பாராகவனின் மத்திய அரசு மாமனார் ஒரு நாள் அவன் வீட்டுக்கு வந்தார். தன் மகளை அவனுக்குக் கட்டிக் கொடுக்கலாம் என்று முடிவு செய்வதற்கு முன்பு ஒருவேளை அவர் பாராகவனின் உத்தியோகம், சம்பளம் உள்ளிட்ட லெளகீக விவகாரங்களைக் குறித்துச் சிந்தித்திருக்கலாம். ஆனால் திருமணம் நடந்த பின்னர் அவனது யோக்கியதை சார்ந்த சிறு ஐயம் கூட அவருக்கு எந்நாளும் எழுந்ததில்லை அல்லது அவனது யோக்கியதை என்னவென்று தெளிவாக அவர் அறிந்திருக்கலாம். கட்டிக் கொடுத்தாயிற்று. அதற்குமேல் என்ன செய்ய முடியும்?

அவரைப் போல அவனொரு மத்திய அரசு ஊழியனல்லன். ஒரு சுமாரான மாநில அரசு சம்பளம் மற்றும் பின்னாள் பென்ஷன் வாங்கக் கூடியவனா என்றால் அதுவுமில்லை. சரி ஒழிகிறது; கலைஞனாகப் போய்த் தொலைந்துவிட்டான்; மாநில அரசு வருடத்துக்கு நானூறு பேருக்கு நிறுத்துக் கொடுக்கும் கலைமாமணி உள்ளிட்ட விருது முடிப்புகளுள் ஒன்றேனும் அவனுக்குக் கிடைத்திருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது.

என்னமோ சீரியலுக்கு எழுதுகிறேன், கதை எழுதுகிறேன், உலக இலக்கியம் படைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிற ஜந்து. இதெல்லாம் எப்படி உருப்படும்? மகளின் விதி சரியாக இருந்தால் இருக்கிற காலம் வரை சோற்றுக்குச் சிக்கலின்றி இருந்துவிட்டுப் போய்விடட்டும். அதுவும் பிரச்னை என்றால் பழியைத் தூக்கிக் குழியில் போட்டுவிட்டுப் பையை எடுத்துக்கொண்டு போக வேண்டியதுதான்.

தன்னைக் குறித்த தனது மத்திய அரசு மாமனாரின் மதிப்பீட்டுக் குறிப்புகள் இவ்வாறாகத்தான் இருக்க முடியும் என்று பாராகவன் நினைத்திருந்தான். ஆனால், அவனைக் காணவந்த அம்மனிதர் சற்றும் எதிர்பாராதவிதமாக நான்கு குயர் வெள்ளைத் தாள்களையும் இரண்டு புதிய ரெனால்ட்ஸ் பேனாக்களையும் எடுத்து நீட்டினார்.

‘நோபல் ப்ரைஸுக்கு நாவல் எழுதப் போறிங்களாமே? வாழ்த்துக் கள். புடிங்க. இதுல ஆரம்பிங்க. ஜோரா வரும்.’

அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உண்மையில் சில வினாடிகள் திகைத்துப் போனான். சுதாரித்துக்கொண்டு ஏதாவது பேச்சை மாற்றிப் பார்க்கலாம் என்று முடிவு செய்து வாய் திறப்பதற்குள், ‘என்னிக்கு மாப்ள லாஸ்ட் டேட்டு?’ என்றது மத்திய அரசு.

‘எதுக்கு?’

‘அதான் அந்த நோபலுக்கு.’

மீண்டும் திடுக்கிட்டவன் இம்முறை பேச்சை மாற்றக்கூட வழியில்லை என்பதைக் கண்டுகொண்டு அமைதியாக இருக்க ஆரம்பித்தான்.

‘இல்ல, எதுக்கு சொல்றேன்னா லாஸ்ட் மினிட் வரைக்கும் தள்ளிப் போட்டுக்கிட்டிருக்காம ஒரு நாலஞ்சு நாள் முன்னாடியே அனுப்பிருங்க. கூரியரையெல்லாம் நம்ப வேணாம். என்கிட்ட குடுங்க. நான் அனுப்பிடுறேன். ரிஜிஸ்டர் போஸ்ட் வித் அக்னாலட்ஜ்மெண்ட் ட்யூ. பக்காவா போய் சேந்துரும்.’

இதோடு இலக்கிய உரையாடல் நிறைவடைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாமனாரானவர் அடுத்த அணு குண்டைக் கையில் எடுத்தார்.

‘ஏன் மாப்ள, உங்கள மாதிரி எத்தன பேர் இதுக்கு அப்ளை பண்ணுவாங்க?’

‘தெர்ல. இருக்கும் ஒரு நாப்பது அம்பது பேர்.’

‘லிஸ்டுல சுஜாதா இருக்காரா? அந்தாளு நல்லா எழுதுவாரு.’

‘ஓ. படிச்சிருக்கிங்களா?’

‘இல்ல. சொல்லுவாங்க.’

‘நீங்க யாரெல்லாம் படிச்சிருக்கிங்க?’

‘லேனா தமிழ்வாணன் செமையா எழுதுவாரு. ஆனா சிவல்புரி சிங்காரம்தான் நம்ம பேவரிட்டு.’

‘ஓஹோ.’

‘ஆனா நீங்க எழுதுங்க மாப்ள. நோபலுக்கு அனுப்பறதுக்குள்ளாரவே படிச்சிடுறேன்.’

பாராகவன் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு நான்கு குயர் பேப்பரையும் இரண்டு ரெனால்ட்ஸ் பேனாக்களையும் வாங்கி உள்ளே வைத்தான். ‘காபி சாப்பிடுறிங்களா?’ என்று கேட்டான்.

‘இருக்கட்டும் மாப்ள. அத விடுங்க. நீங்க என்ன எழுதப் போறிங்க? எதோ கதைன்னு அவ சொன்னா. லவ் ஸ்டோரியா? க்ரைம் கதையா? எதுக்கு கேக்கறேன்னா, லவ்வெல்லாம் அவுட் டேட்டட் இப்ப. கொல கதையா இருக்கணும். இல்லன்னா துரோக மேட்டரா இருக்கணும். பரபரன்னு ஓடணும். எங்க ஆபீசுல ஏசி ஒருத்தரு சூசைட் பண்ணிக்கிட்டாரு. ரீசன் என்னான்னா, அவரு சம்சாரத்துக்கு இன்னொரு தொடர்பு இருந்திருக்குது. அந்தப் பன்னாடையும் இவரும் சின்ன வயசுல ஒண்ணா ஒரே பொண்ண லவ் பண்ணியிருக்காங்க. அவ கல்யாணம் கட்டிக்கிட்டுப் போனப்பறம்தான் இந்தாளு எக்சாம் எழுதி வேலைக்கு சேந்திருக்காரு. இவரு ஸ்டெப் எடுத்துத்தான் அந்தாளுக்கு சென்னைல போஸ்ட்டிங் வாங்கிக் குடுத்ததே. அவன் என்னடான்னா இவரு சம்சாரத்தையே லவட்டிக்கிட்டுப் பூட்டான். அவமானம் தாங்காம ஆளு செத்துட்டான்.’

‘இது எதுக்கு எனக்கு?’

‘இல்ல, நாட்டு நல்லாருக்குமே, யூஸ் ஆவுமேன்னு நெனச்சேன்.’

இந்த ரகமான உயர் இலக்கிய உரையாடல் சுமார் முக்கால் மணி நேரம் இருவருக்கும் நடைபெற்றது. இறுதியில் புறப்படும்போது மத்திய அரசு மாமனார், ‘நாவல் என்ன ஒரு ராணிமுத்து சைசுக்கு வருமா? பேப்பர் தீந்துருச்சின்னா சொல்லுங்க. நான் வாங்கிட்டு வரேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

அன்றைக்கு மறு நாள் பாராகவனின் பத்தினித் தெய்வம் மீண்டும் அதை நினைவுபடுத்தினாள். நாளைத் தள்ளிப் போட்டுக்கொண்டு போவதில் என்ன இருக்கிறது? நீங்கள் நாவலை ஆரம்பித்துவிடுங்கள். அதற்கு முன்னால் கதைச் சுருக்கத்தைச் சொல்லிவிடுவது நல்லது.

அவன் அப்போது வேறெதையோ சொல்லி சமாளித்துவிட்டு அவசர வேலையாக வெளியேறி டீக்கடைக்குச் சென்று அரை மணி நேரம் செலவழித்துவிட்டுத் திரும்பி வந்தான். இப்போது எட்டாம் நம்பர் வீட்டு அங்கிளாண்டிகள் இருவரும் அவன் வீட்டுக்கு வந்து, அவன் பெறப் போகிற நோபல் பரிசுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, ‘நாவல் எழுதறபடி எழுதுங்க. அப்டியே ஒரு காபி நம்ம சங்கருக்கு அனுப்பி படிச்சி பாக்க சொல்லுங்க.’

‘யாரு சங்கரு?’

‘அதான் சார் சினிமா டைரக்டரு. முதல்வன் எடுத்தாரே.’

‘அவர் உங்க ரிலேடிவா?’

‘சேச்சே. தெரியும். அவ்ளதான்.’

‘ஓ, பழக்கம் உண்டா?’

‘இல்லிங்க சார். படம் பாத்திருக்கேன். பேரு தெரியும். டேலண்ட் உள்ள ஆளு. அவர் மூலமா உங்க நாவல் சினிமா ஆச்சின்னா இன்னும் கெத்துதான?’

ஊர் உலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டிய எதையுமே மூச்சு விடாமல் அடைகாக்கும் தனது மனைவி இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஏன் வம்படியாக ஒவ்வொருவராகத் தேடிப் போய்ச் சொல்லிவிட்டு வருகிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை. அவளது நடவடிக்கையில் கேலிக்கோ கிண்டலுக்கோ இடம் இருப்பதாகவும் அவனுக்குத் தோன்றவில்லை. உண்மையிலேயே அவனது முயற்சிக்குத் தனது உளமார்ந்த ஆதரவைத் தெரிவிக்கவே அவள் விரும்பினாள். இது அவனுக்குப் புரிந்தது.

எட்டாம் நம்பர் அங்கிள் அன்றைக்கு அவனுக்கு இரண்டு ஜெகச்சிற்பியன் நாவல்களின் கதைச் சுருக்கத்தைச் சொல்லி (அவர் படித்தது), அவரிடம் இருந்த கலைமாமணி விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி என்கிற நாவலின் பிரதியையும் கொடுத்துவிட்டுச் சென்றார். ‘இப்டி எழுதுங்க சார். கண்டிசனா லாட்ரி அடிச்சிரும்’ என்கிற முத்தாய்ப்பு வேறு.

கதைச் சுருக்கம் சொல்வதற்குத் தயாராகும் பொருட்டு வெளியே சென்று வருவதாகச் சொல்லிவிட்டுப் பாராகவன் மெரினா கடற்கரைக்குச் சென்றான். வாழ்க்கை அவனுக்கு இரண்டு அருமையான வாய்ப்புகளைத் தந்திருந்தது. முதலாவது, மனைவியிடம் கதைச் சுருக்கம் சொல்லி ஓகே வாங்கி நாவலை எழுதிவிடுவது அல்லது நெடுநாள்களாகத் தற்கொலை கேஸ்களையே காணாத மெரினாவுக்கு அந்த வாய்ப்பைத் தந்துவிடுவது.

அவனுக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அவனது இலக்கிய எதிரிகளுள் ஒருவனான ஹாருகி முரகாமி ஒரு நாள் தன் வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் இருந்த ஏரிக் கரையோரம் அமர்ந்து (தொப்பி போட்டுக்கொண்டு) மீன் பிடித்துக்கொண்டிருந்தான். நெடு நேரம் ஆகியும் மீன் எதுவும் சிக்கியபாடில்லை. சலித்துப் போய், தூண்டிலைப் போட்டுவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தான். வழியில் தென்பட்டதொரு சாராயக் கடையில் நுழைந்து கொஞ்சம் குடித்தான். பிறகு வீட்டுக்கு வந்து மனைவியிடம், ‘இன்று எனக்கு எந்த மீனும் சிக்கவில்லை’ என்று சொன்னான்.
அவள் புன்னகை செய்தாள். கையைப் பிடித்து அவனை அழைத்துச் சென்று உணவு மேசையில் அமர வைத்து, ருசி மிகுந்த சால்மன் மீன் சேர்த்த உணவைப் பரிமாறி சாப்பிட வைத்தாள். சாப்பிட்டு முடித்து அவன் எழுந்திருக்கும்போது அவன் புறங்கையில் முத்தமிட்டு, ‘அன்பே, உங்களுக்குத் தெரியாதா? இன்று சிக்காத மீன்கள்தாம் நாளைய பொழுதுக்கான உறுதிப்பாட்டைத் தருகின்றன’ என்று சொன்னாள்.

அந்தக் கணத்தில் அவன் மனத்தில் ஒரு பெரிய நாவலுக்கான கரு உதித்தது. உடனே ஓடிச் சென்று உட்கார்ந்து எழுதத் தொடங்கினான். Kafka on the Shore பிறகு உலகப் புகழ் பெற்றது.

அசந்தர்ப்பமாகப் பாராகவனுக்கு இது நினைவுக்கு வந்து நெஞ்சை அடைத்தது. தமிழ்ச் சூழலில் ஒரு கலைஞனாகக் குப்பை கொட்டுவது சிரமமான காரியம் என்பது அவனுக்குத் தெரியும். உண்மையிலேயே அவன் ஓர் உலகத்தரமான நாவலை எழுதினாலும் அது ஐம்பது பிரதிகளுக்கு அப்பால் செல்லுபடியாகுமா என்கிற சந்தேகம் இருந்தது. உலகம் ஒரு திக்கிலும் தமிழ்ச் சூழல் இன்னொரு திக்கிலும் சுற்றிச் சுழல்வது இன்று நேற்று நிகழ்வதல்ல. மீறி சில அற்புதங்கள் நிகழாமல் இல்லை. நிகழாத சிலவற்றை அற்புதமாக முன்னிறுத்தும் முயற்சிகளும் நடக்காமல் இல்லை. அரசியல், சினிமா, கலை-இலக்கியம் எல்லாம் ஒன்றுதான். எட்டாம் நம்பர் அங்கிளாண்டி சொன்ன லாட்டரி யாருக்கு விழும் என்பதில் உள்ளது எல்லாமே.

சிறு வயதில் சில காலம் அவனும் வண்ணமயமான லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிப் பார்த்திருக்கிறான். ஒரு லட்சம். இரண்டு லட்சம். அதற்கு மேல் கிடையாது. அதிகப் பரிசு தரக்கூடிய லாட்டரி டிக்கெட்டுகளின் விலையும் அதிகமாகவே இருக்கும். அவன் அதிகபட்சம் ஒரு ரூபாய்க்கு மிகாத லாட்டரி டிக்கெட்டுகளையே எப்போதும் வாங்குவான். ஏழெட்டு நூறு ரூபாய்கள் அதில் செலவாகியிருக்கலாம். அவனது சீட்டுகள் என்றும் பரிசு வென்றதில்லை. கவனமாக அதை உணர்ந்துகொண்டு அதிலிருந்து வெளியே வந்ததுதான் தனது சிறப்பு என்று எப்போதும் நினைப்பான்.

கோட்டைகளைக் கட்டுவது அல்லது கோட்டைகளை வெல்வது. இரண்டில் ஒன்றை விரும்பாத யாரும் இருக்க முடியாது. விருப்பத்தின் பின்னால் செல்ல வாழ்க்கை அனுமதிக்கிறதா என்பதுதான் கேள்வி.

கடமையைச் செய், பலனை நினைக்காதே என்று எல்லாவற்றையும் அடைந்து அல்லது கடந்துவிட்டவன் சொல்வதும் பணத்தால் நிம்மதியை வாங்க முடியாது என்று பணக்காரன் சொல்வதும் ஒன்றுதான். கேலண்டரில் பொன்மொழியாக எழுதி வைக்கத் தகுந்தவை. பின்பற்ற லாயக்கற்றவை. விளைவைத் தராத ஒரு சிறு செயலும்கூட சிக்கலுக்குரியதே ஆகும். கழிப்பறையில் ஏற்படும் மலச் சிக்கலும் சிறிது மருந்து செலவு வைக்கும்.

உலகத் தரத்தில் ஒரு நாவல். அதற்கென்ன. எழுதினால் போயிற்று. நோபல், புக்கரெல்லாம் எங்கே போய்விடப் போகிறது? வாழும் காலத்துக்குள் ஒரு பெரும் செயலைச் செய்து முடித்துவிட முடிந்தால் போதுமானது. அவசரமில்லை. பதற்றம் தேவையுமில்லை. நிதானமாகச் செய்ய வேண்டும். யாருக்கும் கதைச் சுருக்கம் சொல்லி அப்ரூவல் வாங்க வேண்டிய கட்டாயமில்லாத ஒரு காலம் வராமல் போய்விடாது. ஆனால் அதுவரை வாழத்தான் வேண்டும்.

நெடுநேரம் அவன் கடற்கரை மணலில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தான். மாலை நகர்ந்து இரவாகிப் போனது. காதலர்களும் வீடு திரும்ப எழுந்துவிட்டார்கள். இனி என்ன. போலீஸ் வரும். விசில் ஊதிக்கொண்டே வந்து, எழுந்திருக்கச் சொல்வார்கள். கடற்கரையில் நெடுநேரம் இருப்பவர்கள் எல்லோருமே தற்கொலை செய்துகொள்ளத்தான் விரும்புவார்கள் என்று யாரோ நினைத்திருக்க வேண்டும். அதை வீட்டுக்குப் போய்ச் செய்துகொள்வதுதான் அவர்களுக்கு வசதி.

பாராகவனும் வீட்டுக்குக் கிளம்பினான்.

அவனுக்காகக் காத்திருந்த அவன் மனைவி, ‘சாப்பிட வாங்க’ என்று சொன்னாள்.

‘எனக்கு ஒண்ணு தோணுது. சொல்லவா?’

‘நாளைக்குத் தேதி ஆறு. ஹவுஸ் ரெண்ட் தரணும். கரண்ட் பில் கட்டணும். க்ரெடிட் கார்ட் பில் கட்டணும். பால்காரன், பேப்பர்காரன் செட்டில் பண்ணிட்டேன். மளிகை லிஸ்ட் எழுதி வெச்சிருக்கேன். நீங்க போய் குடுத்துட்டு வரிங்களா, இல்ல நானே போகவா?’

அவன் சிறிது நேரம் பேசாதிருந்தான். பிறகு, ‘சொந்தமா ஒரு பத்திரிகை ஆரம்பிக்கலாம்னு பாக்கறேன். நீ என்ன சொல்ற?’ என்று கேட்டான்.

(முற்றும்)
para@bukpet.com