தேக்காவில் அவரைப் பார்த்திருக்கலாம். சினிமாவில் கொடிகட்டிப் பறந்த ஒரு பெரிய இயக்குநருக்கு நெருக்கம். இப்போது படம் பண்ணுவதாக இருக்கிறார். எப்போதும்போல்தான். கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை எல்லாமே அவர்தான்.

‘இசையுமா?’ என்றேன் பயந்தபடி. எனக்கு இசை என்றால் பயம்.

‘அதுக்கெல்லாம் ஆளு இருக்கு பிரதர். நானே எல்லாத்தையும் பண்ண முடியாது. ஆள் வெச்சுக்க வேண்டியதுதான்’ என்றார். நேர்மையானவர்.

‘உங்களுக்குப் பாக்கலாமா?’ என்று கேட்டார்.

கேட்க மாட்டார் என்று நினைத்தேன்.

கேட்டுவிட்டார்.

‘வேணாங்க!’ என்றேன்.

‘ஏன் சார்? நம்பிக்கை இல்லையா?’

‘இருக்கு! ஆனா நெறையப் பாத்துட்டேன். களைப்பா இருக்கு!’

‘நான் சொல்றது கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.’

‘அதனாலதான் வேணாம்!’ என்றேன்.

சிரித்துக் கொண்டார். சீவல் போடும் பழக்கம் உள்ளவர். தெறிப்பதை உதட்டின்மேல் ஒரு விரலை வைத்து அழுத்திக் கொண்டார்.

‘நான் என்னா பெரிசா சொல்லிரப் போறேன்? எனக்கு இதெல்லாம் தெரியாதுன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனாலும் பாக்கிறாங்க. ஏன்?’

நான் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டேன்.

‘எனக்கு உதவணும்னுதான். பொழச்சிட்டுப் போவட்டுமேன்னுதான்.’

அவரிடம் பல திறமைகள் இருந்தன. அவற்றில் ஒரு சிலவற்றை ஒரு மஞ்சள் பையில் வைத்திருந்தார். அவர் எப்போதுமே அந்த மஞ்சள் பையைக் கையில் வைத்திருப்பார். அதைத் தோளில் மாட்டிக் கொண்டு நடக்கும்போது அசல் பாக்யராஜ் மாதிரியே இருப்பார்.

‘அவசரமா எங்கியும் போறீங்களா?’ என்று கேட்டார்.

நான் அவசர அவசரமாக எல்லா இடங்களுக்கும் போய்தான் இப்போது ஒடுங்கி உட்கார்ந்திருக்கிறேன். எனவே அவசரம் இல்லை என்பதை சற்றேறக்குறைய சொல் இல்லாமல் சொன்னேன். கொஞ்சம் சிக்கல் பண்ணிக் கொண்டேன். எளிமையாக, எதேச்சையாக, அப்பாவியாக இருப்பதற்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. சினிமாகாரர்கள் பற்றி நான் இதுவரை நல்லவிதமாக எதுவுமே கேள்விப்பட்டதில்லை. என்ன செய்வாரோ?

‘அப்படின்னா உக்காருங்க!’ என்றார்.

‘அப்படின்னா!’ என்று சொல்லிக் கொண்டே உட்கார்ந்தேன்.

தரையில்தான். சினிமா ஆட்கள் ஒன்று திரையில் இருப்பார்கள். இல்லை என்றால் தரையில் இருப்பார்கள். இவர் இந்த இயக்குனர் இப்போதைக்துத் தற்காலிகமாகத் தரையில்தான் இருந்தார்.

‘உங்ககிட்ட இயல்பாவே ஒரு கிண்டல் இருக்கு!’

‘சில பேரு அத அங்கதம்னு சொல்றாங்க. சில பேரு அத பகடிங்கிறாங்க. பகடிதான் உசத்தின்னு நினைக் கிறவங்க அங்கதம்னு சொல்றாங்க. அங்கதம்தான் உசத்தின்னு நினைக்கிறவங்க பகடிங்கிறாங்க.’

நான் அவ்வளவு பேசியது வீண் விரயம். அவர் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவிக் கொண்டிருந்தார். அவர் எல்லாக் காரியத்தையும் மிகவும் துல்லியமாகச் செய்யக் கூடியவராக இருந்தார். ஒரு வேலையில் இருக்கும்போது அவர் வேறு எதையுமே கவனிப்பதில்லை. வெற்றிலையை மடித்துக் கடாப்பலுக்கு அப்பால் சாறெடுக்கும் ஆலைக்குள் விட்டார்.

அதன் பிறகு அவர் அவராக இல்லாமல் போய்விட்டார். வெற்றிலையும் அதில் இருந்த பாக்கும் சுண்ணாம்பும் அவரைக் கசக்கிப் பிழிந்து மனிதனுக்குள் இன்னொரு உலகம் இருக்கிறது என்று அங்கே அழைத்துச் சென்றன. அவருடைய கண்கள் சொக்கிச் சொக்கி மறுகின. அவருக்கு ஒன்றும் அவசரம் இல்லை என்பதால் ”இதான் சார் என்னோட படத்துக்கு நான் எழுதுன பாட்டு” என்று பையில் இருந்து உருவி எடுத்தார். இன்னமும்கூட விழிகள் முழுவதுமாகத் திறந்துவிடவில்லை.

‘நிறைய இருக்கும்போல இருக்கே!’ என்று சொன்னேன்.

இலக்கியத்தில் என்னுடைய பயம் எல்லாமே இந்த ‘நிறைய’ என்பது ஒன்றுதான். ஒரு பெண்ணின் மடியில் என்றால் இரண்டு மூன்று மணிநேரம்கூடப் படுத்துத் தூங்கலாம். கவிதைகளை எவ்வளவு நேரம் படிக்க முடியும்?

குண்டு குண்டாக எழுதப்பட்ட பாடல்கள். எல்லாமே சினிமாவில் வந்து ஹீரோ ஹீரோயினை மிகவும் கஷ்டப்படுத்தி ஆட வைக்கக் கூடிய ஆழமான வரிகள். நீல நிறத்தில் எழுதி இருந்தார்.

எதையுமே அவர் என் கையில் கொடுக்கவில்லை. அவரே வாசித்தார். இரண்டு மூன்று வரி வாசித்த பிறகுதான் அவர் பாடுகிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். அடுத்த பிறவியில் கொஞ்சம் இசை ஞானம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கடவுளிடம் அது பற்றி எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அவர் குழம்பிவிடக் கூடாது.

ஒரு பாட்டைப் பாடி முடித்து என்னைப் பார்த்தார். நான் கண்கொட்டாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டாவது பாட்டைப் பிரித்தார். வெற்றிலையைப் பிரிப்பதைப் போலவே அவர் பாடலைப் பிரிப்பதைக் கவனித்து வைத்துக் கொண்டேன். இதைக் கவனித்து வைத்து எதற்கு உதவப் போகிறது? இப்படித்தான் எல்லாவற்றையும் கவனித்து வைத்துக் கொள்கிறேன்.

இரண்டாவது பாடலை அவர் பாடும்போதுதான் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, இசை, தமிழ் எல்லாமே கலந்து வருவதை உணர்ந்தேன். மெல்ல மெல்ல அவர் குரல் உயர்ந்து கொண்டே போனது. முதலில் தலை வரைக்கும் இருந்த குரல் இப்போது பக்கத்தில் இருக்கும் மாமரத்தின் உச்சியைத் தொட்டது. அப்படியே படிப்படியாக மேகத்தைத் தொடுவார் என்று தோன்றியது.

நான் கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டேன்.

‘சார்!’ என்று அலறினார்.

பக்கத்தில் எதுவும் பாம்பு வந்துவிட்டதா என்று நானும் ஒரு சத்தம் போட்டுப் பதறி எழுந்து கொண்டேன்.

‘என்ன சார் படுத்துட்டீங்க?’ என்றார்.

‘பாட்டு நல்லா இருக்கு. அதான்!’ என்றேன்.

‘ஓ அப்படியா? அப்ப படுத்துக்குங்க’ என்று அனுமதி கொடுத்தார்.

எனக்கு முதல் முறையாகக் கொஞ்சம் பயம் எடுத்தது. சற்றுத் தள்ளிப் படுத்துக் கொண்டேன். அவர் குரல் எடுத்துப் பாடுவதைப் பார்த்தால் போலீஸ் எங்கள் இருவரையும் பிடித்துக் கொண்டு போய்விடும் சாத்தியம் இருப்பதாகவே பட்டது.

அவருடைய பாட்டில் ஒரே சொற்களாக இருந்தன. இவர் இயக்குனரோ இசையமைப்பாளரோ இல்லை. கவிஞர் என்று நினைத்துக் கொண்டேன். இல்லாவிட்டால் இவ்வளவு சொற்கள் இருக்காது. எனக்கு வேறு இசையமைப்பாளர்களையும் தெரியும். அவர்கள் எல்லாம் சொற்களைக் கண்டால் பயப்படுவார்கள். ரத்தம் சத்தம் யுத்தம் என்று சொன்னாலே அதை வைத்து நாலைந்து பாடல்களுக்கு இசை அமைத்து விடுவார்கள். இவர் ஒரு பாட்டுக்கே நிறைய வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருந்தார். கவிஞர்தான்.

‘என்ன சார் தூங்கிட்டீங்களா?’ என்று கேட்டார்.

‘இல்லைங்க. ரசிச்சுக்கிட்டு இருந்தேன்.’

‘எது உங்களுக்குப் பிடிச்சிருந்தது?’

‘எல்லாமே!’

‘அதெல்லாம் முடியாது! ஏதாவது ஒன்ன சொல்லுங்க.’

‘உங்க குரல்!’

‘என்னா சார்! காட்டுக் கத்துக் கத்தறேன்! இதப் போய் நல்லா இருக்குன்னு சொல்றீங்களே?’

‘கலைஞர்களுக்குச் சில சமயத்துல அவுங்க திறமை அவுங்களுக்கே தெரியாது!’ என்றேன்.

‘உங்கள நம்பலாமா?’

‘எதுக்கு?’

வாய்விட்டுச் சிரித்துக் கொண்டார்.

‘எனக்கு என்னமோ சினிமா, பாட்டு, இசை இதை எல்லாம்விட ஜோசியம் பாக்கிறதுதான் பிடிச்சிருக்கு. ஏன்னா ஒருத்தனோட தலைவிதிய நம்மால முடிவு பண்ண முடியுதே? என்ன சொல்றீங்க?’

‘உங்களுக்கு நீங்களே ஜோசியம் பாப்பீங்களா?’ என்று கேட்டேன்.

‘அது மட்டும் முடியாது சார். இன்னொருத்தர்தான் பாத்துச் சொல்லணும்.’

‘பாத்தீங்களா?’

‘பாத்தேன். நான் சினிமாவுல பெரிய ஆளா வருவேன்னு சொல்றாங்க.’

‘சொல்றாங்களா?’

‘நாலைஞ்சு இடத்துல பாத்தேன். ஒரு ஜோசியன எப்படி நம்பறது?’

நான் அவரைப் பார்த்தேன். தலைமுடி, மீசை எல்லாமே கன்னங்கரேல் என்று இருந்தன. எனக்கு அவரை ஒரு மாதமாகத் தெரியும். ஒருநாள்கூட அவருடைய ஒரு மயிர்கூட வெள்ளையாக இருந்ததே இல்லை.

‘நீங்க ஹீரோவா நடிக்கலாமே?’’

‘விளையாடாதீங்க சார்! என்னால என்னா முடியும்னு எனக்குத் தெரியும். சினிமாவுல ஜெயிக்கக் கூடிய கதை எங்கிட்ட இருக்கு. ஒரு கதை ரெண்டு கதை இல்ல. முப்பது கதைய ரெடி பண்ணி வெச்சிருக்கேன். ஆயிரம் பாட்டு இருக்குது. எல்லாமே ஜெயிக்கும். ஜெயிக்காத எதையுமே நான் தொட மாட்டேன்.’

நான் தேக்காவில், முஸ்தபா பக்கத்தில், லிட்டல் இந்தியா சந்து பொந்துகளில் இதுபோல் நிறையப் பேரைப்
பார்த்திருக்கிறேன். பேசிக் கொண்டே இருப்பார்கள். இவர் மட்டும்தான் கொஞ்சம் முதியவர்.

‘ஏன் இவ்ளோ நாளு சினிமா எடுக்கல?’ என்றேன்.

‘குடும்பத்த முதல்ல சரி பண்ணனும். துபாய்க்குப் போனேன். சம்பாதிச்சேன். என்னோட ரெண்டு பையன்களும் நல்ல வேலையில இருக்கானுங்க. கல்யாணம் முடிஞ்சது. நானும் மனைவியும் மட்டும்தான். காலையில ரெண்டு இட்லி, ராத்திரி ரெண்டு இட்லி. மத்தியானம் எங்காயவது நண்பர்கள் பாத்துக்குவாங்க.’

‘சிங்கப்பூருக்கு ஏன் வந்தீங்க?’

‘மனசுக்குக் கொஞ்சம் காத்தோட்டமா இருக்கும். உங்ககிட்ட சொல்றத்துக்கு என்ன? கொஞ்சம் வசூலாவும். ஜோசியத்துக்கு நான் வாங்கிறது அதிகம்தான். இருந்தாலும் ஆதரிக்கிறாங்க. நான் சொன்னா பலிக்கும். அப்படி எனக்கு ஒரு நாக்கு. சத்தியமா எனக்கு ஜோசியம் தெரியாது. சும்மா கட்டத்த வெச்சுக்கிட்டு நானா எதையோ சொல்றேன். நடக்குது!’

‘பேசாம ஜோசியமே பாக்கலாமே? சினிமா எதுக்கு?’

வெற்றிலை, பாட்டு எல்லாவற்றையும் எடுத்துப் பைக்குள் போட்டார். செருப்பை மாட்டினார். என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. விருட்டென்று நடந்து போனார்.

நான் எழுந்திருக்கவில்லை. அப்படியே படுத்தபடியே நட்சத்திரங்களை எண்ணலாமே என்று வானத்தைப் பார்த்தேன்.
பகலில் ஏது நட்சத்திரம்?

indrajit8363@gmail.com