“நீங்கள் (திராவிட முன்னேற்றக் கழகம்) மட்டும்தான் புத்திசாலிக் கட்சி என எண்ணிக் கொள்ளாதீர்கள்”- உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி ரமணா.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உதிர்த்த முத்துக்கள். நீதிபதிகள் மனிதர்கள்தான், எனவே இது போல ஆவேசப் பேச்சுக்களை, நீதிமன்ற பீடத்திலிருந்து நிகழ்த்துவது வாடிக்கையான செயல்தான். ஆனால், இந்த ஆவேசங்கள் பெரும்பாலும் பொருத்தமற்று அவர்களின் ‘பிற்போக்குச் சார்புகளையும்’, அவற்றின் விளைவுகளாகவுமே வெளிப்பட்டு இருக்கிறது என்பதுதான் வேதனை. மிக அரிதாக ‘நேர்மறையான‘ ஆவேசங்கள் இறுதித் தீர்ப்பின் பகுதியாக ஒருபோதும் இருப்பதில்லை. இவற்றிற்கெல்லாம் ஒரு நூறு ஆதாரங்களைக் காட்ட முடியும், ஆனால் அதுவல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம் என்பதால் தவிர்க்கிறேன்.

நீதிபதி எதற்காக இவ்வளவு ஆத்திரமாகப் பேசினாரென்பதை நாடறியும். இந்தியாவின் தலைமையமைச்சர் மோடி துவங்கி வைத்த ‘தேவையற்ற இலவசங்கள்‘ தொடர்பிலான விவாதமே, அவரது கட்சி நபரால் உச்சநீதி மன்றத்தில் ’பொதுநல’ வழக்காக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் இறையாண்மையே குடிமுழுகிப் போகும் நிலையிலான வழக்கு என்பதால், அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு நடக்கிறது இந்தக் ‘கட்டப் பஞ்சாயத்து’ . ஏற்கனவே நிலுவையில் இருக்கும் அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்ய வேண்டிய வழக்குகளைப் பார்த்தாலே இந்தியாவை ஒரு அடிப்படைவாதக் கட்சி அதன் கட்டை விரலால் அழுத்தி வைத்திருக்கிறது என்பது விளங்கும். மாதிரிக்கு மூன்று / நான்கு

1) ஒன்றிய அரசின் பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதி எனப்படுவோருக்கான தனித்த 10% இட ஒதுக்கீடு ( E W S ) – 1330 நாட்கள் ( நெருக்கி நான்காண்டுகள்.

2) காஷ்மீர் தொடர்பான விதி எண் 370 நீக்கம் குறித்த வழக்கு – நிலுவைக் காலம் 1125 நாட்கள் ( மூன்றாண்டுகள் கடந்து ).

3) சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தினை(U A P A ) எதிர்த்த வழக்கு- 1115 நாட்கள் (மூன்று ஆண்டுகள்).

4) குடியுரிமைச் சட்டத் திருத்தம் ( C A A ) தொடர்பான வழக்கு- 995 நாட்கள் (மூன்று ஆண்டுகளை நோக்கி).

இவை குறித்தெல்லாம் ‘குரலுயர்த்தவோ’ நடவடிக்கை எடுக்கவோ துணியாத நீதிபதி பொங்குகிறார். அதாவது சமூகநீதிக் கொள்கை மற்றும் சிறுபான்மையினர் விரோத சட்டங்களிற்கு பொங்காத நீதியுணர்ச்சி, நலத்திட்ட இலவசங்கள் தொடர்பில் கொந்தளித்து கொப்பளிக்கிறது. என் அனுமானத்தில் இந்த வழக்குகள் அனைத்தையும் இந்திய நீதிமன்றங்கள் ஒருபோதும் விசாரணை செய்யவோ, மறுபரிசிலனை செய்யவோ போவதில்லை. இட ஒதுக்கீடு தொடர்பான மண்டல் பரிந்துரை ஏற்கப்பட்ட பின்னும் கல்வித்துறையில் அனுமதிக்க, பனிரெண்டு ஆண்டுகள் கால தாமதம் செய்த ‘இந்தியா‘, இந்த அரசியலமைப்புச் சட்ட விரோத 10% பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீட்டை அரசுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அனுமதி அறிவிப்பில் பதினைந்தாவது நாள் செயல்படுத்தியது என்பதே கொடுமை. இனி இது நிரந்தரமான ஒதுக்கீடுதான். கேள்விமுறையற்ற ஒதுக்கீடு. இந்த மாபாதக நடவடிக்கை தொடர்பிலான வழக்கிலும் முதலாவதாக உச்சநீதிமன்றம் சென்றது தமிழ்நாடும், திமுகவும்தான் என்பது கனம் நீதிபதி அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதவில்லை.

இங்கு இரண்டு கேள்விகளைக் கேட்டுக் கொள்வோம். முதலில் ஏன் இவ்வளவு ’தலைபோகும்’ பிரச்னையை பாரதீய(!) ஜனதா கட்சி நேரடியாக கட்சியின் சார்பில் வழக்குத் தொடுக்கவில்லை. இரண்டு, இவ்வளவு அவசரமான காரியத்தை நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவாக கொண்டு வந்து, வழக்கம் போல எதிர்க்கட்சிகளை விவாதிக்க அனுமதிக்காமல் மக்களவையில் சட்டத்தை ‘ஓட்டெடுப்பு‘ மூலம் நிறைவேற்றி விட்டு , மேலவையை ‘ குரல் வாக்கெடுப்பில் ‘ கடந்து விடவில்லை. அதைவிட அவசரமானது என்றால் குடியரசுத் தலைவரின் ‘அவசரச் சட்டம்’ வழியாக ‘அனைத்து இலவசங்களையும் நீக்கி‘ ஆணை பிறப்பிக்கவில்லை. கேள்விதான் பெரிது. பதில் எளிமையானது. பாஜக எனும் மக்களாட்சியை வெறுக்கும் கட்சியின் விருப்பமான இந்த நடவடிக்கையை, மக்களவையில் விவாதித்தால் நாடாளுமன்ற வாசலிலாவது விவாதம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே பாஜக பிரச்சார பீரங்கியாக உச்சநீதிமன்றமும் அதன் ’உச்சரிப்புகளும்’ (Observations ) நடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக இந்திய “கொத்தடிமைச் செய்தி“ ஊடகங்களால் ஊதப்படுகிறது.

பாஜகவின் சார்பாக வழக்குத் தொடுத்தவரான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா சார்பாக, அவருக்காக வாதாடிய விகாஸ் சிங்கால் வைக்கப்பட்ட வாதங்கள் ஒரு மக்களாட்சி விரோத மனப்போக்கின் வெளிப்பாடு. அதாவது நலத்திட்டங்களை ‘இலவசங்களை’ அறிவிக்கும் கட்சிகளின் சின்னங்களை முடக்கி, பதிவினை விலக்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமாம் தேர்தல் ஆணையம். அந்த வழக்கில் ஒன்றிய அரசின் நிலைமைப்பாட்டை அதன் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, மனுதாரர் நிலைப்பாட்டை ஆதரித்ததோடு, ‘இலவசங்களை‘ நுட்பமாக ‘நலத்திட்டங்கள்’ என்ற பெயரில் அறிவித்து விட்டு தேர்தலை களம் காண்பதை வாடிக்கையாக்கி விட்டார்கள் என்றார். கூடுதலாக அதன் மாதிரியாக முன்வைத்த வாதம்தான் பாஜகவின் முகத்திரையைக் கிழிக்கும் பணியைச் சிறப்பாகச் செய்தது. அதாவது இலவச மின்சாரம், அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறதாம். அதாவது மாநில அரசுகளின் கடன் நிலுவைத் தொகைகளால் அல்லலுறுகிறார்களாம். அதாவது இந்தியாவின் ஆகப் பெரிய மாற்று எரிசக்தி (சோலார் மின்சார) உற்பத்தியாளரான அதானிக்கு இடைஞ்சலாக உள்ளது. மீதமிருக்கும் மாநில ஒன்றிய அரசுகளின் மின்சார உற்பத்தி நிலையங்களையும் வளைத்துப் போடும் திட்டத்திலிருக்கும் பாஜகவின் ‘பங்காளி’க்கு இழப்பை எப்படிச் சகிக்க முடியும் மோடி அரசால். ’ஒற்றை இந்தியா’ கனவின் மிக முக்கியமான பகுதி அதானியை இந்தியாவின் ஒரே முதலாளியாக்கும் கனவும் இருக்கலாம்தானே. ஆனால் வெட்கமற்ற மனுவாதிகளால் விளக்கவே முடியாத சங்கதி என்ன தெரியுமா, ஐம்பது ஆண்டுகளிற்கு முன்னேயே மின்சாரமில்லாத கிராமம் இல்லையென்ற நிலையை அடைந்து, வேளாண்மைக்கும், வறியவர்களுக்கும் இலவச மின்சாரம் முப்பது ஆண்டுகளாக வழங்கும் தமிழ்நாட்டின் கடன் நிலுவை நாலாயிரம் கோடிகளாக இருக்க, இவை எதையுமே செய்யாத உத்தரப் பிரதேசத்தின் கடன் நிலுவைத் தொகை இருபதாயிரம் கோடிகளுக்கு மேலே என்பதுதான். இந்தப் பொய்யை மறைத்து அதானிக்கு மின்சாரத்துறையைக் கைமாற்றும் காரியமாகவே மோடியின் தற்போதைய புலம்பல். அதற்கு இன்னொரு உடனடியான காரணமும் உள்ளது. அதையும் பார்த்து விடலாம்.

சென்ற 2017 குஜராத் தேர்தலிலேயே தடுமாறி வென்றது பாஜக. 2012 இல் வென்றதை விட பதினாறு தொகுதிகள் குறைவாகப் பெற்றது. அதன் பிறகு ‘எம்.எல்.ஏ.க்களை‘ விலைக்கு வாங்கும் மக்களாட்சியின் மகத்தான திட்டத்தில் நான்கு பேரை வாங்கி, பதவி விலகச் செய்து, மீள இடைத்தேர்தலில் ‘நீதியான’ வழியில் பாஜக உறுப்பினர்களாக ஆக்கியது. இந்த பாஜக மக்களாட்சித் திட்டத்தின் துவக்கப் புள்ளியே இதுதானென கருத வாய்ப்புள்ளது. அதன் பின்னரான அரசியல் களத்தில் மாநிலங்களில் ஆட்சி செய்யும் அரசுகளைத் தனது ‘ பணப் பொதிகளால்’ பிளந்து ’ தனது ‘ ஆட்சியை நிறுவதுதான் பாஜக வழிமுறை. 2019 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலை இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்ட மாபெரும் சவாலென ‘புல்வாமா’ தாக்குதலுக்கு பாகிஸ்தானைக் காட்டி உருவாக்கப்பட்ட வட மாநில தேசாபிமான போதையில் வென்றது பாஜக. உண்மையான நாட்டுப்பற்று ‘புல்வாமா’ பயங்கரத்துக்கு அன்றைய ஒன்றிய அரசைப் பொறுப்பாக்குவதாகவே இருக்க முடியும். ஆனால் பாஜக மதவாத அரசியல் கட்டமைத்திருக்கும் ‘எதிரி மத தேசியவாதம்‘ ஒரு நோய்க்கூறுதானே. பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை ‘கேடயமாக்கி’ தங்களது தோல்வியை வெற்றியாக்கியது சங்பரிவார் கூட்டம்.

ஏற்கனவே பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மியிடம் தோற்ற பாஜக அதன் தொடர்ச்சி குஜராத்திலும் நிகழ்ந்து விடுமென அஞ்சுகிறது. பஞ்சாப் மாநில தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக அறிவித்த நலத்திட்டங்களைப் பின்பற்றி அறிவிப்புகளைச் செய்தது ஆம் ஆத்மி கட்சி. வேளாண் சட்டங்கள் ஏற்படுத்தியிருந்த விரோதமும் கூட்டணி சேர்ந்து பாஜகவை தரையில் வீழச் செய்தது. பாஜகவின் அடிப்படைவாதக் கொள்கைகளை எந்த வகையிலும் எதிர்க்காத ஆம் ஆத்மி கட்சி பாஜக எதிர்நிலையை மக்கள் நலத்திட்டங்கள் என்ற தளத்தில்தான் செயல்படுத்துகிறது. மதசார்பின்மை அரசியல் பெருமளவில் செலாவணியாகாத வட மாநிலங்களில், குறிப்பாக குஜராத் போன்ற மாபெரும் மோசடிக் கூட்டத்தின் கட்டுப்பாட்டில் முற்போக்குச் சிந்தனைகள் ஒடுக்கப்பட்ட சூழலில், மக்கள் நலத்திட்டங்களே பாஜக விற்கெதிரான ஆயுதமெனக் கண்டு கொண்டது ஆம் ஆத்மி. மோடியின் பதினைந்து ஆண்டு ஆட்சி வெற்றிகரமாகப் பெரும் பணக்காரர்கள் நலனை மட்டுமே கருதியது என்பது அறிந்த செய்தி. எனவே அடிப்படையான மக்கள் நலத்திட்டங்களே எளிய மக்களுக்கு மறுக்கப்பட்ட மாநிலம் குஜராத். இந்தியாவின் முதன்மை பணவள ( ஜிடிபி) மாநிலம் மனிதவள வளர்ச்சிக் குறியீட்டுப் பட்டியலில் கடைசி இடத்திற்குப் போட்டியிடுகிறது. இதுதான் குஜராத் மாடல் வளர்ச்சி.

இந்தச் சூழலில்தான் ஆம் ஆத்மி, அனைவருக்கும் விலையில்லா குடிநீர், எளியவர்க்கு மின்சாரம் இலவசமென அறிவித்து விட்டு குஜராத் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறது. இந்த அறிவிப்புகள் மோடியின் கூட்டத்தை நடுங்க வைத்திருக்கிறது. தேர்தலில் வாக்குக்கு பாமரர்களிற்குப் பணம் கொடுத்து அவர்கள் ‘ வாக்குகளைப்’ பெறுவதைவிட , எதிர்க்கட்சியில் வென்றவர்களை ‘விலை பேசுவது’ எளிதான வழியெனக் கருதும் பாஜக, இந்த ‘ நலத்திட்ட’ போட்டியை அறவே விரும்புவதில்லை. அதை அந்தக் கட்சியின் உரிமையாளர்களான கோடீஸ்வரக் கோமான்களும் வெறுப்பவர்கள். நலத்திட்டம் மற்றும் மானியங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டு, அனைத்தும் கார்ப்பரேட் வரிக் குறைப்பாக மாற்றப்பட வேண்டுமென்பதே அவர்களின் அவா. எனவே மோடி மேடையில் ‘ தேவையில்லாத இலவசங்கள்’ என முழங்க, உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கு தாக்கலானது.

ஏன் இந்த வழி தேர்ந்தெடுக்கப்பட்டது ? ஏற்கனவே பார்த்தது போல, நாடாளுமன்ற வழி மோடிக்கு ஆகவே ஆகாது. விவாதங்களில் பங்கேற்பதும் கேட்பதும் அந்த ‘மக்கள் தொண்டனுக்கு’ அறவே பிடிக்காது. குஜராத் தேர்தலுக்காக, ‘இலவச அறிவிப்பை’ தடை செய்து குடியரசுத் தலைவரின் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும் ஆபத்து. அதனை நீதிமன்றங்கள் ஏற்காமல் போவதற்கு சாத்தியம் கூடுதல். எனவே நீதிமன்றத்தையே தனக்கான வாதங்களைப் பேச வைத்து இது தொடர்பாக சில வரையறைகளை வழங்கச் செய்து விட்டால், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ‘அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்ட’ சட்டமாக்கி விடுவது எளிது. அறிவுரையின் சில பகுதிகளில் இன்னும் ‘ கொச்சையாக்கி’ விட்டால் பாஜகவின் லட்சியம் நிறைவேறும். குஜராத் தேர்தல் மட்டுமில்லாமல், 2024 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் உதவும் என்ற தொலைநோக்குப் பார்வைதான். தேர்தல்களையும், அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை என்பதே பாசிசத்திற்கு விரோதம்.

இந்தத் தளத்தில்தான் ஒரு திருப்பம் நிகழ்ந்து போனது. பாஜக / பொதுநல வழக்குப் பிரச்சாரத்தை ‘கடமையாக‘ முன்னெடுக்கும் ஊடகங்களில், குறிப்பாக “இந்தியா டுடே“ ஆங்கிலச் செய்தி ஊடகத்தின், விவாதக் களத்தில் பங்கெடுத்த தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு பிடிஆர் அவர்கள் பொட்டிலடித்தார் போல தீர்க்கமான வாதங்களை வைத்தார். இந்த விவாதத்தின் அனைத்துத் தளங்களையும் விளக்கிப் பேசிய விவாதக் களம் அது. அந்த விவாதத்தில் அவர் ‘இந்தப் பொருண்மை’ குறித்து விசாரணை செய்யும் உச்சநீதிமன்றத்தின் தகுதியை, சட்ட அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்கினார். மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன எப்படி செய்யப்பட வேண்டுமென திட்ட வரையறை வழங்கும் அதிகார வரையறை உச்சநீதிமன்றத்திற்கு உண்டா? இந்தப் பொறுப்பு முற்றிலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளின் அதிகாரம் சார்ந்தது. அதில் தலையிட உச்சநீதிமன்றத்திற்கு உரிமை இல்லை. ‘ நல்ல இலவசம் ‘, ‘ கெட்ட இலவசம் ‘ என்பதையும், அதைச் செயல்படுத்திய ஆட்சியாளர்களின் நடவடிக்கை மீதுமான ‘தீர்ப்பை’ வழங்கும் உரிமை மக்களுடையது. அரசியல் கட்சிகள் மக்களிடம் ‘உரிமை‘ பெற்றே ஆட்சி நடத்துகின்றன, எனவே இதில் மூக்கை நுழைக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என ஆணித்தரமான வாதத்தை முன்வைத்தார். அதன் பின்னர் மோடி அரசின் ‘யோக்கியதையை’ பிளந்து போட்டார். மோடியை எந்தத் தகுதியின் அடிப்படையில் ‘ தேவையற்ற இலவசங்கள்’ குறித்து மாநிலங்களுக்கு ‘அறிவுரை‘ வழங்குகிறீர்கள் எனக் கேட்ட கேள்வி , இந்தியா டுடே நெறியாளர் ராகுல் கன்வாலையும், இந்தியாவின் ஒட்டு மொத்த ‘ கால் நக்கி ‘ ஊடகங்களையும் பொட்டில் அடித்துப் பொறி கலங்க வைத்தது. மட்டுமில்லை, சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் தீயாகப் பரவி இந்திய அரசியல் களத்தின் முக்கியமான பேசுபொருளாகியது. மோடிக்கு இது குறித்துப் பேசும் அருகதையை அரசியல் சாசன அதிகாரமோ, நிரூபிக்கப்பட்ட கல்வித் தகுதிகளோ, அதைவிட ஆட்சியின் மாட்சியோ வழங்கவில்லை என அடித்துச் சாய்த்தார். அனைத்து வகையிலும் தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் நாலந்தர/ மோசமான/ தோல்விகரமான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் மோடியும் பாஜகவும் பேச குறைந்தபட்சத் தகுதியற்றவை எனத் திட்டவட்டமாகச் சொன்னார்.

இதோடு முடிந்து விடவில்லை. இந்தியாவின் நேர்காணல் விற்பன்னர், மோடியையும், ஜெயலலிதாவையும் ‘ தண்ணி காட்டி ‘ மைக்கைத் தூக்கி விசிவிட்டு எழுந்து ஓடவிட்ட கரன் தாப்பருடனான பிடிஆர் உரையாடல் இந்தியாவின் ‘நோயுற்ற மோடி அரசை‘ அதன் எடுபிடிகளாகிப் போன அரசியல் சாசன அமைப்புகளையும் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தினார். கரன் தாப்பரின் நுட்பமான கேள்விக்கணை பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றங்களின் மேலவையில் நிகழ்த்திய மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ சுயநிர்ணய உரிமை’ தொடர்பிலானதாக ஆனபோது கொஞ்சம் நமக்கே அதிர்வாகவே செய்தது. இந்தக் கோரிக்கை அடிப்படையிலான உணர்வு இன்னும் தமிழ்நாட்டில் தொடர்வதாகக் கருதுகிறீர்களா? எனக் கேட்டார். இதற்கான பதிலை பிடிஆர் அவர்கள், சுயமரியாதை என்பதன் அடிப்படையிலானதுதான் சுயநிர்ணய உரிமை எனத் துவங்கியது துள்ளிக் குதிக்க வைத்தது. திராவிட இயக்க உணர்வைத் தொடரும் வாதங்கள் இந்த வகையில் இந்திய ஊடகங்களில் ஒலித்தது இனித்தது. எந்த நெடிய மொழி, இன, கலாச்சாரப் பின்புலம் கொண்ட சமூகமும் இந்தக் கோரிக்கையை வைக்கவே செய்யும். அதன் வடிவங்கள் மாநில சுயாட்சி வடிமாக மாறி இருக்கிறது. ஆனால் அந்த சுயமரியாதை உணர்வு இன்னும் உயிர்ப்போடு இருக்கவே செய்கிறது என்றார். இந்திய ஊடகங்கள் அவரது நேர்காணலிற்கு காத்திருக்கத் தொடங்கின. ஒவ்வொரு ஊடகத்திலும் நிதானமாக ஒன்றிய அரசை, பாஜகவை , அதன் கொள்கைகளை உரித்து வைத்தார். அனைத்திலும் உச்சநீதிமன்றத் தலையீட்டின் வரம்பு மீறலைத் தெட்டத் தெளிவான வார்த்தைகளில் சொன்னார். இதுதான் உச்சநீதிமன்றக் கொந்தளிப்பின் பின்னணி.

இனி, நேரடியாக சில உண்மைகளைப் பேசி விடலாம். திராவிட முன்னேற்றக் கழகம், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின், இந்தியாவின் கூட்டாட்சி அரசியல் சிந்தனையின் ஆதாரம் பேரறிஞர் அண்ணா, இவர்களின் சிந்தனைகளின் ஆட்சியின் பகுதியாக்கிய நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் ஆகியோரின் வழியில் தலைவர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பீடுநடை போடும் வெகுமக்கள் அரசியல் இயக்கம். சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் எனும் கோட்பாட்டினை ஏற்று நடக்கும் இயக்கம். ‘நான் சொன்னதை அப்படியே கேட்டு நடக்க வேண்டாம். இதைக் கேட்டு விட்டு, நீயே சிந்தித்துப் பார்த்து சரியெனப்பட்டால் செயல்படு’ என்றவர் பெரியார். நான் தம்பிகளிற்கு சொல்கிறேன்,ஆனால் அவர்கள் கருத்தை அறிந்து கேட்டே செயல்படுகிறேன் என்றவர் அண்ணா. இவர்கள் தடம் ஐம்பது ஆண்டு கால திராவிட இயக்கத்தை, ஆட்சியை வழிநடத்திய கலைஞர் ஒருமுறை சொன்னார், ‘என் உயரம் எனக்குத் தெரியும்‘ என்று. இதையெல்லாம் பட்டியலிடுவது அவர்களின் எளிமையையும் கருத்து நேர்மையையும் சுட்டவே. அவர்களே இந்தியா இறையாண்மையை, அரசியல் சாசனத்தை, மக்களைப் பிளக்கும் மதவாத சனாதனத்தை விமர்சிக்கக் கையாண்ட அச்சமற்ற மொழியை இந்திய அரசியல் வேறு எங்கும் கண்டதில்லை. அப்படி அவர்கள் கட்டி எழுப்பிய அறிவியக்கம் இது. எங்கள் பகுத்தறிவுப் பாதையில் அறிவே வழிகாட்டி. அறிவைத் தினசரியாக தீர்க்கமாகத் தீட்டியபடி இயங்குகிறோம். அதனால், அந்த எளிய மனிதர்களின் வழித்தோன்றல்கள், பணிவாகவே சொல்கிறோம், இந்தியாவின் ‘மகா புத்திசாலியான அரசியல் கட்சி ‘ திராவிட முன்னேற்றக் கழகம்தான்.’ புத்திசாலித்தனம்’ என்ற சொல்லில் ஒரு உட்சுழிப்பு உள்ளது, எனவே இந்தியாவின் ஒரே பகுத்தறிவுவாத அறிவியக்கம் திமுக மட்டுமே. எத்தனை முறை பகுத்தறிவின் விளக்கம் சொல்லி தெளிவுபடுத்தினாலும், இந்தியாவின் ஒரே ‘நாத்தீகக் கட்சியாக ‘ அறியப்படுவது திமுகதான். ஒருவகையில் நாங்கள் இந்தப் புரிதல் பிழையைப் பொருட்படுத்துவதில்லை. நாத்தீகம் என்பது மதவாத சிந்தனையின் பகுதியாகும் வாய்ப்புக் கொண்டது. ஆனால் நாங்கள் பகுத்தறிவாளர்கள்.

இதற்கான நிரூபணங்கள் ஏராளம். சுயராஜ்யக் கனவைவிட எங்களுக்கு சுயமரியாதை முக்கியம். அரசியல் விடுதலையைப் போலவே பன்மைத்துவ இன, மொழி, கலாச்சாரப் பண்பாட்டு விடுதலையும் அதிமுக்கியமானது. வெள்ளையரிடம் பெறும் விடுதலையைவிட பார்ப்பன மேலாண்மை சனாதன தர்மத்திடமிருந்து, ஜாதியப் படிநிலையைத் தகர்த்த சமூகநீதி விடுதலையே முக்கியம். இந்தியாவின் அரசியல் வரலாற்றில் சமூக மாற்றத்திற்கான புரட்சிகர சிந்தனைகளை விதைத்த சிந்தனையாளர்கள் பலர். பட்டியலிட்டால் விடுதல் பிழை நேரும். அந்த சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளை, இந்திய பன்மைத்துவத்திற்குக் குரலை, இந்தியாவின் பகுதிகளின் (பிரதேசங்கள்) உரிமையைப் பேசும் வெற்றிகரமான வெகுமக்கள் தேர்தல் அரசியல் இயக்கமாக பரிணாம வளர்ச்சியடைந்தது திமுகதான். இந்திய அரசியல் களத்தில் தேர்தலில் வெற்றி பெற்று 1967 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த முதல் மாநிலக் கட்சி திராவிட முன்னேற்றக் கழகமே என்பதே நிரூபணம்தான். மாநில உரிமைகள், மொழியுரிமை, சமூகநீதி உரிமைகள் என்ற தளங்களில் தீர்மானமான நிலைப்பாடுகளை இந்தியா அரசியலரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடிப்பது இந்த அறிவியக்கமே. இந்திய அரசியல் சாசனத்தின் முதல் திருத்தத்தின் மூலம் சமூகநீதியை நிலைநாட்டியதும், மொழியுரிமைப் போர்களின் வழியாக ‘ஒற்றை மொழி’ மேலாண்மையைத் தடுத்து இன்று வரை அந்தப் போரில் முன் நிற்பதும் திமுக. ஒரு மாநில அரசால் , கலைஞர் தலைமையில்/ முன்னெடுப்பில் , இந்தியாவின் முதல் ஒன்றிய- மாநில உறவு மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த ஆய்வறிக்கை உருவாக்கப்பட்டது ராஜமன்னார் குழு என்பதை நாடு மறக்காது. இன்னும் இந்தியாவில் ஆபத்தில் இருக்கும் பன்மைத்துவத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகளை அந்த அறிக்கைகள் மூலம் பெற முடியும். கலைஞர் காலத்து சமூகநீதி நடவடிக்கைகளைப் பட்டியலிட்டால் அது நூல் வடிவம் பெற்று விடும். பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் எனக் கலைஞர் செயல்தளம் மிக நீண்டது. அதனால்தான் தமிழ்நாடு ‘ பெரியார் மண்’, ‘சமூகநீதி மண்‘ எனக் கொண்டாடப்படுகிறது.

எனவே மேன்மைதங்கிய பழைய மற்றும் புதிய தலைமை நீதிபதி அவர்களே, கீழ்க்கண்ட கேள்விகளை மோடியிடமும் கேளுங்கள்.

1) ஆண்டிற்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு என 2014 தேர்தல் அறிக்கையில் சொன்னீர்களே, அது சரியானதுதானே, அதில் ஒரு சதவீதம் கூட செயல்படுத்தப்படவில்லையே, அது போல ‘ ஆகாயப் பந்தல்’ ஆபாசப் பொய்கள் அயோக்கியத்தனம் இல்லையா?

2) )15 லட்சம் வங்கியில் பணம் என்ற அறிவிப்பு ஆபாசமானது இல்லையா?

3) உத்தரப் பிரதேசத் தேர்தலில் வெல்ல ஜீவாலா இலவச கேஸ் சிலிண்டர் கொடுத்ததும், வேளாண் மக்களுக்கு வங்கியில் பணம் போட்டதும் கேவலம் இல்லையா?

4) இந்தியாவின் 10% பணக்காரர்களுக்கு பல லட்சம் கோடிக் கடன் தள்ளுபடி செய்ததும், கார்ப்பரேட் வரியை 10% குறைத்ததும் பொருளாதாரச் சுமை இல்லையா?

5) மோடி அரசின் திட்டங்களால் கொள்ளை லாபமடைந்து அந்த 1% பணக்காரர்கள் இந்தியப் பொருளாதாரத்தின் சரிபாதியைக் கையகப்படுத்தியது பொருளாதாரத்தை வளப்படுத்தியிருக்கிறதா?

6) அப்படித்தான் இந்த குஜராத் பண முதலைகள் வேலை வாய்ப்பை பெருகச் செய்திருக்கிறார்களா? இருக்கும் வேலையையும் பறிக்கும் வேலைதானே நடக்கிறது.

7) அதானியை ஆசியாவின் முதல் பெரும் பணக்காரராக ஆக்கியதும், உலகின் நான்காவது பெரிய பணக்காரராக ஆக்கியதும், எப்படி இந்த ‘ரெவ்டி கலாச்சாரத்தை’ மீறிச் சாத்தியமானது.

8) மோடி சூளூரைத்ததற்கு மாறாக ஸ்விஸ் வங்கியில் பண்மடங்கு இந்தியர்களின் பண இருப்பு பெருகியது இந்த ‘ரெவ்டியை’ மீறி நடந்தது.

9) கடைசியாக இதையும் கேட்டு விடுங்கள். மாநில நிதி பங்கீட்டின் 80% ஒன்றிய அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கே செலவாகும்போது, எந்தப் பெரும் பணம் ‘ இலவசங்களிற்கு’ மிச்சமிருக்கும்.

நீதிபதி அவர்களே, மோடி குற்றக் குழுமத்திற்குச் சொல்லுங்கள். இந்த நலத்திட்டங்களால்தான் ஓரளவாவது/ குறைந்தபட்ச பொருளாதார வளம் மறுசுழற்சியடைந்து மக்களிற்கு பயனளிக்கிறது என்பதை அறிந்துகொள்ளச் சொல்லுங்கள். இதையும் பறித்து அதானிக்குக் கொடுத்து விட்டால் நாட்டின் பெரும் கோடீஸ்வரர்கள் மட்டும் சுகமாக வாழலாம் என்பது மோசமான, அவர்களுக்கே ஆபத்தாக முடியும் வாய்ப்பு மட்டுமே கொண்டது என்பதை விளக்குங்கள்.

அதைவிட, மாண்மிகு நிதி அமைச்சர் பிடிஆர் அவர்கள் சொன்ன மிக முக்கியமான கருத்தை நினைவில் இருத்தச் சொல்லுங்கள், “ இந்தியா போன்ற 140 கோடி பல இன, மொழி, மத, கலாச்சாரக் குழுமங்கள் கொண்ட மக்களாட்சி நாடு உலகின் அரிதான அதிசயம்தான். ஆனால் அந்த அதிசயம் (மோடியின் மதவாத கொள்ளைக் கூட்டத்தால்) மோசமான ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது” என்பதை.

 

subagunasubagunarajan@gmail.com