கள்ளத்தனங்கள்
திறக்கும் இடம்

பின்னாடி தோட்டத்து
கொய்யாப் பழத்தை
அப்பத்தா இங்கிருந்தே
கொரடு போட்டுப் பறிப்பாள்
ரோட்டில் அடிபட்டுக் கிடந்த நாய்க்குட்டியை
நானும் தங்கையும்
உரலுக்கு அருகில் பதுக்கித்தான்
சில நாள் காப்பாற்றினோம்
துவைக்கிற கல்லில் அமர்ந்துதான்
தாத்தா சிகரெட் குடிப்பார்
பின்னங்கதவின் மாற்றுச் சாவி
அம்மாவிடம் உண்டு
அப்பா குடித்துவிட்டு வரும்போதும்
அண்ணன் ரெண்டாம் ஆட்டம் முடிந்து வரும்போதும்
காசு கேட்டு மாமன் வரும்போதும்
அந்தக் கதவு திறக்கும்
பிறகு திறக்கவே திறக்காததுபோல
துருவேறிய பூட்டால் மூடிக்கொள்ளும்
கண்ணாடி பதித்த மதில்வழியாகத்தான்
பதிமூன்று கோழிக்குஞ்சுகளை
சாம்பல் பூனை தூக்கிப்போனது

வாசலில் தலைபின்னிக்கொள்ளும்
பக்கத்து வீட்டு அக்கா
அடிக்கடி குளிக்கப்போனதும்
பின்வாசலில் ஈருளியை செருகியதும்
ஒருநாள் ஊர்ப்பஞ்சாயத்தில்
விவகாரமாகி தொங்கவிடப்பட்டது
பாத்திரத்தை தட்டிவிட்ட சப்தத்தால்தான்
அந்தப் பாம்பு சிக்கிச் செத்தது
கொல்லைப்புறங்களுக்குத் தனி
வாசலும் உண்டு
வீதியும் உண்டென
ஆந்தை ஒரு நாள் அலறியபோது
உலகம் அறிந்தது

வாசல்கள் பூட்டப்பட்ட வீடுகளில்
கொல்லைப்புறங்கள் திறந்துகொள்கின்றன
எல்லா கள்ளத்தனங்களும்
கொல்லைப்புறத்திலிருந்துதான்
துவங்குகின்றன


வாழ்வதற்கு

எனக்கு வாழவே பிடிக்கவில்லை
சீக்கிரமே சாகவேண்டும் என்றவளின்
சாவதற்கான காரணங்கள்

ஆசையாய் சாப்பிடப்போனபோது
சிக்கன் ரைஸ் கிடைக்கவில்லையென
தற்கொலை செய்துகொண்ட அக்கா
அன்றாடம் கனவில் வருகிறாள்

அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளையை
அம்மா அப்படியே விட்டுவிட்டாள்

வீட்டு வேலைகள் செய்யச்சொல்லும்
மாமாவின் கொடுமை தாங்கவில்லை

அக்காவின் தற்கொலைக் கடிதத்தில்
இவள் போட்ட கையெழுத்தைப் பார்த்த ஊமைப் பூனையின் குட்டிக்கு
அம்மா அக்காவின் பெயரை வைத்திருக்கிறாள்.

vijayakumarklk96@gmail.com