அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கின்றன. மோடியின் முதலாம் ஆட்சிக் காலத்தைவிட இரண்டாம் ஆட்சிக்காலம் குரூரத்தின் மொத்த வடிவாகத் திகழ்ந்துவருகிறது. மூன்று விதங்களில் இந்த பயங்கரம் பிரதானமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதலாவதாக, தனியார்மயமாக்கல் – பெரு முதலாளிகளின் கூட்டு ஆகியவற்றிற்காக நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரக் கட்டமைப்பையும் விலை கூறி விற்று வருவது. இரண்டாவதாக, சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களை இயற்றியும், வன்செயல்களை மறைமுகமாக ஊக்குவித்தும், அவர்களிடையே அச்சத்தையும் கலாச்சாரத் தனிமையும் உண்டாக்கி பெரும்பான்மை இந்துத்வா வாதத்திற்குத் தீனி போடுவது. மூன்றாவதாக, மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளில் ஈடுபட்டும், குதிரைபேரங்கள் மூலம் எதிர்க்கட்சிகளை சிதைத்தும், மாநிலங்களுடைய உரிமைகளைப் பறித்தும், ஆளுநர்களைக் கொண்டு போட்டி அரசாங்கம் நடத்தியும் முற்றாக இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தை சிதைப்பது.

இவற்றின் மூலமாக 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் அடித்து தகர்க்கப்பட்டு வருகின்றன. நீதித் துறை, நாடாளுமன்றம், புலனாய்வு அமைப்புகள், கல்வி அமைப்புகள் என அனைத்தும் இன்று ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கருத்தியலுக்குள்ளும் சித்தாந்தத்திற்குள்ளும் கொண்டுவரப்படுகிறன. அவர்கள் விரும்பிய ஒற்றை இந்தியா என்பது பாசிசத்தின் வழியே இன்று எல்லாத் திசைகளிலும் கட்டி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கான கடைசி வாய்ப்பாக வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலே இருக்கப்போகிறது. ஒருவேளை இதுவே கடைசி நம்பிக்கையாகவும், கடைசிப் போராட்டமுமாகவும் இருந்துவிடலாம். மோடி மீண்டும் வெல்லக் கூடும் என்ற அச்சம் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவருடைய மனதிலும் இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் தவிர பா.ஜ.க. வை சித்தாந்தரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வலுவாக எதிர்க்க வேண்டிய மாநில கட்சிகளும் தேசியக் கட்சிகளும் இன்னும் தங்களுக்குள் முரண்பட்டு நிற்கின்றன அல்லது தம்மளவிலான போராட்டங்களோடு தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலை ரத்த ருசியுடன் பா.ஜ.க. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் சிதறுவதன் மூலமே தனது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்கிறது. 2019 – ல் அது தான் நடந்தது. அது இன்னொருமுறை நடந்தால் நாடு பேரழிவை நோக்கிச் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், இந்த எதிர்க்கட்சிகளை இணைக்கப்போவது யார் ? எதிர்காலம் குறித்த அச்சமும் , நம்பிக்கையும்தான் அந்த இணைப்பு புள்ளி. தெற்கே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக பா.ஜ.க. அல்லாத மாநிலத் தலைவர்களை இணைப்பதற்குப் பெரும் முயற்சி எடுத்து வருகிறார். அரசியல் களத்தில் மட்டுமல்ல, சிந்தாந்த ரீதியாகவும் பாசிச, மதவாத சக்திகளுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு மகா கூட்டணியை அமைக்க போராடிக்கொண்டிருக்கிறார்.

வடக்கில் சமீபத்தில் பா.ஜ.க.வோடு உறவை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார் இன்னொரு முனையில் இந்தக் கூட்டணி முயற்சிகளை எடுத்துக்கொண்டு வருகிறார். ஆனால், மாநிலங்களில் தேசியக் கட்சிகளுக்கு இடையே இருக்கும் முரண்பாடுகளும், மாநிலக் கட்சிகளுக்கும் தேசியக் கட்சிகளுக்கு இடையே இருக்கும் முரண்களும் முட்டுக்கட்டைகளை உருவாக்குகின்றன. ஒருமித்த அணியொன்றை உருவாக்குவதில் ஆங்காங்கே மனத்தடைகளும் அரசியல் நலன்களும் செயல்படுகின்றன. எனினும், முக்கியமான கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை அமைப்பது மோடி வெல்லப்படக் கூடியவரே என்னும் தார்மீக நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கும்.

ஒருவேளை சில மாநிலங்களில் அத்தகைய கூட்டணிகள் அமையாமல் போனால்கூட, பா.ஜ.க. அல்லாத வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடிய வகையில் எதிர்க்கட்சிகள் விட்டுக்கொடுக்கும் போக்குடன் தங்கள் போட்டிகளை அமைத்துக் கொள்வது முக்கியம். இதெல்லாம் நடந்து பா.ஜ.க. அல்லாத வேட்பாளர்கள் முந்நூறுக்கு மேற்பட்ட இடங்களில் வென்றால் நிச்சயமாக பா.ஜ.க. வீழ்த்தப்பட்டு ஒரு மாற்று அரசு அமையும். தேர்தலுக்குப் பிந்தைய மகா கூட்டணிகள் ஏற்கனவே நிகழ்ந்தவைதான்.

இந்த சூழலில்தான் ராகுல் காந்தி 150 நாட்களுக்கான தனது தேசிய நடைப்பயணத்தை துவங்கியிருக்கிறார். கன்னியாகுமரியில் தமிழக முதலமைச்சர் இந்தப் பயணத்தை துவங்கிவைத்தார். நிச்சயமாக இது நம்பிக்கையின் துவக்கம். காங்கிரஸ் ஆட்சிப்பரப்பு இரண்டே மாநிலங்களாக சுருங்கியிருக்கும் சூழலில் காங்கிரஸிற்குப் புத்துணர்ச்சியூட்டவும், பிற கட்சிகளுடனான உறவை வலுப்படுத்தவும் இந்தப் பயணம் வலுப்படும். காங்கிரஸ் அல்லாத மூன்றாம் அணி வென்றாலும் அது நீடித்திருப்பது கடினம் என்பதைக் கடந்தகால அனுபவங்கள் நமக்குத் தொடர்ந்து நிரூபித்துவந்திருக்கின்றன. இந்தச் சூழலில் காங்கிரஸ் வலிமை பெறுவதும் அதன் ஒருங்கிணைந்த தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பதும் மிக அவசியம்.

ராகுல் காந்தியின் பயணத்தை பா.ஜ.க. பதற்றத்துடன் எதிர்கொள்வதனைப் பார்க்க முடிகிறது. தொடர்ந்து இந்தப் பயணத்தைக் கேலி செய்யவும், கொச்சைப்படுத்தவும் முயற்சி செய்கிறார்கள். கோவா போன்ற இடங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி காங்கிரஸை மேலும் பலவீனமாக சித்தரிக்க பா.ஜ.க. முயல்கிறது. காங்கிரஸைப் பொறுத்தவரைக்கும் மோடிக்கு நிகராக தேசிய அளவில் அறியப்பட்ட ஒரே தலைவர் அவர்தான்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் மிகக் குறைவான இடங்களைப் பெற்ற போதிலும் பா.ஜ.க. விற்கு அடுத்து சுமார் 20 சதவிகித வாக்கு வங்கிகளைக் கொண்டிருக்கும் கட்சி காங்கிரஸ் தான். அந்த வகையில் அது வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதில் மிக நிர்ணயமான பங்கை வகிக்கும். மாநிலக் கட்சிகள், இடதுசாரிகள் காங்கிரஸைத் தேசிய அளவில் ஒரு இணைப்புகண்ணியாகப் பார்ப்பது அவசியம். காங்கிரஸூம் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களின் அழுத்தத்தைத் தாண்டி தேசிய அளவில் மாநிலக் கட்சிகளோடு இயன்ற அளவில் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் தன்னை ஒரு வலுவான கட்சியாக மறுகட்டமைப்பு செய்துகொள்ள முடியும். காங்கிரஸ் இல்லாமல் பா.ஜ.க. வை வீழ்த்துவதென்பது ஒரு அர்த்தமற்ற கனவு. அத்தகைய முயற்சியில் ஈடுபடுகிறவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு மக்களையும் ஏமாற்றுகிற செயலாகவும் அமையும். மேலும் அதுவே மோடிக்கு உதவுகிற பணியாகவும் இருக்கும்.

பா.ஜ.க. தேர்தல் வரும் ஆண்டுகளில் அயோத்தியில் ராமர் கோயிலைத் திறந்து இந்துந்துவா பெரும்பான்மை வாக்கு வங்கி அறுவடை செய்யக் காத்திருக்கிறது. வேறுசில இந்துத்வா ரகசிய தேசபக்த திட்டங்களோ பிளவுவாத உணர்ச்சிக் கொந்தளிப்புகளைத் தூண்டுகிற சதிகளோ இருக்கலாம். சென்ற தேர்தலில் புல்வாமா தாக்குதல் எப்படி ஒட்டுமொத்த தேர்தல் களத்தையும் ஒரே நாளில் தலைகீழாக்கியதைப் பார்த்தோம். இந்தியாவில் ஊடகங்களின் துணையோடும் சமூக வலைதளக் கட்டமைப்பை பயன்படுத்தி வெகு எளிதாக எந்த உணர்ச்சிக் கொந்தளிப்பையும் கட்டமைக்கலாம். வட இந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்குமான மிகப்பெரிய வித்தியாசம் இது. வட இந்தியா நம்பிக்கைகளின்மேல் வாழ்கிறது. சாதி, மத, தேசபக்த அறைகூவல்களின் முன் தன் முன்னுள்ள உண்மையான பிரச்சனைகளை மறந்து போகிறது. மோடி அங்கே நாட்டின் பிரதமர் அல்ல. ஒரு அரசன். இந்து மதத்தைக் காக்க வந்த கடவுள். எல்லையில் நின்று போரிடும் ராணுவவீரன். இந்த பிம்பங்களின் வழியாகத்தான் வட இந்தியாவை மோடி வெல்கிறார். மோடியின் கவர்ச்சியென்பது அவருடைய தனிப்பட்ட ஆளுமையினால் அல்ல, இந்த மாயபிம்பங்களினாலே கட்டப்படுகிறது. அரசியல் விழிப்புணர்வு அற்ற மக்களிடம் இந்த மாயபிம்பம் எளிதில் சென்று சேருகின்றன.

இந்த பிம்பங்களினால் பா.ஜ.க. ஒரு இந்துத்துவா வாக்கு வங்கியொன்றை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த வாக்கு வங்கி வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் 30 சதவிகிதம் இருக்கலாம். ஆனால், இதை வைத்துக்கொண்டு பா.ஜ.க. எப்படி இவ்வளவு மிருக பலத்தைப் பெறுகிறது. மோடியின் பிம்பத்தால் மட்டும் பா.ஜ.க. இத்தகைய வெற்றிகளைப் பெறவில்லை. சாதி அரசியலை திறமையாக அது பயன்படுத்துகிறது. சாதிய அணிச்சேர்க்கைகள் மற்றும் பிளவுகள் முக்கியமாக தலித் மற்றும் பிற்பட்ட சாதியினரைப் பின்புலமாகக் கொண்ட அரசியல் இயக்கங்களையும் பழங்குடியினரையும் தன்னைநோக்கி ஈர்ப்பதை தனது முக்கிய வழிமுறையாகக் கொண்டிருக்கிறது.

இன்னொருபுறம் எதிர்க்கட்சிகளை உடைப்பது, அச்சுறுத்தியோ அல்லது பணபலத்தாலோ அதன் உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, வலுவான கூட்டணிகள் அமையாமல் சிலவற்றைத் தனித்து நிற்கச் செய்வது, அதன் மூலமாக எதிர்ப்பு வாக்குகளை சிதறவைப்பது, இடையறாத பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிடுவதென சகல உக்திகளையும் அது பின்பற்றுகிறது. இதோடு சேர்ந்து பா.ஜ.க. வின் எல்லையற்ற பணபலமும், கார்ப்பரேட் ஆதரவும், ஊடக ஆதரவும் அதன் வலிமையைப் பல மடங்கு பெருக்கியிருக்கின்றன. இப்படி ஒரு கட்சியை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகளுக்கு விரிவான அணுகுமுறைகளும் புதிய உத்திகளும் தேவை.

இந்த முறை எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.விடம் நாட்டையிழந்தால் பல கட்சிகள் தங்கள் கட்சி அமைப்பையே இழக்க நேரிடலாம். நாட்டின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் ஜனநாயகத்தையும் மீட்க ராகுல் மேற்கொண்டிருக்கும் இந்தப் பயணம் ஜனநாயக சக்திகளுக்கும் மக்களுக்கும் உத்வேகம் அளிக்கவேண்டும் என்பதே நம் விருப்பம்.