‘பத்தி’ எழுதுவது ஒரு சுகாநுபவம்.  தலைப்புக் குறித்த ஒரு கட்டுரையைப் போல்,ஒரு வழிப் பாதையில் தலையிட்டுக் கொள்ளாமல், சிந்தனை’ச் செல்லும் வழி நடை தொடரலாம். எடுப்பு,தொடுப்பு, முடிப்பு போன்ற பத்தாம்பசலி விவகாரங்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியமில்ல.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அநுபவம்.

.ஒரு நண்பரைப் பனிப் பெட்டியில் பார்த்து விட்டு கனத்த நினைவுகளுடன் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன்.திடீரென்று ‘காமிரா’ வுடன் இரண்டு இளைஞர்கள் என் முன் முளைத்தார்கள்.

‘ அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?’ என்றார் ஒருவர்.

‘காமிரா’ என்னை உற்றுப் பார்த்தது.

தொலைக்காட்சி ‘சானல்’ பெயரைச் சொன்னார் அந்த இன்னொரு இளைஞர்.

முதலில் மறுத்துவிடலாம் என்ற எண்ணம் தலை தூக்கியது. இது நான் என் நண்பருக்குச் செய்யும் தர்மம் அன்று என்ற எண்ணம் அதைத் தடுத்தது. நான் யாரென்று தெரிந்து கேட்கிறார்கள் என்ற லேசான பெருமையும் என் முகத்தில் புன்னகையாக அடையாளம் கொண்டது.

நான் அவரைப் பற்றி இரண்டு நிமிடங்கள் என் கருத்துகளைச் சொன்னேன்.

காமிரா கண் மூடியது. என்னைப் பேச ச் சொன்ன இளைஞர் மிகவும் இயல்பான, யதார்த்தமான குரலில் என்னைக் கேட்டார்” உங்கள் பெயர் என்ன?”

நான் யாரென்று தெரியாமலா என்னைப் பேசச் சொன்னார்கள்? புதிதாக வெளியிடப்படும் திரைப்பட த்தின் முதல் ‘ஷோ’ முடிந்தவுடன் வெளியே வரும் ரசிக மக்களைத் தொலைக்காட்சி விமர்சகர்கள் கேட்பது போன்ற கேள்வியா என்று எனக்குத் தோன்றிற்று.

அவர்களுக்கு யாரோ சொல்லியிருக்க வேண்டும். என் பெயரைச் சொல்லி ‘அவர் அதோ போகிறார். கேளுங்கள்’ என்று. கூறியிருக்கக்கூடும்.  ஒன்று, காமிரா இளைஞர்கள், அந்தப் பெயரை மறந்திருக்க கூடும், அல்லது, அந்தக் குறிப்பிட்ட பெயரையுடையவர் நான்தானா என்று உறுதிப் படுத்திக் கொள்வதற்காக க் கேட்ட கேள்வியாகவுமிருக்கலாம்

நான் என் பெயரைச் சொன்னதற்கு, ’தாங்க்ஸ்’  சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள். அவர்கள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

இந்த அநுபவம் தேவையென்று தோன்றிற்று. என்னைப் பற்றி நானே மிகைப்பட நினைத்துக் கொண்டிருந்தால், என்னை பூமியின் தளத்துக்கு க்ப்கொண்டு வரும் அநுபவம்.

என் பெயர் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியமுமில்லை. இக்காலத்து இளைஞர்கள் நிகழ்காலத்தில் வாழ்பவர்கள். ‘ நிகழ்ந்து கொண்டிருக்கும் கணம், கடந்து போன கணத்தை நோக்கி ‘யார் இந்த அயலான்?’ என்று கேட்கின்றது’ என்று ஒருபர்ஸியக் கவிதை வரிகள் என் நினைவுக்கு வந்தன.

பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனில், பள்ளிக்கூடங்களில், செவ்வியல் இலக்கியங்கள் எப்படிக் கற்பிக்கப்படுகின்றன என்று அறியும் பொருட்டு, லண்டனில் ஒரு பள்ளியில், கல்விப் பரிசோதகர், ‘ ஹாம்லெட் எழுதியவர் யார்?’ என்று கேட்டாரம். ‘லாரென்ஸ் ஒலிவியர்’ என்ற பதில் வந்ததாம். (’ஹாம்லெட்டாக’ மேடையிலும் திரைப்படத்திலும் நடித்துப் பிரபலமானவர்)

’ரோஜாப்பூவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது மணக்கத்தான் செய்யும்’ என்று கூறியிருக்கிற ஷேக்ஸ்பியர் அந்த மாணவனை மன்னித்திருப்பாரென்றுதான் என்று எனக்குப் படுகிறது.

‘பிக்மெலியன்’ என்ற பெர்னார்ட் ஷாவின் நாடகம் நடந்து கொண்டிருந்தது.அதுதான் ‘மை ஃபேர் லேடி’ என்ற பெயரில் திரைப்படமாகச் சக்கை போடு போட்டது.) நாடகத்துக்கு நல்ல கூட்டம்.நாடகம் முடிந்ததும். ஷா மகிழ்ச்சியுடன், தலை நிமிர்ந்த நடையில் ’ஹாட்டையும், மேல்கோட்டையும் பெற்றுக் கொள்வதற்காகச் சென்றார்.

அங்கிருந்த பணியாளை ‘நாடகம் பார்த்தாயா?’ என்று பெருமிதத்துடன் கேட்டார். ‘பார்த்தேன். நன்றாக இருந்தது’ என்றார் பணியாள்.

‘ஹாட்டைப்’போட்டுக் கொண்டபோது, அவருடைய ‘ஹாட்’தானா என்ற   சந்தேகம் அவருக்கு வந்தது. ‘ நான் யாரென்று தெரியுமா? இது என்னுடைய ‘ஹாட்’டா?’ என்று கேட்டார்.

பணியாள் கூறினார்: ‘நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. இது உங்களுடைய ‘ஹாட்’டா என்றும் எனக்குத் தெரியாது. ஆனால் இந்த ‘ஹாட்’டைப் போட்டுக் கொண்டுதான் நீங்கள் இங்கு வந்தீர்கள்’ என்றார். ஷா ஒரு பேட்டியில் இந்தப் பதில் என்னைத் தரையில் இறக்கியது’ என்கிறார்.

நமது இந்திய  இலக்கிய மரபில், படைப்பாளிகளைக் காட்டிலும், படைப்புகளுக்குத்தான் அதிக மதிப்பு . வால்மீகி, வியாசர், அகஸ்தியர், தொல்காப்பியர் ஆகியவர்களைப் பற்றி நமக்கு என்ன வரலாற்று ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன? சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ‘திருக்குறளை’ப் பரிமேலழகர் உரையுடன் முதல் முதலாகப் பதிப்பித்த போது அவருக்குத் தாடியும் மீசையும் கொடுத்து நெற்றியில் பட்டையாகத் திருநீறு அணிவித்து அவரைச் சைவ முனிவராக ஆக்கிவிட்டது.. இப்பொழுதும் நம் மனக்கண் முன் வள்ளுவர் அப்படித்தானே தோற்றமளிக்கிறார்? நல்ல வேளை, இப்பொழுது திருநீற்றை நீக்கிவிட்டார்கள்.. ஆனால் தாடியும் மீசையும் இருக்கின்றன!.

ஷேக்ஸ்பியர பிறந்த நாள், இறந்த நாள், அவருடைய நாடகங்கள் ஒவ்வொன்றும் அரசாங்கப் பதிவகத்தில் எப்பொழுது ஆவணப்படுத்தப்பட்டது என்பனவற்றுக்கெல்லாம் வரலாற்று ஆதாரங்கள் இருக்கும்போது, நம் புலவர்களைப் பற்றி என்ன சரித்திரக் குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன? படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அவை எந்தப் பின்னணியில் உருவாகின என்பதற்கு அற்புதமான, கற்பனை மிகுந்த கதைகள் இருக்கின்றன.

குறுந்தொகை  செய்யுள் ஒன்று இறையனார் என்பவர் பெயரில் காணப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு ஓர் அழகான கதையை உருவாக்கிவிட்டார்கள். ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற இந்தப் பாடலை நாம் படிக்கும்போது, அதை இயற்றியவராக க்  கூறப்படும் இறையனார் நினைவுக்கு வருவதில்லை. இதைப் பற்றிய கதைதான் நம் நினைவுக்கு வருகிறது. சிவ பெருமானும்-நக்கீரரும் வாதாடிய கதை.’நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்கிற தமிழ்ப் புலவனின் புலமைச் செருக்கு!

இச்செய்யுளும் அற்புதமான கவிதை. நம்ழ்வார் இயற்றிய ‘திருவிருத்தத்திலும் இச்செய்யுள் வேறு வடிவத்தில் இடம் பெறுகிறது. படைப்புதான் நம்மவருக்கு முக்கியமாகப் பட்டிருகிறதே யன்றிப், படைப்பாளி இல்லை.வால்மீகி, வியாசர், இளங்கோ அடிகள் ஆகிய மூவருமே அவர்கள் படைத்த இலக்கியங்களிலேயே கதாபாத்திரங்களாக வருகிறார்கள். (பின் நவீனத்வ பாணி!) மகாபாரதத்தில் வரும் சில கதாபாத்திரங்களின் உண்மையான தந்தை அக்காவியத்தை இயற்றியதாகச் சொல்லப்படும் வியாசர்! (பின் –பின் –நவீனத்வ பாணி!)

நம் நாட்டு. இந்திய மரபைப் பொறுத்தவரையில், சரித்திரம், புராணம் ஆகியவற்றுக்கிடையில் வித்தியாசம் ஏதுமில்லை. நம் புராணங்களே நம் சரித்திரங்கள். கற்பனைகயையும், யதார்த்தத்தையும் பிரிக்கும் இடைவெளி நீங்கி அனைத்தும் ஒருங்கே நடக்கும் நிகழ்வினையாகத் தோற்றம் கொள்கின்றன. படைப்பாளி ஒரு கருவி, அவ்வளவுதான்!