ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நியூயார்க்கில் நடந்த ஒரு இலக்கிய நிகழ்வில் பேசச் சென்றிருந்த எழுத்தாளர் சல்மான் ரஷ்டி ஹாதி மட்டார் எனும் 24 வயது இளைஞரால் கழுத்திலும் வயிற்றிலும் பலமுறைகள் குத்தப்பட்டார். ரஷ்டியின் கையில் உள்ள நரம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன, அவரது ஈரல் காயம்பட்டுள்ளது, அவர் தனது ஒரு கண்ணை இழந்து விடுவார் என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு அவர் சிகிச்சையில் நல்ல பலன் கண்டு மீண்டு விடுவார் என நம்பிக்கை எற்பட்டிருக்கிறது. ரஷ்டி எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த
எழுத்தாளர் என்பதால் இச்செய்தி என்னை மிகவும் வருத்தத்துக்குள்ளாக்கியது. என் இதயம் பதறுகிறது. என்னால் அதைக் கற்பனையே பண்ண முடியவில்லை. வயதான ஒருவர் பத்து பதினைந்து முறைகள் தன் எழுத்துக்காக குத்தப்படும் காட்சியை நினைத்து என் பற்கள் கூசுகின்றன.

ரஷ்டியைத் தாக்கிய இந்த இளைஞர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்தவர். அவரது பெற்றோர் லெபனானைச் சேர்ந்தவர்கள். அவரது சமூகவலைதள கணக்குகளை ஆராய்ந்த போலீசார் அவர் இரானிய பயங்கரவாத இயக்கங்களின்பால் ஈடுபாடு கொண்டவர் என்று கூறுகிறார்கள். இரான் தான் 1989இல் ரஷ்டி எழுதிய Satanic Verses எனும் நாவல் இஸ்லாத்தை விமர்சிக்கிறது, அவதூறு பண்ணுகிறது எனக் கோரி ரஷ்டிக்கு எதிராக பத்வா பிறப்பித்தது. இப்போதும் அது நீடிக்கிறது. அதே நேரம் ஈரானோ, பிற தீவிரவாத இயக்கங்களோ இதுவரை இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஹாதி மட்டார் தான் இரானிய புரட்சிப் படை இயக்கத்தின் சில பக்கங்களை வாசித்துள்ளே னேயோழிய அதைப் பின்பற்றுவதில்லை எனக் கூறி உள்ளார். ரஷ்டியை “ஒரு கெட்ட மனிதர், அவர் இஸ்லாத்தையும், இஸ்லாமிய சமூகத்தையும் அவமரியாதை செய்கிறார், அவரைக் கடுமையாக வெறுக்கிறேன்.” என்று கூறும் அதே நேரம் Satanic Verses நாவலில் சில பக்கங்களையே தான் வாசித்துள்ளதாகவும் சொல்லுகிறார். எனில் ஒரு எழுத்தாளரின் சர்ச்சைக்குரிய புத்தகமொன்றைப் படிக்காமலே அவரைப் பற்றி வெறுப்புக் கருத்தை உருவாக்கி அதற்காகவே அவரைக் கொல்ல முயன்றுள்ளார் ஹாதி. 2018இல் லெபனானுக்குத் தன் மகன் சென்று வந்த பின்னர் அவர் குடும்பத்திடம் இருந்து விலகி இருக்கத் தொடங்கினார் என்று அவரது தாயார் கூறுகிறார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் இஸ்லாமிய நம்பிக்கை, மதப்பற்று, ஒரு இலக்கியப் பிரதி மீதான கோபம் ஆகியன ஹாதியை செலுத்தவில்லை, ரஷ்டி குறித்துப் பொது சமூகத்தில் நிலவிய பிம்பம், தன்னுடைய சமூகம் குறித்து ஹாதிக்கு இருந்த வருத்தங்களுடன் அவருடைய தனிப்பட்ட மன அழுத்தம், குழப்பங்கள், தனிமை, உலகம் தன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் எனும் விருப்பம் அவரை செலுத்தியதாகத் தெரிகிறது. எப்படிப் பெரியார் மீது செருப்பு மாலையிடுகிற ஒரு இளைஞனுக்கு பெரியாரையும் தெரியாது, அவரது இந்து மதப்பற்றும் மேலோட்டமானதோ அவ்வாறே ஹாதியும் இருக்கிறார்.

ஹாதி மட்டாரைப் போன்ற மன அழுத்தத்தில் இருக்கும், எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்ட இளைஞர்கள் எல்லா மதங்களிலும் இருப்பார்கள். அவர்கள் தமது உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு ஆளுமையை, தலைவரை ஆளுமையை இலக்காக்கி தமது கோபத்தை வடித்துக் கொள்வார்கள். அந்த விரோதியை அழித்து விட்டால் தம் உலகம் சீராகி விடும் என நம்புவார்கள். இவர்களில் எவரும் அடிப்படைவாத கருத்தியலால் ஈர்க்கப்பட்டால் ஒரு ஹாதி மட்டார் ஆவது சுலபம். ஏன் எல்லா மதங்களிலும் என்று சொன்னேன் என்றால் நமது கோட்சேவும் அப்படி காந்தி செத்தால் புலம் பெயர்ந்து தன் சொத்துக்களையும் உயிரையும் இழந்த மக்களுக்கு நீதி கிடைத்து விடும் என நம்பினவரே.

ஆனால் காந்தி இறந்த பின்னரும் இத்தேசத்தில் கொடுமைகளும் அநீதிகளும் தொடர்ந்தன. அரை நூற்றாண்டுக்குப் பிறகு மதரீதியாக மக்களைத் திரட்டும் நோக்கில் குஜராத்தில் சொந்தக் கட்சியினராலே இந்துக்கள் ரயிலுக்குள் வைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். அதை ஒட்டி இன்னும் கொடுமையான மக்கள் வேட்டையை அந்தக் கட்சி முன்னெடுத்தது. இதைப் புரிந்து கொள்ளும் பக்குவமோ அறிவோ இத்தகைய பயங்கவாதிகளுக்கு இருக்காது. இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும் – காந்தி கொல்லப்பட்ட போது நமது அப்போதைய கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் சொன்னாராம் – “நல்லவேளை, காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் இல்லை.” ஏன்?

காந்தியின் படுகொலை இந்துத்துவத்துக்காக நடத்தப்பட்டது என இந்தியாவில் எந்த இந்துவுமே நினைக்கவில்லை. இங்கே இந்துத்துவர்களோ இந்து மகாசபை உறுப்பினர்களோ ஆர்.எஸ்.எஸ்.காரர்களோ காந்தியின் படுகொலையின் பெயரில் தாக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக, கோட்ஸேயின் சாதியான சித்பவன பிராமணர்கள் மகாராஷ்டிராவிலும் மும்பையிலும் தாக்கப்பட்டார்கள். 15 பேர் கொல்லப்பட்டார்கள். கவனியுங்கள், காந்தியை ஒரு இந்து கொன்றார் என நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் எழுதின போதும் இந்திய இந்துக்கள் அப்படிக் கருதவில்லை. ஒரு பயங்கரவாத பைத்தியக்காரன் காந்தியைக் கொன்று விட்டான் என்றே அவர்கள் நினைத்தார்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவனாக அவனை அடையாளப்படுத்திக் கொண்டனர். ஆனால் ஒரு இஸ்லாமியர் அப்படுகொலையை செய்திருந்தால் ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியரும் நெருப்பு நதியில் நீந்தி வந்திருக்க வேண்டி இருந்திருக்கும். இன்று அந்தப் பழியைச் சொல்லியே அவர்கள் நசுக்கப்பட்டு நாட்டை விட்டே துரத்தப்பட்டிருப்பார்கள். ஏன்?

இந்துக்களின் மதவெறியா? மதப் பாசமா? இல்லை. இந்த தேசத்தில் பெரும்பான்மை மக்களுக்கு எப்போதும் சிறுபான்மை மதத்தவர்கள்மீது ஒரு மற்றமை உணர்வு, அவநம்பிக்கை, வெறுப்பு, அச்சம் என கலவையாக உள்ளது. அதனாலே ஒரு முஸ்லிம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டால் மொத்த இஸ்லாமிய சமூகமும் அவருக்காக மன்னிப்புக் கோர வேண்டும் என இந்துக்கள் தம்மை அறியாமலே எதிர்பார்க்கிறார்கள். அதையே “இந்தப் பழியையும் இஸ்லாமியர் சுமக்க வேண்டும், இதன் விளைவாக இந்துத்துவ இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் வலுப்பெறக் கூடும்” என பூச்சாண்டி காட்டிக் கொண்டே “அதனால் இஸ்லாமியர் இதைப் பெருவாரியாகக் கண்டிக்க வேண்டும், பயங்கரவாதத்தை தம் சமூகத்தில் இருந்து களையெடுக்க வேண்டும்” என எழுதுகிறார்கள். ஆனால் தமது சமூகத்தில் இருந்து ஒரு குழுவினர் திட்டமிட்டு பல்லாயிரம் இஸ்லாமியரைக் குத்தியும் வெட்டியும் எரித்தும் கொல்லும் போது அவர்களுக்காக மன்னிப்புக் கேட்க அவர்கள் நினைப்பதில்லை.

இந்தப் போக்கை நீங்கள் அவர்கள் தலித்துகளைப் பார்க்கும் விதத்திலும் கவனிக்கலாம். ஒரு தலித் இந்து மதவாதியாக, இந்துத்துவாதியாக இருந்தால் அது கடும் கண்டனத்துக்கு உள்ளாகிறது. ஆனால் ஒரு மத்திய சாதி இந்து, ஒரு சூத்திரர் இந்துத்துவவாதியாகும்போது அதை ஒரு குற்றமாக, வீழ்ச்சியாக முற்போக்கு இந்துக்கள் பார்ப்பதில்லை. இது ஏன்? “தலித்துகள் சனாதனத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அதனால் அவர்கள் சாதியமைப்பைத் தக்க வைக்கும் சனாதனத்தை ஆதரிக்கும் இந்துத்துவத்தை ஆதரிக்கலாமா?” என ஒரு நீண்ட விளக்கத்தைக் கொடுப்பார்கள். இது ஒரு பச்சைப் பொய்யாகும். சனாதனம் என்பது இந்துத்துவா அல்ல, இந்து மதம்தான். அவ்வளவு பொறுப்புள்ளவர்கள் முதலில் இந்து மதத்தில் இருந்து வெளியேற வேண்டும். அதை செய்ய முன்வராதவர்கள் ‘தலித்துகள் மட்டுமே இந்து மத சனாதன எதிர்ப்பில் மும்முரமாக இருக்க வேண்டும்’ என்பர். என்னவொரு அபத்தம்!

உண்மையான காரணம் நமது முற்போக்கு இந்துக்கள் இஸ்லாமியரைப் போன்றே தலித்துகளையும் ஒரு மற்றமையாகவே பார்க்கிறார்கள், இஸ்லாமியரை ஒரு சில தனிமனிதர்களை வைத்து ஒரே தன்மையினராக மதிப்பிடுவதைப் போன்றே தலித்துகளையும் முத்திரை குத்துகிறார்கள் என்பதே. இஸ்லாமியரைப் போன்றே தலித்துகளும் ஒரு சீன பெருஞ்சுவருக்கு அப்பால் இருக்கிறார்கள். அவர்களை ஒற்றை முகம் கொண்ட தொகுப்பாகக் காணவே சாதி இந்துக்கள் விரும்புகிறார்கள். எப்படி ‘நீல சங்கிகள்’ எனும் பழிச்சொல்லை வீசுகிறார்களோ அவ்வாறே ‘இஸ்லாமிய பயங்கரவாதிகள்’ எனும் மனிதக்கழிவையும் ஒரு மக்கள் சமூகம்மீது வீசுகிறார்கள். அவர்கள் அதை வாழ்நாளெல்லாம் சுமந்து கொண்டு திரிய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இஸ்லாமிய பயங்கரவாதம், இந்து பயங்கரவாதம், நீல இந்துத்துவா என்பதெல்லாம் சுத்த அபத்தமான சொல்லமைவுகள். ஏனென்று சொல்கிறேன்.

ஒரு மதம் என்பது ஒரு வாழ்க்கை நெறி, ஒரு நிறுவனம் அல்லது இன்னும் எதார்த்தமாக சொல்வதானால் மதம் ஒரு சமூக அடையாளம். அந்த சமூக அடையாளத்தினுள் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ அடைபட்டிருக்கிறார்கள். எந்த சமூக அமைப்பிலும் மிகச்சிலரே தீவிர மதவிசுவாசிகள். பெரும்பாலானவர்கள் சமூக ஏற்புக்காக மதநெறிகளை ஏற்பவர்கள். கூடி வாழ, மணம் புரிய, பெண் கொடுத்து எடுக்க, வணிகம் செய்ய, ஒரு அடையாளம் என சூடிக் கொள்ள மதம் தேவைப்படுகிறது. அதைத் தாண்டி எவரும் இங்கு இந்துவாகவோ இஸ்லாமியராகவோ கிறித்துவராகவோ இருப்பதில்லை. ஒருவர் தேநீர் அருந்தும் போது, மலம் கழிக்கும் போது, சிற்றுண்டி அருந்தும் போது, நெட்டி முறிக்கும் போது, விளையாடும் போது, சிரிக்கும் போது, கொட்டாவி விடும் போது, கோபப்படும் போது, வேலை செய்யும் போது, தூங்கும் போது இந்துவோ
இஸ்லாமியரோ கிறித்தவரோ அல்ல. இந்துக்களுக்கெனப் பிரத்யேகமாக உடலுறவு உள்ளதா? இஸ்லாமியருக்கோ கிறித்துவருக்கோ அப்படி ஒன்று உள்ளதா? 99% நேரமும் மதம் நம் வாழ்வில் குறுக்கிடுவதே இல்லை. ஒரு தொழுகை செய்யும் இஸ்லாமியரோ பழனிக்கு மொட்டையிட்டு காவடி தூக்கும் இந்துவோ கூட இஸ்லாமியரோ இந்துவோ அல்ல, ஒரு சடங்கை செய்கிற சாதாரண மனிதர் தான் என்பேன். ஒரு ஜவுளிக் கடையில் ஒரு பணியாளர் துணிகளை மடித்து வைப்பதைப் போலத் தான் ஒருவர் தொழுகை செய்கிறார், ஒருவர் காவடி தூக்குகிறார். ஒருவர் தேநீர் அருந்தும் போதாவது தேநீரின் சுவையைத் தன் நாவில் உணர்வார், தன் வயிறு நிறைவதை அறிவார், தொழுகையின் போதோ ஆலயத்தில் வழிபடும் போதோ அப்படி பௌதீகமாக நாம் எதையாவது அறிகிறோமா? இல்லை. ஆனால் ஒரு தெய்வீக உணர்வை சில நேரம் நாம் கற்பனை பண்ணிக் கொள்கிறோம். அதற்காக நாம் மனதைக் குவித்து உணர்வுகளைப் பெருக்க வேண்டி உள்ளது. ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடும் போது, உடம்பில் அரிப்பெடுக்கும் போது அதை உணர நாம் எந்த முயற்சியும் எடுக்கத் தேவையில்லை, கவனியுங்கள். ஆனால் இறையுணர்வுகளை, நெறிகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டி உள்ளது. மேலே இருந்து ஒருவர் நமக்கு அருள் தருகிறார், கண்காணிக்கிறார் என்று நினைவுபடுத்தாவிட்டால் அவரை மறந்து போவோம். அதுதான் மனிதனின் இயல்பு. அதுதான் ஒவ்வொருவரின் இயல்பும். நாம் மதத்துக்காக, இறையுணர்வுக்காக உருவாக்கப்படவில்லை. நாம் ‘இருக்கவே’ உருவாக்கப்பட்டிருக்கிறோம். மதமோ இறைவுணர்வோ நம் இருப்பின் பகுதியே அல்ல.

இங்கு கடவுள் மறுப்பு வகுப்பெடுப்பது என் நோக்கமல்ல; மாறாக, அன்றாட வாழ்வில் நாம் எல்லா அடையாளங்களுக்கும் வெளியேதான் வாழ்கிறோம் என்பதையே வலியுறுத்துகிறேன். நாம் நமது மத அடையாளங்களைத் துறக்கத் தேவையில்லை. நாம் ஆத்திகரோ நாத்திகரோ, எப்போதுமே நாம் அவற்றுக்கு வெளியேதான் இருக்கிறோம்.

பிளேட்டோவின் “யூதிப்ரோ” நூலில் சாக்ரடீஸ் நீதியைப் பற்றி பேசும் போது கடவுளர்களின் உலகில் எப்படி நீதிபரிபாலனம் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதைக் குறிப்பிட்டு மனிதர்கள் கடவுளரின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு குற்ற விசாரணை செய்தால் (கடவுளர்களே எந்த நீதிக்குள்ளும் வராததால்) நிறைய குழப்பங்கள் நேரும் என்கிறார். இதை சாமான்யர் அனைவரும் அறிவர். அதனாலே அவர்கள் மதத்தை தமது வசதிக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்கிறார்கள். படித்த முற்போக்காளர்களே சிறுபான்மையினர்மீதும், தாழ்த்தப்பட்டவர்கள்மீதும் எப்போது ஒரு ஒவ்வாமையை, பயத்தை, அதில் இருந்து விளையும் குழப்பத்தை சுமக்கிறார்கள். இதற்காகவே ஒரு மத அடையாளத்தை அவர்கள் மீது முத்திரை குத்தி அவர்களை ‘சிக்கலற்ற, உறைந்திருக்கும், ஒற்றைபட்டையான மற்றமையாக’ மாற்ற விரும்புகிறார்கள்.

தொப்பியும் தாடியும் சிலர் வைத்துக் கொள்வதாலே அவர் சதா நேரமும் தொழுகையும் கையுமாக இருப்பதாக, அவர்கள் மூச்சுவிடுவது கூட அல்லாவுக்காகவே என கற்பனை பண்ணிக் கொள்கிறோம். ஆயிரமாயிரம் அன்றாடப் பிரச்சனைகளுக்கு நடுவே அல்லாவுக்கும் சிறிது நேரமே அவர்களால் கொடுக்க முடிகிறது என்பதே உண்மை. அவர்களை விட அல்லாவைப் பற்றி சாதி இந்துக்களே அதிகம் கவலைப்படுகிறார்கள் என்பதை அவர்களை அணுக்கமாக கவனித்தால் யாரும் புரிந்து கொள்ளலாம். நெற்றியில் திருநீரு பூசியிருக்கிறவருக்கும் இதையே நான் சொல்வேன் – இந்து மதத்தை அவர்கள் ஒவ்வொரு கணமும் தலையில் சுமக்கிறார்கள் என்று சொல்வது இந்துத்துவ அரசியல்வாதிகளே அன்றி அது எதார்த்தமல்ல.

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் கிறித்துவர். அவருடைய அண்ணன் பாஜகவில் இருக்கிறார். இங்கு பெங்களூரில் நடக்கப் போகும் கவுன்சிலர் தேர்தலில் அவரது அண்ணன் போட்டியிடப் போகிறார். அவருடைய நிறுவனத்தில் இந்து படங்களையே வைத்திருப்பார். நெற்றியில் சந்தனத் தீற்றல் சில நேரம் இருக்கும். அவருடன் பல மணிநேரம் நான் செலவிடுகிறேன். அவருடைய ஒரு சொல்லிலோ அசைவிலோ நான் மதத்தைக் காண்பதில்லை, அரசியலைக் காண்பதில்லை, அவரிடம் எல்லா இடத்திலும் இருக்கிற மனிதனையே காண்கிறேன். அவர் எல்லா மதத்தவரையும் அன்புடனே நடத்துகிறார். ஆனால் இந்துத்துவ கட்சிக்காக கடுமையாக உழைக்கிறார். அவர் இந்துத்துவத்தை முன்னெடுத்தால் இந்துவா கிறித்துவரா? இந்த சிக்கலான அடையாள அரசியலை இன்று நாம் இந்தியாவில் வாழும் எல்லா மதத்தவரிடமும் காண்கிறோம். யார் எங்கே எதில் இருக்கிறார் என்று வகைப்படுத்த முடியாத பின்நவீனச் சூழல் இன்று நிலவுகிறது.

அப்படி இருக்க ஒரு மதத்தொகுப்பை சேர்ந்த ஹாஜி மட்டார் எனும் ஒரு தனிமனிதரின் பொறுப்பற்ற செயலுக்கு, குற்றத்துக்கு மொத்த இஸ்லாமியரும் ஏன் பொறுப்பேற்க வேண்டும்? இந்துத்துவ அரசியல் செயல்பாட்டாளர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் இந்துக்கள் ஏன் பொறுப்பேற்க வேண்டும்? கிறித்துவர்களாக / இஸ்லாமியராகப் பிறந்து இந்துக்களாக வாழ்ந்து / உணர்ந்து பாஜகவிற்காக பணி செய்கிற மக்கள் இங்கு இருக்கிறார்கள் (அவர்களுக்கு நான் எந்த வண்ணத்தையும் கொடுக்கப் போவதில்லை) சுதந்திர தினத்தை ஒட்டி பாஜகவினர் கேட்டுக் கொண்டதால் கிறித்துவர்களும் தாம் தன் வீட்டு வாசலில் தேசியக் கொடியை பறக்க விடுகிறார்கள். அது வெறும் தேசியக் கொடி அல்ல என்று அவர்கள் அறிவார்கள்.

ஒரு இஸ்லாமிய ஆட்டோக்காரர் தன் வண்டியில் தேசியக் கொடி பறக்க போவதைக் கண்டேன். அவர் யார்? நாளை கிறுத்துவர்களோ இஸ்லாமியரோ இந்துத்துவ மதக்கலவரம் ஒன்றில் தாக்கப்பட்டால் அதற்கு “இந்துத்துவ இந்துக்கள், இந்துத்துவ கிறித்துவர்கள், மற்றும் இந்துத்துவ இஸ்லாமியர்” பொறுப்பேற்க வேண்டுமா? “இந்துத்துவ வெறி கொண்ட சிறுபான்மையினரின் நேரடி / மறைமுக ஆதரவுடன் இந்துத்துவ வெறி கொண்ட இந்துக்களால் தத்தம் மத நம்பிக்கைக்கு ஆட்பட்ட சிறுபான்மை மக்கள் தாக்கப்பட்டார்கள், அதற்கு இந்துத்துவ வெறியில்லாத இந்துக்கள் கண்டனம் தெரிவிக்கிறோம், அதே போல இந்துத்துவ வெறி கொண்ட சிறுபான்மையினரும் தம் பொறுப்பைத் துறக்க வேண்டும்” என்று அவியல்தனமாக கோரிக்கை வைக்கப் போகிறோமா? கூமுட்டைக்கணக்காக இல்லை? அரசியல் நோக்கத்திற்காக ஒரு கட்சியோ தனிப்பட்ட இலக்கிற்காக ஒரு தனிநபரோ செய்த பயங்கரவாத செயல் இது என்பதே எளிய உண்மை. இதை ஏன் இவ்வளவு குழப்பிக் கொண்டு எலிகளைப் போல் தத்தம் பொந்துகளுக்குள் ஒளிந்து கொள்கிறோம்?

இன்னொரு கேள்வி: கோட்சே சுட்ட துப்பாக்கி “இந்து, இந்து” என வெடித்ததா? ஹபீப் மட்டார் குத்திய கத்தியில் “இஸ்லாமிய பயங்கரவாத கூர்முனை” என எழுதி இருந்து அதனால்தான் அது ரஷ்டியின் தசையைக் கிழித்ததா? இவை எளிய குற்றங்கள். மனித குலம் தோன்றியது முதற்கொண்டே மனிதன் குற்றங்களைப் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறான். தன் குற்றங்களுக்கு மனிதன் ஒரு காரணத்தைக் கற்பிக்கிறானே ஒழிய காரணம் குற்றத்தை செலுத்துவதில்லை. இதுவே உளவியல் சொல்வது – கொல்ல முடிவெடுக்கிறான் ஒருவன், ஆனால் அவன் கொல்லத் துணியும் சில மைக்ரோ நொடிகளுக்கு முன்பே அவன் நரம்பணுக்கள் அந்தக் கொலையைத் திட்டமிட்டு விடுகின்றன. அதனால்தான் கொலைக்கரத்துக்கு முன்பே கொலைக்கத்தி கிளம்புகிறது.

அது நம்மை செலுத்துகிறது. அதனாலே ஏன் கொன்றோம் என்பதை சில நிமிடங்கள் மனதில் திரட்டி சொல்ல வேண்டி வருகிறது. மேலும் ஒரு குற்றத்துக்கு சில சந்தர்ப்பங்கள், உடல் நிலை, மனநிலை, இடம், காலம் ஆகியவை சார்புநிலைகளாக இருந்து நிகழ்த்துகின்றன. இவற்றின் இடையே ஒருவன் செயல்படுகிறான். ஒரு சிறிய சார்புநிலை மாறிப் போனால் அச்செயலும் மாறிப் போகும். குற்றக் காரணங்கள் குற்றத்தை நியாயப்படுத்த உருவாக்கப்படும் காரணங்களே ஒழிய அவை குற்றத்தை செய்ய வைக்கிறவை அல்ல. இதை நான் கோத்ராவில் ரயிலை எரித்தவர்களுக்கும் சொல்வேன். ரஷ்டியைக் குத்தியவனுக்கும் சொல்வேன்.

மனிதனின் ஒவ்வொரு செயலையும் அரிஸ்டாட்டில் இரண்டு நோக்கங்களுக்கு உட்படுத்துகிறார் – 1) வாழ்வில் இன்பத்தை அடைய. 2) அர்த்தத்தை உருவாக்க. சோறு இன்பத்துக்காக. உடலுறவு இன்பத்துக்காக. உழைப்பு, பணம், வீடு இன்பத்துக்காகவும் அர்த்தத்துக்காகவும். மதம், சாதியுணர்வு, கலாச்சாரம் ஆகியவை அடையாளத்துக்காக. குற்றங்கள்? மனிதனை அரிஸ்டாட்டில் ஒரு மனிதனை பகுத்தறிவால் இயங்கும் பிராணி என்று பார்க்கிறார். ஆகையால் ஒரு மனிதனின் செயலில் எந்தக் குற்றமும் இல்லை, அவனுடைய சுபாவத்திலேயே குற்றம் உள்ளது, ஏனென்றால் அவனுடைய குற்றச்செயல் அவனுக்கு மகிழ்ச்சியைத் தரப் போவதில்லை, அவன் வாழ்வுக்கு நிறைவளிக்கப் போவதில்லை என்பது அவருடைய வாதம். ஆகையால் குற்றவாளி என்பவன் பகுத்தறிவை மீறி அறிவற்று செயல்படுகிறவன், தொடர்ந்து அவ்வாறு பகுத்தறிவின்றி செயல்படுவதால் அவனுக்கு ஒரு குற்ற சுபாவம் உருவாகிறது என்கிறார். ஒரு பக்கம் ரோஜா இருக்கிறது, இன்னொரு பக்கம் கத்தி இருக்கிறது. ரோஜாவை எடுத்து தன்னை நேசிக்கும் பெண்ணைத் தேடிக் கொடுக்கிறான் ஒருவன். அவள் ஏற்காவிட்டால் இன்னொரு பெண்ணிடம் கொடுக்கிறான். இந்த முயற்சிகளில் அவனுக்கு எப்போதோ இன்பமும் நிறைவும் கிடைக்கும். ஆனால் அவன் அந்த கத்தியை எடுத்து எத்தனை பெண்களிடம் போனாலும் அது அழிவையும் துன்பத்தையுமே அவனுக்குத் தரும். ஆக பின்னது குற்றமாகிறது. அரிஸ்டாட்டிலுக்கு முன்னவரும் அவரது குருவுமான சாக்ரடீஸ் மனிதனின் செயல்கள் ஒரு உன்னதமான லட்சியத்தை நோக்கி செலுத்தப்படுபவை என்கிறார். ஒருவன் ரோஜாவைக் கையில் எடுக்கையில் ரோஜாவின் கருத்து வடிவத்தை நோக்கியே ஈர்க்கப்படுகிறான். வாசமான, மிருதுவான, அழகான ஒரு உன்னத கருத்து வடிவாக ஒரு பெண்ணை, அவளுடைய காதலை அவன் நோக்குகிறான். அதை நாடிப் பயணித்துக் கொண்டே இருக்கிறான். அவனுடைய தேடலின் போது ஒவ்வொரு கருத்து அடுக்காக விலக்கிக் கொண்டு போய் அதன் முடிவில் ஒன்றுமில்லை என்று அறிய வேண்டும். அப்போதே அவன் அறிவு பெற்றவனாகிறான், அவனுடைய பகுத்தறிவே அவனை மெய்யறிவு பெற்றவனாக்கும் என சாக்ரடீஸ் நம்பினார். கத்தியைத் தூக்கினவனும் அழிவின் உன்னதக் கருத்துநிலையை நோக்கியே போகிறான்.

அதன் பல அடுக்குகளைக் களைந்து அவன் இன்மையைத்தான் காணப் போகிறான் என்று கூறும் சாக்ரடீஸ் தனது சீடரைப் போல ஒரு சாராம்சமான மானுட சுபாவத்தை ஏற்கவில்லை. இதுதான் இருவருக்குமுள்ள முக்கிய வித்தியாசம். நாம் இவர்களில் யாரைப் பின்பற்றினாலும் ஒரு குற்றத்தை சரியாகப் புரிந்துகொள்ள முடியும். குற்றங்களுக்கு என்று எந்த அருவமான அடையாளமோ கருத்தியலோ இல்லை. குற்றம் சாராம்சமற்றது. ஆனால் துரதிஷ்டவசமாக நவீன யுகத்தில் நாம் ஒவ்வொரு குற்றத்தையும் “யார், ஏன், எதற்காக செய்தார்?” எனும் கேள்விகளுடனே எதிர்கொள்கிறோம். ஏனென்றால் ஒவ்வொரு செயலுக்கும் மதம், சாதி, பொருளாதார, பால் அடையாளங்கள் / கொள்கைகள் சார்ந்த அர்த்தத்தை போதிக்க விரும்புகிறோம். இதன் அடிப்படையிலே நமது ஜனநாயக அரசுகள் இயங்குகின்றன. இதன் அடிப்படையிலேயே நமது இறையாண்மை நம் மீது அதிகாரம் செலுத்துகிறது. அதனாலே குற்றவிவாதமானது நமது நவீன சமூகத்தில் அடையாளம் குறித்த விவாதமாக, நம்மை சதா கண்காணிக்கும் கண்களாக, நம் தலைக்கு மேல் சதா தொங்குகிற கத்தியாகிறது.

ஒரு கொலை நிகழும் போது அதை எப்படித் தடுப்பது என்பதல்ல, அது ஏன் நிகழ்கிறது என்பதை நோக்கியே நம் புத்தி போகிறது. ஏனென்றால் அது ஒரு தனி அரசியலாகிறது. அந்த அரசியலை நோக்கி நாம் ஈர்க்கப்படுகிறோம். இது ஒரு சிலரையோ ஒரு கூட்டத்தையோ பெருந்தொகுப்பில் இருந்து தனிமைப்படுத்தி வதைக்கப் பயன்படுகிறது. இது தான் கொலைக் குற்றத்தை விடப் பெரிய பிரச்சனை என்பேன்.

மதம், தேசியவாதம் என்று வந்து விட்டால் மட்டும் ஏன் தாக்குதல்களுக்கு பயங்கரவாதம், தேசத்துக்கான உயிர்த்தியாகம் என்றெல்லாம் பெயர் கொடுக்கிறோம்? இப்படிச் செய்வது இப்படுபாதக செயல்களை விட அதிகமாக நம்மைப் பிளவுபடுத்தி ஆபத்தை விளைவிக்கிறது. ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில், துப்பாக்கிச் சூட்டில் இறப்பவர்கள் சில நூறு பேர் என்றால் அதை வைத்து மக்களின் பெருங்கூட்டம் லேபிள் பண்ணப்படும் போது, சாராம்சப்படுத்தப்படும் போது பல கோடி பேர் அதனால் பிளவுபடுத்தப்பட்டு அக்னிப் பரீட்சைக்கு உள்ளாகிறார்கள். இஸ்லாமியர் தாம் அப்படியான இஸ்லாமியர் அல்லவென்றும், சில நேரங்களில் இந்துக்கள் தாம் அப்படியான இந்துக்கள் அல்லவென்றும் பொறுப்புத் துறப்புகள் செய்ய வேண்டி வருகிறது. இம்மக்கள் தாம் ‘அப்படியான’ இஸ்லாமியரோ, இந்துக்களோ அல்ல என்று முன்பு எப்படியெல்லாம் முன்பு நிரூபிக்கத் தலைப்பட்டார்களோ அவ்வாறே பின்பு ஆகியும் தீர்கிறார்கள்.

ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையிலான செயலாக நாம் குற்றங்களைப் பார்க்க வேண்டும். ரஷ்டியின் மீதான தாக்குதலைப் பார்க்கையில் நாம் மீண்டும் சாக்ரடீஸ், அரிஸ்டாட்டிலின் எளிமையான விளக்கங்களுக்கு மீள வேண்டும், அதுவே தீர்வு என்று தோன்றுகிறது. இல்லாவிடில் நாம் வெறுப்பரசியலுக்கு பலியாக வேண்டியது தான். இந்த உலகில் எந்த ஒன்றும் சாராம்சமாக எதில் இருந்தும் பிறப்பதில்லை. பல்வேறு சார்புநிலைகளே ஒவ்வொரு தோற்றத்துக்கும் காரணமாகிறது. அந்த சார்புநிலைகள் வேறு சார்புநிலைகளை சார்ந்து எழுகின்றன என்றார் புத்தர். ஒரு கொலையை / கொலை முயற்சியை / வெடிகுண்டுத் தாக்குதலை / துப்பாக்கிச்சூட்டை ‘மத பயங்கரவாதத் தாக்குதல்’ என்று சாராம்சப்படுத்தும் முன்னர் அக்கொலை எப்படி நிகழ்கிறது, எங்கிருந்து யாரால் எப்படியான சார்புநிலைகளால் நிகழ்கிறது என யோசித்துப் பார்த்தால் இவ்வளவு சிக்கல்களையும் தவிர்க்க முடியும்.

அப்போதே வெறுப்பு மறைந்து அன்பு மலரும்!

 

abilashchandran70@gmail.com