செப்டம்பர் 10. உலக தற்கொலை தடுப்பு தினம்.

2003 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம், சர்வதேச தற்கொலை தடுப்பு அமைப்போடு சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இதே நாள் தற்கொலை தடுப்பு தினத்தைக் கடைபிடிக்கிறது. தற்கொலைமீதான பொதுமக்களின் எதிர்மறை பார்வைகளை மாற்றுவதும், அதைக் தடுப்பதற்குண்டான ஆக்கப்பூர்வமான கொள்கை முடிவுகளை அரசாங்கங்கள் எடுப்பதை வலியுறுத்துவதுமே இந்த நாளின் நோக்கம்.

ஒவ்வொரு வருடமும் தற்கொலைகளின் எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து மடிந்திருக்கிறார்கள். தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை இதைவிட இருபது மடங்கு அதிகமாக இருக்கலாம் என்கின்றன ஆய்வுகள். உலகம் முழுவதுமே பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு தற்கொலை பல மடங்கு அதிகரித்து வந்தாலும், வளர்ந்து வரும் நாடுகளே இதனால் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. அதனால் தற்கொலைகளை தடுப்பதற்கான துரிதமான செயல்பாடுகள் அங்கேயே அதிகம் தேவையானதாக இருக்கின்றன. ஆனால் துரதிர்டவசமாக அங்குதான் தற்கொலைகளைத் தடுப்பதன்மீதான எந்தவிதப் புரிதலும், முயற்சிகளும் இல்லாமல் இருக்கிறது. இது தொடர்பாக அந்தந்த நாடுகளை விழிப்படையச் செய்வதும், தற்கொலைகளை ஒரு மருத்துவ நெருக்கடியாகக் கொண்டு அதை தடுப்பதற்குண்டான செயல்பாடுகளை அந்தந்த நாடுகளில் முடுக்கி விட வேண்டியுமே இந்த தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை தற்கொலைகளின் வீதம் மிக அதிகமாக இருக்கிறது. உலக அளவில் மிக அதிகமான தற்கொலைகள் இந்தியாவிலேயே நடக்கின்றன. அதிலும் இளம் வயதினரின் தற்கொலைகள் மிகவும் அதிகம் நடக்கும் நாடாக சமீபத்தில் இந்தியா மாறியிருக்கிறது. 15 வயதிலிருந்து 30 வயது வரையிலானவர்கள் மிக அதிகமாக இந்தியாவில் தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது உண்மையில் அதிர்ச்சியான செய்தி. தேசிய குற்றவியல் அமைப்பின் கணக்கெடுப்பின்படி 2020 ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட பதினோராயிரம் குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இது அதற்கு முந்தைய ஆண்டை விட இருபது சதவீதம் அதிகம். மொத்த தற்கொலைகளில் மூன்றில் ஒரு பங்கு 15 வயதிலிருந்து 30 வயதிற்குள்ளானவர்களிலேயே நடக்கிறது. ஒவ்வொரு 55 நிமிடத்திற்குள்ளும் இந்தியாவில் ஒரு குழந்தை தற்கொலை செய்து கொள்கிறது. கடந்த சில ஆண்டுகளாகத் தற்கொலைகள் கணிசமான அளவில் அதிகரித்து வந்தாலும் இளவயது தற்கொலைகள் மிகவும் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகின்றன.

இளவயது தற்கொலைகள் ஏன் இந்தியாவில் சமீப காலங்களில் தொடர்ந்து அதிகரிக்கின்றன என்பதை உடனடியாக ஆராய வேண்டிய சூழலில் இந்தியா உள்ளது. இந்த வருட உலக தற்கொலை தடுப்பு தினச் செய்தியாக “செயல்பாடுகளின் வழி நம்பிக்கையைக் கொடுப்போம்” என்பது உண்மையில் இந்தியாவிற்கே தேவையானதாக இருக்கிறது. தற்கொலைகளை, குறிப்பாக இளவயது தற்கொலைகளைத் தடுப்பதற்கான செயல்பாடுகளை உடனடியாக இந்தியா மேற்கொள்ள வேண்டும். வெறும் பேச்சு அல்ல, தீர்க்கமான செயல்களே நமக்குத் தேவை. அந்த செயல்கள் மூலமாகவே பெருகி வரும் தற்கொலைகளை நம்மால் தடுக்க முடியும்.

எமில் டர்க்லின் என்ற தத்துவவியலாளர் தற்கொலைகளை “சமூகத்தின் நோய்” என்றார். உண்மையில் தற்கொலைகளை நாம் அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் தற்கொலைகளைப் பற்றியான நமது பொதுவான புரிதல் தனி நபரை மையப்படுத்தியே இருக்கிறது. தற்கொலைகளைத் தனி நபரின் தோல்வியாக சித்தரிக்கும் போக்கே இங்கிருக்கிறது. ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும்போது “ஏன் இப்படிக் கோழைத்தனமாக முடிவு செய்கிறான்?” என்று தற்கொலை செய்து கொள்பவரைக் குற்றம் சொல்லும் போக்குதான் இருக்கிறது. ஒரு தனி நபர் இந்த சமூகத்தின்மீதான நம்பிக்கையை முற்றிலும் இழந்த கணத்தில்தான் தற்கொலையை பற்றி யோசிக்கத் தொடங்குகிறான், அந்த ஏமாற்றம் அதிகமாகிக்கொண்டே செல்லும்போது ஒரு விரக்தியான மனநிலையில் தற்கொலை செய்து கொள்கிறான். அதற்கு முன்பாக எங்காவது ஒரு துளி நம்பிக்கையை இந்த அமைப்பு கொடுத்திருக்கும் பட்சத்தில் அவன் அந்த விபரீதமான முடிவை எடுத்திருக்கவே மாட்டான். ஒவ்வொரு தற்கொலையிலும் சமூகத்தின் தோல்வியே பிரதானமாக இருக்கிறது, அதைத் தனி நபரின் தோல்வியாக நாம் சுருக்குவது உண்மையில் நம்மை சமாதானப்படுத்திக்கொள்வதற்கே!

 சமீக காலங்களில் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலை என்பது கிட்டத்தட்ட ஒரு தொடர்கதை ஆகிவிட்டது. பள்ளி மாணவர்கள் வரை, கல்லூரி மாணவர்கள் வரை தினமும் மாணவர்களின் தற்கொலைகள் தலைப்பு செய்தியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த தற்கொலைகள் சமூகத்தின் கூட்டு மனசாட்சியைத் தட்டி எழுப்பும்போது மட்டும் அது நிமித்தமாக சில உரையாடல்கள், விவாதங்கள் நடக்கின்றன; சில நாட்களிலேயே இவற்றின் வழி பெறப்பட்ட முடிவுகளும் உயிரற்றுப் போகின்றன. மாணவர்கள் தொடர்ச்சியாக தங்களை மாய்த்துக் கொள்வதை எந்தவிதக் குற்றவுணர்ச்சியுமின்றி அத்தனை சுலபமாகக் கடந்து கடந்து போகிறோம். ஏனென்றால் அது அந்த மாணவனின் தனிப்பட்ட பிரச்சினை. நாம் அதில் செய்வதற்கு எதுவும் இல்லை என்ற எண்ணமே நம்மை அதிலிருந்து விலகி ஓடச் செய்கிறது. ஆனால் அதிகரிக்கும் இளவயது தற்கொலைகளுக்கு ஒரு சமூகமாக நம் ஒவ்வொருக்கும் பங்கு இருக்கிறது.

ஒரு சமூகம் தன்னளவில் அதன் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் நலனை முதன்மையானதாகக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு சமூகம் ஏதேனும் ஒரு வகையில் பாதிப்படையும்போது அந்த பாதிப்புகள் அதன் விளிம்பு நிலையிலுள்ள மக்களையே முதலில் பாதிக்கிறது. ஒட்டுமொத்த நலனுக்காக ஒரு ஊரடங்கைக் கொண்டு வரும்போது அதனால் பெரிதும் பாதிப்படைந்தது யார்? விளிம்பு நிலை மக்களே! துரிதமாக நிகழும் எந்த சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களும் முதலில் விளிம்பு நிலையில் உள்ள மக்களையே பெரிதும் பாதிக்கும், அதனால் எந்த அரசாங்கம் எந்த திட்டமிடல்களையும் செய்யும்போது இவர்களை கருத்தில் கொண்டே எடுக்க வேண்டும். மாறாக, அரசாங்கத்தின் பெரிய கொள்கை முடிவுகளில் இவர்கள் புறக்கணிக்கப்படும்போது இவர்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகிறது, இப்படி ஒரு முழு சமூகத்தினால் கைவிடப்படும் நிலையில் அவர்கள் தற்கொலைகளையே தீர்வாக நினைக்கிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட தோல்வியல்ல, சமூகத்தின் தோல்வி!

அதே போலவே ஒரு சமூகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் பல்வேறு வகைகளில் தனித்துவமானவர்கள். உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களினாலும், சமூக, பொருளாதார நெருக்கடிகளினாலும் மிகவும் சுலபமாக பாதிக்கக்கூடியவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின்மீதான பெரும் சுமைகளை அவர்கள் எதிர்பாராத தருணத்தில் வைக்கும்போது அவர்கள் மிக சுலபமாக செயலிழந்து போகிறார்கள். உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும், ஆதரவற்ற நிலையிலும் இருக்கும் மாணவர்களால் தொடர் நெருக்கடியுடன் நீண்ட நாட்கள் போராட முடிவதில்லை அது அவர்களின் தவறல்ல, அவர்களைப் புரிந்து கொண்டு அவர்களை உள்ளடக்கி நாம் திட்டமிடல்களைச் செய்யும்போது நாம் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறோம், கைவிடவில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். அப்படிப்பட்ட நம்பிக்கையை கொடுப்பதன் வழியாகவே நாம் இளவயது தற்கொலைகளைத் தடுக்க முடியும். ஆனால் நாம் அதற்த் தயாராக இருக்கிறோமா?

பெரும்பாலான நேரங்களில் நாம் தற்கொலைகளை ஒரு சமூக அவலமாக கருதுவதில்லை. மாறாக, அதை ஒரு தனிநபர் பிரச்சினையாக இன்னும் குறிப்பாக, அதை ஒரு தனிநபர் மனநல பிரச்சனையாக மாற்றவே முயல்கிறோம். சூழ்ந்து கொள்ளும் அவநம்பிக்கையும், சிதைந்த ஒரு மனமுமே தற்கொலையின் இறுதிப் படியாக இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதுவே முழு முதல் காரணம் என்று சொல்வது சுயநலமானது. ஒரு மோசமான மனநிலையில்தான் ஒருவர் தற்கொலையை நாடிச் செல்ல முடியும் என்பது வெளிப்படை, அந்த மோசமான மனநிலையை ஒருவன் அடைந்ததற்கு இந்த சமூகம் எந்த வகையிலும் பொறுப்பில்லை எனச் சொல்ல முடியுமா?

மனம் என்பது இந்த சமூகத்தோடு ஒன்றிணைந்தது. தனிப்பட்ட ஒருவரின் நலன் இந்த சமூகத்தின் நலத்தோடு பின்னிப்பிணைந்தது. ஒரு சமூகம் நலமாக இல்லாமல் ஒரு தனிப்பட்ட மனிதரின் மனம் நலமாக இருக்காது. இது மனநலத்திற்கு மட்டும் பொருந்துவதல்ல. பொதுவாக நலம் என்றாலே அதில் தனிநபருக்கான பொறுப்பைவிட சமூகத்திற்கான பொறுப்பு மிக அதிகம். குடிமக்களின் நலனைப் பேணிப் பாதுகாப்பது ஒரு சமூகத்தின் இன்றியமையாத கடமை என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஒருவர் நலமற்றுப் போகும்போது ஏதோ ஒரு வகையில் இந்த சமூகம் தனது கடமையில் இருந்து தவறியிருக்கிறது என்று சொல்லலாம். அதேபோலவே ஒருவரின் மனநலம் சிதைந்து போவதற்கும் இந்த சமூகம் ஏதோ ஒரு வகையில் காரணமாயிருக்கிறது என்பதுதான் உண்மை. அதைவிட்டு இதைத் தனி நபர் பிரச்சினையாக சுருக்குவதன் விளைவு “தற்கொலைகளுக்கு மனநல ஆலோசனை மட்டுமே தீர்வு” என நம்புவது. ஒரு தனிநபரை ஆற்றுப்படுத்துதல் வழியாக தற்கொலைகளைத் தடுக்கலாம் என்பது ஒரு மூட நம்பிக்கையே, மனநல மூடநம்பிக்கை. ‘ஒரே பிரச்சனையை எதிர்கொள்ளும் எல்லோரும் தற்கொலைகளை நாடிச் செல்வதில்லை. சில பேர் மட்டும்தான் தற்கொலை செய்கிறார்கள். அப்படி என்றால் அந்த சில பேரின் மனநிலைதானே பிரச்சனை? எப்படி நாம் இந்த சமூகத்தை அதற்குக் காரணமாக சொல்ல முடியும்?’ என்று கேட்பவர்கள், ஒரு விஷயத்தை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஏன் பெரும்பாலான நேரங்களில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மாணவர்கள் மட்டுமே தற்கொலை செய்து கொள்கிறார்கள்? ஏதோ ஒரு வகையில், இந்தக் கல்வி நிறுவனங்களின் அமைப்பும், அதன் கல்விமுறையும் இந்த மாணவர்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்பதைத்தான் நாம் அதற்கு பதிலாகக் கொள்ள முடியும். ஜாதி ரீதியான, மதரீதியான ஒடுக்கு முறைகள் அதிகமாக இருக்கும் இடங்களில் இது போன்ற தற்கொலைகள் தொடர்ச்சியாக நிகழ்கின்றன என்பதை நாம் கடந்த காலங்களில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மாணவர்களைப் பொறுத்த வரையில் கல்வி என்பது அவர்களுக்கு வெறும் அறிவு என்ற வகையில் நாம் சுருக்கிப் பார்க்க முடியாது. அது அவர்களுக்கு எதிர்காலம், கல்வி மட்டுமே அவர்களின் அத்தனை துயரங்களில் இருந்தும் அவர்களை மீட்க கூடியது. ஒரு மேல்மட்டத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கிடைப்பது போல இவர்களுக்குக் கல்வி அத்தனை சாதாரணமாக கிடைத்துவிடுவதில்லை, அவர்களின் சமூக,பொருளாதாரச் சூழலில் கல்வியைத் தொடர வேண்டும் என்றாலே அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும். எத்தகைய கல்விப் பின்புலமும் இல்லாத, எத்தகைய வசதிகளும் இல்லாத, கல்வியின் வாசனையே நுகராத ஒரு விளிம்புநிலை குடும்பத்திலிருந்து வெறும் கல்வி என்ற ஏணியை மட்டுமே பிடித்து மேலே வரும் ஒருவனுக்கு வாழ்க்கை சார்ந்த ஏராளமான கனவுகள் இருக்கும், எதிர்பார்ப்புகள் இருக்கும். அப்போது கல்வியைதான் அவர்கள் அத்தனையும் வழங்கும் அட்சய பாத்திரமாக அவர்கள் நம்பி வருவார்கள். அந்தக் கல்வி அவனது ஜாதியை வைத்து, மதத்தை வைத்து, மொழியை வைத்து மறுக்கப்படுமானால், வாழ்க்கை சார்ந்து அவன் கொண்டிருக்கும் அத்தனை நம்பிக்கைகளும் தகர்ந்து போகும். இத்தனை கடினமான பாதைகளைக் கடந்து வெறும் கல்வியையும், அறிவையும் மட்டுமே கை நிறைய சுமந்து கொண்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு வரும் ஒரு மாணவனை அவனது கல்வியை வைத்து மதிப்பிடாமல் அவனின் பெயரை வைத்தும், ஜாதியை வைத்தும், மதத்தை வைத்தும் மதிப்பீடு செய்யும்போது உண்மையில் அவன் இந்த அமைப்பின்மீது நம்பிகையற்றவனாய் போகிறான். அவனுக்கு நியாயமாக்க் கிடைக்கக்கூடிய அங்கீகாரங்களும் வாய்ப்புகளும் மறுக்கப்படும்போது, ஏற்றத்தாழ்வுகளுடனும், பாரபட்சங்களுடனும் அவன் நடத்தப்படும்போதும், மற்றவர்களுக்கு முன் அவனது திறமைகள் நிராகரிக்கப்படும்போதும், அவமானப்படுத்தப்படும்போதும் அவன் பற்றிக்கொள்ள நாம் எத்தகைய பிடிமானத்தை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்? ஒரு சமூகமாக நாம் தோற்கும் இடம் இதுதான்.

இன்றைய சூழலில் பெருகி வரும் மாணவர்களின் தற்கொலைகளை மூன்று கோணங்களில் அணுகலாம்:

 இன்றைய மாணவர்களிடையே தனிப்பட்ட முறையில் உண்டாகியிருக்கக்கூடிய மாற்றங்கள்.

 புதிய தலைமுறை பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பின் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் அச்சங்களும், பதட்டங்களும்.

 அத்தனைக்கும் தனி நபர்களை மட்டுமே பொறுப்பாக்கும் புதிய அரசியல் வடிவங்கள்.

என இந்த மூன்று கோணங்களில் இருந்து இயல்பை முழுவதுமாகப் புரிந்து கொண்டாலே நாம் பெருகி வரும் தற்கொலைகளைத் தடுப்பதற்கான தீர்வை முழுமையாகப் பெற முடியும்.

இந்த மூன்று தளங்களிலும் சில பொதுவான இயல்புகளை மட்டும் இங்கே சொல்கிறேன். இவற்றை நான் பொதுமைப்படுத்தவில்லை. பெருவாரியாக நாம் பார்க்கும் மாற்றங்களை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன்.

இன்றைய மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்:

 துரிதமான வளர்ச்சியின் விளைவாகவும், சமூக வலைதளங்களின் தாக்கங்களின் விளைவாகவும் அவர்கள் மிக இளம் வயதிலேயே சுய அடையாளத்தை நோக்கி நகரத் தொடங்குகிறார்கள். அவர்களுடைய நடவடிக்கைகள் பெரும்பாலும் சுய தேவைகளின் அடிப்படையிலேயே இருக்கின்றன. தான் விரும்பும் ஒன்றை எப்படியாவது பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அது இல்லாவிட்டால் விரக்தியடைந்து விடுகிறார்கள், தன்னைச் சுற்றி உள்ளவர்களின் நலனில்கூட அவர்கள் பெரிதும் கவலைப்டுவதில்லை. உறவுகளைப் பயன்படுத்திக்கொள்வதிலும், உருவாக்கிக்கொள்வதிலும் பெரும்பாலும் சுயநலமே இருக்கின்றன. அதனால் யாரிடமும் அவர்களால் சுயநலமற்ற, ஆழ்ந்த உறவை உருவாக்க முடிவதில்லை, ஏனென்றால் அப்படி ஒரு உறவை அமைத்துக்கொள்ளும் பட்சத்தில் அதற்காக தனது விருப்பு, வெறுப்புகளை இழக்க வேண்டுமே! அதற்கு அவர்கள் பெரும்பாலும் தயாராகவே இல்லை. அதனால் அவர்களின் எல்லா உறவுகளும் மேலோட்டமான ஒன்றாகவே இருக்கின்றன.

 முடிவெடுப்பதில் எந்த நிதானமும் இல்லை, உடனடி முடிவு, உடனடி தீர்வுதான் அவர்களின் வழக்கமாக இருக்கிறது. எந்தப் பிரச்சினையையும் நீட்டிக்க விரும்புவதில்லை, ஏனென்றால் நீட்டிப்பதனால் உண்டாகக்கூடிய பதட்டத்தை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. சரியோ, தவறோ உடனடியாக முடிவெடுத்து அந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வந்துவிட வேண்டும், அதனால் பெரும்பாலான நேரங்களில் அனைத்துப் பிரச்சினைகளிலும் தவறான முடிவையே எடுக்கின்றனர், பக்குவமற்ற, அவசர கதியில் எடுக்கும் முடிவுகள் அந்தக் கணத்தில் வேண்டுமானால் கொஞ்சம் இளைப்பாறுதலாக இருக்கலாம். ஆனால் நீண்ட நாட்கள் நோக்கில் அதனால் பாதிப்பே அதிகம் என்பதை அவர்கள் உணர்வதில்லை. உடனடி முடிவு, உடனடி தீர்வு என்பதே அவர்களின் இயல்பாக ஆகிவிட்டது.

 எப்போதும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருக்கிறார்கள். சமூக வலைதளங்கள் அவர்களின் உள்ளெரியும் இந்த நெருப்பை அணைந்து விடாமல் பாதுகாக்கிறது. சிறிய சீண்டுதல்களுக்கே சட்டென வெடித்துக் கிளம்புகிறார்கள், பெரிய துரோகங்களையும், அவமானங்களையும் இதனால் அவர்கள் எதிர்கொள்ளும் திராணியற்று இருக்கிறார்கள். அப்படிப்பட்ட எதிர்மறை நிகழ்வுகளை ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அணுகும்போது அது என்னவெல்லாம் ஆபத்துகளில் கொண்டு முடியுமோ அத்தனை ஆபத்துகளிலும் சிக்கிக்கொள்கிறார்கள்.

 சக மனிதர்களின் தேவையை முற்றிலும் புறக்கணிப்பவர்களாக இருக்கும் பண்பை எப்படியோ பெற்றிருக்கிறார்கள். தனக்கான அங்கீகாரத்தையும், பாராட்டுகளையும் வேண்டும்போதெல்லாம் கொடுத்துவிடக்கூடிய இயந்திரமாகவே இவர்கள் சக மனிதர்களை அணுகுகிறார்கள். தங்களது குறைகளையோ, இயலாமைகளையோ பிறர் சுட்டிக்காட்டுவதை இவர்களால் தாங்கவோ, பொறுத்துக்கொள்ளவோ முடிவதில்லை. அந்த நேரத்தில் அப்படி சொல்பவர்களின்மீது வெறுப்பை உமிழ மட்டுமே இவர்களால் முடிகிறது.

 மனித மாண்புகளுக்கும், அற மதிப்பீடுகளுக்கும் இவர்களிடம் எந்த மதிப்பும் இல்லை. அதற்காகவெல்லாம் மெனக்கெட வேண்டும் என்பதையே குழப்பமாகப் பார்க்கக்கூடிய மன நிலையில்தான் இருக்கிறார்கள். தாங்கள் விரும்பும் ஒன்றை அடைவது மட்டுமே இவர்களின் பிரதானமான நடவடிக்கையாக இருக்கிறது. அதற்குத் தடையாக இருக்கும் அத்தனை மதிப்பீடுகளையும் உடைத்துப் போட்டுச் செல்ல எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். இதன் காரணமாகவே மிக சிறிய வயதில் போதை பொருட்களின் பழக்கவழக்கங்கள் இவர்களிடம் பெருகிவிட்டன. அது வீழ்ச்சியடந்து கொண்டிருக்கும் அற மதிப்பீடுகளை சுத்தமாக்க் காலி செய்துவிடுகிறது. புதிய தலைமுறை பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பின் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் அச்சங்களும், பதட்டங்களும்:

 டிஜிட்டல் தலைமுறை குழந்தைகளின் பெற்றோர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறை பட்டதாரிகளே. பொருளாதார நிலையில் முதல் முறையில் ஓரளவிற்கு நல்ல நிலையை அடைந்திருக்கும் இவர்கள் தங்கள் குழந்தைகளை எப்போதும் தங்களின் நீட்சியாகவே கருதுகிறார்கள். இந்தக் கருத்தாக்கத்தின் விளைவுகளே குழந்தை வளர்ப்பில் இவர்களிடம் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள். இந்த மாற்றங்களை உற்று நோக்கினால் அது குழந்தைகளை எவ்வளவு பலவீனப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

 குழந்தைகள் சீக்கிரம் வளர்ந்து உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு அதில் சாதனைகள் புரிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். குழந்தைமையின் படிப்படியான வளர்ச்சியை இவர்களால் பொறுமையாக்க் கையாள முடியவில்லை, அதை உடைத்துக்கொண்டு குழந்தைகள் உடனடியாக வெளியேறிவிடத் துடிக்கிறார்கள். குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி இதனால் தடைபடுவதை இவர்கள் உணர்வதில்லை. சக குழந்தைகளிடம் சாதாரணமாக விளையாடினால்கூட அந்த விளையாட்டில் பயிற்சி பெற்று சாதனையாளராக்க முடியுமா என அபத்தமாக யோசிக்கிறார்கள். எந்த நேரமும் செல்போனில் இருக்கும் குழந்தையை ஏதாவது விளையாட்டில் சேர்க்க ஒரு பெற்றோரிடம் பரிந்துரைத்தபோது “எந்த விளையாட்டில் சேர்ந்தால் சாதிக்கலாம்?” என்று கேட்குமளவிற்குக் குழந்தைகளை ஏதேனும் ஒன்றில் சாதிக்க வைத்து தங்களின் குழந்தை வளர்ப்பை பறை சாற்றிக்கொள்ள நினைக்கிறார்கள்.

 தங்களது குழந்தைகளை எந்தப் பிரச்சினையையும் அண்டாதவாறு பார்த்துக்கொள்கிறார்கள். அதையும் மீறி குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இவர்களே முன்னின்று தீர்த்து வைக்கிறார்கள். சிறு வயது குழந்தைகள் தங்களுக்குள் விளையாடிக் கொள்ளும்போதும் இவர்கள் இடையில் புகுந்து தீர்ப்பை வழங்குகிறார்கள். எந்தவித கஷ்டமும் இல்லாமல் குழந்தைகள் வளர வேண்டும் என நினைக்கிறார்கள், குழந்தைகளின் கஷ்டங்களைத் தங்களது தனிப்பட்ட தோல்வியாக நினைக்கும் அளவிற்கு அதில் உறுதியாக இருக்கிறார்கள்.

 குழந்தைகள் எப்போதும் தங்களின் நேரடிக் கண்பார்வையில் இருக்க வேண்டும் என்ற முனைப்பில் சில முக்கியமான விஷயங்களில் இருக்க வேண்டிய வெளிப்படைத்தன்மையைத் தவறவிடுகிறார்கள். குழந்தைகளின் சிறு தவறுகளைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் பெற்றோர்கள் இருக்கும்போது குழந்தைகளுடனான வெளிப்படைத்தன்மையை அவர்கள் இழக்கிறார்கள், இதனால் குழந்தைகள் பெரும்பாலும் தங்களது பிரச்சினைகளைத் தங்களுக்குள்ளே மறைத்து கொள்ளும் நிலைக்கு செல்கின்றன. நிறைய நேரங்களில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் கடைசியாகவே பெற்றோர்களுக்குத் தெரிகின்றன, அந்த நிலையையே பெற்றோர்கள் தங்களது அணுகுமுறையால் உருவாக்குகிறார்கள்.

 மனரீதியாக குழந்தைகள் சோர்வடையும்போதோ அல்லது ஏதேனும் மனவுளைச்சலில் இருக்கும்போதோ அதைப் பெற்றோர்களிடம் சொல்லும்போது பெரும்பாலும் அவை நிராகரிக்கப்படுகின்றன. ஏனென்றால் குழந்தைகளின் பிரச்சினைகளைத் தங்களின் குழந்தை வளர்ப்பின் தோல்வியாக அவர்கள் நினைத்துக்கொள்வதால் குழந்தைகளுக்குப் பிரச்சினைகளே இல்லை, அவர்களாகவே கற்பனை செய்து கொள்கிறார்கள் என்று அதை நிராகரிக்கிறார்கள். பெற்றோர்களின் இந்த நிராகரிப்பே பெரும்பாலான குழந்தைகள் தற்கொலை முடிவை எடுப்பதற்கு இறுதி காரணமாக இருக்கிறது.

மாணவர்களின் தற்கொலைகளின்மீதான அரசியல் நிலைப்பாடுகள்:

பெரும்பாலான நேரங்களில் அரசாங்கம் மாணவர்களின் தற்கொலைகளை அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையாகவே புரிந்துகொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை கொடுத்து விட்டால் தற்கொலைகளை தடுத்துவிடலாம் என நம்புகிறது. தனிநபர் காரணங்களே தற்கொலைகளுக்கு இல்லை என சொல்லவரவில்லை. ஆனால் எல்லா தற்கொலைகளிலும் நாம் அதையே தேடிக்கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. சமூக அவலங்கள் (social adversity) தற்கொலைகளுக்கு மிக முக்கியமான காரணங்கள் என்று பல உளவியல் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஆனாலும் நாம் அது சார்ந்து எதுவும் சிந்திப்பதில்லை.

சமீப காலங்களில் கல்வி முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மதிப்பெண்களைப் பிரதானமாக கொண்டதாக மாறியிருக்கிறது. மெரிட் என்பதன்மீது ஏற்றி வைத்திருக்கும் புனித பிம்பங்கள், ஒரு மாணவனை அவனது சமூக, பொருளாதார சூழலோடு புரிந்து கொள்வதை தடுக்கிறது, இது கிராமப்புற, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மாணவர்களின் சுமையைக் கூட்டுகிறது. இதன் விளைவாக அவர்கள் மிக எளிதாக மனவுளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

சமூக வலைதளங்களின் பயன்பாடு, இணைய விளையாட்டுகள், சூதாட்டங்கள் போன்றவற்றிற்கெல்லாம் பதின் பருவத்தினர் மிக சுலபமாக அடிமையாகி விடுகிறார்கள், அதன் மீதான எந்தக் கட்டுப்பாடும் அரசாங்கத்திடம் இல்லை, அதற்கான தெளிவான கொள்கைகளோ அல்லது வழிகாட்டுதல்களோ இன்னமும் உருவாக்கப்படவில்லை.

பெருகி வரும் போதை பொருட்களின் பயன்பாடு கிராமப்புறங்கள் வரை பரவிருக்கின்றன. கடந்த சில வருடங்களில் மாணவர்களிடம் பெருகி வரும்ப் போதை பொருட்கள் பழக்கவழக்கம் உச்சத்தை அடைந்திருக்கிறது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மிக சுலபமாக பள்ளி மாணவர்களுக்கே கிடைக்கக்கூடிய சூழல் இருக்கிறது. இளைஞர்களின் தனிப்பட்ட ஆளுமைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களோடு இந்தப் போதைப் பொருட்கள் பயன்பாடு சேரும்போது அது அவர்களை இன்னமும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக மாற்றுகிறது, தற்கொலை எண்ணங்களைத் தூண்டுகிறது.

அரசாங்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தற்கொலைகளை ஒரு சமூகப் பிரச்சினையாக வரையறுத்து அதை தடுப்பதற்குண்டான தீவிரமான வழிமுறைகளை உருவாக்கிட வேண்டும்.

 மாணவர்களின் தற்கொலைகளைத் தடுப்பதற்கான சில தெளிவான வழிகாட்டுதல்களை மானுட ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், மனநல மருத்துவர்கள், மாணவர்களின் மீது அக்கறை கொண்ட ஆசிரியர்கள் போன்றவர்களைக் கொண்டு ஏற்படுத்த வேண்டும்.

 அந்த வழிகாட்டுதல்களின் வழியாகக் கல்வி நிறுவனங்களின் அமைப்பை மாற்ற வேண்டும்.

 பல முற்போக்கு, உரையாடல் தளங்களை கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்த வேண்டும்

 வெறும் கல்வி என்பதை தாண்டி சமூக, அரசியல், பொருளாதாரங்கள்மீதான அறிவையும், விழிப்புணர்வையும் மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
 ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மாணவர்களுக்கான ஒரு வெளிப்படையான விசாரணை அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

 எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தற்கொலைகளை நாம் தனிப்பட்ட நபர்களின் பிரச்சினையாக மதிப்பீடு செய்து கொள்ளாமல் நிறைய பொறுப்புணர்வோடு, நேர்மையாகவும் நாம் வாழும் இந்த சமூகத்தை சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொண்டால் அதில் எந்த அளவிற்கு நமது பங்கும் இருக்கிறது எனத் தெரிந்து கொள்ள முடியும்.

 சமூக அவலங்களால் நிகழும் தற்கொலை என்பது தனிப்பட்ட மனிதரின் தோல்வி அல்ல ஒட்டுமொத்த சமூகமாக நம் ஒவ்வொருவரின் தோல்வி என்பதை உணர்ந்தால்தான் நம்மால் இந்தத் தற்கொலைகளைத் தடுக்க முடியும்.

 

sivabalanela@gmail.com