நூற்றுக்கும் மேற்பட்ட உலகப் பட விழாக்களில் கொண்டாடப்பட்ட சினிமா. முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற சினிமா. அதுவும் தமிழ் சினிமா எனும்போது, என் போன்ற சினிமா ஆட்களுக்குப் புல்லரிக்காமல் இல்லை. ஆனால் பல சமயங்களில் ஒரிரு விழாக்களில் பங்கு பெற்ற டாக்குமெண்டரித்தனமான படங்களையும் இதேபோல உலக சினிமா என்று கொண்டாடியவர்களை நினைக்கும் போது லேசாய் பதற்றம் கூட வந்துவிட்டது. ஒன்றிரண்டுக்கே கழுத்தில் கத்தியை வைத்து ஒத்துக்க இது உலக சினிமா, தலித் சினிமா என்று மிரட்டாத குறையாய், குழு அமைத்து மூளைச் சலவை செய்து கொண்டிருக்கிற காலத்தில், ஒரு வேளை நமக்குப் பிடிக்காமல் போய் படத்தைப்  பற்றி மாறுபட்ட கருத்தைச் சொன்னால் எங்கே நம்மை உலக சினிமா அரங்கிலிருந்து தூக்கி விடுவார்களோ என்கிற பதற்றத்தோடு, பயமும் சேர்ந்து கொண்டது.

இணையம் வந்த பிறகு ஜாதி அதிகமாகிவிட்டது என்று சொன்னால் ‘இப்ப எல்லாம் யாரு ஜாதி பாக்குறா?’ என்று கேட்பார்கள். ஆனால் உண்மையில் ஜாதி பார்த்து படம் பார்க்க, ப்ரோமோட் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மனம் பதைக்கிறது. எங்கே ஜாதி அதிகமாய் பார்க்கப்படாமல் இருந்ததோ அங்கே ஜாதி வெறி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் வந்த மனுஷங்கடா எனும் படம். தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் பிணத்தை பொது வழியில் தூக்கிப் போக அனுமதிக்காத ஜாதி வெறியைப் பற்றி பேசியபடம். ஆனால் அதைப் பற்றி எந்த தலித் அமைப்போ, தலித் ஆதரவாளர்களோ பேசவேயில்லை, மிகச் சிலரைத் தவிர. காரணம் அப்படத்தை இயக்கியவர் அவர்கள் ஜாதி இல்லை என்பதால். ஒரு படம் அதன் தரம் குறித்து வேண்டுமானாலும் விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் ஜாதி பார்த்துத்தான் கொடி பிடிப்போம் என்ற எண்ணம் நல்ல சினிமாவை அழிக்கத் தொடங்கிவிடும்.

நல்ல வேளை செழியனின் ‘டுலெட்’ இந்த மாதிரியான எந்தவிதமான ஜாதி கந்தாயங்களிலும் அடைபடாத  சுதந்திரப்படமாய் அமைந்ததே முதல் வெற்றி. ஒரு சில படங்கள் பார்த்த மாத்திரத்தில் பெரிதாய் பாதிக்காது. மெல்ல வீடு திரும்பும் போது நம்மை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கும். நாம் வாழ்ந்த வாழ்க்கையை அசை போட வைக்கும். அப்படியான அசைபோடல் சமயங்களில் துக்கத்தைப் பெருக்கி தொண்டை அடைக்கும். சமயங்களில் லேசாய் ஓர் விதிர்த்த புன்னகை செய்ய வைக்கும். பல சமயங்களில் எதுவும் பேசப் பிடிக்காமல் அழுத்தமாய் நம்மை உட்கார வைக்கும். டுலெட் அப்படியான பல உணர்வுகளை நமக்கு கடத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

படம் நெடுகில் எங்கேயும் வறுமை துருத்திக் கொண்டு நிற்கவில்லை. உதவி இயக்குனன் என்றால் சோத்துக்குப் பஞ்சமாய் இருப்பான் என்று காட்டப்படவில்லை. அவனுக்கு உதவ யாருமில்லாமல் சமூகம் நிர்க்கதியாய் நிற்க வைத்து வேடிக்கைப் பார்க்கும் என்று காட்டப்படவில்லை. இங்கே அவனுக்கு குடும்பம் நடத்துமளவுக்கு வேலை இருக்கிறது. நம்பிக்கை கொடுக்கக்கூடிய அளவிலான வாழ்க்கை இருக்கிறது. புரிந்து கொள்ளக் கூடிய மனைவி இருக்கிறாள். அருமையான குழந்தை என டிபிக்கல் மிடில் க்ளாஸுக்கு ஏறத் தயாராக இருக்கும் ஒருவனின் வாழ்க்கையில், அதுவும் வாடகை வீட்டு வாழ்க்கையை கண் முன்னே காட்டுகிறார் இயக்குனர்.

புருஷன் பொண்டாட்டி ஊடல், கூடல், மகனின் மீதான பாசம். வேலை விஷயமாய் கிடைக்கும் நம்பிக்கை என பல விஷயங்களைத் தாண்டி வீடு பார்த்தே ஆக வேண்டும் என்கிற நிலை வரும் போது இதே சமூகம் அவனை எப்படியெல்லாம் சத்தாய்க்கிறது என்பதையும், அது அவன் இயல்பு வாழ்க்கையை எத்தனை கலைத்துப் போட்டு, எத்தனை கேள்விகளை அவன் முன் மட்டுமில்லாமல், பார்க்கும் நம் முன்னும் வைக்கிறது என்பதை இப்படம் மூலம் நாம் உணர முடியும்.

நினைத்திருந்தால் சோகத்தைப் பிழிந்து ரொமாண்டிசைஸ் செய்திருக்கலாம். ஆனால் அதை மிகத் திறமையாய் கையாண்டிருக்கிறார் இயக்குனர். முக்கியமாய் இசை பற்றி புத்தகம் எழுதியவர் இசையே இல்லாமல் படமெடுத்திருப்பதும். அதை உணராத வண்ணம் சவுண்ட் டிசைன் செய்திருப்பதும் அடிபொலி.

படம் பார்த்த நண்பர்கள் சில பேர் அவனுக்கு என்ன பிரச்சனை? அந்த வீட்டுலேர்ந்து ஏன் காலி பண்ணச் சொன்னாங்க? அவனுக்குத் தான் வீடு கிடைச்சிருச்சு? வேலை இருக்கு? அட்வான்ஸ் பணம் கூட கிடைக்குது அப்புறம் என்ன பிரச்சனை? என்று கேட்கிறார்கள்.

வீட்டு ஓனரைப் பற்றி ஆரம்பத்திலேயே ஒரு வசனம் வரும். அதிலிருக்கிறது அந்த அம்மாவின் கேரக்டர். எனவே காரணம் தேவையில்லை. அப்படித் தேவை என்றால் உங்களுக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். நாலாயிரம் வாடகைக்கே என்னைப் பிடி உன்னைப் பிடி என்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதை விட மாதம் 1000 ரூபாய் அதிகம் செலவு செய்தாக வேண்டும் என்றால் நிச்சயம் கண் முழி புதுங்கத்தான் செய்யும், அதுவும் இக்கதை நாயகன் போன்ற நிலையில்லாத வேலையில் இருப்பவர்களுக்கு. தன் குடும்பத்திற்கு ஏற்ற வீடு, தன் வசதி வாய்ப்புக்குள் தேடுவது என்பதில் ஆரம்பித்து, வீடு பார்க்கப் போகும் விஷயம், வீட்டு ஓனர்களின் அதிகாரம், நடவடிக்கை, கேள்விகள், கட்டளைகள், கோட்பாடுகள் என ஒரு சாதாரணனை எத்தனை வதைக்கிறது என்பதை இப்படம் மிக அழகாய் சொல்லியிருக்கிறது.

அவன் பொண்டாட்டி ஏன் வீட்டு ஓனர் அம்மா வரும் போதெல்லாம் ஒடுங்கிப் போய் நிக்குறா? வீடு வாடகைக்குப் பார்க்க ஆள் வந்தா என்ன? நினைச்சு நினைச்சு எமோஷனல் ஆவுறா? எதுக்கு? என்று கேட்டவர்களும் உண்டு. புழங்குற வீட்டுல வெளி ஆட்கள் நுழைந்தால் எப்படி ஒரு ஆண் பீல் பண்ணுவாங்கிறத விட பெண் எப்படி உணர்வாள் என்பதைப் புரிந்து கொள்ள அவள் பார்வை வேண்டும். அவள் ஒடுங்கி நிற்கிறாள் என்றால் அந்த வீட்டு ஓனரின் நிஜ முகம் தெரிந்தவள். தன் நிலை இப்படியாகி இவளிடம் எல்லாம் நிற்க வேண்டியிருக்கிறதே என்கிற மன அழுத்தம் அவளை இன்செக்யூராக்குகிறது. அவ ஏன் நினைச்சு நினைச்சு பேசுறா என்று கேட்பவர்கள், மனைவி என்பவரை சரியாய் புரிந்து கொள்ளாதவர்களாகவோ அல்லது கேர்ள் ப்ரெண்டு கூட வாய்க்கப் பெறாதவர்களாகவோத்தான் இருப்பார்கள். அதுதான் பெண்கள். முரண்டு, முயங்கி, இளகித்தான் இருப்பாள். அவள் ஆளுமையுள்ள இடத்தில் அவள் உரிமையை வெளிக்காட்டிக் கொண்டுதானிருப்பாள். அவள் அப்படித்தான்.

படம் நெடுகப் பேசும் ஜாதி, வர்க்க, பொருளாதார அரசியல் நிறைய. ஆனால் உறுத்தாமல், போதிக்காமல் நம்மை உணரச் செய்து கடந்து போகிறது. இக்கதையில் பெரிய திருப்பங்கள் இல்லைதான். முதலில் இது கதையே அல்ல. வாழ்க்கை. வாழ்க்கையில் எப்போதோ ஒரு முறைதான் திருப்பங்கள் வருகிறது. வந்தபின் நம்மைப் புரட்டிப் போட்டு, உச்சாணியிலோ, அல்லது மலையடிவாரத்திலோ தள்ளுகிறது. அதன் பிறகு நடப்பதெல்லாம் ட்விஸ்ட் டர்ன் இல்லாத வாழ்க்கைதான்.

‘‘வீட்ட வாடகைக்கு விட்ட போது பார்த்தது. அதுக்கு அப்புறம் மாசாமாசம் ஆன்லைன்ல பணம் வந்திரும். ஏதாச்சும் பிரச்சனைன்னா மெயில் அல்லது போன். தட்ஸால், இதப் போலத்தான் நான் வீட்டை வாடகைக்கு விட்டிருக்கேன். ஒரு ப்ராப்ளம் இல்லை. ஆனால் இங்கே படத்துல எல்லாத்தையும் பெருசு படுத்தி காட்டியிருக்காங்க.” என்றார். அவர் இந்த சொகுசு லௌகீக வாடகை வாங்கும் வாழ்க்கைக்கு பழகக் காரணம்தான் இப்படமே என்பது அவருக்குப் புரியவில்லை. புரியவும் புரியாது.

அதே நேரத்தில் வாடகைக்கு வீட்டை விட்டு விட்டு நொந்து நூலாகிப் போன வீட்டு ஓனர்களைப் பற்றியும், அதகளம் செய்யும் வாடகை ஆட்களைப் பற்றியும்  படமெடுத்தால் இதைவிட சுவாரஸ்ய கதைகள் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இது ஒரு பக்கத்தினரின் கதை. பெரும்பாலர்களின் கதை.

குறையேயில்லாத படமா? என்றால் நிச்சயம் இருக்கிறது. ஆனால் அப்படிக் குறையே இல்லாத படம் வெளிவந்துவிட்டால் அதுதானே உலகின் கடைசிப் படமாய் இருக்க வேண்டும். டுலெட் நிஜமான  உலக  தமிழ் சினிமாக்களுக்கான மிகச் சிறந்த ஆரம்பம்.