விடுதி மேலாளர் நினைவுகூருகிறார், ஒருபோதும் அவரால் மறக்கமுடியாத ஒரு புகைப்படம்போல, எவ்வாறு ஒருநாள் வெறுமனே இருபத்து-நான்கு மணிநேரத்துக்கு ஓர் அறையை எடுப்பதற்கு ஒரு பெண்மணி வந்திருந்தாளென்பதை. நேரம் துல்லியமாகக் காலை பத்து மணி. எதிர்பாலினத்தைச் சேர்ந்த அசரடிக்கும் பெண்ணொருத்தி தன்னை நோக்கி வரும் காட்சி, எவ்விதத் துணையுமின்றி, அவளை நோக்கி அவரை வெறித்துப் பார்க்க வைத்தது, உட்கிளர்ச்சியுற்றவராக. அதற்கீடான மறக்கமுடியாத சங்கதி: அதீதவசீகரமும் ஆற்றலுமுள்ள பெண்ணாகத் தோன்றினாள் – அவளுடைய உடலமைப்பின் தீர்க்கத்தில் அது வெளிப்படையாகத் தெரிந்தது, குணநலன்களின் நேர்த்தியிலும், உடன் அவளது பார்வைக்கூர்மையிலும். முன்மேசைக்கு முன்பாகத் தாமதித்தபோது அவள் நேர்க்குத்தாக நின்றிருந்தாள், சிவப்புநிற அங்கியிலும் வெண்ணிறத் தொப்பியோடும். தனிப்பட்ட அடையாள அட்டை ஏதும் அவளிடத்தில் இல்லை, மேலும் அவளுக்கு எந்த வேலையுமில்லை அல்லது திருமணமும் ஆகவில்லை. அனேகமாக அவளுக்கு விவாகரத்து நிகழ்ந்திருக்கலாம் அல்லது கைம்பெண்ணாயிருக்கலாம். அவளது பெயர் பாஹிகா அல்-தகாபி, கழிமுகப்பகுதியைச் சேர்ந்த மன்சூராவில் இருந்து வந்திருந்தாள். வேண்டிய தகவல்களனைத்தையும் அம்மனிதர் பதிவு செய்தார், விடுதிச் சிற்றாள் ஒருவனை அவளிடம் சுட்டுவதற்கு முன்பு. சிற்றாள் அவளுக்கு முன்னால் நடந்து சென்றான், அவளது பையைச் சுமந்தவாறு – அவனுக்குப் பழக்கமானவற்றைக் காட்டிலும் சற்றுக் கனமானவொன்று, அந்தச் சிறிய விடுதியிலிருந்த அறை எண் பனிரெண்டுக்கு அவளை அழைத்துச் செல்பவனாக.

அரைமணி நேரத்துக்குப் பிறகு சிற்றாள் திரும்பினான், முகத்தில் ஆச்சரியம் ததும்பும் பார்வையோடு. என்ன நடந்ததென்று மேலாளர் அவனிடம் விசாரித்தபோது, அவன் பதிலளித்தான், “அவளொரு விசித்திரமான பெண்மணி.”

“நீ என்ன சொல்கிறாய்?” மேலாளர் அதிசயித்தார்.

அந்தி கவிழும்வரைக்கும் பஞ்சுறை, போர்வையோடு, படுக்கைவிரிப்புகளையும் கழற்றி அறையின் மூலையில் வைக்கும்படி அவள் தன்னிடம் சொன்னதாகச் சிற்றாள் கூறினான். படுக்கையைப் பொருத்தமட்டில், ஒட்டுமொத்தமாக அதை அறைக்கு வெளியே நகர்த்தி விடவேண்டுமென அவள் கேட்டுக்கொண்டாள், ஓர் ஆணை மறைக்குமளவுக்குப் போதுமான இடம் தனக்குக்கீழே இருக்கும்போது தன்னால் நீண்டநேரம் உறங்க முடியாதெனும் சாக்குப்போக்கோடு. அவளது அச்சம் அர்த்தமற்றதென்று அவன் சொன்னான், அந்த விடுதி ஆரம்பித்த காலந்தொட்டு எந்த அசம்பாவிதமும் அவ்வாறு நிகழ்ந்ததில்லை என்பதையும். ஆனாலும் அவள் வலியுறுத்தினாள், ஆகவே அவளுடைய விருப்பத்திற்கு அவன் அடிபணிந்தான்.

“உடனடியாக நீ என்னிடம் திரும்பி வந்திருக்க வேண்டும்,” என்றார் மேலாளர்.

சிற்றாள் மன்னிக்க வேண்டினான், அவளுடைய வேண்டுகோள் வினோதமானதாக இருந்தாலும், அவ்விடுதி நிறைவேற்ற வேண்டிய கடமைகளில் எதையும் மீறுவதாக அது இல்லை என்றான். பிறகு தனது கதையை அவன் தொடர்ந்தான், அவளது உடுப்புப்பெட்டியின் கதவுகளை அகலத் திறக்கும்படி அவனுக்கு அவள் ஆணையிட்டாள் – அவற்றைத் திறந்தே வைத்திருக்கும்படியும். உடுப்புப்பெட்டி மூடியிருந்தால் ஓர் அந்நியன் அதற்குள் ஒளிந்திருக்கலாம் என அவள் அச்சம் கொண்டிருந்ததை அவளுடைய குரலிலிருந்தே சிற்றாளால் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே அவளுடைய ஆணையை தான் செயல்படுத்தியதாக – அவ்வாறு செய்தபோது புன்னகைத்தபடி இருந்ததாகவும் – அவன் சொன்னான்.

“ஆச்சரியமான சங்கதி என்னவென்றால் அவள் மிகவும் திடமானவளாகவும் தைரியமிக்கவளாகவும் தோன்றினாள்,” மேலாளர் கருத்துரைத்தார்.

சற்றே கூடுதலான நேரம் அவர் யோசித்தார், பிறகு கேட்டார், “இனாமாக எதையும் அவள் வீசியெறிந்தாளா என்ன?”

“முழுமையாக அரை பவுண்டு,” சிற்றாள் பீற்றிக்கொண்டான்.

”நிச்சயம் அவள் இயல்பானவள் அல்ல, ஆனால் அதனால் எந்தப் பாதகமுமில்லை,” மேலாளர் பதிலளித்தார்.

“சலவையகத்துக்குப் போகும் வழியில் பூட்டியிருந்த அவளின் அறையை நான் கடந்து போனேன், அப்போது உள்ளேயொரு குரல் மிகவும் கொந்தளிப்பாகப் பேசுவதைக் கேட்டேன்,” என்றான் சிற்றாள்.

“ஆனால் அவள் தனியாகத்தானே இருக்கிறாள்?”

“என்றாலும், அவள் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தாள், அவளது குரலும் கூட உயர்ந்தவாறிருந்தது.”

“நிறைய மனிதர்கள் அதைச் செய்வார்கள்,” என்றார் மேலாளர். “வெறுமனே தனக்குத்தானே பேசுகிறாய் என்பதற்காக நீ பைத்தியமென்று அர்த்தமில்லை.”

ஏதும் சொல்லாமல் சிற்றாள் தனது தலையை ஆட்டினான், ஆகவே மேலாளர் அவனைக் கேட்டார், “அவள் என்ன பேசினாளென்பதில் எதையும் உன்னால் புரிந்துகொள்ள முடிந்தததா?”

“இல்லை, ஒரேயொரு வெளிப்பாட்டைத் தவிர: ‘அதுவொன்றும் முக்கியமில்லை.’”

தங்களின் உரையாடலை முடித்துக்கொள்ள விரும்புபவரைப்போல மேலாளர் தீர்க்கமாகச் சைகை செய்தார். பிறகு, பதிவேட்டில் அவர் எழுதிய சமயத்தில், சிற்றாளிடம் அவர் மேலும் கூறினார், “எப்போதையும் விட அதிக விழிப்புணர்வோடு இரு – சொல்லப்போனால், அது நமது கடமையும் கூட.”

இடி இடித்தது, சாளரத்தின் வழியாக மேலாளர் வானத்தைப் பார்த்தபோது மேகங்களால் அது மிக அடர்த்தியாக மூடப்பட்டிருப்பதைக் கண்டார். பருவநிலை மிகவும் குளிராயிருந்தது, அவ்வப்போது பெய்த மழைத்தாரைகளோடு. துல்லியமாக மதியம் ஒரு மணிக்கு, அறை எண் பனிரெண்டிலிருந்து அந்தப் பெண்மணி தொலைபேசியில் அழைத்தாள்.

“நான் மதியவுணவைக் கொண்டுவரப் பணிக்கலாமா?” அவள் விசாரித்தாள்.

“விடுதியில் உணவில்லை, ஆனால் இங்கு அருகாமையில் ஓர் உணவகம் உள்ளது,” மேலாளர் அவளிடம் சொன்னார். “உங்களுக்கு என்ன பிடிக்கும், மேடம்?”

“கலவைக் காய்கறிகளும் கோழிக்கறியும்,” அவள் பதிலளித்தாள், “உடன் சோறோடு சேர்ந்து கொத்துக்கறியும் வெங்காயங்களும், ஒரு கிலோ தரமான கெபாப், கிழக்கத்திய சாலடுகளின் ஒரு தொகுதி, இளம் ஆட்டுக்கறியோடு சேர்த்து வாட்டிய துண்டுப்பாண், மென்மையான மாவுப் பலகாரங்களுடன் இரண்டு ஆரஞ்சுகளும்.”

அவள் வேண்டிய அனைத்தையும் கொண்டுவரும்படி மேலாளர் பணித்தார். என்றபோதும் அவள் கேட்ட உணவின் அளவால் அவர் திகைப்படைந்தார் – குறிப்பாக மாமிசத்தில். அது மட்டுமே கூட ஆறு பேருக்குப் போதுமானதாக இருக்கும்!

“வெறும் பயத்தால் மட்டும் அவளுக்குப் பைத்தியம் பிடித்திருக்கவில்லை – மாறாக மீதுண்ணும் உணர்வாலும் கூட,” தனக்குத்தானே அவர் சொல்லிக்கொண்டார். “பெரும்பாலும் மதியநேரம் அவள் விடுதியை விட்டு நீங்கிச் செல்லக்கூடும், எனில் என்னால் அவளுடைய அறைக்குள் சென்று ஒரு பார்வை பார்க்கவியலும்.”

உணவு வந்தது, ஒரு மணிநேரத்துக்குப் பிறகு தட்டத்தையும் சீனப்பீங்கானையும் எடுத்துப்போக உணவகத்திலிருந்து ஓர் ஆள் திரும்பி வந்தான். தட்டுகளைப் பார்ப்பதை மேலாளரால் தவிர்க்க முடியவில்லை – அவை யாவும் சுத்தமாகத் துடைத்து வழிக்கப்பட்டிருப்பதை அவர் கண்டார், மீதமிருந்த சில எலும்புகளும் கெட்டியான குழம்பும் தவிர்த்து. மொத்த விவகாரத்தையும் தனது மூளையிலிருந்து வெளியே வீசியெறிய அவர் தீர்மானித்தார், ஆயினும் கூட அந்தப் பெண்மணி – வினோதமான வகையில் தோற்றமளித்ததிலும் நடந்து கொண்டதிலும் – அவரைத் துரத்தினாள், அவருடைய யோசனைகளின் மேலே தீவிரமாக அழுந்தியபடி. அவள் அழகாயிருந்ததாக அவரால் சொல்ல முடியவில்லை, என்றாலும் அவளிடம் ஒருவித விசையும் ஈர்ப்பும் இருந்தன. ஏதோவொன்று அவளைப் பற்றி அச்சுறுத்துவதாக இருந்தது, கூடவே ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அடிபணியச் செய்வதாயிருந்த விசயங்களும். மேலும் அன்றுதான் அவளை அவர் முதல்முறை பார்த்தபோதும், ஒருவரின் நினைவுப்பேழையில் ஆதிகாலந்தொட்டு தங்களைப் பதித்துக்கொண்ட முகங்களால் மட்டுமே வரக்கூடிய பரிச்சயவுணர்வை அவள் விட்டுச் சென்றிருந்தாள்.

ஓர் ஆணும் பெண்ணும் தன்னை நோக்கி வருவதை அவர் பார்த்தார். “திருமதி பாஹிகா அல்-தகாபி இங்கு தங்கியிருக்கிறாரா?” அந்த ஆண் விசாரித்தான்.

விடுதி மேலாளர் ஆமோதிப்பாகப் பதிலளித்தார், பிறகு பார்வையாளர்களைத் தனது அறைக்கு மேலேறி வர அந்தப் பெண் அனுமதிப்பாளா என்றறியத் தொலைபேசியில் அழைத்தார். வெளிப்படையாகவே, இம்மனிதர்கள் மேல்தட்டு வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், குறைந்தபட்சம் பொருட்செல்வத்தின் அடிப்படையில். காற்று பயங்கரமாக வீசியது, விடுதியிலிருந்த சிறிய முற்றத்தின் சரவிளக்குகளை நடனமாடச் செய்வதாக. பிறகு சீக்கிரமே வேறு எட்டு மனிதர்கள் வந்தார்கள் – நான்கு ஆண்களும் நான்கு பெண்களும் – அதே கேள்வியை மீண்டும் கேட்டார்கள்.

“திருமதி பாஹிகா அல்-தகாபி இங்கு தங்கியிருக்கிறாரா?”

விருந்தாளியின் அனுமதியைப் பெறுவதற்காக மேலாளர் மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். அது கிட்டியபிறகு, அந்தக்குழு கம்பீரமாகப் படிகளில் ஏறிச்சென்றனர் – அவர்களும் அதே உயர்ந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான், அவர்களுக்கு முன்பு வந்த இணையைப்போல – அறை எண் பனிரெண்டுக்கு. ஒட்டுமொத்தமாகப் பத்து விருந்தினர் வந்திருந்தனர் – அனேகமாக ஒரே குடும்பத்தின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது நண்பர்களும் உறவினர்களும் சேர்ந்து. எது எப்படியிருந்தாலும், திருமதி பாஹிகா ஒரு சாதாரண பெண்மணி கிடையாதென்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

“ஏன் அவள் நமது விடுதியைத் தேர்ந்தெடுத்தாள்?” அவர் ஆச்சரியப்பட்டார்.

வேலையாட்கள் தேநீர்க்கோப்பைகளை மேலே எடுத்துப்போக கட்டிடத்தின் அருந்தகத்தில் ஒரு சுறுசுறுப்பு பரவத் தொடங்கியது, மேலும் இரண்டாவது குழுவில் வந்த சில முகங்களை முன்னரே தான் பார்த்திருப்பதாகவும் மேலாளருக்குத் தோன்றியது. ஆனால் பாஹிகா அல்-தகாபி குறித்த எந்த யோசனைகளையும் தனது மூளையை விட்டு துடைத்தெறிவதே சிறந்த விசயமாயிருக்கும் என தனக்குத்தானே அவர் சொல்லிக்கொண்டார். நாளைய தினத்தில் அந்த எளிய விடுதியை நிறைக்கும் நூற்றுக்கணக்கான தொலைந்த நினைவுகளில் ஒன்றாக அவளும் மாறிப்போவாள்.

பிறகு தனக்கு முன்னால் ஐம்பது வயதிருக்கக்கூடிய பெண்ணை அவர் பார்த்தார், நிதானத்திலும் நடைநயத்திலும் உச்சத்தைப் பெற்றிருந்தவளாக. “திருமதி பாஹிகா அல்-தகாபி இருக்கிறாரா?”

அவர் ஆம் என்றபோது, அவள் அவரிடம் சொன்னாள், “அவளிடம் சொல்லுங்கள், தயைகூர்ந்து, பெண் மருத்துவர் வந்திருப்பதை.”
அவர் சீமாட்டியைத் தொடர்புகொள்ள, மருத்துவர் மேலே வரலாமென்று அவளும் சொன்னாள். பிறகு தன்னிடமிருந்து அவள் கிளம்பிப்போவதற்கு முன்னால் தனக்குள் உண்டான தீராத ஆவலுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து அவர் அவளிடம் கேட்டார், “உங்களுடைய தனித்துறைப்பாடு என்ன, டாக்டர்?”

”மகப்பேறியல்,” அந்தப் பெண்மணி பதிலளித்தாள்.

தனது துறைசார்ந்த பெயரின் மூலமே தன்னை அவள் அறிமுகம் செய்துகொண்டாள் என்பதை அவர் கவனித்தார், ஆனால் பெயரைச் சொல்லாமல். அதன் அடிப்படையில்தான் அந்தப் பெண்மணியை இவள் சந்திக்கிறாளா? பெண்மைசார்ந்த சங்கதிகளால் பாஹிகா அல்-தகாபி பாதிக்கப்பட்டிருக்கிறாளா? அவள் கர்ப்பமாக இருக்கிறாளா? என்றாலும் மொத்தக் கவனத்தையும் தன்னுடைய எண்ணங்களின் மீது அவர் செலுத்துவதற்கு முன்பாகக் கடுகடுத்த முகத்தோடு ஒரு குட்டையான, குண்டு மனிதன் உள்ளே நடைபோட்டு வந்தான், ஒப்பந்ததாரர் யூசுஃப் காபில் எனத் தன்னை அறிமுகம் செய்தபடி. அடிக்கடி கேட்கப்பட்ட கேள்வியையே அவனும் முன்வைத்தான், “திருமதி பாஹிகா அல்-தகாபி இங்கிருக்கிறாரா?”

மேலே அவளின் அறைக்கு ஒப்பந்ததாரர் செல்வதற்காக விடுதி மேலாளர் அழைத்து அனுமதி வாங்கிய பிற்பாடு, குழப்பமும் கேலியும் நிரம்பிய புன்னகையோடு அம்மனிதனுக்கு அவர் விடைதந்தார். அதே சமயம், சிற்றாள்களில் ஒருவன் வெளியே சுற்றிவிட்டுத் திரும்பினான், குளிரின் காரணமாக அவனது அடர்த்தியான, நாட்டுப்புற காலபியாவுக்குள் நடுங்கியபடியே. இருட்டு, வானத்தின் நான்கு முனைகளிலும் கூடிவருவதாக அவன் சொன்னான், அந்தப் பகல்பொழுது சீக்கிரமே இரவாக மாறப்போகிறதென்பதையும். மேலாளர் மறுபடியும் சாளரத்தின் வழியாக வெளியே பார்த்தார், ஆனால் உண்மையில் அவர் அறை எண் பனிரெண்டில் இருந்த பெண்ணைப் பற்றி யோசித்தவாறிருந்தார் – ஓர் உயர்-வர்க்க சிறப்புக்குழுவோடிருந்த மர்மமான அந்தக் கனவுக்கன்னியைப் பற்றி. அவளது வருகைக்குப் பிறகு அமைதியின்மையும் அசௌகரியமும் கலந்த ஒரு நீரோட்டம் விடுதி முழுக்கப் பரவியிருப்பதாக அவர் உணரத் தொடங்கினார். அவரது சுயத்தை அது ஊடுருவி, வளம்பொருந்திய, உலகார்ந்த தொழில்களால் ஆன மங்கலான ஒரு ஜோதி குறித்த அவருடைய இளமைக்காலக் கனவுகளையும் தட்டியெழுப்பியது.

“திருமதி பாஹிகா அல்-தகாபி இங்கிருக்கிறாரா?” என்று வினவிய ஒரு குரலால் தனது பகற்கனவில் இருந்து அவர் பிடுங்கியெறியப்பட்டார்.

நீளமான ஜிப்பாவும் கஃப்தானும் சுற்றிக்கட்டிய ஓர் அகலமான மனிதன் தனக்கு முன்னாலிருப்பதை அவர் கண்டுகொண்டார், அவனுடைய தலையின் மீது தர்பூஷ் பின்புறமாகத் திரும்பியிருக்க, அவனது கரம் ஒரு பழுப்புநிறக்குடையை இறுகப் பற்றியிருந்தது. “பிணங்களைக் கழுவும் குருட்டு சையத் வந்திருப்பதாக அவரிடம் சொல்லுங்கள்.”

அவரது மார்பு உணர்ச்சிவேகத்தில் துடிக்க, மேலாளர் தன்னுடைய பல்லைக் கடித்தார், அம்மனிதனையும் மற்ற பெண்மணியையும் ஒருசேர சபித்தபடி – ஆனால் அவளை அழைத்ததன் மூலம் அவர் தனது கடமையைச் செய்தார். முதன்முறையாக, அவருக்கு முரண்பாடான மறுமொழி கிடைத்தது.

“தயைகூர்ந்து வரவேற்புக்கூடத்தில் காத்திருங்கள், ஐயா,” வெட்டியானிடம் அவர் சொன்னார்.

இங்கு என்ன செய்வதற்காக இவன் வந்திருக்கிறான்? ஏன் இவன் வெளியில் காத்திருக்கக்கூடாது? ஐம்பது வருடங்களாக மேலாளர் அந்த விடுதியில் வேலை பார்க்கிறார், ஆனால் அன்றைய தினம் நிகழ்ந்து கொண்டிருந்ததுபோல ஒருபோதும் நிகழ்ந்து அவர் பார்த்ததில்லை. மிகுந்த விசையோடு பிரவாகமாய் மழை பொழியத் தொடங்கலாமென அவர் பீதியடைந்தார், எத்தனை காலத்துக்கு இங்கே விடுதிக்குள் அவர்களனைவரையும் அடைத்திருக்குமென்று யாருக்குமே தெரியாத அளவுக்கு – அதுவும் இந்த மரணத்தின் தூதுவனோடு!

புதிய பார்வையாளர்கள் வருகை புரிந்தார்கள். அவர்கள் தனித்தனியாகத்தான் வந்தார்கள், ஆனால் ஒருவர் பின் ஒருவராக: அறைகலன் அங்காடியின் முதலாளி, மளிகைக்கடைக்காரன், கரும்புச்சாறு விற்பவன், அலங்காரப்பொருட்களும் வாசனைத்திரவியங்களும் விற்கும் கடை உரிமையாளன், வருவாய்த்துறையைச் சேர்ந்த உயரதிகாரி, நன்கு பிரபலமான செய்தித்தாளின் பதிப்பாளர், ஒட்டுமொத்த மீன்விற்பனையாளன், சாமான்களுடன் கூடிய அடுக்ககங்களுக்கான தரகன், அரபுக் கோடீஸ்வரனின் முகவர். அந்தப் பெண்மணி தனது சந்திப்புகளைக் கீழே கூடத்துக்கு நகர்த்துவாளென்று மேலாளர் நினைத்தார், ஆனால் அதற்கு மாறாக அவர்கள் மேலே வர அவள் அனுமதி வழங்கியவாறிருந்தாள், ஒருவர் பின் ஒருவராக. சிற்றாள்கள் அவர்களுக்கு மென்மேலும் தேநீரையும் இருக்கைகளையும் கொண்டு போனார்கள், தாங்களனைவரும் அமருமிடத்தை எப்படி அவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்பதையும் அந்தச் சமயத்தில் மேலாளர் யோசித்தார். இதற்கு முன்னரே அவர்களனைவரும் ஒருவரையொருவர் அறிவார்களா? மேலும், துல்லியமாக, எதுதான் தற்போது அவர்களை ஒன்றிணைத்துள்ளது? தலைமைச் சிற்றாளை அழைத்து அவனுக்கு இவ்விசயங்களைப் பற்றி என்ன தெரியுமென்று அவர் விசாரித்தார்.

“அங்கே என்ன நடக்கிறதென்பது எனக்குத் தெரியாது,” அவன் பதிலளித்தான். “நாற்காலிகளையும் தேநீரையும் உள்ளே எடுக்க கைகள் வெளியே நீள்கின்றன, பிறகு உடனடியாக கதவு மூடிக்கொள்கிறது.”

மேலாளர் தோள்களைக் குலுக்கினார். யாரும் எந்தப் புகாரும் எழுப்பாதவரைக்கும், தனக்குத்தானே அவர் சொல்லிக்கொண்டார், அவரை யாரும் குறைகூற முடியாது.

பிணங்களைக் கழுவும் குருட்டு சையத் அவரிடம் வந்தான். “நான் இங்கு காத்திருப்பதை அந்தப் பெண்மணிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்,” என்றான்.

“தேவைப்படும் நேரத்தில் உன்னைக் கூப்பிடுவதாக அவர் உறுதியளித்திருக்கிறார்,” மேலாளர் அவனிடம் சொன்னார், எந்தச் சுரத்துமின்றி.

அம்மனிதன் நகர்வதாகத் தெரியவில்லை, எனவே அவர் மீண்டும் அந்தப் பெண்ணை அழைத்தார், அவளுடைய வேண்டுகோளின் பேரில் தொலைபேசியை பிணம் எரிப்பவனிடம் தந்தார்.

“அம்மா, ஏற்கனவே பின்மதியப் பிரார்த்தனை நேரத்தைக் கடந்தாகிவிட்டது, மேலும் குளிர்காலத்தின் பகற்பொழுதுகள் மிகவும் சிறியவை,” அவன் நொந்துகொண்டான்.

அவள் பேசுவதைக் கேட்டவாறு அவன் ஒருகணம் ஒலிவாங்கியிடம் குனிந்தான், பிறகு அதை மீண்டும் வைத்து விட்டு கூடத்துக்குத் திரும்பினான், சந்தேகத்துக்கிடமின்றித் தொந்தரவுற்றவனாக. இதயத்தின் ஆழத்திலிருந்து மேலாளர் அவனைச் சபித்தார். இந்தப் பிணந்தின்னிப்பிசாசை விடுதிக்குள் வரவழைத்ததற்கு அந்தப் பெண்தான் பொறுப்பு, வெறுப்போடும் அருவருப்போடும் கூடத்தின் கதவை ஓரப்பார்வை பார்த்தபோது தனக்குள் அவர் எண்ணிக்கொண்டார். அதேவேளையில், பெண்மணியின் விருந்தாளிகளில் சிலர் வெளியே போகும் வழியில் கீழிறங்கி வந்தார்கள், ஆகவே அறை எண் பனிரெண்டின் நிகழ்வுகள் குறித்த மேலாளரின் கவலைகள் சற்றே குறைந்ததாகத் தோன்றின.

“விருந்தினர்களில் சிலர் சீக்கிரமாகவும் இன்னும் சிலர் தாமதமாகவும் செல்வார்கள்; அந்திக்குள் அனைவரும் சென்றிருப்பார்கள்,” தனக்குள் அவர் வலியுறுத்திக் கொண்டார்.

தன்னுடைய பொறுப்புமிக்க பதவியின் பொருட்டு அவர்களை எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்படலாம் என அவர் கவலைப்படத் தொடங்கினார் – அவர்கள் ஆற்றல்மிக்க வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். வெளிப்புறம் மிகுந்த வன்மையோடு சீழ்க்கையொலி ஏற்படுத்திய காற்றோடு சாலைகளில் கவிந்திருந்த துயரவுணர்வும் சேர அவரது மனக்குழப்பம் மீண்டும் இருமடங்கானது. என்றபோதும் இத்தனை விதிவிலக்கான சூழ்நிலைகளை மீறியும், மழையங்கிகளை அணிந்திருந்த ஆண்களும் பெண்களும் நிறைந்த கூட்டம் கதவினருகே கூடுவதைப் பார்த்தார், அவரது இதயம் மார்புக்குள் அமிழ்ந்தது. இவ்வாறு கேட்டு அவர்களை அவர் ஆச்சரியத்துக்குள் ஆழ்த்தினார், “திருமதி பாஹிகா அல்-தகாபி?”

அவர்களுள் ஒருவன், சிரித்தவாறு, பதிலளித்தான், “அவரிடம் சொல்லுங்கள், தயைகூர்ந்து, பண்பாடு மீட்புக்குழுவைச் சேர்ந்த பிரதிநிதிகள் வந்து விட்டதாக.”

ஆகவே அவர் அந்தப் பெண்மணியைத் தொலைபேசியில் அழைத்தார், மேலும் அவர்கள் மேலே வருவதற்கு அவள் சம்மதம் தெரிவித்தபோது அவர் அவளிடம் கெஞ்சினார், “அவர்கள் பத்து பேர் இருக்கிறார்கள், மேடம், மேலும் எத்தனை பார்வையாளர்கள் வந்தாலும் கீழிருக்கும் வரவேற்புக்கூடம் அவர்களுக்காகக் காத்திருக்கிறது.”

“அறையிலேயே தாராளமான இடம் உள்ளது,” அவள் சுருக்கென்று பதிலளித்தாள்.

ஆண் மற்றும் பெண் பிரதிநிதிகள் மேலேறிப்போக, ஒட்டுமொத்தக் குழப்பத்தோடு மேலாளர் தலையாட்டினார். சீக்கிரமே அல்லது தாமதமாக, அங்கு ஒரு பிரச்சினை நிகழவிருந்தது. சொர்க்கத்தின் சீற்றமோ வெளியே பொழிந்திட ஆயத்தமாயிருந்தது – அறை எண் பனிரெண்டின் விதவிதமான வினோத உயிரிகளால் தூண்டப்பட்டு. கூடத்தை நோக்கி மேலாளர் தற்செயலாகத் திரும்பும்படி ஆனது. பிணங்களைக் கழுவும் குருட்டு சையத் அங்கே தன்னை நோக்கி ஊர்ந்துவரும் காட்சியை அவர் பார்த்தார். ஆகவே மனவுளைச்சலோடு விரலின் கணுக்களால் மேசையின் மீது அவர் விசையோடு அறைந்தார். பிறகு, அவன் வாயைத் திறப்பதற்கு முன்பே அந்தப் பெண்மணியோடு அவனைத் தொலைபேசியின் வழியே நேரடியாக இணைத்தார். அவன் அவளிடம் குறைகூறுவதை மேலாளர் கவனித்தார், பிறகு அவன் தணிவதையும் கேட்டார். ஒலிவாங்கியை வெட்டியான் தானாகவே அதனிடத்தில் வைத்தான், ஆனால் மேலாளர் விலகி நடக்கத் தொடங்கியபோது அவனுக்குள்ளாக முணுமுணுத்தான், “செய்வதற்கு ஏதுமில்லாமல் காத்திருப்பதென்பது மிகவும் அலுப்பூட்டுவது.”

மேலாளர் மிகக் கொதிப்படைந்தார், உணவகத்தோடு இணைக்கும்படி வேண்டுகோள் விடுத்து அத்தருணத்தில் அந்தப்பெண் மட்டும் தொலைபேசியில் அழைக்காமல் போயிருந்தால் அவனை வசைபாடியிருப்பார். அவர்களுடன் அவளின் உரையாடல் சில நிமிடங்கள் நீடித்தது. அவளும் அவளுடைய விருந்தினர்களும் இரவுணவு வரைக்கும் அறையில்தான் இருப்பார்கள், அவர் தீவிரமாக யோசித்தார், எனில் அவர்கள் எங்கே இரவுணவைச் சாப்பிடுவார்கள்? இப்போது சென்று தான் அவளது அறையைச் சோதனையிட அவர் விரும்பினார்: அத்தனை கற்பனைக்கும் அப்பாற்பட்ட காட்சியாக அது இருக்கக்கூடும் – சொல்லப்போனால் ஒரு பித்துக்குளித்தனமான வேடிக்கைக்காட்சியாகவும்.

குறைவதற்கான எந்த அறிகுறியுமின்றி வெளியே மழைகொட்டுவது தொடர்ந்திட, பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் ஒரு குழுவும் மதம் சார்ந்த சில மனிதர்களும் வந்தார்கள் – தீவிரமான விவாதத்தில் அவர்கள் மூழ்கியிருந்தபடியால் மேலாளர் வெறுமனே அவர்களை மேலேறிச் செல்ல அனுமதித்தார். சூழல் இன்னுமின்னும் அச்சுறுத்துவதாக மாறிக்கொண்டிருந்தது, ஏனென்றால் முதலில் மேசைக்கு வராமலே ஒரு மர்மமான மனிதன் மேலே சென்றான். மேலாளர் அந்த ஊடுருவல் பேர்வழியை அழைத்தார் – ஆனால் அவன் அதற்குச் செவிசாய்க்கவில்லை. சிற்றாள்களுள் ஒருவன் அவனைப் பின்தொடர்ந்து சென்றான், ஆனால் அம்மனிதன் அறை எண் பனிரெண்டுக்குள் சட்டென்று நுழையக் கண்டதும் நின்றுவிட்டான். தற்போது தான் முற்றிலும் தனித்திருப்பதாக மேலாளர் உணர்ந்தார், அத்துடன் விடுதியின் மீதான தனது அடிப்படைக் கட்டுப்பாட்டினை இழந்துவிட்டதாகவும். தலைமை சிற்றாளை வரச்சொல்லலாமென்று எண்ணினார். ஆனால் அதற்குள் ஒரு மனிதன் தோன்றினான். வெறுமனே அவன் வந்து நின்ற காட்சியே அவருக்கு நிம்மதி தருவதாயிருந்தது. இருவரும் கைகுலுக்கியபிறகு மேலாளர் அவனிடம் சொன்னார், “சரியான நேரத்திற்குத்தான் வந்துள்ளீர்கள், மதிப்பிற்குரிய தகவல்சொல்லி, அவர்களே.”

“பதிவேட்டை என்னிடம் காட்டுங்கள்,” தகவல்சொல்லி அமைதியாகக் கூறினார்.

“விசித்திரமான சம்பவங்கள் இங்கு நடந்தேறி வருகின்றன,” மேலாளர் உளறினார்.

பதிவேட்டின் பெயர்களைத் தகவல்சொல்லி ஆராய்ந்த சமயத்தில் – வாசித்தவாறே அவர் குறிப்புகளும் எடுக்க – மேலாளர் கூறினார், “அறை எண் பனிரெண்டின் பொருட்டே நீங்கள் இங்கு வந்திருப்பீர்கள் என்றெண்ணுகிறேன்.”

“ஹூம்?” தகவல்சொல்லி கேள்விகேட்பதைப்போல இருமினார்.

“கேடுகெட்ட நடத்தையால் அங்கு ஒரு பிரளயமே நடக்கிறது,” மேலாளர் எச்சரித்தார்.

“இயற்கையில் இருக்கக்கூடிய எதுவும் இயற்கையானதாகத்தான் இருக்கமுடியும்,” அவரது வார்த்தைகளை நிராகரிப்பதாகத் தகவல்சொல்லி பேசினார். பிறகு, விடைபெற்றுக்கொண்டு, அவர் சொன்னார், “யாரேனும் என்னைத் தொலைபேசியில் அழைத்தால், அறை எண் பனிரெண்டில் நான் இருப்பேன்.”

மேலாளர் இன்னுமதிகமாகக் குழம்பினார் – என்றாலும் அதே நேரத்தில், விடுதியில் என்ன நிகழ்கிறதென்பது அரசின் கண்களுக்கும் காதுகளுக்கும் தெரியுமென்பதில் நிம்மதியடைந்தார். தலைமைச் சிற்றாளைத் தான் அழைக்கவிருந்தது அவருக்கு நினைவு வந்தது, குருட்டு சையத் மீண்டும் ஒருமுறை தன்னிடம் பதுங்கிப் பதுங்கி வருவதையும் அவர் கவனித்தார். தன்னிலை மறந்தவராக அவர் அலறினார், “மேலே வரும்படி தான் அழைக்கும்வரை உன்னை அவள் காத்திருக்கச் சொன்னாள்!”

அவரது கடிந்துரைக்கு பதிலாகத் தனக்குப் பழகிய அடிமைத்தனத்தோடு அம்மனிதன் விகாரமாக இளித்தான், பிறகு இறைஞ்சினான், “ஆனாலும் நான் வெகுநேரமாகக் காத்திருக்கிறேன்…”

“மறுபேச்சு ஏதுமின்றிக் காத்திரு – மேலும் நீயொரு விடுதியில் இருக்கிறாய் என்பதை நினைவில் கொள், ஏதோ இடுகாட்டில் அல்ல!” மேலாளர் கொந்தளித்தார்.

பாசாங்குடன் கூடிய பொறுமையோடு அம்மனிதன் திரும்பிச்சென்றான், மேலாளர் தலைமைச் சிற்றாளை அங்கு வரவழைத்தார். “அறை எண் பனிரெண்டில் சங்கதிகள் எவ்வாறுள்ளன?” அவர் விசாரித்தார்.

“எனக்குத் தெரியாது, ஆனால் அங்கே உள்ளுக்குள் ஏராளமான அமளிதுமளியாக இருக்கிறது.”

“அந்த இடத்துக்குள் எப்படி அத்தனை பேரையும் அவர்களால் திணிக்க முடிந்தது? அவர்கள் ஒருவர் மீது மற்றவர் ஏறியமர்ந்திருக்க வேண்டும்!” மேலாளர் வியப்போடு சொன்னார்.

“உங்களுக்குத் தெரிந்ததைக் காட்டிலும் அதிகமாக எனக்கு எதுவும் தெரியாது,” தலைமைச் சிற்றாள் சிந்தனையில் ஆழ்ந்தார். “எவ்வாறாகிலும், அதிகாரியும் அவர்களோடு உள்ளே இருக்கிறார்.”
அந்த மனிதன் விலகியபிறகு சாளரத்தின் வழியே பார்ப்பதற்காக மேலாளர் மீண்டும் சென்றார், அங்கு சூன்யவெளியின் மீது இரவு தீர்க்கமாகப் படர்ந்திருப்பதை அவர் கண்டார். விடுதி முழுக்க விளக்குகள் எரிந்தவாறிருந்தன, வெளியே பயங்கரமாக ஊளையிட்டபடி வீசிய காற்றின் ஈரப்பதத்தால் அடர்த்தியாக மாறியிருந்த சூழலின் மீது வெளிறிய பிரகாசத்தை அவை பூசின. உணவகத்தில் இருந்து பரிசாரகர்களின் ஒரு பட்டாளமே கிளம்பி வந்தார்கள், அனைத்துவகை உணவுகளையும் அள்ளிக்கொட்டிய தட்டங்களோடு, மேலாளரின் திகைப்பு மென்மேலும் வளர்ந்தது. அறைக்குள் ஒரேயொரு உணவுமேசை மட்டும்தான் இருந்தது, எனில் அந்தப் பெண்மணியின் விருந்தாளிகள் இந்தத் தட்டுகளை எல்லாம் எங்கே வைப்பார்கள்? எவ்வாறு அவர்கள் தங்களின் உணவினை உண்ணுவார்கள்? சிற்றாள்களில் ஒருவன் அதன்பிறகு அறையின் கதவு திறக்கப்படவேயில்லை என்று சொன்னான், ஆகவே தற்போது சிறிய கண்காணிப்புச் சாளரத்தின் வழியாகவே உணவு உள்ளே சென்றது.
மேலும் என்னவென்றால், அறையிலிருந்து கிளம்பிய பெருங்கூச்சல் விடுதி மொத்தத்தையும் தொல்லைக்குள் ஆழ்த்தியது: ஒட்டுமொத்த வேடிக்கையும் தற்போது வெறுமனே நம்பமுடியாதவொன்றாக மாறியிருந்தது.
அரைமணி நேரங்கழித்து, ஒரு சிற்றாள் திரும்பி வந்து அவர்களில் நிறைய பேர் குடித்திருப்பதை உறுதிசெய்தான்.
“ஆனால் ஒரு போத்தல் கூட மேலே போவதை நான் பார்க்கவில்லை!” மேலாளர் ஆச்சரியமாகச் சொன்னார்.
“அனேகமாக அவற்றை அவர்கள் ஜேப்பிகளில் ஒளித்து வைத்திருக்கலாம்,” சிற்றாள் ஊகமாகச் சொன்னான். “அவர்கள் பாடுகிறார்கள், அலறுகிறார்கள், கைதட்டவும் செய்கிறார்கள் – குடியால் விளையும் போக்கிரித்தனமான சூழல் என்று உறுதியாகச் சொல்லலாம். மேலும் பாவமும் கூட, ஏனென்றால் ஆண்களுக்குச் சமமாக அவ்வறையில் பெண்களும் இருக்கிறார்கள்.”
“பிறகு அந்தத் தகவல்சொல்லி?”
“அவருடைய குரல் ‘இந்தவுலகமே குடியிலும் புகையிலும்தான்’ என்று பாடுவதைக் கேட்டேன்,” என்றான் சிற்றாள்.
வெளியே இடி இடிக்க மேலாளர் தனக்குள் சொல்லிக் கொண்டார், “அனேகமாக நான் கனவு காண்கிறேன் – அல்லது ஒருவேளை எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கலாம்.” அந்தத் தருணத்தில், சாதாரண மனிதர்களின் கூட்டம் அங்கு வந்தது – அவர்களின் முகங்களும் உடைகளும் அவர்களுடைய கீழ்த்தட்டுப் பொருளாதாரச் சூழலைப் பறைசாற்றின. தவிர்க்கவியலா அதே கேள்வியை அவர்களும் கேட்டார்கள், “திருமதி பாஹிகா அல்-தகாபி இங்கு தங்கியிருக்கிறாரா?”
விரக்தியாகப் புன்னகைத்தபடி மேலாளர் அந்தப் பெண்மணியைத் தொலைபேசியில் அழைத்தார். அவர்களைக் கூடத்தில் காத்திருக்கச் செய்யும்படியும் அவர்களுக்கு பானங்கள் வழங்குமாறும் அவரை அவள் கேட்டுக்கொண்டாள். அந்தக்குழுவுக்குக் கூடத்துக்குப் போகும் வழியைக் காட்டியபிறகு அவர்களுக்குத் தேநீர் வழங்கும்படி வேலையாட்களை அவர் பணித்தார். கூடம் நிரம்பி வழிந்ததால் வெட்டியான் சங்கடமாக உணர்ந்தான். நம்பிக்கையற்றவகையில் மேலாளர் மறுபடியும் புன்னகைத்தார், பிறகு முணுமுணுத்தார், “இந்த விடுதி இதற்குமேலும் ஒரு விடுதியாக இல்லை, மேலும் நானும் இதன் மேலாளர் இல்லை, இன்றைய நாளும் கூட ஒரு நாளில்லை, மாமிசம் மற்றும் மதுரசத்தின் வடிவில் பைத்தியக்காரத்தனம் நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது!”
அலையலையாக மழை விசையோடு பொழியத் தொடங்க, வானில் இடி இடிக்கவும் ஆரம்பித்தது. வெளியேயிருந்து பாதங்கள் விரைந்தோடி உள்ளே வந்தபோது விடுதி நுழைவாயிலில் இருந்த தார்ச்சாலை மின்விளக்குகளின் ஒளியால் பிரகாசமாக ஒளிர்ந்தது. காத்திருந்தவர்கள் அனைவரும் “கடவுளைத் தவிர வேறெந்தக் கடவுளுமில்லை!” என்றலறினார்கள், கடந்துபோன பாதசாரிகள் சிலர் முன்கூடத்தில் தஞ்சம் புகுந்தனர். மழையின் ஓயாத தாக்குதல்கள் சாளரங்களின் கண்ணாடிகளில் தொடர்ச்சியாக மோதி அவற்றைக் கிடுகிடுக்கச்செய்தன.
மேலாளர் தனது இடத்திலிருந்து எழுந்து நுழைவாயிலுக்குச் சென்றார், கருத்திருந்த வானத்தை நோக்கித் தனது முகத்தை உயர்த்திப் பார்த்தார். பிறகு அவர் கீழே குனிந்து மதகு போல சரிவான பாதையின் கற்களிடையே வழிந்தோடிய நீரையும் பார்த்தார். முதலில் மழை விசையோடு கீழே விழுந்தது, பிறகு அது சீறுகொண்டு மேலெழுந்தது, துரதிர்ஷ்டம் பீடித்த பூமியின் மீது ஓர் அதிதீவிரப் பிரளயமென வெடித்துச்சிதறியது.
“குறைந்தபட்சம் கடந்த ஒரு தலைமுறையில் இதுபோல மழை பெய்திருக்காது,” அவர் அறிவித்தார்.
தனது கடந்தகாலத்தை அகழ்ந்தெடுப்பவராக, தான் குழந்தைப்பருவத்தில் பார்த்த இதுபோன்ற வெள்ளத்தை அவர் நினைத்துக்கொண்டார். எவ்வாறு அனைத்துவகைப் போக்குவரத்தையும் அது தடுத்து நிறுத்தியதென்பதை, குறுக்குச்சந்துகளின் பாதைகளை எல்லாம் அடைத்ததோடு எப்படி அறைகளை மொத்தமாக – உடன் அதற்குள் இருந்தவர்களை – ஒழுகும் கூரைகளுக்குக் கீழே புதைத்ததென்பதையும், அவர் நினைவுகூர்ந்தார். பிறகு மீண்டும் தனது மேசைக்குத் திரும்பிச்சென்றார், விடுதியின் பதிவேடுகள் மற்றும் வரவுசெலவு குறித்த வேலையைச் செய்யும் முனைப்போடு, ஆனால் அத்துடன் கூரை மற்றும் அறைகளின் மீதான கண்காணிப்பை அதிகரிக்கும்படி அவர் ஆணையிடவும் செய்தார். தலைமைச் சிற்றாளை அழைத்து வரச்சொல்லி அவர் வினவினார், “அறை எண் பனிரெண்டு குறித்தத் தகவல் என்ன?”
“பாட்டும் சிரிப்பும் நிற்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை,” என்றார் அம்மனிதர், தனது உதடுகளைச் சுளித்தபடி. “அங்கிருப்பவர்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது!”
குருட்டு சையத் என்கிற வெட்டியான் கூடத்தின் கதவினருகே தென்பட்டான்.
”உன்னுடைய இடத்துக்குத் திரும்பிப்போ!” மேலாளர் கிறீச்சிட்டார்.
இறைஞ்சுவதுபோல அம்மனிதன் தனது கைகளை உயர்த்தினான், மேலாளர் மீண்டும் ஒருமுறை அவன் மீது எரிந்து விழுந்தார், “இன்னொரு வார்த்தை பேசாதே!”
வெடுகுண்டுகளைப்போல இடி கைகளைத்தட்ட மிகப்பெரிய மழை பிரகாசமானத் தீவிரத்தோடு நடைபாதைகளில் பொழிந்தது. வலுவூட்டிய கற்காரையைக் கொண்டு அந்தப் பழங்கால விடுதி கட்டப்படவில்லை என்பதை மேலாளர் நினைவுகூர்ந்தார் – கூடவே, மேலும் பல இன்னல்கள் வரவிருப்பதை அன்றைய இரவு கட்டியம் கூறியது.
மற்றொரு சிற்றாள் அவரிடம் சொன்னான், “கூரை ஒழுகுவது பற்றியும் தண்ணீர் உள்நுழைவது குறித்தும் அறை எண் பனிரெண்டில் இருந்து புகார்கள் வந்துள்ளன.”
“எனில் அவர்கள் சிரிப்பதையும் பாடுவதையும் நிறுத்திவிட்டார்கள் என்கிறாயா?” என மேலாளர் வினவினார், எரிச்சலோடு. “என்றால் அனைவரும் இப்போதே அறையை விட்டு வெளியேறிப் போகட்டும்!”
“ஆனால் அவர்களால் அது முடியாது!” சிற்றாள் அதனை மறுத்தான்,
மேலாளர் மீண்டும் அவன் சொன்னதைக் கண்டுகொள்ளாமல் தலைமைச் சிற்றாளை அழைத்தார், அவனுடைய பணியாளன் என்ன சொல்கிறானென்பதை விசாரித்தார். “அத்தனை அறைகளும் ஒழுகுகின்றன, எனவே கூரையில் உள்ள ஓட்டைகளை எல்லாம் மணற்மூட்டைகளைக் கொண்டு அடைக்கும்படி அத்தனை பணியாட்களையும் முடுக்கிவிட்டிருக்கிறேன்.”
“அத்துடன் அறை எண் பனிரெண்டின் நிலை?”

நகீப் மெஹ்பூஃஸ்
(1911-2006)
எகிப்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரான நகீப் மெஹ்பூஃஸ் 1988-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர். 1911-ஆம் ஆண்டு கெய்ரோவில் பிறந்த மெஹ்பூஃஸ் பதினேழு வயதில் எழுதத் தொடங்கியவர். எழுபதாண்டு கால இலக்கிய வாழ்வில் 35 நாவல்கள், 350-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 7 நாடகங்கள், 26 திரைக்கதை ஆக்கங்கள் மற்றும் செய்தித்தாள்களுக்கான எண்ணற்ற பத்திகள் என எகிப்திய நவீன இலக்கியத்துக்கு நகீப் மெஹ்பூஃஸ் ஆற்றியுள்ள கொடை அளப்பரியது. அவருடைய கதைகள் அனேகமும் யதார்த்தத்தளத்தில் நிகழ்ந்தாலும் இருத்தலியல் சிக்கல்களையும் உள்ளடக்கியவை. இருபதாம் நூற்றாண்டில் எகிப்தில் நிகழ்ந்த முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் எந்தச் சமரசமுமின்றி தனது எழுத்துகளில் அவர் பதிவுசெய்திருக்கிறார். பொதுவுடமைவாதம், ஒருபாலினச் சேர்க்கை, கடவுள் சார்ந்த கோட்பாடுகள் என எகிப்தில் அவருடைய எழுத்துகள் அரசியல்ரீதியாக நிறைய விவாதங்களை உருவாக்கின. 1994-இல் மெஹ்பூஸைக் கொல்வதற்கான முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு மரணம் வரைக்கும் நகீப் மெஹ்பூஃஸ் காவல்துறை பாதுகாப்போடுதான் வாழ்ந்தார். The Cairo Trilogy மற்றும் Children of Gebelawi அவருடைய முக்கியமான நாவல்களாகும்.