்த சம்பவம், சதி விசாரணை எதிலிருந்து எப்படித் தொடங்கியது என்பதை ஒரு துப்பறியும் நாவலைப் போன்ற விறுவிறுப்புடன், உலகு தழுவிய வணிகத்தையும் அரசியலையும் அறிவியலையும் பேசும்போது அதற்கான அறிவு முதிர்ச்சியுடன் அற்புதமாக எழுதப்பட்ட நூல் இது.
———————
1994. மாலத்தீவு ராணுவத்தில் எழுத்தர் வேலை செய்யும் அழகிய பெண்ணான மரியம் ரஷீதா திருவனந்தபுரம் வருகிறாள். அப்போது இந்தியாவில் பிளேக் பீதி இருந்ததால் அவள் திரும்ப வேண்டிய விமானம் ரத்தாகிவிடுகிறது. மேலும் சில நாட்கள் இந்தியாவில் தங்கி இருக்க அனுமதி கேட்டு இன்ஸ்பெக்டர் விஜயனை அணுகுகிறாள்.

ரஷீதாவின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்ட விஜயன் அவளது அறையைச் சோதிக்கிறார். அவள் யார் யாருக்கு போன் செய்தார் என்ற விவரங்களைச் சேகரிக்கிறார். அதில் கிடைத்த ஒரு எண்ணுக்குப் போன் செய்கிறார். அது இஸ்ரோ கிரையோஜெனிக் புராஜெக்ட் டெபுடி டைரக்டர் சசிகுமாரனுடையது.

விஜயன் அதிர்ச்சியடைகிறார். இது பற்றித் தனது மேலதிகாரியான டி ஐ ஜி.யிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறார். மரியம் ரஷிதாவைக் கைது செய்கிறார்.

ஐ.பி. மற்றும் ரா-வின் திருவனந்தபுரம் கிளைகள் விழித்தெழுகின்றன. செயலில் இறங்குகின்றன. சசிகுமாரன் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் கொண்டு வரப்படுகிறார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்னொரு கிரையோஜெனிக் விஞ்ஞானி
யான நம்பி நாராயணன் கைது செய்யப்படுகிறார்.

இந்தியா பெரும் அதிர்ச்சியடைகிறது. ஊடகங்கள் பெருங்கூச்சல் இடுகின்றன. மாபெரும் தேசத் துரோகம்
கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிறது. கேரளாவின் தலைமை போலீஸ் அதிகாரியான ராமன் ஸ்ரீவஸ்த
வாவும் இதில் சம்பந்தப்பட்டிருப்பது வெளியாகிறது. அவர் பிரிகேடியர் ஸ்ரீ வத்சா என்ற பெயரில் உளவு வேலைகளில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.

மிக ஆழமான விசாரணைகளுக்குப் பிறகு ஐ.பி. திட்டவட்டமான முடிவுகளுக்கு வருகிறது.

மரியம் ரஷீதாவும், பௌஸியா ஹஸனும் மாலத்தீவின் உளவுத்துறை அதிகாரிகள். இவர்கள் இஸ்ரோவின் விஞ்ஞானிகளான சசிசேகரன், நம்பி நாராயணனைத் தொடர்பு கொண்டு இந்தியாவின் விகாஸ் ராக்கெட் எஞ்ஜின், கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பம், PSLV ராக்கெட்டுகள் ஏவப்படுவற்கான அட்டவணை ஆகியவற்றை பாக் உளவாளிகளுக்கு பலகோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்ய முயன்று வருகின்றனர். இதற்கு கிளவ்கோஸ்மோஸ் என்ற ரஷ்ய நிறுவனமும் அதன் அதிகாரியான அலெக்ஸெய் வாசினும் உடந்தை. இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் ஐ.பி.யின் விழிப்புணர்வால் இது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பேரபாயம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. இஸ்ரோ காப்பாற்றப்பட்டு விட்டது. நாடு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. பலர் இன்னும் எத்தனை உளவாளிகள் உள்ளனர் என்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அரசை வற்புறுத்தினர். ஐ.பி. விசாரணையைத் தொடர்ந்து மாஸ்கோ வரை சென்று இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் கிளவ்கோஸ்மாஸ் என்ற விண்வெளி நிறுவனத்தின் டைரக்டரை விசாரிக்கிறது. அதிர்ச்சியடைந்த ரஷ்ய நிறுவனம் இந்த விசாரணையில் ஏதோ தவறாக நடக்கிறது என்று இந்திய அரசுக்குத் தெரிவிக்கிறது.

இந்தியப் பிரதமருக்கும், இஸ்ரோவுக்கும் ரஷ்ய நிறுவனத்துக்கும் மட்டுமே தெரிந்த ரகசியங்களைத் தெரிந்து கொள்ள ஐ.பி. முயல்வதை ரஷ்ய உளவு நிறுவனம் கண்டுபிடித்துச் சொல்கிறது.
———————
இந்தியா 1980களிலும் 1990 களின் தொடக்கத்திலும் பூமியிலிருந்து 800 கிலோ மீட்டர் உயரத்தில் செயற்கைக் கோள்களைக் கொண்டு சென்று நிறுத்தும்
தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்தது. ஆனால் இந்த செயற்கைக் கோள்கள் அதிவிரைவாக வளர்ந்து வரும் செல்பேசி, இணைய தொழில் நுட்பத்
துக்குப் போதுமானவை அல்ல. நவீன தகவல் தொடர்பு துறைகளுக்கு இன்னும் கனமான ராக்கெட்டுகளை, 3 டன் செயற்கைக்கோள்களுடன் 36,000 கிலோ மீட்டர் உயரத்துக்குக் கொண்டு சென்று வான்வெளியில் நிறுத்த வேண்டும். அதற்கு திட, மற்றும் அதீத குளிர் எரிபொருள்களைத் தயாரிக்கும் கிரையோஜெனிக் தொழில்நுட்பம் தேவை. இந்தியாவில் ஏற்பட இருந்த தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு இந்த கிரையோஜெனிக் ராக்கெட் தயாரிப்பது இன்றியமையாதது. தவிர விண்வெளி தொழில்நுட்பம் ஒரு லாபகரமான வணிகமும்கூட. இந்த வணிகத்தில் இந்தியா தாக்குப் பிடித்து நிற்க எப்படியாவது கிரையோஜெனிக் என்ஜினைப் பெற்று விட வேண்டும்.

இந்தத் தொழில்நுட்பம் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜப்பான் நாடுகளிடம் மட்டுமே உள்ளது. இந்தியா கிரையோஜெனிக் என்ஜின்களையும் அவற்றைச் செய்வதற்கான தொழில்நுட்பத்தையும் முதலில் அமெரிக்காவிடமிருந்து வாங்க முயல்கிறது. அமெரிக்கா 950 கோடி ரூபாய் விலை ஏவுகணைகளுக்கு மட்டும் சொல்கிறது. பிரான்ஸ் 600 கோடி ரூபாய்க்குத் தர சம்மதிக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் சோவியத் யூனியன் தகர்ந்து புதிதாக உருவான ரஷ்யா கடும் நிதி நெருக்கடியிலிருக்கிறது. தவிர அதற்குப் பன்னாட்டு வணிகம், மார்க்கெட் விவகாரங்களில் அனுபவமும் இல்லை. எனவே தான் கிரையோஜெனிக் எஞ்ஜின்களை 250 கோடி ரூபாய்க்குத் தருவதாகவும் கூடவே இந்த எஞ்ஜின்கள் செய்யும் தொழில்நுட்பத்தையும் தருவதாகவும் சொல்கிறது. இந்த இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன.

பல்லாயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தை இழப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. கூடவே இந்தியா இந்தத் தொழில்நுட்பத்தைப் பெற்று வணிகப் போட்டியில் இறங்குவதையும் விரும்புவதில்லை. MTCR missile technology control regime என்ற அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுக்கு அளிப்பதைத் தடை செய்கிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் செயற்கைக் கோள்களை நிலை நிறுத்தும் எஞ்ஜின்களை விற்பனை செய்வதற்கு விலக்கு அளித்துள்ளது.

எனவே ரஷ்யா-இந்தியா இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் MTCR ஒப்பந்தத்துக்கு முரணானது என்று புஷ் யெல்ட்சினை மிரட்டி இந்தியாவுக்கு ராக்கெட் என்ஜின் அளிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைக்கிறார். சி.ஐ.ஏ. உளவாளிகள் ரஷ்யா முழுவதும் பரவி
ராக்கெட் தொழில்நுட்பத்தை யாருக்கும் கொடுக்காமல் கண்காணிக்கிறார்கள்.

இந்திய விஞ்ஞானிகளும், அரசும் ரஷ்ய கம்பெனியும் சேர்ந்து அமெரிக்காவை ஏமாற்ற ஒரு வழி கண்டு
பிடிக்கின்றன. அதன்படி ரஷ்யா ராக்கெட் தொழில் நுட்பத்தை KELTEC என்ற ஒரு தனியார் கம்பெனிக்கு அளிக்கும். வெளிப்பார்வைக்கு அந்தத் தனியார் கம்பெனி ரஷ்ய நிறுவனத்தின் கிளை போலத் தெரியும். ஆனால் KELTEC என்ற நிறுவனம் உண்மையில் இஸ்ரோவுக்குச் சொந்தமானது. ரஷ்யாவிடம் தொழில்நுட்பத்தைப் பெற்ற பின்பு இந்த நிறுவனம் அதை இஸ்ரோவுக்குக் கொடுத்து விடும். மிக ரகசியமாகத் தீட்டப்பட்ட இந்தத் திட்டம் செயல்படுத்தப்படத் தொடங்குகிறது.

இந்தியன் ஏர்லைனஸ் மூலம் இயந்திரங்களையும், தொழில்நுட்ப விவரங்களையும் இந்தியாவுக்குக் கொண்டு வந்தால் சி.ஐ.ஏ.வுக்குத் தெரிந்து விடும் என்பதை உணர்ந்து யூரல் ஏர்லைனஸ் என்ற ரஷ்யக் கம்பெனி மூலம் ரகசியமாகக் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்திய விஞ்ஞானிகள் முன்னேற்பாடுகளில் ஈடுபட ரஷ்யா செல்கின்றனர். யூரல் ஏர்லைன்ஸ் துபாய் போன்ற வெவ்வேறு நாடுகளிலிருந்து கிரையோஜெனிக் இன்ஜின் பாகங்களை இந்தியா கொண்டு வந்து சேர்க்கிறது. இறுதிகட்டப் பணிகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த உளவு பார்த்த விவகாரம் வெடிக்கிறது
———————
ஐ.பி.மேலும் மேலும் விசாரித்து இந்திய ராணுவ ஏவுகணைத் துறையை நெருங்குகிறது. அப்துல் கலாமையும் விசாரிக்கிறது. அவர் கடும் அதிருப்தியடைந்து இங்கிருந்து எந்தத் தொழில் நுட்பமும், வரைபடங்களும் வெளியேறவில்லை என்று பேட்டியளிக்கிறார். வரைபடங்களைக் கொண்டு எதையும் தெரிந்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். ராமன் ஸ்ரீவஸ்தவாவும் இப்படி ஒன்று நடக்கவில்லை என்று தெரிவிக்கிறார்.

இந்த நேரம் ரஷ்ய நிறுவனமான Glavkasmos இன் இந்திய அதிகாரியான சந்திர சேகர் அதன் தலைவரான அலக்ஸேய் வாசின் கண்முன்பு கைது செய்யப்படுகிறார். வாசினையும் ஐ.பி.. விசாரிக்கிறது.

ரஷ்யா இப்படி வரைபடங்களைக் கொண்டு ராணுவத் தொழில்நுட்பத்தைக் கடத்த முடியாது என்று கடிதம் மூலம் தெரிவிக்கிறது. வாசினுக்கும் ராணுவ ஏவுகணைகளுக்கும் தொடர்பு இல்லை என்று ரஷ்யா தெரிவிக்கிறது. கிரையோஜெனிக் என்ஜின்களுக்கு எரிபொருள் நிரப்ப இரண்டு நாட்கள் ஆகும், எனவே இவற்றை எந்த நாடும் ராணுவத்துக்குப் பயன்படுத்துவதில்லை என்று விளக்குக்கிறது.
———————
கேரள போலீசின் ஐ.ஜி. ராமன் ஸ்ரீவத்ஸவாதான் இந்த தேசத் துரோக உளவு வேலையை முன்னின்று நடத்திவருபவர் என்று கேரள ஏடுகள் துப்பறியும் கதைகளைத் தொடர்ந்து வெளியிடுகின்றன. அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.

ஒருநாள் அன்றைய கேரள முதல்வர் கருணாகரனுக்குத் தலைவலிப்பது போலிருக்கிறது. அதற்குத் தீர்வாக உள்துறை அமைச்சர் மார்கரெட் ஆல்வாவுக்கு போன் செய்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விடுகிறார் (இவை அப்படியே ராஜசேகரன் நாயரின் சொற்கள். இந்த நடையின் ஸ்டைலுக்காக அவற்றையே பயன்படுத்தியிருக்கிறேன்).

இந்திய அரசு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுகிறது. சி.பி.ஐ. தனது சென்னைத் தலைமையகமான மல்லிகையைத் தளமாகக் கொண்டு விசாரணையைத் தொடங்குகிறது. அசோக்குமார் புலனாய்வு அதிகாரியாக இருக்கிறார். இஸ்ரோவில் கொஞ்சகாலம் பணிபுரிந்தவர் என்பதால் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

ஐ.பி. வழக்கின் அனைத்து ஆவணங்களையும், குற்றப் பத்திரிகைகளையும் ஒன்று திரட்டி டேபிள் ஒர்க்கிலிருந்து தொடங்குகிறார். மரியம் ரஷீதா யார்? அவருக்கும் ராணுவத்துக்கும், இஸ்ரோவுக்கும், ராக்கெட் தொழிநுட்பத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? என்று தேடுகிறார்.

இரண்டாவதாக, பாகிஸ்தானின் ஏவுகணை விஞ்ஞானிகள் மேல் ஒரு கண் வைத்திருக்கும் ராவிட
மிருந்து தகவல்கள் கோருகிறார். அவர்கள் யாராவது இந்தியா வந்தார்களா என்று சரி பார்க்கிறார். மரியம் ரஷீதாவுக்கும் அவர்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்று கண்டுபிடிக்க முயல்கிறார்.

ஒவ்வொன்றாக உண்மைகள் வெளிவருகின்றன. மரியம் ரஷீதா எந்தச் சட்டத்தையும் மீறவில்லை. ஏவுகணைகள், ராக்கெட்டுகள் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது. எந்தப் பாகிஸ்தானி அதிகாரியும், விஞ்ஞானியும் திருச்சிக்கு வரவில்லை. பாகிஸ்தானுக்கு இந்தத் தொழில்நுட்பமே தேவையில்லை. இந்தியாவில் 1996 வரை கிரையோஜெனிக் தொழில்நுட்பமே வரவில்லை. ரஷ்ய அதிகாரி இந்திய தொழில்நுட்பத்தைத் திருடிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பாகிஸ்தானால் விலைக்கே வாங்கிக் கொள்ள முடியும்.

அப்படியானால் இந்தச் சதிக்குப் பின்பு யார் இருக்கிறார்கள்?

அசோக்குமாரின் தேடல் இறுதியில் ஐ.பி. தலைவரிடம் வந்து நிற்கிறது.

ரஷ்யாவில் சி.ஐ.ஏ தொடர்ந்து இந்திய ரஷ்ய ஒப்பந்தத்தைப் பற்றி அறிந்துகொள்ள முயன்றது கண்டுபிடிக்கப்படுகிறது. ஐ.பி.யில் ஒரு பிரிவு சி.ஐ.ஏ.வுக்கு ஆதரவாக இயங்குவது தெரிய வருகிறது. இன்ஸ்பெக்டர் விஜயன் மரியம் ரஷீதாவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அவர் புகார் செய்வதாக மிரட்டுகிறார். அதிலிருந்து மீள விமானத்தில் அவருக்குப் பக்கத்து சீட்டில் பயணம் செய்த சசிகுமாரனை விஜயன் கோர்த்து விட்டதும், கேரள கௌமுடி இதழுக்கும் ஐ.ஜி. ராமன் ஸ்ரீவதசவாவுக்கும் முன்விராதம் இருந்ததால் அந்த இதழ் ஐ.ஜி.யை பற்றி வதந்திகள் பரப்பியது.

இவை அனைத்தையும் இணைத்து ஐ.பி. அமெரிக்க உளவுத் துறைக்கு ஆதரவாக இந்தியா கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தை பெறுவதைத் தடுக்க இந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஐ.பி. அதிகாரிகள் ஒரு ஓட்டலில் அமெரிக்கத் தூதரைச் சந்தித்தது ஆதாரபூர்வமாகக் கண்டுபிடிக்கப்படுகிறது.

இத்துடன் வழக்கு ஊற்றி மூடப்படுகிறது. எல்லோரும் விடுதலை செய்யப்படுகின்றனர். இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி 20 ஆண்டுகள் தாமதமாகிவிடுகிறது.
———————
புத்தகத்தைப் பற்றித் தனியாகச் சொல்ல எதுவும் இல்லை. மேற்சொன்ன விஷயங்களிலிருந்தே அதன் ஸ்டாண்டர்டு தெளிவாகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஸிட்னி ஷெல்டன் தன் கதைகளில் பெரிய தலைவர்களை இஷ்டத்துக்கு இழுப்பார். ஆனால் அவர்களுக்கு உரிய நுட்பம் இல்லாமல் மலினப்படுத்தி அசிங்கப்படுத்திவிடுவார். இது இந்தியாவிலும் பரவலாக நடக்கிறது.

ஒரு சம்பவத்தை அதன் முழுப்பரிமாணத்தோடும் புரிந்துகொள்ள வேண்டும். அதைக் கெடுக்காமல் அதே நேரம் பாய்ந்து செல்லும் நடையில் வாசகருக்குக் கொடுக்கவும் வேண்டும். இந்த இரண்டையும் சாதித்தது ஸ்பைஸ் ஃப்ரம் ஸ்பேஸ்.

iramurugavel@gmail.com