எனக்கு ஒரு வினோதமான பழக்கம். ஆறு மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய ஒரு கட்டுரை, கதை என்றால் கூட சுத்தமாக மறந்து போய் விடுகிறது. அதில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை நானே தான் படித்து “ஓ இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேனா?” என யோசித்து புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஒருமுறை கிளப் ஹவுஸில் பாத்திமா பாபுவின் சிறுகதை வாசிப்பு நேரம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். என்னுடைய சிறுகதை ஒன்றை எடுத்திருந்தார்கள். அதன் முடிவை முழுக்க மறந்து விட்டேன். அவர்கள் ஒரு குறிப்பிட்ட கதையை படிக்கும் போது கேட்டு விட்டு “இதை ஏன் இப்படி எழுதியிருக்கிறேன்? என்ன அர்த்தம் இதற்கு?” என சற்று நேரம் குழம்பினேன். பிறகு ஒருவாறாகப் புரிந்து கொண்டு அதைப் பற்றி பேசினேன். ஆனால் வேறு இரு கதைகள் ஓரளவுக்கு நினைவிருந்தன . ஏனென்றால் தொகுப்பாக வரும் முன் அக்கதைகளை நிறைய முறைகள் திருத்தி எழுதியிருந்தேன்.

என்னுடைய நாவல்களுக்கும் இது பொருந்தும்  எழுதி வரும் நாவலை ஆறு மாதம் தொடவில்லை என்றால் அதில் என்னதான் இருக்கிறது என பெரும்பாலும் மறந்து விடுவேன். என்னுடைய முதல் நாவலான “கால்களை” எழுதிக் கொண்டிருக்கையில் எனக்கு உடல்நலமற்றுப் போது கோமா நிலைக்குப் போனேன். சிகிச்சை முடிந்து இயல்பாகி வீடு திரும்பி நாவலை விட்ட இடத்தில் இருந்து எழுதினேன். நாவலின் மொழி மாறிவிட்டது. சற்று கசப்பான, எதிர்மறையான உலகைப் பேசும் மொழியில் எழுதத் தொடங்கினேன். 200 பக்கங்களைத் தாண்டியதும் நாவலின் உணர்வு மாறுவதை உணர்ந்தேன். ஏனென்றால் என் மனதின் மொழி ஒரே மாதத்தில் மாறி விட்டது. எப்படியோ நாவலின் மையப்பாத்திரத்தின் மனப்போக்கை, சிக்கல்களை கவனத்தில் வைத்து தொடர்ச்சி பிசகாமல் எழுதி முடித்தேன். அது நாவலை இன்னும் கூர்மையாக்கினாலும் ஒரு நுட்பமான வாசகனால் நாவலின் மொழியில் வரும் திசை மாற்றத்தை கண்டுபிடித்திட இயலும். அது மட்டுமல்ல நாவலை எழுதுமுன் நான் வாசிக்கும் புனைவுகள், கேட்கும் இசை என் மொழியை பாதிப்பதை உணர்ந்திருக்கிறேன்.

என்னுடைய வாசகர்கள் நான் முன்பு எழுதிய ஏதாவது ஒரு கட்டுரையையோ கருத்தையோ குறிப்பிட்டு பேசும் போது “ஆஹா அப்படியா, ஓ சரி சரி” என நினைத்து மையமாக சிரித்து கழன்று விடுவேன். வேறு யாரோ ஒருவருடைய கட்டுரையை பற்றி பேசுவதாகவே தோன்றும். நானா அப்படி எழுதினேன்? ஏன் அப்படி எழுதினேன்?

இப்படி என்னுடைய எழுத்தென்றால் மட்டும் ‘கைவிடும்’ எனது நினைவுத்திறன் வாசிப்பென்றால் மட்டும் நன்றாகவே ‘கைகொடுக்கிறது’. ஆனால் நான் பதினெட்டு வயதில் வாசித்த நாவல்களில் வரும் சின்னச்சின்ன விபரங்கள் கூட இப்போதும் எனக்கு நன்கு நினைவுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் படித்த சிக்கலான தத்துவக் கட்டுரைகளைப் பற்றி துல்லியமாக திரும்ப சொல்ல முடியும். சொற்களோ கோட்பாடோ மனிதர்களின் முகமோ மறப்பதில்லை. என் மனம் நான் வாசிப்பதை சேகரித்து பத்திரமாக வைத்து விட்டு எழுதுவதை தேவையில்லை என்று பேருந்து ஜன்னல் வழியாக காற்றில் பறக்க விடுகிறது. ஏனிப்படி எனத் தெரியவில்லை. (ஒருவேளை அதுவே என்னை மதிக்கவில்லையோ?)

உளவியல் இதைப் பற்றி என்ன சொல்கிறது?

உளவியல் இதை “செய்கர்னிக் விளைவு” என்கிறது. அதென்ன “செய்கர்னிக் விளைவு”?

1927இல் ஆஸ்திரியாவில் உள்ள வியென்னா நகரில் செய்கர்னிக் எனும் ஒரு உளவியலாளர் ஒரு உணவகத்திற்கு சென்றிருந்த போது அங்குள்ள பரிசாரகர்களிடம் ஒரு விசித்திரமான பண்பை கவனித்தார். அவர்கள் எடுக்கிற ஆர்டர்கள் முடிந்ததும் ஆர்டரில் உள்ள விசயங்களை முழுமையாக மறந்து போவார்கள். ஆனால் முடிவுறாத (பில் போடாத) ஆர்டர்களில் உள்ள உணவுப்பொருட்கள் குறித்த தகவல்களை நினைவு வைத்திருப்பார்கள். இதை தன்னிச்சையாகவே அவர்கள் செய்கிறார்கள். பில் போட்டு அதை வாடிக்கையாளர் பணம் செலுத்தி விடைபெற்றதும் அந்த நபர் என்ன சாப்பிட்டார் என்பது இவர்களுடைய மனதில் இருந்து முழுக்க மாயமாகி விடுகிறது. தொடர்ந்து ஆர்டர்கள் எடுத்துக் கொண்டும் முடித்துக் கொண்டும் இருப்பவர்கள் இந்த பரிசாரகர்கள் என்பதால் இரண்டு நிலைகளுக்கும் இடையில் போதுமான காலஇடைவெளி இருக்காது. பெரும் கூட்டமுள்ள அந்த உணவகத்தில் ஒரு வாடிக்கையாளர் எழுந்ததும் அந்த இடத்தில் மற்றொருவர் வந்து அமர்வார். ஆக பரிசாரகர்கள் தம்மை அறியாமலே தமது மனதின் மெமரி டிரைவை அழித்து அழித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என கணித்த செய்கர்னிக் இது ஏன் நிகழ்கிறது எனப் புரிந்து கொள்ள முடிவெடுத்தார். அவர் பலவிதமான வயது, உடற்தகுதி கொண்டவர்களை வைத்து ஒரு பரிசோதனையைச் செய்தார். அவர்களுக்கு இரு விதமான இடுபணிகளை அளித்தார். இடுபணியை முடித்ததும் அவர்கள் தாம் என்னென்ன செய்தோம் என நினைவுகூர்ந்து சொல்ல வேண்டும். சில இடுபணிகளை மட்டும் பாதியில் நிறுத்தச் சொல்லி நினைவுகூர வேண்டும். இந்த பரிசோதனையின் முடிவில் அறியப்பட்டது என்னவெனில் பாதியில் நிறுத்தப்பட்ட இடுபணிகளின் தகவல்களை நம்மால் நன்றாக நினைவுபடுத்த முடிகிறது, ஆனால் முழுமையாக முடித்ததும் அப்பணிகளின் குறித்த நினைவு சற்று மங்கலாகி விடுகிறது.

இதைக் கொண்டு நமது நினைவுத்திறன் எப்படி செயல்படுகிறது என செய்கர்னிக் விளக்கினார். அதன்படி, நாம் ஒரு வேலையை செய்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறியும் ஆசையே நம்மை தொடர்ந்து செலுத்துகிறது. இதற்காக அதுவரை என்ன நடந்தது, அடுத்து வருவதை எப்படி அடைவது என்பதை நினைவு வைத்திருப்பது நமது மனத்திற்கு அவசியமாக இருக்கிறது. பரிசாரகர்களுக்கு தமக்கான வாடிக்கையாளரை அனுப்பி வைத்து டிப்ஸை ஜேப்பில் போட்ட பிறகு அந்த அடுத்தது என்ன எனும் தூண்டுதல் இல்லாமல் ஆகிறது. அவர்கள் மனம் இதை மறக்கச் செய்துவிட்டு, அடுத்த தூண்டுதலை நோக்கி அவர்களை செலுத்துகிறது.

குருக்ளான்ஸ்கி எனும் மற்றொரு உளவியலாளர் இது குறித்து வேறொரு விளக்கத்தை சொல்கிறார் – ஒரு இடுபணியை செய்து முடித்ததாக நமக்கு திருப்தி வந்ததும் அதை நினைவில் வைத்திருக்க ரொம்ப அவசியம் இல்லை என முடிவெடுத்து மனம் அதை அழித்து விடுகிறது. ஆனால் ஒரு வேலையின் பாதியில் இருக்கையில் அதை முடித்தாக வேண்டுமே, இலக்கை அடைந்த நிறைவுணர்வைப் பெற வேண்டுமே எனும் அழுத்தம் அதிகம். அந்த அழுத்தமே அதை செய்து முடிக்கும் ஆற்றலை அளிக்கிறது. அதுவே அவ்வேலைக்கு அவசியமான தகவல்களை நினைவில் வைத்திருக்கவும் தூண்டுகிறது. நிறைவுணர்வே ஒரு வெகுமதியாக செயல்படுவதால் மனதிற்கு அதற்கு மேல் நினைவுகள் தேவையிருப்பதில்லை. இதைத் தான் செய்கர்னிக் விளைவு என்று சொல்கிறார்கள்.

இந்த “செய்கர்னிக் விளைவு” சில எழுத்தாளர்களிடம் செயல்படுவதுண்டு. ஒரு கதையையோ நாவலையோ கட்டுரையையோ எழுதி முடித்ததும் அவர்களுடைய மனம் அந்த முழுமை செய்த திருப்தியில் அதை மறந்து விட்டு அடுத்த விசயத்துக்கு செல்ல விரும்புகிறது. எப்போதும் புதிய தருணங்களில் நிலைக்க விரும்பும் மனம் அவர்களுடையது. ஒரு படைப்பை எழுதுவதில் அல்ல, நிறைவு செய்வதிலே அவர்களுடைய அக்கறை அதிகமாக இருக்கிறது. ஆனால் வாசிக்கையில் இந்த மாதிரி அவர்களுடைய மனம் சிந்திப்பதில்லை – வாசிப்பை ஒரு தொடர்ச்சியான நிறைவு இல்லாத தேடலாக அது நினைக்கலாம். அந்த வாசிப்பில் கிடைத்த தகவல்கள், உணர்வுகள், தர்க்கம் அவசியம் அவருடைய எழுத்துக்கு, சிந்தனைக்கு என மனம் நினைக்கிறது. வாசித்த விசயங்கள் நினைவில் தங்கி இருப்பதற்கு அது ஒரு காரணம்.

ஹெமிங்வே எழுத்தாளர்கள் இடையே “செய்கர்னிக் விளைவுக்கு” ஒரு சிறந்த உதாரணம். 1958இல் வெளியான தனது பாரிஸ் ரெவ்யூ பேட்டியில் ஹெமிங்வே தான் எழுதும் கதைகளை உடனுக்குடன் மறந்து விடுவது அடுத்த நாளை புத்தம் புதிதாக ஆரம்பிக்க தனக்கு உதவுகிறது என்கிறார். அவருடைய “ஒரு வினோதமான நாடு” எனும் சிறுகதையில் தனது கதைகளின் தட்டச்சுப் பிரதிகளை தொலைக்கிற ஒரு எழுத்தாளன் தனது வீட்டு உரிமையாளரிடம் அக்கதைகளை தன்னால் திரும்ப எழுத முடியாது, அப்படி முயன்றால் அவை முற்றிலும் புதிய கதைகளாக, புதிய மனவெழுச்சியுடன் தோன்றும் என்கிறார். மேலும் இப்பழக்கம் ஒரு ரிப்போர்ட்டராக இருந்த நாளில் இருந்தே தனக்கு ஏற்பட்டது என்று அப்பாத்திரம் கூறுகிறது. தான் எழுத உத்தேசிப்பதை, தான் எழுதி திருத்தி முடிக்காததைப் பற்றி பிறரிடம் பேசுவது, வாசித்துக் காட்டுவது கூட எழுத்தின் தனித்தன்மையை இல்லாமல் ஆக்கும் என்கிறார் ஹெமிங்வே.

ஹெமிங்வே வாழ்வில் இதை சார்ந்து ஒரு சுவாரஸ் யமான திருப்புமுனை சம்பவம் உண்டு:

1922இல் ஹெமிங்வே 23 வயதான ஒரு இளம் எழுத்தாளர். அவரது இரண்டு சிறுகதைகள் மட்டுமே பிரசுரமாகி இருந்தன. அவர் எலிசபெத் ஹேட்லி ரிச்சர்ட்ஸனை மணந்து ஒரு ஆண்டு ஆகியிருந்தது. அவர்கள் பிரான்ஸில் வாழ்ந்து வந்தனர். ஒரு கருத்தரங்கு பற்றி செய்திக் கட்டுரை எழுதுவதற்காக ஹெமிங்வே மட்டும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள லோஸேன் நகருக்கு வந்திருந்தார். அங்கிருந்து தன் காதல் மனைவியை அழைத்து அவரையும் லோஸேனுக்கு வரும்படி கேட்டார். அங்கு தான் ஆரம்பித்தது வினை – எலிசபெத் தன் கணவரின் எழுத்துப்படிகள் (எழுதி முடித்த கதைகள், பாதி எழுதிய ஒரு நாவல், அவற்றின் கார்பன் காப்பிகள்) அனைத்தையும் ஒரு சூட்கேஸில் இட்டு பயணத்தின் போது கொண்டு வந்தார். ஆனால் ரயில் நிலையத்தில் வைத்து அந்த சூட்கேஸ் மட்டும் திருடு போய் விட்டது. லோஸேன் வந்து சேர்ந்த எலிசபெத் அழுதபடி ஹெமிங்வே முன் போய் நின்றார். ஹெமிங்வே “பரவாயில்லை கண்ணே, எல்லா கதைகளுக்கும் என்னிடம் கார்பன் காப்பி இருக்கிறதே” என்றார். “அவற்றையும் சேர்த்தே சூட்கேஸில் வைத்தேன்” என்று எலிசபெத் மேலும் கண்ணீர் வடிக்க ஹெமிங்வே அதை நம்பாமல் உடனே பிரான்ஸுக்கு புறப்பட்டு சென்று தன் வீட்டைத் திறந்து முழுக்க சோதனையிட்டார். எலிசபெத் சொன்னது உண்மை தான். மொத்தமும் தொலைந்து போய் விட்டது. ஹெமிங்வேயிடம் ஒரு பதிப்பாளர் அவர் பாதி எழுதி வைத்திருந்த நாவலை வெளியிடலாம் என ஆர்வம் தெரிவித்திருந்தார். இப்போது அதை எப்படி முடித்துக் கொடுப்பது? அவருக்கு வேறு தான் எழுதியது அத்தனையையும் உடனடியாக மறக்கும் பழக்கம் உண்டே!

ஆனால் ஹெமிங்வே மனம் தளரவில்லை. அவர் அந்த கதையை ஒரு புதிய பார்வையில் புதிய மொழிநடையில் மீள எழுதினார். அப்படித்தான் அவருடைய “The Sun Also Rises” நாவல் உருவாக்கி 1926இல் வெளியாகி வெற்றி பெற்றது. ஹெமிங்வே எனும் எழுத்தாளர் அப்படித்தான் அவதரித்தார்.

ஆனால் இந்த வினோதமான சிக்கல் எல்லா எழுத்தாளர்களுக்கும் இருப்பதில்லை. குறிப்பாக, என் எழுத்தாள நண்பர்களும், சீனியர்களும் இதற்கு நேர்மாறானவர்கள் – அவர்கள் பத்து வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு கவிதையையோ கதையையோ நினைவில் இருந்து சர்வசாதாரணமாக மேற்கோள் காட்டுவார்கள். தற்போது எழுதி வரும் கதையை, நாவலைப் பற்றிக் கேட்டால் அதைப் பற்றியே மாய்ந்து மாய்ந்து பேசுவார்கள். ஏனெனில் அவர்களுடைய மனம் தாம் எழுதி முடித்த படைப்புகளை முடிவுற்றதாக கருதுவதில்லை என நினைக்கிறேன்.

அவர்களிடையே நான் ஆடுதொலைந்த போன மேய்ப்பனாகவே எப்போதும் இருக்கிறேன்.

ஆனால் இதற்கும் ஒரு அனுகூலங்களும் உண்டு தான் – ஒன்றை எழுதும் போது புத்தம் புதிதாக அணுக முடிகிறது, எழுதிய பின் மறந்து விடுவதால் அதை நான் சுமக்கத் தேவையில்லை.

என்னை யாரும் மதிக்கவில்லை என நான் கவலைப்படுவதே இல்லை – நான் தான் ஒன்றுமே எழுதவில்லையே?

 

abilashchandran70@gmail.com