காளிதாஸ் திரைப்பட விளம்பரம் ஒன்று அண்மையில் கிடைத்தது. ஆங்கில நாளேடு ஒன்றில் அரைப்பக்கத்தை நிரப்பிக் கொண்டிருந்தது. உரிமைச் சிக்கல் எதுவும் எழுமோ என்ற ஐயத்தில், நாளேடு பற்றிய விவரங்களும் நகலும் பகிரவில்லை.அதில் அளிக்கப்பட்டுள்ள விவரங்களை மட்டும் பகிர முடிகிறது. சமகால ஆவணம் என்பதால் முக்கியமானதாகிறது. மேலும், 90 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவரையில் வெளிவராத குறத்தி நடனக் காட்சியும், சில விவரங்களும் இக் கட்டுரையின் மூலம் வெளியாகி சில தெளிவுகளுக்கும், கணிப்புகளுக்கும் வழி விடுகிறது.

காளிதாஸ் படத்தில் ராஜலக்ஷ்மி

காளிதாஸ் படம் பற்றிய விரிவான ஓர் ஆய்வுப் பார்வையுடன் முன்னமே ஒரு கட்டுரையை (உயிர்மை-ஜனவரி,2022) பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில முன்னேற்றங்களைக் கொண்டது இந்தக் கட்டுரை.

சுதேசமித்திரன் இதழில் வந்த காளிதாஸ் பட விமர்சனம், மற்றும் விளம்பரத்தில் கொரத்தி (குறத்தி) நடனம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலில் அதைப் பற்றி பார்ப்போம்.

-நாடக மேடைகளில் இவள் பாட்டுக்களில் சிறந்ததாகிய தியாகராஜ சுருதிகளான ‘எந்தரா… நீதானா…’ … ’சுரராக ஸுதா’ என்றவிரு பாடல்களையும் ஹரிகாம்போதி, சங்கராபரணம் முதலிய ராகங்களில் கேட்கலாம். ‘இந்தியர்கள் நம்மவர்களுக்குள்’ என்ற பாடலையும் நல்ல குரலுடன் பாடுகிறாள். வார்த்தைகள் தெளிவாக இருப்பது படத்தின் மேன்மையை அதிகரிக்கிறது. மிஸ்.ஜான்சிபாயும் மிஸ்டர் ஆர்.டி.யும் செய்த கொரத்தி நடனமும் இதில் அடங்கியிருக்கிறது.அவசியம் காணத்தகுந்தது-

காளிதாஸ் பாட்டு புத்தகத்தில் கதைச்சுருக்கம் தமிழிலும்,ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் அச்சடிக்கப்பட்டுள்ளது. தமிழில் படத்தின் தலைப்பு காளிதாஸா’ என்றே காணப்படுகிறது. காளிதாஸ் என ஒரே தலைப்பில் சொல்லப்பட்டிருப்பினும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற 3 தனித்தனியான துண்டுப் படங்களாலானது. 3 படங்களுக்கும் இருந்த ஒரே தொடர்பாக டி.பி.ராஜலக்ஷ்மியை உறுதியாகச் சொல்லலாம். 3+2+4=9 ரீல்கள் கொண்டது. 3 படங்களும் சேர்ந்து ஓடுவதற்கு தோராயமாக 1.30 மணி நேரம் ஆகும்.

பாட்டுப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, முதல் 3 ரீல்கள் கொண்ட படம் தேசியப் பாடல்கள், காதல் பாடல்கள், கீர்த்தனம் ஆகியவை அடங்கியது (காதல் பாடல்கள் என்று குறிப்பிடாமல் ’அன்பிற்கினிய பாட்டு’ என்று தமிழில் குறிப்பிட்டுள்ளனர் என்பதை கல்கி விமர்சனத்தின் மூலம் அறியலாம்). நாட்டுப்பற்று கொண்ட பாடல்கள் மேடைகளில் புகழ் பெற்றவை. அதன் தொடர்ச்சியாகவும், அன்றிருந்த சூழலில் அரசியல் எழுச்சியூட்டும் விதமாகவும் சினிமாவிலும் நாட்டுப்பற்று கொண்ட பாடல்கள் இடம்பெற்றதைத் தொடர்ச்சியாகப் பார்க்கமுடிகிறது.

சுதேசமித்திரன் குறிப்பிலுள்ளபடி ராஜலக்ஷ்மி குரலில் 3 பாடல்கள் இத் துண்டுப் படத்தில் அடங்கிவிடுகிறது. காளிதாஸ் பாட்டுப் புத்தகத்தில் பாடல்களைப் பாடியவர்கள், கதாபாத்திரங்கள், எழுதியவர் என்ற விவரங்கள் இல்லை. ’ஆதியில் நமது அவ்வை …’ எனத் தொடங்கி ‘ராஜலக்ஷ்மியைக் காண்பீரே’ என்று முடியும் முதல் பாடல் அறிமுகப்பாடல் என்பதால் முதல் படத்திலேயே இடம் பெற்றிருக்கும். அப்போதெல்லாம் படத்தைப் பற்றியும், தயாரிப்பு நிறுவனத்தைப் பற்றியும் முதல் பாடலில் அறிமுகப்படுத்துவதை வழக்கமாகவே காணலாம். நாடகமேடையின் தொடர்ச்சியாக வந்த கலாச்சாரம் இது.

பாட்டுப் புத்தகத்தில் மிஸ்.ஜான்சிபாயும், ஆர்.டி.யும் செய்த கொரத்தி நடனம் என்று குறிப்பிட்டு, அதன்கீழ் ’ராட்டினமாம் காந்தி கை பாணமாம்’ என்று இருக்கிறது. ஆனால், ’ராட்டினமாம் காந்தி கைபாணமாம்’ என்ற பாடலை, டி.பி.ராஜலக்ஷ்மி பாடி நடித்ததை கல்கி உறுதிப்படுத்துகிறார்.
2 ஆவது துண்டுப்படமாக பாட்டுப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படம் 2 ரீல்களைக் கொண்டது என்றும், ராஜலக்ஷ்மி மேடைகளில் வெற்றிகரமாக நிகழ்த்திய குறத்தி நடனம் என்றும் குறிப்புள்ளது.அந்த நடனத்திற்குப் பாடல் இடம்பெற்றிக்க வேண்டும் அல்லவா? எனில் எந்தப் பாடல்..? பாட்டுப் புத்தகத்தில் நடனம் என்றே தலைப்பிட்டுக் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரே பாடல்தான் ”மன்மத பாணமடா / மார் உருவி பாயுதடா/ உன்னை நினைந்து மனம் உருகியே வாடுறேண்டா/ கன்னல் விழியானென கம்பீர புருஷனடா/ என்னைக் கட்டிச் சேரண்டா /என் கண்ணாளா/என் காதலைத் தீரடா/…’’ . இந்தப் பாடல் அந்தக் காலத்தில் ஹிட் ஆனது என்று குண்டூசி கோபால் எழுதியுள்ளார்.

படத்தில் குறத்தி பாடுவதுபோன்ற மொழி நடையில் உள்ள பாடலாகவும் இது இருக்கிறது. ராஜலக்ஷ்மி ஆடிய குறத்தி நடனத்திற்கான பாடல் இதுவென்றே கணிக்க முடிகிறது. 6 பாடல்களுக்கான விளக்கம் எட்டியாகிவிட்டது. எனினும், 2 ரீல் என்பது ஏறத்தாழ 20 நிமிடங்கள் ஓடும். இவ்வளவு சிறிய பாடல் ஒன்று மட்டும்தானா?

எஞ்சும் மற்ற 2 பாடல்களுமே காதல் பாடல்கள். ’மாரா ஓ மதனா மதி நேர் வதனா’ …மற்றும் ’மாலைப்பொழுது வந்ததே’ …என்று தொடங்கும் பாடல்கள். எனவே ஆடல் பாடல்கள் முதலிரண்டு துண்டுப்படங்களில் இடம்பெற்றன எனக் கொள்வோம். கல்கியும் ‘பாட்டு, தேசியப் பாட்டு, அன்பிற்கினிய பாட்டு, நடனம் முதலியவை முடிந்த பிறகு நாடகம் (கதைப்படம்) ஆரம்பமாயிற்று’ என்றுதான் சொல்லியிருக்கிறார். இவையிரண்டும்தான் காளிதாஸ் படத்திற்கு முன்னுறை (முன்னுரை) போலும்!

காளிதாஸ் படத்தொகுப்பின் 8 பாடல்களும் பெண் கதாபாத்திரம் மட்டுமே பாடும் பாடல்களாக இருக்கிறது. அனைத்துப் பாடல்களையும் பாடியவர் ராஜலக்ஷ்மி மட்டுமே என்பது புலனாகிறது. ராஜலக்ஷ்மியின் புகழையும், திறனையுமே இந்தச் சோதனை முயற்சியான பேசும்படத்தில் பெரிதும் பயன்படுத்தியுள்ளனர். அதனால்தான், ராஜலக்ஷ்மியின் பெயரைத் தவிர மற்ற எவரும் அவரளவுக்கு முன் நிறுத்தப்படவும், அறியப்படவுமில்லை.

எஞ்சியுள்ளது 4 ரீல்கள் கொண்ட இன்னொரு துண்டுப்படம். ஏறத்தாழ 40 நிமிடங்கள் ஓடும். அதுதான் ’காளிதாஸ்’ எனும் கதைப்படம். ’வசன ஒலிப்பதிவை பரீட்சிப்பதற்காகவே காளிதாஸ் கதை எடுத்துக் கொள்ளப்பட்டது’ என்கிறார் குண்டூசி கோபால். ஆயினும்,ஆலம் ஆராவிலேயே இந்தச் சோதனை நடந்தேறிவிட்டதே! எனினும், இக் கூற்று காளிதாஸ் கதைப்படத்தில் பாடல்கள் இடம்பெறவில்லை எனும் கணிப்புக்கு வழிவகுக்கிறது.

கதைப்படம் உருவாக்கும் நோக்கில், நாடக உலகில் புகழ்பெற்றிருந்த காளிதாஸ் எடுத்தாளப்பட்டது. காளிதாஸின் வாழ்வில் நகைச்சுவையான பகுதியும், காதல்பகுதியும் கொண்டது. அதாவது, நுனிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டுவதும், அவனுக்கு அரசகுமாரி மனைவியாவதும், பின்னர் அசட்டு இடையன் காளிமாதா அருளால் காளிதாஸ் ஆவதும் என்பதோடு முடிகிறது. ஆனால், காளிதாஸ் கதை இன்னும் விரிவானது. அது பின்னர் தமிழிலேயே 2 முறை திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளது. ’நாடகத்தில் பேச்செல்லாம் தெலுங்கில் நடந்தது. ஆனால்,இடையிடையே அம்மாள் பாடிய பாட்டுகளெல்லாம் தமிழ்’ என்கிறார், கல்கி. ஒட்டு மொத்தமாக 3 படங்களையும் சேர்த்து நாடகம் என்கிறாரா? காளிதாஸ் கதைப்படத்தை மட்டும் நாடகம் என்கிறாரா? தெரியவில்லை.எப்படியாயினும் எல்லாப் பாடல்களையும் பாடியவர் ராஜலக்ஷ்மி என்று மட்டும் துணிந்து சொல்லமுடியும்.

மேற்கண்ட 3 துண்டுப்படங்கள் இம்பீரியல் மூவிடோன் தயாரிப்பில் உருவானவை. அர்தேஷிர் இரானியின் நிறுவனம். இவையல்லாமல் மேலும் ஒரு துண்டுப்படம் இணைத்துக் காட்டப்பட்டுள்ளது புலனாகிறது. அதுவே, ஜான்சிபாயும், ஆர்.டி.யும் செய்த குறத்தி நடனம். இது, சாகர் மூவிடோன் தயாரிப்பு. இம்பீரியல் மூவிடோனைப் போலவே மும்பையில் இயங்கிய இன்னொரு படப்பிடிப்பு நிறுவனம், சாகர். இரண்டிலுமே அர்தேஷிர் இரானிக்கு பங்கிருந்தது.

தியடோர் பாஸ்கரன் தந்துள்ள குறிப்பின்படி, ஜான்சிபாய் என்ற பெண் நடித்த ’குறத்திப் பாட்டும் டான்ஸும்’ என்ற படம் 1931-இல் தமிழில் முதல் பேசும்படமாகத் தயாரிக்கப்பட்டது என்று உள்ளது. ஒலி வந்தவுடன் ஆடல் பாடல்களையே முதலில் முயற்சி செய்தனர். காளிதாஸுக்கும் முன்பே படமாக்கப்பட்ட இந்த ஒலிப்படம் காளிதாஸுக்கும் முன்பே எங்காவது திரையிடப்பட்டதா என்பது தெரியவில்லை. காளிதாஸ் படத்துடன் இணைத்துக் காட்டப்பட்டதே முதன்முறை என்றானால், வெளியீட்டு அடிப்படையில் சமகாலத் தன்மை கொண்டதாகிவிடுகிறது.

இந்த ஜான்சிபாய், ஆர்.டி. ஆகியோர் எவரென இதுவரையிலும் தெரியவில்லை. சுதேசமித்திரன் குறிப்பின்படி ஜான்சிபாய், ராஜலக்ஷ்மி அல்ல என்பது புலனாகிறது. மௌனப்படக் காலங்களில் நடித்த வட இந்திய நடிகைகள் ஏராளமானவர்களைப் பற்றிய குறிப்புகளும், புகைப்படங்களும் கிடைக்கின்றன. எனினும், ஜான்சிபாய் பற்றி கிடைக்கவில்லை. அதுபோலவேதான், மிஸ்டர் ஆர்.டி. அவர்களும்.

ஆயினும், ஹாடி என்ற நடிகர் ஒருவரை அந்தக் காலகட்டங்களில் பார்க்க முடிகிறது. இம்பீரியல் மூவிடோன் நிறுவனத்தின் படங்கள் உட்பட துவக்கக் கால இந்தி பேசும் படங்களில் ஹாடி (HADI என்கிற S.M.HADI) பெயரை நிறையக் காணமுடிகிறது. துணைக் கதாபாத்திரங்களில் நடித்த அவரைத்தான் சுதேசமித்திரன் ஆர்.டி. என்று குறிப்பிட்டுவிட்டதோ என்று யோசிக்க வேண்டியதாகிறது. சுதேசமித்திரன் விளம்பரத்தில் பிழைகள் உள்ளதற்கு எடுத்துக்காட்டு உண்டு. ’பாதே (PATHE) என்கிற செய்திப்பட தயாரிப்பு நிறுவனத்தின் கெஸட் காட்சிகள்’ என்பதை, ’பாதி கெஸட் காட்சிகள்’ என்று குறிப்பிட்டுள்ளது சுதேசமித்திரன்.

’நாடகமேடையில் புகழ்பெற்ற ராஜலக்ஷ்மி, முதன்முதலாக சினிமாவில் தோன்றுவதைக் காணலாம்’ என்று சுதேசமித்திரன் சொல்லியிருக்கிறது. ஆயினும், கோவலன் உள்ளிட்ட மௌனப்படங்களில் டி.பி.ராஜலக்ஷ்மி முன்பே நடித்தவர். கல்கி விமர்சனக் குறிப்பின்படி காளிதாஸ் கதைப்படத்திற்குப் பிறகு குறத்தி நடனம் காட்டப்பட்டுள்ளது. அவர் கூற்றின்படி குறவன் குண்டாக இருந்தவர். ஹாடியும் குண்டானவர் என்பது ஒத்துப் போகிறது.

மேற்சொன்னவை நான்கோடும் சேர்த்து, பாதே (PATHE- ஏ.கே.செட்டியார் உச்சரிக்கிறபடி) நிறுவன செய்திப் படமும் காண்பிக்கப்பட்டது. மௌனப்படக் காலங்களிலிருந்தே ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களை ஒரே காட்சியாக வெளியிடுவதும், கூடவே செய்திப்படங்கள் வெளியிடுவதும் வழக்கமாயிருந்தது.

ஆங்கில நாளேட்டில் கிடைத்துள்ள புதிய தகவல்கள் சிலவற்றைப் பார்ப்போம்.-’சென்னையிலிருந்து நேரடியாக கொண்டுவரப்பட்டது’- என்று 16.12.1931-இல் அறிவிப்பு உள்ளது. தீபாவளிக் கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் கினிமா சென்ட்ரல் திரையரங்கில் ஒரு வாரம் மட்டுமே என்று அறிவிக்கப்பட்டு 31.10.1931 அன்று வெளியிடப்பட்டட காளிதாஸ் மேலும் நீட்டிக்கப்பட்டதா? எத்தனை பிரதிகள் அச்சிட்டனர் போன்ற விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. கினிமா சென்ட்ரல் திரையரங்கின் ஆகக்கூடிய இருக்கைகளின் எண்ணிக்கை 650. ஒரு நாளைக்கு 2,3 காட்சிகள் என ஒரு வாரத்தில் எத்தனை பேர் பார்த்திருக்க முடியும் என்பதைக் கற்பனை செய்துகொள்ளலாம். மில்லியன் கணக்கில் பார்த்தனர் என்று வேறொரு விளம்பரத்தில் காணமுடிகிறது. அவை மிகைப்படுத்தப்பட்டவை என்றும், விளம்பரங்களில் காணப்படும் தகவல்களை எந்தளவுக்கு நம்பலாம் என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டு. 1928-ஆம் ஆண்டுவரை கினிமா சென்ட்ரல் திரையரங்கில் மிக அதிக நாட்கள் ஓடிய படங்கள் என்பது 2 வாரங்கள்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பேசும்படங்களின் வருகைக்குப் பிறகும் ஓரிரண்டு வாரங்கள் மட்டுமே ஓடியதுதான் சாதனையாகவும் இருந்தது.1932இல் ஏப்ரல் மாதத்தில் கினிமா சென்ட்ரல் திரையரங்கில் வெளியான ‘ராஜா ஹரிச்சந்திரா’ 4 வாரங்கள் ஓடியது.

கோயம்புத்தூரில் காளிதாஸ் திரையிடப்பட்டதை குண்டூசி கோபால் இளமைக்கால நினைவாக உறுதிப்படுத்துகிறார். ஆனால், அவர் படம் பார்த்ததாக உணரமுடியவில்லை. அப்போது, பேசும்பட வசதி கொண்ட திரையரங்கு கோவையில் இருந்ததும் உறுதியாகத் தெரிந்ததே. பேசும்பட வசதி கொண்ட நகரும் கொட்டகைகள் ஒருசில அன்றே பயன்படுத்தப்பட்டன. அதன் மூலம் காளிதாஸ் வேறு எங்காவது திரையிடப்பட்டதா எனத் தெரியவில்லை.

விளம்பரத்தில் இடம்பெற்ற இன்னும் சில வாசகங்கள்…

– மின்சார யுகத்திற்கான இந்தியாவின் பெருமைக்குரிய கொடை-
– மூவிடோன் மூலம் துல்லியமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு சொல்லும் மணியாய் ஒலிக்கும்-
– தமிழ் பேச்சு-தமிழ் பாட்டு- தமிழ் இசை-
– டிசம்பர் 17 முதல் 20 வரை- நான்கு நாட்கள் மட்டும்-
– மாலை 6.15 மணி, இரவு 9.15 காட்சிகள்.-
– சனிக்கிழமை (19 அன்று மட்டும் ) பகல் காட்சி 3.15-
– 19 சனிக்கிழமை அன்று திரையிடப்படும் பகல்காட்சிக்குக் குழந்தைகளுடன் வரவும். அன்று, குழந்தைகளுக்கு குறைந்த விலை டிக்கெட்-
– ஹிட் பாடல்களைத் தமிழில் கேளுங்கள். சிறப்பான நாடகத்தைக் காணுங்கள். அதுவொரு அருமையான விருந்து.-
– கலாபூர்வமான நடனங்கள் தமிழில் இசையுடன் மகிழ்விக்கக் கூடியவை.-
– சோதனை முயற்சியல்ல- ஒரு அசலான, கலாபூர்வமான முழு நீளத் தயாரிப்பு. தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்டது. இந்தியரல்லாத யாருடைய உதவியும் பெறப்படாதது. இந்தியர்களையே அனைத்து நடிகர்களாகவும் கொண்டது.-

மேற்காணும் வாசகத்திலிருந்து சிலவற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆயினும், தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்டது என்ற குறிப்பு தவறானது.

விளம்பரத்தில் கதாநாயகன் பெயர் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் என்ற சிறப்புடன் குறிப்பிடபட்டுள்ளது. அவருடைய பெயர் வி.ஆர். கங்காதர், பி.ஏ. என்றிருக்கிறது. கங்காளராவ் எம்.ஏ. என்று கல்கி எழுதி, அதுவே
இப்போதுவரையிலும் அறியப்பட்டுள்ளது. ராஜலக்ஷ்மியின் பெயரை ராணிலக்ஷ்மி என்றுதான் கல்கி எழுதியிருக்கிறார். அன்றே புகழ் பெற்றவராகச் சொல்லப்பட்ட ராஜலக்ஷ்மியை அதற்கு முன்பு வரை தெரியாது என்றும் கல்கி குறிப்பிட்டுள்ளார். எனவே, கதைநாயகன்
பெயரை கல்கி தவறாக எழுதியிருக்கலாம். படக் காட்சிகளுடனும், அனைத்துப் பாடல்களும், அச்சிட்ட 12 பக்க சிறிய புத்தகம் இலவசமாக வினியோகிக்கப்பட்டுள்ளது. இந்தியா, சிலோன் க்ளப்களுக்கும், அசோசியேஷன்களுக்கும் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது.

பாட்டு மற்றும் படக்காட்சிகள் கொண்ட அந்த 12 பக்க சிறிய புத்தகமே, தற்போது புழங்கி வரும் பாட்டுப் புத்தகம் என்றே கணிக்க முடிகிறது. 12 பக்கங்கள் கொண்டதான காளிதாஸ் பாட்டுப் புத்தகத்தின் முகப்புப் பக்கத்தில், கினிமா சென்ட்ரல் விவரம் வெளியீட்டுத்ஹ் தேதியுடன் அச்சாகியிருக்கிறது. உள்ளே, சென்னையைச் சேர்ந்த ஒரு துணிக்கடையின் விளம்பரம் இரண்டரை பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இது பாட்டுப் புத்தகங்களின் வழக்கமான வடிவம் அல்ல. விளம்பரத்திற்காக வினியோகிக்கப்பட்டதான 12 பக்க சிறு நூலில், உள்ள வெற்றுப் பக்கங்களில் அந்தந்தப் பகுதியினர் விளம்பரம் செய்து கொள்வதற்கான ஒரு ஏற்பாடு. மேலும், தென்னிந்திய மொழிகளில் முதல் சினிமா பாட்டுப் புத்தகம் இது என்பதால், முன்மாதிரிகள் இல்லை. நாடகம், கிராமஃபோன் பாடல்கள் அச்சிட்ட நூல்களை முன்மாதிரியாக்க் கொள்ளவேண்டும். சினிமா ஹெரால்ட்களையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். மௌனப்படக் காலத்திலிருந்தே புழக்கத்தில் இருந்தவை ஹெரால்டுகள்.

காளிதாஸ் அழிந்துவிட்ட படங்களின் பட்டியலில் சேர்ந்து கொண்ட பிறகு, அந் நாளில் படத்தைப் பார்த்தவர்கள் எவருமே இன்று இல்லாத நிலையில், ஆவணங்களே உதவியாகி வழிகாட்டக்கூடியவை. அச்சு மற்றும் ஒலி ஆவணமாக ஏதாவது மேலும் கிடைத்தால் மேலும் முன் நகர முடியும்.

’தி இந்து’ ஆங்கில நாளேடுகளில் காளிதாஸ் மற்றும் அடுத்தடுத்த படங்களுக்கான விளம்பரங்களும், படக்காட்சிகளும் வெளியானது உறுதியாகியிருக்கிறது. ஆனந்த விகடன் இதழ் மூலமாகவும் கூடுதல் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்து, ஆனந்த விகடன் ஆவணக் களஞ்சியத்தை ஆர்வமும், வாய்ப்பும் உள்ளவர்கள் அணுகலாம். மற்றவை போல் தமிழ் சினிமா வரலாறும் துல்லியமாகும்.

என்னுடைய அணுகுமுறையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகளையும்,கணிப்புகளையும் பகிர்வதன் இன்னொரு நோக்கம், மற்றவர்களின் அணுகுமுறைகளையும் கண்டுபிடிப்புகளையும் சேர்க்க வேண்டும் என்பது. எனவே, கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

’கொரத்தி நடனம்’, ’முன்னுறை’ என்று அன்றைய எழுத்து நடைமுறையைக் காட்டுவதற்காக அவ்வாறே எழுதப்பட்டிருக்கிறது.

நன்றி
1. மனிதன் எப்படி உயர்கிறான்- கல்கி – வானதி பதிப்பகம்
2. காளிதாஸ்- பாட்டுப் புத்தகம்
3. எம் தமிழர் செய்த படம்- தியடோர் பாஸ்கரன்- உயிர்மை பதிப்பகம்
4. சினிமா வந்த கதையும்,பிரபல வழக்குகளும்- குண்டூசி பி.ஆர்.எஸ். கோபால்- விஜயா பப்ளிகேஷன்ஸ்.
5. பெ.வேல்முருகன், 6.அகிலா விஜயகுமார்

muthuvelsa@gmail.com