உலகமயத்தின் தாரக மந்திரம் ஆட்குறைப்பு. நீண்ட அனுபவத்துடன் உயர் பதவியில் இருக்கும் அனுபவஸ்தனை எந்த சங்கடமும் இன்றி, குப்பையில் தூர எறிந்து விட்டு, அதே பதவிக்குக் குறைந்த சம்பளத்தில் ஒருவனை அமர்த்துவது எல்லா இடங்களிலும் நீக்கமற நடந்து வருகிறது. உழைப்பை ஒட்டவொட்ட உறிஞ்சிவிட்டு, உழைக்கும் சக்தியற்ற நடுத்தர வயதினனை அல்லது முதியவனை ஒரு சக்கையாய் பாதையோரம் வீசிவிடுகிறது அது. மிகப் பெரிய விளம்பர நிறுவனம் ஒன்றில் தலைமை நிர்வாகிக்கு அடுத்த மட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் இவ்வாறாகத் தூக்கி எறியப்பட்டபோது, தனக்குத் தெரிந்த தொழில் என அதே போல் ஒரு விளம்பர நிறுவனத்தை நிறுவி, இதுகாறும் சேமித்து வைத்த பொருளையும் சொந்த நிறுவனம் நடத்தும் சாகசத்தில் இழந்து வீதியில் நின்று பின்னர் ஸ்டார்பக்ஸில் பரிசாரகனாக வேலைக்குச் சேர்ந்த கதையை சமீபத்தில் படித்தேன். மைக்கேல் கேட்ஸ் கில் என்ற முதியவர் காலத்தின் கண்மூடித்தனமான விளையாட்டில் கிழிந்துபோன தன் வாழ்வை, அதிலிருந்து தான் மீண்டு வந்ததை How Starbucks Saved My Life என்று எழுதியுள்ளார். வாடிக்கையாளர்களுக்கு காபி கலந்து கொண்டு வந்து தரும் சர்வராக வேலை செய்யும் போதுதான் மனிதனை மனிதனாக மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்கிறார். அதை மிக நேர்மையாகப் பதிவும் செய்கிறார்.

எல்லாத் தொழிலும் உயர்ந்தவைதான். திருடக் கூடாது. பொய் சொல்லக் கூடாது. பிறரை ஏமாற்றிப் பிழைக்கக் கூடாது. மற்றபடி எந்தத் தொழில் செய்தாலும் அதில் கேவலம் ஒன்றுமில்லை என்றெல்லாம் நாம் எவ்வளவோ படிக்கிறோம். வாட்ஸ் அப் புலவர்கள் பலர் நமக்கு இந்த மாதிரி தத்துவங்களை எல்லாம் அன்றாடம் பொழிந்தபடிதான் இருக்கிறார்கள். ஆனால், நடைமுறையில் சாத்தியமா? 2000 டாலர் விலையுள்ள கோட், சூட் அணிந்து மிகப் பெரிய விளம்பர நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்து விட்டு, எல்லாத் தொழிலும் உயர்ந்தவைதான் என்று காபிக் கடையின் சீருடை, ஏப்ரனுடன் மூணாவது டேபிளுக்கு ரெண்டு காபி என்று சந்தோஷமாக சவுண்ட் விட முடியுமா? மைக்கேலுக்கு முடிந்திருக்கிறது, அதுவும் அறுபது வயதில், ஆறிலக்க சம்பள வேலையை இழந்த பிறகு, என்பதுதான் ஆச்சரியம்.

மிகவும் படித்த, பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் அவர். அவரது தந்தை நியூயார்க்கர் பத்திரிகையில் பணிபுரிந்த எழுத்தாளர். ஏராளமான புத்தகங்கள் எழுதிய அவர் தனது பத்திரிகை அனுபவங்கள் குறித்து Here at the Newyorker என்று எழுதிய புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. பிராங்க்ஸ்வில்லில் மைக்கேல் சிறுவயதில் வசித்த பங்களாவில் 35 அறைகள். வீட்டுக்குள்ளேயே இரண்டு மாடிகள் முழுக்க நூலகம். மைக்கேலின் தந்தையாருக்குத் தெரியாத பெரிய மனிதர்கள், இலக்கியவாதிகள் இல்லை. மைக்கேலுக்குப் பாடத்தில் ஜேம்ஸ் தர்பரின் கட்டுரை ஒன்று வருகிறது. உடனே அவரது தந்தை ஜேம்ஸ் தர்பரை வீட்டிற்கு அழைத்து வந்து மகனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். சிறுவன் மைக்கேலுக்கு ஸ்ட்வார்ட் லிட்டில் கதை மிகவும் பிடித்துப் போய் விடுகிறது. அப்பாவிடம் சொல்கிறான். சில நாட்களில் ஸ்ட்வார்ட் லிட்டிலை எழுதிய ஈ.பி. வொயிட்டை வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து வருகிறார் தந்தை. யேல் பல்கலைக்கழகத்தில் படிப்பு. பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் ராபர்ட் ஃபிராஸ்ட், டி.எஸ்.எலியட் ஆகியோருடன் அறிமுகம் கிடைக்கிறது. பிராங்க் சினெட்ரா போன்றோர் பாடும் உணவகங்களில் தான் மைக்கேல் நண்பர்களோடு ஜாலியாக உணவருந்தச் செல்வார்.

படிப்பை முடித்ததும் மிகப் பெரிய விளம்பர நிறுவனத்தில் வேலை. மிகப் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்திற்கும் விளம்பரங்களை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். நிஜமாகவே குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தவர்தான். ஆனால் கார்ப்பரேட் வெட்டுக் கத்தி யார் மீதுதான்
விழவில்லை? விழுகிறது. இவர் பார்த்து வேலைக்குச் சேர்த்த பெண் ஹெச்.ஆர். இவரை ஒரு நாள் டின்னருக்கு அழைக்கிறாள். கார்ப்பரேட் ஏணியில் எத்தனை உயரத்தில் இருக்கிறார்களோ, அத்தனை அளவு அவர்கள் தாமதமாக வருவார்கள் என்ற விதியின்படி இவரைக் காத்திருக்க வைத்து விட்டு, தாமதமாக வருகிறாள். நீங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டியதுதான் என்கிறாள். சும்மா செல்ல வேண்டாம். உங்களது ஒவ்வொரு ஆண்டுப் பணிக்காலத்திற்கும் ஆண்டுக்குப் பத்து நாள் சம்பளம் என்று கணக்கிட்டுத் தந்து விடுகிறோம் என்கிறாள். அதை வாங்கிக் கொள்ளவும், அலுவலக மேஜையை சுத்தம் செய்து சொந்தப் பொருட்களை எடுத்துச் செல்லவும் நீங்கள் வரவேண்டிய அவசியம் இல்லை. எல்லாம் தாமாக வீடு தேடி வரும் என்கிறாள். வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த அலுவலகத்திற்குச் சென்று நண்பர்களிடம் விடை பெறக் கூட முடியாத நிலை.

சொந்தத் தொழிலும் சரிப்பட்டு வரவில்லை. உடல், மனச் சோர்விற்காகச் சென்ற யோகா வகுப்பில் நடுத்தர வயதுப் பெண் ஒருத்தியுடன் பழக்கம் ஏற்படுகிறது. எனக்கு குழந்தை பிறக்காது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டதால் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று சொல்கிறாள் அவள். இவரது கஷ்டகாலம், அவள் கர்ப்பமாகிறாள். குட்டிப் பையன் பிறக்கிறான். குழந்தை பிறந்ததும் அவள் பிரிந்து செல்கிறாள். எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மனைவியிடம் மகன் பிறந்ததைச் சொல்கிறார். இவரது குழந்தைகள் நால்வரும் திருமண வயதில் இருப்பவர்கள். பேரன், பேத்தி எடுக்க வேண்டிய வயது இவருக்கு. மனைவி விவாகரத்து கோருகிறார். இருக்கும் அத்தனை சொத்துகளும் மனைவி, குழந்தைகளுக்குத் தர நேர்கிறது. எழுதிச் செல்லும் விதியின் கைகளை நொந்தபடி, ஸ்டார்பக்ஸில் காபி சாப்பிடும் போதுதான், ஒரு கறுப்பினப் பெண் நீங்கள் இங்கே வேலை பார்க்க விரும்புகிறீர்களா? என்று கேட்கிறாள். அவள் அந்த ஸ்டார்பக்ஸ் கிளையின் மேலாளர். ஏதேனும் வேலை செய்தே ஆகவேண்டும் என்ற நிலையில் மைக்கேல் சரி என்கிறார். கறுப்பின மக்களைத் தாழ்ந்தவர்களாகவே பார்த்துப் பழகும் வாழ்க்கைச் சூழலில் வளர்ந்தவரின் மேலாளர் ஒரு கறுப்பினப் பெண். சக ஊழியர்கள் அனைவரும் வாட்டசாட்டமான கறுப்பின ஆண், பெண்கள்.

எடுத்த எடுப்பிலேயே காபி கொண்டு வந்து தரும் சர்வராக எல்லாம் வேலை தந்துவிட மாட்டார்கள். அங்கே காபியில் அத்தனை ரகங்கள் உண்டு. அவையெல்லாம் தெரிந்து கொள்ள சில மாதங்கள் ஆகும். முதல் நாள் பணியாளருக்கான சீருடை அணிந்ததும் மேலாளர் பெண்மணி. “கடையை சுத்தம் செய்து விடுகிறீர்களா?“ என்று வாளியையும், மாப்பிங் குச்சியையும் தருகிறார். மைக்கேலின் சிறுவயது வாழ்வின் செழிப்பு பற்றி மேலே சொன்னேன் அல்லவா? அவையெல்லாம் நான் சொன்னது போல ஒரு நேர்கோட்டில் சொல்லப்படவில்லை. மாப்பிங் ஸ்டிக்கோடு கையில் நிற்கும் போது, வீட்டிற்கு ஸ்ட்வார்ட் லிட்டில் எழுதிய ஈ.பி. வொயிட் வந்த சம்பவம் நினைவிற்கு வரும். இவரைக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யச் சொல்லும் போது தனது சிறுவயதின் 35 அறை மாளிகை நினைவிற்கு வரும். மெட்ரோவைப் பிடிக்க பிராங்க்ஸ்வில் ரயில் நிலையத்தில் காத்திருப்பார். அது மிக கலை நயத்தோடு கட்டப்பட்ட புராதனக் கட்டிடம். அரசாங்கம் அதை இடித்துவிட்டு, நவீனப்படுத்த ஒரு திட்டம் அறிவித்தது, அதைத் தடுக்க மக்கள் போராடியது, அந்தப் போராட்டத்திற்கு கென்னடியின் மனைவி ஜாக்குலின் தலைமை தாங்கியது, போராட்டத்திற்கு விளம்பரம் செய்ய ஜாக்குலின் மைக்கேலை வந்து சந்தித்தது, இன்று மெட்ரோவிற்குக் காத்திருக்கும் அதே இடத்தில் ஜாக்குலினோடு கைகுலுக்கியது எல்லாம் மனதில் அலைமோதும். என்ன அலை மோதி என்ன, இன்று அவர் ஒரு சர்வர். சர்வர் கூட இல்லை. சர்வராகப் பணி செய்யக் கற்றுக் கொண்டிருக்கும் அப்ரசெண்ட் !

காலம் தனக்கேயுரித்தான கடுமையோடும், இரக்கமற்ற தன்மையோடும் அவருக்குத் தினம் தினம் பாடம் கற்றுத் தரும். சக ஊழியர்களும் அவ்விதமாகவே தொழில் கற்றுத் தருவார்கள். கழிப்பறை சுத்தம் செய்ய ஏதோ ராணுவ நடவடிக்கைக்கான செயல்திட்டம் போல இதற்கடுத்து இது என்று வரிசையாக சில வேலைகள் இருக்கும். ஒரு நாள் எல்லாம் செய்து முடிப்பார். வாளி, பினாயில் போன்றவற்றை அவற்றிற்குரிய இடங்களில் வைத்துக் கொண்டிருக்கும்போது ஒரு முதியவர் கழிப்பறையைப் பயன்படுத்த வருவார். அவர் சாலையோரம் வசிப்பவர். ஸ்டார்பக்ஸின் வாடிக்கையாளர் அல்லர். மைக்கேல் அவரிடம் பணிவாக இப்போது பயன்படுத்த முடியாது. பாதி சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன். பினாயில் எடுக்க வந்தேன் என்பது மாதிரி பொய் சொல்லி அனுப்பிவிடுவார். சற்று நேரத்தில் மேலாளர் பெண் மைக்கேலை அழைத்து அந்த முதியவரிடம் என்ன பேசினாய்? என்பாள். இவர் உண்மையைச் சொல்வார். பின்னர் அவர் வாடிக்கையாளராக வரவில்லை என்று சேர்த்துச் சொல்வார். மேலாளர் கடும் கோபத்துடன் நம் கடைக்குள் நுழைபவர் எல்லோரும் நம் விருந்தினர்கள். இங்கு யாரையும் நாம் வாடிக்கையாளர் என்று குறிப்பிடுவதில்லை. விருந்தினர் என்றுதான் குறிப்பிடுவோம். நீங்கள் ஒரு விருந்தினரை திருப்பித் அனுப்பிவிட்டீர்கள். இனி இது போல் செய்யாதீர்கள் என்று சொல்வாள்.

கொஞ்சம் கொஞ்சமாக பில் போடுவது, காபி கொண்டு போய் தருவது, பின்னர் காபி கலக்குவது என்றெல்லாம் கற்றுக் கொள்கிறார் மைக்கேல். மேலாளர்களுக்கான பணிப்பரிசீலனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேலாளர் பவர்பாயிண்ட் தயாரிக்கும்போது மைக்கேல் அவளுக்கு உதவி செய்து நெருக்கமாகி விடுகிறார். ஆனாலும், கடை அடைக்கும் போது இவரது கல்லாவில் பணம் குறையும்போது திட்டுதான் வாங்குகிறார். வாடிக்கையாளராக, இல்லை, இல்லை, ஸ்டார்பக்ஸின் விருந்தினராக இவரோடு முன்பு பழகிய வேறு பெரிய நிறுவனங்களின் நிர்வாகிகள், இவரது சொந்த மகன், மகள்கள் எல்லாம் வரும் போது இவர் பில் போட்டுக் கொண்டோ, சப்ளை செய்துகொண்டோ இருப்பது சங்கடமாக இருக்கும் . பின்னர் பழகியும் போய்விடும்.

எது எப்படியோ, சாப்பாட்டுப் பிரச்சனை இல்லாமல், ஒருவரிடம் கையேந்தாமல் கௌரவமாக உழைத்துப் பிழைக்கும் ஒரு வாழ்க்கை அமைந்தது குறித்து நிஜமாகவே மகிழ்கிறார் மைக்கேல். நல்ல படிப்பும், இலக்கிய வாசிப்பும் உள்ளவர் என்பதால் தனக்கு நிகழ்பவற்றை மகிழ்ச்சி, துக்கம் இன்றி சமநிலையோடு ஏற்கும் பக்குவம் இருக்கிறது. ஒரு முறை ஊழியர்களுக்குப் போட்டிகள் எல்லாம் வைக்கிறார்கள். ஸ்டார்பக்ஸ் பெயர்க் காரணம் தெரியுமா? என்று கேட்கிறார்கள். ஸ்டார்பக்ஸ் என்பது மோபி டிக்கில் வரும் ஒரு கப்பல் கேப்டனின் பெயர் என்கிறார் மைக்கேல். என்ன இருந்தாலும் படிச்சவன் படிச்சவன்தான்யா, எப்படி டக்குன்னு அடிச்சான் பாரு என்று வியக்கிறார்கள் சக ஊழியர்கள். பெரிய கல்வியறிவு, வசதியான குடும்பச் சூழல் ஏதும் அற்ற கறுப்பினத்தவர்கள் அவர்கள். ஆணோ, பெண்ணோ, எல்லோருமே ஆறரை அடிக்குக் குறையாத உயரமும், அச்சுறுத்தும் பருமனுமாக இருப்பவர்கள். உடல் முழுவதும் பச்சை குத்திக் கொண்டு, வினோதமான சிகை அலங்காரத்தோடு வருபவர்கள். மைக்கேல் தனது விளம்பரக் கம்பெனி பூர்வாசிரம வாழ்வில் இவர்கள் போன்றவர்கள் எதிரில் வந்தால், தன்னிடம் இருப்பதைப் பிடுங்கி விடுவார்களோ, தன்னை அடித்துப் போட்டு விடுவார்களோ என்று நினைத்துக் காரணமே இன்றி பயந்தவர். வெறுத்தவர். ஸ்டார்பக்ஸ் வேலை அவர்களும் நம் போன்றவர்களே என்று உணர வைக்கிறது.

ஒரு நாள் இரவுப் பணியின்போது, சற்று கூடுதல் நேரம் பணி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மைக்கேலின் மேற்பார்வையாளனான கெஸ்டர் இன்று தயவுசெய்து சிறிது கூடுதல் நேரம் வேலை பார்க்க முடியுமா? என்று கேட்கிறான். மற்றொரு நாள் மைக்கேலுக்கு விடுமுறை நாளாக இருந்தபோதும், அன்று வரமுடியுமா? என்று மிக பணிவாக வேண்டுகிறார்கள். மைக்கேலின் கார்ப்பரேட் உலகில் இப்படி இருந்ததே இல்லை. வீட்டுக்குக் கிளம்புபவனுக்கு வேண்டுமென்றே ஒரு வேலை தந்து போகவிடாமல் செய்வது அங்கே சகஜம். இந்த சனி, ஞாயிறு நீங்கள் எல்லோரும் வேலைக்கு வந்தாக வேண்டும் என்று பல வெள்ளிக்கிழமைகளில் இரவு ஏழு மணிக்கு மேல் எந்தக் கூச்சமும் இன்றி அதிகாரமாகச் சொல்லிவிட்டு, அவர்கள் முகம் பார்க்காமல் எழுந்து சென்றவர்தான் மைக்கேல். ஊழியர்களை இப்படியும் நடத்தலாம் என்று ஸ்டார்பக்ஸ் அவருக்கு அனுபவபூர்வமாகக் காட்டுகிறது. நான் மகிழ்ச்சியாக இருந்தால், எனக்குக் கீழே வேலை பார்க்கும் அனைவரும் மகிழ்ச்சியாகத்தான் இருப்பதாக அர்த்தம் என்று உயர்மட்ட அதிகாரிகள் நினைப்பதை மட்டுமே பார்த்தவரான அவருக்கு காபி கலந்து தரும் வேலை தினம் தினம் எவ்வளவோ கற்றுத் தருகிறது. கற்றுத் தந்தது மட்டுமல்லாமல், இது நாள் வரை இல்லாத மனநிம்மதியையும் தந்திருக்கிறது.

வாழ்ந்து கெட்டவர்கள் வாழ்வைச் சொல்வதாக நம் தமிழ் இலக்கியத்தில் ஒரு தனி வகைமை எப்போதும் இருந்திருக்கிறது. இளங்கோவடிகள் முதல் வண்ணநிலவன், கலாப்ரியா என்று எத்தனை எத்தனையோ படைப்பாளிகள் சொல்லிச் சென்ற விஷயம்தான். ஆனாலும், பழைய வாழ்வையும், இன்றைய வாழ்வையும் மாறி மாறிச் சொல்லும்போது, இன்றைய நிலையின் கசப்பை, துக்கத்தை ஒரு ஸ்பூன் தூக்கலாகவே சொல்வதாகத்தான் அவை அமையும். நடை மெலிந்தோரூர் நண்ணும்போது, குறையொன்றும் இல்லை, மறை மூர்த்திக் கண்ணா என்று சொல்வோர் குறைவுதான். ஆனால் மிக அபூர்வமான மைக்கேல் கேட்ஸ் கில் அதையும் மகிழ்ச்சியாக ஏற்று அதை இலக்கியமாகவும் பதிவும் செய்திருக்கிறார்.

ஆர்வமுள்ளோர் வாசிக்க – How Starbucks Saved My Life – Michael Gates Gill. யூட்யூப் காணொளிகளும் நிறைய உள்ளன.

subbarao7@gmail.com