சீசரின் காதலியாக இருந்து, அடீயாவின் சூழ்ச்சியால் சீசரின் எதிரியான செர்வில்லா இறைவன் முன்னிலையில் இப்படிச் சாபமிடுவாள்:

“Gods of Junii நீ Tyche, Megara, Nemesis ஆகியோரை உத்தரவு கொடுத்து வர வை. இந்த சாபத்திற்கு அவர்கள்தான் சாட்சியங்களாக இருப்பார்கள். என் முன்னோர்களின் ஆவிகளை முன்வைத்து நான் சாபமிடுகிறேன். ஜூலியஸ் சீசரின் ஆண்குறி தளர்ந்து அழிந்துபோக வேண்டும். அவன் எலும்புகள் உடைந்து போக வேண்டும். அவன் படுகளத்தில் ரத்தவெள்ளத்தில் சாக வேண்டும். அவன் கண்முன் அந்த ரத்த வெள்ளத்தில் அவனுடைய அரசாட்சி மூழ்க வேண்டும்.

Gods of Inferno – உனக்கு சீசரின் கைகால்களை; அவன் தலையை; அவன் வாயை; அவன் மூச்சுக்காற்றை; அவன் வார்த்தைகளை; அவன் கல்லீரலை; அவன் இதயத்தை; அவன் வயிற்றை உனக்குப் படையாலாக்குகிறேன்.

Gods of Inferno – நான் உனக்கு உயிர்ப்பலி தருகிறேன். என் முன்னோர்களின் ஆவியை முன்வைத்து நான் அடீயாவைச் சாபமிடுகிறேன். அவளை நாய்கள் வல்லுறவு கொள்ள வேண்டும். அவள் பிள்ளைகள் எல்லாரும் மரிக்க வேண்டும். அவள் வீடு தீப்பற்றி எரிய வேண்டும். அவள் அசிங்கப்பட்டுக் கசப்பான வாழ்க்கையை நீண்ட காலம் வாழ வேண்டும்.

Gods of inferno – நான் அடீயாவின் தலையை; வாயை; மூச்சுக்காற்றை; அவள் பேச்சை; அவள் இதயத்தை; அவள் கல்லீரலை; அவள் வயிற்றை உனக்குப் படையலாக்குகிறேன்”

யார் இந்த ஜூலியஸ் சீசர், யார் இந்த செர்வில்லா, யார் இந்த அடீயா, இன்னும்கூட அதிகப்படுத்தலாம் யார் இந்த மார்க் ஆண்டனி, யார் இந்த கிளியோபாட்ரா, யார் இந்த கேடோ, யார் இந்த சிசர்ரோ, யார் இந்த புரூட்டஸ், யார் இந்த பாம்ப்பே எனச் சொல்லிக்கொண்டே போனால் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவர்கள் எல்லாம் வீரயுகத்தின் கதாமாந்தர்கள். இவர்களுக்கு அழிவே கிடையாது. உலகில் எல்லா நாட்டிலும் வீரயுகக் காலம் என்ற ஒன்று நடைபெற்றிருக்கிறது. கி.மு. 8 முதல் கி.பி. 3 வரை கிரேக்கம், ரோம், சீனா, போன்ற நாடுகளில் இந்த வீரயுக வரலாறு மிகச் சிறப்பாக நிகழ்ந்திருக்கிறது. தமிழகத்தின் புறநானூற்றுக் காலத்தைத் தமிழ் வீரயுகக் காலம் என்பார் கலாநிதி கைலாசபதி அவர்கள்.

‘வீரயுக காலத்திற்கென்று சில தன்மைகள் இருக்கின்றன. போர்கள் ஆராதிக்கப்படும். வீரர்களுக்கு மிக உயர்ந்த மரியாதை இருக்கும். மந்திரிகள் அரசருக்குப் பயப்படாமல் உண்மைகளைப் பேசுவார்கள். அரசர்கள் புலவர்களின் அறிவுரையை மதிப்பார்கள். பழங்குடிகளின் அரசு அழிக்கப்படும். பேரரசு உருவாக்கம் நிகழும். மன்னர்களின் குடும்பங்களில் வாரிசுப் போர் நடக்கும். சதித்திட்டங்கள் நிரம்பி இருக்கும். திரைமறைவில் பெண்கள் விளையாடுவர். அதில் பேரரசுகள் கவிழ்ந்து காணாமல் போகும். எல்லாவற்றையும்விட அந்தக் காலகட்டத்தில் கதைகள் நிறைந்திருக்கும். ஆம்! வீரயுகத்தில் வாழ்ந்த அனைவருமே கதைகளாகிப் போவார்கள். வீரயுக காலத்தில் நீங்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டால் உங்களுக்கு ஒரு வழி இருக்கிறது. நீங்கள் ரோம் என்ற வெப் சீரீஸைப் பாருங்கள் போதும். ரோம் என்ற வெப் சீரீஸின் கதைப்பின்னலும், காட்சியமைப்பும், பின்னணி இசையும் இணைந்து ஒரு டைம் மிஷினில் அமரவைத்து உங்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரோமாபுரிக்கு அழைத்துச் சென்றுவிடும். என்ன ரோம் என்ற வெப் சீரீஸில் உண்மையோடு நிறைய புனைவும் கலந்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் அவ்வளவுதான்.

அதில் சொல்லப்படும் கதை:

தொடக்கமே சீசருக்கு எதிராகத்தான் இருக்கும். கேடோ (Cato) பாம்ப்பேயை (Gnaeus Pompey Magnus) பார்த்து செனட் சபையில் பின்வருமாறு பேசுவார். “நான் உன் நண்பனும் இணை ஆட்சியாளனுமான சீசர் (Darling of Venus) பற்றிக் கேட்பதற்கு ஒரு கேள்வி வைத்திருக்கிறேன். அவருடைய நாற்காலி ஏன் காலியாக இருக்கிறது. அவர் ஏன் இன்னும் தன் சொந்த நாட்டிற்கு வராமல் இருக்கிறார். சட்டத்திற்குப் புறம்பான அவருடைய போர் முடிந்துவிட்டது. Gaul முழுமையாகத் தோல்வி அடைந்த பிறகும் சீசர் ஏன் வலிமையான படைவீரர்களை அவர்கள் குடும்பத்திலிருந்தும் நண்பர்களிமிருந்தும் பிரித்து அங்கேயே வைத்திருக்கிறார்? நீண்ட எட்டு வருடங்கள்! ஓநாய் பள்ளத்தாக்கில் ஒளிந்திருப்பதைப் போல அவர் ஒளிந்திருக்கிறார்! அங்கே காவ்லின் (Gaul) ரத்தச் சேற்றில் ஓர் அசுரத்தனமான பணக்காரனாக இருக்கிறார். அவர் ரோம் நாட்டின் அரசப் பதவியை விலை கொடுத்து வாங்க விரும்புகிறார். அவர் ரோம் நாட்டின் குடிமக்கள் (Republic) ஆட்சியை அழிக்க நினைக்கிறார். ரோமாபுரியை ஆள நினைக்கிறார். ஒரு முட்டாள்தனமான கொடுங்கோலனாக விரும்புகிறார். அதனால், காவ்வில் உள்ள சீசரின் ஆட்சியை உடனே நீக்க வேண்டும். அவருடைய படைகள் கலைக்கப்பட வேண்டும். ரோம் நாட்டில் அவருடைய குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல வேண்டும். திருட்டு, கொள்ளை, ராஜதுரோகம் ஆகிய குற்றத்தில் அவர் தண்டிக்கப்பட வேண்டும்”. கேடோ (Cato) பேசி முடித்ததும் பெருவாரியான உறுப்பினர்கள் பலத்த கரகோசத்தோடு இந்த தீர்மானத்தை வரவேற்கிறார்கள். ரோமில், ஏறத்தாழ 400 வருட மாகக் குடிமக்கள் (Republic) ஆட்சிமுறை இருந்திருக்கிறது. Senate Members என்னும் பிரபுக்கள் சபை உறுப்பினர்களுக்குத்தான் அங்கு உட்சபட்ச அதிகாரம் இருக்கும். இவர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் Consul (சபைத் தலைவர்) என்று அழைக்கப்படுவர்.

ஜூலியஸ் சீசர் கி.மு.58 முதல் கி.மு. 53 வரை Arar, Bibracte, Vosges, Axonal, Sabis, Octodurus, Alesia, Carrhae ஆகிய இடங்களில் நடந்த போர்கள் அனைத்திலும் வெல்கிறார். ஆனால் கதைக்காக அவர் எட்டு ஆண்டுகளாக காவ்லினில் (Gaul) இருந்து மக்களை அழித்து அசுர ஆட்சி செய்வதாகக் கூறுகிறார்கள். கதைப் பின்னலின் மையமே இதுதான்: ஜூலியஸ் சீசர் மக்களால் விரும்பப்படும் தலைவர். அவரிடம் பெரும்படை இருக்கிறது; பணம் இருக்கிறது. ஆனால், ரிபப்ளிக் ஆட்சிமுறையைப் பொறுத்தவரை செனட் உறுப்பினர்களின் ஆதரவு மிக முக்கியம். அவரை செனட் சபையிலிருந்து காப்பாற்றிக்கொண்டிருப்பவர் பாம்ப்பே. அவருடைய மனைவி ஜூலியா என்பவர் ஜூலியஸ் சீசரின் மகள். குழந்தைப்பேற்றின் போது ஜூலியா இறந்துவிடுகிறாள். போர்க்களத்தில் இருக்கும் சீசருக்கு இத்தகவல் சொல்லப்படுகிறது. தகவல் கேட்ட அடுத்த வினாடி சீசர் சொல்கிறார், “உடனே பாம்ப்பேவுக்கு இன்னொரு திருமணம் செய்ய வேண்டும்!”

Calpurnia என்ற உறவினர் பெண்ணைப் பாம்ப்பேவுக்குத் திருமணம் செய்து கொடுத்துத் தன்பக்கம் தக்க வைக்க வேண்டும் என அடீயாவுக்குக் கடிதம் எழுதுகிறார் சீசர். இதற்கிடையில் பாம்ப்பேயைச் சந்திக்கும் கேடோ “நம்மைப் போல உயர்குடியினரோ அல்லது உன்னுடைய படைவீரர்களோ சீசரை அழிக்க முடியாது. நான் உன்னை சீசரை அழிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் ஒருவேளை அவரை அழிக்க நினைத்தால் தனியாகக் சென்று அழிக்காதே” எனத் தூபம் போட்டுக்கொண்டிருக்கிறார். நண்பனா? குடிமக்கள் ஆட்சியா? எனத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது பாம்ப்பேவின் இதயம். அப்போது, தன் பதினாறு வயது மகளைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வயதான பாம்ப்பேவுக்கு அழைப்பு விடுக்கிறாள் அடீயா!

உடனடியாக மகள் ஆக்டேவியாவை விவாகரத்துப் பெற வைத்து, அன்று இரவே பாம்ப்பேவிடம் மகளை அனுப்பி வைக்கிறாள் அடீயா. ”திருமணம்தானே அதைப் பின்னால் செய்துகொண்டால் போகிறது! இன்று இரவு இவளை அனுபவித்துக் கொள்ளுங்கள்” என்கிறாள் அடீயா! எப்போதும் தன் பாதுகாப்பு பற்றிய எண்ணத்தில் இருக்கும் அடீயா, ஒருபக்கம் பாம்ப்பேவைத் தன்பக்கம் இழுக்க முயற்சி செய்யும் அதேநேரத்தில், ரோமாபுரி வரவிருக்கும் சீசருக்குச் சிறந்த குதிரைகளை வாங்கிப் பரிசளிக்க மகன் ஆக்டேவியனை அனுப்புகிறாள். பாம்ப்பே வாங்குவதற்காக வைத்திருந்த குதிரைகளையும் சேர்த்து வாங்கிவிடுகிறாள். கோபம் கொண்ட பாம்ப்பே அடீயாவின் மகளைத் திருமணம் செய்யாமல் Cornelia என்ற பெண்ணைத் திருமணம் செய்கிறார்.

அவசர அவசரமாக விவகாரத்துப் பெற்று ஒரு பயனும் இல்லை. கிழவன் பாம்ப்பே தன்னை நிராகரித்துவிட்டானே என நினைத்து அழுகிறாள் ஆக்டேவியா. அவளைப் பார்த்து “நீ உன் முகத்தில் கொஞ்சம் அழகை வர வைத்திருக்கலாம். அழுது வடிவதற்குப் பதிலாக அப்படிச் செய்திருந்தால் இது நடந்திருக்காது!” என்கிறாள் அடீயா!

பாம்ப்பே ஒரே கல்லில் இரண்டு பறவைகளை வீழ்த்த நினைக்கிறார். தன் ஆட்களை அனுப்பி ஆக்டேவியனைத் தீர்த்துக்கட்டிவிட்டு, குதிரைகளைச் சீசருக்குக் கொடுக்க உத்தரவிடுகிறார். இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ஆக்டேவியன் தப்பிக்கிறான். தாக்கியவர் பாம்ப்பே என்று தெரிந்துவிடுகிறது. அதே நேரத்தில், செனட் சபை செல்லும்போது சீசரின் நண்பர் மார்க் ஆண்டனியும் தாக்கப்படுகிறார். உயிர் பிழைத்தால் போதும் எனத் தப்பி ஓடுகிறார் மார்க் ஆண்டனி. அன்றைய செனட் சபையில், “ஜூலியஸ் சீசர் ரோம் நாட்டின் எதிரி” என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. வழக்கமாக அதைத் தடுக்கும் பாம்ப்பே இப்போது செனட் உறுப்பினர்களோடு கைகோர்த்துவிடுகிறார்.

உயிரைக் கையில் பிடித்து ஓடிய மார்க் ஆண்டனி, நடந்த விபரங்களை எல்லாம் சீசரிடம் சொல்கிறார். சீசர் வெகுண்டு எழுகிறார், “பாம்ப்பேயும் அவரது செனட் சபையும் சீசரை எதிரி என்று சொல்கிறார்கள். நான் குற்றவாளி என்றால் நீங்களும் குற்றவாளிகள்தான்” எனப் படைவீரர்கள்முன் வீரவுரை நிகழ்த்துகிறார். உள்நாட்டுப் போர் ஆரம்பமாகிறது.

ஜூலியஸ் சீசர் காலத்தில் கி.மு. 49 முதல் கி.மு. 46 வரை உள்நாட்டுப் போர் நடக்கிறது. இறுதியாக, கி.மு.46-இல் Thapsus என்ற இடத்தில் நடந்த போரில் பாம்ப்பே முழுவதுமாகத் தோல்வி அடைகிறார். தஞ்சம் கேட்டு எகிப்துக்கு ஓடுகிறார். ஆனால், அங்கு அவர் கொல்லப்படுகிறார். Brutus உள்ளிட்ட சிலர் ஜூலியஸ் சீசரிடம் சரணடைகிறார்கள். ரோமாபுரியின் மாபெரும் தலைவராகிறார் ஜூலியஸ் சீசர். மேலும், பிரபுக்கள் மட்டுமே அலங்கரித்த செனட் சபை உறுப்பினர் பதவியைப் பொதுமக்களும் அடைய முடியும் என்ற நிலையை உருவாக்குகிறார். அவ்வளவுதான்! செனட் உறுப்பினர்கள் மீண்டும் பொங்கி எழுகிறார்கள், ஆனால் ரகசியமாக!

இந்த முறை அவர்களது செயல்பாடு கனகச்சிதமாக இருக்கிறது. புரூடஸின் தாய் செர்வில்லா சீசரின் அன்புக் காதலியாக இருந்தவள். சீசருக்கும் அவருக்கும் இருக்கும் உறவைப் பொது இடத்தில் வரைபடமாக வரைந்து அசிங்கப்படுத்துகிறாள் அடீயா. பொதுமக்களின் அபிமானம் பெற்ற தலைவராக இருக்கும் சீசர் அதற்கடுத்து செர்வில்லாவோடு உறவாடுவதை நிறுத்திவிடுகிறார். இதனால் கோபம் கொண்டபோதுதான் கட்டுரையின் தொடக்கத்தில் வரும் சாபத்தை விடுக்கிறாள். அத்தோடு நில்லாமல் சீசரைக் கொல்ல வேண்டும் என்று புரூட்டஸைத் தூண்டிவிடுகிறாள். கி.மு. 44 இல் செனட் சபைக்குள் வைத்து, சீசரை அவருடைய 12 நண்பர்கள் இணைந்து 27 முறை கத்தியால் குத்திக் கொல்கிறார்கள்.

ஜூலியஸ் சீசர் தனக்குப்பின் தன் சொத்துகள் எல்லாம் சகோதரியின் மகனான (அடீயாவின் மகன்) ஆக்டேவியனுக்குப் போகவேண்டும் என்று உயில் எழுதியிருக்கிறார். சீசருக்குப் பின் எல்லாம் தனக்கு வரும் எனக் காத்திருந்த மார்க் ஆண்டனிக்கு இதனால் பெருத்த ஏமாற்றம். சீசரைக் கொன்ற பிறகு நாடும் பதற்றத்தில் இருப்பதால் ஆக்டேவியனுக்கு மார்க் ஆண்டனி சீசரின் சொத்துக்களைத் தராமல் இழுத்தடிக்கிறார். இதனால் மார்க் ஆண்டனிக்கும் ஆக்டேவியனுக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. இந்த இடைபட்ட காலத்தில் ஜூலியஸ் சீசரைக் கொன்றவர்கள் புரூட்டஸ் தலைமையில் ஒன்று திரண்டு ரோமை எதிர்க்கிறார்கள். புரூட்டஸை எதிர்க்க வேண்டும் என்றால் பெரும்படை தேவை. வேறு வழி இல்லாமல் மார்க் ஆண்டனியும், ஆக்டேவியன் சீசரும் இணைகிறார்கள்.

இதுதான் வாய்ப்பு எனக் கருதிய மார்க் ஆண்டனி அவருடைய எதிரிகளின் பெயர் பட்டியலைக் கொடுத்து இவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும் என்கிறான். அவர்கள் செனட் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு நபர்கள். அவர்களில் ஒருவர் சிசர்ரோ. அவர் நல்ல பேச்சாளர்; சிறந்த தத்துவவாதி. அவரைக் கொல்ல வேண்டாம் என்று மார்க் ஆண்டனியிடம் ஆக்டேவியன் இரண்டுநாள் மன்றாடியதாகச் சொல்கிறார்கள். மார்க் ஆண்டனியின் பிடிவாதமே வெல்கிறது. எதிரிகள் எல்லாம் கொல்லப்படுகிறார்கள்.

இறுதியாக கி.மு. 42-இல் Philippi என்ற இடத்தில் நடந்த போரில் புரூட்டஸையும் கொன்றுவிடுகிறார்கள். எதிர்ப்புக் குரலே இல்லாமல் அடங்கிப் போகிறது. மார்க் ஆண்டனிக்கு ஆக்டேவியன் சகோதரி ஆக்டேவியாவைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். ரோம் சாம்ராஜ்ஜியத்தை மூன்றாகப் பிரிக்கிறார்கள். அதில் வளமான எகிப்து பகுதியை எடுத்துக்கொண்டு மார்க் ஆண்டனி அங்கு சென்று விடுகிறான்.

எகிப்தை ஆள்பவள் பேரழகி கிளியோபாட்ரா. இயல்பாகவே பெண்கள் விசயத்தில் தீரா மோகம் கொண்டவன் மார்க் ஆண்டனி. எகிப்து ராணி பேரழகி கிளியோபாட்ராவைப் பார்த்த பிறகு, தன்னை இழந்து, தன் நாமம் கெட்டு, விடுதல் அறியா விருப்பினனாகிறான். கி.மு.31-இல் Actium என்ற இடத்தில் நடந்த போரில் மார்க் ஆண்டனியை ஆக்டேவியன் தோற்கடிக்கிறான்.

அதன்பின் சில நாட்களில் மார்க் ஆண்டனி தற்கொலை செய்துகொள்கிறான். அவன்மீது காதல் கொண்ட கிளியோபாட்ராவும் தன்னை விஷப்பாம்பு கடிக்கவிட்டு இறந்துபோகிறாள். அத்தோடு ரோம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வருகிறது. மார்க் ஆண்டனியைப் போல சிறந்த நண்பனை; முரடனை; பழிவாங்கும் உணர்ச்சி கொண்டவனை; போர் வீரனை; சுயநலக்காரனை: வஞ்சகனை; காதலனை; காமுகனை வரலாறு மீண்டும் உருவாக்குவது கடினம். அதனால்தான் சீசரைப் பற்றி எழுதினாலும், ரோமைப் பற்றி எழுதினாலும் அது மார்க் ஆண்டனியைப் பற்றி எழுதியதாகவே மாறிவிடுகிறது.

ரோம் வரலாறு என்பது பல போர்களை உள்ளடக்கியது. எல்லாவற்றையும் ஐந்து சீசன்களில் 50 எபிஸோட்களில் விலாவாரியாகக் காட்ட வேண்டும் என்று 2005-இல் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் பட்ஜெட் கன்னாபின்னாவென்று எகிறவே தாக்குப்பிடிக்க முடியாமல் 2007-இல் முடித்துக் கொண்டார்கள். அதனால் முதல் சீசன் மிகச் செறிவாக இருக்கும். இரண்டாவது சீசன் அவ்வளவு செறிவாக இருக்காது. என்றாலும் திகட்ட திகட்ட பாலியல் காட்சிகள், அட்டகாசமான நடிப்பு, வரலாற்றைக் கண்முன் காட்டும் அழகியல் என நிறைவாக இருப்பதால் ரோம் சீரீஸ் சலிக்கவே சலிக்காது.

ரோம் வெப் சீரிஸ் உண்மையோடு நிறைய புனைவும் கலந்து எடுக்கப்பட்டிருக்கிறது. லூசியஸ் வெரேனஸ், டைடஸ் புல்லா என்ற இரண்டு கதாபாத்திரங்கள் புனைவுக்காக உருவாக்கப்பட்டவா்கள். முதல் சீசனில் இவர்கள் இருவரும்தான் ஹீரோக்கள். ரோம் என்பது Noble மனிதர்களின் கதை மட்டுமில்லை. அந்தக் காலத்தில் இருந்த மக்களின் பண்பாட்டையும் சொல்ல வேண்டும் என்பதால் இரண்டு கற்பனைப் பாத்திரங்கள் வழியாகக் கதை சொல்லியிருக்கிறார்கள்.

உண்மையாக வாழ்ந்தவர்களான பாம்ப்பே, கேடோ, அடீயா, ஆக்டேவியா. மார்க் ஆண்டனி என எல்லாக் கதாபாத்திரங்களின் மேலும் புனைவைக் கலந்துவிட்டார்கள். குறிப்பாக அடீயா (Atia of the Julii) என்ற கதாபாத்திரத்தை பாலியல் வேட்கை நிறைந்தவளாக; சதியாலோசனை செய்பவளாக; சூனியக்காரியாக; பெண்களால் சாம்ராஜ்ஜியங்கள் சரியும் என்ற விதியின்படியாகப் படைத்துவிட்டர்கள். Polly Walker என்ற நடிகை அடீயா என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

ரோம் என்ற சீரியல் மூன்றுவிதமான போர்களை மையப்படுத்தியது. ஒன்று, ஜூலியஸ் சீசருக்கும் அவரை எதிர்க்கும் செனட் உறுப்பினர்களுக்கும் இடையேயான போர். இரண்டாவது,மார்க் ஆண்டனிக்கும் செனட் உறுப்பினர்களுக்கும் இடையே நடக்கும் போர். மூன்றாவதாக.மார்க் ஆண்டனிக்கும் ஆக்டேவியன் சீசருக்கும் இடையே நடக்கும் போர். மூன்றுவிதமான போர்களைவிட இரண்டு பெண்களுக்கு இடையே நடக்கும் திரைமறைவு போராட்டம்தான் நம்முடைய கவனத்தை அதிகம் ஈர்க்கும்.

ஒருத்தி அடீயா. அவள் ஆக்டேவியனின் அம்மா. சீசரின் தங்கை மகள். இன்னொருத்தி செர்வில்லா புரூட்டஸின் அம்மா. சீசரின் காதலி. செர்வில்லாவைப் பார்க்கும் முதல் காட்சியில், “இவளை நான் ஒப்பனை செய்வதற்காகக்கூட வைக்கமாட்டேன். இவளைப்போய் சீசர் காதலிக்கிறார். அபத்தம்” என்கிறாள் அடீயா. இவர்கள் காதலைக் கெடுக்க வேண்டும் என்று சுவரில் இருவர் படத்தையும் வரைந்து அசிங்க அசிங்கமாக எழுத வைக்கிறாள் அடீயா. இதனால் சீசர் செர்வில்லாவைச் சந்திப்பது நின்றுவிடுகிறது. கோபம் கொண்ட செர்வில்லா சீசரையும் அடீயாவையும் சபிக்கிறாள். பதிலுக்கு ஆள்வைத்து செர்வில்லாவின் தலைமயிரை அறுக்கிறாள். ஒரு வேலைக்காரன் மூலம் அடீயாவிற்கு விஷம் கொடுத்துக் கொல்லப்பார்க்கிறாள் செர்வில்லா. அதில் தப்பிக்கும் அடீயா செர்வில்லாவைத் தூக்கிவந்து வேலைக்காரர்களை வைத்து வன்புணர்வு செய்ய வைக்கிறாள். வாழ்நாள் எல்லாம் அடீயாவிடம் தோல்வியடைந்த செர்வில்லா தன் மகன் புரூட்டஸ் இறந்த பிறகு அடீயாவின் வீட்டிற்குமுன் வந்து Atia of the Julii I call for Justice என இடைவிடாமல் கத்திக்கொண்டே இருக்கிறாள். இரண்டு நாள் ஆன பிறகும் அவள் கத்துவது குறையாமல் இருப்பதால், ’இந்தக் கிழட்டுப் பெண்ணுக்கு என்னதான் வேண்டும்’ என வெளியே வந்து எட்டிப் பார்க்கிறாள்.

வெளியே உடம்பெல்லாம் சாம்பல் பூசி கத்திக்கொண்டிருக்கும் செர்வில்லா அடீயாவைப் பார்த்ததும் நிறுத்துகிறாள். “கடவுளே, நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இவளைச் சபித்துவிடுங்கள். இவள் வாழ்நாளெல்லாம் வருந்தும்படி கொடுங்கவலைகளைத் தாருங்கள். இவள் தன் வாழ்நாள் எல்லாம் சாம்பலையும் இரும்பையும் தின்று வாழ வேண்டும். பாதாளத்தில் இருக்கும் கடவுளே, நான் என்னையே உங்களுக்கு உயிர்ப்பலியாகத் தருகிறேன் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, கத்தியால் குத்திக்கொண்டு இறந்துவிடுகிறாள்!

அது வீரயுகக் காலம் என்பதால் ஆண்கள் பலர் இறப்பது வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது. அதனால் ஒருவனுக்கு மனைவியாக இருந்தவள் அவன் இறந்த பிறகு இன்னொருவனுக்கு மனைவியாவது இயல்பாக இருந்திருக்கிறது. உண்மையான அடீயா இரண்டு கணவர்களைத் திருமணம் செய்திருக்கிறார். கதையில் வரும் அடீயா ஒருவரைத் திருமணம் செய்து, இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு மார்க் ஆண்டனியோடு இணைந்து வாழ்கிறாள். பிற்காலத்தில் ஆக்டேவியனுக்கும், மார்க் ஆண்டனிக்கும் பகை வளர்ந்துகொண்டே போகிறது. “நம் இரு வீட்டாரும் திருமண பந்தத்தில் இணைந்தால் பகை குறைந்து போகும்” என்கிறாள் அடீயா. அதுவும் சரிதான் என்கிறான் ஆக்டேவியன்.

மார்க் ஆண்டனிக்கும் அடீயாவிற்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்தால், அதுவரை தன் அம்மாவோடு வாழ்ந்த மார்க் ஆண்டனியை ஆக்டேவியாவுக்குத் திருமணம் செய்து வைக்கிறான் ஆக்டேவியன். ரோம் சீரீஸில் போர்கள் தரும் அதிர்ச்சியைவிட உறவுகள் தரும் அதிர்ச்சி நம்மைக் கிறங்க வைக்கும்.

இந்த சீரீயலில் ஒரு இடத்தில் ஆக்டேவியன் சீசர் லிவியா என்ற பெண்ணிடம், “என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?” என்று கேட்பான். அதற்கு அந்தப் பெண் சொல்வாள், “எனக்கு உங்களைத் திருமணம் முடிக்க விருப்பம்தான், ஆனால் இது குறித்து நான் என் கணவனிடம் கேட்க வேண்டும்!” என்பாள். ஏதோ வடிவேல் படத்தில் வரும் காமடியைப் போல அந்தப் பெண் ஆக்டேவியன் சீசரைக் கலாய்க்கிறாள் என நினைத்தால், அடுத்த சில நாளில் லிவியாவின் கணவன் குடும்பத்திடம் பேசி, விவாகரத்துப் பெற்று லிவியாவைத் திருமணம் செய்துகொள்வான் ஆக்டேவியன் சீசர்!

ரோமாபுரி வாழ்க!

 

sankarthirukkural@gmail.com