என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்துகிற ஒரு சங்கதி கர்நாடக சங்கீகத்தின் சமூக இருப்பு. தமிழகத்தில் அதற்கென அது பரந்துபட்டு நுகரப்படுவதில்லை. ஐம்பதுகள் வரை இங்கு கர்நாடக இசை ரசிகர்கள் திரையிசையின் மட்டத்தில் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதை இன்று சினிமா இசைக்கு உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் ஈடுபாட்டுடன் ஒப்பிட முடியாது. நான் சென்னையில் உள்ள சபாக்களுக்கு சென்று கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். அங்கு மேற்தட்டை சேர்ந்த மக்களும் பிராமணர்களுமே அனேகமாக வருகிறார்கள். இருந்தாலும் ரெண்டாயிரத்துக்கு மேலுள்ள நுழைவுச்சீட்டுகளே விற்றுத் தீர்ந்து விடுகின்றன. பகலில் நடக்கும் இலவச கச்சேரிகளுக்கும் ஓரளவுக்குக் கூட்டம் வருகிறது. பெயர் பெற்ற கர்நாடக இசைப் பாடகர்களுக்கு இசையே முழுநேரப் பணியாக இருக்கிறது. அவர்களுக்கு வசதியாக வாழ்வதற்கான பணமும், சமூகத்தில் – ஊடகங்கள் வழி – பரவலான அங்கீகாரமும் கிடைக்கிறது. தமிழகத்தில் பிராமணர்கள் ஒரு 2-3% இருப்பார்கள். மிச்ச உயர்வர்க்கத்தினரும் 7-8% என்று வையுங்கள். எப்படிப் பார்த்தாலும், பிராமணர்களே அதிகமாக கர்நாடக இசையை ஆதரிக்கிறார்கள் என்ற வகையில் இதற்கான நுகர்வோரை நாம் 3-5% என்று வைத்துக் கொள்ளுவோம். ஆனாலும் அவர்கள் தமது ஆதரவைக் கொண்டே கர்நாடக இசையை நன்றாக வாழ வைக்கவும், கர்நாடக இசைக் கலைஞர்களை அன்றாடக் கவலைகள் இல்லாமல் இசையில் மட்டுமே கவனம் செலுத்தும் அளவுக்கு நிதியளிக்கவும் முடிகிறது. அது மட்டுமல்ல, இன்றும் இசையைக் கற்க விரும்புவோர் பெரும்பாலும் கர்நாடக இசை வாத்தியார்களிடமே போகிறார்கள்; ஒரு பகுதியினர் (கிறுத்துவர்கள் அதிகமும்) தேவாலயம் வழி இசைப்பயிற்சி பெறுகிறார்கள். மிகச்சிறு பகுதியினர் கிட்டார், கீபோர்ட் என்று கற்றாலும் மேற்கத்திய இசையை சிறுவயதில் இருந்தே கற்பவர்கள் மிகக்குறைவானவர்களே. ஆக, கர்நாடக இசை ஒரு பெரும் நுகர்வுப் பரப்பைக் கொண்டிராமல் போனாலும் அதற்கென பண்பாட்டளவில், பொருளாதார அளவில், நடைமுறை ரீதியாக ஒரு பெரிய இடம் கிடைத்திருக்கிறது. இதை நான் குறிப்பாக இங்கு பேசக் காரணமே இந்நிலையைத் தமிழில் கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழ் நவீன இலக்கியம், தீவிர இலக்கியம் அடையாமல் எப்படித் தவற விட்டது, சமூகப் பண்பாட்டு கவனம், அங்கீகாரம், நிதியுதவியுடன் தொழில்முறையாக ஒரு தமிழ் தீவிர எழுத்தாளன் ஏன் உருவாகாமல் போனான் என விவாதிக்கவே.

இதைப் பற்றிப் பேசும்போது இங்கு கேரளாவைப் போல ஓரளவுக்குப் பரவலான வாசகப் பரப்பு தீவிர இலக்கியத்துக்கு இல்லாமல் போனதும், எழுத்தாளர் சமூக அரசியல் விவாதங்களில் இருந்து விலகி இருப்பதுமே காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மை அல்ல. இலக்கியத்தை விட குறைவான அல்லது சமானமான நுகர்வு வீச்சைக் கொண்டிருக்கும் கர்நாடக இசைக்கு சாத்தியமான ஒரு ‘வளர்ச்சி’ ஏன் தீவிர இலக்கியத்துக்குக் கிடைக்கவில்லை? “எம்.எஸ். சுப்புலகட்சுமி:” வாழ்க்கை வரலாற்று நூலின் அறிமுக அத்தியாயத்தில் டி.ஜெ.எஸ். ஜார்ஜ் கர்நாடக இசையின் தற்போதைய சந்தையும், வடிவமும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்டதே என்கிறார். படித்த, (பிரிட்டிஷ்) அரசுப் பதவியிலும் வியாபாரத்திலும் ஈடுபட்டு பணம் பெற்றிருந்த பிராமணர்கள் தமிழிசையில் இருந்து கர்நாடக இசையையும், தேவதாசிகளின் சதிராட்டத்தையும் தம்வயப்படுத்தி புத்துருவாக்கம் பண்ணினர், அவற்றைத் தமது பண்பாட்டு அடையாளமாக மாற்றினர் என்று கூறுகிறார். ஆம், இந்த புத்துருவாக்கமானது சில நூற்றாண்டுகளாகவே செயல்பட்டு வந்தது தான். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தான் அது ஒரு உன்னதமான வடிவத்தை எடுக்கிறது. அதன் பிறகு பிராமணர்கள் கர்நாடக இசையை முன்னெடுக்க கடும் முயற்சிகளை எடுக்கிறார்கள், நிறைய பணத்தை செலவிடுகிறார்கள். (ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டிலும் ஆர்வம் செலுத்திக் கையகப்படுத்துகிறார்கள். அந்த ஆதிக்கம் கிட்டத்தட்ட ரெண்டாயிரத்துடன் முடிவுக்கு வருகிறது.) இங்கு நாம் எழுப்ப வேண்டிய கேள்வி கர்நாடக இசைக்கு ஒரு சிறுபான்மை சமுதாயம் அளிக்க முடிந்த இந்த எழுச்சியை, ஒரு தொழிலாக அதை வடிவமைக்க முடிந்த சாதனையை ஏன் இலக்கியத்துக்கு தமிழ் பொது சமூகத்தால் பண்ண முடியவில்லை என்பதே.

இது மற்றொன்றையும் காட்டுகிறது: தீவிர இலக்கியம் பெருமளவில் நுகராமல் போனாலும் கூட அதற்கென ஒரு லாபகரமான சந்தையை உருவக்க முடியும். ஐரோப்பிய சமூகங்களிலும் மிகச்சிறுபான்மையினரே தீவிர இலக்கியத்தை போஷிக்கிறார்கள். அங்கு படைப்பாளிகளால் எழுத்தை முழுநேரத் தொழிலாகக் கைக்கொள்ள முடிகிறது. தமிழில் ஏன் அது சாத்தியமாக வில்லை?

ஐரோப்பிய இலக்கிய வரலாற்றை – குறிப்பாக பிரித்தானிய, அமெரிக்க இலக்கிய, பிரசுர வரலாற்றை எடுத்துக் கொண்டால் – அங்கு 17ஆம் நூற்றாண்டு துவங்கி இருபதாம் நூற்றாண்டு வரை – இலக்கிய வாசிப்பு பண்பாட்டு நுண்ணுணர்வுக்கு, பண்படுவதற்கு, சமூக மேலாதிக்கம் பெறுவதற்கு அவசியமாகக் கருதப்பட்டது. கீழ்த்தட்டு மக்கள் மத்திய வர்க்கமாக மேல்நிலையாக்கம் பெற்ற போது அவர்கள் அடிப்படை கல்வியற்றவர்களாக இருந்தாலும் வாசிப்பில் மிகவும் மும்முரமாக இருந்தனர் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். பீட்டர் பேரி தனது Beginning Theory நூலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டனில் பல்கலைக்கழகங்களில் இலக்கியப் பாடங்கள் நுழைக்கப்பட்டதே கீழ்த்தட்டினரை ‘பண்படுத்தும்’ நோக்கிலே என்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இம்மக்களுக்கு இருந்த பண்பாட்டு முனைப்பை சார்லஸ் டிக்கன்ஸ் தனது நாவல்களில் சித்தரித்திருப்பார். இன்னொரு பக்கம் இலக்கியத்தை ஒரு உயர்பண்பாட்டு வடிவமாக சந்தைப்படுத்த பதிப்பாளர்கள் முயன்று கொண்டிருந்தார்கள், அவர்கள் அதற்காக எழுத்தாளனின் வாழ்க்கையை, பிம்பத்தை கவனமாகக் கட்டமைக்க முயன்றார்கள் என்பதையும், அந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் இன்பச்சுற்றுலா போவதையே அவர்கள் ‘வேலை’ செய்வதாக ஊடகங்கள் எப்படி சித்தரித்தார்கள் என்பதையும் ரொலாண்ட் பார்த் தனது Writer on a Holiday எனும் சுவாரஸ்யமான கட்டுரையில் பேசுகிறார்.

ஐரோப்பாவில் இலக்கியம் மட்டுமல்ல, ஓவியம், ஓப்பரா இசைநாடகம் போன்றவைகளும் உயர்பண்பாட்டு பண்டங்களாக சந்தைப்படுத்தப்பட்டன; இன்றும் இந்தியாவில் கூட மிக மிக சொற்பமானவர்களால் நுகரப்படும் நவீன ஓவியங்கள் ஒவ்வொன்றும் பல லட்சங்களுக்கு விற்பனை ஆகின்றன. உலகளவில் அவை கோடிக்கணக்கிலும் விற்பதுண்டு. இந்தப் பண்பாட்டு வடிவங்களுக்கு வெகுமக்களின் பங்களிப்பு தேவையில்லாதபோது தமிழில் மட்டும் ஏன் அப்படி ஒரு எதிர்பார்ப்பு, முயற்சி, நெருக்கடி இருக்க வேண்டும்? ஏன் ஐரோப்பாவிலும், முதலாம் உலக நாடுகளிலும் நடந்த ஒன்று, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளிலும் சாத்தியமான ஒன்று, இந்தியாவில் தமிழகத்தில் நடக்கவில்லை?

நான் இக்கேள்வியை என் பதினெட்டாவது வயதில் ஜெயமோகனிடம் கேட்ட போது அவர் “தமிழகத்தில் கடந்த சில நூற்றாண்டுகளாக மக்கள் கடும் வறுமையையும், அறியாமையையும் அனுபவித்தனர், இன்று சுதந்திரத்துக்குப் பின்னர் கல்வி பெற்று மேலெழுந்து வரும் மக்களும் பெரும்பாலும் முதல் அல்லது இரண்டாம் தலைமுறை கற்றவர்களாகவே இருக்கிறார்கள்” என்றார். அன்று எனக்கு இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை. ஆனால் இப்போது யோசிக்கையில் இதையும் பல காரணங்களில் ஒன்றாகப் பரிசீலிக்கலாம் என்று தோன்றுகிறது. அதற்கு நாம் வரலாற்றில் பிராமணர்களின் வளர்ச்சியை உற்று கவனிக்க வேண்டும்.

பிரேம்நாத் பஸாஸ் தனது The Role of Bhagavad Gita in Indian history எனும் நூலில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் மகதப் பேரசைப் போன்ற பௌத்த சாம்ராஜ்ஜியங்கள் எழுச்சி கொண்டிருந்த காலத்தில் வைதீக மதங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன, அப்போது பிராமண புரோகிதர்கள் கடும் வறுமைக்கு ஆளாகியதுடன், உழவர்களாக, கைவினைஞர்களாக, குற்றேவலராக, மந்தை வளர்ப்போராக, கதாகாலட்சேபம் செய்வோராக வாழ்ந்து வந்தனர் என்கிறார். கி.மு 187இல் மௌரிய அரசின் கடைசி மன்னனை புசியமித்திரன் எனும் பிராமணர் கொன்று விட்டுப் புதிய அரசொன்றை நிர்மாணிக்கிறார். அத்துடன் பௌத்த, சமண மதங்களின் வீழ்ச்சி துவங்குகிறது; அப்போது துவங்கி கி.பி. இரண்டாம்
நூற்றாண்டு வரை பிராமணர்கள் வைதீக மதங்களையும், வைதீக இலக்கியம், புராணம், இதிகாசங்கள், தொன்மங்களைப் பெரும் நிதியளித்தும், நேரடியாக ஈடுபட்டும் வளர்த்தெடுக்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு இந்த வைதீக இந்து மத எழுச்சி பல வடிவங்களில் வரலாற்றிலும் பண்பாட்டிலும் தொடர்கிறது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு துவங்கி பல்லவர் ஆட்சியின்போது தமிழகத்தில் பிராமணர்கள் வலுப்பெறுகிறார்கள். 12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு விஜயநகர, தெலுங்கு நாயக்கர், மராட்டியர் அரசுகளின்கீழ் வைதீக இந்து பிராமணீயமும் சமஸ்கிருதமயமாக்கலும் உச்சம் பெறுகிறது. இது போக, சுமார் பத்தாம் நூற்றாண்டில் இருந்து மெல்ல மெல்ல பக்தி இலக்கியம் வேர்பெற்று பின்னர் அது வேகமாக வளர்ந்து வெகுமக்கள் இடையே வைதீக இந்து மதத்தைக் கொண்டு சேர்க்கிறது. ஆங்கிலேயர் இந்தியாவை கைப்பற்றிட, பிராமணர்கள் அவர்களுக்கும் ஐரோப்பிய சமூகத்துக்குமான ஒரு பண்பாட்டு இணைப்புச் சங்கிலியாகவும், அதிகாரமிக்க பதவிகளில் இடம்பெற்றவர்களாகவும் மாறுகிறார்கள். இந்த வரலாற்றை நாம் பிராமணீயத்தின் வளர்ச்சியாக அல்லாமல் அவர்கள் ஏன் கர்நாடக இசை, பரத
நாட்டியம் போன்றவற்றுக்கு இவ்வளவு இடம் கொடுத்து நிதியளித்துப் போற்றினார்கள் என்பதற்கான விடையாகவும் பார்க்க முடியும். அவர்களுக்கு இதற்குப் பல நூற்றாண்டுகளின் பின்னணி இருக்கிறது:

கல்வி, அரசின் ஆதரவு, நிலவுடைமை ஆகிய வசதிகள் பல நூறு வருடங்களாக அவர்களிடம் இருந்திருக்கிறது. ஆக, அவர்கள் ஐரோப்பிய சமூகங்களைப் போல கலைக்கு உயர்வான இடத்தைக் கொடுத்து அதைத் தமது பண்பாட்டு அடையாளமாக, பெருமையாகக் காண முயன்றது ஆச்சரியமளிக்கக் கூடிய ஒன்றல்ல. ஆனால் கடந்த இருநூறு ஆண்டுகளாக மட்டுமே கல்வியைப் பெற வாய்ப்புக் கிடைத்த பிற பெரும்பான்மை சமுதாயங்களுக்கு உயர் பண்பாட்டு நுகர்வு அவ்வளவு முக்கியமாக இல்லை, அவர்களுக்கு தமது அலுப்பிலும் நெருக்கடிகளில் இருந்து ஓய்வளிக்கும் கேளிக்கையே இப்போதைக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆனால் கடந்த வரலாற்றைப் பார்க்கையில் இந்நிலை ஒருநாள் நிச்சயமாக மாறும் எனும் நம்பிக்கை ஏற்படுகிறது.

தமிழில் பதிப்பாக்கமானது ஒரு வருமானம் ஈட்டும் தொழிலாக நிறுவனப்பட்டது ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் தான் (உயிர்மை, காலச்சுவடு, கிழக்கு போன்ற பல பதிப்பகங்கள் தோன்றின.). அடுத்து சமூக வலைதளங்கள் தோன்றி எழுத்தாளனையும் வெகுஜன பரப்பில் வாசிப்பில் ஆர்வம் கொண்ட ஒரு தரப்பையும் இணைத்தது. அதன் பிறகு தான் இங்கு நடுநிலை இலக்கியம், வணிக ரசனை கொண்ட தீவிர இலக்கியம் என்பதான ஒரே சமயத்தில் தீவிர வாசகனையும், வணிக சுவையில் தோய்ந்த வாசகனையும் ஈர்க்கும் படைப்புகளுக்கான ஒரு தளம் தோன்றியது. தீவிர இலக்கிய பதிப்பகங்களிலும் இத்தகைய நூல்களுக்கு ஒரு முக்கிய இடம் கிடைத்தது. விகடன் போன்ற வெகுஜன கதைகளை ஆதரித்து வந்த இதழ்களும் இத்தகைய கதைகளுக்கும் இலக்கிய கதைகளுக்கும் இடமளித்து பிரபலமாக்கின. இது வெகுதீவிரமான, பரீட்சார்த்த முயற்சிகள் நிரம்பிய எழுத்தை விளிம்புக்குத் தள்ளியது. தமிழில் பின்நவீன கதைசொல்லல் முறை பின்னுக்குத் தள்ளப்பட்டு எதார்த்த புனைவு உத்தி மீண்டும் அரியணைக்கு வந்தது இவ்வகையான வாசகர்களை மனதில் வைத்து தானோ எனும் ஐயம் எனக்குள் உண்டு. இப்போதைக்கு எழுத்தாளர்களுக்கு மிகச்சிறிய அளவிலேனும் ஆறுதலை அளிப்பது சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மட்டுமே. ஆனால் இது போதாது.

நமது பிரச்சனை தீவிர இலக்கியம், நடுநிலை இலக்கியம் ஆகியவை தொடர்ந்து பெரும்பாலும் தமிழக மத்திய வர்க்கத்தின், ஓரளவுக்கு உயர்மத்திய வர்க்கத்தின் ஆதரவை நம்பி இருக்க வேண்டி உள்ளது என்பதே. கர்நாடக சங்கீதம், ஓவியம் போன்றவற்றுக்கு உள்ளதைப் போன்ற உயர்தட்டினரின் பெருவாரியான ஆதரவு தீவிர இலக்கியத்துக்கும் கிடைத்து, இலக்கிய வாசிப்பை ஒரு உயர்பண்பாட்டு செயலாக அவர்களிடையே கொண்டு செல்ல இயன்று, அவர்களுடைய அந்தஸ்தாகவே தீவிர இலக்கியம் மாறினால் அது இங்குள்ள சந்தையைப் பலமடங்கு வலுப்படுத்தும்; ஆங்கில ஊடகங்களிலும் தமிழ் நவீன இலக்கியத்துக்கு ஒரு வலுவான இடம் அமையும். கூடவே, ஏற்கனவே உள்ள மத்திய, உயர்மத்திய வாசகர்களும் சேர்ந்து கொள்ள இலக்கிய எழுத்துக்கு ஒரு சரியான சந்தை மதிப்பும், எழுத்தாளர்களுக்கு ராயல்
டியினால் மட்டுமே வாழக் கூடிய நிலையும் ஏற்படும்.

தமிழகத்தில் பண்பாடானது மேல்நிலையாக்கத்தின் ஒரு பகுதியாக இலக்கியம் மாற்றப்படுவதே இதற்கான முதற்படியாக இருக்கும். தமிழகத்தில் சாதிரீதியாகவே மேல்நிலையாக்க செயல்பாடுகள் நடைபெறுகின்றன என்பதால் அவ்வாறு உயர்ந்து வரும், மேல்நிலையாக்கத்தை விரும்பும் சாதிகள் தீவிர இலக்கிய வாசிப்பை முன்னெடுத்தால் அதுவும் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும். அப்போது பிராமணர்கள் கர்நாடக, பரதநாட்டிய கலை வடிவங்களுக்கு அளித்த வாழ்வைப் பிற சமூதாயத்தினரும் தமிழ் இலக்கியத்துக்குப் பண்ணினால் அது ஒரு பெரும் புரட்சியாக இருக்கும். உ.தா. இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் அமைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் வழி தலித் அழகியல், கோட்பாடு, இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் ஆதரவளிக்கிறார், வழிகாட்டுகிறார். இது ஒரு பாராட்டத்தக்க மாற்றத்தைக் கொண்டு வருவதைப் பார்க்கிறோம். இதை ஒவ்வொரு சமுதாயமும் செய்ய முன்வர வேண்டும் என்பதே என் அவா.

கேரளாவில் வெகுமக்கள் இடையே இலக்கியத்துக்கு இருந்து வருகிற அக்கறை, அங்கு இலக்கியவாதிகளில் ஒரு பகுதியினராவது தொழில்முறை எழுத்தாளர்களாக வாழ முடிகிற நிலை தமிழ் எழுத்தாளர்களை வெகுவாக ஏங்க வைப்பது. ஒரு சிறிய மாநிலமான, தமிழகம் அளவுக்கு வளர்ச்சி பெறாத கேரளாவில் இது எப்படி சாத்தியமானது?

மலையாள இலக்கியம், வரலாறு, அரசியல் பற்றி நன்கு தெரிந்த ஒரு நண்பரிடம் இதைப் பற்றி விசாரித்தபோது அவர் ஒரு சில காரணிகளைப் பட்டியலிட்டார். 1)அங்கும் சில நூற்றாண்டுகளாகவே பிராமண சமூகமே இலக்கியம், கலைகள் போன்றவற்றை ஸ்வீகரித்துப் பங்காற்றி வந்தது. 1940களில் அங்கு கம்யூனிச இயக்கம் தீவிரமாக சில முக்கிய வேலைகளை செய்கிறது. அப்போது இந்த இடது
சாரி இயக்கங்களில் பிற சமூகத்தினருடன் பிராமணர்களும், தம் ‘இல்லங்களையும்’ சாதிய அடையாளங்களையும் துறந்து, பொதுப்பரப்பில் கலந்து கொண்டு முக்கியமான பங்காற்றுகிறார்கள். 2) இந்த பண்பாட்டுச் செயல்பாடுகளில் ஒன்று முற்போக்கு சமூக நாடகங்களை கிராமம் கிராமமாகக் கொண்டு சென்று மக்களிடையே பிரபலமாக்கியது. (3) அடுத்து, கம்யூனிஸ அரசு அங்கு ஆட்சியமைத்திட, பரவலாக கல்வி அறிவை கொண்டு சேர்ப்பதும் அவர்களுடைய ஒரு முக்கிய இலக்காக மாறுகிறது. இது இலக்கிய வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவுகிறது. கூடவே மேடை நாடகங்களும் இலக்கியப் பிரசுரமும் அங்கு வளர்கிறது. (கேரளாவின் இப்போதைய கல்வியறிவு சதவீதம் 96.2; தமிழகத்தின் சதவீதம் 80.) டிவியும் இணையமும் வந்த பின்னர் கேரள மக்களின் பிரதானமான பண்பாட்டு நுகர்வு வடிவங்களாக அவை மாறி வருகின்றன என்றாலும்
இலக்கிய சந்தை அங்கு இன்னும் உயிர்ப்புடனே இருக்கிறது. அதற்கு அங்குள்ள இடதுசாரி இயக்கங்களுக்கு, கம்யூனிஸக் கட்சிக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. (தமிழகத்தில் அக்காலகட்டத்தில் சினிமா ஒரு பெருவணிகமாக மாறி வந்ததால், மெல்ல மெல்ல மேடை நாடகம் நசிவுற்றதாலும், திராவிட இயக்கம் சினிமாவை ஒரு பிரச்சார வடிவமாக முன்னெடுத்தது.) இது இலக்கியத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் அரசியல் இயக்கங்களுக்கு உள்ள முக்கியமான பங்கை நமக்குக் காட்டுகிறது. இலக்கிய வளர்ச்சியில் நாட்டம் காட்டுகிற இப்போதுள்ள திமுக அரசு (கேரளாவில் இடதுசாரி அரசுகள் பண்ணியதைப் போல) மக்களின் அரசியல் பண்பாட்டு எழுச்சிக்கு, சமூக நீதி கருத்துக்களைக் கொண்டு சேர்க்க இலக்கியத்தைப் பயன்படுத்த முயன்றால், எல்லா மாவட்டங்களிலும் எளிய நாடக நிகழ்த்துதல்கள், கதைசொல்லும் நிகழ்வுகள், (கவிஞர் சுகிர்தராணி பரிந்துரைப்பதைப் போல) இலக்கிய விழாக்களை நடத்தினால், இங்கும் ஒரு சிறிய மாற்றம் வரலாம்.

இதெல்லாம் நடந்தால், அடுத்த தலைமுறையின் எழுத்தாளர்கள் நமக்கு நன்றி சொல்வார்கள்.

abilashchandran70@gmail.com