முகிலன் எங்கே?

முகிலன் எங்கே

முகிலன் எங்கே என

திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்

தெரியாது எனப் புன்னகையுடன்

பதில் வருகிறது

அவர்களுக்குத் தெரியும் என்பது

எல்லோருக்கும் தெரியும்

இதற்கு முன்னும்

இப்படித்தான்

முன்பொருமுறை கேட்டிருக்கிறோம்

‘ராஜன் எங்கே

ராஜன் எங்கே’ யென

அந்தக் குரல்கள் ஒலித்தன

மாணவர் ராஜன்

பிறகு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த

ஒரு கதையாக

இருண்ட காலத்திலிருந்து எழுந்து வந்தான்

44 ஆண்டுகளில் உலகம்

எவ்வளவோ மாறிவிட்டது

ஆனால் உண்மையில் எதுவுமே மாறவில்லை

அதிகாரத்தின் வலைகளை

அறுத்தெறிய முயன்றவர்கள்

வனத்தில் எங்கோ

ரகசியப்பொறிகளால்

பிடிக்கப்பட்டார்கள்

பிறகு அவர்கள் வீடு திரும்புவதே இல்லை

இறுதியில்

ஏதாவது ஒரு புகைப்படம் கிடைக்கிறது

அல்லது யாரேனும் ஒருவரின் சாட்சியம்

காணாமல் போன மகன்களைத் தேடும் தந்தையர்கள்

காணாமல்போன தந்தையரைத் தேடும் மகன்கள்

அகதி முகாம்களில் சகோதரிகளைத் தேடும் சகோதரர்கள்

நவீன வரலாறு என்பது

காணாமல் போனவர்களைத் தேடும் வரலாறு

நம் காலத்தில் உண்மை தேடும் தத்துவங்கள் இல்லை

வெறுமனே காணாமல் போனவர்களைத் தேடுகிறோம்

போர்க்களங்களுக்குப் பிந்தைய சிதைந்த வீதிகளில்

இனப்படுகொலைகளுக்குப் பிந்தைய காலி மைதானங்களில்

கொடுங்கோன்மையின் மர்ம வழிகளில்

ஆயிரம் ஆயிரம் அன்னையர்

தம் காணாமல்போன மகன்களின் பதாகைகளுடன் கூடுகின்றனர்

“எங்கே?” என்ற குரல் ஆத்திரத்துடன் ஒலிக்கிறது

கண்ணீருடன் ஒலிக்கிறது

அச்சத்துடன் ஒலிக்கிறது

கொடுங்கனவுகளில் ஒலிக்கிறது அக்குரல்

முகிலன் எங்கே

என்று நமக்குத் தெரியாது

அரசாங்கமும் தனக்குத் தெரியாது

என்று சொல்கிறது

முகிலனுக்குக்கூடத் தெரியுமா என்று தெரியவில்லை

ஆனால்

முகிலனை அழைத்துச் சென்றவர்களுக்குத் தெரியும்

அவர் பேசுவதை விரும்பாதவர்களுக்குத் தெரியும்

நச்சுக்காற்றிற்கு எதிராகப் போராடியவர்கள்

முதலில் துப்பாக்கியால் குறிபார்த்து சுடப்பட்டார்கள்

அதற்குப்பிறகும் பேசுவதை நிறுத்தாதவர்கள்

காணாமல் போகிறார்கள்

மௌனத்தை உருவாக்க ஆயிரம் வழிகள்

காணாமல் போவது அதில் ஒரு வழி

முகிலன் எங்கே என்ற குரல்

நகரங்களைத்தாண்டி

சிறு நகரங்களையும்

கிராமங்களையும் நோக்கிச் செல்கிறது

முகிலனுக்கு இதெல்லாம் கேட்கிறதா

என்று மட்டுமே எங்களுக்குத் தெரியவேண்டும்

காணாமல்போனவர்களைத்

தேடுகிற முயற்சிகள் பெரும்பாலும்

நன்மையில் முடிவதே இல்லை

முகிலன் எங்கே போயிருப்பார்?

ஒரு ரயில் நிலையத்திலிருந்து வெளியேற

சாத்தியமுள்ள வழிகள் எத்தனை?

ஒருவர் காணாமல்போவதற்கான

வழிமுறைகள் எத்தனை?

முகிலன் ஒரு புதர் மறைவில்

வேட்டைக்கருவிகளுடன் மறைந்திருக்கிறாரா?

அல்லது

அவர் வேட்டையாடப்பட்ட ஒரு பறவையைப்போல

எங்கும் வீழ்ந்து கிடக்கிறாரா?

அரக்கர்களோடு போரிடும் எளிய மனிதர்கள்

எந்தத் தடயங்களும் இன்றி

எங்ஙனம் மறைகிறார்கள்

வெள்ளை வேன் இங்கும் வந்துவிட்டதா?

முகிலன் அதில்தான் அழைத்துச் செல்லப்பட்டாரா?

ஒரு மனிதன் காணாமல் போனதை

உடனடியாக மறந்துவிடுவதற்கு

நமக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன

ஆயிரம் பொழுதுபோக்குகள் இருக்கின்றன

ஆனால் மணலில் தொலைந்த ஒரு ஊசிபோல

முகிலன் இங்குதான் எங்கோ இருக்கிறார்

மணலில் இருக்கிறாரா

கடலின் ஆழத்திற்குச் சென்றுவிட்டாரா என்றுதான் பதட்டமாக உள்ளது.

 

சித்தார்த்தனின் தியானம்

சித்தார்த்தன்

போதி மரத்தில்

தூக்கிட்டுக்கொள்வதற்காக

சுருக்குக் கயிறை மாட்டிக்கொண்ட

கடைசி நிமிடத்தில்

கண்மூடி ஒரு கணம் தியானித்தான்

தனக்குள் ஒரு அற்புதம் நிகழ்ந்து

இந்த முடிவு மாறிவிடும் என்று

அவ்வளவு விரும்பினான்

போதிமரத்தில்

ஒரு இலைகூட அசையவில்லை

எங்கும் அப்படி ஒரு இருள்

 

சித்தார்த்தனின் புறப்பாடு

சித்தார்த்தன்

வீடு துறந்து வெளியேறவேண்டிய

பின்னிரவு வந்துவிட்டது

ஆனால்

இந்தக் காலம் வேறானது

வீட்டின் வெளிப்புறம் யாரோ

பூட்டிவிட்டுப் போய்விட்டார்கள்

மேலும்

சித்தார்த்தனுக்கு

எடுக்க வேண்டியதையெல்லாம்

எடுத்துகொண்டோமா என்று

குழப்பமாக இருக்கிறது

 

சித்தார்த்தனின் மனம்

சித்தார்த்தனைப் போல

இன்றிரவு நானும்

வீட்டை விட்டுப்போய்விடலாம்

என்று நினைக்கிறேன்

விட்டுச் செல்ல

சித்தார்த்தனைவிடவும்

எனக்கு ஒரு பெரிய ராஜ்ஜியமில்லை

ஆனால் அவனைவிட

ஒரு கனத்த மனம் இருக்கிறது

 

நிலவொளியில் மறைந்திருப்பவர்கள்

இந்தப் பெரு நிலவு

நான்கு நாட்களாக

ஒளி மங்காமல்

தாழ்ந்து தாழ்ந்து

என் தலைக்கு மிக அருகே வந்துவிட்டது

மனம் பிறழ்ந்து

எப்படி உடைந்தழுகிறேன் என்பதை

ஒரு நாளும் நீ காண முடியாது

பின்னிரவில்

சஞ்சலத்துடன் குரைக்கும்

என் நாயின் கண்களுக்கு

என்ன தெரிகிறது என்று தெரியவில்லை

இவ்வளவு நிலவொளியில்

நானும் எதைக்கண்டு அஞ்சுகிறேன் என்றறியாமல்

அஞ்சிக்கொண்டிருக்கிறேன்

 

நினைவழியும் தொலைவுக்கு

புரிந்துகொள்ளவில்லை

என்பதில் கொஞ்சம் வருத்தம்தான்

எதையும் காட்டிக்கொள்ளாமல்

கொஞ்சம் வேலையிருக்கிறது

என்று சொல்லி கிளம்பிவிட்டேன்

‘இப்போதுதான் புரிந்தது’

எனக் கண்ணீருடன்

நீ சொல்லும் நாளில்

நானே விரும்பினாலும்

திரும்ப முடியாத

நினைவழியும் தொலைவுக்கு

சென்றிருப்பேன் என்பது

இன்னும் வருத்தமாக இருக்கிறது

 

சிறிய விடுதலை

நான் இரண்டு விஷயங்களுக்கு மட்டுமே எப்போதும் காத்திருக்கிறேன்

ஒன்று உனக்காக

இன்னொன்று மரணத்திற்காக

இரண்டுமே எப்போதும்

அருகாமையிலிருந்தும்

தொலைவில் இருக்கின்றன

மேலும் இரண்டிலும் நான் வேண்டுவது

இந்த வாழ்வின் கனத்திலிருந்து

சிறிய விடுதலை

 

பொறுப்பு

எனக்கு நலமற்றுபோகையில்

என்னை நீ பார்த்துக்கொள்ளவில்லையேயெனெ

ஒரு நாளும் நான் வருந்தியதில்லை

பிறகு

உன்னை யார் பார்த்துக்கொள்வார்கள் என்றுதான்

அவ்வளவு சஞ்சலப்பட்டுப் போகிறேன்

 

பெரிய அன்பு

எல்லா தற்கொலை முடிவுகளுக்கும் பின்னால்

ஒரு பெரிய அன்பு இருக்கிறது

யாருடைய வழியையும் மறித்து

நின்றுவிடக்கூடாது என்பதற்காக

யாரையும் பழிதீர்க்க

நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக

யாருக்கும் பொறுப்புகளைத்

தந்துவிடக்கூடாது என்பதற்காக

யாருக்கும் கைவிடுதலின் சங்கடத்தை

ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக

யாரையும் சந்தேகிக்கும் அவலம்

நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக

யாரின் மேலும்ஒரு தண்டனையாக

மாறிவிடக்கூடாது என்பதற்காக

யாரும் இந்த மனதின் இருட்டைப்

பார்த்து பயந்துவிடலாகாது என்பதற்காக

யாருடைய இடத்தையும்

அடைத்துக்கொண்டிருக்காலாது என்பதற்காக

பெரிய அன்பு இல்லாத ஒன்றை

என் வாழ்நாளில் நான் செய்ததே இல்லை

 

யானையின் வருகை

இன்று பார்வையற்ற

ஒரு மனிதனைச் சந்தித்தேன்

‘‘உங்களுடைய

ஒரு புத்தகத்தைத் தேடி வந்தேன்

அந்தத் தலைப்பை யாரோ சொன்னார்கள்

அந்தத் தலைப்புதான் என்னை

இங்கே அழைத்துவந்தது

அது ஒரு வினோதமான

புத்தகமாக இருக்கக்கூடும்’’ என்றான்

“என்ன புத்தகம்’’ என்றேன் உரத்த குரலில்

பார்வையற்றவர்களிடம்

நம் அன்பை உரத்த குரலில்தான் தெரிவிக்கவேண்டும்

குரலைத்தவிர பேசுவதற்கு

வேறு வடிவங்கள் அங்கு இல்லை

“இருளில் நகரும் யானை’’

என்றான் சிரித்தபடி

நான் ஒரு கணம்

தாக்கப்பட்டதுபோல உணர்தேன்

என் மிகையுணர்ச்சியின் படிமங்கள்மேல்

யாரோ சவுக்கால் அடித்தார்கள்

அறையெங்கும்

கம்பிச் சுருள்போன்ற

யானை முடிகள்