உலகமயக் கொள்கைகள் இந்தியாவில் அமலான 1990களின் துவக்கத்திலிருந்து வெற்றி தோல்வி பற்றிய கவலையின்றி, தனியார் மய எதிர்ப்பியக்கங்களை தொழிற்சங்கங்கள் விடாது நடத்தி வருகின்றன. ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள், பொது இடங்களில் துண்டுப் பிரசுர வினியோகம், மனிதச் சங்கிலி, வேலைநிறுத்தம், ரயில் மறியல், பாரத் பந்த் என்று எத்தனை எத்தனையோ இயக்கங்கள். இது போன்ற எத்தனையோ இயக்கங்களில் மேடையில் அல்லது இயக்கம் முடிந்து டீக்கடையில் தோழர்கள் பேசும்போது, எல்லாவற்றையும் தனியார் மயப்படுத்துகிறார்களே! ராணுவத்தையும் தனியார் மயப்படுத்த வேண்டியது தானே! என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். உண்மையில், முதலாளித்துவ நாடுகளில் தனியார் ராணுவம் எப்போதோ வந்துவிட்டது. அப்படியான ஒரு தனியார் ராணுவத்தில் பணிபுரிந்தவரான பீட்டர் மெர்சர் என்பவரது Dirty deeds done cheap என்ற நூலை சமீபத்தில் படித்தேன். அக்கினிப் பாதை வழியாக இன்னும் பத்திருபதாண்டுகளில் இந்தியாவிற்கும் வந்துவிடப் போகும் தனியார் ராணுவங்கள் பற்றி மெர்சர் மூலம் நான் அறிந்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

மெர்சர் பிரிட்டனின் கமாண்டோ படைவீரராகp பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பிரிட்டன், இந்தியா என்று எந்த நாடாக இருந்தாலும், முன்னாள் ராணுவத்தினர் என்றால் டிரைவர், வாட்ச்மேன் வேலைதான் பெரும்பாலும் கிடைக்கும். பொதுவாக கமாண்டோ வீரர்களாக இருந்தவர்களின் இல்வாழ்க்கை அத்தனை சுமுகமாக இருப்பதில்லை. மெர்சருக்கும் அப்படியே. எங்கேனும் ஓடிப் போய்விடலாமா என்று நினைக்குமளவு வெறுப்பான வாழ்க்கை. அப்போதுதான் இவரது நண்பர் ஒருவர் தான் ஒரு தனியார் ராணுவக் கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும் நாள் சம்பளம் 750 டாலர் என்றும் சொல்கிறார். வேலை பாக்தாத்தில்.. கடினமான வேலை எல்லாம் இல்லை. மெய்க்காப்பாளர் வேலை. மெர்சருக்கு ஆசை வந்துவிடுகிறது. நண்பர் மூலமாக ஒரு தனியார் ராணுவத்திற்கு விண்ணப்பிக்கிறார். நேர்காணல் நடக்கிறது. வேலை கிடைக்கிறது. நண்பரளவு சம்பளம் இல்லை. ஆனால் மிக குறைவாகவும இல்லை. தினமும் 500 டாலர். அப்போது ஈராக் யுத்தம் நடக்கும் சமயம். ஈராக்கிற்கு அனுப்பப்படுகிறார் மெர்சர். தினக் கூலி 500ஐ நல்லபடியாக வாங்கி செலவழிக்க தினமும் தான் உயிரோடு இருக்க வேண்டும் என்பதை அறிந்தும், அறியாதவராக ஈராக் செல்கிறார் மெர்சர்.

ஈராக் முழுக்கவே அமெரிக்கப் படைகளும், இவர்களைப் போன்ற தனியார் கூலிப் படைகளும்தான். பார்க்கப் போனால் கூலிப் படையினர்தான் அதிகமாக உள்ளனர். அங்கு போன பிறகுதான் மெர்சர் வேலைக்குச் சேர்ந்த தனியார் ராணுவக் கம்பெனி போல ஏகப்பட்ட கம்பெனிகள் இருப்பதும், அவற்றின் ஊழியர்கள், அதாவது வீரர்கள் ஈராக்கிற்குp போர் புரிய அனுப்பப்பட்டிருப்பதும் மெர்சருக்குத் தெரிகிறது, ஈராக்கில் அப்போது கிட்டத்தட்ட 500000ற்கும் மேற்பட்ட தனியார் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். இந்த தனியார் ராணுவக் கம்பெனிகள் எல்லாம் மிகப் பெரியவை. பிளாக் வாட்டர் என்ற ஒரு தனியார் ராணுவக் கம்பெனி வீரர்கள் மட்டுமே ஈராக்கில் சுமார் 20000 பேர் இருந்தார்கள். அந்தக் கம்பெனியிடம் 20 போர் விமானங்கள் கூட இருந்தன.

மெர்சர் போன்ற வீரர்கள் தனியார் ராணுவக் கம்பெனிகளுக்கும் தேவை. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கும் தேவை. ஈராக் போன்ற ஒரு தேசத்தில், தன்னுயிர் போவது பற்றிய கவலையில்லாத தற்கொலைப் படைகள் நிறைந்த தேசத்தில் அமெரிக்க ராணுவத்திற்கு ஆள்சேதம் ஏராளம். எனது ஏகாதிபத்தியக் கனவிற்காகத் தினந்தோறும் நாட்டின் இத்தனை இளைஞர்களை நான் பலி கொடுத்து வருகிறேன் என்று எந்த கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபராலும் மக்களிடம் சொல்ல முடியாது. அடுத்த தேர்தலில் வாக்கு பெற முடியாது. இது ஒரு முக்கிய காரணம். மற்றொரு முக்கிய காரணம், என்னதான் பெரிய ஏகாதிபத்தியம் என்றாலும். ஐநா சபையே தன் பாக்கெட்டிற்குள்தான் என்றாலும், போர்க் குற்றங்களை, அட்டூழியங்களை ஒரு அளவிற்கு மேல் செய்ய முடியாது. உலகிற்குப் பதில் சொல்லி யாக வேண்டும். இதற்கெல்லாம் நல்ல தீர்வு தனியார் ராணுவம்தான்.

பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபம் மட்டும்தான் குறிக்கோள். அந்த லாபம் மென்பொருள் விற்றாலும் சரி, போர்விமானம் விற்றாலும் சரி, கம்ப்யூட்டர் சாம்பிராணியோ அல்லது கோமியமோ எதை விற்றாலும் சரி, இல்லை மனித உயிர்களையே விற்றாலும் கூட சரி, லாபம் வந்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவுதான். எனவே, அமெரிக்காவிற்குத் தனியார் ராணுவம் என்ற தேவை இருப்பதை அறிந்ததும் பல நிறுவனங்களும் அந்த சேவையை அளிக்க முன்வந்துவிட்டன. இந்தக் கம்பெனிகள் எல்லா நாட்டு முன்னாள் ராணுவத்தினரையும் வளைத்துப் போட்டன. அவர்களும் பாவம், பணத்திற்காகத் தினமும் செத்துப் பிழைக்கும் இந்த வேலைக்கு வந்தார்கள். இவர்கள் எல்லோருக்கும் கம்பெனி மெர்சர் மற்றும் அவரது நண்பருக்குத் தந்தது போல் 500, 750 டாலர் என்று வாரி வழங்கியது என்று நினைக்க வேண்டாம். அதெல்லாம் முன்னாள் பிரிட்டிஷ் எஸ்ஏஎஸ் கமாண்டோக்கள், அமெரிக்க நேவி சீல்கள், டெல்டா ஃபோர்ஸ்க்காரர்களுக்கு மட்டும்தான். இவர்களைக் குறைந்த எண்ணிக்கையில்தான் வேலைக்கு எடுப்பார்கள். நேபாளி கூர்க்காக்கள், பிஜித் தீவினர், பெரு நாட்டைச் சேர்ந்தவர்களைத்தான் அதிகமாக எடுப்பார்கள். இவர்களுக்குக் குறைவான சம்பளம் கொடுத்தால் போதும். தற்போது தென் ஆப்ரிக்க கம்பெனி
கள் நிறைய இந்தத் தொழிலில் இறங்கி விட்டன. இவர்கள் வந்த பிறகு சம்பளம் மேலும் குறைந்து போய் விட்டது. இப்போது கூர்க்காக்களுக்கு தினக்கூலி 50 டாலர். பெருவியருக்கு 33 டாலர். தென் ஆப்ரிக்கர்களுக்கு மட்டும் சற்று கூடுதலாக 140 டாலர். அமெரிக்கர்களுக்கு 450, 500 டாலர்.

ஈராக்கிற்கு அமெரிக்க அரசியல்வாதிகள், செனட்டர்கள், ஐநா அதிகாரிகள், செஞ்சிலுவைச் சங்கத்தினர் என்று யாராவது விஐபிக்கள் வந்துகொண்டே இருப்பார்கள். அமெரிக்க ராணுவத் தளம் ஒரு இரும்புக் கோட்டை. ஒரு கொசு கூட நுழைய முடியாது. விமான நிலையமும் அவ்வாறே. பாக்தாத் விமான நிலையம் சுமார் 45 சதுர மைல் பரப்பளவுள்ளது. அதன் பாதுகாப்பிற்கு மட்டுமே 50000 அமெரிக்கர்களும், 3000 தனியார் வீரர்களும் இருந்தனர். ஆனால், விமான நிலையத்திலிருந்து அமெரிக்க ராணுவத் தளத்திற்கு வரவேண்டுமல்லவா? அந்தப் பாதை படுபயங்கரமானது. அந்தப் பாதையில் எந்த நொடியும், எதுவும் நடக்கலாம். மிக அதிநவீன ஆயுதங்களோடு, மிக மிக வேக
மாக அந்த இடத்தைக் கடக்க வேண்டும். எதிரில் யாராவது வந்தால் கண்மண் தெரியாமல் சுட்டுக் கொண்டே வந்துவிட வேண்டும். இப்படி வந்து போகும் விஐபிகளுக்குப் பாதுகாப்பு தந்தே ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரை விட்டுவிட்டதால், இந்த விஐபி எஸ்கார்ட் பணி மெர்சர் போன்ற தனியார் வீரர்களுக்கு. ஏனெனில், இவர்கள் செத்தாலும் கேள்வி இல்லை.

எனவே, மெர்சர் போன்ற கூலிப் படையினர் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வழிமுறை
களை தாமே வகுத்துக் கொண்டார்கள். காரணம், தனியார் ஊழியர்கள் என்பதால் ராணுவ ஆலோசனைக் கூட்டங்களில் இவர்கள் கலந்து கொள்ள முடியாது. எந்தெந்த பகுதிகளில் எதிரிகளின் நடமாட்டம் அதிகம், எந்த தேதியில் எதிரி எந்த இடத்தில் தாக்க
திட்டமிட்டுள்ளான், எந்த விஐபியை அவர்கள் அதிகமாகக் குறி வைத்துள்ளார்கள் போன்ற உளவுத் தகவல்களை சிஐஏ ராணுவத்திடம் மட்டுமே சொல்லும். ராணுவம் அவற்றைத் தனியார் கம்பெனி உயரதிகாரிகளிடம் முழுமையாகப் பகிர்ந்து கொள்ளாது. சிஐஏ சொல்லும் ஆபத்தான வேலைகள் அனைத்திற்கும் கூலிப் படையை ஏவி விட்டுவிட்டு தன் ஆட்களைப் பாதுகாத்துக் கொள்ளும். இந்த கூலிப் படைகளுக்கு கவச
வாகனங்கள் எல்லாம் கிடையாது. இவர்களாக வாகனங்களை வாங்கிக் கொண்டு, அவற்றின் மீது இரும்புத் தகடுகளை வெல்டு செய்து கவச வாகனமாக மாற்றிக் கொள்வார்கள். ஒவ்வொரு விஐபி பாதுகாப்பின்போதும் வாகனங்கள் கடுமையாக அடி வாங்கிவிடும்.

ஈராக். துருக்கி எல்லையில் உள்ள துர்கிஸ்தான் பகுதியும் ரத்த பூமிதான் என்றாலும், ஈராக்கை ஒப்பிடும்போது அமைதிப் பூங்கா. அங்குள்ள கள்ளச் சந்தை மிகவும் புகழ் பெற்றது. அங்கு எது வேண்டு மானாலும் வாங்கலாம். ஒரு ஏகே 47 ஐம்பது டாலர். உஸி சப்மெஷின் கன் 100 டாலர். டயோட்டா, ஹிலக்ஸ், லாண்ட் க்ரூஸர் எல்லாம் 25000 முதல் 55000 டாலர் வரையில் கிடைக்கும். அவ்வப்போது வாங்கி வந்து இரும்புத் தகடு வெல்ட் வைத்து கவச வாகனமாக மாற்றிக் கொள்வார்கள். ஆனால், துர்கிஸ்தானிலிருந்து வாகனத்தை ஓட்டி வருவது கடும் ஆபத்தானது. அப்படி வாங்கி வரும்போது தாக்கப்பட்டு இறந்தவர்கள் பலர். மெர்சர் அங்கு வேலை பார்த்த 15 மாதங்களில் இது மாதிரி 27 வாகனங்கள் வாங்கி வந்திருக்கிறார். அதாவது 27 வாகனங்கள் சேதமாகியிருக்கின்றன. எனவே, வாகனத்தில் செல்லும்போது தாக்கப்பட்டால் எதிர்கொள்வதற்கு இந்தக் கூலி ராணுவத்தினர் தமக்கென்று சில விதிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டனர். இவர்களது வாகனங்களிலிருந்து ஈராக் வாகனங்கள் எப்போதும் 20 மீட்டர் இடைவெளி விட்டுத்தான் வரவேண்டும் என்று மிகத் தெளிவாக அரபிமொழியில் எழுதி இருப்பார்கள். 20 மீட்டருக்குள் வந்தால் வாகனத்திற்கு முன்பாகச் சுடப்படும். அதன் பிறகும் வந்தால் டயர்கள் சுடப்படும். பிறகு அந்த வாகனத்தில் வருவோர்மீது சுடப்படும். அவர்கள் சிவிலியன்களானாலும் சரி. போர் விதிகளின்படி அமெரிக்க ராணுவத்தால் இவ்வாறு சுட முடியாது. கூலிப்படை சுட்டால் கேள்வி கிடையாது.

ஈராக்கியர்களுக்கும் இது தெரியும். அவர்கள் இந்தக் கூலிப் படையினரைத் தாக்குவதில் ஆர்வம் காட்ட
மாட்டார்கள். அவர்கள் அமெரிக்க ராணுவத்தோடுதான் மோதுவார்கள். காரணம், அமெரிக்க ராணுவத்தோடு மோதினால், பிடிபட்டால் கைதுதான். பின்னால் பேச்சுவார்த்தை மூலம் இவர்கள் தரப்பில் சில ராணுவ வீரர்களை விடுதலை செய்து, பதிலுக்கு தம் ஆட்கள் சிலரை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், கூலிப்படையிடம் மோதும்போது இந்த வசதி கிடையாது. கூலிப் படைக்குக் கைது செய்யும் அதிகாரம் கிடையாது. எனவே, அது தன்னிடம் சரணடை பவர்களை அந்த இடத்திலேயே கொன்று பிரச்சனையை முடித்துவிட்டுப் போய்விடும். இதன் காரணமாக அமெரிக்க ராணுவம் கூலிப்படைகளையே எல்லா இடங்களிலும் முன்னிறுத்தும்.

அமெரிக்க ராணுவம் கூலிப்படைகளை அதிகமாக வெளி வேலைகளுக்கு வைத்திருந்ததற்கு மற்றொரு காரண
மும் இருந்தது. ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்தால், எதிரி எப்படிப்பட்ட முட்டாளாக இருந்தாலும் இவர்களது ஆள்பலம். ஆயுத பலம், பலவீனம் எல்லாவற்றையும் கண்டுபிடித்து விடுவான். சமயம் பார்த்துப் போட்டுத் தள்ளிவிடுவான். எனவே அமெரிக்க ராணுவம் தனது ராணுவத்தினரை ஈராக்கில் அதிக நாட்கள் தங்க விடாது மாற்றிக் கொண்டே இருக்கும். கூலிப் படைகள் மட்டுமே நிரந்தரமாக அங்கே தங்கி எதிரியின் உளவாளிகளின் கண்ணில் சிக்கி அழிவார்கள்.

கூலிப்படைகளுக்கு கவச வாகனங்கள் கிடையாது, ஏதேனும் தாக்குதலில் சிக்கினால், விமானப் படையின் உதவியும் சிடையாது என்பதால் உயிர்சேதம் அதிகம். அதிலும் கூர்க்காக்கள்தான் அதிகமாக உயிரிழப்பார்கள். வாகனத்தின் கூரையில் சுழலும் துப்பாக்கியை வைத்துக் கொண்டு, எந்தப் பாதுகாப்புமின்றி பயணிக்கும் துணிச்சல் மெர்சர் போன்ற அமெரிக்கக் கமாண்டோக்களுக்கே கிடையாது. ஆனால் நேப்பாளிகள் துணிச்சலாக நிற்பார்களாம். குண்டுகள் தீர்ந்தாலும், தங்களது குக்ரி என்ற கத்தியோடு எதிரிமீது சிறிதும் அஞ்சாது பாய்ந்துவிடுவார்களாம். இயல்பாகவே தனியார் ராணுவக் கம்பெனிகளில் நேப்பாளிகளின் உயிர்சேதம்தான் மிக அதிகம். அவர்களது நாடு மிகவும் சிறியது என்பதால் இறந்த வீரரின் உடலைச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வது கூட மிகவும் சிரமம். அந்த வேலைகளையெல்லாம் ஒருங்கிணைக்க அவர்கள் நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள்கூட யாரும் ஈராக்கில் இருக்க மாட்டார்கள். ஒரு மோசமான தாக்குதலில் மெர்சரின் குழுவில் இருந்த பதினாறு கூர்க்காக்கள் மொத்தமாக உயிரை விட்டார்கள். மெர்சர் படுகாயமடைந்தார். உயிர் பிழைத்ததே பெரும்பாடாகிவிட்டது. அதோடு இந்த வேலையை விட்டு விட்டு சொந்த ஊர் திரும்பினார். இப்போது எண்ணெய்த் துரப்பணக் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறார். Rope access technician என்ற இதுவும் மிக ஆபத்தான பணிதான். 200. 300 அடி உயர கோபுரங்களில் உச்சியில் நின்று வேலை செய்ய வேண்டும். இதற்கு முன்னாள் கமாண்டோக்களைத்தான் எடுப்பார்கள். ஆனால், எந்த நேரம் துப்பாக்கி குண்டு நம்மை நோக்கிப் பாய்ந்து வருமோ என்ற பயம் கிடையாது. இயல்பாகவே ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு, தனியார்மய எதிர்ப்பு மனநிலை கொண்டவன் நான் என்பதால் இந்தப் புத்தகம் முழுவதும் தனியார்மயத்தின் கோரமுகத்தை என்னால் பார்க்க முடிந்தது. ஆனால் பீட்டர் மெர்சர் காசுக்காகத் தெரிந்தேதான் போனேன்… என்ற மனநிலையில் உள்ளதை உள்ளபடி அப்படியே கூறும் தொனியில் எழுதியிருக்கிறாரேயன்றி, அதில் எந்த இடத்திலும் எப்படி சுரண்டுகிறார்கள் பார் என்ற தொனி இல்லை.

இதைப் படிக்கும்போது எனக்கு பிரடெரிக் ஃபார்சித்தின் dogs of war நினைவிற்கு வந்தது. ஒரு பன்னாட்டுக் கம்பெனி கூலி ராணுவத்தை வைத்து ஒரு சிறு ஆப்பிரிக்க நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் கதை. 1974இல் வந்த நாவல். பின்னர் திரைப்படமாகவும் வந்தது. 2004இல் இந்தக் கதையைப் படித்து விட்டு, ஈக்விடோரியல் கயானாவில் தன் செலவில் ஒரு கூலிப் படையை ஏவிவிட்டு அந்த நாட்டையே பிடிக்க முயன்று
தோல்வியுற்றார் ஒரு பெரிய இடத்துப் பிள்ளை. அவர் மார்கரெட் தாட்சரின் மகன் மார்க் தாட்சர். அம்மா பிரதமர் என்பதால். வருட சிறைத் தண்டனை தந்து தண்டனையையும் நிறுத்தி வைத்து விட்டார்கள். இது பற்றியெல்லாம் படித்த காலத்தில் இப்படியும் நடக்குமா
என்று நினைத்ததுண்டு. இன்று எல்லாம் நடக்கி றது. பீட்டர் மெர்சர் போன்றோர் அவற்றை ஆவணப் படுத்துகிறார்கள்.

ஆர்வமுள்ளோர் வாசிக்க. Dirty Deeds Done Cheap. Peter Mercer.

subbarao7@gmail.com