கடந்த சில மாதங்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் இரு நாடுகளைப் பற்றியும் அந்த நாடுகளின் வரலாற்றைப் பற்றியதும்தான் இந்தக் கட்டுரை. எந்த இரு நாடுகள் என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக, நமக்கு என்று கட்டமைக்கப்பட்டு இருக்கும் ஒரு பொதுவான சிந்தனையைப் பற்றிப் பேசிவிட்டு அந்த இரு நாடுகளைப் பற்றிய வரலாற்று அலசலுக்குள் நுழைவோம். பைபிள் கதாபாத்திரங்களான டேவிட் மற்றும் குலையத் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஏன் இந்தச் சம்பவம் இன்றும் பேசப்பட்டு வருகிறது என்றால், அதில் இருக்கும் அந்த பலம் பொருந்திய குலையத் என்ற எதிரியை வீழ்த்தியது டேவிட் என்ற ஒரு சாதாரணமானவன் என்ற ஓர் அழகியல்தான். இதுவே, அந்தச் சாதாரணன், அந்த பலசாலியிடம் தன்னால் ஆன மட்டும் போரிட்டு, பல புறக் காரணிகளால் பலவீனமாக்கப்பட்டு, வெற்றி வாய்ப்பை இழந்திருந்தால், நாம் இன்று இதைப்பற்றிப் பேசுவோமா? என்று யோசியுங்கள். வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும்தான் வரலாற்றை எழுதும் வாய்ப்பு இருப்பதன் சாதக அம்சமே இதுதானே?.

இன்று ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகள் வரலாற்றை அவர்களின் போக்கில் எழுதியதால், வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் காணாமல் போன ஒரு மாவீரனைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை. சமீபத்தில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது ஒருவகையில் இந்த மாவீரனை உலகம் நினைவுகூர வகை செய்தது என்றே சொல்லலாம். ஏனென்றால், ஹ்யூமனாய்ட்ஸ் பதிப்பகத்தின் ஓர் அங்கமான லைஃப் ட்ரான் மூலமாக வெளியிடப்பட்ட இந்த கிராஃபிக் நாவலின் விற்பனை வாயிலாகக் கிடைக்கும் வருமானத்தை உக்ரைனின் நிவாரணத்திற்காக நன்கொடையாக அளிக்கப்போகிறார்கள். எப்போதெல்லாம் உக்ரைன் தனது சுதந்திரத்திற்காகப் போராடுகிறதோ, அப்போதெல்லாம் அந்நாட்டு மக்கள் சோகத்துடன் நினைவுகூர்வது ஒரு போராளியைத்தான். அந்தப் போராளிக்கு மட்டும் குறைவான துரோகங்களும் இன்னமும் சற்று உதவியும் கிடைத்திருந்தால், ஐரோப்பாவின் வரலாற்றையே மாற்றி எழுதி இருப்பார்.

உக்ரைனின் சுபாஷ் சந்திரபோஸ்?

நெஸ்டர் இவானோவிச் மிக்னியான்கோ என்பதுதான் அந்தப் போராளியின் பெயர். ஆனால், எப்படி எர்னஸ்ட்டோ குவேராவை சே என்று உலகம் அழைக்கிறதோ, அப்படி இவரை மக்நோ என்றே அழைக்கிறார்கள். 1888 ஆம் ஆண்டு பிறந்து 1934 ஆம் ஆண்டு தனது 45 ஆவது வயதில் தனித்து விடப்பட்டு, வறுமையில், கழிவிரக்கத்தின் உச்சத்தில் காசநோயின் கொடூரப்பிடியில் இறந்த மக்நோ எப்படி உக்ரைனின் தலைசிறந்த போராளியாக முடியும்? அவரை உக்ரன் நாட்டின் சுபாஷ் சந்திரபோஸ் என்று நம்மால் ஒப்பிட்டுப் பேச முடியுமா? இதற்கு நீங்கள் நெஸ்டர் என்ற சிறுவன் எப்படி மக்நோ என்ற ஆளுமையாக மாறினான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒருவேளை, கோர்வையாக, நேர்கோட்டில் கதைகளைச் சொன்னால், பிரான்ஸ் நாட்டில் கதைகளைப் படிக்க மாட்டார்களா? என்ற ஐயம் வரவழைக்கும் வகையில் இந்த கிராஃபிக் நாவலும் வழக்கமான பிராங்கோ – பெல்ஜிய பாணியில் நான் லீனியராகவே சொல்லப்படுகிறது. கதை ஆரம்பிப்பது என்னவோ 1934இல்தான். ஆனால், இந்த கிராஃபிக் நாவலின் கடைசி நிகழ்வுகளையும் ஆரம்ப நிகழ்வுகளையும் மாற்றி, மாற்றி இணைத்து சொன்னதிலும் ஒரு சுவை இருக்கத்தான் செய்கிறது. 1934இல் பாரீஸில் ரஷ்யர்களின் போராட்டத்தைப் பற்றிய ஒரு துண்டுப் பிரசுரத்தினால் சினம் கொண்ட ஒரு மத்திய வயதுக்காரர் அந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்பவரிடம் கைகலப்பில் இறங்கும்போதுதான் அவர் யார் என்பதை அங்கிருக்கும் சிலர் உணர்கிறார்கள். மாணிக்கமாக இருக்கும் அவர்தான் பாட்ஷா என்பதைக் கண்டறிந்ததும் அவரைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள். இதற்கு அவர்கள் நாயகனின் பால்ய சினேகிதனான ஸிமோர்ஸ்கியை மிரட்டிப் பணிய வைக்கிறார்கள்.

தனக்கான கொலைத்திட்டம் உருவாகி வருவதை அறியாத அந்த நபர் தனது வீட்டிற்குச் செல்கிறார். அழகே உருவான மனைவியும் செல்ல மகளும் அவருக்காகக் காத்திருக்கின்றனர். குளிக்கப் போகும்போதுதான் அவரது முதுகில் இருக்கும் சாட்டைகளின் வடு நமக்குத் தெரிகிறது. அவர் இறும, ரத்தம் வருகிறது. மனைவியும் மகளும் தன்னை விட்டுப் பிரியத் திட்டமிடுகிறார்கள் என்று தெரிந்ததும் ரெனோ (Renault) கார் கம்பெனியில் நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவு முழுவதும் ஷூக்களை ரிப்பேர் செய்து தனது குடும்பத்தின் செலவுகளை ஈடுகட்டுவேன் என்று சொல்லி, ஷூவை டிப்பேர் செய்து அதன் அடிப்பகுதியில் ஆணியால் அடிக்கத்துவங்க, சினிமா பாணியில் பிளாஷ்பேக் ஆரம்பிக்கிறது. ஒரு சிறுவனை சவப்பெட்டியில் வைத்து ஆணி அடித்துக்கொண்டிருக்கும் 1898ஆம் ஆண்டிற்குக் கதை பின்நோக்கிச் செல்கிறது.

கதையின் நாயகன் இப்போது 10 வயதுச் சிறுவனாக, ஏழ்மையின் உச்சத்தில் வாடிக்கொண்டிருக்க, தனது இன்னொரு மகனையும் ஏழ்மையின் கோரப்பிடிக்கு ஆளாக்கி மரணத்தை நோக்கிய பயணத்திற்கு அனுப்ப விரும்பாத அவனது தாய், ஒரு பணக்கார நிலச்சுவான் குடும்பத்திற்கு நாயகனைத் தத்து கொடுத்துவிடுகிறார். திரைப்பட ஸ்டைலில் கதை 1934க்கு நகர, வேலையிலிருந்து திரும்பும் நாயகன் தனது மனைவியும் மகளும் வறுமையின் காரணமாகத் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதை அறிந்து தாங்கொணா மனவேதனைக்கு ஆளாகிறார்.

சிறுவயதில் தத்து கொடுக்கப்பட்ட வீட்டின் மாட்டிமைத்தனத்திற்கும் அவர்களது வாழ்க்கைமுறைக்கும் அட்ஜஸ்ட் செய்ய முடியாமல் தடுமாறும் நாயகனைப் பிரம்பால் அடித்து முதுகை ரத்தக் களறியாக்குகிறார்கள். ஒரு கட்டத்தில் அதே வீட்டில் வளர்க்கப்படும் இன்னொரு வளர்ப்புப் பெண்ணான கேத்ரினைத் தவிர்த்து வேறு யாரிடமும் தன்னைப் பொருத்திக்கொள்ள இயலாத நாயகன் அந்த ஜமீனை விட்டு ஓடிப்போகிறார். தன்னுடைய நண்பன் ஸிமோர்ஸ்கியை நாயகனின் இடத்தில் புதிதாகத் தத்து எடுக்கப்பட்ட டேனியல் என்ற இளைஞன் காட்டுத்தனமாகப் பிரம்பால் அடிப்பதைக் கண்டு வெகுண்டெழுகிறார். ஆனால், அவரால் தனியாளாக, பதின்ம வயது சிறுவனாகப் போராட இயலவில்லை. இதே நேரத்தில் 1908இல் பண்ணைகளை, ஜமீன்களைக் கொள்ளையடித்து அதை ஏழைகளிடம் பகிரும் லாஸரோவின் புரட்சிப் படையில் இணைந்து செயல்படுகிறார். ஒரு கட்டத்தில் அந்தப் புரட்சிப்படையினர் தான் முன்னர் தத்து எடுக்கப்பட்டிருந்த வீட்டைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருப்பதை அறிந்து கேத்ரினைக் காப்பாற்ற அவளிடம் மட்டும் விஷயத்தைச் சொல்கிறார் நாயகன். தான் காதலிக்கும் பெண்ணான கேத்ரினைத் தப்பிக்கச் சொல்லிவிட்டு திரும்புகிறார்.

இரண்டு நாட்கள் கழித்து புரட்சிப்படை அந்த ஜமீனுக்குள் நுழையும்போது அங்கே போலீஸார் காத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். பொறிக்குள் சிக்கியவர்களைத் தூக்கிலிடுகிறார்கள் அரசாங்கத்தினர். திரைப்படத்தின் இறுதிக்காட்சி போல நாயகன் நெஸ்டர் தூக்கிலிடப்படும்போது அவரது தாயாரான யானா அங்கு வந்து நெஸ்டருக்கு இன்னமும் 20 வயதாகவில்லை என்ற சான்றுகளை அளித்து தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றிவிடுகிறார். ஆயுள் தண்டனைக் கைதியாக மாஸ்கோவின் பூட்ரியா சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார் நாயகன்.

சிறையில் ஒரு மாற்றம்: சில மாதங்களை சிறைச்சாலையின் கோரப்பிடியில் கழித்த நெஸ்டரின் வாழ்க்கையில் ஆக முக்கியமான அந்தத் தருணம் அவர் பீட்டர் ஆன்ட்ரேவிச் அர்ஷிநோவ்-ஐச் சந்தித்தபோதுதான் நடந்தது. அராஜகவாதிகளைச் சீரமைக்கும் பணியில் இருந்த பீட்டர், நாயகனிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்கிறார். பீட்டர் க்ரோபோட்கினின் A Factor of Evolution என்ற புத்தகத்தை முதலில் உதாசீனப்படுத்தும் நாயகன் பின்னிரவில் தனிமையில் படிக்க ஆரம்பிக்கிறார்.

கதை ஃபாஸ்ட் பார்வர்ட் ஆகி 1917க்கு நகர, இப்போது ரஷ்யப் புரட்சியின் காரணமாக சிறையில் இருக்கும் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட, சதுக்கத்தில் இருந்த ஜார் மன்னரின் சிலை வீழ்த்தப்படுகிறது. அந்தச் சிலையின் தலை தரையில் வீழ்ந்து கிடக்க, அதன்மீது காலை வைத்து “நான் இதே புரட்சியை உக்ரைனிலும் கொண்டுவரப்போகிறேன்” என்று நாயகன் சொல்லும் காட்சி, திரைப்பட பாணியில் சொல்வதென்றால், ஹீரோயிஸத்தின் உச்சம் எனலாம். பாரிசில் இருந்து உக்ரைன் திரும்பும் நாயகன் தனது தாயும் சகோதரனும் வறுமையில் வாடுவதைக் கண்டு மனம் வருந்துகிறார். அவர்களது வீட்டை ஆக்ரமித்தவர்கள்மீது சினம்கொண்டு பொங்கி எழுகிறார். தனது சகோதரனும் நண்பனும் மூடப்பட்டிருக்கும் அவர்களது வீட்டுக்கதவை உதைத்துத் திறக்க, தனது தாயாரைக் கைகளில் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைகிறார், நெஸ்டர். மன்னிக்கவும், இப்போது அவர் நெஸ்டர் இல்லை. அவர் புரட்சித் தீ மக்நோ.

முதல் அடி: தோழி ஹலீனாவின் தந்தையைக் கொன்றதையும் புரட்சிக்கான வித்தை விதைத்ததற்காகத் தன்னைத் தேடி ராணுவ வீரர்கள் வருவதையும் அறிகிறார். ஆனால், ராணுவ வீரர்களை அவர் பிடித்து “உங்களில் யார் ஹலீனாவின் தந்தையைக் கொன்றது? ஐந்து பேரில் அந்த ஒருவரை மட்டும்தான் கொல்வேன். மற்றவர்களை விட்டுவிடுவேன்” என்று சொல்ல, பயந்துபோன ஒரு வீரன் இன்னொருவனைக் காட்டிக்கொடுக்க, கொன்றவனையும் காட்டிக்கொடுத்தவனையும் தூக்கில் போட்டுவிட்டு மக்நோ சொல்லும் வசனம் திரைப்பட பன்ச் டயலாக்குகளைவிட வீரியம் மிகுந்ததாக அமைந்தது. ”நீதி என்பது எப்போதுமே வலிமை மிக்கவர்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டு வந்துள்ளது. எனவே, இன்று முதல் மக்களுக்கான நீதியை நான் வழங்குவேன்’ என்று சொல்லி அடிமைத்தனத்திற்கு எதிரான முதல் அடியை வைக்கிறார்.

தனக்கான படையைத் திரட்டி நிலச்சுவந்தார்கள் அபகரித்து வைத்திருக்கும் நிலங்களை மீட்டெடுக்கும் பணியில்
இறங்குகிறார், மக்நோ. அவரது சிறுவயதுத் தோழனான ஸிமோர்ஸ்கியும் அவரது குழுவினரும் முகமூடிகள் அணிந்து புரட்சியில் ஈடுபட்டிருக்க, “இனிமேல் உக்ரைனில் புரட்சியாளர்களுக்கு முகமூடி தேவையில்லை” என்று பிரகடனம் செய்து ஓர் ராணுவத்தையே கட்டமைக்கிறார், மக்நோ. முதல் வேலையாகத் தான் தத்தெடுக்கப்பட்ட ஜமீனையே இப்போதைய அதிபரான டேனியலை அங்கிருந்து துரத்திவிட்டுக் கைப்பற்றுகிறார். ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட பல போராளிகளை விடுவிக்கிறார். அப்படி க்ரீமின்சக் சிறையிலிருந்தவர்களை விடுவிக்கும்போதுதான் அவர் போராளி வாசிலி மார்சென்கோவைச் சந்திக்கிறார். தன்னை விடுத்ததற்கு நன்றிக்கடனாக வங்கிலிருந்து கொள்ளையடித்த பணத்தை மக்நோவிற்கு, அவரது போராட்டத்திற்கு நன்கொடையாக அளிக்க, இப்போது ராணுவமும் ஆயுதங்களும் கொண்ட ஒரு முழுமையான போர்ப்படைத் தளபதியாக மாறுகிறார் மக்நோ.

துரோகமும் சூழ்ச்சியும்: ஜெர்மானியர்களின் ஆதிக்கத்திலிருந்து உக்ரைனைக் காப்பாற்ற மக்நோ போராடி வர, அவரது அதிரடியான அணுகுமுறையும் கொரில்லா பாணி போர்த்தந்திரங்களும் ஐரோப்பா முழுவதும் பேசப்பட, ஒரு தலைவனாக, ஓர் ஆளுமையாக மாறுகிறார் மக்நோ. நிலச்சுவான்தார்களிடமிருந்து அவர்கள் அபகரித்து வைத்திருந்த நிலங்களை எல்லாம் மீட்டெடுத்து மக்களுக்கு என்று மாற்றிக்கொடுத்து கூட்டு வாழ்க்கைமுறையான கம்யூன்-னை அறிமுகப்படுத்துகிறார்.

சில மாதங்கள் அமைதியாக, ஒரு விவசாயியாக வாழ்ந்து வந்த நெஸ்டரை மறுபடியும் மக்நோவாக மாற்ற, வரலாறு ஒரு புதிய திருப்பத்தைத் தந்தது. இம்முறை போல்ஷ்விக் ஒப்பந்ததின்படி உக்ரைனை ஆஸ்திரிய-ஜெர்மானியக் கூட்டிற்குக் கொடுத்துவிட, மறுபடியும் போராட்டத்திற்குத் தயாராகிறார் மக்நோ. ஆனால், ஆச்சரியமாக, இம்முறை அவருக்கு உதவ முன்வந்தது ரஷ்யர்கள். குறிப்பாக, சிறைச்சாலையில் தனது புரட்சிப் பயணத்தைக் கட்டமைத்த பீட்டர் இந்தப் போராட்டத்திற்கு ரஷ்யாவின் சார்பில் தலைமை தாங்கி வர, ஆக்ரோஷமாகப் போராடுகிறார் மக்நோ. ஆனால், வலிமை பொருந்திய ஜெர்மன் ராணுவத்தின் வலிமைக்கு எதிராக இவர்கள் மறைந்து, ஒளிந்து போராட வேண்டிய சூழல் வந்தது.

ஒரு மரத்துப் பறவைகள்: மக்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி, ஏன் தாங்கள் மறைந்து வாழ்ந்து போராட வேண்டுமென்று சொல்கிறார் மக்நோ. ஆனால், மக்களோ மக்நோ தனது நாட்டை, நாட்டு மக்களைக் கைவிட்டுவிட்டுச் செல்வதாக நினைத்து அச்சப்பட, “என்னை நீங்கள் கைவிட்டாலும் கூட, ஒருபோதும் நான் எனது நாட்டைக் கைவிட மாட்டேன். இந்த மரத்தில் இருக்கும் பறவைகளைப் போலத்தான் நானும் எனது வீரர்களும். எங்கு பறந்துச் சென்றாலும் திரும்பவும் இதே மரத்தில்தான் வந்து தங்குவோம்”. என்று பேசிவிட்டுச் செல்கிறார்.

ஜெர்மன் தளபதியின் அராஜகமான போர்முறைகள், அளவற்று இருக்கும் அவர்கள் படைவீரர்கள், நவீன ஆயுதங்கள் என்று ஒரு கட்டத்தில் உக்ரைனின் சுதந்திரப் போராட்டம் கைநழுவிப் போகும் கட்டம் உருவாகிறது. பல்லாயிரக்கணக்கான ஜெர்மன் படைகளின் நடுவே நூற்றுக்கணக்கான உக்ரைன் போராளிகள் மரணத்தை நோக்கிச் செல்வதைக் கண்ட விவசாயிகளும் பொதுமக்களும் பொங்கி எழுந்து அவர்களும் மக்நோவிற்கு உதவ முன்வருகிறார்கள். இப்படியாக, மக்நோ போர்முனையில் நிச்சயிக்கப்பட்ட மரணத்தை வெற்றிகொண்டு உக்ரைனின் தலைசிறந்த போராளியாகிறார்.

அதற்குப் பிறகு, மக்நோவின் வாழ்க்கையில் பல முக்கியமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கிறது. வாசிலியின் நட்பு முறிவு, கேத்ரினைச் சந்தித்து அதன் விளைவாக காசநோய்க்கு ஆளாவது, லெனின் பார்வையில் உக்ரைனின் வளர்ச்சி, குறிப்பாக மக்நோவின் வளர்ச்சி ஓர் அச்சுறுத்தலாகப் பட்டு, அதன் விளைவாக போராட்டத்தின் ஆரம்பத்தில் நேச நாடாக இருந்த ரஷ்யா இப்போது உக்ரைனுக்கு எதிராகக் களமிறங்க, மக்நோவைக் கொல்லப் பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ட்ராட்ஸ்கியின் தலைமையிலான ராணுவம் இவரைக் கொல்ல வர, வேறு வழியில்லாமல், துரோகத்தால் வீழ்த்தப்பட்டு, தனது படை வீரர்களையும் குடும்பத்தையும் இழந்து உக்ரைனை விட்டு வெளியேறி பிரான்ஸ் நாட்டில் குடிபுகுந்து ரெனோ கார் கம்பெனியில் பணிபுரிய ஆரம்பிக்கிறார், மக்நோ. அவரைக் கொல்ல நடக்கும் முயற்சிகள், சே குவேரா போல இவரும் தனது டைரிக் குறிப்புகளை எழுதி வர, அதை அழிக்க நினைக்கும் ரஷ்ய உளவாளிகள் என்று சோகத்தின் உச்சத்தை தனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் அனுபவித்தார் மக்நோ.

கிராஃபிக் நாவலின் அமைப்பு: பல வரலாற்றுத் தகவல்களைப் பின்புலமாகக் கொண்டு இந்த கிராஃபிக் நாவல் உருவாக்கப்பட்டிருந்தாலும் கூட, முக்கியமான சில கட்டங்கள் வரலாற்றில் இருந்து விலகி இருப்பதாகப் படுகிறது. உதாரணமாக, மக்நோ செருப்பு, ஷூ தைப்பவராக வருவது, மக்நோவின் மகள் அவரைவிட்டு விலகிச் செல்வது, வடகிழக்கு உக்ரைன் எல்லையில் லியான் ட்ராட்ஸ்கியின் கவச ரயிலில் ட்ராட்ஸ்கியே மக்நோவைக் கொல்ல முயல்வது என்று சில கட்டங்கள் நாம் படித்த வரலாற்றில் இல்லை. ஆனால், முதலில் சொன்னதுபோல, வெற்றி பெற்றவர்களுக்குக் கிடைக்கும் முதல் விஷயமே, வரலாற்றை தங்கள் விருப்பத்திற்கு மாற்றி அமைக்கும் வாய்ப்புதானே?
மெல்லிய வண்ணக் கோட்டொவியங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த கிராஃபிக் நாவல், வழக்கமான பிராங்கோ – பெல்ஜியப் பாணியில் நான் லீனியராக சொல்லப்பட்டிருந்தாலும், சமகாலத்து அமெரிக்க காமிக்ஸ்கள் (குறிப்பாக, டீசி மற்றும் மார்வல்) பாணியில் திரைப்பட் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஹீரோயிஸக் காட்சி, சென்ட்டிமென்ட், ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள், மனதை உறுக்கும் மரணக் காட்சிகள் என்று அமெரிக்க பாணியில் சொல்லப்பட்டிருப்பதால், கதை வேகமாக, விறுவிறுப்புடன் நகர்கிறது.

கதைகள் நீளும்….

prince.viswa@gmail.com