உலக இலக்கியம் படைப்பது என்பது பேஜாரான காரியம். நம்மிடம் சரக்கு இருக்கிறதா, சரியாக எழுதத் தெரியுமா, எண்ணம்-
மொழி-தொனி-கடுகு-சீரக வகையறாக்கள் சரியாக இருக்கிறதா என்பதல்ல முக்கியம். எந்தப் பெருஞ்செயலும் ஒரு குடும்பஸ்தனால் நிகழவே செய்யாது என்று பா.ராகவன் தீர்மானமான முடிவுக்கு வந்திருந்தான். மனத்துக்கு திட்டவட்டமான துறவற ஒழுக்கம் தேவைப்பட்டுவிடுகிறது. செயல் ஒன்றைத் தவிர வேறெதிலும் பற்றற்ற சிந்தை. அதனினும் முக்கியம் இடுப்புப் பெருச்சாளியாக அதை ஒருவர் உடன் இருந்து விமரிசித்துக் கொண்டே இல்லாதிருப்பது.

பாராகவனின் தர்ம பத்தினி, திருமணமான புதிதிலேயே அவனிடம் ஒரு வினாவை முன் வைத்திருந்தாள். ‘நீ எழுத்தாளன்தான் என்று ஏன் என்னிடம் சொல்லவேயில்லை? நீ ஒரு பத்திரிகையாளன் என்று சொல்லித்தான் உன்னை எனக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள்.’

ஒரு மனிதனின் புற அடையாளம் எவ்வளவு பெரிய துர்ச்சேவை ஆற்றுகிறது பார்த்தீர்களா? ஒரு பத்திரிகையாளன் பரிணாம வளர்ச்சியில் எழுத்தாளனாகத் தன்னை உணரக்கூடாதா அல்லது இரண்டுமாக இருந்துவிட்டுப் போவதில் உள்ள இருப்பியல் இக்கட்டுகள்தாம் என்ன?

ஆனால் இப்போது எதுவும் பேசி விடுவதற்கில்லை. ஒழிகிறது சனியன் என்று ஓர் உலக இலக்கியம் படைப்பதற்கு வாய்ப்புத் தருகிறாள் பரதேவதை. சீரியல் எழுதிச் சீரழிய வேண்டாம். வருமானம் குறித்துக் கவலை கொள்ள வேண்டாம். அந்தக் கொலம்பியக் கோமானுக்கு அவனது பத்தினி தெய்வம் சொன்னதைப் போலவேதான் பாராகவனின் சிறந்த பாதியும் சொல்கிறது. நீ எழுதி முடி. அது வரை குடும்பத்தை நான் பார்த்துக்
கொள்கிறேன்.

நல்ல டீலிங்தான். நாளையே உட்கார்ந்துவிட முடியும். ஆனால் கதைச் சுருக்கம் சொல்லி சம்மதம் வாங்க வேண்டும் என்கிற நிபந்தனை ஒன்று உள்ளது. அதுதான் பேஜார்.

‘உனக்கு நடந்ததைத்தானே எழுதப் போற? அப்ப சொல்றதுல என்ன இருக்கு?’ என்றது பிரத்தியட்ச தேவதை. நியாயமான வினா என்றே உங்களுக்கும் தோன்றக் கூடும். ஆனால் நமது கதாநாயகனின் பிரச்னை வேறு. அதை அவனது பத்தினியிடம் சொல்ல முடியாது. உங்களுக்குச் சொல்கிறேன்.

உத்தியோகம் என்ற ஒன்று அகப்பட்டதும் அவனுக்கு அவனது பெற்றோர் திருமணம் என்ற ஒன்றைச் செய்து வைத்தது பற்றியும் அவ்வயதுக்கே உரிய பாதி வெந்த பக்குவத்தில் அவனும் அதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு விட்டது குறித்தும் இக்காவியத்தின் முதற் பகுதியில் கண்டோம். ஆனால் அக்கட்டம் அவன் வாழ்வில் வருவதற்கு முன்னால் அவன் வேறொரு பெரு முயற்சியில் ஈடுபட்டிருந்தான்.

கடவுளைப் பார்த்துவிடுவது.

பரீட்சைத் தோல்விகள், வாழ்வின் சகல விதமான முயற்சிகளிலும் உண்டான சறுக்கல்கள், உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் எளிதாகவே அமைந்துவிடும் எதுவும் தனக்கு மலையைப் புரட்டும் காரியமாக மட்டுமே சிக்குகிற அவலம் தந்த மன உளைச்சல், அனைத்துக்கும் மேலாகத் தான் ஒரு பெரிய சைபர் என்கிற தெளிவு.

கடவுள் என்ற ஒருவன் உண்மையில் இருப்பானே யானால் அவனைத் தேடிப் போய்ப் பார்த்து நாலு வார்த்தை விசாரித்துவிட்டு வர வேண்டும் என்று அவன் நெடுங்காலமாக நினைத்துக்கொண்டிருந்தான். தேர்வுத் தோல்விகளும் எதிர்காலம் குறித்த அச்சமும் அதற்கு ஒரு வாய்ப்பை உண்டாக்கித் தரவே, ஊருக்கும் யாருக்கும் தொந்தரவில்லாமல் ரிஷிகேசத்துக்குச் சென்று ஒரு சன்னியாசியாகி, தரும சத்திரங்களில் சப்பாத்தியும் பருப்புக் கூட்டும் சாப்பிட்டுக்கொண்டு மிச்ச காலத்தைக் கழித்துவிட முடிவு செய்தான். ஒரே பிரச்னை, இமயமலைப் பிராந்தியங்களின் குளிர். அது பழகும் வரை போட்டுக்கொள்ள ஸ்வெட்டர், ஜெர்க்கின் போன்றவையும் போர்த்திக்கொள்ள நல்ல கனமான கம்பளியும் தேவைப்படலாம். ஒதுங்க ஓரிடம் பிடிப்பது வரைதான் பாடு. நல்லதொரு குருநாதர் கிடைத்து, ஆசிரமத்தில் அட்மிஷன் போட்டுவிட்டால் தங்குமிடச் சிக்கலும் இல்லாமல் போய்விடும்.

ஆனால் இதெல்லாம் நடக்கும் வரை தாக்குப் பிடிப்பதுதான் சவால். அதையும் பார்த்துவிடலாம் என்று முடிவு செய்து புறப்பட்டான்.

பாராகவனின் நாவல் புறப்படுகிற புள்ளியும் இதுதான். மேற்படி தீர்த்த அல்லது தீராத யாத்திரையில் அவன் நானாவித காஷாயதாரிகளைச் சந்திக்க நேர்ந்தது. ஒருவர் இருவரல்லர். மிகப் பலர். அவர்களுள் பெரும்பாலானவர்கள் பரமஅயோக்கியர்களாக இருந்தார்கள். அதெப்படி எல்லா கபடவேடதாரிகளும் தன்னைப் போலவே சிந்தித்துச் செயலாற்றுபவர்களாக இருக்கிறார்கள் என்று பாராகவன் தீராத வியப்புக் கொண்டான். குளிக்காத அயோக்கியர்கள் தாதாக்களாகிறார்கள். குளித்த அயோக்கியர்கள் சாமியார்களாகிறார்கள் என்ற முதல் தெளிவு அவனுக்கு அப்போது கிடைத்தது.

அந்தப் பயணத்தில் அவன் சந்தித்த காஷாயதாரிகளுள் ஒரு குறிப்பிட்ட ஜீவாத்மா மிகவும் முக்கியமானவன். அவன் பெயரைக் குறிப்பிடுவதை நம் கதாநாயகன் அநேகமாக விரும்ப மாட்டான் என்று நினைக்கிறேன். பரவாயில்லை.பெயரில் என்ன இருக்கிறது? ஆனால் அவன் ஒரு சில்லறை மாந்திரீகன்.

அருணாசலப் பிரதேசத்தின் சியோமி மாவட்டத்தில் உள்ள டடோ என்ற இரண்டுங்கெட்டான் நகரத்தில் பாராகவன் அவனைச் சந்தித்தான். கனத்த குளிர் காலம். தவிர இரவெல்லாம் கொட்டு கொட்டென்று பேய் மழை அடித்துப் புரட்டிக்கொண்டிருந்த சமயம். ஒதுங்க ஓரிடம் இல்லாமல் பேருந்து நிலையத்திலும் லாரிகளின் அடியிலும் பள்ளிக்கூட வராண்டாவிலும் மாறி மாறி ஒதுங்கிக் கிடந்து, பாராகவன் தன்னைப் புடம் போட்டுக்கொண்டிருந்தபோது அந்தப் பிரகஸ்பதி அவனிடம் வந்து சேர்ந்தான்.

‘சுருட்டு இருக்கிறதா?’

‘இல்லை. எனக்குப் பழக்கமில்லை.’

‘அப்ப உன் பாக்கெட்டில் இருப்பது என்ன?’ என்று அவன் சுட்டிக் காட்டவே பாராகவன் குழப்பமுடன் தன் சட்டை பாக்கெட்டில் கைவிட்டுப் பார்த்தான். ஒரு சுருட்டு இருந்தது. இது முதல் அதிர்ச்சி என்றால், மொத்த தேகமும் நனைந்து அவனே ஓர் உரித்த கோழி
போலத்தான் கிடந்தான். ஈரச் சட்டையைக் கழட்டி விடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் தான் அந்தப் பரதேசி அவனிடம் வந்திருந்தான். இப்போது என்னடாவென்றால் ஈரச் சட்டையின் ஈர பாக்கெட்டுக்குள் துளி ஈரமும் படாத ஒரு முழுச் சுருட்டு!

எப்படி இருக்கிறது கதை?

நெடுநேரம் அவன் அந்த விளையாட்டைத் தொடரவில்லை. கருணை கொண்ட ஒரு சத்குருநாதரின் தோரணையுடன் பாராகவனிடம் தன்னை வெளிப்படுத்திக்கொண்டான். அவன் ஒரு காளி உபாசகன். காளிகா புராணத்தில் உள்ள ஒன்பதாயிரம் செய்யுள்களையும் பாராயணம் செய்து ஒரு குருவிடம் மந்திரோபதேசம் பெற்றுப் பயிற்சிகள் செய்து சித்து கைவரப் பெற்றதாகச் சொன்னான். பாராகவன் அசந்து போனான்.

குருவை நீ தேடிப் போக முடியாது. தகுதி இருந்தால் குரு உன்னை நாடி வருவார் என்ற முன்னோர் சொல்தான் எவ்வளவு உண்மை!
கண்ணீர் மல்க பாராகவன் அவனது கரங்களைப் பிடித்துக்கொண்டு தன்னைத் தடுத்தாட்கொள்ளச் சொல்லிக் கேட்டான். அவனோ, அங்கே அவர்கள் நின்றுகொண்டிருந்த பேருந்து நிறுத்தத்துக்கு எதிர்ப்புறம் இருந்த சாராயக் கடையைச் சுட்டிக்காட்டி, ஒரு புட்டி சாராயம் எடுத்து வரும்படி சொன்னான்.

‘பணம்?’

‘அதெல்லாம் வேண்டாம். நீ போய் எடு. அவன் பணம் கேட்க மாட்டான்.’

‘எடுப்பதா? கேட்பதா?’

‘எடு.’

அவன் திரும்பவும் அதையேதான் சொன்னான்.

பாராகவனுக்குக் குழப்பமாக இருந்தது. அவன் ஒரு அயோக்கியன்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் திருட்டு வரை சென்றதில்லை. தவிர, ஒரு சாராயக் கடையின் உட்புறத் தோற்றம் எப்படி இருக்கும் என்று கூட அவனுக்குத் தெரியாது. காரணம், அவன் குடிப்பதில்லை. உள்ளே சென்று ஒரு புட்டியை எடுத்து வருவது என்றால் என்ன?

‘தெரியாமல் எடுத்து வந்தால்தான் திருட்டு. நீ எல்லோரும் பார்க்க எடுத்து வரப் போகிறாய். போ’ என்று அந்தக் காளி உபாசகன் சொன்னான்.

‘எப்படி விடுவார்கள்?’

‘நீ போய் முதலில் எடு. இங்கே நின்று சிந்தித்துக் கொண்டிராதே.’

சரி. குருநாதர் ஏதோ பரீட்சை வைக்கிறார். ஃபெயில் ஆகாமல் அவரே காப்பார் என்று எண்ணிக்கொண்டு பாராகவன் அந்த சாராயக் கடையை நோக்கிச் சென்றான்.

அது ஒரு சிறிய குடிசை. ‘எல்’ வடிவில் இரண்டு பெஞ்சுகள் போடப்பட்டு நான்கு பேர் மட்டும் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள். எதிர்ப்புற கல்லாவுக்கு அருகே ஒரு டேபிள் இருந்தது. அதன்மீது ஏழெட்டு சாராய புட்டிகள் இருந்தன. அரை அடி உயரத்தில், மூடியில்லாத ஒரு தகர டின்னில் ஊறுகாய் வைத்திருந்தார்கள்.

பாராகவன் தயங்கித் தயங்கி உள்ளே சென்றபோது கல்லாவில் இருந்த இளைஞன் யாரையோ அழைத்தபடி எழுந்து போனான். அப்போதுதான் அந்தச் சிறிய குடிசைக்குள்ளே இன்னும் சிறிதாக இன்னொரு அறை இருந்ததை பாராகவன் கவனித்தான். சரக்கு சேகரம் இருக்கும் இடமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டான். சுற்றுமுற்றும் பார்த்தான். குடித்துக்கொண்டிருந்த யாரும் அவனைக் கவனிக்கவில்லை. அவர்களுக்குள் பேச்சுவார்த்தையும் இருக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒரு கடமையே போலக் குடித்துக் கொண்டும் ஊறுகாயை நக்கிக்கொண்டும் இருந்தார்கள்.

நடுங்கியபடியே பாராகவன் ஒரு சாராய புட்டியை எடுத்தான். பயத்தில் தலை சுற்றியது. வேகமாக வெளியே ஓடிவிட வேண்டும் என்று நினைத்தவன், குருநாதர் ஊறுகாய் இல்லாமல் எப்படிக் குடிப்பார் என்று நினைத்து தகர டின்னில் கையைவிட்டுச் சிறிது
வழித்து எடுத்துக்கொண்டு அவசரமாக வெளியேறினான்.

வெற்றி. யாரும் பார்க்கவில்லை. ஏதும் கேட்கவில்லை. இனியும் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு, குருநாதரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிடுவதுதான் ஒரே வழி.

மூச்சிறைக்க சாலையைக் கடந்து குருநாதரை நெருங்கி வெற்றிக் கோப்பையை நீட்டினான்.

‘யாரும் எதும் கேக்கல இல்ல?’

‘இல்ல. யாரும் பாக்கக்கூட இல்ல. நான் உள்ள போனதும் கல்லாவுல இருந்தவன் எழுந்து உள்ள போனான்.’

‘அவ்ளதான். அங்க பாரு’ என்று வேறொரு திசையில் சுட்டிக் காட்டினார் குரு.

அங்கே அவனைப் போலவே ஒரு பெண் மழைக்கு ஒதுங்கி, ஒரு கடை வாசலில் படுத்திருந்தாள்.

‘என்ன?’

‘போய் அவள கூட்டிட்டு வா.’

‘எங்க?’

‘இங்கதான்.’

‘எதுக்கு?’

‘சரக்கு கொண்டாந்துட்ட. சைட் டிஷ் வேணாவா?’ என்றார் குருதேவர்.

பாராகவன் அபத்தமாகத் தன் கையில் வழித்து வந்த ஊறுகாயை இப்போது அவர்முன் நீட்ட, குரு அவன் கையை அப்படியே தன் வாயருகே எடுத்துச் சென்று நாக்கை நீட்டி மொத்தமாக நக்கித் தின்றார். பிறகு, ‘இப்ப போய் கூட்டிட்டு வா’ என்று சொன்னார்.

இதெல்லாம் காளிகா புராணம் பாராயணம் செய்தவர் செய்கிற வேலையா? பாராகவனால் நம்பவே முடியவில்லை. குருட்டுத் தைரியத்தில் சாராய புட்டியை வேண்டுமானால் திருடிக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் முன்பின் அறிமுகமில்லாத ஊரில், யாரென்றே தெரியாத ஒரு பெண்ணிடம் போய் என்ன பேசுவது, எப்படிக் கேட்பது? தவிர, இதெல்லாம் அவன் மனக் கட்டமைப்புக்கு உட்படாத செயல். சரி-தவறு, பாவம்-புண்ணியம் விவகாரத்துக்கே அவன் போக விரும்பவில்லை. இதெல்லாம் வேண்டாத வேலை என்று அவனது சிற்றறிவு எச்சரித்தது.

இந்தக் கதையை இங்கே நிறுத்திக் கொள்வோம். மேற்படி போலி மந்திரவாதியின் பிடியில் சிக்கி சுமார் இருபது நாள்கள் நமது கதாநாயகன் பட்டபாடுகள் மிகப் பெரிது. அவனது நாவல் (அதாவது உலக இலக்கியம்) அங்கிருந்துதான் ஆரம்பமாகும். தொடர்ந்து பல்வேறு போலிச் சாமியார்களும் நிஜ சாமியார்களும் கதைக்குள் வந்துகொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு சாமியாருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மாமியார்கள் உண்டு. அவர்களுடன் எல்லாம் கூடிப் பணி செய்ய நேர்ந்த கொலைக் கொடூரங்களை நமது பாராகவன் எப்படித் தன் மனைவியிடம் சொல்ல முடியும்? அதிகபட்சம் அம்மிக் குழவியைத் தலையில் போட்டுக் கொலை செய்வாள். குறைந்த பட்சம் விவாகரத்தாவது நிச்சயம்.

ஒரு பேரிலக்கியத்துக்கான சப்ஜெக்ட் கைவசம் இருந்தும் அதை எழுத முடியாத அவலத்தை எண்ணி பாராகவன் உள்ளுக்குள் கதறிக்கொண்டிருந்தான். மனைவியிடம் வேறொரு கதையை அவிழ்த்துவிட்டுவிட்டு, இதை எழுதலாம் என்று ஒரு யோசனை வந்தது. ஆனால் அவளை நம்ப முடியாது. அவன் தூங்கும் நேரத்தில் அறைக்குள் வந்து எழுதி வைத்ததை எடுத்துப் படித்துப் பார்த்தாலும் பார்ப்பாள்.

தமிழன் ஏன் உலக இலக்கியம் படைக்க முடிவதில்லை என்று இப்போது புரிகிறதா? சோறு முக்கியம்.

(தொடரும்)

 

 

para@bukpet.com