நாம் நமக்கு மிக எளிதில் கிடைக்கும் பொருட்களின் அருமையை உணரவே மாட்டோம்- அவற்றை இழக்கும் வரை. நாம் கண்ணைத் திறந் ததுமே நம் முன்னால் வண்ணமயமாக இவ்வுலகு விரிகிறது. எத்தனையோ ஆயிரம் உயிர்களின் அசைவுகள், இயக்கங்கள் நம் கண்ணில் தெரிகிறது. வண்ணங்கள் (colour vision), முப்பரிமாணம் (Three dimensional view), அசைவுகள் (motion), ஆகியவற்றை எளிதாக உணர்கிறோம். ஆனால் இதன் பின்னணியில் மூளையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோடிக்கணக்கான ந்யூரான்களின் நுணுக்கமான செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. இதயெல்லாம் பற்றி நாம் யோசிப்பதுகூட கிடையாது அப்பகுதிகள் செயல்படாமல் போனல்தான் நமக்கு அதன் மதிப்பு புரியும்.

அதுபோன்றே மொழியும் சிந்தனையும். நாள்தோறும் ஏராளமான எண்ணங்கள் நம் மூளைக்குள் தோன்றுகின்றன. அவற்றில் சிலவற்றை மொழி மூலம் வெளிப்படுத்துகிறோம்.. இந்த சிந்தனைகளையும் மொழியையும் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. மொழி என்ற ஒன்று எப்படி உருவாகி
யிருக்கும்? மனிதன் மட்டும் எப்படி சிந்திக்கிறான்? என்பன போன்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களைப் பல நூறு ஆண்டு
களாக தீவிரமாக சிந்திக்க வைப்பவை. முதன் முதலில் ஒரு மொழி எப்படித் தோன்றியிருக்கும் என்பது மொழியியல் அறிஞர்கள் மட்டுமல்ல, வரலாற்று ஆய்வாளர்கள், பரிணாம இயல் ஆய்வாளர்கள், தத்துவ அறிஞர்கள் எனப் பலவகைப்பட்ட நிபுணர்களும் கேள்விகளை எழுப்பும் களம். இத் தொடரின் ஆரம்பத்தில் சொன்னதுபோல் இதுபோன்ற சிக்கலான கேள்விகளுக்கான விடைகளை மூளை நரம்பியல் ஆய்வுகள் கண்டறியத் தொடங்கியுள்ளன.

வழக்கம்போல் மதங்கள் எளிமையாக இறைவனிடமிருந்து தோன்றின என முடித்து விடுகின்றன. சிவபெருமான் உடுக்கையை அடித்தபடியே ஆடினார்.அப்போது உடுக்கையில் ஒருபுறத்திலிருந்து எழுந்த ஒலிகள் தமிழ்மொழியானதாம். இன்னொரு புறத்திலிருந்து எழுந்த ஒலிகள் வடமொழி ஆனதாம். அதே போல் பைபிளிலும் ஒரு கதை சொல்லப்படுகிறது. உலகம் முழுதும் ஒரே மொழிதான் பேசப்பட்டு வந்ததாம். பின் மனிதனின் பேராசையால் சொர்க்கத்துக்குச் செல்ல பேபல் என்னும் ஸ்தூபியை எழுப்பினார்களாம் (Tower of Babel). அதைக் கண்டு ஆத்திரமடைந்த கடவுள் “ நீங்கள் பல்வேறு மொழிகளைப் பேசக் கடவீர்கள்” எனச் சபித்தாராம். உடனே மக்கள் பல்வேறு மொழிகளைப் பேச ஆரம்பித்தனராம். இதனால் ஒருவர் பேசும் மொழி இன்னொருவருக்குப் புரியமல் போனதாம்.

மதங்கள் இப்படிச் சொன்னாலும் அறிவியல் பல்வேறு கேள்விகளைக் கேட்டவண்ணம் இருந்தது. முதன் முதலில் மொழி எப்படி உருவானது? உலகம் முழுதும் உள்ள மக்கள் ஒரே மொழியைப் பேசவில்லை? அப்படி ஒவ்வொரு பகுதியினரும் ஒவ்வொரு மொழி பேசுவதற்கான காரணம் அவர்கள் மூளை அமைப்பில் இருக்கிறதா அல்லது வெறும் சுற்றுச்சூழல் மட்டும்தான் காரணமா?

இந்தக் கேள்விகளுக்கு விடைகூற மூளை அறிவியல் நிபுணர்கள் இரண்டு வகையான சூழ்நிலைகளை ஆராய்ச்சி செய்து விடை அளிக்கிறார்கள்.
முதலாவது ஒரு குழந்தை எப்படி ஒரு மொழியைக் கற்றுக் கொள்கிறது என்பதை ஆராய்ந்தால் மொழி உருவான விதத்தையும், மூளையில் மொழிக்கான பகுதிகளின் செயல்பாடுகளைப் பற்றியும் அறியமுடியும். மொழியை மட்டுமல்ல, அதன் சிந்தனைகளில் ஏற்படும் மாற்றங்களையும் புரிந்து கொள்ள முடியும். இரண்டாவது மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மொழியில் ஏற்படும் பிரச்ச்னைகளை ஆராய்வதன் மூலமும் மூளையின் எந்தப் பகுதி மொழியுடன் தொடர்புடையது என அறிய முடியும்.

முதலாவதைப் பற்றி இந்தக் கட்டுரையில் இப்போது பார்க்கலாம்.ஒரு குழந்தை பிறந்தபோது அதனிடம் ஒரு சொல் கூட கிடையாது. பிறருடன் தொடர்பு கொள்வதெல்லாம் அழுகை போன்ற ஒலியை எழுப்பித்தான். அதற்குச் சிந்தனை என்றும் பெரிதாக எதுவும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் அதற்குத் தான் என்ற உணர்வே இருக்காது. சூழலுக்குத் தகுந்தவாறு எதிர்வினை ஆற்றுகிறது. கிட்டத்தட்ட ஒரு விலங்கினைப் போலத்தான் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலைக்கு ஏற்ப அதனிடம் மாறுதல்கள் ஏற்படுகின்றது. ஆறு மாத்தில் சில ஒலிகளை எழுப்பி உணர்வுகளை வெளிப்படுத்தத் தொடங்குகிறது. ஒரு வயதில் ஒரு குழந்தை அம்மா, அப்பா என்பது போல் அர்த்தமுடன் ஒரு வார்த்தை பேசத் தொடங்ககுகிறது. இரண்டு வயதில் ‘இங்கே வா, அங்கே போ’ என இரண்டு வார்த்தைகளைச் சேர்த்து பேசும் அளவுக்கு அதன் மொழித்திறன் இருக்கிறது. அதுவே நான்கைந்து வயதில் கிட்டத்தட்ட பெரியவர்கள் பேசும் மொழிக்கு அருகில் அதன் திறன் வருகிறது. ஆனாலும் பழமொழிகளை, உவமைகளை, சிலேடைகளைப் புரிந்து கொள்ளும் திறனெல்லாம் வருவதற்குப் பத்து வருடங்கள் ஆகின்றன.

குழந்தைகள் மொழி அறிவைப் பெறுவது இயற்கையிலே அதன் மரபணுக்களில் தீர்மானிக்கப்பட்ட செயலா அல்லது அக்குழந்தை வளரும் சூழல் தீர்மானிக்கிறதா என்ற கேள்விக்கு மீண்டும் வருவோம். இதற்கான விடைகளைத் தெரிந்து கொள்ள கொஞ்சம் வரலாற்றுத் தகவல்களைப் பார்ப்போம். பல்லாண்டு காலமாகவே பிறந்த குழந்தைகளைத் தனிமைப்படுத்தி எந்த விதமான மொழியையும் அவர்கள் கேட்காமல் வெறுமே உணவு மட்டும் கொடுத்து வளர்த்துப் பார்க்கும் கொடூரமான பரிசோதனை முயற்சிகள் நடைபெற்று வந்தன.ஒரு குழந்தை எந்தவிதப் புறத்தூண்டுதலும் இல்லாமல் இருந்தால் எந்த மொழியைப் பேசும் என்பதை அறிவதே இந்த ஆராய்ச்சிகளின் அடிப்படை. இது போன்ற முயற்சிகள் Language Deprivation Experiments (மொழியை விலக்கிய வளர்ப்புமுறைப் பரிசோதனைகள்) என அழைக்கப்படுகின்றன. இது போன்ற ஆய்வுகளை அரசர்களே மேற்கொண்டிருக்கின்றனர்.

கி.மு 664-610 ஆண்டு காலகட்டத்தில் எகிப்தை ஆண்ட ஃபேரோ மன்னன் முதலாம் சாம்டிக் என்னும் அரசன் சில குழந்தைகளை இதுபோல் மனிதப் பேச்சுக்குரலே கேட்காமல் அடைத்து வைத்துப் பரிசோதித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. அதே போல் ரோமானியப் பேரர
சின் மன்னனான ஃப்ரெட்ரிக் என்பவரும் பதிமூன்றாம் நூற்றாண்டில் இதுபோல் சில குழந்தைகளை அடைத்து வைத்து ஆராய்ச்சி செய்ததாக வரலாறு கூறுகிறது. அந்தக் குழந்தை எந்தப் புறத்தூண்டுதலும் இல்லாமல் பேசும் மொழிதான் இறைவன் மனிதர்களுக்கு முதன்முதலில் அருளிய மொழியாக (ஹீப்ருவாக) இருக்கக்கூடும் என்ற அனுமானத்தில் அவர் இப்பரிசோதனைகளைச் செய்தாராம். இதேபோல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த நான்காம் ஜேம்ஸ் என்னும் மன்னனும் இதுபோன்ற பரிசோதனைகளைச் செய்து பார்த்தானாம்,

நம்முடைய நாட்டிலும் அக்பர் இரு குழந்தைகளை ஊமையான செவிலியர்களை மட்டும் வைத்து வளர்த்துப் பரிசோதனை செய்து பார்த்தாராம்.

ஓரளவு நாகரீகம் பெருகிய கட்டத்தில் இதுபோன்ற பரிசோதனைகளை எல்லாம் செய்து பார்க்க முடியாது. ஆனால் எதிர்பாராதவிதமாகப் பிறந்தது முதலே வேறு மனிதத் தொடர்பே இல்லாமல் காட்டில் வாழ நேர்ந்த சில மனிதர்களைப் பற்றி அவ்வப்போது கேள்விப்
பட்டு அவர்களை ஆராய முடிந்தது. நமக்கெல்லாம் டார்ஜானைத் தெரியும். காட்டிலேயே வளர்ந்து வருவார். ஆனால் வயது வந்தவுடன் கதாநாயகியும் காட்டுக்கு வந்ததும் அவர் காதல் வசப்பட்டுக் கவிதையெல்லாம் எழுதிப் பாட்டெல்லாம் பாடுவார். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்குமா?

ருட்யார்ட் கிப்ளிங்க் எழுதிய மோக்லி என்னும் நாயகனும் காட்டிலேயே வளர்ந்தவன் தான். அந்தக் கதைகளைப் படைப்பதற்கு அவருக்குத் தூண்டுதலாக இருந்தது யார் தெரியுமா? நிஜமாகவே காட்டில் வளர்ந்த ஒரு சிறுவன். 1860 களில் பிறந்து சுமார் ஏழு வருடங்கள் காட்டிலேயே தனியாக வளர்ந்த டீனா சனிச்சார் என்பவர் தான் அவர். 1867 இல் உத்தரப்பிரதேசக் காடு ஒன்றில் கண்டறியப்பட்டார் அவர். அவரைக் கிறிஸ்தவ மிஷனரிகள் தங்கள் இல்லத்தில் சேர்த்து வளர்த்தனர். ஆனால் அவர் தன்னுடைய முப்பதாவது வயதில் இறக்கும்வரை எத்தனையோ பயிற்சி கொடுத்தும் அவரால் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை.

இவர் மட்டுமல்ல, மேலே குறிப்பிட்ட எல்லாப் பரினைகளிலுமே தனிமைப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் சமூகதுக்குத் திரும்பி மொழிகளை எதிர்கொண்டாலும் எத்தனை வருடமானாலும், அவர்களால் மொழியைக் கற்றுக் கொள்ள முடிவதில்லை. வெறுமே உறுமல்களாலும் குரல்களாலுமே அவர்களால் தொடர்பு கொள்ள முடிந்தது.
மொழி மட்டுமல்ல அவர்கள் சிந்தனை பகுத்தறிவு, நாகரிகம் போன்ற பல விஷயங்களிலும் முதிர்ச்சியின்றித்தான் இருந்தனர். எத்தனை பயிற்சி கொடுத்தும் அவர்களால் மாறமுடியவில்லை. மேலே சொன்ன டீனா சனிச்சாரைப் போல் பல குழந்தைகளுக்குப் பல்வேறு நாடுகளில் நடந்தி
ருக்கின்றன. குழந்தைப் பருவத்திலேயே காட்டுக்குள் தொலைந்துவிட்டுப் பல வருடங்கள் கழித்து வந்த சம்பவங்
கள். இதுபோல் வளரும் குழந்தைகளுக்கு ஃபெரல் சில்ட்ரன் (Feral Children) என்றே பெயர். இக்குழந்தைகளால் பிற்காலத்தில் ஒரு போதும் பேச முடிவதில்லை.

இச்சம்பவங்களிலிருந்து முக்கியமான ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாம். ஒரு குழந்தை மொழியைப் பேசத் தொடங்குவது முழுக்க முழுக்க அதன் மரபணுக்களில் மட்டுமே பொதிந்துள்ள சமாச்சாரம் அல்ல. அப்படி என்றால் எந்தத் தூண்டுதலும் இல்லாமல் வளரும் குழந்தைகள் தானாகவே பேசத் தொடங்கி இருக்க வேண்டும். அப்படி நடப்பதில்லை. அதே நேரம் முழுக்க முழுக்க சூழல்தான் காரணம் என்றால் பிறந்து எத்தனை வருடங்கள் பேச்சுக் குரலையே கேட்காமல் இருந்தாலும் பின்னர் மொழியைக் கேட்டால் மொழியைக் கற்றுக் கொண்டு பேசத் தொடங்க வேண்டும். அப்படியும் நடப்பதில்லை. குழந்தை பிறந்து வளர்ந்த ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் மொழியின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஒருபோதும் கற்றுக் கொள்ள முடியாது. இதற்குக் காரணம் மூளையில் ஏற்படும் மாறுதல்கள்தான்.

அவை என்ன? அவற்றின் மூலம் மூளையைப் பற்றி நாம் அறிந்து கோண்ட உண்மைகள் என்ன என்பதை
யெல்லாம் அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்
– தொடரும்

ramsych2@gmail.com